(தமிழாக்கம்: மதுரா)

எந்த நேரத்தில் நீங்கள் விழித்தாலும் ஏதாவது ஒரு கதவு சாத்தப்படுவது கேட்டது. ஒவ்வொரு அறையாக அவர்கள் சென்றார்கள் கையோடு கை சேர்த்து எதையோ தூக்கிக் கொண்டும் எதையோ திறந்து கொண்டும் சென்று கொண்டிருந்தார்கள், அந்த ஆவித் தம்பதி.
“இங்குதான் நாம் விட்டிருக்கிறோம்,” என்றாள் அவள்.
“ஆ.. இங்கும்!” அவன் தொடர்ந்தான்.
“அது மாடியில் இருக்கிறது” அவள் மெதுவாக முணுமுணுக்க,
“தோட்டத்திலும்,”அவன் கிசுகிசுத்தான்.
“மெதுவாக! நாம் அவர்களை எழுப்பி விடப் போகிறோம், ” அவர்கள் கூறிக்கொண்டார்கள்.
ஆனால் நீங்கள் எங்களை எழுப்பியது நீங்களல்ல.
அவர்கள் வேறு எதையோ பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். “அவர்கள் தேடுகிறர்கள், ஒரு திரைச்சீலையை விலக்கிப் பார்க்கிறார்கள்,” என்று ஒருவர் கூறலாம்.
ஒன்றிரண்டு பக்கங்களைப் படித்து விடலாம்.
இப்போது அவர்கள் கண்டு பிடித்து விட்டார்கள்,” பென்சிலை விளிம்பில் நிறுத்தியபடி யாராவது நிச்சயமாய்க் கூறலாம். அதன் பிறகு, வாசித்த அலுப்பில் எழுந்து தானே பார்த்துக் கொள்ளலாம். வீடு காலியாகக் கிடந்தது, கதவு எல்லாம் திறந்தபடி, ஜன்னல்கள்’ ஆ’வென்றபடி. காட்டுப் புறாக்கள் மகிழ்வுடன் கலகலக்கும்.
சத்தமும் பண்ணையிலிருந்து கதிரடிக்கும் இயந்திரத்தின் ஒலியும் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தன.
“நான் இங்கு எதற்காக வந்தேன்? எதைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்?
என் கைகளில் ஒன்றுமில்லை. ஒரு வேளை மாடியிலிருக்குமோ?
ஆப்பிள்கள் சாமான்களறையிலிருந்தன. மீண்டும் கீழே போகவேண்டும். தோட்டம் எப்போதும்போல அமைதியாக இருந்தது.
புத்தகம் மட்டும் புல்வெளியில் விழுந்திருந்தது.
ஆனால் அவர்கள் அதை வரவேற்பறையில் கண்டுபிடித்தனர்.
ஒருவராலும் அவர்களைப் பார்க்க முடியாதென்பதல்ல.
ஜன்னல் கதவுகள் ஆப்பிள்களைப் பிரதிபலித்தன. ரோஜாக்களைப் பிரதிபலித்தன;
எல்லா இலைகளும் பச்சையாக அதன் கண்ணாடியில் தெரிந்தன.
அவர்கள் வரவேற்பறைக்கு நகர்ந்தால் ஆப்பிள் தன் மஞ்சள் நிறத்தைக் காட்டியது.
என்றாலும், கதவு திறந்தால், ஒரு விநாடியில் தரையெங்கும் படர்ந்தது, சுவர்களில் தொங்கியது, கூரையிலிருந்து ஒரு பதக்கமாய்… என்ன அது?
எனது கைகள் வெறுமையாயிருந்தன.
ஒரு சிறு பறவையின் நிழல் தரைவிரிப்பில் விழுகிறது. அமைதியின் ஊற்றுக்களை காட்டுப்புறாவின் ஒலி கலைக்கிறது.
‘பத்திரம்…பத்திரம்…பத்திரம்…’ வீட்டின் நாடி மென்மையாகத் துடிக்கிறது.
“புதையல் புதைக்கப்பட்டது…அறை”
சட்டென இதயத் துடிப்பு நிற்கிறது.
ஓ…அது தான் புதைக்கப்பட்ட புதையலா?
சில நொடிகளில் ஒளி மங்கியது. அப்படியானால் தோட்டத்திலிருக்குமோ?
ஆனால் அலையும் சூரிய ஒளிக்கற்றைக்கு மரங்கள் இருளை நெய்திருந்தன.
மிக அழகு… மிக அரிது… மேற்பரப்பின் கீழ் மெல்ல அமிழ்ந்து அந்த ஒளிக்கற்றை கண்ணாடிக்குப் பின்புறம் எரிந்துகொண்டிருந்தது.
அந்த கண்ணாடி தான் மரணம்.எங்களுக்கிடையே மரணம் இருந்தது.
