
நேர் எனும் சொல் விரிவான பொருள்களைக் கொண்டது. நொச்சி நிலமங்கிழார் ஒரு பாடலில், ‘பொன் நேர் புதுமலர் வேண்டிய குறமகள்’ என்பார். பொன் போன்ற புதுமலர் கொய்ய எண்ணிய குறமகள் என்பது பொருள். நக்கீரர் ‘மின் நேர் மருங்குல்’ என்பார். மின்னலை ஒத்த இடை என்று பொருள். மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் பாடல் ‘பொன் நேர் பசலை பாவின்று மன்னே!’ என்கிறது. தலைவிக்குப் பொன்னிறம் ஒத்த பசலைநோய் பரவிற்று என்று பொருள். அம்மூவனார் பாடல் ‘நெல்லின் நேரே வெண்கல உப்பு’ என்று பேசும். உமணரின் மகள் கைவளை ஒலிக்க ஒரு கை வீசி நடந்து ஒருபடி நெல்லுக்கு ஒரு படி உப்பு என விற்கிறாள். சொல்லப்பட்டவை யாவும் அகநானூற்றுப் பாடல் வரிகள். பிற பாட்டும் தொகையும் நான் தேடப்புகவில்லை. மேற்கோள் சொன்ன பாடல்களில் நேர் என்றால் போல, போன்ற, ஒத்த, சமமான என்று பொருள்.
நேர் என்றால் முன்னால் என்பது இன்னொரு பொருள். ‘எனக்கு நேருக்கு நேரே வரச்சொல்லு அவனை’ என்பார்கள். ‘எனிக்கு அவன் நேரா?’ என்பர் மலையாளத்தில். பொருள் – எனக்கு அவன் சமமா? கரகரப்பிரியா இராகத்தில் தியாகய்யரின் தெலுங்குக் கீர்த்தனை ஒன்று ‘ராமா நீ சமானமெவரு?’ என்று தொடங்கும். இராமா உனக்கு நிகரானவன் எவருண்டு என்பது பொருள்.
ஊர்ப்புறங்களில் சாதாரணமாகச் சொல்வார்கள், ‘‘நமக்கிந்த கோண வழி குறுக்கு வழியெல்லாம் தெரியாது. நம்ம வழி நேரே வா, நேரே போ” என்று. இங்கு நேர் என்றால் Straight என்று பொருள். நேர்படப் பேசு என்றால் நேருக்கு நேராகப் பேசு, நியாயமாகப் பேசு, அச்சமின்றிப் பேசு, தயக்கமின்றிப் பேசு, உண்மையைப் பேசு என்று பொருள்.
குறுந்தொகையில் ஒரு சிறைப் பெரியன் பாடல் –
‘நனந்தலைக் கானத்து இனம் தலைப்பிரிந்த
புன்கண் மடமான் நேர்பட’
என்று பேசும். கொடிய கானகத்தில் தன் இனத்தைப் பிரிந்த இருமான்களுள் வருத்தமான கண்களையுடைய பெண்மான் முன்னால் நிற்கும்போது என்று பொருள். இங்கு நேர்பட என்றால் கண்முன்னால் என்று பொருள்.
நேர் எனும் சொல் ஒற்றைப் பரிமாணச் சொல் அல்ல என்பதால் சற்று விரிவாகப் பார்க்கலாம் என்று தோன்றியது.
எதிர் எனும் சொல் எதிர்ப்பொருள் என்றால் நேர் எனும் சொல் நேர்ப்பொருள். நேர் எனும் சொல்லுக்கு இருபத்தோரு பொருள்கள் தரப்பட்டுள்ளன அகராதிகளில். அறிந்து கொளல் அவசியம் எனக் கருதுவதால் அனைத்துப் பொருள்களையுமே பட்டியலிடுகிறேன்.
- Straightness, Directness, செவ்வை.
எவராகிலும் வழி கேட்டால், “நேர் கிழக்காகப் போங்க” என்கிறோம் அல்லவா? அந்த நேர்.
- Rightness, Justness, Impartiality, நீதி.
