“பசுக்களும் காளைகளும்” : என். கல்யாண் ராமனின் வாடிவாசல் மொழிபெயர்ப்பு

ஒரு வகையில் இது ஆறு ஆண்டுகளாக உருக்கொண்ட கட்டுரை என்று சொல்ல  வேண்டும்; இது குறித்து ஆறு ஆண்டுகள் தகவல் சேகரித்தேன் என்ற அர்த்தத்தில் அல்ல. வழக்கமாக அதிர்ஷ்டவசமாக கூடிவரும் என் கட்டுரைகள் வகை தொகையற்ற தகவல்களின் செறிவான சதித்திட்டத்தில் திகைப்பவை, இம்முறை அதற்கு ஆறு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. 

Vaadivaasal: Arena (Oxford Novellas Series) Paperback by C.S. Chellappa (Author), N. Kalyan Raman (Translator)

என். கல்யாண் ராமன் தமிழிலக்கிய அடையாளங்களில் ஒன்றாய் மாறிவிட்ட வாடிவாசல் நாவலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து அப்போதுதான் பதிப்பிக்கப்பட்டிருந்த 2014-இல் அது குறித்து ஒரு மதிப்பீடு எழுத முடியுமா என்று கேட்டு சொல்வனம் ரவிசங்கர் எனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அந்தச் சமயத்தில் உற்சாகமான மனநிலையில் இல்லாதிருந்தபோதும் முயற்சி செய்கிறேன் என்று சொன்னேன். தான் பாஸ்டன் திரும்பும்போது அதன் பிரதி ஒன்றைக் கொண்டு வருவதாய்ச் சம்மதித்திருந்தார், ஆனால் அவருக்கே உரியதாய்ப் போய்விட்ட மறதியால் அது சென்னையிலேயே தங்கிற்று, அச்சில் உள்ள புத்தகங்களின் மென்பிரதிகளைக் கண்கொண்டு காணத் தகாது என்று அந்நாட்களில் லட்டைட்டிய கொள்கைகள் கொண்டிருந்த காரணத்தால் இப்பணி கைக்கொண்ட காலமே  துஞ்சலுற்றது. ஆனால் விதியின் களியாட்டங்கள் ஓய்வதாயில்லை- ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி பிரஸ் ஸ்டாலில் மறைத்து வைக்கப்பட்ட/பட்டிருந்த ஷெல்ஃப்கள் ஒன்றில் கன்னங்கரிய அட்டையில் மஞ்சள் மிளிரும் அந்த ஆங்கில மொழிபெயர்ப்பு ஆரவாரமில்லாமல் தொடர்ந்து அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தது; அது போதாதென்று அற்புதமாக அச்சிடப்பட்டிருந்த, இன்று செம்பிரதியாகிவிட்ட, மூலப் பதிப்பு, ஆதிமூலத்தின் அபூர்வமான கோட்டோவிங்கள் கொண்டது (ஆக்ஸ்போர்டு ஏன் இந்தச் செம்பிரதியை நகலெடுக்கவில்லை என்பதை இன்னும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை), 2018-ஆம் ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் காலச்சுவடு ஸ்டாலில் கவனத்தைக் கவரும் வகையில் இருத்தப்பட்டிருந்த செம்பதிப்புகளுக்கான ஷெல்ஃப்பில் பிரதான இடத்தில் தன்னை அறிவித்துக் கொண்டிருந்தது. ஆனால் இத்தனையும் போதவில்லை போல; என் நூலகத்தில் நெருக்கமாக அடுக்கப்பட்டிருந்த ஷெல்ஃப்களில் தன் மதிப்புக்கேற்ற இடம் அளிக்கப்படாத காரணத்தால் மூலநூலும் மொழியாக்கமும் இரண்டுமே அவற்றின் கீழே நிரம்பி வழிந்த புத்தகக் குவியலில் கிடத்தப்பட்டு தம் மீது காட்டப்படும் மாற்றாந்தாய் மனப்பான்மை குறித்து  அழகற்ற அந்த பிங்க் வண்ண தரைவிரிப்பில் இருந்தபடி  ஒவ்வொரு நாளும் முனகிக் கொண்டிருந்திருந்தன. 

ஆனால் கடைசியில் பார்த்தால், கண்ணை உறுத்திக் கொண்டிருந்த தரைவிரிப்பே இந்தக் கட்டுரையை எழுதும் சூழலை உருவாக்கிய நுண்தகவல்களில் ஒன்றாகிறது; படுக்கையறை செல்லும் வழியில் ஒவ்வொரு நாளும் இதைப் பன்னிரண்டு ஆண்டுகள் சகித்துக் கொண்டிருந்தது ஒரு முடிவுக்கு வந்தது (இந்த நூலகமே என் அலுவலகமாகவும் இருந்தது என்பதால் பழகிப் போன கண்களுக்கு அதன் அழகின்மை தெரியாமல் போனது, நைந்த பழைய ஸ்வெட்டர் போலவே அதுவும் எனக்கு சொற்களுக்கு எட்டாத  சௌகரிய ஒளி பெற்றிருந்தது). என் மனைவியின் பொறுமை முடிவுக்கு வந்தது, ஹோம் டீப்போ சென்று தரையைச் செப்பனிட ஏற்பாடு செய்தார், அவர். எனவே பழக்கத்தால் முதிர்பருவம் எய்திய என் சகா, எண்ணற்ற பனிப்பருவங்கள் என் பாதங்களை வெம்மையாக்கியதற்குப் பிரதிபலனாய் உயர்ந்த அடுக்குகளின் உச்சியை அலங்கரித்த மாடர்ன் எடிஷன்ஸ் அட்டைகளில் முகங்களாய்த்  திகழ்ந்த இலக்கியப் பேராளுமைகளால் வெறித்து நோக்கப்பட்ட என் தோழன்,  ஒருநாள் பிய்த்துப் பிடுங்கப்பட்டான், கண்டதுண்டமாய் வெட்டப்பட்டான், மூட்டை கட்டப்பட்டுக் குப்பை லாரி ஒன்றில் எடுத்துச் செல்லப்பட்டான்-  நுகர்வோருக்கான அர்த்தமற்ற  வெளியிடம் ஒன்றில் தங்களுக்கு விருப்பப்பட்ட பொழுதுபோக்குக்குச் செல்லும் வழியில் எண்ணற்ற பாதங்கள் மிதித்துச் செல்லும் மிதியடி விரிப்பு போல். எது எப்படியிருந்தாலும், அவனது இடுகாட்டுச் சடங்குகளில் ஒரு பகுதியாய் வரைமீறி வீழ்ந்துகிடந்த புத்தகக் குவியல்கள் ஒரு பெரிய அட்டைப் பெட்டியில் அழகிய சிறு கோபுரங்களாய் அடுக்கப்பட்டு மூடப்படாமல் பார்வைக்கு வைக்கப்பட்டன. ஒரு வசதிக்கு இப்படி ஏற்பாடு செய்யப்பட்ட சந்தர்ப்பவச அமைப்பில், மிரட்டும் ஏறுத்து அலங்கரித்த மஞ்சள் புத்தகம் அந்தக் கோபுரங்கள் ஒன்றின் உச்சியில் உட்கார்ந்தது. ஒவ்வொரு நாளும் நான் என் அலுவல் மேஜையிலிருந்து வலப்பக்கம் பார்க்கும்போதெல்லாம் அது என்னைப் பார்த்து எள்ளி நகையாடும், நான் ஏதோ என் இளமைக் காலங்களைக் கடந்துவிட்ட எருது வீரன் போலவும், அதனைப் போன்றவற்றை எதிர்கொண்டு விதியுடன் விளையாடும்  துணிச்சல் இல்லாதவன் போலவும். கோவிட் மாதங்களில் நான் அதைவிடச் சவால் விடும் பல ஆக்கங்களை வாசிப்பது போன்ற பாவனையில் அதன் எள்ளல் அழைப்பைத் தவிர்ப்பதில் கழிந்தன (சொல்வனம் வங்காள மொழிச் சிறப்பிதழின் பதிப்பாசிரியப் பணிகள், லார்கின் கட்டுரை போன்றவை ஒரு சில), ஆனால் எப்போதும் போல் இறுதியில் விதியே வென்றது. காலத்தின் நெளிவு சுளிவுகளை அதுவும் கற்றுக்கொண்டுவிட்டது, இப்போது சமூக ஊடகங்களின் உரத்து ஒளிக்கும் கரைகளில் அதன் ஆணைகள் எதிரொலித்தன. இம்முறை கல்யாண் தன் வாடிவாசல் மொழியாக்கத்தின் இரண்டாம் பதிப்பு குறித்த மகிழ்ச்சியை டிவிட்டரில் பகிர்ந்துகொண்டார் (அந்தச் செய்தி தனக்கே நேரடியாக தெரிய வரவில்லை என்ற வருத்தத்தையும் அடைப்புக் குறிகளுக்குள் பகிர்ந்து கொண்டிருந்தார், அவர்). இதுவே இறுதி இறகாக அமைந்தது, விதியின் தொடர்ந்த வலியுறுத்தல்களுக்கு வேறு வழியல்லாமல் வணங்க வேண்டியதாயிற்று, அட்டைப் பெட்டி கோட்டையின் சிகரத்தில் வரட்டுப் புன்னகையொன்றை உதிர்த்த அந்த மஞ்சள் நூலைப் படிக்கலானேன். 

