மகத்தான மங்கை

(தமிழாக்கம்: ஷக்திப்ரபா)

என்னிடமுள்ள ரகசியம் ஏதென
எழில் நங்கையரெல்லாம்
எண்ணியே வியந்திருக்க…
நான் அப்படியொன்றும் அழகியல்ல
நாகரிக யுவதிகளைப் போல
அளவெடுத்த அங்கங்கள் வாய்த்தவளல்ல
எனும் மெய்யுரைத்தால்,
நான் பொய்யுரைக்கிறேன் என்றே புறந்தள்ளுகிறார்.
என் வசீகரத்தின் சாரம்..
நீளும் கைகளின் நேசத்திலும்,
விரிந்த இடுப்பின் விசாலத்திலும்,
நடையில் துள்ளலிலும்
உதட்டு வளைவிலுமுள்ளது.
நூதனமான நங்கை நான்…
ஆம்,
நான் மகத்துவம் வாய்ந்தவள்.
.
நடைவீசிச் செல்லும் இடமெலாம்
குளிர் தென்றலெனப் பிரவேசிக்கிறேன்.
ஆடவர் மனதில்
அனாயாசமாக நுழைகிறேன்.
எழுந்து நின்றும்
சடாரென மண்டியிட்டும்
என் வருகையைப் பெருமைபடுத்தி
நற்தேனை மொய்க்கும் வண்டெனவே
எனை நெருங்குகின்றனர்.
என் கவர்ச்சியின் ரகசியம்…
விழிகளில் தெறிக்கும் பொறியிலிருக்கிறது.
என் பற்களின் வெளிர்ப் புன்னகையிலும்,
இடையின் அசைவிலும்,
பாதங்களின் துள்ளலிலுமுள்ளது.
தனித்துவமானவள் நான்…
ஆம்,
நான் மகத்துவம் வாய்ந்தவள்.
.
எந்தவொரு ஆண்மகனும்
என் சிறப்பு யாதென்றே வியக்கிறான்.
எத்தனை முயன்றும்
என்னுள் அமிழ்ந்திருக்கும் மர்மத்தை
நெருங்க முடிவதில்லை.
நானே வெளிப்படுத்த முயன்றாலும்
அவர்களால் உணரமுடிவதில்லை.
என் ஆழத்தின் மர்மம்..
பின்புறத்து ஒய்யார வளைவிலும்
புன்னகையின் ஒளியிலும்
மார்பகங்களின் செழுமையிலும்
பாவனையின் நளினத்திலுமுள்ளது.
அபூர்வமானவள் நான்..
ஆம்,
நான் மகத்துவம் வாய்ந்தவள்.
.
நிமிர்ந்த என் சிரம்
ஏன் கவிழ்வதில்லையென
உங்களுக்குப் புரிந்திருக்கும்.
நான் கூச்சலிடுவதில்லை,
குதித்து கும்மாளமிடுவதில்லை,
குரலுயர்த்தும் அவசியமும் எனக்கிருப்பதில்லை.
உமது பார்வையை என்பால் ஈர்த்து – நான்
உங்களைக் கடந்து செல்வதும்
உங்களையே பேருமைப் படுத்துகிறது.
என் நம்பிக்கையின் பலம்..
குதிகாலின் ஒலியிலிருக்கிறது
உச்சந்தலைமுடியின் வளைவிலாடுகிறது.
என் உள்ளங்கைகளில் தவழ்கிறது.,
உங்கள் கவனிப்பின் அவசியம்.
ஏனெனில்
இணையற்றவள் நான்..
ஆம்,
நான் மகத்துவம் வாய்ந்தவள்.

(Original in English – ‘Phenomenal Woman’ by Maya Angelou)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.