எண்ணும் எழுத்தும் பெண்ணெனத் தகும்

எட்டும் அறிவினில் ஆணுக்குப் பெண் இங்கு இளைப்பில்லை காண் என்று கும்மியடி – பாரதி.

நிறம், மதம், பொருளாதார நிலைகள் இவைகளின் பேதமும் அது கொண்டுவரும் தீமைகளும் பொதுவில் பேசுப் பொருளாகி ஒரு தீர்வினை நோக்கி நகர்கின்றன அல்லது ஒரு தோற்றமாவது அப்படிக் கிடைக்கிறது. ஆனால், பாலியல் சார்ந்த பேதங்கள் பெரும்பாலும் கவனம் பெறாமல் போகின்றன. உலகெங்கும் பெண்களின் பங்களிப்பு இருட்டடிப்புச் செய்யப்படுகிறது. மனையாளாக அவளின் பங்கு குறித்து நற்சொற்களைவிடக் கேலிப் பேச்சுக்கள் மிகுதியானவை. இதனினும் கொடுமை, அதிக உடல் உழைப்பைக் கோரும், மீளமீளப் பொறுமையாகச் செய்யவேண்டிய செயல்கள் பெரும்பாலும் பெண்களின் தலை மேலேதான் வந்து விழுகின்றன. கணினித் துறையில் சாதித்த பல பெண்களின் பெயரைப் பலரும் அறியக்கூட இல்லை. இக்கட்டுரையில் நாம் உரிய கவனம் பெறாத திறமைசாலிகளான சில பெண்களைப் பற்றிப் பார்ப்போம்.

ஐடா லவ்லேஸ் – முதல் கணினி நிரலாளர்

உலகில் முதல் கணினி நிரல்களை எழுதியவர் ஒரு பெண்ணெனத் தெரியுமா நமக்கு? ஐடா லவ்லேஸ் (Ada Lovelace) என்ற பெயரை நாம் பைரனின் பெயரைக் கேள்விப்பட்ட அளவில் அறிந்ததில்லை. கவிஞர் பைரனை, கவிதையை விரும்பாதவர்கள்கூட அறிவார்கள். அவரது குறுகிய கால மன நிறைவற்ற திருமணத்தில் பிறந்த இந்தப் பெண்ணின் தாய் அன்னா இஸபெல்லா மில்பேங் (Anna Isabella Milbanke) தங்களுடைய மகள் அப்பாவின் வழியில் கவிதை எழுதிப் பாழாகக்கூடாதென்று அவரது நான்கு வயதிலேயே கணிதப் பாடங்களைக் கற்க வைத்தார். ஆசிரியரை மிஞ்சிய மாணவியான போதிலும் அன்றைய வழக்கப்படி அவர் இளம் வயதில் மணம் செய்துகொண்டார். தன் 17வது வயதில், சிக்கலான கணிதங்களுக்கு விடைகாணும் பொறி ஒன்றை வடிவமைத்த சார்ல்ஸ் பேபேஜை (Charles Babbage) ஐடா சந்தித்தார். அவரது செயல்பாட்டுக் கணிதத்தில் இவருக்கு ஆர்வம் மிகுந்தது. இவரது கணவர் வில்லியம், லவ்லேஸின் பிரபுவானபோது இவரும் கோமகனின் மனைவியாக பல்வேறு பொறுப்புக்களைத் தாங்கினார்.

பேபேஜ், பகுத்தாய்ந்து பொதுவாகப் பயன்படும் ஓர் இயந்திரத்தை வடிவமைத்தார். இந்தப் பகுப்பாய்வு இயந்திரத்தைப் பற்றி சுவிஸ் இதழ் ஒன்றில் படித்த ஐடா அதைத் திறமையாக, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அந்த மூலக்கட்டுரையிலிருந்த தவறுகளைச் சரி செய்தார். பேபேஜ் மகிழ்ந்து அக்கட்டுரையை ஆங்கிலத்தில் வெளியிட ஊக்குவித்தார். ஐடா இந்தக் கட்டுரையை, மூலத்தைவிட மும்மடங்கு அடர்த்தியாக, நுட்பங்களைக் கலையம்சங்களோடு விளக்குவதாக, அந்தப் பகுப்பாய்வு இயந்திரத்தைப் பற்றிய பேபேஜின் கூர்ந்த நோக்கத்தை விவரிப்பதாக எழுதினார். அவரது குடும்ப வாசகமே ‘உழைப்பே அதற்கான வெகுமதி’; 1852-ல் அவர் இறந்தபோது அதை அவரது கல்லறை வாசகமாகவும் பொறித்தார்கள். ஆனால், அவர் ஒரு கணிப்பொறி நிரலாளர் என்பதை அவர் இறந்த நூறாண்டுகளுக்குப் பின்னரே உலகம் அறிந்தது.