தமிழ் நாவல் வரலாற்றில் வாடிவாசலின் இடம் தனித்தன்மை கொண்டது, அது விளையாட்டு பற்றிய முதல் நாவல் (ஒரே நாவலாகவும் இருக்கலாம்). ஜல்லிக்கட்டு பற்றிய நாவல், தென்னிந்தியாவின் மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டை விவரிக்கிறது. இதன் ஆசிரியர் செல்லப்பா இந்த மாவட்டங்களில் ஒன்றில், வத்தலகுண்டு, என்ற இடத்தில் பிறந்தவர், பிற்காலத் தமிழ் இலக்கிய மேதைகள் தம் கலையை வளர்த்துக் கொள்ளும் களமாய்த் திகழ்ந்து, தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு சகாப்தமாய் அமைந்துவிட்ட எழுத்து பத்திரிக்கைக்காக அவர் செய்த தியாகங்களுக்காக  நினைவுகூரப்படுபவர். அதன் முதல், இன்னும் சிறிய வடிவம், அவர் துணையாசிரியராக இருந்த சந்திரோதயம் பத்திரிக்கையில் வெளிவந்தது; பின்னர் அது தற்போதுள்ள குறுநாவல் வடிவத்துக்கு வளர்த்தெடுக்கப்பட்டு செல்லப்பாவால் 1959-ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. அதே ஆண்டுதான் அவர் எழுத்து இதழையும் துவக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 30 ஆண்டுகள் கண்டுகொள்ளப்படாமல் இருந்த இந்த நாவல் தொண்ணூறுகளில் மீண்டும் கண்டெடுக்கப்பட்டது- 1992-ஆம் ஆண்டு பீக்காக் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட ஒரு தொகுப்பில் இடம்பெற்றது. பின்னர் 1994-ஆம் ஆண்டு இந்தியா டுடே பத்திரிக்கையின் சிறப்பு மலரில் வெளியிடப்பட்டது. 1927-ஆம் ஆண்டு ஹெமிங்க்வே எழுதிய Undefeated (1927), ராஜம் ஐயரின் கமலாம்பாள் சரித்திரம் (1893) முதல் கலித்தொகை, ரிக் வேதம் என்று விரியும் அதன் முன்மாதிரிகள் காலச்சுவடு கிளாசிக் எடிஷன் மற்றும் ஓயூபி மொழியாக்கத்தில் மிகுந்த நேசத்துடன் விவரிக்கப்பட்டு ஆர்வம் கொண்ட வாசகனுக்குக் காத்திருக்கின்றன. 

வாடிவாசல் – காலச்சுவடு பதிப்பகம் (பின்னட்டை)

கட்டுரையை எழுதத் துவங்குமுன், இந்த மொழிபெயர்ப்பு எத்தகைய வரவேற்பு பெற்றிருக்கிறது என்பதை அறிய சிறிது கூகுள் செய்து பார்த்தேன். தேடல் முடிவுகளின் முதல் சில பக்கங்கள் கையளவு தொடுப்புக்களையே தந்தன.  மாபெரும் எழுத்தாளர் அசோகமித்திரன்  தி ஹிந்து நாளிதழில் ஒரு குறிப்பு எழுதியிருக்கிறார், ஆனால் அது ஆசிரியர் மற்றும் நாவல்  பற்றிய ஒரு சிறு அறிமுகம் அளித்துவிட்டு வரவிருக்கும் மொழியாக்கத்தின் ஒரு பகுதியை அச்சிட்டு, இடையில்  சர்வதேசப் புகழ்பெற்ற மொழிபெயர்ப்பாளர் என்று கல்யாண் முதுகைச் செல்லமாய்த் தடவி,  ஒரு முன்னோட்டம் போல் முடிந்துவிடுகிறது. வி. காதம்பரி மேலும் சற்று விரிவாகச் செல்கிறார், புத்தகத்தை அறிமுகப்படுத்தி, செல்லப்பாவின் மூலநூலுக்கு மொழிபெயர்ப்பு நியாயம் செய்கிறது என்று புகழ்ந்து, பாண்டித்திய பார்வையுடனும் கவனத்துடனும் எடிட் செய்யப்பட்டிருக்கிறது என்று பாராட்டுகிறார். புத்தகத்தின் முடிவில் அளிக்கப்பட்டுள்ள சொற்பொருள் அகராதி நூலின் மதிப்பை “மிகப் பெரும் அளவு உயர்த்துகிறது,” என்ற ஒரு வினோதப் பிரகடனமும் செய்கிறார். Seer.in தளத்தில் ஜீவ நாயகி எழுதியுள்ள கட்டுரை வாடிவாசல் நாவலை அறிமுகப்படுத்துவது, மொழிபெயர்ப்பை போகிற போக்கில் சுட்டுவதோடு நின்றுவிடுகிறது (“ஆம், இதையும் சொல்ல வேண்டும், தமிழ் தெரியாதவர்கள் என். கல்யாண ராமன் மொழியாக்கத்தை வாங்கிப் பார்க்கலாம்”). மொழியாக்கத்தை யாரும் முதன்மையாய் எடுத்துக் கொண்டு விமர்சித்ததாய்த் தெரியவில்லை. பெரும்பாலானவர்கள் மூலநூலுக்கு அறிமுகம் எழுதுகிறார்கள், அதிகபட்சம் ஏதோ நினைவுக்கு வந்ததைச் சொல்வது போல மொழியாக்கத்துக்கு ஒரு வரி புகழஞ்சலி செய்கிறார்கள். 

