“பெண்ணே பெண்ணுக்கு எதிரி என்கிற கூற்றெல்லாம் எப்போதுமே அபத்தமாகப்படும் எனக்கு”

(‘ஊசலாடும் காந்தி’ மொழியாக்கச் சிறுகதைகள் நூலை முன்வைத்து)

எழுத்தாளர் ஜெயந்தி சங்கருடன், மதுமிதாவின் ஓர் உரையாடல்

செப்டம்பர் 2019

மதுமிதா: வணக்கம் ஜெ, நலமா?

ஜெயந்தி சங்கர்:  மிக்க நலம். நீங்க?

மதுமிதா: நான் நலம். ‘ஊசலாடும் காந்தி’ மொழியாக்க நூல் குறித்து மனம்விட்டு உரையாடுவோமா?

ஜெயந்தி சங்கர்:  ம், பேசுவோமே. Dangling Gandhi இன்னும் தமிழில் வரவில்லை. தமிழ்ப் பிரதி தயாராகவே இருக்கிறது.

மதுமிதா: ஒவ்வொரு கதையின், கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை எப்படி நிர்ணயிக்கறீங்க? உதாரணமா, ‘சர்ச்சிலுக்குத் தெரிந்திருக்குமா?’ கதையில் வரும் அந்தப் முதியவர். மூன்றே கதாபாத்திரங்கள், அதிலும் மிக சொற்பமான வார்த்தைகளைப் பேசும் அந்தப் பெரியவர் பிரம்மாண்டமாகத் தெரிவது எப்படி?

ஜெயந்தி சங்கர்:  மௌனத்தின் கனம் என்று சொல்லலாமா? பிரதியில் உரைநடையாகவோ, கதாபாத்திரம் மூலமாக வேண்டிய அளவிற்கு மட்டும் பேசுவதையோ படைப்பாளி எழுத்துப் பழக்கத்தால் லாவகப்படுத்திக் கொள்ள முடியும். சொல்லாமல் விடுபவற்றிலும் ஊகித்துக்கொள்ளவென்று வேண்டுமென்றே விடப்படும் இடைவெளிகளிலும் ஏற்படும் மௌனங்கள் கதையின் சூழலை, நிகழ்வை, கதாபாத்திரத்தை வாசகர் மனத்தில் சடாரென்று பிரமாண்டமாக உருவாக்கிவிட உதவும்.

நண்பர்களாகக் கூடுமிடங்களில்கூட சில வேளைகளில் நாம் இதனை உணர்ந்திருப்போம். எல்லோரும் சளசளவென்று பேசும் கூட்டத்தில் ஒருவர் வாய்திறக்காமல் கூர்ந்து கேட்டுக் கொண்டேயிருப்பார். ஆனால், ஒருகட்டத்தில் பொட்டென்று ஒற்றைச் சொல்லாகவோ ஒருசில சொற்களாகவோ சுருக்கமாகப் பேசுவார். அவர் உதிர்க்கும் அச்சொற்களில் பொருள் ஏறிவிட்டதைப் போல நமக்குள் கனக்கும். அதனை அவர் அதுவரை பேசிக் கொண்டிருந்தவர்களில் அப்படியே இறக்கி வைத்தாற்போல, உரையாடலை முற்றிலும் செறிவான இன்னொரு தளத்துக்குக் கொண்டு செல்வதையோ அல்லது அடர்மௌனம் நிறைவதையோ நாம் pஅலசமயம் உணர்ந்திருப்போம், இல்லையா?

மதுமிதா: அந்த அடர் மௌனம் மற்றும் ஒற்றைச் சொல் கடந்து இந்தக்கதையின் கடைசி வரி மனத்தை மிகவும் பாதித்தது. இது போன்றே இன்னும் சில கதைகளின் கடைசி வரிகள் முத்தாய்ப்பாக இனி அடுத்து இது இப்படி நிகழ்ந்திருக்குமோ அப்படி நிகழ்ந்திருக்குமோ என்று எனது வாசக மனத்தில் நீண்ட சிந்தனையை வளர்த்தெடுத்தது. கடைசி வரிகளுக்கு வாசகர்களை உலுக்கி எடுத்து விடவேண்டும் என்று அதிக முக்கியத்துவம் அளிக்கிறீர்களா?

ஜெயந்தி சங்கர்: வாசகர்களை உலுக்கி எடுத்துவிட வேண்டும் என்றெல்லாம் கண்டிப்பாக நினைப்பதில்லை நான். கதையின் நோக்கமும் நிச்சயம் அதுவல்ல. ஆனால், கடைசி வரியின் மூலம் கண்டிப்பாக வாசகருக்குள் ஆழ்ந்த சிந்தனை கிளைகளை விரித்து விட நினைப்பேன். அவ்வரியில் சிந்தனையாய், நெருடலாய், கேள்விகளாய், அதிர்வாய் எப்படி வேண்டுமானாலும் கதை வாசகருக்குள் இறங்கிவிடும்.

கடைசி வரி பற்றிப் பேசுகையில் எனக்கு அமரர் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் பல்லாண்டுகளுக்கு முன்னர் பேசும்போது சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. வேறொரு முக்கிய விஷயமாக அவரோடு நான் தொடர்ந்து மூன்று மாதங்களில் மூன்று முறை தொலைபேசியில் பேச வேண்டி வந்தது.

முதல் முறை அவர் என்னிடம், “என்ன எழுதிட்ருக்கீங்க, ஜெயந்தி?” என வழக்கம்போல கேட்டார். தொடர்ந்து, பேச வேண்டிய பலதையும் பேசி முடித்து வணக்கம் கூறி இணைப்பைத் துண்டிக்கும் முன்னர், ”நீங்க என்ன சார் எழுதிட்ருக்கீங்க?” என்று சாதாரணமாகதான் நான் கேட்டேன். ஒரு சிறுகதை எழுதி முடிச்சிருக்கேன் ஜெயந்தி, ஆனா இன்னும் முதல் வரியும் இறுதி வரியும் திருப்தியாகல்ல, அதான் அப்படியே வச்சிருக்கிறேன் என்றார்.