க்ரேஸ் ஹாப்பர் (Grace Hopper) கணினி அறிவியலின் முன்னோடி

1941, டிசம்பர் 7 அன்று ஜப்பான் பேர்ல் துறைமுகத்தைத் தாக்கியது. அதுவரை உலகப் போரில் ஈடுபடாதிருந்த அமெரிக்கா களத்தில் இறங்கியது. தன் தாய் நாட்டிற்குப் போரில் உதவும் பொருட்டு வேஸார் (Vassar) கல்லூரியில் கணிதத் துறையில் பணியாற்றி வந்த க்ரேஸ் தன் பணியை இராஜினாமா செய்துவிட்டுக் கப்பற்படையில் சேர்ந்தார். 36 வயதான அவர், எதிரிகளின் இரகசியச் செய்திகளைத் தன் கணித அறிவின் மூலம் வெளிக்கொணரும் பணியைச் செய்ய விரும்பினார். உலகின் முதல் கணினியின் மூன்றாம் நிரலாளராக அவரைக் கப்பற்படை ஹார்வேர்டுக்கு அனுப்பியது. மார்க் 1 என்ற கணினியை வடிவமைத்த லெப்டினென்ட் ஹோவேர்ட் ஏகினுடன் (Howard Aiken) அங்கே இணைந்து பெரும் தொலைவுகளுக்குப் பாயும் ஏவுகணைகளின் செயலாக்கச் சிக்கல்களை அகற்றினார். இதில் வியப்பிற்குரிய செய்தி என்னவென்றால் பரிந்துரைக்கப்பட்ட குறிப்பேடுகள் எதுவுமே இல்லாது அவர் தன் கணித அறிவின் துணைகொண்டு இதைச் சாதித்ததுதான்.

அவர் ஹார்வேர்ட்டில் பணி புரிந்தபோது இராணுவம் எதிர் கொண்ட சவாலான விஷயங்களுக்குத் தீர்வுக் குறியீடுகளை எழுதினார். தன்னுடைய சில கணக்கீடுகள் அணுகுண்டு உற்பத்தியில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையே நாகசாகி, ஹிரோஷிமாவின்மீது குண்டு வீசப்பட்ட பிறகுதான் அவர் அறிந்தார். தான் எழுதிய நிரல்களில் மறுபயன்பாட்டிற்கு உதவுவனவற்றை அவர் சேமித்து வந்தார். ஒரு அறிவியல் மரபின் தோற்றம் அது.

போர் முடிந்தபிறகு சக்தி மிக்க ‘யுனிவேக்’ (UNIVAC) கணினியில் நிரலாளராகப் பணியாற்றினார். கணினிகள் அதிக அளவில் விற்பனையாக விற்பனையாக, நிரல் எழுதுபவரின் பளு அதிகமாகியது. கணினித் திறம் இல்லாதவருக்கும் நிரலியைக் கிடைக்கச் செய்வதில்தான் எதிர்காலம் உள்ளது என்பதை அவர் தன் மேலாளர்களுக்கு உணர்த்தினார். ‘தானியங்கிக் கணினி நிரல் துறை’ (Automatic Programming Department) யில் அவர் நியமிக்கப்பட்டவுடன் ஒரு தொகுப்பியை (Compiler) அமைத்துக் கணினிகள் தங்கள் செயல்பாடுகளைத் தாமே எழுத வழிவகுத்தார்.

இது, மற்ற கணினி உற்பத்தியாளர்களிடத்தில் காட்டுத் தீ எனப் பற்றியது. ஒவ்வொரு கணினிக்குமான தனித்தனி தொகுப்பி என்பது குழப்பங்களை உண்டாக்கும் என அவர் அறிந்தார். எனவே 1959-ல் தன் கப்பற்படை தொடர்புகளின் மூலம் அனைத்துக் கணினி உற்பத்தியாளர்களின் கூட்டம் ஒன்றை நடத்தினார். அனைத்துக் கணினிகளுக்கும் பொதுவான, எளிதான, ‘பொது வணிக மொழி’ ஒன்றை ஏற்படுத்துவதற்கு அனைவரும் ஒப்புக்கொண்டனர். 10 வருடங்களுக்குப் பிறகு அது பல நிறுவனங்களின் பயன்பாட்டில் முழுமையாக வந்தது. அப்படிப் பிறந்த ‘கோபல் மொழி’ (COBOL-Common Business Oriented Language) இன்றுவரை உலகில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அறுபது வருடங்களாகச் செயல்பாட்டில் உள்ள அந்தச் சிந்தனைக்காக, அதன் செயல் வடிவத்திற்காக அவர் ‘கோபல் பாட்டி’ என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.