நேர் எனும் சொல்லின் பிறப்புத்தானே நேர்மை எனும் சொல். நேர்மாறாகச் சொன்னான் என்றால் நீதிக்கும் உண்மைக்கும் புறம்பாகச் சொன்னான் என்றும் பொருள்.
- Morality, Virtue, Honesty, நல்லொழுக்கம்.
- Resemblance, Similarity, Comparison, உவமையாகச் சொல்லும் தன்மை.
திருவாசகத்தின் திரு அண்டப்பகுதியில் மாணிக்கவாசகர்,
‘தன் நேர் இல்லான் தானே காண்க’ என்பார். தனக்கு ஒப்பும் உவமையும் இல்லாதவன் என்பது பொருள்.
- Refinement, Nicely, திருத்தமான தன்மை. நேரிழை, நேரிழையாய், நேரிழையீர் எனும் சொற்கள் தொல்லிலக்கியங்களில் பரவலாக ஆளப் பெற்றுள்ளன.
மாணிக்கவாசகர் திருவெம்பாவையில்,
“பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்
பேசும் போது! எப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய்! நேரிழையீர்” என்பார்.
- Opposition, மாறுபாடு.
- Length, Extension. நீளம் என்று பொருளுரைக்கும் சூடாமணி நிகண்டு.
- Row, Series, Regularly, வரிசை.
- Agreement, Consent, Settlement. உடன்பாடு என்று பொருளுரைக்கும் திவாகர நிகண்டு.
- Half, Moity, பாதி (திவாகர நிகண்டு)
எனவே நேர்ப்பங்கு என்றும், நேர்பாதி என்றும் சொல்கிறோம் போலும்.
- Gift. கொடை (சூடாமணி நிகண்டு)
- Minuteness, Smallness, Fineness, Slenderness, நுண்மை.
நேரிடையாள் எனும் சொல்லின் பொருள் சின்ன, நேர்த்தியான, நுண்ணிய இடையாள் என்பதுதானே! மாணிக்கவாசகர் அருட்பத்து பகுதியில், ‘துடிகொள் நேரிடையாள் சுரி குழல் மடந்தை’ என்பார். துடி என்றால் ஒரு வாத்தியம், உடுக்கை போல. கன்னடத் திரைப்படம் ‘சோமன துடி’ அதன் பொருள் சோமனின் உடுக்கை போன்ற தோல் வாத்தியம் என்பது. ‘வன்கண் கருந்துடி’ என்னும் புறநானூறு, உறையூர் மருத்துவன் தாமோதரனார் பிட்டம் கொற்றனைப் பாடிய பாடலில். ‘துடி அடு நுண் இடை தொண்டை அம் செவ்வாய்’ என்னும் சீவகசிந்தாமணி. துடியை ஒத்த நுண் இடை, கோவைக்கனியொத்த செவ்வாய் என்று பொருள். கம்பர் பாலகாண்டத்தில், ‘துடி இடை பணை முலை தோகை அன்னவர்’ என்பார். துடி ஒரு வாத்தியம் என்பதற்கு, கம்பர், யுத்தகாண்டத்தில், ‘கம்பலி உறுமை, தக்கை, கரடிகை, துடி, வேய், கண்டை’ என வரிசைப்படுத்துவார்.
- Tendency, Course, Direction, கதி.
‘கதிக்கக் கிழக்கே’ என்று திசை சொல்வார் எம் நாட்டில். அஸ்வம் என்றால் குதிரை. குதிரையின் நடையை ‘அஸ்வ கதி’ என்பர்.
- Affirmative answer, உடன்பாட்டை நேரே குறிக்கும் விடை.
Direct, Straight answer. நேராகச் சொல்லும் விடை.
“கேட்டதுக்கு நேரா பதில் சொல்லு” என்பார்கள்.
- Solitariness, Solitude, தனிமை (திவாகர நிகண்டு)
- Firmness. உறுதியான நிலைப்பாடு
- Excess, Excessiveness, மிகுதி (திவாகரம்)
- Strength, வலிமை
- Verticality, செங்கோட்டு நிலை, நிமிர்வு நிலை, ஊர்த்துவ நிலை.
