விடை

“ ஆ, அங்க பாருங்க !”

சத்யா தோள்களைத் தட்டி எழுப்பினாள்.

ரஜனி கண்களை இமைத்துச் சிரமப்பட்டு பெரிய உடலைத் தூக்கி எழுந்தான். ஹெலிகாப்டரின் கண்ணாடி வழியே துல்லியமான சூரியக் கதிர்கள் கண்களை கூச வைத்தன.

பெரிய மலை ஒன்று மரகதப் பச்சைக் காடுகளுக்கு நடுவே உயர்ந்து நின்றது. அதுவும் ஆழ்ந்த பச்சை. உற்றுக் கவனித்தால் மரங்கள் பெருங் காடாக தெரிந்தன.

“ அங்க பாருங்க பெருமாளின் முகம்” என்று விமானி கை காண்பித்தான். சிறு வயதில் இதே சொற்களைச் சன்னதிக்குள் இருட்டில் மெல்லிய கற்பூர ஒளியில் அர்ச்சகரின் தொண்டை கட்டிய குரலில் கேட்டது நினைவில் ஒலித்தது. மலை முகட்டில் நீண்ட மூக்குடன் ஒரு முகம் மாதிரி இருந்தது. அதற்குள் சத்யா எல்லாப் பக்கமும் பறவை போல கழுத்தைத் திருப்பிப் எட்டிப் பார்த்து உற்சாகமாக “ அதோ பாருங்க பெருமாளுடைய உயரத் தூக்கிய கால், சுவர்க்கத்தை அளந்த கால் “ என்று அவனைத் தோளைப் பிடித்து இழுத்தாள். மலையில் ஒரு கருத்த சிகரம் மேகங்களுக்கு நடுவே உயர்ந்து மறைந்திருந்தது. அந்தச் சிகரத்துக்கு அருகில் மேகங்கள் சூழ்ந்திருக்க மழை பெய்து கோண்டு இருந்தது. “ ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து..” சத்யா பாடினாள். மொபைலில் படம் எடுக்க கை தானாகச் சென்றது. ஃபோன் இல்லை என்பது மறுபடியும் நினைவுக்கு வந்தது. கிளம்பும்போதே வாங்கி வைத்துக்கொண்டு விட்டார்கள்.

விமானி கீழே பார்க்கச் சைகை செய்தான் “ அதாங்க பெருமாளுடைய பாதாளம் அளந்த பாதம் “ கீழே குனிந்து பார்த்தால்- ஒரு நீண்ட பாறை பெரிய நீர் நிலையில் இறங்கி இருந்தது. மலை முழுவதும் மரங்கள், அடர்ந்த பச்சை. “ பச்சை மாமலை போல் மேனி ..” என்று சத்யாவுக்கு தன்னிச்சையாக பாடல் வந்தது.

அருகே செல்லச் செல்ல அதன் ப்ரம்மாண்டம் உறைத்தது. ஹெலிகாப்டர் பெருமாளின் கை விரல் அளவுக்குக் கூட இல்லை.

அது த்ரிவிக்கிரமன் தீவு. வங்கக் கடலில் அந்தமான் தீவுகளுக்குத் தெற்கே இருப்பது. சுவாமி அங்கே ஆசிரமம் நடத்தி வருகிறார். அங்கே பெருமாளுக்கு “திரிவிக்கிரமப் பெருமாள் “ என்று திரு நாமம், குருஜி “ வாமன சுவாமி”. சுவாமியைப் பற்றித் தெரிய வந்ததே தற்செயல். புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்காக ரஜனியின் பன்னாட்டு நிறுவனத் தலைவர் வீட்டுக்கு அழைத்திருந்தார். அவர் வீட்டில் உள்ளே சுவற்றில் அந்தப் படம் இருந்தது. வரைந்த இயற்கைக் காட்சி போல இருந்த த்ரிவிக்கிரமன் மலையின் படம். கீழே “சுவர்க்கமும் இங்கே நரகமும் இங்கே” என்று எழுதி சிரித்த முகத்துடன் ஒரு சாமியார் முகமும் இருந்தது.

