வியாழன்

‘’நான் பின்னாடி ஒக்காந்திருக்கன். எதுவா இருந்தாலும் நான் சமாளிச்சிடுவன். பயப்படாதே. மெதுவா கிளட்ச்சை விடு. மெதுவா ஆகிசிலரேட்டர் கொடு.’’

அம்ருதாவுக்கு மூன்று நாள்தான் தேவைப்பட்டது. இப்போது பறக்கிறாள். ஜீன்ஸும் ஃபுல் ஹேண்ட் ஷர்ட்டும் போட்டுக்கொண்டு அவள் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதைப் பார்ப்பதற்கு இன்னும் இரண்டு கண்கள் வேண்டும். இன்னும் கொஞ்சம் உயரம் கிடைத்தால் பரவாயில்லை என்ற ஸ்திதியில் ரெட்டை ஜடை போட்டுக்கொண்டு ஸ்கூல் யூனிஃபார்மில் பத்து வயதில் தத்தித் தத்தி சைக்கிள் ஓட்டியவள் இன்று மோட்டார் சைக்கிள் ஓட்டுகிறாள்.

‘’ஆண்ட்டி! பயமாயிருக்கு. கீழே விழுந்துட்டா என்ன பண்றது’’

‘’விழுந்தா எழுந்திருக்கிறது.கார் ஓட்டணும்னு சொல்ற. கியர் வண்டின்னா வேணாங்கற’’

‘’அது வேற. இது வேற.’’

‘’என்ன மோட்டார் சைக்கிள்னா உனக்கு அதிகமா அடிபடும். கார்னா நீ சேஃப். அதானே?’’

அம்ருதா சிணுங்கினாள்.

கடைத்தெரு டிராஃபிக் எல்லாவற்றிலும் எளிதாக சமாளிக்கிறாள். அனாயாசமாக ஓட்டுகிறாள். இப்போதெல்லாம் அவள்தான் என் சாரதி.

‘’அம்ரு! எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும். சிவபுரி வரைக்கும் போகணும். ஒன் அவர்ல வந்துடலாம்’’

நான் பின்னால் அமர்ந்தேன். என்னுடைய எந்த குறிப்பும் அவளுக்குத் தேவைப்படவில்லை. வேகம் வேகம் வேகம். அதே நேரத்தில் நிகழும் இயக்கத்தின் மீது முழுமையான கட்டுப்பாடு. சட்டம் படி அல்லது சார்ட்டட் அக்கவுண்டன்சி படி என்றேன். மேத்தமெட்டிக்ஸ்தான் இண்ட்ரஸ்ட் என்று சொல்லிவிட்டாள்.

காந்தி சிலை தாண்டி மேம்பாலத்தில் ஏறினோம். கீழே சிதம்பரம் ரயில் நிலையத்தில் சோழன் எக்ஸ்பிரஸ் சென்னைக்குச் செல்ல ஆயத்தமாக நின்று கொண்டிருந்தது.

”சிவபுரி-ல என்ன ஒர்க் ஆண்ட்டி?’’

‘’என்னோட ஃபிரண்ட் சென்னை-ல இருக்கா. அவ சொந்த ஊர் சிவபுரி. சின்னதா இங்க ஒரு வீடு வாங்கியிருக்கா. அவ வந்து நாலு நாள் தங்கணும்னா என்கிட்ட சொல்லுவா. நான் போய் வீட்டை கிளீன் பண்ணி வச்சுட்டு வருவேன். ஒரு சாவி எப்பவும் என்கிட்ட இருக்கும்.’’

’’வீட்டுல வேல்யூபிள் திங்ஸ் ஏதும் இருந்தா உங்களுக்கு ரெஸ்பான்ஸிபிளிட்டி ஆகிடாதா?’’

‘’ஒரு பால் பாத்திரம், நாலு எவர்சில்வர் டம்ளர், அஞ்சு தட்டு, ஒரு வாணலி, ஒரு பிரஷர் குக்கர் – இதுதான் அங்க உள்ள மொத்த திங்ஸ். ஹால்ல ஒரு சோஃபா நாலு பிளாஸ்டிக் சேர்.’’

‘’இருந்தாலும் நீங்க ரொம்ப மெனக்கிடறீங்க’’

‘’மெனக்கெடுன்னு நினைச்சாத்தான்டா மெனக்கெடு. ‘’

‘’நீங்க பல வேலையை இழுத்துப் போட்டுக்கிறீங்க. இப்ப பாருங்க எனக்கு மோட்டார் சைக்கிள் ஓட்ட கத்துக் குடுத்தீங்க. நீங்களாத்தான் மோட்டிவேட் பண்ணீங்க. எனக்கு சின்னதா ஒரு அடி பட்டிருந்தாகூட அம்மா உங்களைத்தான் பிளேம் பண்ணியிருப்பாங்க. நல்லது செய்ய நினைச்சு கஷ்டத்தை வாங்கியிருப்பீங்க.’’

