மௌனத்தின் மெல்லிய ஓசை

மூடி போட்ட சிவப்பு வண்ண பிளாஸ்டிக் கூடையில் இரண்டு நாட்களுக்கு தேவையான புடவை ஜாக்கெட்களை மடித்து வைத்து கொண்டிருந்தாள் சின்ன பாப்பா. பாடியையும் உள்பாவடையையும் புடவை நடுவில் மறைவாக சொருகினாள். வேதாச்சலம் ஐயர் கிளப்பில் இருந்து சுந்தரம் வாங்கி வந்திருந்த கோதுமை அல்வாத் துண்டில் கொஞ்சம் கிள்ளி பெரியவளுக்கும், காலியான பால்புட்டியைச் சப்பிக்கொண்டிருந்த சின்னவனுக்கும் தின்ன கொடுத்தாள்.

அல்வா எனக்கு பிடிக்காது, எனக்கு வேண்டா, ‘நீ சீக்கிரம் வாம்மா நாம்ப போவோம்’ என்றபடி வெளியே ஓடினான் நடுவுள்ளவன். அவனுக்கு பஸ்ஸில் வெளிவூருக்கு செல்ல போகும் சந்தோசம். காலரில் மஞ்சளிட்ட புது சட்டையை மாட்டிக் கொண்டு தயாராக நின்றான்.

சீனி காராசேவையும், மிச்சரையும் தனி தனி பொட்டலங்களாக மடித்து வைத்துக் கொண்டாள் கூடவே ஒரு ஜவ்வுத்தாள் பையும். பஸ் பயணம் அவளுக்கு அவ்வளவாக ஒத்து கொள்வதில்லை, பஸ்ஸில் ஏறிய உடனே வாயிலெடுத்துவிடுவாள். அதற்கான விஷேச ஏற்பாடு தான் இந்த பை. திருகு சில்வர் கூஜாவில் வெந்நீரும்,பயண வழிக்கு பிள்ளைக்கு ஊட்ட கிளாஸ்கோ பிஸ்கட் பாக்கெட் ரெண்டும் எடுத்துக்கொண்டாள்.

சின்ன தம்பி, மாமா வூட்டுக்கு போறாங்களாம்…அத்தையை பாப்பாங்களாம்…மச்சானோட வெள்ளாடுவாங்களாம்…ஆம்மயி கிட்ட கதை கேப்பாங்களாம்…மாமா கரிசோறு ஆக்கி போடுமாம்…முட்ட திங்கலாமாம்…சாப்ட்டு சாப்ட்டு சின்ன பிள்ளே குண்டாகிடுவாங்களாம்…அம்மணமாக இருந்த சின்னவனை கொஞ்சி, சக்கரையில் முகம் கொண்டு முத்தினாள் சின்னபாப்பா.

முழுக்குக்கு வரச்சொல்லி முத்து அனுப்பியிருந்த கடிதத்தை, ஒருபக்கம் மட்டும் உப்பிக்கொண்டிருந்த ஜாக்கெட்டுக்குள்ளிருந்து வெளிய எடுத்து மீண்டும் படித்துப் பார்த்தாள்.

அன்புள்ள அத்தான் சுந்தரம் அவர்களுக்கு முத்து எழுதுவது. இங்கு நாங்கள் எல்லோரும் நலம். அதுபோல் அங்கு உங்கள் அனைவரின் நலம் காண ஆவல். நிற்க. வருகிற ஐப்பசி மாதம் மூன்றாம் நாள் ஸ்ரீ மயூரநாதர் அவயாம்பிகை அம்மாள் , காவிரி கரையில் எழுந்தருளும் திருமுழுக்கும் விழாவும் , தீர்த்தவாரியும், மறுநாள் தேர்பவனியும் நடைபெற இருப்பதால், தாங்கள் தங்கள் குடும்ப சகீதமாக வந்திருந்து அருள்மிகு மயூரநாதர் அவயாம்பிகை அம்பாளின் அருள் பெற வேண்டுமாய் அன்புடன் அழைக்கிறேன். தாங்கள் ஆபிசில் சொல்லி இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு அவசியம் வரும்படியும், சின்ன பாப்பாவையும், குழந்தைகளும் உடன் அழைத்துவரும்படி கேட்டுக்கொள்கிறேன். அம்மா கூட சின்னபாப்பாவையும் பிள்ளைகளையும் பார்க்க வேண்டி ஆவலாக இருப்பதாக தெரிவிக்க சொன்னது.