சத்யாதான் அதைக் கவனித்து விசாரித்தாள். “ அங்க போய்ப் பாருங்க, வாமன சுவாமியின் தத்துவம் மிக அரிதானது, த்ரிவிக்கிரமன் தீவு எல்லோரும் வாழ்க்கையில் பெற வேண்டிய அனுபவம் “ என்றார்.

“ அவங்க வெப் சைட் இருக்குதா ? இல்ல ஃபேஸ் புக்குல இருக்காங்களா ? “ அவங்க இன்டெர் நெட்டிலோ , டீவியிலோ, பத்திரிகைகளிலோ விளம்பரம் கொடுப்பது இல்லை”

“அப்ப எங்க விவரம் கிடைக்கும் ?”

“வேளை வரும்போது சுவாமி தானாக அழைப்பார் “

அங்கேயும் இங்கேயும் விசாரித்ததில் அறை குறையாகத் தீற்றிய சித்திரம் கிடைத்தது. நேரில் சென்று அனுபவிக்க வேண்டும். வார்த்தைகளில் விவரிக்க முடியாது என்றார்கள். அங்கே செல்வது அவ்வளவு எளிது இல்லை என்று மட்டும் தெரிய வந்தது.

ஒரு கடையில் அந்தப் படத்தை மறுபடியும் பார்த்தாள். அது நகைக் கடை. நகைகளை முதலாளி த்ரிவிக்கிரம மலையின் படத்துக்கு அருகில் வைத்து விட்டுக் கொடுத்தார்.

“ இது த்ரிவிக்கிரமன் மலைதானே ?”

“ ஆமாம், என்ன ஒரு புண்ணியத்தலம்“ என்று கண்களை மூடி பரவசத்துடன் பேசினார்.

“ நீங்க தீவுக்கு போயிருக்கீங்களா ? அங்க விசித்திர அனுபவம் அப்படின்னு சொல்றாங்களே “

“அதெல்லாம் பேச முடியாதது, அனுபவிக்க வேண்டியது – கண்டவர் விண்டதில்லை “

“ எனக்கும் அந்த அனுபவம் வேண்டும் “

“ அது அவ்வளவு எளிதில்லை, அவர் கருணை வேண்டும் “

“எனக்கு எப்படியாவது போகணுமே, நீங்கதான் ஒரு வழி சொல்ல வேண்டும் “

“ அது அவர் இச்சை இருந்தால்தான் நடக்கும், அது எல்லோருக்கும் கிடைக்காது “

சத்யா விடுவதாக இல்லை கடைசியில் அவர் ஒரு மொபைல் எண் கொடுத்தார்.

“இதுக்கு ஃபோன் செய்தால் தகவல் கிடைக்குமா ? எங்க இருக்குது தீவு ? “

“அம்மா, வேளை வந்தால் எல்லாம் தானாக நடக்கும், அது வரை தினமும் நூற்று எட்டு முறை “ சுவர்க்கமும் நரகமும் இங்கே“ என்று சொல்லி விட்டு இந்த எண்ணுக்கு அந்த மந்திரத்தையே வாட்ஸப்பில் அனுப்புங்கள். அருள் இருந்தால் தகவல் வரும் “

சத்யா அன்றைக்கே ஆரம்பித்தாள். ஒரு வாரம் ஆயிற்று எந்தப் பதிலும் வரவில்லை. அவளுக்கு யாராவது அவளுடைய மெசேஜைப் பார்க்கிறார்களா என்று சந்தேகமாக இருந்தது.

கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் ஆன பிறகு முதல் பதில் வந்தது.

“ ஒரு மண்டலம் மந்திர விரதம் இருந்தால் சுவாமி அழைக்கக் கூடும் “

சத்யா தீவிரமாகத் தொடர்ந்தாள். தினமும் மந்திரத்தை உச்சரித்து மெசேஜ் அனுப்பினாள்.

இறுதியில் அவளுக்கு த்ரிவிக்கிரம மலை , சுவாமியின் படம் பதிலாக வந்தது. அதுவே பெரிய சாதனை என்று சத்யா மகிழ்ந்தாள்.