இரண்டாவது முறை ஒருமாதம் கழித்துப் பேசும்போது நேற்றைக்கு உங்களுக்கு பிறந்தநாள் ஆயிற்றே ஐயா, வாழ்த்துக்கள் என்றதுமே எப்போதோ பேசும்போது சொன்னதை நினைவில் வைத்து அப்டின்னா இன்றைக்கு உங்க பிறந்த நாள் என்றவர், “என்னைவிட நீங்க சரியா 20 வயது மூப்பு,” என்று சொல்லிவிட்டு குழந்தைபோல சிரித்தார். உரையாடலை முடிக்கும் முன்னர், “கதைக்கான முதல் வரி சரியாகி விட்டது ஜெயந்தி. இனி கடைசி வரிதான் மிச்சம்,” என்றார்.

மூன்றாவது மாதத்தில் பேசுகையில், “இன்னமும் கடைசி வரியை மீண்டும் மீண்டும் செதுக்கி, மாற்றி, செதுக்கி, மாற்றிக் கொண்டுதான் இருக்கிறேன். திருப்தி ஆகல்ல,” என்றார்.

எதற்கு சொல்கிறேன் என்றால் வாசகரை கடைசி வாக்கியம் உலுக்குமா, அறையுமா, விதிர்விதிர்க்கச் செய்யுமா என்பதையெல்லாம் கடந்தும் கதை தன் வேலையை சிறப்பாகச் செய்வதற்கு கடைசி வாக்கியம் மிக முக்கியமாகிறது என்பதே எனது சொந்த அனுபவமும் எனக்குச் சொல்லிக் கொடுத்துள்ளது.

மதுமிதா: சர்ச்சில் பாலம் எனும் வரலாற்று இடம் போல பல நிகழ்வுகளை இந்த நூலின்  ஒவ்வொரு கதையிலுமே சொல்றீங்க, அவற்றைப் பார்த்தவுடன் கதைகளில் அவற்றை வைக்க நிர்ணயிக்கிறீங்களா? கதையின் ஓட்டத்தில் அவை தாமாக வந்து அமர்ந்து கொள்கின்றனவா?

ஜெயந்தி சங்கர்: ’விசிறி இழுப்பவன்’ கதையில் அந்த முதன்மை கதாபாத்திரம் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலாக எனக்குள்ளேயே உட்கார்ந்திருந்து விட்டு வெளிப்பட்டிருக்கிறது என்பதைவிட இதொன்றும் எனக்குப் பெரிய ஆச்சரியமாக இல்லை. நானே எதிர்பார்க்காதவாறு மூணாறு சென்று திரும்பிய ஓராண்டுக்குப் பிறகு அந்த வளைவு, பாலம் அந்தக்கதையில் வந்திருக்கிறது.

சிறு முடிச்சு, அல்லது சின்ன நிகழ்வு, அல்லது ஒரு கதாபாத்திரத்துக்கு நேர்ந்த அனுபவம் இதுபோன்றவைதான் எனக்குள்ளே கதைகளாகின்றன. வரலாறைத் தாங்கி நிற்கும் அந்தப் பாலமோ வளைவோ பாத்திரமோ இன்னபிற விஷயங்களோ மட்டுமே கதைகளாவதில்லை; ஆக முடியாது; ஆகவும் கூடாது. கதையினூடே நான் சொல்ல முனைவதற்கு வலுச்சேர்ப்பதற்கு வேண்டுமானால் அவை கதைக்குள் வந்தமர்ந்து உதவலாம். அதை நான் படைப்பாளியாக ரசித்து ஏற்பதுண்டு, சிலவேளைகளில் ஒதுக்கித் தள்ளுவதுமுண்டு. கதைக்கும் அதற்குமான தொடர்புக்கு, செய்நேர்த்திக்கும்கூட அவை சிலவேளைகளில் சின்ன அளவில் உதவுவதை உணர்ந்திருக்கிறேன்.

பார்த்தவுடன் எதையுமே எப்போதுமே புனைவுக்கென நான் யோசிப்பதே கிடையாது. வரலாறை தாங்கி நிற்கும் அவ்விடங்கள் எனக்குள் என்னசெய்யப் போகின்றன என்றே பெரும்பாலும் அந்த நேரத்தில் எனக்குத் தெரிவதில்லை. அவ்வாறு நான் பார்த்த எண்ணற்ற இடங்களும் விஷயங்கள் உள்ளுக்குள்ளே எப்போதுமே இருந்து கொண்டேதான் இருக்கின்றன. அவை அடுத்தடுத்து புனைவுகளாகலாம் அல்லது என்னுடனேயே அவை மடிந்தும் மறையலாம். எந்த உறுதியான திட்டங்களும் எப்போதுமே என்னில் இருப்பது இல்லை.

மதுமிதா: தலைப்புகளைத் தேர்வு செய்வது, இந்தக் கதையின் கரு ஏற்படுத்தும் அதிர்வுகள் என எண்ணற்ற விஷயங்களை ஒரு கதைக்குள் நிரவி வைப்பதன் சூத்திரம் என்ன?

ஜெயந்தி சங்கர்:  கதையின் நோக்கமே பெரும்பாலும் கதையினூடாக, கலைநுட்பத்துடன் வாசக அனுபவத்தை வாசகருக்குள் ஏற்படுத்தி, பற்பல சிந்தனைக் கிளை பரப்புவது. அதன் நீட்சியாக வாசக மனங்களிலும் வாசகக் குழுக்களிடையே சிறிய, பெரிய உரையாடல்களிலும் விவாதங்களை ஏற்படுத்துவதும்கூட என் வரையில் கதைக்கான நோக்கம். அதுமட்டும் நடந்தால், என்னைப்பொருத்தவரை கதை வெற்றிதான். அதனை நோக்கிய பயணமாகவே என் படைப்புச் செயல்பாடுகள் நடப்பதையும் நான் உணர்ந்திருக்கிறேன்.

கதைகளுக்கான தலைப்புகள் பலவிதங்களில் என்னுள் நிகழ்வதை நான் அவதானித்து வருகிறேன். உதாரணத்துக்கு ‘சர்ச்சிலுக்குத் தெரிந்திருக்குமா?’ கதையை எழுதிமுடித்துவிட்டு தலைப்புக்காகத் தவித்து விட்டு, ஒருவாரத்துக்கு மேல் அதை முற்றிலும் மறந்தே போனேன். காலைவேளைகளில் வேகநடை செல்லும்போது எனக்குள் முக்கிய சில சிந்தனை மின்னல்கள் பளீரிடும். அவ்வாறு ஒருநாள், ஜாக் கதையில் கேட்ட அந்த சிறுகேள்வியையே தலைப்பாக்கினால் என்ன என்று சிந்தித்தேன். தலைப்பின் புள்ளியில் வாசகனுக்கு எண்ணற்ற சிந்தனைக் கிளைகள் விரியும் என்பதை மகிழ்ச்சியோடு உணர்ந்தேன். சொல்லாதவற்றுடன், சொல்லப்பட்ட கதையை அப்படியே தூக்கி வேறொரு சிந்தனைத் தளத்துக்குக் கொண்டு செல்வதை அந்தத் தலைப்பு செய்தது என்றுணர்ந்தேன்.