மேற்படி அத்தைக்கு என் வணக்கங்களை தெரிவித்ததாக சொல்லவும். மற்றவை நேரில்.

இப்படிக்கு,

முத்து, மாயவரம்.

கடிதத்தை வாஞ்சையாக பார்த்தாள்.சாய்ந்த குண்டு குண்டான எழுத்துகள். பேணா இங்க் அங்கங்கே சிதறியிருந்தது. நிப் ஒரு இடத்தில் லெட்டரை சன்னமாக கிழித்திருந்தது. எழுத்துக்களில் விரல்களை ஓட்டினாள். “இப்படிக்கு முத்து, மாயவரம்,” என்றிருந்த எழுத்துகளை தொட்டு தொட்டு பார்த்தாள். அவள் கண்கள் அரும்பியதை சுந்தரம் பார்த்துவிடாது துடைத்துக் கொண்டாள்.

பெருமூச்சு விட்டபடி கடிதத்தை மடித்து மணிபர்ஸில் வைத்துக் கொண்டாள். பர்ஸில் அந்த லெட்டர் போக மீதி மகமாயி கோவில் மஞ்சள் குங்கும பிரசாத பொட்டலம் ஒன்றும், சில துளசி இலைகளும் கிடந்தன. கூடவே கொஞ்சம் காசும்.

கொஞ்சம் என்றால், ஒரு பதினேழு சொச்சம் இருக்கலாம். ஊருக்கு போய் வர அஞ்சு அம்பது அஞ்சு அம்பது என்று பதினோரு ரூபாய் பஸ்ஸுக்கு தனியாகவும், ஊர் திரும்பும் போது ஸ்டாண்டில் இருந்து வீட்டுக்கு வர டவுன் வண்டிக்கு ரெண்டு ரூபாயும், பிள்ளைக்கு தீனி செலவுக்கு என்று ரெண்டு ரூபாயும், அவள் செலவுக்கு என்று தனியாக, சுளையாக ஒரு ரூபாயும் , மொத்தம் பதினாறு ரூபாய் தந்திருந்தான் சுந்தரம். ஒவ்வொரு காசுக்கும் அவன் சொன்ன கணக்கு இது.

அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, வண்டிக்கு பதினொன்று, திரும்ப வீட்டுக்கு வரும்போ நடந்தே வந்தா மிச்சமாகும் ரெண்டு ருவாயை அம்மாவுக்கும், அவள் செலவுக்கு என்று கொடுத்த ஒரு ருபாயில் அண்ணன் மகன் பாபுவிற்கு அம்பது காசும், மீதி காசுக்கு முழுக்கு கடைக்கு போக, பெரிய அப்பளமும், மிளகாய் பஜ்ஜியும் வாங்கி தின்ன என்று அவள் மனதில் ஒரு சின்னதாக கணக்கு போட்டுக்கொண்டாள்.

இவை போக அவளாக வீட்டு செலவில் மிச்சம் பிடித்து வைத்திருந்த மூன்று ரூபாய் சில்லறை யார் பார்வைக்கும் படாதவாறு முந்தி சுற்றில் இறுகி நனைந்திருந்தது.

எப்படியும் இந்த முறை ஊருக்கு உருத்தோடு தான் போகிறோம், கவுரதியான காசு வைத்து கொண்டு தான் போறோம்,…வாயுக்குள் சொல்லிக்கொண்டது சுந்தரத்துக்கு கேட்டிருக்காது.