தொடர்ந்து செய்து கொண்டிருந்தாள். ஒரு நாள் அழைப்பு வந்தது.

பயணத்துக்கு மனதளவில் தயாராகி வர வேண்டுமாம். அதற்குச் சில வினாக்கள் அனுப்பி இருந்தார்கள். மணமானவர்களாக இருந்தால் இரண்டு பேருமாக வருவது நல்லதாம், இருவரும் அந்தக் கேள்விகளைப் பற்றி தனித்தனியாக சிந்திக்க வேண்டுமாம்.

வினாக்கள் வந்தன

 1. கையில் நூறு கோடி ரூபாய் பணம் இருந்தால் , வாழ்க்கையில் அடுத்து என்ன செய்வாய் ?
 2. உனக்கு ஆயுள் இன்னும் நூறு நாள்தான் என்றால் வாழ்க்கையில் அடுத்து என்ன செய்வாய் ?
 3. அதற்குத் தடையாக இருப்பது எது ?

சத்யாவுக்கு அன்றைக்கே இரவில் தூக்கம் வரவில்லை. முதல் இரண்டு கேள்விகளுக்கு ஓரளவு பதில் தெரிகிற மாதிரி இருந்தது. உலகம் முழுவதும் சுற்ற வேண்டும், நடனம் கற்றுக் கொள்ள வேண்டும் அதுவும் ரஷ்ய நாட்டு பாலே, இமய மலையில் நதிக்கரையில் பாறை மேல் அமர்ந்து தியானம் செய்ய வேண்டும், ஏதாவது சரணாலயத்தில் அனாதையான விலங்குகளைப் பராமரிக்க வேண்டும், தெருவில் ஒரு வண்டியில் இட்லிக்கடை நடத்த வேண்டும், பட்டியல் நீண்டது. மூன்றாவது கேள்விக்கு விடை உறுத்தியது. நள்ளிரவில், விடியற்காலையில் விழித்துக் கொண்டு யோசித்தாள்.

அந்தமான் தீவுகளில் போர்ட் ப்ளேருக்கு விமானம், அங்கிருந்து ஹெலிகாப்டரில் தீவுக்குப் பயணம். ரஜனி கூட கடைசியில் அவனுடைய அலுவலக வேலையை ஒரு வாரத்துக்கு விட்டு விட்டு வந்து விட்டான். அதுவும் அங்கே மொபைல், லாப்டாப் எதுவும் உபயோகிக்க முடியாது என்று தெரிந்த பிறகும். அவன் ஏதோ சுற்றுலாப் பயணம் மாதிரி வந்திருந்தான்.

காலை அய்ந்து மணிக்கு சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தார்கள்.

“ இதோபாரு ரஜனி, இந்தக் கேள்விகளுக்கு விடை யோசிச்சுட்டு வரச் சொல்லி இருக்காங்க “

“அப்படியா, என்ன கேள்வி ?”

படித்துப் பார்த்தான்.

“காலையில் சீக்கிரமே எழுந்தது, லேசா தலை வலி போல இருக்கு, நல்ல காபி கிடைக்குமான்னு பார்க்கறேன் “ எழுந்து சோம்பல் முறித்தான்,

காபியுடன் வந்து நெட்ஃப்லிக்ஸ் தொடர் பார்க்க ஆரம்பித்தான்

“ அங்க போன பிறகு மொபைல் கிடையாது இல்லயா ? “

ஹெலிகாப்டர் இறங்க ஆரம்பித்தது. கீழே ஒரு பெரிய வட்ட வடிவமான , கேரளக் கோவில் போல தோற்றமுடைய கட்டிடம் தெரிந்தது. சுற்றிலும் தனியாக வெண் மணலில் சிறு சிறு குடில்கள். பொம்மை நகரம் மாதிரி. வரவேற்க ஒரு வெளி நாட்டு இளம் துறவி வந்திருந்தார்.

“ வாருங்கள், த்ரிவிக்கிரமன் தீவுக்கு நல்வரவு. இங்கே உங்களுக்கு நிறைய அனுபவங்கள் காத்திருக்கின்றன “ என்றார் புன்னகையுடன்.