மதுமிதா: இந்தக் கதைகளின் பாணியை எதிலுமே எந்த இசங்களிலும் அடைத்து விட இயலாத வகையில் எழுதி இருக்கீங்களே, அனைத்து நவீனங்களையும் கடந்த புத்தம்புதிய பாணியை தந்திருக்கீங்களே, தமிழ் சிறுகதை இலக்கிய வரலாற்றில் இவ்வாறு புதிய பாணியை அளிக்கிறீங்க என்றால் அதற்கு ஏதேனும் பெயர் வைக்கணுமே, என்ன பெயர் வைக்கலாம்?

ஜெயந்தி சங்கர்:  மரபை நன்கு பயின்று முதிர்ந்த ஒரு படைப்பாளி அதே மரபை அசைத்து, உடைத்து மீறுவது நடந்திருக்கும் இவ்வகை எழுத்துகள் தமிழ் வாசகப் பரப்புக்கு கதை சொல்லும் முறைகள், தளங்கள், வடிவங்களில் முற்றிலும் புதிதாகப் படலாம். அது இயல்புதான்.

ஆங்கிலத்தில் வாசித்த வாசகர்கள் அனைவருமே மிகப் புதிதாக இருக்கின்றன என்றார்களே தவிர சில தமிழ் வாசகர்களைப் போல கதைக்குள் போகவே முடியவில்லை என்றோ, புரியவில்லை என்றோ பெரும்பாலும் சொல்லவில்லை.

புதிதாகப் பெயர் வைக்க வேண்டும் எனும் உங்களது யோசனையை மிக சுவாரசியமான சிந்தனையாக, ஒருவகையில் எனக்கான ஊக்கமாகவே உணர்கிறேன். ஆக்கங்களை இசங்களுக்குள் அடைக்கும் பணியில் இருப்பவர்கள், ஆய்வாளர்கள் இதுகுறித்துச் சொல்வார்கள் என்று நம்புவோம். காத்திருப்போம். அது படைப்பாளியின் பணியாக நான் நினைக்கவில்லை.

மதுமிதா: அரசர்கள் ஆட்சி புரிந்த காலத்தில் அரசவையில் அரசர் அரசி அமர்ந்திருக்கும் சிம்மாசனத்தின் அருகில் இருவர் நின்று விசிறிக்கொண்டு இருப்பதை திரைப்படங்களில் பார்த்திருப்போம். அவர்களை சாமரம் வீசுபவர்கள் என்று சொல்வார்கள்.  மின்சாரம் வருவதற்கு முன்பு மக்களும் இப்படி இந்த பங்காவாலா விசிறி இழுப்பவர்களை நியமித்திருப்பார்கள் என்பது பற்றிய தகவலை எங்கே எப்போது முதலில் அறிந்து கொண்டீர்கள்?

ஜெயந்தி சங்கர்:  விசிறி இழுப்பவர்களை குறித்து பிற்காலங்களில் நானும் படித்து அறிந்துகொண்டேன் என்றாலும், இளமையில் ஷில்லாங்கில் நான் எட்டாம் வகுப்பு பயில்கையில்தான் இந்தக் கதாபாத்திரத்துக்கான விதை என் அடியாழ்மனத்தில் என்னையறியாமல் விழுந்திருக்கிறது என இன்றைக்குப் படுகிறது. பிற்காலத்தில்,  நான் எழுதப்போகிறேன் என்றுகூட அப்போது எனக்குத் தெரியாது. அதற்கான அறிகுறிகள் என்னில் இருக்கவில்லை.

அப்பாவுக்குத் தெரிந்த ஒரு நண்பர் இருந்தார். வயதேறிய சர்தார் அங்கிள். அவர் அரிதாகவே பேசுபவர், பரமசாது. வீட்டில் ஒருமுறை நிறையபேர் சேர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது மின்சாரம் துண்டானது. மெழுகுவத்திகள் ஏற்றி வைத்து ஏதேதோ நகைச்சுவையாக பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் சர்தார் அங்கிள் தனது ஒன்றுவிட்ட சிற்றப்பாக்களில் ஒருவர் பல்லாண்டுகளுக்கு முன்னர் மலாயாவுக்கு ஆங்கிலேயர்களால் ’பங்காவாலா’வாக அழைத்துச் செல்லப்பட்டதை நினைவு கூர்ந்தார். வேறுபலதும் பேசுகையில் இடையில்தான் அதனை ஒற்றை வரியாக அவர் சொன்னார்.

அன்றைக்கு வீட்டுக்கூடத்தில் இருந்த யார் மனத்தையும் பாதித்திருக்கூடிய வாய்ப்பே இல்லாத அந்த விஷயம் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்திருந்ததை அண்மையில் ’விசிறி இழுப்பவன்’ சிறுகதையை எழுதி முடிக்கையில் மிகுந்த ஆச்சரியத்தோடு நினைத்துக் கொண்டேன்.

மதுமிதா: இந்தக் கதையில் வரும் மணியின் தங்கை பற்றிய எந்த முக்கியமான விபரங்களும் சொல்லப்படாத நிலையிலும் மணிக்காக மணியின் தாயாருக்காக வருந்துமளவுக்கு வாசகருக்குள் உணர்வைக் கடத்தும் வித்தையை என்னவென்று சொல்லலாம்?

ஜெயந்தி சங்கர்:  ஒருவார்த்தை பேசாத மணி என்ற கதாபாத்திரத்துக்குள் ஓடும் சிந்தனைகள் ஏராளமிருக்கும் என்றபோதிலும் குறைவாகவே சொல்லப்பட்டு வாசகர் கற்பனைக்கு நிறைய இடம் கொடுக்கப்பட்டிருப்பதை வாசிப்பவர் கண்டிக்காக உணரலாம். அதேபோலத்தான் அவனது உடன்பிறப்பு, தாய் பாத்திரங்கள் அனுபவிக்கும் துயரங்களும். அதிகம் சொல்லப்படாமலே வாசகர் மனத்தில் அவை எழும். வாசகர்களுக்குள் விரியும் கற்பனை. அதற்கான போதிய இடங்களைக் கொடுக்கும் பிரதி இது. இங்கே நடப்பது வாசகர் பங்கேற்பு. இதுதான் சமகாலப் புனைவிலைக்கியவுலகில் உலகளவில் மிகவும் போற்றப்படுவது.

