தார்மீக விழிப்புணர்வு யாருக்குத் தேவை – ஹிந்துக்களுக்கா? பா.ஜ.க.வினருக்கா?

(கோன்ராட் எல்ஸ்ட்டின் ஹிந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும்)

David Frawley

“Hindus Need Long-Term Political Strategy and Dharmic Awakening” என்ற தலைப்பில் டேவிட் ஃப்ராலி (Frawley) ஏப்ரல் 20, 2016 ஸ்வராஜ்யா இதழில் எழுதியுள்ளதை நான் ஒப்புக்கொள்ளவில்லை. இவ்வாறு அடிக்கடி நிகழ்வதில்லை. சங் பரிவாரும் இவர் சொல்வதைத்தான் 20 வருடங்களாகக் கூறிவருகிறது. மேலிடம் இக்கூற்றைத் தவிர்க்கவேண்டும் என்பதற்குக் காரணம் “ஒற்றுமை”. அதாவது, நாங்கள் கோருவதை ஏற்றுக்கொள்ளுங்கள், எங்களை விமர்சிக்காதீர்கள் என்று ரஷ்யாவிலும் மற்ற கம்யூனிச நாடுகளிலும் கூறுவதைப் போலத்தான்.

கொள்கையையே பிடித்துக்கொண்டிருந்தால் பிளவில்தான் முடியும் அதனால் எதையுமே சாதிக்க இயலாது. ஒற்றுமை நிலவினால்தான் கட்சி பிளவுபடாது; ஆனால் கட்சி ஒன்றையும் சாதிக்காது. பா.ஜ.க. இரண்டாவதையே தேர்ந்தெடுத்துள்ளது. நானாக இருந்தால் முதலில் சொன்னதையே தேர்ந்தெடுப்பேன். எதையும் சாதிக்க முடியாவிட்டாலும் பின்னால் வருபவர்களுக்கு ஒரு வழிகாட்டுதலாக அமையும்.

ஒரு விஷயத்தில் பொறுமை என்பது அதை அடைவதற்கான முயற்சி தொடர்ந்தால்தான் நல்ல ஆலோசனையாக இருக்க முடியும். இந்துக்கள் விரும்புவதைச் செய்வதில் பா.ஜ.க. முனைந்திருந்தால் அம்முயற்சிகளில் ஏற்படும் பின்னடைவுகளும் சிரமங்களும் பலன்கள் தள்ளிப் போவதற்குக் காரணம் என்பதைப் புரிந்துகொள்வார்கள். ஆனால் பா.ஜ.க. எவ்விதமான முயற்சியும் எடுத்ததாகத் தெரியவில்லை. விதைத்த விதையைச் செடியாகப் பார்க்கப் பொறுமை தேவை. விதையே விதைக்காவிட்டால் பொறுமை மட்டுமே செடியை வெளிக்கொணராது என்பதை இவர்களுக்கு யார் சொல்வார்கள்?.

ஹிந்துக்களுக்கு எதிராக உள்ள பாகுபாடுகளைச் சரிசெய்வதற்கான பல முயற்சிகளை பா.ஜ.க. மேற்கொண்டுள்ளது என்று டேவிட் கூறுகிறார். அம்முயற்சிகளில் சிலவற்றையாவது குறிப்பிட்டிருந்தால் நம்பத்தகுந்த வார்த்தைகளாக இருந்திருக்கும். அல்லது அம்முயற்சிகளை எதிரிகள் எவ்வாறு தடைசெய்கிறார்கள் என்பதையாவது கூறியிருக்கலாம். அல்லது மதச்சார்பற்றவர்கள் வழக்கம்போல் அரசாங்கம் ஹிந்துக்களுக்காகப் பல முயற்சிகளில் இறங்கியுள்ளது என்று கூறுவதை இவரும் நம்புகிறாரா?

பா.ஜ.க. ஹிந்துக்களுக்காக ஆலமரத்தைப்போல் பல விழுதுகளை விரித்துள்ளது என்று வலியுறுத்துவதில் இரு கட்சியினருக்கும் லாபம் உள்ளது. ஆனால், இக்கட்சியினரல்லாத, முக்கியமாக, அரசாங்கக் கொள்கைகளை விவாதிக்கவோ மாற்றவோ அதிகாரமில்லாத ஹிந்துக்கள் அதை உறுதிப்படுத்துவது போன்ற நடவடிக்கை எதையும் காணவில்லை என்பதுதான் உண்மை.