ஆனால் இது எதுவும் ஆச்சரியமாக இருக்க முடியாது. நவீனத் தமிழ் இலக்கியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு பற்றி எழுதுபவர் நிலைமை மோசமானதுதான். அவர் எழுதக்கூடிய விஷயங்கள் குறைவே. எளிமையாகவும் அப்பட்டமாகவும் சொல்வதென்றால், எடுத்து எழுதுவதற்கு அதிக நூல்கள் இல்லை. இதையும் தெளிவுபடுத்தி விடுகிறேன், ஒரே புத்தகத்தின் பல மொழியாக்கங்கள் இல்லை என்று குறைபட்டுக் கொள்ளவில்லை, தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட நூல்களே அதிகம் இல்லை. எண்ணிக்கை கணக்கு மட்டும் பார்த்தால்கூட இது ஒன்றும் வளர்ச்சிக்கு உகந்த தொழிலல்ல. Leopoldo Alas-இன் La Regenta நூலை மொழிபெயர்த்த ஜான் ரதர்ஃபோர்ட் மொழியாக்கம் குறித்து மிகச் சுருக்கமாகச் சொன்னது தமிழ் நூல்களின் ஆங்கில மொழியாக்கங்களின் மதிப்புரைகளுக்கும் பொருந்தும்:

“விஷயம் தெரிந்தவர்கள் சந்தேகத்துக்கு இடமின்றி தவிர்க்கும் வினோதத் தொழில் மொழியாக்கம்.”

ஃப்லோபேர் எழுதிய Madame Bovary நாவலின் லிடியா டேவிஸ் மொழிபெயர்ப்புக்கு ஜூலியன் பார்ன்ஸ் எழுதிய புகழ்பெற்ற மதிப்புரையை எடுத்துக் கொண்டால் இந்த விஷயத்தில் உள்ள சிக்கல் தெளிவாகப் புலப்படும். கிட்டத்தட்ட இந்த நாவலின் இருபதாம் மொழியாக்கம் தனது என்று கணக்கிடுகிறார் லிடியா டேவிஸ். அவரது மொழியாக்கம் 2010-ஆம் ஆண்டு வந்தது, முதல் மொழியாக்கமோ, அது கைப்பிரதியாக இருக்கும்போதே, ஃப்லோபேரின் மருமகள் கரொலினுடைய ஆசிரியர், ஒருக்கால் ஃப்லோபேரின் காதலியாக இருந்திருக்கக்கூடியவர், ஜூலியட் ஹெர்பர்ட்டால் 1856-57-இல் செய்யப்பட்டுவிட்டது. எனவே, Madame Bovary-இன் புதிய ஒரு மொழியாக்கத்தை மதிப்பீடு செய்யும் பார்ன்ஸால் 150 ஆண்டு கால மொழியாக்க வரலாற்றிலிருந்து தனக்கு உகந்த தேர்வுகளைச் செய்துகொள்ள முடிகிறது. செறிவான அந்த வரலாற்றின் பின்புலத்தில் அவர் எந்த ஒரு வாக்கியத்தையும் மிகவும் நுட்பமாக ஆய்வு செய்ய முடியும், அதைக் கொண்டு, எப்படி ஒருவர் செய்த மொழியாக்கம் “பிறதைக் காட்டிலும் சொல் நிறைந்தது,” என்றோ, அந்த ஒரு வாக்கியத்தின் ஸ்டீக்முல்லர் (Steegmuller)  மொழியாக்கம் வால்ஸ் அல்லது டேவிஸ் செய்துள்ள “அத்தனை விரிவுரைக்காத,”, இலக்கண இணக்கம் கொண்ட மொழியாக்கங்களைக் காட்டிலும் சுதந்திரமாகவும் தளர்வாகவும் இருக்கிறது என்று எடுத்துரைக்க முடியும். சங்கடப்படுத்துமளவு செறிவானதாக இருப்பதால் மற்றொரு மதிப்பீட்டாளர், Jonathan Raban போன்ற ஒருவர், அதே டேவிஸ் மொழியாக்கத்தை மதிப்பீடு செய்யும்போது அதன் முற்றிலும் வேறொரு கூறில் கவனம் செலுத்த முடிகிறது- அன்றாட வாழ்க்கையில் திரும்பத் திரும்ப நிகழ்வதை விவரிக்க அவ்வளவு வசதியாக இருக்கும் ஃப்லோபேரின் imparfait tense அதன் ஆங்கில வடிவில் “கனமாகவும் உறுத்துவதாகவும்” இருக்கிறது என்கிறார் அவர்; அவ்வப்போது, மிகக் குறுகிய பத்திகளுக்கே அது வெற்றி தருகிறது எனக் காண்கிறார்.

தனக்கு திருமணமானபின் தன் கணவன் கடிகாரக் கணக்குப்படி நடந்து கொள்வதை எம்மா அவதானிப்பதை டேவிஸ் மற்றவர்களைவிட மிகச் சிறந்த வகையில் மொழியாக்கம் செய்திருக்கிறார் என்று புகழும்போதே ஒப்பீட்டளவில் குறுகிய 7 பக்கங்களில் 123 முறை “would” என்ற சொல்லைப் பயன்படுத்தியது தவறு என்று கண்டிக்கவும் அவரால் முடிகிறது. இதன் சாத்தியங்கள் முடிவற்றவை. இதுபோல நுண்விபரங்களில் குறை காணும் பாண்டித்தியத்தைக் கொண்டு மதிப்பீட்டாளர் மொழியாக்கத்தின் இயல்பு குறித்தே பொதுமைப்படுத்த இயலும். மொழியாக்கங்கள் மூல மொழியையொட்டி நிகழ்வதாயின், மூல மொழியின் வாக்கிய அமைப்புக்கு மிக நெருக்கமானவை “நெருடல்கள்” நிறைந்திருக்கின்றன, ஆனால் நீங்கள் ஃப்லோபேர் போன்ற ஒரு எழுத்தாளரை மொழியாக்கம் செய்கிறீர்கள் என்றால் நெருடல்கள் மிகக் கறாராக தவிர்க்கப்பட வேண்டியவையாகின்றன.

பெருவாரி மக்களால் வாசிக்கப்படும் நாவல் களத்தில் மட்டுமல்ல இந்தச் செறிவு. ரீல்கவின் Duino Elegies போன்ற கனமான, அடர்த்தியான ஒரு படைப்பை எடுத்துக் கொள்ளுங்கள்- ரீல்க குறித்து வில்லியம் காஸ் எழுதிய  மேதைமை நிறைந்த புத்தகத்தில்  Ein Gott Vermags என்ற ஒரு அற்புதமான அத்தியாயம் உள்ளது (இதில் மொழியாக்கத்தின் பிரச்சினைகளும் விவதிக்கப்படுகின்றன). இங்கு அவர் முதல் எலிஜியின் முந்தைய 14 மொழியாக்கங்களை விவாதித்தபின்  (Leishman, Poulin, Mitchell முதலானவர்கள்) தனது மொழியாக்கத்தை அதற்கு முன் வந்த பதினான்கையும் கருத்தில் கொண்ட காரணத்தால் தற்போது நிலவும் மொழியாக்கத் தொகைக்கு புதியதாய் சேர்ப்பதற்குரிய விஷயங்கள் கொண்டது என்று கூறி முன்வைக்கிறார். ரீல்கவை நவீனப்படுத்துதல் என்பதல்ல விஷயம் (யார்தான் அதைச் செய்ய விரும்புவார்கள்), சென்ற நூற்றாண்டின் பல்வேறு தசாப்தங்களைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர்களின் மாறுபட்ட நுண்ணுணர்வு வழியே அவரது கவிதையின் வாக்கியார்த்தம் தொடர்ந்து விரிவுபடுத்திக் கொண்டே செல்லப்படுகிறது. ஒரு சிற்றார்வத்தில் யேட்ஸ் எழுதிய புகழ்பெற்ற ஸ்காலர்ஸ் கவிதையை மொழியாக்கம் செய்தபோது நண்பர் ஒருவர் இது குறித்து நாம் முன்னமேயே விவாதித்திருக்கிறோம் என்றார், அது மும்முறை மொழிபெயர்க்கப்பட்டது என்பதையும் பின்னர் அறிந்தேன் (அவற்றில் ஒன்று, வாடிவாசல் மொழிபெயர்ப்பாளர் கல்யாண் செய்தது)- இது எல்லாவற்றையும் விட முக்கியம், இன்னொரு விமரிசகர் இந்த மொழியாக்கங்களை ஒப்பிட்டு அவை குறித்து தன் கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதைச் சொல்வது, இவற்றுக்குப் பின் வந்த என் மொழியாக்கம் மேம்பட்டது என்று சொல்வதல்ல, நான் இவர்களுக்குப் பின் வந்தது ஒரு வசதியாயப் போயிற்று, 1915-இல் எழுதிய கவிதையை யேட்ஸ் தன் வழக்கப்படி திருத்தி எழுதிக் கொண்டே இருந்தார், 1929-இல் பதிப்பிக்கப்பட்ட வடிவமே தற்போது புழக்கத்தில் உள்ளது என்றாலும் நான் அதன் பல்வேறு வடிவங்களையும் ஆலோசிக்க முடிந்தது. 