“கேளு, பஸ்ல ஏறி உக்காந்ததும் தூங்கிடாத, பிள்ளைங்க இருக்கு. பாத்து. வண்டிப்பேட்டையிலே இறங்கிடு, பஸ் ஸ்டாண்டு போய்ட்டாக்கா டவுன் வண்டிய பிடிக்கணும், அப்புறம் அவனுக்கு ரெண்டு ரூபா தண்டம் அழுவனும். வண்டிப்பேட்டையில இறங்கி பேந்த பேந்த முழிச்சிக்கிட்டு நிக்காம, வண்டி வந்த அதே பாதையில் ஒரு அஞ்சு நிமிஷம் எட்டு போட்டா ஒரு பெட்ரோல் பங்கு வரும் . அத ஒட்டியே நடந்து சோத்துக்கை பக்கமா திரும்பி கண்ண மூடிக்கிட்டு நேரா போனாக்க முருகன் கோவிலு வந்துடும். பக்கமா பிள்ளையார் கோவில். தெரியும் தான, அது தான் உங்க தெருவு, அதுல தான் வூடு இருக்கு”

எங்க ஊரு எங்களுக்கு தெரியாதா என்பது போல ஒரு அலட்சிய பாவத்தில் வழி சொன்ன அவனையே பார்த்தாள் சின்னபாப்பா.

எல்லாத்தையும் எடுத்து வச்சுக்கிட்டயா. எதையும் மறந்துட வேணாம். ரெண்டு நாளுக்கு மட்டுமே துணிமணிய எடுத்து வச்சுக்க. போட்டு எல்லாத்தையும் அள்ளிக்கிட்டு போகாத எனும் போது சற்று நிமிர்ந்து பார்த்த அவளை எதிர்கொள்ளமுடியாது பிள்ளைங்க பக்கம் திரும்பினான் சுந்தரம்.

டேய்…தம்பி அம்மாவ விட்டு தனியா எங்கும் போக கூடாது. அம்மா சொல்ற பேச்சு கேட்டு நடந்துக்கனும். அடம் பண்ணகூடாது. சரியா…அப்பா பிறகு வரேன்னு மாமாகிட்ட சொல்றியா.

நடுவுள்ளவன் கேட்டதாக தெரியவில்லை.

குடு…ந்த…பிள்ளைய நான் தூக்கிக்கிறேன்…சுந்தரம்.

வேண்டாம்…விடுங்க வெடுக்கென அவள்.

எனக்கு வேலை இருக்குடீ. புரிஞ்சிக்கோ. என்னால இப்போ வரமுடியாதுனு சொன்னா… சும்மா. பிறவு வரேன்னு சொன்னதாக ஒண்ணங்காரன்கிட்ட சொல்லு. என்னா.

அவள் அமைதியாக நடைபோட்டாள்.

இவளே…அப்புறம்… இழுத்தான். முத்து கிட்ட நான் சொன்னதா சொல்லி வாங்கிட்டு வா.

அவள் முறைத்தாள்.

இவன் அவள் பார்வையை தவிர்த்தான்.

இருவரும் அதன்பிறகு ஒரு வார்த்தை கூட பேசிக்கொண்டதாக தெரியவில்லை. பஸ்ஸை பார்த்து பாய்ந்து ஓடிய நடுவுள்ளவனை இறுக பிடித்து நிறுத்தியவாறே இடுப்பில் இருந்து சறுக்கி வழிந்த சின்னவனை தூக்கி உட்காரவைத்தாள்.

அடுத்த பஸ் எப்போது என்று விசாரித்துவருவதாக சொல்லி சிகெரெட் பிடித்து விட்டு வந்தான் சுந்தரம். பஸ்ஸுக்கு காத்து கொண்டிருக்கையில் அவள் கையில் ஒரு காக்கிநிற காகித கவரை திணித்தான் அவன். “மதிப்பிற்குரிய முத்து அத்தானுக்கு” என்று அதில் எழுதியிருந்தது. அவள் அதை மடித்து ஜாக்கெட்டுக்குள் வைத்திருந்த கலிமா சிலக் ஹவுஸ் மணிபர்ஸில் வைத்துக்கொண்டாள்.

‘ஏய்…அதுல பாத்து செய்யணுமாடீ…இல்லனாக்கா பொக்குன்னு வெடிச்சிடுமாம், எங்க வீட்டுக்காரர் சொன்னாரு. எனக்கு நீயும் நம்ம புள்ளைவலும் தென் முக்கியம், சோறு கொஞ்சம் தாமசமா தின்னா ஒன்னும் கொரஞ்சிடாது தாயீன்னு. நமக்கு அது வேணா முன்னுட்டாரு, நானும் சரின்னுட்டேன், எங்க வீட்டு காரருக்கு எம்மேல அத்தனை ஆசை’ என்று சிலிர்த்துக்கொண்டே சொன்னாள் பக்கத்துவீட்டுக்காரி.