- Front, முன், முன்னால்
- நேரசை. கல்லூரி நாட்களில் வாசித்திருக்கிறோம் நேர் நேர், நேர் நிரை, நிரை நேர், நிரை நிரை என்று. எனவே நேர் என்றால் நேரசை என்றும் பொருள்.
நேர் எனும் சொல்லுக்கு நுட்பமான இருபத்தோரு பொருள் எனில் நேர் எனத் தொடங்கும் சொற்கள் எத்தனை கிடைக்கும் மொழிக்குள்? சரிக்கட்டுதல் என்றொரு பிரயோகம் உண்டு மொழிக்குள். “ஏ! அவனை முதல்ல சரிக்கட்டுப்பா” என்பர். To Settle amicably. நேர்கட்டுதல் எனும் சொல்லுக்கு யாழ்ப்பாண அகராதி சரிக்கட்டுதல் என்று பொருள் சொல்லும். அதே அகராதி நேர்கடன் என்ற சொல்லுக்கு நேர்த்திக்கடன் அதாவது நேர்ச்சைக்கடன் என்று பொருள் தருகிறது.
சரி! நேர் காட்டுதல் என்றால் என்ன? சற்று ஆழமான பொருளுடைய சொல்லென அறிகிறோம். பதினோரு பொருள்கள் காணலாம்.
- To face, look forward, எதிர்பார்த்திருத்தல்
- To aim at, direct towards, ஒரு திசை நோக்கிச் செலுத்துதல்
- வரிசையாக வைத்தல்
- To Kill, Murder, கொல்லுதல். குழூஉக்குறிபோல் பயன்படுத்தி விடலாம் போல. “ஏ! அவனை நேர் கட்டுப்பா!” என்றால் ‘அவன் கணக்கைத் தீத்திரு, சோலியை முடிச்சிரு, சரியாக்கீரு, குழிச்சு மூடீரு’ என்ற பிரயோகங்களுக்கு இணையானது.
- To expose, as to beasts of prey. முன் காட்டுதல். வேட்டையின்போது, வேட்டையாட உத்தேசிக்கும் விலங்குக்கு அதன் இரையைக் காட்டுதல். தேர்தல் காலத்து பிரியாணி, கால் குப்பி மது போல.
- சரியாக மரத்தைப் பிளப்பதற்கு வெட்டிக் காட்டுதல்.
- நீர்க்கால் மாற்றுதல்
- சாகக் கிடப்பவரை மரணக் கிடையாகக் கிடத்துதல்
- ஏர் நடத்துதல்
- விழுங்குதல்
- நீட்டி நிமிர்ந்து படுத்தல்
நேர் காட்டுதலின் எட்டாவது பொருளுக்கு கவலும் காலம் அச்சமூட்டுவது. ஆனால் நேர் காற்று என்றால் அனுகூலமான காற்று, நேர் கூறு என்றால் சரிபாகம், நேர் கொடு நேரே என்றால் Directly, Openly, வெளிப்படையாக. நேர்கொண்டு இயங்கும் மேலும் பல சொற்கள் உண்டு நம் நேர்.
நேர்ச்சி
- Tendency, Direction, போக்கு
- Adaptation, Filtness, Appropriateness, தகுதி
- Consent, Agreement, Harmony, சம்மதம்
- Vow, பிரதிக்ஞை, சூளுரைத்தல்
- Friendliness, Amity, Love, நட்பு
- நேர்த்தி
நேர்சீர்
- ஒழுங்கு
- மன ஒற்றுமை
- தகுதிக்கேற்ப நடத்துதல்.
எனில் நாம் தலைவர்களை, நடிகர்களை, அறிஞர்களை நேர்சீராக நடத்தப் பயில வேண்டும்.
நேர் சோழகம் – நேர் தென்றல்
நேர்த்தரவு – குற்றம் பொறுத்தோம் என அதிகாரம் நேரில் கூறும் ஆணை.
நேர் தரவு என்றும் இச்சொல் காணப்படுகிறது.
