தடக் குறிப்புகள்

This entry is part 1 of 4 in the series தடக் குறிப்புகள்

ஆடம் இஸ்கோ

தமிழாக்கம்: மைத்ரேயன்

அடுத்த நாள் மழை பெய்தது, அதற்கடுத்த நாளும் மழை பெய்தது. டெக்ஸஸ்ஸில் உள்ள ப்ராக்ரெஸோ நகரிலிருந்து சுமார் பதினைந்து மைல்கள் தள்ளி இருந்த ஒரு பெட்ரோல் பங்கில், பெருமழையிலிருந்து தப்பிக்கவென்று,சைக்கிள் பயணத்தை நிறுத்திக் கொண்டேன். மாமிசம் பொதிந்த இரண்டு டாகோக்களும், மாமிசம் கொண்ட ஒரு அசாதாவும் வாங்கியதால், உள்புறம் போட்டிருந்த மடக்கக் கூடிய ஒரு பச்சை நிற நாற்காலியில் இரண்டு மணி நேரம் அமர்ந்திருக்க அனுமதி கிட்டியது. அது கார்களைப் பழுது பார்க்கும் சாரிக்கு அருகே இருந்த இடம். மோட்டர் எண்ணெய் டப்பிகளும், மின்சாரம் கடத்தும் ஜம்பர் கேபிள்களும், ஸ்னிக்கர் சாக்லெட் பைகளும் அங்கே. கடையின் மறுபக்கம், கொத்துக் கறிக் குழலப்பங்கள் வெப்பமூட்டும் கருவியில் மெல்ல உருண்டு திரும்பிக் கொண்டிருந்தன. அங்கே என் ஃபோனிற்கு சார்ஜ் சேர்க்க ஒரு மின் அளிப்புக் குழியும் இருந்தது.

மின்னஞ்சலையோ, செய்திகளையோ படிக்க ஊக்கமில்லாத அளவு நான் சோர்ந்திருந்தேன், அதனால் சும்மா அமர்ந்து பெட்ரோல் மற்றும் ஊக்க பானங்களை வாங்கும் நபர்களைப் பார்த்திருந்தேன். காலை மெல்ல பிற்பகலாக மாறியது. இறுதியில் மழை நின்றது, டாக்கோக்களை விற்ற பெண்மணியிடம், நான் அந்தக் கழிப்பறையில் இருந்த கழுவு தொட்டியில் குளிக்கலாமா என்று கேட்டேன். “அது உங்களுக்குப் போதுமென்றால் செய்யலாம்,” என்றார். என் முகம், உடலை எல்லாம் கழுவினேன், காலுறைகளை இரண்டு முறை துவைத்தேன். பிறகு அந்தக் காலுறைகளை மறுபடி ஒரு முறை துவைத்தேன். பிறகு நான் வெளியே சென்ற போது, அந்த பெட்ரோல் பங்கின் குளியலறையில் நான் முன்னர் பார்த்த ஒரு நபர் வெளியே தன் காரில் அமர்ந்திருந்ததைப் பார்த்தேன். பெரும் உடல் கொண்ட அவர், உயரமாகவும், குண்டாகவும் இருந்தார். நீண்ட வெள்ளைக் காலுறைகள் அணிந்திருந்தார், கருப்பான, நீண்ட முடி கொண்ட அவருடைய தலையில் பக்கவாட்டுப் பகுதிகள் முழுதும் மழிக்கப்பட்டிருந்தன.

என்னுடன் பேசுவதற்காக, அவர் தன் காரின் கதவைத் திறந்தபோது, டெக்ஸஸின் கொடி அச்சிடப்பட்ட கருப்பு நிற ஜிம் செருப்புகளை அணிந்திருந்தார் என்று கவனித்தேன். அவர் புகை பிடிக்கவில்லை, ஆனால் அவர் புகை பிடித்திருந்தார் என்பது போல காரில் வாடை அடித்தது. நான் அவரிடம் தீயணைப்பு நிலையத்துக்குப் போக வழி கேட்டேன். வழி சொன்னார், பிறகு அது எதற்கு என்று கேட்டார். அங்கேதான் அன்று இரவு தங்க என் கூடாரத்தை நிறுவலாம் என்று எதிர்பார்க்கிறேன் எனத் தெரிவித்தேன். அவர் இறந்து போன தன் சகோதரியின் குழந்தைகளை, துவக்கப்பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காகப் போவதாகத் தெரிவித்தார். தன் சகோதரி இறந்ததை எதற்கு என்னிடம் சொன்னாரென்று எனக்குத் தெரியவில்லை.