ஓ! நாட்டின் வளர்ச்சி முதல் தேவை!. மற்றவையெல்லாம் பிறகுதான் என்றால் நான் கேட்கிறேன்! பாகுபாடுகளை நிவர்த்திப்பது எவ்வாறு வளர்ச்சியைத் தடைசெய்யும்? சமுதாயத்திற்குத் தீங்கு விளைவிக்கும் பாகுபாடுகளை நிவர்த்தி செய்வதும் வளர்ச்சியோடு சேர்ந்ததுதானே. வேலைப்பளு ஒரு பிரச்சினை என்று கூறமுடியாது. நூறுக்கும் மேலான பாராளுமன்ற அங்கத்தினர்கள் எல்லோருமே நாட்டின் முன்னேற்றத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதும் நம்பத்தகுந்ததாக இல்லை. ஆனால், பா.ஜ.க.வின் வளர்ச்சிப் பிரிவு மற்றும் மதச்சார்பற்றவர்கள் என்ற இருவருமே வளர்ச்சியை முன்வைத்தே பா.ஜ.க. பதவிக்கு வந்துள்ளது என்கின்றனர்.

இவர்கள் சொல்வதை யாராவது நம்புகிறார்களா என்பது தெரியவில்லை. பா.ஜ.க. தலைமை, ஹிந்துக்களின் வடிவமாகக் கருதப்பட்ட நரேந்திர மோடி பிரதமர் பதவியேற்பதைத் தடுக்கமுயன்றது. பொது மக்களைப் பெருந்திரளாகக் கூட்டக்கூடிய அவரது சக்தியைக் கண்டபின்னரே அம்முயற்சியிலிருந்து பின்வாங்கியது. மதச்சார்பற்றவர்களும் அவரது இந்துத்வத்தைக் காட்டியே சிறுபான்மை அணிகளைத் திரட்டினர். இதைக்கண்டு பெரும்பான்மையினரான ஹிந்துக்கள் மேலும் அதிக அளவில் மோடியைச் சூழ்ந்துகொண்டனர்.

2019 லும் பா.ஜ.க. இதே உத்தியைத்தான் கையாளும். ஆனால், வார்த்தைகள் உதவாது; செயல்கள்தான் துணைபுரியும். சிறுபான்மையினர் மோடி ஒரு தீவிர இந்துத்துவர் என நம்பக்கூடும். ஹிந்துக்களோ, அவர் செயலாற்றத் திறனற்றவர் எனத் தீர்மானிக்கக்கூடும். அதனால், பா.ஜ.க.விற்காகப் போராடுவதற்கோ வாக்களிப்பதற்கோ முன்வராமல் இருக்கலாம். வளர்ச்சிப் பிரிவுதான் அதைச் செய்யவேண்டி இருக்கும். அது, 2004ல் நடந்த, எதிர்பாராத வாஜ்பாயியின் தோல்வியிலே கொண்டுவிடலாம்.

ஹிந்துக்கள் வாஜ்பாயியைக் கைவிட்டதால் என்ன பலன் கண்டார்கள் என்று டேவிட் கேட்கிறார். சரி! வாஜ்பாயி ஹிந்துக்களைக் கைவிட்டதால் என்ன பலன் கண்டார்? தோல்வியைத் தவிர! மேலும், ஹிந்துக்களைப் புறக்கணிப்பதினால் இந்த அரசாங்கத்திற்கு என்ன ஆதாயம்? இரண்டு வருடங்களாகப் பிடிவாதத்துடன் இதைத்தான் செய்துகொண்டிருக்கிறது. டேவிட்டின் பேச்சை மதித்து, இதுவரை பொறுமையுடன் இருந்த ஹிந்துக்களுக்கு வெகுமதியாக ஏதாவதொரு கொள்கையாவது நிறைவேறியதற்கான அறிகுறியைக் காணமுடியுமா?

ஹிந்துக்களுக்கா தார்மீக விழிப்புணர்ச்சி தேவை? பா.ஜ.க.விற்குத்தான் அது தேவைப்படுகிறது. ஹிந்துக்களுக்கா நீண்ட கால உத்திகள் தேவைப்படுகின்றன? பா.ஜ.க.தான் எவ்விதமான திட்டத்தையும் உருவாக்க இயலாமல் உள்ளது. சில ஹிந்து சுயேச்சைப் பிரிவினர் பல திட்டங்களைத் தீட்டியுள்ளனர். ஆனால், ஆளும் கட்சியினர் மந்தமாக அமர்ந்திருக்கும்வரை இத்திட்டங்கள் ஒன்றும் வெளிச்சத்திற்கு வராது.

(Published on Hindu Human Rights 23 April 2016)
(David Frawley; “Hindus need long term Political strategy & Dharmic Awakening”Swarajya 20 April 2016)

Series Navigation<< சதி எனும் சதி“கல்வித் துறையின் ஹிந்து வெறுப்பு” புத்தக விமர்சனம் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.