‘’இது கண்ணதாசனோட வரி. இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன். நீ கேட்டிருக்கியா?’’

‘’இல்ல. நெட்-ல சர்ச் பண்ணி கேப்போம்’’

பல வாரங்களாக யாரும் புழங்காததன் சுவடுகளைக் கொண்டிருந்தது வீடு. விளக்குமாறால் கூட்டி கழுவிவிட்டபின் பளிச்சிட்டது. அம்ருதா தன்னுடைய செல்ஃபோனில் ‘’ஆட்டுவித்தார் யாரொருவர்’’ பாடலை தேடிக் கண்டுபிடித்து எடுத்துவிட்டாள். அது ஒலித்துக் கொண்டிருந்தது.

வீட்டைப் பூட்டி விட்டு கிளம்பினோம்.

திரும்பிச் செல்லும் போது அம்ருதா கேட்டாள் : ‘’ஆண்ட்டி! நீங்க ஃபர்ஸ்ட் யாருக்கு பைக் ஓட்ட கத்துக் கொடுத்தீங்க?’’

‘’என்னோட கிளாஸ் மேட்க்கு. தாரான்னு பேரு.’’

‘’காலேஜ் படிக்கும் போதா?’’

‘’ஆமாம். பிளஸ் டூ முடிச்சுட்டு காலேஜ் அட்மிஷனுக்கு வெயிட் பண்ணிட்டு இருந்தப்பத்தான் நான் பைக் ஓட்ட கத்துகிட்டேன். தஞ்சாவூர்-ல அத்தை வீட்ல தங்கியிருந்தேன். அங்கேயிருந்து காலேஜ் போவேன்.’’

‘’பைக்-லயா?’’

‘’ஆமாம் ஆமாம்’’

‘’எல்லாரும் ஆச்சர்யமா பாத்திருப்பாங்களே?’’

‘’ஆமாம். அப்பல்லாம் லக்சரர்ஸ் , புரஃபசர்தான் பைக் வச்சிருப்பாங்க. ஒட்டு மொத்த காலேஜ்ல பைக்ல காலேஜ் போன ஒரே ஸ்டூடண்ட் நான்தான்.’’

‘’நீங்க யுனீக் ஆண்ட்டி. அப்பவும் இப்பவும்.’’

‘’எல்லாருமே ஏதோ ஒரு விதத்துல யுனீக் தாண்டா’’

‘’தாரா பத்தி சொல்லுங்க”

‘’தாரா ஹாஸ்டல்ல படிச்சா. எனக்குப் பக்கத்துல ஒக்காந்திருப்பா. ஒருநாள் பைக் ஓட்றது கஷ்டமான்னு கேட்டா”

‘’ரொம்ப ஈசி. நான் உனக்கு சொல்லித்தரேன்னு சொன்னேன்.’’

‘’இண்ட்ரஸ்டிங்கா ஏதும் நடந்ததா?’’

‘’கிளட்ச், கியர், பிரேக் எல்லாத்தையும் எக்ஸ்பிளைன் பண்ணேன். பத்து தடவைக்கு மேலே கிளட்ச ரொம்ப ரொம்ப மெதுவா விட்டு வண்டி ஆஃப் ஆயிடுச்சு. கிளட்சை மெதுவா விடு. ஆக்சிலேட்டரை மெல்ல ரெய்ஸ் பண்ணுன்னு சொன்னேன். அவ சட்டுன்னு அதிகமா ஆக்சிலேட்டர் கொடுத்து வெடுக்குன்னு கிளட்சை விட்டுட்டா.’’

‘’நடராஜா’’

‘’வண்டியோட ஃபிரண்ட் வீல் தொன்னூறு டிகிரி மேல ஏறி காத்துல இருக்கு. பின்னாடி ஒக்காந்திருந்த என்னை கீழ தள்ளிடிடுச்சு வண்டி. ஒரு பத்து அடி தூரம் வண்டி பின்சக்கரத்துல மட்டும் போறதை நான் பாத்தேன். கீழ விழுந்த நான் எழுந்திருச்சு வண்டி பின்னால ஓடறன். என்ன நடந்ததோ தெரியாது வண்டி ஆஃப் ஆகி முன்சக்கரம் தரைக்கு வந்திடுச்சு. தாராவுக்கு என்ன நடந்ததுன்னே தெரியலை.’’

‘’டிரைவிங் கண்டினியூ பண்ணீங்களா?’’

‘’பண்ணோம். அவளுக்கு கிளட்ச்ல அதுக்கப்பறம் கிரிப் கிடைச்சிடுச்சு. ரெண்டு நாள்ல வண்டி ஓட்டிட்டா.’’