எனியாக்கின் அறுவர்

முதல் மின்னணுக் கணினியைச் செயல்படுத்தும் நிரலிகளை ‘எனியாக்’ (ENIAC- Electronic Numerical Integrator And Computer)கின் ஆறு பெண்கள் உருவாக்கினார்கள். சிக்கலான கணிதங்களுக்கு மனக் கணக்குகளின் மூலம்தான், அதாவது பலமுறை சிந்தித்துத் தாள்களில் போட்டுப்பார்த்துத் தீர்வு காணப்பட்டு வந்தது. 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் பல பெண்கள் இத்தகைய கணக்கிடும் துறையில் பணிபுரிந்தார்கள். கணினி என்ற சொல்லே அவர்களைக் குறிப்பதாக இருந்தது. 1000 மணி நேர உழைப்பைக் கோரும் ஒன்றாக ‘கிலோகேர்ள்’ (Kilogirl) என்ற சொற்பிரயோகமே இருந்தது. இவர்களின் வேலைப்பளு இரண்டாம் உலகப் போரின்போது மிக அதிகரித்தது. வேகத்தை அதிகரிக்கும் பொருட்டு இயற்பியல் பேராசிரியரான ஜான் மக்லியும் (John Mauchly), பொறியாளர் ப்ரெஸ்பெர் எக்கர்ட்டும் (J. Presper Eckert) இணைந்து முதல் மின்னணுக் கணினியை உண்டாக்கினார்கள். இதன் செயலியை மிக அருமையாக வடிவமைத்தவர்கள் ‘எனியாக் ஆறு’ எனப்படும் இந்தப் பெண்கள். (Kathleen “Kay” McNutty, Betly Jean Jennings, Elizabeth “Betly” Synder, Marlyn Wescoff, Frances Bilas, Ruth Lichterman.) அதுவும் எப்படி? தமக்குத்தாமே படிப்பித்துக்கொண்டு அவர்கள் பாடுபட்டார்கள். எலிஸபத் பெட்டி சின்டர் முன்னர் ‘கோபல் மொழி’ உருவாக்கத்தில் க்ரேஸ்சுடன் பணி செய்தவர். அறுவரில் இடம்பெறும் இரு ‘பெட்லி’களும் இந்தக் குழுவின் ஆற்றல் மிக்க செயல்களில் பெரிய பங்கு வகித்தனர். மிகச் சரியான குறியீடுகளை ஏற்படுத்த இவ்விருவரும் விவாதித்தனர், குறைகளைக் களைந்தனர், பெண்கள் ஒற்றுமையுடன் இருக்கமாட்டார்கள் என்ற தவறான புரிதலையும் இவர்கள் போக்கினார்கள். இந்த அறுவரை நாம் ‘கார்த்திகைப் பெண்கள்’ என்று சொல்லலாமா? இவர்கள் போர் தொடங்கிய சமயத்தில் நெடுந்தொலைவு பாயும் ஏவுகணைகளின் கணக்கியல் பகுதிகளில் ‘மனிதக் கணினி’களாகப் பணியாற்றியவர்கள். இதற்காக உடலாலும், மூளையாலும் அதிகமாக உழைத்தவர்கள். ஒவ்வொரு கணக்கீட்டிற்கும் கம்பி வடங்களை இணைத்தும் அகற்றியும் மீண்டும் இணைத்தும் செயல்பட வேண்டுமென்றால் அதன்பின்னே உள்ள மனப்பதிவுகளையும் உடல் உழைப்பையும் கற்பனை செய்து பாருங்கள்.

இந்தக் கணினி முழு செயல்பாட்டிற்கு வருவதற்குள் போர் முடிந்துவிட்டது. ஆனாலும் மின்னணுக் கணினி, ஊடகங்களின் கவனத்தைப் பெற்று 1946-ல் பொது மேடையில் விளக்கப்பட்டு ஆர்வத்தை ஏற்படுத்தியது. இதில் சோகமான உண்மை என்னவென்றால், இந்த அறுவரும் இருட்டடிப்பு செய்யப்பட்டதுதான். பின்னர் இரு ‘பெட்லி’களும் வணிகக் கணினித் துறையில் முன்னோடிகளாக, வெற்றியாளர்களாக நீண்ட வருடங்கள் பணியாற்றினர்.

சமூக நலத்தில் பெண்களின் அளப்பரிய பங்கு

தொடர்புகள் மூலம் ஓர் இணக்கமான சமுதாயம் உருப்பெற முடியும் என்று தொடங்கிய பெண்கள்தான் இன்றைய உலகம் தழுவும் வலையின் முன்னோர்களாகத் திகழ்ந்தவர்கள்.