அவர்களைத் தங்கும் குடிலுக்கு அழைத்துச் சென்றார்.

“இன்று மாலை நீங்கள் சங்கத்துக்கு வரலாம், அது வரை ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள், இப்படியே கடற்கரையில் வேண்டுமானால் காலாற நடக்கலாம் “

அறை சுத்தமாக வசதியாக இருந்தது, அறையில் வெட்டி வேர் மாதிரி ஒரு மூலிகை வாசம்.

துறவி ஒரு பக்கம் இருந்த தண்ணீர்ப் பானையைக் காண்பித்தார். “ இதில் இருக்கும் தண்ணீரையே குடியுங்கள், இயற்கையான மலை அருவித் தண்ணீர். இங்கே மினரல் வாடர் பாட்டில்கள் கிடையாது “

தண்ணீரும் மூலிகை மணத்துடன் புத்துணர்ச்சியாக இருந்தது.

கடற்கரையில் நடந்து விட்டு மதிய உணவுக்குப் பின் அருவித் தண்ணீரைக் குடித்து விட்டு சுகமாக தூக்கம் வந்தது.

**************************************************************

மாலை சங்கத்துக்குச் சென்றார்கள். அதிகம் கூட்டமில்லை. ஒரு நூறு பேர் இருந்திருப்பார்கள். அந்த வட்ட வடிவக் கட்டிடம், கோயில் என்று சொல்ல முடியாது. நடுவில் த்ரிவிக்கிரமப் பெருமாளின் உருவம் இருந்தது. அருகில் வாமன சுவாமி அமர்ந்திருந்தார். குள்ளமான வடிவம். அவர் சாந்தமான முகத்தில் புன்னகையுடன், வாழ்க்கையின் தத்துவத்தைப் பற்றி ஆழ்ந்த குரலில் பேசினார்.

எப்படி நல்லதையும் கெட்டதையும் நாமே மனதில் உருவாக்கிக் கொண்டு அதில் சிக்கிக் கொள்கிறோம், அதற்கு சூழ் நிலை, அதிலிருந்து விடுபடத் தெரியாமல் மற்றவர்கள்தான் காரணம் என்று பழி சுமத்துவது என்கிற மனிதக் குணத்தைப் பற்றி விளக்கினார். அவர் இதைப் பற்றி நிறையச் சிந்தித்திருக்க வேண்டும். தவிர இந்த மாதிரி பல முறை பேசி இருக்க வேண்டும். மிகத் திறமையாக, தர்க்கபூர்வமான வாதங்களை முன் வைத்தார். எல்லோரும் ஒரு நல்ல பாட்டுக் கச்சேரியைக் கேட்பதைப் போல தலையை அசைத்து, மயங்கிக் கேட்டார்கள். சிலர் கேள்விகள் கேட்டார்கள், அவர்களுடன் விவாதித்தார். கடைசியில், வாதத்தை விட அனுபவம் முக்கியம் என்று ஆரம்பித்தார். அந்த அனுபவத்தை திரிவிக்கிரமன் தீவில் அடைய முடியும் என்றார். எல்லோரையும் மூலிகைத் தண்ணீரை நிறையக் குடிக்கச் சொன்னார்.

மறு நாள் காலை சீக்கிரமே எழுந்து வட்டக் கோயிலுக்குச் சென்றார்கள். அங்கிருந்து ஒரு பஸ்ஸில் பெருமாள் மலைக்கு அழைத்துச் சென்றார்கள். பெரிய நீர் விழுச்சி. அருகே செல்லச் செல்ல பெரும் ஓசை, வரும் போது பார்த்த மலைதான். முதலில் பெருமாள் கால் அருகே இருந்த நீர் நிலையில் குளிக்கச் சொன்னார்கள். அந்த நீர் மலையிலிருந்து விழும் அருவி மற்றும் சுனை நீராக இருக்க வேண்டும். அவ்வளவு புத்துணர்ச்சி கொடுத்தது. நிதானமாக நீரில் திளைத்து குளிக்கச் சொன்னார்கள். எல்லோரும் குழந்தைகள் போல அருவியில் விளையாடினார்கள். அருவியில் அருகே சென்றால் நீர் விசையுடன் உந்தித் தள்ளியது.