மதுமிதா: ரிக்‌ஷாக்களின் விபரங்களைப் போல போகிற போக்கில் முக்கியப் பல விஷயங்களை பொருத்தமாகச் சொல்வது Craft இல் சேருமா? கலைநுட்பத்தின் முக்கியமான கூறா இது?

ஜெயந்தி சங்கர்:  இவை Craft, கலைநுட்ப உத்திகளில் வரும்தான். இழுரிக்‌ஷாக்கள் பற்றிய வரலாற்று விவரங்கள் ‘விசிறி இழுப்பவன்’ சிறுகதையில் பொருத்தமாய் நெய்யப்படுகையில் கதைநிகழ் காலத்தைக் காட்ட அது எனக்குப் பெரிதும் உதவியது.

மதுமிதா: சிங்கப்பூரில் விலங்கினங்களைப் பாதுகாப்பது குறித்த பத்திரிகை உதவி ஆசிரியர்களின் செய்தி விவாதத்துக்கிடையில் இந்திய வனவிலங்குப் பாதுகாப்பு சட்டம் பற்றிப் பேசுகிறார்கள். இந்திய செய்திகளை கவனமாக அவதானிக்கும் விதம் சிங்கப்பூர் பத்திரிகைகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் நிலை எந்த அளவுக்கு உள்ளது?

ஜெயந்தி சங்கர்:  நாளிதழில் ஒரு செய்தியை எழுதுகையில் அதேபோன்ற வேறு செய்தி அண்மையில் வந்திருந்ததா என்றும் நடப்புச் செய்தி அண்மையில் நடந்ததொரு செய்தியின் நீட்சியா, அல்லது புதியதா, அல்லது தொடர்புண்டா என்றெல்லாம் விவாதிக்கையில் நீங்கள் குறிப்பிடும் உரையாடல் அந்தக்கதையில் வருகிறது.

அது ஒருபுறமிருக்க, சிங்கப்பூரின் தமிழ்ச் செய்தித் தாளில் ஒரு பக்கம் தமிழகத்துக்கும் இன்னொரு பக்கம் இந்தியாவுக்கும் என்று ஒதுக்கி செய்திகள் வெளியிடுவார்கள். ஆக அண்மைய செய்திகள் அப்பக்கங்களில் போகும்படி முடிந்தவரை பார்த்துக் கொள்வர்.

ஆனால், இங்கே ஆங்கிலச் செய்தித்தாள்களில் இந்திய செய்திகள் ஆசியா என்ற பகுதியில் வருவதைதான் நாம் அதிகமாகக் காண முடியும். இந்தியாவில் நடக்கும் சிறந்த, உன்னத செய்திகளை மிக அரிதாகவே தொட்டு, அவலங்கள், கொடூரங்களை சட்டென்று ஆங்கில நாளிதழ்களில் எளிதாகவும், சற்றே பெரியதாகவும் போட்டுவிடுகிறார்கள் என்பதுதான் எல்லோரும் இங்கே ஒரேபோலக் கருதுவது.

மதுமிதா: காதல், நட்பு, கருணை, உதவி, வெறுப்பு, துரோகம், மரணம், உறவுச்சிக்கல்கள் என்று உணர்வுக் குவியல்களாக இருக்கும் கதாபாத்திரங்கள் கலையின் கலைப்படைப்பின் வெற்றியை நிர்ணயம் செய்கின்றனரா?

ஜெயந்தி சங்கர்:  கதாபாத்திரங்கள் பிரதியின்மூலம் வெளிப்படுத்தாத, படைப்பாளி சொற்களால் தான் படாத உணர்வுகளை வாசகருக்குள் ஏற்படுத்திவிடக்கூடியதாக ஆக்கம் உருவாகும்போது படைப்பானது வெற்றியின் நுனியைத் தொட்டுவிடுவதாகவே எனக்குத் தோன்றும். குறிப்பாக சிறுகதையில் குறைந்த சொற்களில் வாசகனுக்கு நிரம்பவே கடத்திவிடக்கூடியாத அமைவது மிகச்சிறப்பு. பயிற்சியில் வரக்கூடியதும் கூட. இந்நூலில் பெரும்பாலான கதைகள் கதாபாத்திரங்கள் இயங்கும், அல்லது அவற்றை மையப்படுத்திய புனைவுகளாக அமைந்துள்ளன என்றும் நாம் வாசிக்கலாம்.

மதுமிதா: இத்தனை கதாபாத்திரங்களின் படைப்பில் இத்தனை உணர்வு ததும்பல்களில் நீங்கள் மனதளவில் காயப்படாமல், பாதிக்கப்படாமல் படைக்க முடிந்ததா?

ஜெயந்தி சங்கர்:  எழுதும் காலங்களில் நான் அந்தக் கதாபாத்திரங்களோடு, அல்லது அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்தது அதிகம். இது புனைவெழுத்தாளர்கள் எல்லோருக்குமே நேர்வதுதான். அரிதானதொன்றுமில்லை.

கதாபாத்திரங்களோடு அழுது, சிந்தித்து, உரையாடி, சிரித்துக் கழித்த காலங்களில் நிகழுலகிற்கும் அகத்துள் விரியும் புனைவுவெளிக்கும் இடையே ஊசலாடும் அவஸ்தைகள் பலநேரம் எனக்குள் மிகுந்த ஆயாசத்தை ஏற்படுத்தும். ஒருவித சோர்வையும் புரியாததொரு பித்துநிலையையும்கூட. அவற்றைச் சொல்ல ஆரம்பித்தால், சிலவேளைகளில் அவை பேய்க்கதைகளை வாசிப்பதுபோலவும் வாசிப்பவருக்குப் படலாம்.

மதுமிதா: அந்த ஆயாசம், சோர்வு பித்துநிலை அவற்றை இங்கே எடுத்துச் சொல்லி சற்றே ஆசுவாசமடையுங்களேன்…

ஜெயந்தி சங்கர்:  சொல்லி ஆசுவாசம் பெறுவதெல்லாம் நடப்பதில்லை என்று நடைமுறையில் பலமுறை கண்டிருக்கிறேன். அவற்றைப் பட்டுவிட்டு, மீண்டு, நிஜத்துக்குத் திரும்பி, மீண்டும் பட்டு, மீண்டும் திரும்புவதெல்லாம் திரும்பத் திரும்ப சுழற்சியில் நடந்தபடியே இருக்கும்.