1969-ல் அமெரிக்கா, கம்போடியாவில் குண்டு வீசியதை எதிர்த்துப் பல கிளர்ச்சிகளும் போராட்டங்களும் நடைபெற்றன. பெர்க்லேயில் கணினி அறிவியல் பயின்றுவந்த பாம் ஹார்(ட்)-இங்க்லீஷ் (Pam Hardt-English) தன்னைப்போல, எதிர்க்கும் மாணவர்களை ஒரு குழுவாகத் திரட்டி தொடர்புகளை ஏற்படுத்திச் செய்திகளை உடனுக்குடன் பகிர வேண்டுமென நினைத்தார். 1970-ல் கல்லூரிப் படிப்பைப் பாதியில் நிறுத்திய இவரும் இவரது இரு தோழிகளும் சான் ஃப்ரான்ஸிஸ்கோவில் ப்ராஜெக்ட் ஒன்று (Project One) என்ற இடத்திலிருந்த ஹிப்பிகளின் கிடங்கிற்கு இடம் பெயர்ந்தார்கள். அங்கேதான் அவர்களின் கனவு நனவாயிற்று. உள்ளூர் செய்திகளையும் அதன் சிறப்பு விஷயங்களையும் திரட்டித் தொகுத்து அதைப் பரவலாக்கப்பட்ட முறையில் கொண்டுசெல்ல விரும்பினார்கள்; வேறொரு வகையில் சொல்லப்போனால், அவர்கள் இணையத்தைக் கனவு கண்டார்கள். ஆனால், தொடங்குவதற்கு ஒரு கணினி வேண்டுமே? தனி நபர் கணினிகள் கிடையாது அப்போது. ஏதேனும் ஒரு வகையில் யாரேனும் கொடுத்தால்தான் உண்டு. இவர் அசரவில்லை – முதலில் 53 நிறுவனங்களைப் பட்டியலிட்டார். தங்களுக்குத் தேவையில்லை என்று ஒதுக்கிய கணினியை எந்த நிறுவனமாவது தங்கள் செயல் திட்டத்திற்குத் தானமாகத் தர முன்வருவார்களா என்று தேடினார். ‘ட்ரான்ஸ் அமெரிக்கா லீஸிங் கார்பரேஷன்’ (Trans America Leasing Corporation) முன்வந்தது. 10 குளிர்பதனப் பெட்டிகளின் அளவுகொண்ட எஸ்டிஎஸ்-940 (SDS-940) என்ற கணினி 1972, ஏப்ரலில் ப்ராஜெக்ட் ஒன்றுக்கு வந்து சேர்ந்தது. ‘ரிசோர்ஸ் ஒன்று’ (resource One) என்று பெயரிடப்பட்ட இதைச் செயல்படுத்துவதற்காக இவர் மூன்று ஆண்டுகள் நிதி திரட்டினார்.

கிளர்ச்சியாளர்களின் குழுக்களை இவ்விதத்தில் இணைப்பது துர்லபம் என்பது புரியத்தொடங்கியது. ஆனால், ‘ப்ராஜெக்ட் ஒன்றில்’ வசித்தவர்களுக்கு ‘ரிசோர்ஸ் ஒன்று’ வரப்பிரசாதமானது. மியா ஷோன் (Mya Shone), ஷெர்ரி ரெசோ(Sherry Reson), மேரி ஜெனௌவிட் (Mary Jenowitz) ஆகியோர், விளிம்புநிலை மக்களுக்கான சமூக உதவிகளைப் பற்றிய மையமாக்கப்பட்டத் தகவல்களை, வளைகுடாப் பகுதியில் (bay area) பணியாற்றும் சமூக நலத்துறை அமைப்புகள் பகிர்வதில்லை என்பதைக் கண்டறிந்தார்கள். எனவே, சமூக சேவைத் தகவல்களை ஒரே இடத்திலேயே தொகுப்பாக அறிந்துகொள்ளும் வண்ணம் ஒரு விவரப் புத்தகத்தைக் (Directory) கொண்டுவந்தார்கள். தனிக் கணினிகள் இல்லாததால், சமூகச் செயல்பாட்டாளர்கள் நேரடியாகத் தகவல்களை அணுகமுடியாத நிலை நிலவியது. இதைப் போக்குவதற்காக விவரப் புத்தகத்தினை அச்சடித்து அஞ்சல் செய்தார்கள். தகவல் பலகைகளில் ஒட்டினார்கள். இதன் பயனாக, நகரத்திலிருந்த ஒவ்வொரு நூலகமும், ஏன் சமூக நலத் துறையும்கூட இதன் நகல்களைப் பெற்றுப் பயனுற்றன.

இந்த மூவரும் இடம் பெயர்ந்தபிறகு ‘யுனைட்டெட் வே சேரிடி’ (United Way Charity) இதைக் கையில் எடுத்துக்கொண்டார்கள். சான் ஃப்ரான்ஸிஸ்கோ பொது நூலகத்தில் 2009 வரை இது இருந்தது. சமூக நன்மைக்காகக் கணினியைப் பயன்படுத்த முடியும் என்று வழிகாட்டிய முதல் செயல்பாடு என்று இதைச் சொல்லலாம்.

எலிஸபெத் “ஜேக்” (Jake) ஃபெய்ன்லெரை (Feinler) இணைய வழிகாட்டிப் பொறுப்பாளர் என அழைக்கலாம்.

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலுள்ள அறிவியலாளர்கள் தங்களுக்குள் அவரவர் துறை சார்ந்து உரையாடவும், அதன் தொடர்பான பரிமாற்றத்திற்காகவும் ARPANET என்ற வலைத்தளம் அமைக்க 1969-ல் அமெரிக்க இராணுவம், நிதியுதவி செய்தது. ஸ்டான்ஃபோர்ட் பல்கலை ஆய்வகத்தில் என்ஐசி (NIC) என்ற வலைத் தொடர்பு தகவல் மையம் (Network Information Center) இந்த வலையை நிர்வகித்தது. இந்த என்ஐசியை அப்போதைய கூகுள் எனச் சொல்லலாம். 1972 வாக்கில் இதில் 30 இணைப்புகள் இருந்தன; ஆனால் அவற்றைச் சீராக நிர்வகிக்கும் அவசியமும் இருந்தது. அங்கிருந்த கணினிப் பொறியாளர்களுக்கு இவற்றிற்கெல்லாம் நேரமில்லை. எனவே, முன்னர் வேதியியலாளராக இருந்து பின்னர் தகவல் அறிவியலாளரான “ஜேக்”கிடம் இந்தப் பொறுப்பு வந்துசேர்ந்தது.