ஆமாமா உங்க வீட்டுக்காரு ஆசையை கொண்டி கொல்லையில கொட்ட…நிதம் வாங்குற அடியில ஓங் முதுகு விரியறது எங்களுக்கு தெரியாது பாரு…மொத்தமா அம்புட்டு காசுக்கு எங்க போவ…யாரை கேக்கன்னு தெரியாம, ஒன்னிய ஏமாத்த புளுவி உட்டுருக்காரு ஆளு, இது புரியாம இவ பெருசா பேச வந்துட்டா, பெரிய இவமாதிரி… பீச்சான் கையில் வலக்கையை ஊன்றி ஆபாசமா ஒரு செய்கை செய்து கன்னத்துக்கு முட்டுக்கொடுத்தாள் அடுத்த வீட்டுக்காரி.

ஊரில் அப்போது தான் கேஸ் அடுப்புகள் அறிமுகமாகியிருந்தன. அதன் நல்லது கெட்டதுகளை பற்றி ஊர் தெருவில் உள்ள பெண்கள் பலருக்கும் பலவிதமான வதந்திகள் உலவின. அவற்றில் ஒன்று தான் பக்கத்துவீட்டுகாரிக்கும் அடுத்தவீட்டுக்காரிக்கும் பம்படி சமீபம் நடந்த அந்த உரையாடல்

தன் வீட்டுக்கும் கேஸ் இணைப்பு வாங்க வேண்டும் என்று சுந்தரம் உறுதியாக இருந்ததற்கு சில நேர்மையான காரணங்கள் அவனிடம் இருந்தன.

புகை அடுப்பில் ஊதுகுழா கொண்டு பொறி பறக்க ஊதி ஊதி வியர்வையிலும் வெப்பதிலும் கருகி செத்து பிழைத்து சமைக்க அவள் படும் பாடு. கிட்டத்தட்ட அது ஒரு சண்டை. அவளுக்கும் குமையும் அடுப்புக்கும் இடையே இடைவிடாது நடக்கும் பெரும் சண்டை. அதை அவனால் பார்க்க பொறுக்கவில்லை.

புல்லாங்குழல்கள் போன்று ஊதுகுழல்கள் மூச்சுக்காற்றை இசையாக மாற்றவல்லது அன்று, மாறாக அவை சீற்றமான புயலாக மாற்றுவன என்று அவன் அறிந்த காரணத்தினால் தான், அந்த சண்டைக்கு முடிவு கட்ட, அடுகளத்தில் அமைதி திரும்ப அந்த முடிவுக்கு வந்திருந்தான் சுந்தரம்.

அதுமட்டுமின்றி, அவள் சமைக்கும் சமையல் போலவே அவள் மீதும் எப்போதுமே ஒரு புகையடித்த நெடியை அவன் உணர்ந்தேயிருந்தான். அவளோடு படுத்து எழுவது கூட ஏதோ புகைமூட்டத்தில் சிக்கி மூச்சுவிட திணறுவது போன்ற, உயிர் போகும் அனுபவமாக இருந்ததை சகிக்க முடியாது தவித்தான், ஒவ்வொரு இரவிலும்.

சுசைட்டியில் லோன் போட்டு கேஸ் இணைப்புக்கு முன்பணமாக எந்நூறு ரூபாய் கட்டி ரசீதும் பெற்றிருந்தான் சுந்தரம். மூன்று மாதங்களுக்குள் மீத தொகையை கட்டி அடுப்பையும் வாங்கி கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன்.

மீதம் எப்படியும் எழுநூறு தேவைப்படும். சின்னபாப்பாவின் நகைகள் ஏற்கெனவே மீசை சேட்டின் இருப்பு போட்டியில் முங்கி இறுதி மூச்சுக்கு தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இன்றோ நாளையோ மூழ்கிவிடும் அபாயம். எப்படியும் மூழ்கும்.