இருப்பினும், கொஞ்சம் பயங்காட்டும் விஷயங்களை விடுத்து, சுவாரசியமான சிலவற்றைப் பகிரலாம்.

தற்போது ஆங்கிலத்தில் ஒரு நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன். அதில் அனன்யா என்ற ஒன்றரை வயதில் சின்னக் குழந்தையின் கதாபாத்திரம் ஒன்று வரும். அதனை எழுதிக் கொண்டிருந்த வாரத்தில், வேகநடை போகும்போது அந்த வயதுக் குழந்தையோடு கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவோமே அதுபோல அந்தக் குழந்தையோடு பேசிக் கொண்டே நடந்ததை திடீரென்று உணர்ந்தேன்.

அதே காலத்தில் வீட்டுக்கு ஓர் இளம் பெண் தனது இரண்டு வயதுக் குழந்தையோடு வந்திருந்தார். குழந்தையின் பெயர் யாழினி, ஆனால் நான் மீண்டும் மீண்டும் அவளை அனன்யா என்றே கூப்பிட்டுக்கொண்டிருந்தேன். அந்தக் குழந்தை என்னை ஒருமாதிரி பார்த்தாள். “இதுகூட ஞாபகம் இருக்காதா உனக்கு,” என்று கேட்பது போல இருந்தது அவள் பார்வை. எப்போது நினைத்தாலும் சிரிப்பாக வரும் எனக்கு.

என்னுடைய ஏதோவொரு கதாபாத்திரத்தின் பெயரைச் சொல்லி பலமுறை என் இளைய மகனைக் கூப்பிட்டுப் பேசியிருப்பேன். “எப்போமா என் பேர மாத்தின?” என்று ஆச்சரியத்தோடு கேட்பதும் அவனுடைய முகபாவனையும் என்னை நினைத்து எனக்கே வேடிக்கையாக இருக்கும்.

இப்போதெல்லாம் நான் எழுதிக்கொண்டிருக்கும் நாவலின் முதன்மை கதாபாத்திரம் சிந்திப்பது போலவே மனதுக்குள் பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதையும் அவ்வப்போது அவதானித்து வருகிறேன்.

மதுமிதா: இத்தகைய களைப்பிலிருந்து எப்படி வெளியே வருகிறீர்கள், அல்லது புத்துணர்வுக்கு உங்களை உற்சாகப்படுத்திக்கொள்ள என்ன செய்வீர்கள்?

ஜெயந்தி சங்கர்:  அவ்வப்போது அவற்றிலிருந்து வெளியேறி என்னையே உற்சாகப்படுத்திக்கொள்ள நான் நாடுவது நீண்ட வேக நடை. ஓவியம் தீட்டுவதும்கூட எனக்கு மிகுந்த புத்துணர்ச்சி அளிக்கிறது. சாக்சஃபோன் ஜாஸ், குழலிசை போன்ற இசை வகைகளைக் கேட்பதும் உதவுகிறது. புத்தகம், குறிப்பாக புனைவுகளை வாசிப்பது சில வேளைகளில் மூளைக்குத் தேவையான புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.

மதுமிதா: சமகாலத்தைய கதைகளாக இல்லாமல் கடந்த காலகட்டம், நூற்றாண்டுக்கு முன்பான காலகட்டமாக அமைத்தது, சமகாலத்திய கதைகளிலும் நூற்றாண்டுக்கு முன்பான சில நிகழ்வுகளைப் போகிற போக்கில் பொருத்தமாகச் சொல்வது, சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் பற்றிய விவரங்கள் வருவது இவை திட்டமிட்டு அந்தக் காலகட்டத்தை பதிவு செய்ய எழுதப்பட்டதா, அல்லதா தற்செயலாக நிகழ்ந்ததா?

ஜெயந்தி சங்கர்:  இந்த 12 கதைகளில் பாதிக்குப் பாதி சமகாலத்தைப் பதிவு செய்கின்ற கதைகள்தான்.

21ஆம் நூற்றாண்டில் இயங்கிவரும் ஒரு படைப்பாளி நூறாண்டுக்கு முன்பான பாத்திரங்களைப் படைக்கையில் வாசக மனத்தில் இதுபோன்ற கூடுதலான சுவாரசியமும் ஆர்வமும் பிறப்பது இயல்புதான். படைப்பாளி தான் வாழும் காலத்துக்கு  நூறாண்டுக்கு முன்னர் வாழ்ந்திருக்கக்கூடிய தனது கதாபாத்திரங்களை உயிர்ப்போடு படைக்கும்போது, புனைவானது வரலாற்றை ஊறுகாயாகத் தொட்டுக் கொள்வது மிக இயல்புதான். அதொன்றும் அரிதன்று, படைப்பாளிகள் செய்வதுதான். கதாபாத்திரங்கள் உலவும் காலத்தைச் சொல்லும்போது இக்கதைகள் வரலாற்றை கலைநேர்த்திமிகுந்த ஒப்பனையாகப் பூசிக் கொள்கின்றன என்பேன்.

புனைவுக்கு வரலாறு சரி. வரலாற்றுக்கு புனைவு கூடாது. புனைவுகளின் நோக்கமும் ஆற்றலும் கண்டிப்பாக அதுவல்ல. அவ்வகையில், புனைவுகளுக்கு வரலாற்றைப் பதிவு செய்யும் நோக்கங்களும் கிடையாது என்று நான் மிக திடமாக நம்புகிறேன்.

எந்தத் திட்டமும் தீட்டாமல் கதாபாத்திரங்களூடாக முன்செல்லும் கதைகளாக இவற்றை வடித்தெடுத்திருக்கிறேன் என்று இன்றைக்கு விலகி நின்று யோசிக்கையில் எனக்குத் தோன்றுகிறது.

மதுமிதா: கடிதம் மூலமாக கதையை நகர்த்தும்போது நீர்த்துப் போகாமல் அழுத்தமாக காட்சிகளை அளிப்பதில் சிக்கல்கள் இல்லையா?

ஜெயந்தி சங்கர்:  கடிதமாக கதையை நகர்த்துவது அரிதான உத்தியே கிடையாது. நிறையபேர் பல்வேறு மொழிகளிலும்  செய்திருப்பதுதான்.