அவர் வலைத்தளத்தில் இருந்த ஒவ்வொரு தளத்தைப் பற்றியும் தகவல்களைத் திரட்டி அதை ஆவணப்படுத்தினார். சில வாரங்களுக்குள்ளாகவே அந்த வலையில் உலவும் அத்தனைத் தளங்களையும் பற்றிய விவரங்கள் அவர் விரல் நுனியில் இருந்தன. இதற்காக இவர் உருவாக்கிய கையேடு அச்சிடப்பட்டு ‘ARPANET’டில் யார் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள உதவியது. உலகின் முதல் இணைய உலாவித் துணை (Browser) இதுவே!

வளர்ந்து வரும் வலைத்தளத்தின் முக்கிய நிர்வாகங்கள் அனைத்தும் இவரிடமே வந்துசேர்ந்தன. வலைத்தளத்தில் புதிதாக இணையவரும் துறைகள் / நபர்கள் பற்றிப் பதிவுசெய்வதும், அங்கே நடைபெறும் மிக முக்கியமான உரையாடல்களை அட்டவணைப்படுத்துவதும் இவரது பொறுப்பாயிற்று. தங்களைப் பற்றிய விவரங்களை வலையாளர்கள் வெளிப்படுத்துவதில்லை. எனவே, தகவல் தேடும் பயனர்கள் ‘ஜேக்கை’ அணுகினார்கள். வலைதளத்தில் எது எங்கிருக்கிறது என்பதை இவர் நன்றாக அறிந்திருந்தார். இதற்கான தேவை அதிகரிக்கையில் அவர் ‘மனிதர்களைத் தேடு’ (People Finder) என்பதை இணைப்புக்களில் இணைத்தார். இந்தத் தேடுதலை எளிமையாக்கும் அவசியமும் இருந்தது; தளங்கள், அவற்றின் முகவரி, இவைகளை முறைப்படுத்தும் தேவையும் மிகுந்தது. இப்படியான அடையாளப்படுத்துதலை நாம் இன்று ‘களப் பெயர்’ (Domain Name) என்று சொல்கிறோம். கணினிகளின் இருப்பிடத்தைக் குறிக்கும் வகையில் பொதுவான தலைப்புகளின்கீழ் இவர் அவற்றைத் தொகுத்தார். இராணுவம் (mil), அரசு (gov), கல்வி (edu), வணிகம் (com) இன்றளவும் இத்தகைய களப்பெயர்கள் உபயோகத்தில் இருப்பது இவரது பல சாதனைகளில் ஒன்று! இருவர் மட்டுமே இருந்த என்ஐசி, 11 மில்லியன் டாலர் நிறுவனமாயிற்று. ஆணுக்கு அலுப்புத்தட்டும் ஒன்றான ஒரு வேலையைத் திறம்படச் செய்து அதன் பயன்பாட்டைப் பன்மடங்கு அதிகரித்த அம்மையார் இவர். பெண்ணிற் பெருந்தக்க யாவுள, ஊக்கமும் அறிவும் இருக்கையில்.

சமூக ஊடக வலைத்தள முன்னோடிகளில் ஒன்றெனக் கருதத்தக்க ‘எகோ’ (Echo)வை உருவாக்கியவர் ஒரு பெண்

கலிஃபோர்னியாவில் இருந்த நிகழ்நிலைக் குழுமமான ‘த வெல் (The well)’லில் ந்யூ யார்க்கில் வசித்த ஸ்டேஸி ஹாம் (Stacy Hom) என்ற பட்டதாரிப் பெண் இணைந்தார். ஊடகவியலாளர்கள், முன்னாள் ஹிப்பிகள், கணினி ஆர்வலர்கள் ஆகியோருடன் பேசுவது முதலில் சுவாரசியமாக இருந்தபோதிலும் போகப்போக அலுப்பாக இருந்தது அவருக்கு. மேலும் தொலைபேசியின் மூலமே தொடர்புகொள்ள நேர்ந்ததில் அவருக்கு அதிகக் கட்டணமும் செலுத்தும்படி ஆயிற்று. ந்யூ யார்க் நகரக் குழுமம் ஒன்று தேவையென நினைத்தார் ஹோம். எனவே 1990-ல் ‘கிழக்குக் கடற்கரை வெளி’ (East Coast Hang-Out) என்ற ஒன்றைத் தொடங்கினார். தன் ‘எகோ’வைப் பயன்படுத்துபவர்களை அவர் ‘எகோயிட்ஸ்’ (Echoids) என்று அழைத்தார். கலைத் திருவிழாக்கள், காட்சியகங்கள், விருந்து நடைபெறும் இடங்கள் போன்ற பல இடங்களுக்கு ஒவ்வொரு இரவும் சென்று, ‘எகோ’வில் இணைய விருப்பம் உள்ளவர்களைத் தேடினார். கணினிகளை இயக்குவதைப் பற்றிய பரந்த அறிவு இல்லாத காலகட்டமாதலால் தன் இருப்பிடத்திற்கு ஆர்வலர்களை வரவேற்று, இயக்கும் முறையையும் கற்பித்தார். 1980-களில் 10% – 15% பெண்கள்தான் கணினி பற்றிய அறிவுடன் இருந்தார்கள். பல பெண்களை இதில் இணைப்பதில் இவர் ஆர்வமுடையவராக இருந்தார்.