“நான் இன்னும் அவளுடைய சவ அடக்கத்துக்கான செலவைக் கட்டிக் கொண்டிருக்கிறேன்,” என்றார். “என் குடும்பம் அவளை ஒரு திறந்த சவப்பெட்டியில் பார்க்க வேண்டும் என்று விரும்பியது. அது மிகக் கடினமாக இருந்தது. அவள் என்னிடம் சொல்லி இருந்தாள், ’ஏய், சும்மா என்னை எரித்துப் போடு. உன்னிடம் செலவு செய்ய அதிகப் பணம் இல்லை என்று எனக்குத் தெரியும்.’ நான் அவளிடம் ‘ஓகே,’ என்றேன். ஆனால் அவர்கள் அவளை இறுதி வரை பார்க்க விரும்பினார்கள், அதனால் அப்படியே அடக்கம் செய்தேன்.” பூக்களுக்கும், திறந்த அடக்கப்பெட்டிக்கும், சரியாக சடங்குகளை நடத்தவும் சுமார் மூன்றாயிரம் டாலர்களாவது ஆகி இருக்கும் என்றார் அவர். “அதனால் இன்னும் நான் அதற்கெல்லாம் பணம் கட்டுகிறேன்,” என்றார். “ ஆனால் எனக்குப் பணம் கொடுத்த ஆள் கவலைப்படாத ஆள், அவரை எங்களுக்குத் தெரியும், அதனால் இதெல்லாம் பரவாயில்லை.”

எங்களருகே ஒரு மோட்டர் சைகிள் வந்து நின்றது, அந்த எஞ்சினின் சத்தத்தைத் தாண்டி அவர் பேசியதைக் கேட்க நான் சிரமப்பட்டேன். தான் இப்போது ஏழு குழந்தைகளுக்குப் பொறுப்பாகி விட்ட அப்பா- தன்னுடையவை மூன்று, சகோதரியின் குழந்தைகள் நான்கு- என்று தெரிவித்தார். “அவர்களிடம் நான் சொல்லி இருக்கிறேன், நான் உங்கள் மாமன் தான், ஆனால் நீங்கள் என்னை அப்பா என்று கூப்பிட்டாலும் சரிதான்.” அவர்கள் எல்லாரும் மூன்று படுக்கையறை கொண்ட, எழுபத்தி மூன்று அடி நீளமான, ஒற்றை இருசு கொண்ட இணைப்பு வண்டி ஒன்றில் வசித்தார்கள், இங்கே இருந்து அது அதிக தூரம் இல்லை, என்று தெரிவித்தார். தன் வேலையை விடத் தன் மனைவியின் வேலை நல்ல ஊதியம் கொடுப்பதால், இந்தச் சிறு குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளவென்று, தான் வேலையை விடப் போவதாகச் சொன்னார். குழந்தைகளைப் பள்ளியிலிருந்து அழைத்து வருவது அவருக்கு எப்படி இருந்திருக்கும் என்று நான் யோசித்தேன். தன் சகோதரியின் வீட்டுக்கு அவர்களை இட்டுச் செல்வதற்குப் பதில் தன் வீட்டுக்கு அழைத்துப் போவது எப்படி இருந்திருக்கும்? ஆனால் அதெல்லாம் பற்றி அவரிடம் நான் ஏதும் கேட்கவில்லை. மாறாக, அவர் பேசுவதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். “அவர்களை நான் நேசிக்கிறேன் – அதுதான் என்னைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது.” அந்தக் குழந்தைகளின் படங்களைத் தன்னுடைய செல்பேசியில் காட்டினார், நாங்கள் பரஸ்பரம் அறிமுகப்படுத்திக் கொண்டோம். தான் விடை பெற்றுச் செல்ல வேண்டும் என்று தெரிவித்தார். “ஒருகால், இது எப்படி என்று எனக்குத் தெரியாது, ஆனால் வேறெங்காவது நான் உங்களை மறுபடி ஒருகால் சந்திக்கக் கூடும்,” என்றார்.