எப்போதுமே இதில் சிக்கலை நான் எதிர்கொண்டதில்லை. இன்னும் சொல்லப் போனால் சில வேளைகளில் கடிதம் என்பது மிக வசதியான கருவியாகிவிடுவதையே உணர்ந்திருக்கிறேன். தன்மை ஒருமை கொடுக்கக்கூடிய வசதி அது.

மற்றபடி, கடிதமானாலும் எந்த பிற உத்திகளானாலும் காட்சிப்படுத்துதல் என்பது எழுத்துப் பயிற்சியால் பெறக்கூடியது.

மதுமிதா: காந்தி 150 கொண்டாடும் வருடத்தில் இந்தப் புத்தகம் வெளி வருவதை எப்படிப் பார்க்கிறீங்க?

ஜெயந்தி சங்கர்:  துளிக்கூட நம்பவே முடியாத தற்செயலாக இருக்கிறது. இதுகுறித்து நண்பர் ஒருவர் சொன்னதுமே தோன்றிய முதல் உணர்வு இதுதான்.

கூடுதலாக சிந்திக்கையில் இந்த தற்செயலுக்கு ஒருவித சுவாரசியம் கூடுகிறது. அகிம்சை தத்துவத்தைப் பயின்று, சோதித்து, உலகளவில் போதித்த அவ்வளவு பெரியதோர் ஆளுமையின் பெயரைத் தலைப்பில் தாங்கி இந்நூல் வருவது எனக்கு வேண்டுமானால் தற்செயலாகத் தோன்றலாம், பிறருக்கு அவ்வாறு தோன்றும் சாத்தியமே குறைவு.

உண்மையைச் சொல்வதென்றால், காந்தியாரும் அவரது கொள்கைகள் சார்ந்தவையும் சில கதைகளில் படிமங்களாக, மிக மெல்லிழைகளாகவே வருகிற நிலையிலும் இந்நூலின் தலைப்பு இக்கேள்வியை கண்டிப்பாக யாருக்குள்ளும் எழுப்பவல்லது என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை.

மதுமிதா: ”ஒரு கிராம் தங்கம் இப்ப ஏழு ரூபா எட்டு பைசா….. ,” “தங்கம் இந்த அளவு விலை எகிறி என் ஆயுசுல நாம் பாத்ததில்ல.” இவற்றை வாசிக்கையில் உடனே அந்தக் காலத்தையும் இந்தக் காலத்தையும் ஒப்பிடுகிறது வாசக மனம்.

காலத்தை நிர்ணயம் செய்ய இப்படியான உரையாடல் வசனங்களின் மூலம் கண் முன்னே நிறுத்தப் பார்க்கிறீங்களா?

ஜெயந்தி சங்கர்:  ஆம், சந்தேகமே இல்லாமல். காலத்தை காட்சிகளூடாக வாசகனுக்குக் காட்டுவதற்கு இதுபோன்ற வசனங்கள் உதவுகின்றன. இதுவும் ஒருவகையில் படைப்பாளிகள் பலரும் பரவலாய்ப் பயன்படுத்தும், அறிந்திருக்கும் உத்திகளுள் ஒன்றுதான்.

மதுமிதா: யாருக்கான புத்தகமாக இதை வெளியிடுகிறீங்க? வெகு ஜன வாசகர்களும் இந்தக் கதைகளை உள்வாங்கிக் கொள்ள முடியுமா?

ஜெயந்தி சங்கர்:  தேர்ந்த ஒரு படைப்பாளி முதிர்ந்த வாசகர்களுக்கு என்று ஆங்கிலத்தில் புனைந்த கதைகள் என்று இவற்றை தயக்கமில்லாமல் வரையறுக்கலாம்.

ஆங்கிலத்தில் எழுதப்பெற்ற 12 சிறுகதைகளும் தமிழுக்கு வர வேண்டும் என்று வாசக நண்பர்கள் பிரியப்பட்டதால் அவற்றை மொழியாக்கம் செய்தேன். ஆகவே, இன்னமும் நூலாக்கம் பெறத இந்த மொழியாக்கம் தமிழ் வாசகர்களுக்கானது.

தீவிர இலக்கிய வாசகர்கள் விரும்பி வாசிக்கலாம். வளர்ந்து வரும், முதிர்ந்த, தேர்ந்த வாசகர்களுக்கு இந்தக் கதைகளை உள்வாங்குவது எளிதாகவே இருக்கும்.

வெகுஜன வாசகர்களுக்கு இக்கதைகளை pஉரிந்துகொள்வது சற்றே சிரமமாக இருக்கலாம் என்றாலும் இரண்டாம் வாசிப்பில் அவர்களாலும் கதைகளை உள்வாங்கிக்கொள்ள முடியும் என்றே நம்புகிறேன்.

மதுமிதா: உலகில் எங்கிருந்தாலும் எந்தப் பகுதிக்கு வாழ்வின் நிமித்தமாகப் பயணம் செய்ய நேர்ந்தாலும் வேர்கள் சொந்த நாட்டில் இருக்கும் அன்பும் ஆர்வமும் தாய்மொழியில் இருக்கும் என்பதை பதிவு செய்ய முயன்றீர்களா?

ஜெயந்தி சங்கர்:  சிங்கப்பூரிலேயே பிறந்து வளரும் என்னுடைய இளைய மகனைப் போன்றோருக்கு வேர்கள் சிங்கப்பூரில்தானே இருக்கின்றன. பெற்றோரின் வேர்களை இவர் தேட முனையப்போவதே கிடையாது. இவர்கள் தமிழ்மண்ணை செய்திகள், ஊடங்கள் வாயிலாக, சில திரைப்படங்கள் வாயிலாகவே அறிகின்றனர். தாய்மொழி என்னவோ என்னைப்போலவே இவனுக்கும் தமிழ்தான். வேறு நாடுகளுக்கு செல்கையில் சிங்கப்பூரில் விட்டுச் சென்ற வேர்களை நாடும் இவனது உள்மனம், தமிழைக் காதால் கேட்டால் எவ்வாறு உணரும்? தெரியாது, பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

மனிதனுக்கு வேர்களுக்கான விழைவு அடியாழ் மனத்தில் இருப்பதை மறுக்கவே மாட்டேன். இருந்தபோதிலும், பிறந்து வளர்ந்த இந்தியாவில் வாழ்ந்ததைக் காட்டிலும் இங்கே அதிக காலம் வாழ்ந்ததில் இந்தியாவுடன் உள்ளூர நான் அன்னியப்பட்டுத் தானே போயிருக்கிறேன். அதுகுறித்து நிறையவே யோசித்திருக்கிறேன். ஒருகட்டத்தில் இதுவும் இயற்கைதான் என்று எனக்குத் தோன்ற ஆரம்பித்துவிட்டது.