மெய் உலகின் நீட்சியாக ‘எகோ’வை அவர் செய்ய விரும்பியதால் பொதுவானவற்றிற்கும், தனிப்பட்டவைகளுக்குமான இடங்கள் ஏற்படுத்தப்பட்டன. ‘எகோயிஸ்டு’களின் மத்தியில் தனியான இடங்களுக்கான வரவேற்பு மிகுந்தது. வெகு விரைவில் ஆணுக்கும், பெண்ணுக்கும், 30 வயதிற்கு கீழானவர்களுக்கும், போதைப் பழக்கத்திலிருந்து மீண்டவர்களுக்குமான தனித்தனி இடங்களில் பார்வையாளர்கள், பங்கேற்பாளர்கள் அதிகமாயினர். 1994-ல் தேசமே தொலைக்காட்சியில் ஓ ஜே சிம்ப்சனின் Branco Chaseசில் கட்டுண்டு கிடக்கையில் ‘எகோயிஸ்ட்ஸ்’கள் உடனுக்குடன் எதிர்வினையாற்றினர். இதை அவர்கள் ‘உடன் வினை ஒலிபரப்பு’ (simulcasting) என்று அழைத்தனர். இன்று நாம் இதைத்தான் ‘உடனுக்குடன் சிறுகுருவி அனுப்புதல் ’(live – tweets) எனச் சொல்கிறோம். ‘எகோ’ அன்றைய பரபரப்பான நிகழ்ச்சியான ‘இன்ப்ளுயன்சரையும்’ (Influencer) ஓரம்கட்டியது.

தன் பதின்ம வயதில் மரிசா போ (Marisa Bowe), தன் தந்தையின் கணினியில் நிகழ்நிலையில் நேரடி உரையாடலில் ஈடுபட்டுத் தன் உரையாடல் திறத்தை வளர்த்துக்கொண்டார். 1980களில் ந்யூ யார்க்கிற்கு வந்த மரிசா, ‘எகோ’வினால் கவரப்பட்டார். அதில் மரிசா அதிக நேரம் செலவழித்ததால் அவருடைய தோழர்கள் கவலைப்பட்டனர். இயற்கையில் கூச்ச குணமுடைய அவர், நிகழ்நிலை உரையாடல்களில் வெளுத்து வாங்கினார். ஆர்வமூட்டும் உரையாடல்களில் ஹாம் இவரை ஈடுபடுத்தினார். இவரை எகோயிஸ்ட்கள் சிறு தேவதை எனக் கொண்டாடினார்கள். மாதாந்திரக் கூடுகைகளில் அவர் சமூகப் பெருமைமிக்க ஒரு பெண்ணாக மிளிர்ந்தார்.

திருமதி வென்டி ஹால் (Wendy Hall) ஹைபர்டெக்ஸ்ட்டில் சாதித்தவர். இது உலகம் தழுவிய வலை பிறக்கக் காரணமாக இருந்தது.

டிம் பர்னஸ்-லீ (Tim Berners-Lee)தான் உலகளாவிய வலைக்காகப் பாராட்டப்பட்டவர். ஆகவே, அவர் இணையத்தைக் கண்டுபிடித்தவர் ஆகிறார் அல்லவா? இவ்வளவு விரைவாக இந்த எண்ணத்திற்கு வரவேண்டாம். இணையம் (Internet) என்பது கணினிகளின் வலைப் பின்னல்; ஹைப்பர் உரைக் குறியீட்டு மொழி (Hypertext Mark Up Language – HTML) என்பது தொடர்புள்ள பக்கங்களின் வலைப்பின்னல். அத்தகைய தொடர்புப் பக்கங்களின் செய்தி மொழிதான் (Communal language) ஹெச்டிஎம்எல். இது 1980-ல் பல பெண்கள் உருவாக்கியதன் மேம்பட்ட செம்பதிப்பு. அத்தகையோரில் ஒருவர் திருமதி வென்டி. அவர் அப்போது கணினி அறிவியல் துறையில் ஆசிரியராக இங்கிலாந்தில் சவுத் ஆம்ப்டன் பல்கலையில் பணியாற்றி வந்தார். 900 ஆண்டுகளுக்கு முன்னர், 11-ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த ‘டூம்ஸ்டேய் புத்தகம்’ (Domesday Book) நிகழ்வுகளை 1986-ல் பிபிசி, (BBC) இரு லேசர் தட்டுகளைக்கொண்டு வடிவமைத்து வழங்கியது. இது ஹாலை வெகுவாகக் கவர்ந்தது; இடைச்செயல்பாட்டுச் (Interactive) சாத்தியங்களைப் பற்றிச் சிந்திக்கவைத்தது.