அஞ்சு அம்பதுக்கு போதும் போதும் என்ற அளவுக்கு குலுக்கி எடுத்து விட்டது அரசு பேருந்து. நடுவுள்ளவன் ஜன்னலுக்கு வெளியில் நகரும் மரங்களை பெறாக்கு பார்த்துக்கொண்டிருக்க சின்னவன் அவள் மடியில் தூங்கி வழிந்தான். கால்களால் கூடையின் இருப்பை உறுதி செய்துகொண்டே ஏதோ யோசனையில் இருந்த அவளுக்கு வாந்தி உபாதை கூட மறந்துவிட்டது.

சுந்தரம் சத்தமில்லாமல் அம்சடங்கிய குரலில் சொன்னவைகளும் அந்த கடிதத்தில் இருந்த வரிகளை படித்ததும் அவளை அப்படி நிம்மதியில்லாமல் ஆக்கியிருந்தது.

“மதிப்புக்குரிய முத்து அத்தான் அவர்களுக்கு வணக்கம். எனக்கு கொஞ்சம் அவசர வேலை வந்துவிட்டதால் என்னால் விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை. மன்னிக்கவும். ஆயினும் சின்னபாப்பாவை அனுப்பி வைக்கிறேன். பெரியவள் என்னை விட்டு இருக்க மாட்டாள். அவள் இங்கே என்கூடவே தங்கிவிட்டாள். நான் சின்னபப்பாவுடன் நடுவுள்ளவனையும் சின்னவனையும் அனுப்புகிறேன். பார்த்து கொள்ளவும். நான் பெரியவளை அழைத்துக்கொண்டு பிறிதொரு நாளில் கண்டிப்பாக வருகிறேன். தவறாக எண்ணிக்கொள்ள வேண்டாம்.

மேலும் உங்களிடம் வருத்தத்துடன் ஒரு சிறு உதவியையும் எதிர்பார்த்து தான் இந்த கடிதத்தை எழுதுகிறேன். உங்களுக்கே தெரியும் என் வருமானம் என்னவென்று. அவள் அடுப்படியில் கிடந்து படும் கஷ்டத்தை பார்க்க பொறுக்காது சுசைட்டியில் லோன் போட்டு கேஸ் கனெக்ஷன்க்கு பதிவு செய்துவிட்டேன். மேலும் கொஞ்சம் பணம் கட்டவேண்டிய பாக்கியுள்ளது. தெரிந்த இடத்தில் கேட்டும் இருக்கிறேன். அது வந்துவிடும் என்றே நினைக்கிறேன். ஆனாலும் போதவில்லை. எனவே நீங்கள் ஒரு ஐநூறு ரூபாய் தந்துதவினால் மிகுந்த உதவியாய் போகும். இந்த கடிதத்தை தந்தி போல பாவித்து உடனே உதவுமாறு வேண்டுகிறேன்.

மேலும், திருவிழாவுக்கு வரமுடியாது போனது வருத்தம் தான். அந்த மயூரநாதனின் ஆசி எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன். மற்றபடி சாந்தியை கோவித்து கொள்ள வேண்டாம் என்று சொல்லவும். மருமவனுக்கு என் அன்பு முத்தங்கள்.

இப்படிக்கு

சுந்தரம், திருசுழி.

அவனுக்கு முழுக்குக்கு போக வேண்டும் என்ற ஆசை உள்ளூர இருந்தாலும், நேரிடையாக முத்துவை முகம் கொண்டு பார்த்து பணம் கேட்பதில் என்னவோ மாதிரி இருந்தது. நேரம் பார்த்து அந்த கடிதத்தை முத்துவிடம் தருமாறு சின்னபாப்பாவிடம் சொல்லி மட்டும் அனுப்பினான்.

கோழைகள் ஆண்கள். அவர்கள் எப்பொழுதும் பெண்களின் பின் மறைந்து கொண்டு தான் போர் தொடுக்கிறார்கள்.

வாம்மா…வா…வா…எங்க …அத்தான் வரல…எப்போ வண்டி ஏறுனீங்க…வாங்க மாப்ள…உற்சாகமாக அழைத்தார் முத்து. அவர் அழைப்பில் சாராய தெளிப்பு. தூங்கி கொண்டிருந்த சின்னவனை ஏந்தி கொண்டார். நீங்களும் வாங்க மாப்ள…அப்பா எங்க…கன்னத்தை கிள்ளினார்.