சுருங்கி வரும் உலகில் நாடுகளின் எல்லைகளுக்கான அர்த்தங்கள், எல்லைச் சண்டைகள், அரசியல் சச்சரவுகள் பெரும்பாலும் மங்கி மறைந்து வருகின்றன. மனிதனுக்கு உலகம் 24 மணிநேர விமானப் பயணமாகி பல்லாண்டுகளாகின்றன.

அவ்வந்த நிலங்களில், காலங்களில் உலவும் மனிதர்களை எவ்வித மதிப்பீடுகளும் இல்லாமலே மானுடவியல் நோக்கில் இந்தக் கதைகள் அவதானிக்கின்றன.

’வாசிப்போம் சிங்கப்பூர்’ சிறுகதையும்கூட தாய்மொழிக்கு சிறந்த முக்கியத்துவம் அளிக்கும் நவீன சிங்கப்பூரில் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்றுத் தேர்ந்த ஓர் இளம் தலைமுறையானது தாய்மொழியை எவ்வாறு பார்க்கின்றது என்பதை எவ்விதப் போற்றுதல்கள், தூற்றுதல்களின்றிப் பதிவு செய்துள்ளது.

மதுமிதா: நூலகத்தில் அந்தச் சீனப்பெண்மணியின் அக்கறை உணர்வு வாசகர் கேட்ட தமிழ்ப் புத்தகத்தை எடுத்துத்தர அவர் மேற்கொண்ட வழிமுறைகள்… இப்படிதான் ஒரு புது மொழியினைக் கற்க வேண்டுமா?

ஜெயந்தி சங்கர்: உண்மையில் அந்தக் கதையில் வரும் சீன நூலகர் பாத்திரத்தின் செயல் அவர்களுடைய மொழிசார்ந்த பலம். சீன எழுத்து மொழி சித்திர வடிவலானது. ஆகவே, அவர்களுக்கு பிற எழுத்து மொழிகளையும் சித்திரங்களாகவே பார்க்கும் நுண்ணறிவுண்டு.

மதுமிதா: உறவுச் சிக்கல்களை உளவியல் ரீதியாக ஒரு தாய் திறந்த மனதுடன் மகனிடம் பேசும் சூழல் பற்றி?

ஜெயந்தி சங்கர்: சிங்கப்பூரில் எந்த விஷயத்தைக் குறித்தும் இளைய சமூகம் விவாதத்துக்கும் பேசுவதற்கும் கூச்சப்படுவதே கிடையாது. நிறைய சீனக் குடும்பங்களில் கட்டுப்பெட்டித் தனம் இருப்பதைப் பார்க்கும் அதே வேளையில், ‘என் அம்மா ஒரு பெண்ணியவாதி’ கதையில் வருகிற மாதிரியான சீனக் குடும்பங்களையும் நிறையவே நாம் இங்கு பார்க்க முடியும்.

இந்தக் கதை உண்மையில் சொல்ல விரும்பும் செய்தி வெறும் உளவியல் சிக்கலும் சூழலும் மட்டுமல்ல. தனது செயலுக்கு நியாயம் கற்பிக்க எண்ணினால், மகனேயானாலும், தனது வாதத்துக்கு எதிர்வாதம் செய்யும் தன் தாயை ’பெண்ணியவாதி’ என்ற முத்திரைக்குள் அடைத்துவிடத் துடிக்கும் ஓர் ஆணாகிவிடும் மாயத்தை சொல்லவே விரும்பினேன்.

மதுமிதா: பெண்ணே பெண்ணுக்கு எதிரி எனும் நிலையை பல இடங்களில் பார்க்கும்போது, இந்தத் தாய் விளிம்புநிலை பெண்ணின் மீதான கரிசனத்தை மகனிடம் எடுத்துச் சொல்லும் நிலை பெண்ணியவாதியாக அந்தத் தாய் மகனால் கருதப்பட்டாலும் மனித குலத்தின் மீதான நம்பிக்கையை அல்லவா இன்னொரு பரிமாணத்தில் காட்டுகிறார்.

ஜெயந்தி சங்கர்: நல்ல வாசிப்பு. ஆம், அந்தப் பாத்திரம் மனித குலத்தின் மீதான நம்பிக்கையை வாசகருக்குள் ஏற்படுத்தவே செய்வார்.

அது ஒருபுறமிருக்க, பெண்ணே பெண்ணுக்கு எதிரி என்கிற கூற்றெல்லாம் எப்போதுமே அபத்தமாகப்படும் எனக்கு. இது ஒருவகையில் வலுவில் உருவாக்கப்பட்ட கட்டுக்கதை. என்னால், ஏற்றுக் கொள்ளக்கூடியதாக என்றைக்குமே இருந்ததில்லை. அதனை முற்றிலும் நிராகரிக்கிறேன்.

மதுமிதா: இந்தத் தொகுப்பை வாசிக்கும்போது, தமிழில் சிறுகதை எழுதுவது எப்படி என்னும் புதிய பாடத் திட்டத்தை ப்ராக்டிகலாக இந்தக் கதைகள் மூலம் வாசகர்களுக்கு கற்றுத் தருவது போலிருக்கிறதே, இதை உணர்ந்திருக்கிறீங்களா?

ஜெயந்தி சங்கர்: தமிழில் வாசித்த ஒருசிலர் இதுபோலவே உணர்ந்து சொல்லி இருக்கிறார்கள். அந்த மாதிரியான சிந்தனைகள், எதிர்வினைகளை ஆக்கங்களுக்கான கவனமாக, அவை புதிய வாசக அனுபவத்தை ஏற்படுத்தியதாகவே மகிழ்கிறேன்.

ப்ராக்டிகலாகவோ தியரிட்டிக்கலாகவோ கற்றுத் தந்துவிட முடியும் என்று நான் நம்பவில்லை. எனினும், அவரவருக்குள் செயல்படும் படைப்பாக்க மனமும் கலைநுட்ப, செய்நேர்த்திகளில் தொடர்ந்து ஒருவருக்கு இருக்கும் ஈடுபாடும் தேடலும் இடைவெளியற்ற ஆக்கச் செயல்பாடுகளும்தான் படைப்பாளியை அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு செலுத்தும். நானே அதற்கான சிறந்ததோர் உதாரணம்.