1989-ல் அவர் தற்கால பணி ஓய்வு விடுப்பில் (Sabbatical) மிச்சிகன் பல்கலையில் இருக்கும்போது பல்லூடகத்தின் (Multimedia) ஆற்றலைப் பற்றி அறிந்தார். பல்லூடகக் காட்சிப்படுத்துதலை அமெரிக்கர்கள் ‘மீ உரு மொழி’ (Hyper text / Hyper Media) என்று அழைத்தார்கள். அவர் புதிதாக ஹைப்பர் டெக்ஸ்ட் மொழி ஒன்றை உருவாக்கும் திட்டங்களோடு இங்கிலாந்து திரும்பினார்.

ஹாலின் ஆர்வங்களைத் தெரிந்துகொண்ட பல்கலைக் காப்பகக்காரர் அவரை ஒரு திட்டத்துடன் அணுகினார். பல ஆண்டுகளுக்கு முன்னர் பிரபு மவுண்ட்பேட்டனின் காப்பகம் பல்கலைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டிருந்தது. அதில் அவரது புகைப்படங்கள், உரைகள், காணொலிகள் இருந்தன. ஹால் ஒரு குழுவினை அமைத்துக் காப்பகப் பொக்கிஷங்கள் கணினிமூலம் உலா வர ஒரு ஹைப்பர் டெக்ஸ்ட் அமைப்பை நிறுவினார். 1989 கிறிஸ்துமஸ் சமயத்தில் – ‘மைக்ரோகோசம்’ (Microcosm) பிறந்துவிட்டது.

ஆனால், உலகம் முழுவதும் உருவாகிவந்த கணினி இணைய மொழிகளில் ஒன்றாகத்தான் ‘மைக்ரோகோசம்’ அமைந்தது. டிம் பெர்னர்ஸ்-லீயின் உலகளாவிய வலைதான் பந்தயத்தில் வென்றது. அதன் எளிமையும், இலவசமாகப் பயன்படுத்தும் வசீகரமும் அதை முன்னிறுத்தின.

ஹால் தன்னுடையதும் நிலைபெறும் என நினைத்தார்; மைக்ரோகோசத்தினை வணிக மயமாக்கவும் முயன்றார். அதற்குள் உலகளாவிய வலை நிலைபெற்றுப் பரவலான பயன்பாட்டிற்கும் வந்துவிட்டது.

இலக்கமுறை வெளியீடுகளின் முன்னோடி ஹெய்மி லெவி (Jaime Levy)

‘the Kurt Cobain of the Internet’ (புகழ் பெற்ற ராக் கலைஞர், கிதார் வாசித்தவர், பாடலாசிரியர், இசையமைப்பாளர்) என்று தன்னைத்தானே பெருமிதமாக அழைத்துக்கொண்டாலும் அதிலும் விஷயம் இருக்கிறது. தெற்கு கலிஃபோர்னியாவில் வளர்ந்துவருகையில் ‘பங்க் ராக் காட்சிகள்’ கவர்ந்த அளவிற்கு கணினிகள் இவரைக் கவரவில்லை. இவரது ஆண் நண்பர் இவருக்குக் கணினி இயங்கு படத்தினை (Animation) உருவாக்கும் முறையைக் கற்பித்தவுடன் அனைத்தும் மாறிப்போனது.

ந்யூ யார்க் பல்கலையில் படித்துக்கொண்டிருக்கும்போது இடையூடும் ஊடகங்களில் (interactive media) இவர் செய்த சோதனைகள் இவருக்குப் புகழைத் தேடித்தந்தன. 1990-ல் பட்டம் பெற்றபிறகு லாஸ் ஏஞ்செல்ஸ் வந்த அவர் ‘எலெக்ட்ரானிக் ஹாலிவுட்’ என்ற பெயரில் மின் நெகிழ் வட்டுக்களை (Electronic Floppy Discs) மின்னிதழில் வெளியிட்டார். அதிலே இயங்கு படங்கள், வரைகலைகள், செய்திகள், விளையாட்டுகள் இடம்பெற்றன. “இவை என்னுடைய எண்ணிலக்க க்ராஃபிட்டிகள்” என்றார் அவர். அவற்றை லாஸ் ஏஞ்செல்ஸ் கடைகளின்மூலம் விற்பனை செய்தார்; ஊடகங்களின் கவனம் இவர்பால் திரும்பியது.

இவர் ந்யு யார்க் நகருக்குத் திரும்பினார். இவரைச் சிலிக்கான் பள்ளத்தாக்கின் சிறப்பினையொத்த ஆனால் அதன் மாற்றாக ந்யூ யார்க் நகரம் கொண்டாடியது. தன்னுடைய இசை ஆல்பமான ‘சைபர் பங்க்’கில் இணைக் காட்சி ஊடகம் ஒன்றை அமைத்துத்தர ராக் ஸ்டார் பில்லி ஐடல் இவரைக் கேட்டுக்கொண்டார். அந்த இசை ஆல்பம் சந்தையில் அத்தனை வரவேற்புப் பெறாதபோதும் இவரது புகழ் ஓங்கி வளர்ந்தது. வலை உலாவியான ‘மொசைக்’ (Mosaic)கைப் பார்த்தபோதுதான், தான் செய்திருப்பதும் அதைப்போன்ற உலக வலைத் தளம் என்பதைப் புரிந்துகொண்டார் இவர். இதில்தான் தன் எதிர்காலம் என்றும் அறிந்தார்.