என்ன ? அம்மாகிட்ட கேட்டதியே என்கிட்டயும் கேக்குறீங்க…

…டேய்… தம்பீ. அவள் அதட்டலை அவன் பொருட்படுத்தவில்லை… அப்பா வேலையா இருக்காங்க…நடுயுள்ளவன் துடுக்காக சொன்னான்.

சின்னபாப்பாவுக்கு இப்பிடி ஒரு பிள்ளை அவசியம் வேணும் தான், வெடித்து சிரித்தார் முத்து.

வா…வா…உள்ள வா…

ஏய்…இங்க வா…சின்ன பாப்பா வந்துருக்கு….பாரு….

அவள் நினைத்த மாதிரி எல்லாம் முத்துவின் வீட்டில் இரவுக்கு கரிசோறுலாம் இல்லை. அவள் அவிக்கும் அதே ரேஷன் அரிசி இட்லி தான். அதே மிளகா சாந்து தான். பல்லுப்போன அம்மாவுடனும் மீசை நரைத்த அண்ணனுடனும் அவள் உட்கார்ந்து சாப்பிடும் இட்லிகள் தன் வீட்டு இட்லியை விட கூடுதல் ருசியாக இருப்பதாக நினைத்துக் கொண்டாள். சுயசமாதானம் செய்து கொண்டாள். ஏமாற்றி கொண்டாள்.

வீட்டில் ஜனத்திரல். கிணத்தடியில் தண்ணீர் இறைக்கும் சத்தம் ஓயாமல் கேட்டுக்கொண்டே இருந்தது. சங்கரபாண்டியன் நாடார் கடையிலிருந்து வாடகைக்கு எடுத்துவரப்பட்ட இரும்பு அடுப்பு கொல்லையில் வைக்கப்பட்டு கூட்டு சமையல் நடந்துகொண்டிருந்தது. வெங்காயம் வெட்டுபவளுக்கு தக்காளி யார் அரிகிறார்கள் என்பது தெரியாது. தக்காளி அரிபவளுக்கு சோறு வடிப்பது யார் என்பது தெரியாது. சோறு வடிப்பவளுக்கு என்ன குழம்பு என்பது தெரியாது. குழம்பு வைப்பவளுக்கு வெங்காயம் வெட்டியது யார் என்பது தெரியாது. அங்கங்கே இரண்டு மூன்று பெண்களாக சேர்ந்து பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் ஒருவரை ஒருவர் கேலி செய்துகொண்டும், தங்கள் புருஷன்காரங்களுடனான உண்டான அனுபவத்தை சொல்லிக்கொண்டும் குத்தியிருந்தார்கள். யார் எதை செய்கிறார்கள் என்று புலப்படவில்லை. ஆனாலும் சமையல் ஆனது.

அடி இவளே…அடி சின்னபாப்பா , நீ மட்டும் என்னா அங்கும் இங்கும்மா அனத்துற இங்க வந்து தான் செத்த உட்காறேன், நாங்க ஒன்னும் உங் புருஷன பத்தி பேசமாட்டோம்டீ, வா…என்றாள் கூட்டத்தில் இருந்த யாரோ ஒருத்தி.

சின்னபாப்பாவிற்கு இது எதிலும் மனம் ஒன்றவில்லை. முழுக்குக்கு பிறந்த ஊருக்கு வந்த மகிழ்ச்சியோ புடை சூழ்ந்த ரத்த சொந்தங்களின் இருப்போ அவளுக்கு முழுவதுமாக சுகம் தரவில்லை. மனதில் ஏதோ ஒரு முள் குத்தி உறுத்திக்கொண்டிருப்பது போல முனகினாள். பாதி ஒருக்களித்த தாழ்ப்பாளிடாத கழிவறைக்குள் பிரவேசிக்க நுழையும் முன்னர் ஏற்படும் சின்ன தயக்கம் வருமே, அதைபோல. அவளின் ஒவ்வோர் நொடியும் ஏதோ ஒரு பரிதவிப்போடே நகர்ந்தது.