N. Kalyan Raman (Translator) has been active as a translator for more than 20 years. Vaadivaasal is the sixth book of Tamil fiction that he has translated into English.

மேற்கண்டவற்றின் ஒளியில் காண்கையில்  ‘கல்யாண் மொழிபெயர்த்த வாடிவாசல்‘ இதுவரை நியாயமான விமரிசனத்துக்கு உட்படுத்தப்படவில்லை என்று சொல்வது பிழையாக இருக்காது என்று நினைக்கிறேன். மூலநூலின் சிறப்பை விதந்தோதி விளம்பரம் மட்டுமே அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அப்படியொன்று செய்ய நினைத்தாலும் மதிப்பீட்டாளன் இந்த பாலை மண்ணில் என்ன செய்ய முடியும், ஏதோ ஒரு சில கொத்துக்களை அள்ளலாம் என்று நினைப்பதுகூட அதீத எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் முனைப்பற்று கையைப் பிசைந்து கொண்டிருப்பதற்கு பதில் அடிப்படைகளில் கவனம் செலுத்தலாம் என்று சொல்வேன். காஸ்சுக்கு 14 மொழியாக்கங்கள், பார்னஸ் 20 என்று விளையாட்டாக கிடைத்தன, உண்மைதான், ஆனால் இருந்தபோது அவை எல்லாவற்றையும் ரீல்கவின் ஜெர்மன் கவிதைகளை அல்லது ஃப்லோபேரின் பிரெஞ்ச் நாவல்களை முன்வைத்தே வாசித்தாக வேண்டும். மூலநூல், அதன் மொழி, தொனி, வழக்கு, நுண்விபரங்கள் அந்நியச் செவிகளுக்கு எப்படிக் கொண்டுவந்து கொடுக்கப்படுகின்றன என்பதுதான் எந்த ஒரு மொழியாக்கத்தின் சிறப்புக்கும் அளவுகோல். இரு மொழிகளும் அறிந்த மதிப்பீட்டாளன்  ஒருபோதும் இவற்றை இழப்பதில்லை, பாவப்பட்ட தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப்பாளர் ஒப்பீட்டளவில் யாரும் காணாத ஒரு மூலையில் பெயரின்றி உழைத்து அங்கீகாரமின்றி அமைவதற்கு இப்படிப்பட்ட நெருக்கமான வாசிப்பே ஒரு பிரதியுபகாரமாக இருக்கும். இந்த மொழிபெயர்ப்புக்கு இதுவரை வந்த விமரிசனங்களில் சிறந்தது வாடிவாசல் தமிழாக்கத்துக்கு கல்யாண் அளித்த “மொழியாக்குனர் குறிப்பு” என்பது ஒரு பரிதாபம். நாம் ஒரு படி மேலே செல்ல முடியாதா? நெஞ்சளித்து அது  போலொரு முயற்சி செய்வது பொருத்தமாகத்தானே இருக்கும்?

2013-ஆம் ஆண்டு கல்யாணராமன் மொழிபெயர்த்த வாடிவாசல் ஆங்கில மொழியாக்கம், Arena-வை என் வாசிப்பு விதியின் நுண்விபரச் சூழ்ச்சியின் தொடர்ந்த தூண்டுதல்களால் உந்தப்பட்டவனாய் வாசிக்க எடுத்தேன். ஆனால் அதன் முன், இம்முறை முன்னட்டை முதல் பின்னட்டை வரை வாசிக்கக்கூடாது என்ற எண்ணம் எழுந்தது. மதிப்பீட்டின் பெரும்பகுதி மூலநூலைப் பாராட்டுவது, அதன் பின் அலுத்துப் போன தேய்வழக்குகள் கொண்டு ஒரு சுருக்கமான தீர்ப்பு எழுதுவது என்பது எப்போதும் எல்லாரும் செய்வதுதான். இல்லை, இம்முறை மொழியாக்கத்தை நெருக்கி வாசிக்கும்போது பஞ்ச துவாரங்களையும் இறுக்கி வைத்துக்கொள்ள வேண்டியதுதான். எனவே Arena-வின் இரு பத்திகள் வாசிப்பது அதன் பின் அதே இரு பத்திகளைக் காலச்சுவடு வாடிவாசலில் படிப்பது என்று தீர்மானித்துக் கொண்டேன். ஆங்கிலம் நெருடும் இடங்கள், ஆங்கிலத்தின் ஓசை பேதப்படும் இடங்களைத் தாமதித்து மனதில் குறித்துக் கொண்டேன், தமிழில் வாசிக்கும்போது அந்த இடங்களைக் கவனமாய் படித்து இரண்டாம் முறை குறிப்பிட்ட அந்தப் பகுதிகளின் மொழியாக்கத்தைப் படித்துச் சரி பார்த்துக் கொண்டேன். மொழியாக்கத்தின் மொழியாக்கமாக மூலநூலை வாசித்தேன் என்று சொல்லலாம், அதே சமயம் மனதினுள் மொழிபெயர்ப்பு தளை தட்டுகிறதா என்றும் பார்த்துக் கொண்டேன் – சிறு வயதில் நான் விரும்பி விளையாடிய ‘பசு காளை’ விளையாட்டு விளையாடுவது போல்.  பசு என்றால் மொழியாக்கம் சரியில்லை, காளை என்றால் கச்சிதமாக வந்திருக்கிறது. ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஏற்ற விளையாட்டுதான் இது. 

Bulls and Cows is an old code-breaking mind or paper and pencil game for two or more players

ஆனால் இதை எப்போதும் செய்ய முடியவில்லை என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். சில சமயம் கதையின் வேகத்தில் நான் இரண்டு பத்தி எண்ணிக்கையை மறந்துவிடுவேன், இது மொழியாக்கத்திலும் நிகழ்ந்தது, தமிழிலும் நிகழ்ந்தது. அந்த வேகம் குறைந்ததும் திரும்பிப் போய் தேடிப் படிக்க வேண்டியதாயிற்று. செல்லப்பாவின் வட்டார வழக்கின் செறிவையும் இனிமையையும் பிரதிபலிக்கக்கூடிய ஒருவகை ஆங்கில வட்டார வழக்கை தான் உருவாக்கிக் கொள்ளவில்ல என்று கல்யாண் தன் மொழிபெயர்ப்பாளர் குறிப்பில் எழுதியதையும் அவ்வப்போது நினைவு வைத்துக் கொண்டேன். காஸ் மறக்க முடியாத வகையில் சொன்னது இது-.

“One bails to keep the boat afloat” (படகு மிதக்க வேண்டுமென்றால் சிலவற்றை கடலில் எறிந்தாக வேண்டும்.)