’’இண்ட்ரஸ்டிங்’’

‘’அதை விட இண்ட்ரஸ்ட்டா இன்னொன்னு நடந்தது. காலேஜ்ல ஒரு அசைன்மெண்ட் கொடுத்திருந்தாங்க. என்கிட்ட ரெஃபரன்ஸ் புக் இல்ல. தாராவுக்கு சப்மிட் பண்றத்துக்கு முதல் நாள் கிடைச்சுது. என்னை அன்னைக்கு ஒருநாள் நைட் ஹாஸ்டல்ல தங்க சொன்னா. தங்கியிருந்து எழுதி முடிச்சோம். காலைல ஹாஸ்டல் பாத்ரூம்க்கு குளிக்கப் போனபோது தாராவோட வாளியையும் மக்-கையும் எடுத்துட்டுப் போனேன். தாரா முன்னாடி குளிச்சிட்டு வந்துட்டா. நான் கடைசியா போனேன். வீட்டு ஞாபகத்துல பாத்ரூம்ல இருந்து வாளியை எடுக்காம வந்துட்டன். நாங்க கிளாஸ் அட்டண்ட் பண்ணிட்டு ஹாஸ்டல் மெஸ்ல லஞ்ச் சாப்டிட்டு ரூமுக்கு வந்தோம். தாரா வாளியைத் தேடுனா. அப்பதான் எனக்கு பாத்ரூம்லயே வச்சுட்டு வந்தது ஞாபகம் வந்தது. போய் பாத்தா அங்க இல்ல. தாரா லபோ திபோன்னு கத்தினா.’’

‘’ஒரு வாளிக்காகவா?’’

‘’அப்படி இல்லடா. தப்பு என் மேலேதானே?’’

‘’காலேஜ் ஹாஸ்டல்ல ஆயிரம் பேர் தங்கியிருப்பாங்க. அடுத்து வந்தவங்க பாத்திருப்பாங்க. சம்பந்தப்பட்டவங்க கிட்ட கொடுக்கணும்னாகூட முன்னூறு ரூம் கதவை தட்டியா உங்கள்தா உங்கள்தான்னு கேக்க முடியும்?’’

‘’சரிதான். அது தாராவுக்கு தெரியலையே?’’

‘’என்ன செஞ்சீங்க?’’

‘’அத்தை கிட்ட போய் விஷயத்தைச் சொன்னேன். அவ வாளியைவிட நல்லதா ஒன்னு வாங்கி கொடுத்துடுன்னு சொன்னாங்க. கடைத்தெருவுல ஒரு பிளாஸ்டிக் கடைக்குப் போய் வாளியும் மக்கும் வாங்கி எடுத்துட்டு வீட்டுக்கு வந்துட்டன். அன்னைக்கு மதியம் 3 அவர்தான் கிளாஸ். இதுக்கே ரெண்டு அவர் கட். அடுத்த அவருக்கு வாளியோட எப்படி கிளாஸ்ல போய் நிக்கறதுன்னு வீட்டுக்கு வந்துட்டன்’’

அத்தை என்னைப் பாத்துட்டு ‘’பானை பிடிச்சவள் பாக்கியசாலின்னு சொல்லுவாங்க. நீ பிளாஸ்டிக் வாளி பிடிச்ச பாக்கியசாலின்னு சொன்னாங்க’’

சாயந்திரம் தாராவை பார்க்கப் போனேன். ’’அவ ரொம்ப ஃபீல் பண்ணா. சாரி சொன்னா. ஏன் புதுசு வாங்கிட்டு வந்த? நான் உன்னை ஹர்ட் பண்ணிட்டனான்னு கேட்டா’’

அப்படியெல்லாம் இல்லன்னு சொன்னேன்.

தயக்கத்தோட ’’வாளி கிடைச்சுடுச்சுன்னு சொன்னா”

‘’எனக்கு அப்பாடான்னு இருந்தது. இந்த வாளியை திரும்ப எடுத்துட்டு போகமாட்டேன். என்னோட கிஃப்ட்டா இருக்கட்டும்’’னு கொடுத்திட்டு வந்துட்டன்.’’

அம்ருதா ‘’ஸ்ட்ரேஞ்ச்’’ என்றாள். ’’இது நடந்து எத்தனை வருஷம் இருக்கும் ஆண்ட்டி?’’

‘’பன்னெண்டு பதிமூணு வருஷம் ஆகுதுடா’’

***

அம்ருதாவுடன் சிவபுரிக்குச் சென்றிருந்தேன்.

புவனா பரபரப்பாக இருந்தாள். அவளது நீல கலர் வாளியைக் காணவில்லை என்றாள்.