பிறகு அப்படியே அந்தச் சுனையில் நடந்து நீர்விழுச்சியில் உள்ளே செல்லச் சொன்னார்கள். உள்ளே நீர்த் திரை விலகிய இடத்தில் ஒரு குகை வாயில் தெரிந்தது. தயங்கிய படி அந்தக் குகைக்குள் சென்றார்கள். உள்ளே இருட்டாக இருந்தது, எங்கிருந்தோ மெல்லிய வெளிச்சம் கசிந்து வந்தது. அருவியின் ஓசை உருவமற்றுக் கேட்டது. முதலில் குகை குறுகலாக இருந்தாலும், செல்லச் செல்ல விரிந்தது. சற்று உள்ளே சென்றபின் ஒரு பெரிய கூடம் மாதிரியான இடம் வந்தது. அங்கே சூரியக் கதிர்கள் ஒரு சில இடங்களில் விழுந்து ஒரு மாய உலகத்தை உருவாக்கின.

அங்கே பாறையிலேயே உட்கார்ந்து கொள்ள வசதியாக திண்ணை போன்ற இடங்கள் இருந்தன. எல்லோரையும் உட்காரச் சொன்னார்கள். குளித்து சற்று குளிராக இருந்தது. இப்போது குடிப்பதற்கு மூலிகைத் தேனீர் என்று ஒரு சூடான பானம் கொடுத்தார்கள்.

வாமன சுவாமி வந்திருந்தார். அவர் ஒரு பாறை மேல் ஒளிக் கற்றையில் நின்று கொண்டு பேசினார்,

ஆழ்ந்த குரல் எதிரொலித்தது.

“சுவர்க்க நரக அனுபவங்களுக்குத் தயாரா ?”. எல்லோரும் தயாராக இருந்தார்கள்.

“மனதளவில் எந்த விதமான அனுபவத்துக்கும் தயாராக இருங்கள். தவிர உங்கள் ஒவ்வொருவருக்கும் தனி விதமான அனுபவம் கிடைக்கும், உங்கள் மனதைப் பொறுத்து, அதனால் உங்களுக்கு என்ன நடந்தது, என்ன அனுபவம் என்பதை மற்றவர்களிடம் சொல்லுவதோ இல்லை அவர்களுக்கு என்ன அனுபவம் என்று கேட்பதயும் தவிர்க்க வேண்டும். “

எல்லோரும் அமைதியாக ஆர்வத்துடன் இருந்தார்கள்.

“இந்தச் சமயத்தில் ஏதாவது கேள்வி உண்டா ?”

ஒருவன் கையை உயர்த்தினான்,

“ சுற்றிப் பார்ப்பதற்கு எவ்வளவு நேரம் ஆகும் ? “

சுவாமி குரலை உயர்த்தினார் “ நீங்கள் இங்கே வந்திருப்பது சுற்றுலாவுக்கு அல்ல, உங்களுக்குள்ளேயே தேடுவதற்கு. சுவர்க்கமும் நரகமும் இங்கே “ சுட்டு விரலால் தலையைக் காண்பித்தார்.

தொடர்ந்து “ என்ன அனுபவம், காட்சிகள் வந்தாலும் மனதில் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் முக்கியமாக செய்ய வேண்டியது எதனால் , எங்கிருந்து உங்களுக்கு சுவர்க்க அனுபவங்களும் நரக அனுபவங்களும் கிடைக்கின்றன என்று ஆராய்வது “

இப்போது ஒருத்தி எழுந்து கேள்வி கேட்டாள் “ சுவாமி , அனுபவம் புரிகிறது, எதனால் என்று என்னால் ஆராய முடியுமா என்று சந்தேகமாக இருக்கிறது “

“ உங்களுடைய திறமைகளை குறைத்து மதிப்பிட வேண்டாம், முதலில் போய் வாருங்கள் பேசுவோம். உங்களில் பெரும்பாலானவர்களுக்கு தானாகவே தெளிவு உண்டாகும் “