அவரால் முடியாத காரியம் என்பதால் அல்ல, நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது முறை இது தேர்வு இல்லாத கேள்வி என்பதால். சொல்வனம் வங்காள சிறப்பிதழ் தொகுப்புக்காக பேட்டி அளித்த அருணாவா சின்ஹாவுடன் மொழியாக்கம் குறித்து பேசியிருக்கிறேன். அதில் இந்தச் சிக்கல்கள் விரிவாகப் பேசப்பட்டிருக்கின்றன, வாசகர்களுக்கு அதில் சில பொறிகள் தட்டலாம். எனவே முதல் வாக்கியத்திற்கும் நுழைவதற்கும் முன், மொழியாக்குனர் பால் நாம் எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொண்டுதான் துவங்குகிறோம். இரு மொழிகளிலும் வாசித்தபோது எனக்கு எதிர்பட்ட வெவ்வேறு வகைச் சிக்கல்களைக் குறிப்பிட்ட சில வாக்கியங்கள் கொண்டு சுருக்கிச் சுட்ட விரும்புகிறேன். 

நேர்மையான இந்த ஒப்புதல் வாக்குமூலத்தினால் எரிச்சலுரும் சாய்வு நாற்காலி மதிப்பீட்டாளர்க்ளே நீங்கள் என்ன் செய்திருப்பீர்கள்? எதுவும் செய்திருக்க மாட்டீர்கள். உண்மையின் குரூர அநீதிக்கு எதிரான போலிக் கோபமிது, சொல்லப்போனால் அதனால் தூண்டப்பட்டு, என் கண்கள், மூலநூலின் முதல் வாக்கியத்தில் கூடியிருந்த கும்பலை “கூட்டம் எகிறி நின்றது,” என்று விவரித்ததில் வெறித்து நின்றது. “A packed crowd had gathered”, தமிழில் படிப்பதற்கு முன் இது சரியாக இருப்பது போலதான் இருந்தது, ஆனால் இரண்டாம் முறை யோசிக்கும்போது அதில் ஒரு துள்ளல் குறைவது போல் தோன்றியது. “bobbed around” என்பது துள்ளுவதாக இருக்குமோ – கூட்டம் கூடுவதை, gather என்று சொல்லலாம், ஆனால் ‘எகிறி’ என்பதில் உள்ள கிட்டத்தட்ட ஒரு பந்தின் துள்ளலுக்கு bob பொருத்தமாக இருக்கலாம், bounce என்பது கொஞ்சம் அதிகம் என்று சொல்லிக் கொண்டு நகர்ந்தவனை “forming” மற்றும் “pooled” என்ற சொற்கள் அடுத்த பக்கத்திலேயே தடுத்து நிறுத்தின:

துளிர்ந்து வெடிக்கும் வேர்வைத் துளிகள் பளீரிட்டு நடு முதுகுக்கு ஓடிக் கலந்து வாய்க்கால் வகுத்து வழிந்தோடிக் கொண்டிருந்தன

என்று எழுதுகிறார் செல்லப்பா. மணக்கண்ணில் வியர்வை துளிர்த்து  ஆறாய்ப்  பெருகி சுட்டெரிக்கும் வெயிலைக் கணப்பொழுது பிரதிபலித்து சட்டை இல்லாத வெற்று முதுகு நெடுக வழிகிறது, முதுகெலும்பின் தடத்தில் ஒரு பேராறாய்க் கூடி தண்டுவடத்தின் வேரைச் சென்று சேர்கிறது, பின் எங்கோ மறைகிறது. நில்லாத அசைவை விவரிக்கும் சொற்கள் இவை, சூரியக் கண்ணால் ஒரு மின்னல் வெட்டில் புகைப்படம் எனப் பதிவுசெய்து கொள்ளப்படுகிறது. மொழிபெயர்ப்பில் என்ன நடக்கிறது பார்க்கலாம்’

“Drops of sweat forming and bursting on the skin glistened and flowed to the centre of the back where they pooled into a canal and streamed down”

ஆங்கில மொழியாக்கத்தை வாசித்தவுடன் முதலில் கேலி செய்யத் தோன்றியது, வியர்வைத் துளிகள் உடைகின்றன என்றால் அவை முதலிலேயே தோன்றியிருக்க வேண்டும் இல்லையா, சருமத்தில் அல்லாமல் வேறு எங்கை அவை தோன்ற முடியும்? தமிழில் முதல் இரு சொற்களைப் படிக்கும்போது விடை தெளிவாகிறது- ஒரு சிறு நொடித்துளி இடைவெளி கிடைக்கிறது- ‘துளிர்த்து வெடிக்கும்’: வியர்ப்பதற்கு முன் உடல் திறந்து கொடுக்கும் நொடித்துளி, எனவே துளிர்த்து- “burst as they formed,” என்று இருக்கலாமா? இப்போதும்கூட skin என்று சொல்வது தேவையில்லை என்று தோன்றுகிறது. நடுமுதுகுக்கு சிற்றோடைகளாய்ச்  சென்று கலக்கும் வியர்வைத்துளிகளின் பளீரிடுதலை “glistens’ அழகாக கைப்பற்றுகிறது. இதெல்லாம் சரிதான், ஆனால் ‘pooled’? வழிந்தோடும் வியர்வைத் துளிகளை இது சற்றே தேக்குகிறது, அதன் பின்னரே அவை வாய்க்கால் வகுத்து வழிகின்றன. இதுபோல் கணப்பொழுது தாமதிப்பது எனக்குச் சற்றே பிரச்சினையாக இருந்தது, இதைத் தவிர்க்க முடியுமா என்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன். “Bursting as they formed, drops of sweat glistened as they coursed to the middle of the back and continued downwards as a single channel that eventually brimmed over”. துல்லியமாக இருக்கிறது என்று சொல்ல முடியாது, இப்போதும் eventually என்ற சொல் துருத்திக் கொண்டுதான் நிற்கிறது, “brimmed over” என்று சொல்வது இலக்கணச் சுத்தமான மொழிபெயர்ப்பு என்று கொண்டாலும் அது அவ்வளவு சௌஜன்யமான  சொல்லாகத் தெரியவில்லை. ஆனால் ஓரளவுக்கு அசைவுக்கு ஏற்ற பொருத்தம் கொள்கிறது. மொழியாக்கத்தைப் பொறுத்தவரைச் சில வெற்றிகளை ஈட்டினாலும் தோல்விகளைத் தழுவிக் கொள்ள மறுக்க முடியாது. இது போன்ற கொலைவெறி பேன்பார்த்தலின் நோக்கம் குற்றம் காண்பதோ குறை சொல்வதோ  அல்ல, கல்யாண் போன்ற ஒரு தீவிர மொழியாக்குனர் முன்னுள்ள சொற்தேர்வுகளின் சாத்தியத்தை உணர்த்துவதும், அவர் ஏன் ஒரு சொல்லைத் தவிர்த்து வேறொன்றைத் தேர்வு செய்தார் என்பதைப் புரிந்து கொள்வதுமே.

நாலாம் பக்கத்திற்குச் செல்வோம். அதில் ஜல்லிக்கட்டின் மைய நிகழ்வின் சுருக்கமான “அடி மேல் அடி” பொதுவான விவரணை நமக்கு அளிக்கப்படுகிறது. இது நிஜ ஏறு அணைதலின் விவரணை அல்ல(பொறுமையில்லா வாசகரே அதற்கு நீங்கள் பொறுமை காக்க வேண்டும். அதற்கு வெகுமதியாகப் பல அபாரமான பரிசுகள் புத்தகம் நெடுகே உங்களுக்காக காத்துக் கிடக்கின்றன), ஆனால் அதை நாம் பரிச்சயப்படுத்திக் கொள்வதற்கு ஏதாக நமக்களிக்கப்பட்டிருப்பதோ ஒரு பவர்பாயிண்ட் பதிப்பு. 

“Either you threw your arm around a bull’s hump in a brute hug, grabbed its horns and pushed him down, and while keeping the animal from rearing free, made it stand still on its four legs for a few seconds; or better still, you held the bull down till its legs gave way, make it stumble, bend at the knees and slide to the ground. If lacking strength and ability… he had to let the bull get away, he had to admit his incapacity…In this contest of strength a one-on-one bout between man and bull during the slanting sun’s hour of descent. There could be only one victor in that Vaadivaasal.” 