***

மானியம் வழங்கும் செயற்குழுவுக்கு என் விண்ணப்பத்தை அனுப்புகையில், என் செயல்திட்டம் ஜான் ஸ்டைன்பெக்கின் ‘ட்ராவெல்ஸ் வித் சார்லி: இன் ஸெர்ச் ஆஃப் அமெரிக்கா’ என்ற நாவலைப் போல இன்றைய நிலைமைகளைக் கொண்டு ஒரு நூல் எழுத உதவும் என்று சொல்லி இருந்தேன். ஆனால் அது ஜிஎம்ஸி நிறுவனத்தின் பிக் அப் ட்ரக்கில் இரண்டு ரைஃபில் துப்பாக்கிகள், மேலும் கையடக்கமான ஒரு பல்பொருளகராதியோடு, சார்லி என்றழைக்கப்பட்ட ஒரு ஃப்ரெஞ்சு பூடுல் நாய் பயணியின் இருக்கையில் அமர்ந்திருக்க மேற்கொள்ளப்பட்ட பயணமாக இராது[1]. நான் ஒரு இரு சக்கர மிதி வண்டியை ஓட்டப் போகிறேன். அதையும் தனியே செய்யப் போகிறேன். நீண்டதோர் ஓக் மர மேஜையின் ஒரு முனையில் அமர்ந்து, செயற்குழுவிடம் அந்த விண்ணப்பத்தை நான் விளக்கியபோது அந்த நாவலை இன்னும் படித்திருக்கவில்லை. உண்மையைச் சொன்னால், என் வாழ்க்கையில் அன்றிருந்த மாளாத சாதாரணத் தன்மையிலிருந்து ஓரளவு கவனச் சிதறலாகத்தான் மானியத்துக்கான அந்த விண்ணப்பம் இருந்தது. ஏதும் உதவித் தொகை கிட்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. ஏதாவது ஒன்றை வென்றடைய வேண்டும் என்றுதான் விரும்பி இருந்தேன்.

நான் ஒரு நீல கழுத்துப்பட்டி அணிந்திருந்தேன்; மேஜையில் ஒரு கண்ணாடிக் கோப்பையில் தண்ணீர் இருந்தது, செயற்குழுவின் உறுப்பினர்கள் ஏழு பேர் மேஜையைச் சுற்றி அமர்ந்திருந்தனர். ஸ்டைன்பெக்கின் நாவல் புகழ் பெற்றது, அதனால் அந்த செயற்குழுவினர் எனக்கு மானியம் வழங்க விருப்பத்தோடு இருப்பார்கள் என்று ஊகித்திருந்தேன். ஒரு இருசக்கர மிதிவண்டியில் நாடெங்கும் ஒரு வருடம் சுற்றி வரும் திட்டம் அது. “சாதாரண மக்களை” பேட்டி எடுத்து, அவற்றை ஒரு டேப் ரிகார்டரில் பதிவு செய்வது நோக்கம். அதன் மூலம் நாட்டின் மாநகர்கள், சிறு நகரங்கள், மற்றும் தொலை தூரங்களில் கிடக்கும் இடங்களின் “பின்னலிணைப்பை”ப் புரிந்து கொள்வது மேம்படும். அமெரிக்கா என்பது என்ன? நம்மை அமெரிக்கர்கள் என்று அழைத்துக் கொள்வதன் அர்த்தம்தான் என்ன? மானியத் தொகையை என் வாழ்வின் அடுத்த ஓரிரு வருடங்களை அமெரிக்காவுக்கான “தேடலில்” செலவிடப் போகிறேன் என்று நான் சொன்னபோது, அந்த மேஜையின் ஒரு கோடியில் அமர்ந்திருந்த ஒருவர் (ஏளனமாக) தன் கண்களை மேல்நோக்கிச் சுழற்றியதை நான் பார்த்தேன். இன்னொருவர் சிரிக்கவும் செய்தார். இது எங்கே கிடைக்கப் போகிறது, அவ்வளவுதான், என்று எண்ணியபடி வீட்டுக்கு நடந்து போனேன்.