குகையில் உள் புறம் கையைக் காண்பித்தார். அங்கே இருளில் கூர்ந்து கவனித்தால், குகையிலிருந்து ஒரு வழி மேலே சென்றது. இயற்கையாகவே படிகள் போல பாறைகள். இன்னொரு பக்கம் ஒரு கிணறு மாதிரி பள்ளம் இறங்கியது. அதற்குள் செல்வதற்கும் பாறையில் படிகள் இருந்தன. எல்லோருக்கும் சற்று தூக்கம் வருவது போல இருந்தது. சிரமப் பட்டு எழுந்தார்கள். சுவாமியின் குரல் அந்த மயக்கத்துக்கு நடுவே கட்டளையாக ஒலித்தது

ஒருவன் கையை உயர்த்தினான், எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்ட அதே ஆசாமி.

“எல்லோரும் இரண்டு இடத்துக்கும் கட்டாயம் செல்ல வேண்டுமா ? “ என்றான்

சுவாமி மறுபடியும் பொறுமையாக, “ இரண்டையும் பார்ப்பது நல்லது. உங்கள் விருப்பம் , போய் வாருங்கள், “ என்றார்.

சத்யா முதலில் மேலே செல்லும் படிகளில் ஏறினாள். சற்று ஏறிய பிறகு குகையில் வெளிச்சம் வர ஆரம்பித்தது. பாறைகளுக்கு நடுவில் ஒரு இயற்கையான வாயில். கண்கள் கூச சத்யா வெளியே வந்தாள்.

சத்யா ஒரு மலையில் இருக்கிறாள். சிறு பெண்ணாக. கூடவே அப்பா , அம்மா. ஒரு அருவியின் ஓசை கேட்கிறது. மரங்கள் சூரிய வெளிச்சத்தில் ஓளிருகின்றன. பறவைகளின் ஒலி. ஒரு திருப்பத்தில் பிரம்மாண்டமான அருவி தெரிகிறது. சத்யா அப்படியே பிரமித்துப் போய் நின்று விடுகிறாள். இது இந்தக் குகைக்கு வரும்போது வந்த அருவி இல்லை. இது அகலமாக இருந்தது. மூன்று பேரும் கீழே இறங்கி தண்ணீரில் கால் வைக்கிறார்கள். தண்ணீர் மிகவும் குளிர்ச்சி. நீரில் ஒரு பூ மிதந்து வருகிறது. பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது. அப்பா அது நாகலிங்கப் பூ என்கிறார். சத்யா அந்தப் பூவை எடுத்து முகர்ந்து பார்க்கிறாள். அபூர்வமான மணம். மூன்று பேரும் கரையில் அமர்ந்து கொள்கிறார்கள். சத்யா “ சாப்பிடலாமா ?” என்று கேட்கிறாள். அம்மா “ அதுக்குள்ள என்ன பசி ?, போய் விளையாடு “ என்கிறாள்.

அப்பா “ பாவம், அவளுக்குப் பசி, சாப்பிடலாம் வா “ என்கிறார். அவரே ஒரு நல்ல இடமாகப் பார்த்து உட்கார வைக்கிறார். திடீரென்று மேகங்கள் மூட்டம். வெளிச்சம் குறைகிறது. வெயில் இல்லாமல் மெல்லிய மலைக் காற்று குளிருகிறது. அப்பா, அம்மா அருகே வந்து அணைத்துக் கொள்கிறார்கள். வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த சாப்பாடு, வழக்கத்தை விட அதிகமாக சாப்பிட்டாள். . மரத்தின் மேல் ஒரு பறவை உட்கார்ந்து கொண்டு இவர்களைப் பார்த்து ஏதோ சொன்னது. பாதி சாப்பிடும்போதே சத்யாவுக்குத் தூக்கம் வந்து விடுகிறது. அப்பாவின் மடியில் தலை வைத்துத் தூங்குகிறாள். பிறகு அப்பா எழுப்புகிறார். “சத்யா, வா , வீட்டுக்குப் போகலாமா ? “ சத்யா சிணுங்குகிறாள். “ நாம இங்கேயே இருக்கலாமா ? “ அப்பா “ சரி இன்னும் உனக்கு தூக்கக் கலக்கம், நான் தூக்கிக்கட்டுமா ?” “இவ்வளவு பெரிய பெண், என்ன செல்லம்” என்று அம்மா கோபித்துக் கொள்கிறாள். அப்பா எடுத்துக் கொள்ள , சத்யா தோளில் தலை சாய்த்து மறுபடியும் தூங்கி விடுகிறாள். நடுவில் விழிப்பு வந்த மாதிரி இருந்தது. தலையைத் தூக்கிப் பார்த்தால், கீழே இருந்து ரஜனி வந்து கொண்டிருந்தான். அவன் முகத்தில் கொந்தளிப்பு. மறுபடியும் தூக்கம் வந்தது.