Threw, grab, push, rear, stand, held, stumble, bend, slide…குறுநாவலின் இட நெருக்கடியில் அபரிமிதமான வினையாற்றல்கள் மிகுந்த கவனத்துடன் சிக்கனமாகக் கையாளப் பட்டிருக்கின்றன. மொழிபெயர்ப்பின் பலம் அதன் உண்மையான மகோன்னதத்தில் இங்கு நமக்குக் காணக் கிடைகிறது. விவரங்களில் அது செலுத்தும் கவனம்,  மனிதனும் மிருகமும் ஒன்றை மற்றொன்று விஞ்ச முனையும் விளையாட்டில் முக்கியம் பெறும் அசைவுகளின் வரிசை முறையைத் தாளம்தப்பாமல், நிகழ்வை அது நிகழும் கணத்தில் விவரித்து வாசகருக்கு காட்சியும் ஒசையும் பிணையும் ஒரு காட்சி அனுபவமாகக் கடத்துவதில் வெற்றிபெரும் வியக்கத்தக்க அந்தக் கவனத்தை நம்மால் இங்கு இனங்காண முடிகிறது. நிதானித்து அந்த வரிசை முறையை அனுபவியுங்கள்,  “சாய்கிற சூரியன் விழுகிற பொழுதில்” என்ற வரியின் நுட்பமான இசையை “slanting sun’s hour of descent” நளினமாகப் பாடுவதை கேட்டு ரசியுங்கள். அவ்வாறு களித்திருக்கையில், மூலத்தின் இலக்கண அமைப்பை மொழிபெயர்ப்பு எவ்வாறு உருமாற்றியிருக்கிறது என்பதையும் சற்று கவனியுங்கள். மூலம் இலக்கணத்தை சற்று தளர்வாகவே கையாள்கிறது. “அ அதைக்காட்டிலும் ஆ” அல்லது இ என்று மூன்று செயல்களை விவரிக்கும் வாக்கியத்தை “இந்த இரண்டிலொரு முடிவு காணும் – அந்த வாடிவாசலில்” என்று சற்று குழப்பமாக நிறைவு செய்கிறது. கல்யாண் இக்குழப்பத்தை முழுதாகத் தவிர்த்து “there could be only one victor in that vaadivaasal” என்று தெளிவாக மொழிபெயர்த்திருக்கிறார். 

மேலும், விளையாட்டு அசைவுகளுக்கேற்ற விசையை மூலத்தின் “காளையின் திமிலில் கைபோட்டு அணைத்து” இயல்பாகவே சுட்டிவிடுகிறது. மொழிபெயர்ப்பின் “brute hug”-கிற்கோ “brute” என்ற கூடுதலான அடைமொழி தேவைப்படுகிறது. “Bull tamer” என்று மொழிபெயர்ப்பில் வரும் பதத்தைப் பற்றி பேசிவிட இதுவே நல்ல தருணமாகவும் இருக்கலாம். ஆங்கிலத்தில் வாசிக்கையில், “bullfighting” என்ற வார்த்தையை எந்தக் கதையில் நாம் எதிர்கொண்டாலும் நம் ஹெமிங்வே கண்பட்டைகளை போட்டுக்கொள்ள நிபந்திக்கப்படிகிறோம். ஒரு விதத்தில் இது நியாமமும்கூட, ஏனெனில் bullfighting குறித்த கலைச்சொற்கள அனைத்தையுமே நாம் அனேகமாக ஹெமிங்வேயிடமிருந்துதான் கற்றுக்கொண்டிருக்கிறோம் – picador, corrida, barrera, cuadrilla, banderillo… – உதாரணத்திற்கு செல்லப்பாவிற்கு உந்துதலாக அமைந்த Undefeated கதையிலிருந்து சில. இதனால்தான் ஜல்லிக்கட்டைப் பற்றிய ஒரு குருநாவலின் மொழிபெயர்ப்பில் bullfighter என்ற பதத்தையே நாம் எதிர்பார்க்கிறோம்  “bull tamer” -ஐ அல்ல. காளையுடன் சண்டையிடுவதற்கான தமிழ்ப் பதம் நமக்கு ஒரு சிறு திறப்பை அளிக்கிறது – ஏறு அணைதல் என்று செல்லப்பா பயன்படுத்தும் பதத்தின் ரிஷிமூலம் சங்க இலக்கியம் வரை நீள்கிறது. அதில் “ஏறு தழுவல்”  என்பது ஆணின் வீரியத்தையும் அவன் தன்மானத்தை நிலைநாட்டும் ஒரு செயலாகவும் அர்த்தப்படுத்தப்படுகிறது. இவ்வெளிப்பாட்டிற்காக அவன் விரும்பும் பெண்ணைத் தாம்பத்தியத்தில் அணைத்துக் கொள்ளும் உரிமையும் அவனுக்கு அளிக்கப்படுகிறது. ஆக, தீவிரமான புற உலகுச் செயல்பாடு, மென்மையான இல்லறம் என்ற இரண்டு அர்த்தங்கள் இயல்பாகவே தமிழில் இணைகிறது. முரட்டுத்தனமான காளை, அதைக்காட்டிலும் முரட்டுத்தனமான மாடு அணைபவனை எதிர்கொள்ளுகையில் அதற்கொரு பெண்மைத்தனம் வந்துவிடுகிறது.

அணை என்ற சொல்லிற்கு தடுத்தி நிறுத்து என்ற அர்த்தமும் உண்டு (உதாரணத்திற்கு “தீயை அணை”). அப்படி என்றால் மாடு பிடிப்பவன் காளையை “அணைய” முற்படும்போது அதன் கோபத்தீயை “அணைக்கவும்” முற்படுகிறான். எனவேதான் மாடு அணைபவன் ” bull tamer” ஆக ஆங்கிலத்தில் உருமாருகிறான். தன் “முரட்டு அணைப்பால்” (brute hug) அவன் அதை அடக்குகிறான் (tames her). மொழிபெயர்ப்பில் ஒரு மொழி மற்றொரு மொழியைக் கற்பனை செய்துபார்க்கிறது. இவ்வாறு செய்கையில், அர்த்தரீதியாக நிகழும் சில சவ்வூட்டுப் பரவல் சில இலக்கணரீதியான தேர்வுகளையும் உடனழைத்து வருகிறது. இச்சவ்வூட்டுப் பரவல் ஒரே திசையில் மட்டும் நிகழுவதில்லை. வட்டார மொழியின் செழுமை மூலத்தின் பட்டறையில் இல்லையென்றாலும் அதில் பிற வளங்கள் பொதிந்திருக்கின்றன. முலத்தில் இல்லாத பிரத்தியேகமான ஒரு மொழி மற்றும் கலாச்சார மரபுகளை அவ்வளங்கள் பின்புலமாக கொண்டு வருகின்றன. ஜல்லிக்கட்டு தொடங்குவதற்கு முன் கொடுத்தல்- வாங்கல் வரலாறு ஒன்று புத்தகத்தில் நினைவுகூரப்படுகிறது. குறுநாவலின் மையப் பாத்திரமாக வரும் காரி ஒரு பிரசித்திப் பெற்ற காளை. அப்பெருமையின் முதுகிலேறி அதன் முன்னால் சொந்தக்காரன் அதன் விலையை ஏகத்திற்கும் உயர்த்தியதைச் சற்றும் பொருட்படுத்தாது அதன் தற்போதைய சொந்தகாரரான ஜமீந்தார் கேட்ட விலையைக் கொடுத்துவிடுகிறார்; விற்பவனின் சிந்தனையோட்டமும் நமக்கு அளிக்கப்படுகிறது: “பேரு போதும் ரூபாயைக் கண்னாலே பார்ப்போம்னு”. ஆங்கிலத்தில் இச்சாதாரண வரி ” We have seen the glory, it’s time we saw the money.” என்று அற்புதமாக மொழிபெயர்க்கப்படுகையில் அமெரிக்க செவிகளில் பிரத்தியேக ஒத்ததிர்வுடன் ஒலிக்கிறது, “Show me the money”  என்பது பிரசித்தி பெற்ற ஒரு திரைப்பட வரி. Jerry Maguire என்ற படத்தில் வரும் வரி;  போயும் போயும் ஒரு பேஸ்பால் படமா என்று,  பேஸ்பால் ஏதொ உப்புச்சப்பற்ற ஒரு விளையாட்டு போல், நீங்கள் தட்டிக் கழிக்கலாம்; 2004-இல் நிகழ்ந்த அமெரிக்க லீக் சாம்ப்பியன்ஷிப்பின் ஆறாவது கேமை பார்க்க ஆசீர்வதிக்கப்பட்ட என்னைப் போன்ற நியூ இங்கிலண்டர்களால் அவ்வாட்டத்தில் பிட்ச் செய்த கர்ட் ஷில்லிங்கின் குருதி தோய்ந்த காலுரைகளை நினைவுகூராமல் இருக்க முடியாது; ஆம், பேஸ்பாலும்கூட குருதி வழியும் ஒரு விளையாட்டாக உருமாறலாம், நியூ யார்க் அணிக்கு எதிரே விளையாடினால் அவ்வாட்டத்தின் முடிவு தன்மானத்தை நிர்ணயிப்பதாகவும் அமையலாம், நீங்கள் ஒரு ரெட் சாக்ஸ் அபிமானியாக இருந்தால்; அவ்வபிபானி ஒரு தேர்ந்த வாசகனாகவும் இருந்தால் டான் டலிலோவின் Underworld புத்தகத்தின் முதல் பகுதியையும் அவன் நினைவுகூரலாம். மூலத்திற்கு சம்பந்தமே இல்லாத வாசிப்புகளையும் மொழிபெயர்ப்புகள் உடனழைத்து வரலாம். 

