
சிரிப்பை விலக்கி வைத்த
ராம்கரூவின் பிள்ளைகளுக்கு
அங்கதக் கதைகள்
அழுகையை வரவழைத்தன.
‘எங்களுக்கொன்றும் சிரிப்பு வரவிலை
ஆ ஆ ஓ ஓ’
இங்கோ, எங்கோ சிரிப்பாணி
கேட்டுவிடுமோ என்றொரு
நிரந்தர அச்சத்திலே
அவர்கள் வாழ்ந்தார்கள்.
உற்சாக மூச்சுக் காற்றின்
அசைவிலெல்லாம்
துணுக்குற்று உறைந்தார்கள்.
மன அமைதி இழந்து
அரற்றிக் கொண்டேயிருந்தார்கள்
‘துயருறுவதில் மட்டுமே
எங்களுக்கு நம்பிக்கை.
மகிழ்வெல்லாம்
கண நேர அனுபவமே.’
சலசலக்கும் இலைகளும் கிளைகளும்
உடல் வருடி புல்லரிக்கும் என்றஞ்சி
மரங்களிடை முணுமுணுக்கும்
கோடைத் தென்றலை
கொடுமை என்றார்கள்.
பூமிக்கு மேலே
கவிழ்ந்திருக்கும் மேகக் கூட்டத்தில்
களிப்பின் கீற்றுகள் தென்படுமோ
என்றெண்ணி
இலையுதிர்காலத்து வானை
எச்சரிக்கையாய் கண்காணித்தார்கள்.
மின்மினிப் பூச்சிகள்
இஷ்டம்போல் ஆடும்
இன்ப நடனத்தினால்
இருண்ட இரவிலும்
நிம்மதியில்லை அவர்களுக்கு.
துன்புறுவது மடமை என்று
களித்திருக்கும் மக்களே!
துக்கித்திருப்பது
ராம்கரூசியர்களின் உரிமை.
அதை மறுக்காதீர்.
ஒளியும் காற்றும் விலக்கப்பட்ட
ராம்கரூசியர்களின் குகை
நிரந்தர விரக்தியின்
குடிலாய் மாற
சபிக்கப்பட்டுள்ளது.
***

சுகுமார் ராய் அவர்களின் ‘ராகரூரேர் சனா’ வங்காளிக் கவிதையை அவரது மகனும் பிரபல இயக்குனருமான சத்யஜித் ரே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ததின் தமிழாக்கம். அபத்தக் கவிதைகள் (nonsense poetry) வகைமையை சேர்ந்த இது போன்ற எண்ணற்ற கவிதைகளை சுகுமார் ரே எழுதியுள்ளாராம். லூவிஸ் கரோல், டி.எஸ்.எலியட் போன்றோரும் இவ்வகைமைக் கவிதைகளை எழுதியுள்ளனராம். மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது பொருளற்றதாக தெரியும் இவ்வகை கவிதைகளை ஆழமாகவும் அவற்றின் சம காலத்தோடும் பொருத்திப் பார்க்கும்போது மிகுந்த பொருள் நிறைந்தவைகளாகத் தெரியும். இந்து ஆங்கில நாளிதழின் 20.06.2021 தேதியிட்ட ஞாயிறு மலரில் சுகுமார் ராய் அவர்கள் குறித்த சந்திப் ராயின் கட்டுரையின் தூண்டுதலால் இந்த மொழிபெயர்ப்பை செய்துள்ளேன்.