மதுமிதா: நான்கைந்து வருடங்களாக எழுதி வந்த கதைகளை எந்தப் பத்திரிகைகளுக்கும் அனுப்பவில்லையா? நேரடி புத்தகமாகக் கொண்டு வருகிறீர்களே?

ஜெயந்தி சங்கர்:  கதைகள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட பின்னர் அச்சிதழ்கள், ஊடகங்களில் பிரசுரமாவில்லை. நேராக நூலாக்கத்திற்குத் தயாராகின. வாசித்த சில நண்பர்கள் பரிந்துரைத்ததால், கதைகள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

ஆனால், ஆங்கிலத்தில் எழுதப்பட்ட காலங்களில் பாதி கதைகள் ஆங்கில அச்சு மற்றும் இணைய ஊடகங்களில் பிரசுரங்கண்டன.

மதுமிதா: ஓரினச் சேர்க்கை என்னும் பாலியல் திரிபு நிலை மனிதர்களை பரிவுடன் நோக்க வேண்டும் என்பது சாதாரண மக்களிடையே இன்னும் ஏற்றுக் கொள்ளப்படவில்லையே, இந்தக் கதை அதை சமன் செய்யும் நோக்கில் எழுதப்பட்டுள்ளதா?

ஜெயந்தி சங்கர்: திரிபு என்று நம்மில் பலருக்கும் தோன்றுவது அவர்களுக்கு இயல்பு. நமக்கு இயல்பெனப்படுவது அவர்களில் பலருக்கும் திரிபாகத் தோன்றலாம். எது திரிபு? எது இயல்பு? யார் சாதாரணம், யார் அசாதாரணம்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை காண்பதொன்றும் எளிதல்ல.

இயல்பு என்றும் சாதாரணம் என்றும் நாம் எண்ணிக்கொண்டிருக்கும் எண்ணற்றவர்களின் மனங்களில் மண்டிக்கிடக்கும் பலதரப்பட்ட திரிபுகளையும் வக்கிரங்களையும் ஒப்பிட்டால் இவையெல்லாம் அதில் சேர்க்கவே முடியாது.

பரிவோடு பார்க்கவெல்லாம் கற்றுக் கொடுக்க முடியாது. சாதாரணம், அசாதாரணம் போன்ற பாகுபாடுகள் மனத்தில் இல்லாமல் அவர்களும் மனிதர்களே என்று யோசிக்கையில் பரிவு தானாய் நம்முள் எழும். அசாதாரணம், திரிபு எனக்கருதினால் பரிவு ஒருபோதும் நமக்குள் எழாது.

சமன் செய்யும் நோக்கில் ‘நான் என்ன ஜாடியா?’ என்ற அந்தக் கதை எழுதப்படவில்லை. சமன்செய்யும் நோக்கமோ தேவையோ அவசியமோ எந்தப் புனைவுக்குமே கிடையாது. ஒரு கதை குறைந்தபட்சம் கேள்விகளை எழுப்ப வேண்டும். அந்தக் கோணத்தில், ஓர் இளம் பெண்ணின் காதல் தோல்வி, அது அவளுக்குள் ஏற்படுத்தும் விரக்தி, அவளுடைய தோழிகாட்டும் புதியதோர் உலகம், அவள் படும் குழப்பங்கள் ஆகியவற்றை பதிவதே அந்தக் கதை.

மதுமிதா: அந்தக் கதையில் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கும் பாலுறவின் சிக்கல்கள் குறித்த நுண்ணிய விபரங்கள் நிச்சயமாக ஒரு புரிதலுணர்வை வாசகர்களிடையே நிகழ்த்தும். தொடர்ந்து பயணியுங்கள்.

ஜெயந்தி சங்கர்:  கற்கவும் ஆராய்ந்தறியவும் ஏராளமுண்டு. தொடர்ந்து பயணிக்கவே என்னிலும் விருப்பமுண்டு.

மதுமிதா: இந்தத் தொகுப்பு தொடர்ந்து விருதுகள் பெறும் என்பதில் எனக்குக் கொஞ்சங்கூட ஐயமில்லை. ஏனெனில், ஒவ்வொரு கதையும் தன்னளவில் அத்தனை விஷயங்களைக் கொண்டிருக்கின்றன. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

ஜெயந்தி சங்கர்: உங்களுடைய அன்பான ஊக்க வார்த்தைகளுக்கு உள்ளார்ந்த நன்றிகள். 

மதுமிதா: நன்றி ஜெ, வணக்கம்.

ஜெயந்தி சங்கர்:  உங்களுடைய நேரத்தை ஒதுக்கி Dangling Gandhi தமிழாக்கப் பிரதியை வாசித்ததற்கும் மிக்க நன்றி, மதுமிதா.

***

2015 முதலே ஆங்கிலத்தில் புனைவுகள் எழுதிவரும் ஜெயந்தி சங்கர் 1995 முதல் இலக்கியவுலகில் தொடர்ந்து இயங்கி வருபவர். தற்போது ஆங்கிலத்தில் தனது முதல் நாவலை எழுதி முடித்து நூலாக்கத்திற்காகக் காத்திருக்கும் இவர் தனது ஆங்கிலச்சிறுகதைகளை  தானே இந்நூலில் மொழியாக்கம் செய்துள்ளார்.  இவை Dangling Gandhi என்ற இவரது ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பில் உள்ள ஒரு சிறுகதையின் தமிழ் வடிவம்.  Dangling Gandhi என்ற இவரது ஆங்கில நூல் இரண்டு முக்கிய அனைத்துலக விருதுகளையும் இந்தியாவில் சில விருதுகளையும் வென்றுள்ளது. இவரது ஆக்கங்கள் வேற்றுமொழியில், குறிப்பாக ஆங்கிலம், ரஷ்யம், இந்தி, ஃப்ரெஞ்சில் மொழிபெயர்ப்பு கண்டு வருகின்றன. tஹமிழ் நூல்களுக்கு ஆனந்தவிகடன் நம்பிக்கை விருது உள்ளிட்ட பல்வேறு பரிசுகளும் முக்கிய விருதுகளும் வாங்கியுள்ள இவரது ஒவ்வொரு நூலுமே ஏதோவொரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. அண்மைக்காலமாக ஓவிய முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.