நேர்த்திக்கடன் – இறைவனுக்கு அல்லது இறைவிக்கு நேர்ந்து கொள்ளும் பிரார்த்தனை. காவடி, பால்குடம், அலகு குத்துதல், மொட்டை, ஆடு, கோழி, மண்சோறு, அங்கப் பிரதட்சணம், கூழ் ஊற்றுதல், மரக்கன்று நடுதல், கண்மலர், கை, பாதம் செய்து வைத்தல், பட்டு வாங்கி சாத்துதல், பானகம் ஊற்றுதல், கஞ்சி ஊற்றுதல் என எண்ணிலடங்கா நேர்த்திக் கடன்கள் உண்டு.
நேர் தப்புதல் – நேர்மை தவறுதல்
நேர்த்தி
- Excellence, Elegence, சிறப்பு
- திருத்தமானது
- நேர்த்திக்கடன்
- நேர்ச்சி
- Effort, Labour, முயற்சி
நேர்ந்தபடி
- At random, முறையின்றி
- At pleasure, விருப்பப்படி
- முன் யோசனையின்றி
நேர்ந்த போக்கு – முரட்டுப் பிடிவாதம்
நேர்ந்தார் – Friends, நட்பினர் (பிங்கலம்)
சில சமயம் நண்பர்களுக்கு என் புத்தகங்களைக் கையெழுத்திட்டுக் கொடுக்கும்போது, பெயர் எழுதும் முன் ‘நெஞ்சம் நேர்ந்த’ என நான் எழுதியதுண்டு.
காப்புக் கட்டுதலுக்கு நேர்ந்து கட்டுதல் என்றும், வேண்டிக் கொள்ளுதலுக்கு நேர்ந்து கொள்ளுதல் என்றும், சம்பவித்தல் அல்லது மெலிதலுக்கு நேர்ந்து போதல் என்றும், நேர்ச்சைக்காகக் கோயிலுக்கு ஆடு கோழிகளை விடுதலை நேர்ந்து விடுதல் என்றும், வேண்டுதலுக்காக ஒரு பொருளை மாற்றி வைத்தலை நேர்ந்து வைத்தல் என்றும் சொன்னார்கள். அடுத்து இருக்கும் சித்தப்பா, பெரியப்பா அல்லது மாமா வீட்டுக்கு எடுபிடி வேலைகள் செய்து கொடுத்துத் தொண்டூழியம் புரியும் தன்வீட்டுப் பையனை இளக்காரமாக, “அவனை அவ்வோ வீட்டுக்கு நேர்ந்து விட்டிருக்கு” என்று கேலி செய்வார்கள்.
நேர் நஞ்சு என்ற சொல்லுக்கு கல்மதம் எனும் விடம் என்று பொருளுரைக்கும் சங்க அகராதி. Rock alum என்பர் ஆங்கிலத்தில். நேர்நிலை வஞ்சி என்றொரு இலக்கணம் உண்டு என்பர். அதை விளக்கும் புரிதல் இல்லை எனக்கு.
மேலும் சில நேர் எனத் தொடங்கும் சொற்கள் காணலாம்.
நேர் நிற்றல் – சமமாக நிற்றல். சரிக்குச் சரியாக நிற்றல்.
To stand equal. பரிபாடல், ‘குன்றொடு நேர் நிரந்து’ என்கிறது. குன்றுக்குச் சமமாக நின்று என்று பொருள்.
நேர் நிற்றல் – 1. எதிர் நிற்றல் 2. ஒழுங்காய் நிற்றல்
நேர் நிறை – 1. சரிபாகம் 2. நீதி 3. கற்பு
நேர்படுதல் – 1. சந்தித்தல் 2. நன்கு பயிலுதல் 3. சம்பவித்தல் 4. ஏற்புடையதாதல் 5. வாய்த்தல் 6. காணப்படுதல் 7. எதிர்ப்படுதல் 8. ஒழுங்குபடுதல் என ஒன்பது பொருள்கள் தரப்பட்டுள்ளன.