ஒவ்வொரு மொழிபெயர்ப்பின் தடத்திலும் மொழிபெயர்ப்பாளர் எதிர்கொண்ட பல தேர்வுகளின் கல்லறைகளை ஒரு நுட்பமான வாசகனால் கற்பனை செய்யமுடியும். கல்யாண் அவர் முன்னுரையில் சுட்டியிருக்கும் குறிப்பிட்ட ஒரு தேர்வை மட்டும் எடுத்துக்கொள்வோம். தமிழ் இலக்கணக் “கட்டமைப்பின் பாய்மைத்தன்மை” எனும் உதைகால்கள் மீது சாய்ந்தபடி இசைத்தன்மையுடன் நீண்டுவரும் செல்லப்பாவின் வாக்கியத்தை துண்டமாக்கி அத்துண்டங்களை நிறுத்தக் குறிகளைக் கொண்டு பிரித்து வைக்கும் மீறலையே இங்கு நான் குறிப்பிடுகிறேன். “முலப்பிரதியை சற்றே சீர்குலைத்ததற்காக” வாசகர் அவரை மன்னிக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறார். ஆனால் உண்மையில் அது ஒரு “சிறு” சீர்குலைவு தானா என்பதை நிர்ணயிக்க நாம் எதேச்சையாக ஒரு வாக்கியத்தை எடுத்துக் கொள்வோம் (மூலத்தின் பக்கம் 28):  

ஒன்றுக்கு இரண்டாகக் கழுத்துகளில் புரண்ட பட்டைச் சலங்கை மாலைகளுடனும் கால் சதங்கைகளுடனும் கலகலப்புக்கு இடையே பூமி அதிரும்படியாக பெருமிதி போட்டு, தூசியைக் கிளப்பிக் கொண்டு காளைகள் வந்தன.”

இந்த வாக்கியத்தின் ஒசை நயத்தையும், கருக்கையும், தொடர்ச்சியையும் சற்று உன்னிப்பாகவே கவனியுங்கள். காட்சி மற்றும் ஒலிக் கூறுகளைப் பிணைத்து நிகழின் முப்பரிமாணத்தை ஒற்றை ஷாட்டில் எடுக்கப்பட்டிருக்கும் ஒரு திரைப்பட காட்சியின் விரிவுடன் அது கைப்பற்றுகிறது.  சலங்கைச் சதங்கைகளின் கிண்கிணிச் சத்தமும் தூசித் தூபமும் அவற்றை முன் அறிவிப்பதுபோல் சத்தமும் தூசியுமுமலான ஒரு புகைமண்டலத்தைக் கிழித்தபடி வெளியேறும் காளைகளை  நமக்குப் பிரத்தியட்சப் படுத்துகிறது. தமிழின் வாக்கிய அமைப்பு இதற்கு அனுகூலமாக இருக்கிறது; வாக்கியத்திலும் காளைகள் இறுதியில் தான் இடம்பெறுகின்றன. அதன் மொழிபபெயர்ப்புத் தமையன் இதை எவ்வாறு செய்திருக்கிறான் என்பதை இனி பார்ப்போம்:

“Each animal was adorned with a couple of metal chains embedded with strips of little bells swinging around the neck and dancer’s anklets. The bulls marched amidst all the hustle and bustle and noise on giant strides fit to shake the earth, raising a storm of dust.”

நுண்தகவல்களின் மீதிருக்கும் கவனத்தை நம்மால் இங்கேயும் மீண்டும் இனங்காண முடிகிறது. ஒன்றுமே தொலைந்துவிடவில்லை என்றாலும் ஏதோ முக்கியமான ஒன்றை இழந்த உணர்வைத் தவிர்க்க முடியவில்லை. ஒற்றை ஷாட்டின் கூட்டொருமையைக்  காவுகொடுத்து. தவிர்க்க முடியாத வகையில் “சலங்கை”, “சதங்கை”யின் சந்த நயததை இழந்து,  சற்று நொடிந்து வரும் ஆங்கிலத்திற்கு வாடிவாசலின் உற்சாகமான “கலகலப்பைக்” கடத்த hustle, bustle, noise என்று மூன்று வார்த்தைகள் தேவைப்படுகிறது. செட் அமைப்பாளர் காட்சியின் அனைத்து நுணுக்கங்களையும் திறம்பட திட்டமிட்டிருந்ததையும் மீறி காமெராக்காரர் ஷாட்டை சொதப்பி விட்டார் போலிருக்கிறது. 

With doubled up bell-strip chains dangling on their necks and dancer’s anklets jangling on their feet, raising a storm of dust with giant strides fit to shake the earth, amidst all the hustle and bustle the bulls arrived.?

முற்றிலும் சரியாகவும் தெளிவாகவும் இல்லை என்றாலும் சந்தம் /காட்சிக் கூறுகளின் ஒற்றுமையை தக்கவைத்துக் கொள்ளும் இது போன்ற ஒரு வாக்கிய அமைப்பை முயன்று பார்த்திருக்கலாம். சிலதை வெல்ல பிறிதை இழக்கிறோம். 

குறிப்பிட்ட காட்சியின் எல்லைகளுக்குள் தகவல்களைப் படிப்படியாக அடுக்கிக்கொண்டே செல்லும் செல்லப்பாவின் உரைநடை நெளிவு சுளிவுகளைக் கல்யாணால் கைப்பற்ற முடியாது என்ற அர்த்தத்தில் நான் இதைக் கூறவில்லை. புத்தகத்தில் முதல் சில பக்கங்களிலேயே இடம்பெறும் இந்த உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்:

“As the bulls bought to the Vaadivaasal… with torsos thick as barrels and heavily muscled necks, the clanging chains made of strips of metal balls on their necks and the tinkling sounds of tiny anklets strapped around their powerful legs just above the hooves, filled the air.”