விழித்தபோது எல்லோரும் அவர் அவர் அறைகளில் , படுக்கையில் இருந்தார்கள். ஏதோ கனவு போல நடந்த நினைவுகள் வந்தன.

**************************************************************

அன்று மதியம் கிளம்ப வேண்டும். சத்யா ரஜனிக்கு என்ன அனுபவம் என்று கேட்க நினைத்து சுவாமி சொன்னபடி கேட்கக் கூடாது என்று சும்மா இருந்து விட்டாள். ரஜனி யோசனையில் இருந்த மாதிரி தெரிந்தது. அவன் எழுந்து எங்கோ கடற்கரையில் உலாவச் சென்றிருந்தான்.

சத்யா ஆசிரமக் கோயிலுக்குச் சென்றாள். அவர்கள் தங்கி இருந்த குடிலில் இருந்து பன்னீர் மரங்கள் பூக்களை உதிர்த்திருந்த பாதையில் மணலுக்கு நடுவில் சதுரக் கற்களைப் பதித்த பாதை. பூக்களின் மணம் மெல்லியதாய் வருடியது. கிளம்புவதற்கு முன் அங்கே வரச் சொல்லி இருந்தார்கள். ஒரு இளம் துறவி வரவேற்றார்.

“வாங்க, எங்க உங்கள் கணவர் வரவில்லையா ?”

“இல்ல அவர் கடற்கரையில் இப்படியே ஒரு நடை போனாரு “

“சொல்லுங்க உங்க அனுபவம் எப்படி இருந்தது ? எங்கல்லாம் போனீங்க ?”

“வாழ்க்கையிலேயே மறக்க முடியாத அனுபவம், மிக்க நன்றி “

“ மறுபடியும் அனுபவத்துக்கு விருப்பமா ?”

“கட்டாயம், எனக்கு இங்கேயே இருந்து விட வேண்டும் என்று தோன்றுகிறது

“அப்படித்தான் நிறையபேர் கேட்கிறார்கள், நீங்கள் யோசித்து செய்ய வேண்டிய முடிவு “

“இங்கே மெம்பர்ஷிப் மாதிரி எடுத்து சேர்ந்து கொள்ளலாம் என்று சொன்னர்களே, அதைப் பற்றி சொல்ல முடியுமா ?”

“ஓ தாராளாமாக, இதைப் பாருங்கள் “

அந்த இளம் துறவி ஒரு வண்ணப் புத்தகத்தைக் கொடுத்தார். ஒரு பக்கத்தைப் பிரித்து, “இதோ பாருங்கள் எல்லா விபரங்களும் உள்ளன” என்றார்.

அதில் வருடாந்திர சந்தா, அய்ந்து வருடங்களுக்கு, பத்து வருடங்களுக்கு என்று பல திட்டங்கள் இருந்தன. வருடத்துக்கு நான்கு முறை வந்து ஒரு வாரம் தங்கிப் போகலாம் என்று இருந்தது. கடைசியில் ஆயுள் சந்தாவுக்கு தனியாக விசாரிக்கவும் என்று இருந்தது.