சில மாதங்கள் தள்ளி, ஒரு நாள் வேலைக்குப் போகும் முன், துரித உணவுக் கடை ஒன்றின் (சிக்-ஃபில்-ஏ அந்தக் கடை) வெளிப்புறம் நின்று பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது, அந்த மானியம் எனக்குக் கிட்டி இருப்பதாகத் தெரிந்தது. ஒரு வருடம் சாலைப் பயணத்தில் ஆகக் கூடிய செலவுக்கு மேலேயே இருந்தது அந்தத் தொகை. கைமேல் பணம்;கொலைதான்! நான் எக்ஸ்ட்ரா-லார்ஜ் சாக்லேட் மில்க்‌ஷேக்கும், வாஃபில் மாதிரி இருக்கும் ‘ஃப்ரைஸும்’ வாங்கிக் கொண்டாடினேன்.

பனிப் பொழிவுப் புயல்கள், இடிமழைப் புயல்கள், கடும் வெப்ப அலை, முகத்திலறையும் எதிர்காற்று. ஒரு வருடத்துக்கும் மேலாக, ஒவ்வொரு நாளும் கற்களடர்ந்த பாதைகளையும், ஏராளமாகப் போக்குவரத்து நடக்கும் நான்கு பாட்டை நெடுஞ்சாலைகளையும், விவசாயப் பண்ணையிலிருந்து சந்தைக்குப் போகும் சாலைகளையும், சேறு படிந்த மாற்றுப் பாதைகளையும் கொணர்ந்தது. பின்மாலை என்றால் நான் சாலையில் ஓரத்தில் நின்று போகுமிடத்துக்கு வழியை விசாரித்துக் கொண்டிருப்பேன். பிறகு என் சிறு கூடாரத்தை காவல் நிலையம் அல்லது உள்ளூர் சர்ச்சுக்குப் பின்னே நிறுவி இருப்பேன்; கல்லறை மைதானங்கள், நீர்த் தொட்டிகள், செல்ஃபோன் கூண்டுகள், வானொலிக் கூண்டுகள் ஆகியவற்றில் எதன் அருகேயோ கூடாரம்; சிலநேரம் நெடுஞ்சாலையின் அருகே தோப்புகளில். தீயணைப்பு நிலையம் அல்லது சமூகக் கூடம் அல்லது உயர்நிலைப்பள்ளியின் விளையாட்டுப் பயிற்சி அரங்குகளில் என் படுக்கையை விரித்திருப்பேன்.

என் பயணத்தில் சில மாதங்கள் கழிந்த பின், தென் காரோலினா மாநிலத்தில் ஹெரிடேஜ் ஹைவே என்று அழைக்கப்பட்ட இரு பாட்டை நெடுஞ்சாலையில் சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்தேன். சாலையின் இருபுறமும் டாக் உட், ரெட்பட் மற்றும் ஸ்வீட் பே மரங்கள் அடர்த்தியாக வளர்ந்திருந்தன. அந்தப் பகுதியில் இருக்கிற பல சாலைகளைப் போலவே, இதுவும் வளைந்து வளைந்து தன்னையே சுற்றிச் சுற்றி வந்தது; சிற்றோடைகள், ஆறுகள், குட்ஸு கொடிகள், ஓக் மரங்கள் எங்கும் இருந்தன. என் கால்கள் வலித்தன, முதுகு வலித்தது, கைகள் மரத்துப் போயிருந்தன. இதற்குப் பல மாதங்கள் முன்பே, அமெரிக்காவைத் தேடுவதை நான் கைவிட்டிருந்தேன். ஆகாயம் திரிந்த பால் நிறத்தில் இருந்தது, வானிலை அறிக்கை அன்று இரவு கனமழை பொழியும் என்று தெரிவித்திருந்தது.