மூலத்தில் மோனை இசையுடன் ஒலிக்கும் இயல்பொலிச் சொற்களான கல கல-வும் கலீரும் clanging, tinkling ஆக பெயர்க்கப்படுகையில் சற்று தாழ்ந்தொலித்தாலும் ஒரு இரண்டாம் தர மொழிபெயர்ப்பாளர் இவ்விரண்டொலிகளையும் பிணைத்து “‘sounds made by the chains on the neck and anklets on the legs” என்று பொழிபெயர்த்திருக்கக் கூடும் என்பதையும் நாம் நினைத்துக் கொள்கிறோம். சொல்லப்போனால் அந்த clanging, tingling வார்த்தைகளுக்கும், “தாக்கான” என்ற அடைமொழியைத் தவறாமல் கைப்பற்றியதற்கும் நாம் எவ்வளவு தூரம் நன்றிக்கடன்பட்டிருக்கிறோம் என்று பார்த்தால், முலத்தில் நான்கு கால்களிலும் பொடிச்சலங்கைகள் கட்டியிருந்தன என்ற குறிப்பிட்ட தகவலிழப்பை மன்னிக்கும் அளவிற்கும்!  

குறிப்பிட்ட பத்தியில் எதை வலியுறுத்த விழைகிறார் என்பதைப் பொருத்தும் அவரது கூருணர்வைப் பொருத்தும் மொழிபெயர்ப்பாளர் செய்யும் நேர்த்தியான தேர்விது. சில இடங்களில் பத்திகளில் இசைத்தன்மையுடன் வளைந்து செல்லும் வாக்கியங்கள் இலக்காகத் தேர்வு செய்யப்பட்டும் அடையவும்படுகின்றன. வேறுசில பத்திகளில் கூறுகளின் அபரிமிதமும் அவற்றின் நுணுக்கங்களும், ஆங்கிலச் செவிகளில் அவை ஒலிக்கப்பட  வேண்டிய தாளகதியும் தமிழின் வாக்கிய அமைப்பைக் காட்டிலும் முக்கியத்துவம் பெறுகின்றன.  காரியின் அற்புதமான நுழைவை விவரிக்கும் ஒரு பத்தியுடன் என் கடைசி உதாரணத்தை முடித்துக் கொள்கிறேன்: 

பட்டத்து யானைக்கு படாம் போர்த்தின மாதிரி பல வர்ணபட்டு, ஜரிகை, ஜிகினா இவைகளால் ஆன சிங்காரப் பொன்னாடை திமிலுக்கு முன்னிருந்து புட்டாணி வரைக்கும் முதுகோடு படிந்த் இருபுறமும் மணிக் குஞ்சலங்களுடன் தொங்க, ஒரே புஷ்பாலங்காரமாக ஜல்ஜல் என்று சலங்கை மாலையும் கொம்பு, கால் சதங்கைகளும் அசைவுக்கு அசை விட்டு விட்டு ஒலிக்க, நாட்டியக்காரி மேடைக்கு வருகிற மாதிரி நிமிர்ந்து நிமிராமலும் முகம் லேசாகத் தணிந்து கண்கள் கீழ்நோக்கி இருபக்கமும் பார்க்க, கம்பீர நடைபோட்டு அமரிக்கையாக வந்தது காரி. 

” Like a royal pachyderm draped with a royal flag the bull had a golden shawl embroidered with multi-hued silk, zari and glitter draped tightly across its back from hump to rear end. Tassels with bells attached to them were hung on both sides of the bull. The animal was adorned with flowers all over. The garland of little bells around the bull’s neck and the bell’s tied to its horns and feet sounded intermittently – jhal jhal- in time with each step. Like a professional danseuse entering the stage, holding itself upright but not quite, its face slightly lowered, eyes cast down and glancing on both sides, the Kaari bull walked down humbly with a dignified gait.”

மீண்டும், காட்சி செவிப்புக் கூறுகளைப் படிப்படியாக அதிகரித்தபடி யானையின் ஒற்றைத்தன கம்பீரத்துடன் முன்நகரும் தமிழ் வாக்கியம் அங்கிலத்தில் ஐந்து சிறு வாக்கியங்களாக வருகிறது. ஆனால் ஆங்கில வடிவமும் அதற்கே உரிய நுட்பமான இசையை உடனழைத்து வருகிறது. தமிழின் ஒவ்வொரு நுட்பத்தையும் தக்கவைத்துக் கொண்டு, இது மொழிபெயர்ப்பு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது என்பது போல் ஜல் ஜல் இரட்டைக் கிளவியை அற்புதமாக ஒலிபெயர்த்து,  தேர்ச்சியுடன் மிளிர்கிறது. மொழிபெயர்ப்பாளர் குறிப்பில் செல்லப்பா ஏதோ மற்றமையால்- இயக்கப்பட்டிருக்கும் ஹென்ரி ஜேம்ஸைப் போல் தொனிக்கிறார் என்று கல்யாண் மிக நுட்பாக அவதானிக்கிறார். செல்லப்பா ஒரு ஜேம்ஸியர் என்றால் கல்யாண் நமக்கு ஒரு ஹெமிங்வேத்தனமான செல்லப்பாவை அளித்திருக்கிறார். இது அவ்வளவு இலேசான சாதனை அல்ல. 

இம்மொழிபெயர்ப்பை படிக்கவிருக்கும் வாசகருக்கு பல மகத்தான அனுபவங்கள காத்திருக்கின்றன. வாடிவாசல் மிகவுமே காட்சிரீதியான ஒரு நாவல், கிட்டத்தட்ட ஒரு விளையாட்டுப் போட்டியின் நேர்முக வர்ணனையை தித்திக்கும் பேச்சுமொழியில் படிக்கும் அனுபவத்தை அது நமக்களிக்கிறது. பற்றார்வமிக்க இம்மொழிபெயர்ப்பு செல்லப்பாவின் வாடிவாசலில் சுழலும் தூசியை அதன் கடைசித் துகள் வரையிலும் கைப்பற்றுகிறது. கிறுக்குத்தனமான என் பசுக்கள் காளைகள் கணிப்பில் பெரும்பாலும் காளைகளே இடம்பெற்றன. ரீல்கவின் கவிதை நினைவிற்கு வருகிறது. அதைச் சற்றே மாறுபடுத்திக் கூறுவதனால், செல்லப்பாவின் வாடிவாசல் ஒரு ஆரஞ்சுப் பழமென்றால் கல்யாணின் Arena அவ்வாரஞ்சின் வேனில் தட்பவெப்பத்தை விட்டெறிந்து அயல் தென்றல்களில் அதன் முதிர்ந்த கனிவை மிளிரச் செய்யும் ஒரு நடனமாகக் களிக்கிறது,  உவகை ததும்பும் தமிழ்க் கனியில் நிறைந்திருக்கும் இனிமையான சாருக்கும் அதற்குமிடையை உள்ள உறவை ஆங்கில மொழிபெயர்ப்பின் நெகிழ்விமிக்க பரிசுத்தமான தொலி வாசகருடன் பகிர்ந்துகொள்கிறது. வாடிவாசல் என்ற பெருங்காளை நாவலை அணைய முற்படும் கல்யாண் குறிதவறா “bulls-eye”  ஒன்றை நமக்களித்திருக்கிறார். அனேகமாக!

———————–

மூலநூல்கள் / மேலும் படிக்க: 

  • Chellappa, C.S, Vaadivaasal, Arena, Translated by Kalyan Raman, N, OUP 2013
  • செல்லப்பா, சி.சு, வாடிவாசல், காலச்சுவடு, 2003

One Reply to ““பசுக்களும் காளைகளும்” : என். கல்யாண் ராமனின் வாடிவாசல் மொழிபெயர்ப்பு”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.