சொந்தபந்தங்களின் கூட்டகொப்பறையில் முத்துவிடம் தனியாக பேசுவதற்கு அவளுக்கு நேரமும் இடமும் வாய்க்காது போனது. எந்நேரமும் அவனை சுற்றி சில ஆண்கள் சாராய நெடியுடன் கோணல் மாணலாக சுற்றித் திரிந்தார்கள்.தக்க தருணத்திற்காக பரிதவித்து காத்து நின்றாள் சின்னபாப்பா. வீட்டிலுள்ளோரை விட்டு அவன் தனியாக பிரியும் அந்த நொடி நேரத்திற்காக. ஒரு தேர்ந்த வேட்டைகாரனை போல காத்துக் கொண்டிருந்தாள்.

முத்து தனியாக கொல்லைபக்கமா ஒதுங்குவதை பார்த்த அவள் அவர் பின்னாலே போக, வேட்டியை மடித்துக்கொண்டு வேலியோரம் ஒன்றுக்கு இருக்க உட்காரந்த அவரை பார்த்து பேச அசிங்கபட்டுக்கொண்டு திரும்பி வந்துவிட்டாள்.

எப்படியும் காவேரிகரையில் வைத்து கேட்டுவிடவேண்டும் என்றும் சுந்தரம் கொடுத்த கடிதத்தையும் சேர்த்துவிட வேண்டும் என்றும் முடிவு செய்துகொண்டாள்.

நீ வேணா பிள்ளைகளை கூப்பிட்டு ஒரு எட்டு பெறாக்கா போய்ட்டு வாயேன், இரவு கொத்துக்கு தயார் செய்து கொண்டே முழுக்குதுறைக்கு போவோமோ என்ற அவளுக்கு பதிலுரைத்தாள் சாந்தி.

துறையில் அவ்வளவாக கடைகள் இன்னும் வந்திருக்கவில்லை. ஒவ்வொண்ணாக இப்போது தான் வர தொடங்கி இருந்தது. ஒரு மாத காலம் வரைக்கும் இருக்கும் முழுக்கு கடை பொருட்காட்சிக்கு அதற்கான ஆயத்தங்கள் நடந்துகொண்டிருந்தன. இன்னும் திறப்படாத சின்ன சின்ன கடைகளில் எல்லாம் பெண்களுக்கான ஐட்டமாக விரித்திரிந்தார்கள். ஸ்டிக்கர் பொட்டு, ஹேர் கிளிப், ரோஸ் பவுடர், சவுரி முடி, மருதாணி கோன்கள், வளையல் கடைகள், பிளாஸ்டிக் சாமான்கள், சமையல் சாமான்கள், சப்பாத்தி கட்டை, அது இதுன்னு. கூடவே சிறுவர்களை கவர மேஜிக் கடைகள், பஞ்சு மிட்டாய்கடைகள், பலூன் பெருசுகள், வழக்கத்திற்கு மாறான பெரிய பெரிய ராட்டினங்கள், நீள் வட்ட பாதையில் சுத்தி சுத்தி வரும் ரயில் வண்டி ஒன்னு, சின்ன பிள்ளைங்களை ஏற்றி கொண்டு வட்டமடிக்கும் வாத்து ராட்டினம், என்று களை கட்ட தயார் ஆகிக்கொண்டிருந்தது முழுக்குதுறை. அவள் எதிர்பார்த்த டெல்லி அப்பளம், மைசூர் மிளகாய் பஜ்ஜி கடைகளில் வெறும் போர்டு மட்டுமே ஒரு கடை மறைப்பில் மாட்டியிருந்தது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கவில்லை. இது எப்போதும் வாய்ப்பது தான். அதை வாங்கி திங்க இன்னும் ஒரு வருஷம் , காத்திருந்து அடுத்த முழுக்குக்கு தான். உதடு மடித்து சிரித்துக்கொண்டாள். அந்த ஓசை வெளியில் யாருக்கும் கேட்காது தொண்டைக்கும் வயிற்றுக்குமாக புதைந்தது.