சத்யா அந்த வரியைக் காண்பித்து “ ஆயுள் சந்தாவும் உண்டா ?” என்றாள்

“உண்டு, சற்று அதிகமாக ஆகும், எந்த உலகத்துக்கு என்பதையும் பொறுத்து” என்றார்

“ எந்த உலகமா – ஆயுள் சந்தா கட்டினால் இங்கேயே குடிலில் நிரந்தரமாக வாழலாம் என்று நினைத்தேன் “

“ அப்படியும் உண்டு, அவ்வப்போது மேல், கீழ் உலகங்களுக்குப் போய் வரலாம். தவிர, நீங்கள் பார்த்த உலகங்களிலும் நிரந்தரமாக இருக்கலாம் “

சத்யா அதை எதிர் பார்க்கவில்லை. சற்று யோசித்தாள், “ எனக்கு சில கேள்விகள்’

“கேளுங்கள், நீங்கள் இங்கே வந்ததே வினாக்களுக்கு விடை சிந்தித்து “ என்றார் புன்னகையுடன்.

“ முதல் கேள்வி இந்த ஆயுள் சந்தா , நிரந்தரமாக இரண்டில் எந்த உலகத்துக்கு வேண்டுமானாலும் கிடைக்குமா ?”

“ஓ தாராளமாக, பெரும்பாலானவர்கள் சுவர்க்க லோகம்தான் கேட்கிறார்கள். நீங்கள் விதி விலக்காகக் கேட்கிறீர்கள். ஆனால் அது உங்கள் விருப்பம் “

“ இரண்டாவது கேள்வி கணவன் மனைவியில் ஒருவருக்கு மட்டும் ஆயுள் சந்தா கட்டலாமா ?”

இப்போது அந்தத் துறவி சற்று தயங்கினார்

“ வழக்கமாக இருவருமாக சேர்ந்து ஆயுள் சந்தா கட்டுவார்கள். உங்கள் விருப்பம் சற்று விசித்திரமாக இருக்கிறது, இன்னொரு விசித்திரம், இன்றைக்கு இப்படிக் கேட்பது இரண்டாவது நபர். சரி உங்கள் பெயர் என்ன, யாருக்கு சந்தா வேண்டும் ?” என்றார்.

சத்யா சொன்னாள்.

அந்தத் துறவி அதிர்ந்து போய் நிமிர்ந்தார்.

6 Replies to “விடை”

 1. Dear Krishnan,

  I was missing my international/national travels last one year plus due to Covid. After reading this story, I felt/experienced as if I just went thro’ an amazing trip…into deep forest, thick cloud, rain, majestic temple…..

  The three questions listed in your story are profound. I am sure, you got excellent insights of Life or else one can not think about such questions.

  And the magic line/mantra, சுவர்க்கமும் நரகமும் இங்கே is so true.

  Your description about த்ரிவிக்கிரம மலை sounds so real and inspires people like me to go there.

  நல்லதையும் கெட்டதையும் நாமே மனதில் உருவாக்கிக் கொண்டு அதில் சிக்கிக் கொள்கிறோம், அதற்கு சூழ் நிலை, அதிலிருந்து விடுபடத் தெரியாமல் மற்றவர்கள்தான் காரணம் என்று பழி சுமத்துவது…….makes me to remember தீதும் நன்றும் பிறர்தரவாரா

  After finished reading the சுவர்க்க நரக அனுபவங்கள், I was ready to sign up for ஆயுள் சந்தா👍

  In summary, it is a Superb, different and unique story.

  Well done👏👏👏
  Congratulations💐🌷💐🌷

 2. விடையின் பரிமாணங்கள் பல. இன்றைய சமூகத்தின் பழுதுற்ற தேடல். அதில் பயனுறும் சமகால ஆன்மீக வணிகர்களின் மீட்சியாக தோன்றும் போலி இரட்சிப்பு. அவர்களின் மெய்ஞ்ஞானம் புறக்கணித்த விஞ்ஞானரீதி அணுகுமுறை சாமர்த்தியம். சொர்க்கமும் நரகமும் அவரவர் தன்மைக்கு ஏற்ற விருப்ப வெறுப்பு அனுபவங்கள்? வாசகர்களின் கற்பனைக்கு சிறகளிக்கும் முடிவு. அது விடையின் தலையாய கேள்வி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.