நேர்ப்படுத்துதல் என்றால் குணப்படுத்துதல், சுகப்படுத்துதல் என்று பொருள். “அவன் சுகக்கேட்டை நேராக்கீரலாம்” என்பார் எங்களூர் நாட்டு வைத்தியர். நேர் பண்ணுதல் என்றால் ஒழுங்குபடுத்துதல், ஐக்கியப்படுத்துதல், ஆணையிடுதல் எனப் பொருள்கள் உண்டு. “கணக்கை இப்பத்தான் நேர் பண்ணீட்டு வாறன்” என்பார்கள். நேர்ப்பு என்றொரு சொல் கண்டேன், நேர்த்தி எனும் பொருளில். செய்நேர்த்தி என்பதை செய்நேர்ப்பு என்றும் சொல்லலாம்.
நேர்பாடு செயற்பாடு என்றொரு சொற்றொடர் இருக்கிறது. வாய்ச்சொல் பலித்தல் என்பது பொருள். சிலர் ஒரு வார்த்தை சொன்னால் அது பலித்துவிடும். எங்கள் ஊரில் கருநாக்கு என்பார்கள். ஆனால் நேர்பாடு என்ற சொல் 1) தற்செயலான நிகழ்ச்சி 2) உபாயம் 3) சம்மதம் 4) நீதி 5) நீளம் 6) நேர்த்திக்கடன் என ஆறு பொருளில் வழங்குகிறது.
அஃதேபோல் நேர்பிடித்தல் என்றால் 1) நேர்வழி செலுத்துதல் 2) முடிவுக்குக் கொண்டு வருதல் 3) சரிப்படுத்துதல் 4) சமாதானப்படுத்துதல் 5) சுகமாதல் 6) சாதல் என ஆறு பொருள்கள்.
நேர் போதல் என்றால் இணங்குதல். இன்று நாம் அறிந்த சொல் நேர்முகம். அதன் மாற்றுச் சொற்கள் பேட்டி, செவ்வி, நேர்காணல், இன்டர்வியூ. யாழ்ப்பாண அகராதி நேர்முகம் என்றால் எதிர்முகம், அதாவது எதிரே காணும் முகம் என்கிறது. நேர் பாதையையும் நல்லொழுக்கத்தையும் குறிக்க நேர்வழி என்றொரு சொல்லை அறிகிறோம். “நம்ம வழி நேர் வழி” என்றனர் முந்தைய தலைமுறையினர்.
நேர்பசை என்ற சொல் இலக்கணத் தொடர்பு உடையது. நேர்+பசை அல்ல. நேர்பு+அசை. குற்றியலுகரம் முற்றியல் உகரங்களோடு இசைந்து வரும் நேரசை என்று பொருள். நேர்பு என்ற சொல்லுக்கும் நேர்பசை எனும் பொருளே தரப்பட்டுள்ளது. தொல்காப்பியப் பொருளதிகார நூற்பா
‘‘இருவகை உகரமொடு இயைந்தவை வரினே
நேர்பும் நிரையும் ஆகும் என்ப”
என்று விளம்பும். குற்றியலுகரம், முற்றியலுகரம் எனுமிரு உகரங்களோடு இயைந்து வரின் நேர்பு, நிரைபு என அசைகள் அமையும் என்பது பொருள். நேர், நிரை இயலசை என்றும் நேர்பு, நிரைபு உரியசை என்றும் விளக்கமும் உண்டு. மீண்டும் அரிச்சுவடியில் ஏடு தொடங்கித் தமிழ் கற்க வேண்டும் என்று தோன்றுகிறது.
நேர்பு எனும் சொல்லுக்கு நேர்பு அசை எனும் பொருள் அல்லாது வேறு பொருள்கள் – நீளம் (சூடாமணி நிகண்டு), எழுச்சி (சதுரகராதி), சந்திப்பு, நிகழ்ச்சி, போக்கு என்பன. எதிர்பு எனும் சொல் எதிர்காலம் எனில், நேர்பு எனும் சொல் நிகழ்காலம் ஆகும்.