பிள்ளைகளின் அதம் பொறுக்கமுடியாது துறையிலிருந்து சீக்கிரமே கிளம்ப முடிவு செய்தாள். அதம் என்றால் பிள்ளைகள் கேட்கும் அனைத்தையும் வாங்கி தர இயலாமை தான். வேறு என்ன? அவள் போட்டு வைத்திருந்த கணக்குக்கு மேலே செலவானது. நாசமா போவ, என் வயியரெச்சல கொட்டிக்க எமநாட்டம் வந்து நிக்கிறானுங்க பாரு, ராட்டினகாரனையும் பஞ்சு மிட்டாய்காரனையும் திட்டித்தீர்த்தாள். அவளிடம் இருந்த ஒவ்வொரு சக்கரமும் கழண்டு கொண்டிருந்தன. கலிமா சில்க் ஹவுஸ் மணிபர்ஸில் இப்போது வெறும் ரெண்டா ரூபாய் மட்டுமே விஞ்சி இருந்தன.

முந்தியில் இருக்கும் மூனையும் சேர்த்து எப்படியும் ஊருக்கு போய் சேர்ந்துவிடலாம் என்று தான் நினைத்தாள். அதற்கும் வந்தது அடுத்த சோதனை.

கண்ணை கூசும் பச்சையில் முசுமுசுவென இருந்த பந்துகள் வேண்டும் என்று பாபுவும் நடுவுள்ளவனும் ஒட்டாரம் பண்ணி ரோட்டிலேயே அழுது புரள முந்தானையில் முடிந்திருந்த மூன்று ரூபாயும் காலியாகிப்போனது.

வெத்து மனுஷியாய் வீடு திரும்பினாள்.

ஊருக்கு போக காசுக்கு என்ன செய்வது என்பது புரியாது அழுதாள். அவள் அழுவதும் அவளுக்கு மட்டுமேதான் கேட்டிருக்கும்.

திருவிழா முடிந்தது. சொந்தங்கள் சொல்லிக்கொண்டு ஒவ்வொன்றாக சென்றுகொண்டிருந்தன. முத்து எல்லோரையும் வழியனுப்பி வைத்தார்.

ந்த…நீ எங்க கிளம்புற…இரு இரு…இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போலாம். இப்போ என்ன அவசரம்… .

கேஸ் இணைப்புக்கு ஐநூறு ரூபாய் பணம் வேணுமென்பதா வண்டிக்கு அஞ்சு அம்பது மட்டுமாவது தாண்ண என்பதா… புரியாமல் குழம்பி போய்

அண்ண…அண்ண…அண்ண…மூக்கு விடைக்க அழுதுவிடுவது போலத் தயங்கித் தயங்கி நின்றாள் சின்னபாப்பா. அவள் மனத்துக்குள் ஏதோ சொன்னது அங்கு யார் காதிலும் விழவில்லை.

4 Replies to “மௌனத்தின் மெல்லிய ஓசை”

 1. வாசிக்கும் எங்களை அப்படியே
  அலாக்காத் தூக்கி
  மாயவரத்திற்கு ,
  படைப்பாளி
  கொண்டு சென்று விடுகிறார் .

  வீட்டு வாடகை வருமானத்தில் பங்கு கேட்க கதாநாயகன்
  கயத்தார் செல்லும் , வண்ணநிலவன் அவர்களின் புனைவும்

  கேஸ் கன்னெக்சன் செலவிற்காக ரூ 500 சொந்த மச்சானிடம் கடன் கேட்க
  மனைவியை மாயவரம் பயணிக்கச் செய்யும்
  எழுத்தாளர் பாஸ்கர் ஆறுமுகம் அவர்களின்

  இந்தப் புனைவும் ஒரே கரு தான்.

  ஆனால் இரு படைப்பாளிகளின் வர்ணனைகளும், சொற் கோர்வைகளும்
  உச்சம்.
  மாயவரமும் மானூரும் ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல

 2. வண்ண நிலவன் அவர்களின் மழைப் பயணம் சிறுகதை சுட்டி இதோ.

  இரண்டும் வெவ்வேறான கதைகள் தான்.
  ஆனால் மாயவரமும், கயத்தாறும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல என்று நிரூபணம் ஆகி உள்ளது . https://www.valaitamil.com/malai-payanam_2059.html

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.