சாலையில் ஜனநடமாட்டமே இல்லை; வழி தெரியாமல் தொலைந்து போக நிறைய வாய்ப்பிருந்தது, ஆனால் குறைந்தது எனக்கு செல் ஃபோன் தொடர்பு இன்னமும் இருந்தது. அங்கிருந்து இருபது மைல்களில் இருந்த ஒரு சிறு நகரத்தின் தீயணைப்பு நிலையத்தோடு செல்ஃபோனில் பேசினேன், அன்று இரவு எங்காவது உலர்ந்த இடத்தில் என்னால் தங்க முடியுமா என்று விசாரித்தேன். அதற்கு முந்தைய நாள், வேறொரு நகரில், ப்ளாக்வில் என்ற ஊரில், இந்த அணுகுமுறை வேலை செய்தது, அதனால் இங்கும், நெடுஞ்சாலை 78 ஓடுகிற வழியில், நடுத்தரமான அளவு கொண்ட, நிறைய சர்ச்சுகள் இருந்த, அந்த செயிண்ட் ஜார்ஜ் நகரில், இதே அணுகல் பயன் தரும் என்று நினைத்தேன். ஃபோனின் மறுபுறம் இருந்த பெண்மணியிடம், என் கூடாரம் ஒழுகத் தொடங்கி இருந்தது, இடிமழை ஏற்கனவே துவங்கி விட்டிருந்தது, நான் அன்றிரவு அந்த தீயணைப்பு நிலையத்தில் தங்குவது சாத்தியம் என்று அவர் நினைத்தாரா எனக் கேட்டேன். அல்லது தபால் அலுவலகத்திலாவது தங்கலாமா? ப்ளாக்வில் நகரத்தின் குடிமக்கள் என்னை அங்கு இருந்த சமூகக் கூடத்தில் தங்க அனுமதித்திருந்தனர், என்று சொன்னேன். அந்தப் பெண்மணி அனுதாபத்தோடு பேசினார், ஆனால், “இல்லை, வருந்துகிறேன், எங்களால் அதை அனுமதிக்க முடியாது, அன்பரே. உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிட்டட்டும்,” என்று முடித்து விட்டார்.

அந்த வில்லோ மரத்தின் கீழ் மழையிலிருந்து தப்புவதற்காகச் சில நிமிடங்கள் அமர்ந்திருந்தேன். என் தலைக்குள் பின்புறத்தில் கேட்ட தனிமைப்படுத்தப்பட்ட குரலைக் கவனிக்காமல் இருக்க மிக முனைப்போடு இருந்தேன்.

சிலமணிகள் கழித்து அதே குரலில் எனக்கு ஓர் செல்ஃபோன் அழைப்பு வந்தது. “மிஸ்.மேரி மர்ரி எகானோலாட்ஜில் உங்களுக்குத் தங்க இடம் கொடுக்க விரும்புகிறார்.” உலகம் எளிதாக ஆயிற்று; இப்போது வானிலை எப்படி இருந்தது என்பதை நான் பொருட்படுத்தவில்லை. உற்சாகமாக பாம்பெர்க், மற்றும் ரீஸ்வில் நகர்கள் வழியே நான் சைக்கிளை ஓட்டிச் சென்றேன். ஒரு காகித ஆலை, சீன உணவகம் ஆகியவற்றைக் கடந்து, எடிஸ்டோ ஆற்றின் மேம்பாலத்தில் ஓட்டி, காட்டில் சிற்றோடையைத் தாண்டி, செயிண்ட் ஜார்ஜ் நகருக்கு வந்து சேர்ந்தேன்.