அன்றாடம் ஆயிரம் முறை நாம் செவிப்படும் சொல் நேர்மை. அகராதிகள் நேர்மைக்கு ஒன்பது பொருள் தருகின்றன.
- செம்மை, Straightness, Directness
- உண்மை, Faithfulness, Fidelity, Honesty
- நீதி, Impartiality, Justness
- அறம், Morality, Virtue
- நுண்மை, Fineness, Thinness, Minuteness
- திருத்தம், Accuracy, Exactness, Correctness
- சமம், Equivality, Uniformity
- இசைவு, Harmony, Agreement
- நன்னிலை, Good condition
என்ன அற்புதமான அறம் சார்ந்த பொருள்கள் தருகிற சொல்லாக இருக்கிறது நேர்மை! செம்மை, உண்மை, நீதி, அறம், நுண்மை, திருத்தம், சமம், இசைவு, நன்னிலை… ஒன்பான் பொருள்களும் மேன்மையானவை. பாவநாசம் சிவன் எழுதிய கல்யாணி ராகப் பாடலில் ஒரு வரி ‘நீயே மீனாட்சி, காமாட்சி, நீலாயதாட்சி’ என்று வளரும். நேர்மை எனும் சொல்லை நினைக்கையில் சங்கரன் நம்பூதிரியின் குரலில் அந்த வரி காதில் நிறைக்கிறது. அச்சொல்மீது நமக்குக் கொதி ஏற்படுகிறது.
அந்தக்காலத்து கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் பாடுவார் – “எங்கே தேடுவேன்? பணத்தை எங்கே தேடுவேன்?” என்று. பிற்காலத்தில் ஒரு சினிமாவில் “இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம்தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே!” என்று வேறொருவர் இறைவனைத் தேடுவார்.
இன்று அந்தப் பாடல்வரிகளை நேர்மைக்கும் பொருத்திப் பார்க்கலாம். ஆன்மீக, கலை, அறிவு, அரசியல், அதிகார, சமூக வழிகாட்டிகளிடம் இருந்து தேடத்துவங்க வேண்டும். மிகச்சிலரிடம் நேர்மைக்கான தடயங்கள் இருக்கக்கூடும். அவை மரபணுக்களின் எச்ச சொச்சமாகவும் இருக்கலாம்!
கம்பர் கூறுவார் ஒரு பாடலில் – ஆரணிய காண்டம், அகத்தியப் படலம் –
‘இரக்கம் என்று ஒரு பொருள் இலாத நெஞ்சினர்,
அரக்கர் என்று உளர் சிலர், அறத்தின் நீங்கினார்’
என்று. அதேபோன்றே நேர்மையைத் தேடினாலும் நேர்மையில்லாதவர் என்போர் எவராயினும் அவர் அரக்கரே! அரக்கர் என்போர் கம்பராமாயணம் கூறும் இலங்கைக் குடிமக்கள் மட்டுமல்ல. உலகெங்கும் நிறைந்துள்ளனர். அடையாளம் கண்டாலும் நாம் காணாதவர் போல் நடிக்கிறோம். நேர்மை என்று ஒரு பொருள் இலாத நெஞ்சினர் என்று மாற்றி எழுதி விடலாம்.
எவரிடம் சென்று முறையிடுவது? மானவதி இராகத்தில் தியாகராசரின் தெலுங்குக் கீர்த்தனை ‘எவரிதோ நே தெல்புது ராம’ என்று பல்லவியில் தொடங்கும். ஆம்! எவரிடம், எங்கு சென்று முறையிடுவது?
இசைத்தமிழில் நேர்வளம் என்றொரு சொல் இருக்கிறது. பொருள் 1) செவ்வழி யாழ்த்திறம் 2) பாலை யாழ்த்திறம் என்பன.
ஒன்று இன்னொன்றை ஒத்திருந்தால், அதனைக் குறிக்க நேர்வாதல் எனும் சொல்லைப் பயன்படுத்தினர். சித்திரையைக் குறிக்கும் இன்னொரு சொல் நேர்வான். நேர் விடை என்றால் உடன்பாட்டை நேராகக் குறிக்கும் விடை என்பதாம்.