1995-ல் புதிய நிகழ்நிலை இதழான ‘வேர்ட்’ (Word)டில் ‘கிரியேடிவ் இயக்குனராக’ப் பணியாற்றும் வாய்ப்பு இவரது வாழ்க்கையில் ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்தது. புதிதாக, தன் கற்பனை சார்ந்த படைப்புகளைக் கொண்டுவரும் பொறுப்பில் இருந்த இவர், நிகழ்நிலைக் குழுவான ‘எகோவில்’ தான் முன்பு சந்தித்த மரிசா போவை தன்னுடன் இணைத்துக்கொண்டார்.

லெவி மற்றும் போவின் கூட்டணியில் நிகழ்நிலைப் பதிப்புகளின் சாத்திய எல்லைகள் விரிந்துகொண்டே சென்றன. இந்த இதழை ஒவ்வொரு வாரமும் ஒன்று முதல் இரண்டு மில்லியன் மனிதர்கள் படித்தார்கள்; ந்யூஸ் வீக், ந்யூ யார்க் டைம்ஸ் போன்ற பெரிய அண்ணாக்கள் வாழ்த்தினார்கள். லெவி 18 மாதங்களுக்குப்பிறகு ‘வேர்ட்’டைவிட்டு விலகினார். அதிக அளவில் படைப்பாற்றலைக் கோரும் பணிகள் தன்னை நோக்கி வரும் என இவர் எதிர்பார்த்தார். ஆனால், நிலை மாறி கார்ப்பரேட்டுகள் கைகளில் இவைகள் போய்ச் சேர்ந்தன. இவர் இன்று பரவலாக அறியப்படாதவராக இருக்கலாம்; ஆனால் எண்ணிலக்கப் பதிப்பில் பல சாத்தியங்களை ஏற்படுத்திய முன்னோடி என்பதை மறந்துவிடக் கூடாது.

உலகின் தலை சிறந்த விஞ்ஞானியாக 20-ஆம் நூற்றாண்டில் கொண்டாடப்பட்ட ஐன்ஸ்டீன், தம் முதல் மனைவியான மிலிவா மரா (Mileva Maric)வின் பங்களிப்பை இருட்டடிப்புச் செய்தவர் என்ற குற்றச்சாட்டு உண்டு. மிலிவா இயற்பியலிலும் கணிதத்திலும் மிகச் சிறந்த அறிவு பெற்றிருந்தார். இருவருமாக இணைந்து பல இயற்பியல் வினாக்களுக்கான விடைகளைத் தேடினார்கள். அதிலும் ஐன்ஸ்டீனுக்குச் சிக்கலான கணக்குகள் புரிபடாத ஒன்று. அதையும் எளிமைப்படுத்தி, தீர்வுகள் சொல்லி, தேற்றங்களை வடிவமைத்துப் பிரசுரங்கள் செய்யவும், பிரசங்கங்கள் செய்யவும் கணவருக்கு விட்டுக்கொடுத்த பெண்மணி இவர். இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன – பெண்ணின் பெயரும் உடனிருந்தால் பலர் அந்த அறிவியல் கட்டுரைகளைப் படிக்கமாட்டார்கள் என்ற சமூக யதார்த்தம்; கணவர் புகழ்பெற்று முன்னேற வேண்டும் என்று தன்னை மறைத்துக்கொள்ளும் பெண்மையின் ஒரு குணம்; கணவர் தகுந்த நேரத்தில் தம்மை அறிமுகப்படுத்தித் தம் பங்கினை உலகறியச் செய்வார் என்ற மனக்கோட்டை.

இறுதியாக

பெண்கள் தொழில்நுட்பக் காலகட்டத்தின் முதுகெலும்பெனத் திகழ்ந்தார்கள் / திகழ்கிறார்கள். அவர்களின் பங்களிப்பு வரலாற்றிலிருந்து மறைக்கப்பட்டது, அவர்களுக்குத் தக்க சன்மானங்களுமில்லை, அவர்களின் அறிவுத் திறத்திற்கான மதிப்புமில்லை. ஆனாலும், அவர்கள் கொடுத்த கணினி நிரல்கள், இணைய மொழிகள், சமூக வலைத்தளங்கள் இன்றளவும் செயல்பாட்டிலுள்ளன. இதுவே அவர்களின் இன்றியமையாமைக்கு நாம் செய்யும் வந்தனங்கள்.

வண்மை கொள் உயிர்ச் சுடராய் – இங்கு வளர்ந்திடுவாய்
என்றும் மாய்வதிலாய்
ஒண்மையும் ஊக்கமுந்தான் – என்றும் ஊறிடுத் திருவருட்
சுனையாவாய்
– பாரதி

Book: Broad Band by Claire L Evans: The Women who made the Internet.

2 Replies to “எண்ணும் எழுத்தும் பெண்ணெனத் தகும்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.