பூப்போட்ட சட்டையும், சுருக்கமில்லாமல் தேய்க்கப்பட்டிருந்த நீல ஜீன்ஸும் அணிந்திருந்த முழுதும் நரைத்த முடி கொண்ட ஒரு பெண்மணி அந்த மோடெலுக்கு ஒரு வெள்ளை ஷெவ்வி இம்பாலா காரில் வந்து இறங்கும்போது, நான் சொட்டச் சொட்ட நனைந்திருந்தேன். அங்கு வந்ததற்கு அவருக்கு நான் நன்றி தெரிவித்தேன், பிறகு விளக்கினேன், நான் வீடில்லாத அபலை இல்லை, பல மாதங்களாக என் பை-சைகிளில் நாட்டைச் சுற்றி வருகிறேன், ஒருகால் என்னிடம் மீதம் இருக்கும் பணம் வேறெங்காவது செலவழிக்கப்படுவது நல்லதோ என்று தோன்றுவதாகச் சொன்னேன். அதற்கு மேரி மர்ரி பதில் சொன்னார், “கடவுளிடமிருந்து கொடை கிட்டும்போது அதை மறுக்காதீர்கள்.”

டெக்ஸஸில் நான் வளர்ந்த வீட்டை விட்டு நீங்கும்போது, அபாரமான அமெரிக்கப் பயணப் புத்தகம் ஒன்றை எழுத வேண்டும் என்ற விருப்பத்தைத் தவிர வேறேதும் பெரிதாக நான் எண்ணவில்லை. அதற்கு தெளிவில்லாத ஏதோ ஒரு திட்டம்தான் என்னிடம் இருந்தது: மானியத் தொகையை உணவுக்கும், எப்போதோ ஒரு நாள் ஒரு விடுதியில் தங்கவும் மட்டும் பயன்படுத்த வேண்டும்; ஒரு நாளில் எத்தனை மைல்கள் சைக்கிளை ஓட்ட முடியுமோ அத்தனை ஓட்ட வேண்டும்; எத்தனை முடிகிறதோ அத்தனை உரையாடல்களை டேப்ரிகார்டரில் பதிவு செய்ய வேண்டும்- இவைதான் அந்தத் திட்டம். என் அரை-வேக்காட்டுத் திட்டத்தை நான் கைவிட்டுப் பல மாதங்கள் ஆனபின்னும், (மளிகைப் பேரங்காடிகளில், சாலை ஓரங்களில், ஆற்றங்கரை மேடுகளில், அல்லது பயணிகளுக்கான போக்குவரத்துப் படகு ஒன்றின் மேல் தளத்தில்) நான் சந்தித்த மனிதர்களிடம் ஏதாவது ஒரு கதை சொல்லும்படி கேட்க முயன்று கொண்டிருந்தேன். ஏனெனில் அப்போது, அதிக நேரம் ஆகுமுன்னரே, பெரும்பாலும் அவர்கள் எனக்கு உறங்குவதற்கு ஈரமில்லாது உலர்ந்த ஓர் இடத்தை அளிக்க முன்வருவார்கள். கொட்டிலுக்குப் பின்னே, கொட்டிலிலேயே, வீட்டின் பின்புறத் தோட்டத்தில், வீட்டின் நிலவறையில், ஏதாவது ஓர் இடம் கிட்டும். “நீங்க கீழே இருக்கிற விருந்தாளிக்கான படுக்கை அறையில் ஒரு கட்டிலில் உறங்கலாமே, வேணுமா?” அப்போது அவர்களை நான் கவனிக்கும் அளவு அவர்கள் என்னிடம் என்ன கவனித்தார்கள் என்று யோசிக்கிறேன். என் தலைமுடி, என் ஆடைகள், என் காலணிகளை நான் எப்படிப் பயன்படுத்தி நடந்தேன், என் வயிறுடைய ஓசை? எதை? தனிமையில் சிக்கியவர்களை அடையாளம் காண்பது எனக்குச் சுலபமாகக் கைவந்தது, அதேபோல தனிமையாக இருந்தவர்கள் என்னைச் சுலபமாக அடையாளம் கண்டு பிடித்தார்கள் என்று நினைக்கிறேன்.