நேர்பு என்ற சொல்லைப் போல, நேர்வு என்றும் ஒரு சொல் இருந்திருக்கிறது. சம்பவம், உடன்பாடு, கொடுத்தல், வேண்டுதல், எதிர்கை, பொருதல், சரிந்து வீழ்தல் என ஏழு பொருள்கள் கொண்ட சொல்.
நேர எனும் சொல்லொரு உவமை உருபு. ‘நேரதுடைத்து’ என்றால் அதற்கு இது நேர் என்பது பொருள். நேரசை என்ற இலக்கணக் குறிப்பும் அறிந்திருப்போம். குறிலோ நெடிலோ தனித்தோ ஒற்றடுத்தோ வரும் அசை நேரசை. க, கா, கல், கால் என்பன நேரசை. இதுவே போல் நிரையசைக்கும் இலக்கணம் தரப்பட்டுள்ளது. குறிலிணை, குறில் நெடில், தனித்தோ ஒற்றடுத்தோ வருவது பல, பலா, பலர், சிறார் என்பன நிரையசை.
எதிர் எனும் சொல் பற்றி ஒரு கட்டுரை எழுதி முடித்த பின்னர் நேர் எனும் சொல் பற்றிய கட்டுரை இது. இரண்டு கட்டுரைகளையும் எழுதி வரும் காலை எனக்கெழுந்த ஐயத்தை எவரேனும் தீர்த்து வையுங்கள். எதிர்மறை என்றொரு சொல்லுண்டு. பொருளும் அறிவோம். சமகாலத்தில் நேர்மறை என்றொரு சொல்லை, எதிர்மறைக்கு எதிர்ப்பதமாகப் பயன்படுத்துகிறார்கள் அறிஞர், புலவர், ஆசிரியர், எழுத்தாளர் எனப் பல வகையினரும்.
எனது ஐயம், நேர்மறை என்றால் என்ன?
என்ன ஒரு ஞானம் ஐயா!
உங்கள் பெயரைப் பார்க்காமல் ‘என்ன அற்புதமான அறம் சார்ந்த பொருள்கள் தருகிற சொல்லாக இருக்கிறது நேர்மை! செம்மை, உண்மை, நீதி, அறம், நுண்மை, திருத்தம், சமம், இசைவு, நன்னிலை… ஒன்பான் பொருள்களும் மேன்மையானவை’ என்ற வரிகளைப் பார்த்ததும் மயங்கி சொல்வனத்தைத் திறந்தேன். தமிழை மட்டுமல்ல ஆங்கிலத்தையும் வசப்படுத்தி வைத்திருக்கும் நாஞ்சில் நாடரே, கரோனா கட்டுக்குள் வந்ததும் கோவையில் உங்களை வந்து பார்த்து வணங்கிட ஆசை. ‘வரலாமா, உன்னருகே?’ அன்பன்
கோம்ஸ் பாரதி கணபதி
மெம்ஃபிஸ், அமெரிக்கா
865.850.1913
💐💐💐. நேர்த்தியான சொற்களால் நேர்பட எழுதப்பட்டிருக்கும் நேர்ச்சியான கட்டுரை. அறிஞர் குழுவால் முன்னெடுத்து செய்ய வேண்டிய செயல்களை தாங்கள் தனித்து செய்து கொண்டிருப்பது, தமிழ் மொழி, முன் செய்த நல்வினை. தங்களின் வாசகன் என்பதில் எனக்கு எப்பவுமே மனத்தினுள் மகிழ்ச்சி பொங்கும். பொங்கிய மகிழ்ச்சி தேம்பிழி மகர யாழ் இனிமையாய் பரந்து நீளும். தங்களின் வாசகனாய் இயன்றவரை நேர்மையாக இருந்து கொண்டிருக்கிறேன்.. நிறைய எழுதி எங்களை மேலும் நேர்படுத்துங்கள்…. ❤️❤️❤️
மிக ஆழமான ஆய்வு… அற்புதம் ஐயா