
பரிணாமம்
காகங்களுக்கு
சோறு வைத்தேன்.
புறாக்கள் புசித்தன.
காகங்களுக்கு
சோறு வைத்தேன்.
அணில்கள் தின்றன.
காகங்களுக்கு
சோறு வைத்தேன்
மைனாக்கள் உண்டன.
காகங்களுக்கு
சோறு வைத்தேன்.
காகம் ஒன்று வந்தது..
கரையாமல் தின்று சென்றது.
கதவுகள்
கலைந்த கனவு
திரும்ப வராது.
நீர்க்கோலம்
உலர்ந்து போனது.
அநிச்சயத்தின்
தானியங்கிக் கதவு
திறக்குமா திறவாதா
தெரியாது.
எழுதாமலே
மனதில் பிறந்த கவிதையும்
எழுத்தில் வளர்ந்த கவிதையும்
வேறாயிருக்க
நினைத்துக் கொண்டான்
எழுதாமலே இருந்திருக்கலாம்.
ஒட்டகம்
முள்ளைத் தின்று
முகம் சிவக்கும் ஒட்டகம்
மீண்டும் முள்ளைத் தின்னும்.
மனிதரிலும்
ஒட்டகங்கள் உண்டு.
அவரவர் வந்த வழி..