அயோவா மாநிலத்தில், பஸ்ஸீ நகரில் இருந்த ஒரு சர்ச்சின் படிகளிலேறி உள்ளே சென்ற போது, அங்கிருந்த போதகர் என்னை அங்கு அன்றிரவு தங்கும்படி அழைத்ததில் எனக்கு வியப்பு ஏற்படவில்லை. அவருடைய கண்கள் பளீரென்றிருந்தன, அவர் வெண்மையான, சதுர வடிவுத் தாடி வைத்திருந்தார். அவர் எப்படி இருக்கிறார் என்று நான் கேட்டேன், அவர் நலமாக இருப்பதாகச் சொன்னார். “நான் நன்றாக இருக்கிறேன்,” என்றார், நன்றாக இல்லாத பலர் இப்படிப் பதில் சொல்வதை நான் கவனித்திருக்கிறேன். அதனால் நான் மறுபடி கேட்டேன், நீங்க நிஜமாகவே எப்படி இருக்கீங்க, இல்லை பாருங்க, நான் உண்மையாகவே கேட்கிறேன், நீங்க நிஜமாக எப்படி இருக்கீங்க? அவர் முதலில் பதில் சொல்லவில்லை. நான் அங்கு பிரார்த்திக்க வருபவர்கள் அமரும் நீண்ட பெஞ்சுகளில் எதிலாவது உறங்கலாம் என்று மட்டும் சொன்னார், ஆனால் இதை அவர் தன் மனைவி டெபொராவிடம் சொன்ன போது அந்தப் பெண்மணி அவர் என்னை இரவு சாப்பாட்டுக்கு தங்கள் வீட்டிற்கு அழைக்கும்படி வற்புறுத்தினார். அவர்கள் வீட்டில் ஒரு சோஃபாவில், தட்டைத் திரை கொண்ட ஒரு பழைய தொலைக்காட்சியின் முன் அமர்ந்து வால்மார்ட்டின் பீட்ஸாவையும், மீன் வறுவலையும் சாப்பிட்டுக் கொண்டு அமர்ந்திருந்த போது எனக்கு நினைவு வந்தது, நீ இறந்து விட்டாய் என்பது.

(தொடரும்)

***

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:

இந்தப் பயணக் கட்டுரையின் இங்கிலிஷ் மூலக் கட்டுரை, மக்ஸ்வீனிஸ் காலாண்டுப் பத்திரிகையின் அறுபத்தி மூன்றாம் இதழில் 2021 ஆம் வருடத்துவக்கத்தில் வெளியானது. பார்க்க: ‘Field Notes’ by Adam Iscoe/ McSweeny’s issue #63/2021

இது ஆடம் இஸ்கோவின் அனுமதி பெற்று மொழிபெயர்க்கப்பட்டு இங்கே பிரசுரமாகிறது. இக்கட்டுரையை மொழிபெயர்த்துப் பிரசுரிக்க அனுமதி கொடுத்த ஆடம் இஸ்கோ அவர்களுக்கு மொழிபெயர்ப்பாளர் மைத்ரேயன் நன்றி தெரிவிக்கிறார்.

[Translator Maitreyan expresses his thanks to Adam Iscoe, for granting his permission to translate his article into Tamil. Solvanam magazine thanks Adam Iscoe for allowing them to publish this translation. ]

தன் வாழ்வில் நடந்த நிஜமான சம்பவங்களை வைத்து எழுதப்பட்ட கட்டுரை இது என்று ஆடம் இஸ்கோ தன் கடிதத்தில் எனக்குத் தெரிவித்தார்.


[1] ஜான் ஸ்டைன்பெக் தான் எழுதிய அந்த நாவலுக்கான பயணத்தை அப்படி ஒரு ட்ரக், துப்பாக்கிகள், அகராதி மற்றும் சார்லி என்கிற நாயோடு மேற்கொண்டிருந்தார். இங்கு இஸ்கோவின் சுட்டல் அந்தப் பயணத்தைக் குறிக்கிறது.

Series Navigationதடக் குறிப்புகள் -2 >>

One Reply to “தடக் குறிப்புகள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.