முதலில் பெண்ணிடந்தான் வந்தது.நூறு வருடங்களுக்கு முன்பு, வீட்டைவிட்டகன்று ஜன்னல்களை மூடி அறைகளை இருட்டாக்கியது.
அவன் அதை விட்டகன்றான் அவளையும் விட்டு வடக்கிலும் கிழக்கிலும் திரிந்து தெற்கு வானில் தோன்றும் நட்சத்திரங்களைக் கண்டு வீட்டை நாடினான். சிறு குன்றின் சரிவில் மறைந்து கிடக்கும் வீட்டைக் காண்கிறான்.
“பத்திரம்…பத்திரம்…பத்திரம்…”
வீட்டின் இதயம் மகிழ்ச்சியாய்த் துடிக்கிறது.
புதையல் உங்களுடையதே.
வழியெங்கும் காற்று சீறுகிறது.வழியெங்கும் மரங்கள் தாழ்ந்தும் வளைந்தும் ஆடுகின்றன.
நிலாக் கதிர்கள் மழையில் சிந்திச் சிதறுகின்றன.
ஆனால், விளக்கொளி சன்னலூடாக நேராக விழுகிறது.
மெழுகுவர்த்தி நின்று நிதானமாக எரிகிறது.
வீடு முழுதும் திரிந்து சன்னல்களைத் திறந்து எங்களை எழுப்பி விடாமல் தங்கள் மகிழ்ச்சியைத் தேடிக் கொண்டார்கள் அந்த ஆவித் தம்பதி.
“இங்குதான் நாம் உறங்கினோம்,” என்றாள் அவள்.
“எத்தனை முத்தங்கள்…”
“காலையில் எழுந்து…”
“மரங்களிடையில் “
“..மாடியில்..”
“தோட்டத்தில்..”
“கோடையில்”
“பனி பொழியும் குளிர்காலத்தில்…”
எங்கோ தூரத்தில் சாத்தப்படும் கதவுகள்… இதயத் துடிப்பென மெல்ல ஒலித்தன.
அவர்கள் அருகில் வந்தார்கள்;கதவருகில் மெல்லத் தயங்கி.
காற்று வேகமாய் வீசுகிறது. மழை வெள்ளித் தாரைகளாய் சன்னல் கண்ணாடியில் வழிகிறது.
எங்கள் கண்கள் முன் இருள் சூழ்கிறது. காலடியோசை எதுவும் அருகில் கேட்பதாயில்லை. எந்தப் பெண்ணும் தன் ஆவியுடையை விரிக்கவில்லை.
அவன் கைகள் விளக்கைப் பொத்தின. “பார்,” அவன் மூச்சொலி கேட்டது.
“ஆழ்ந்து தூங்குகிறார்கள். இவர்கள் இதழ்களில் காதலிருக்கிறது.”
கையிலிருந்த வெள்ளி விளக்கை எங்களுக்கு நேராய்த் தூக்கிப் பிடித்தபடி குனிந்து எங்களை ஆழமாகவும் தீர்க்கமாகவும் நோக்குகிறார்கள். நீண்ட நேரமாக.
காற்று வேகமாக வீசுகிறது.தீபம் மெல்ல அசைகிறது. கற்றையாய்த் தரையிலும் சுவரிலும் வீழும் நிலவொளி அந்த முகங்களில் படிகிறது.
அந்த ஒளியில் அந்த முகங்களை வித்தியாசமாக்குகிறது. வியக்கும் முகங்கள்., உறங்குவோரைக் கூர்ந்து நோக்கி, அவர்களுள் மறைந்து கிடக்கும் மகிழ்ச்சியைத் தேடிக் கொண்டிருக்கும் முகங்கள்.
“பத்திரம்..பத்திரம்..பத்திரம்” அந்த வீட்டின் இதயம் பெருமையுடன் துடிக்கிறது.
எத்தனை வருடங்கள்!” அவன் பெருமூச்செறிந்தான்..
“என்னை நீ மீண்டும் கண்டுகொண்டாய்…” “இங்கே”
அவள் முணுமுணுத்தாள்.
“தூங்கினோம்.. தோட்டத்தில் வாசித்தோம்..சிரித்தோம்… சாமான்கள் அறையில் ஆப்பிள்களை உருட்டி விளையாடினோம்… எங்கள் புதையலை இங்கே விட்டு விட்டிருந்தோம்.”
குனிந்த அவர்களின் விளக்கொளி என் இமைகளில் படிந்தது.
“பத்திரம்…பத்திரம்…பத்திரம்…”
வீட்டின் இதயம் வேகமாய்த் துடிக்கிறது.
“உள்ளத்தின் ஒளி, ஓ.இது தான் உங்கள் புதைக்கப்பட்ட புதையலா?”
விழித்துக் கூவுகிறேன், நான்.
(மூலம் – வர்ஜீனியா வுல்ஃப் எழுதிய The Haunted House.)