நானும் அம்ருதாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். வீடு முழுக்க அலசினோம். எங்கும் தென்படவில்லை. புவனா அனத்திக் கொண்டே இருந்தாள். சாயந்திரம் ஆசுவாசமாக வருவதாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து உடனே கிளம்பி விட்டோம்.

அம்ருதாவின் இயக்கத்தினால் என்ஜினில் உண்டான சீரான ஒலி மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.

நான் அம்ருதாவின் தோளைத்தொட்டு ‘’ சூப்பர் மார்க்கெட்டுக்குப் போ’’ என்றேன்.

வாளியும் மக்கும் வாங்கிக் கொண்டு சிவபுரி புறப்பட்டோம். ‘’நான் முதல் தடவை வாங்கினப்ப தஞ்சாவூர்ல நூத்தி இருபது ரூபா. இப்போ நூத்து எண்பது.’’

’’பன்னெண்டு வருஷம் ஆகுதுல்ல. விலைவாசி அப்படியேவா இருக்கும்.’’

புது வாளியைப் பார்த்தும் புவனா முழு சமாதானமாகவில்லை.

‘’புவனா உன் ஃபீலிங் எனக்குப் புரியுது. அது மெட்டீரியல் ஃபீலிங் மட்டும் இல்ல. நான் இருக்கும்போது எல்லாம் சரியா இருக்கும்னு நம்பிக்கையா இருந்த. இப்ப அந்த நம்பிக்கைல ஒரு தொய்வு வந்ததும் டிஸ்டர்ப் ஆகற. இங்க வேற எந்த வேல்யூபிள் திங்ஸும் இல்ல. ஒருவேளை அப்படி ஏதாவது இருந்து இப்படி ஆயிருந்தா ரொம்ப கஷ்டம். எனக்கு ஒரு ஃபேவர் பண்ணு. என் கையில இருக்கற சாவி உன்கிட்ட கொஞ்ச நாள் இருக்கட்டும். அப்புறமா வாங்கிக்கறன்’’

புவனா சாவியை வாங்க மறுத்தாள். நான் வலுக்கட்டாயமாக கொடுத்துவிட்டு புறப்பட்டேன்.

திரும்பி வரும்போது அம்ருதாவிடம் சொன்னேன். ’’ஒவ்வொரு பன்னெண்டு வருஷத்துக்கும் வியாழன் சூரியனை முழு சுற்று சுத்தி துவங்கின இடத்துலயே வந்து நிக்கும். அதை ஒரு வியாழ வட்டம்னு சொல்லுவாங்க. அதே போல நடந்துருக்கு’’ என்றேன்.

***

மறுநாள் காலை அம்ருதா வீட்டுக்கு வந்திருந்தாள்.

‘’ஆண்ட்டி! அங்கிள் ஆஃபிஸ் போயாச்சா?’’

‘’கொஞ்சம் முன்னாடி கிளம்பிப் போனார்மா’’

‘’அங்கிள்-ட சொன்னீங்களா?’’

‘’சிரிச்சுட்டே உன் பிரம்ம லிபி அப்படின்னார்”

பரமபதப் பலகையை எடுத்து வைத்து தாயக்கட்டைகளை உருட்டினோம். முதலில் அம்ருதா உருட்டினாள். பன்னிரண்டு விழுந்தது. சிரித்துக்கொண்டே என்னிடம் தந்தாள். எனக்கும் பன்னிரண்டு.

இருவரும் சேர்ந்து சிரித்தோம்.

என்னுடைய அலைபேசி ஒலித்தது.

’’சொல்லு புவனா’’

புவனா விஷயத்தைச் சொன்னாள்.

‘’அப்படியா. ஓ.கே. நோ பிராப்ளம். நான் நாளைக்கு நேரா வர்ரேன்’’

அம்ருதா, ‘’என்ன ஆண்ட்டி?’’ என்றாள்.

’’புவனாவோட வாளி கிடைச்சிடுச்சாம். போன தடவை வந்தப்ப அந்த வீட்டு சர்வெண்ட் மெயிட்-கிட்ட புவனா கொடுத்திருந்தாளாம். அந்த மெய்ட் திரும்பி இன்னைக்கு கொண்டுவந்து கொடுக்கும்போதுதான் அந்த விஷயம் ஞாபகத்துக்கு வந்துதாம்’’

2 Replies to “வியாழன்”

  1. நல்ல கதை.மனிதமனத்தின் சுபாவத்தைக்காட்டுகிறது. அவசரப்பட்டு முடிவெடுக்கும் மாந்தர்களைக் காட்டுகிறது. ஆனாலும் எப்படி அம்ருதாவுக்கு வாளிசம்பவம் இரண்டு இடத்திலும். அதுதான் செயற்கை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.