மின்னல் சங்கேதம் – 10

This entry is part 10 of 12 in the series மின்னல் சங்கேதம்

(பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் எழுதிய ‘அஷானி ஷங்கேத்’ வங்காள மொழி நாவலின் தமிழாக்கம்: சேதுபதி அருணாசலம்)

ங்காசரண் அரிசி எங்காவது கிடைக்கும் என்று வெளியே கிளம்பிப்போனான். ஆனால் நாஹாதா சந்தைகளில் கொள்ளையும், கலவரமுமாக இருந்தது. போலிஸ் அனேகம் பேரைக் கைது செய்திருந்தது. மாலை கங்காசரண் இதையெல்லாம் அனங்காவிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.

“அப்போ, நாம என்னதான் செய்யறது?”

“பட்டினிதான்.”

அனங்கா பெருமூச்செறிந்தாள். அவள் பட்டினி கிடக்க அஞ்சவில்லை. ஏற்கனவே பலநாள் பட்டினி கிடந்திருக்கிறாள். ஆனால் அவள் கணவன் அவ்வளவு தூரம் அலைந்து திரிந்து வந்திருக்கிறான். அவனுக்குத் தருவதற்கு வேகவைத்த ராசவள்ளிக்கிழங்கைத் தவிர அவளிடம் வேறொன்றுமில்லை. எல்லோரும் அதைத்தான் சாப்பிடவேண்டும். துர்காபதாவாவது ஊருக்குக் கிளம்பிப் போனார். அவருக்கு சாப்பாடு போடுவது மிச்சம்.

ஹபு, “இது நல்லாவே இல்லை” என்று முகம் சுளித்தான்.

”இந்தப் பையனோட பவிஷப் பாத்தீங்கள்ல? பிடிக்கலைன்னா நான் என்ன செய்யட்டும்?”

அன்று மோத்தி முச்சினி சாப்பிட வரவில்லை. அவள் பங்கு கிழங்கை எடுத்துச் சென்றுவிட்டாள். அதை சுட்டோ, வேகவைத்தோ தின்பாளாய் இருக்கும்.

அடுத்தநாளும் அந்தக் கிழங்கையே தின்றார்கள். இந்தக் கிழங்கைக் கொண்டுவருவதற்காக அனங்கா ஆபத்தைச் சந்திக்கவேண்டியிருந்தது. மகன்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் ஒன்றும் செய்வதற்கில்லை.

இரவில் அனங்கா, ”அரிசி கிடைக்கலைன்னா, பருப்பாவது வாங்கிட்டு வாங்க. கிழங்கு தீர்ந்துபோச்சு.” என்றாள்.

“பருப்பு கிடைக்கறதும் கஷ்டமாயிடுச்சு.”

”பராமாணிக் கடையிலயும் இல்லையா?”

“ஒண்ணுமே இல்லை. கடையே காலியா இருக்கு.”

“ஓ… அப்போ என்ன செய்யறது?”

”வீட்ல ஒண்ணுமே இல்லையா? அந்தக் கிழங்கு?”

“அது தீர்ந்துபோச்சு. ஆனால் நாம மோத்திக்கோ, துர்கா பண்டிட்டுக்கோ சாப்பாடு போட வேண்டாம்.”

”நாளைக்கு என்ன செய்யறது?”

“எங்கேயும் அரிசியே இல்லையா?”

”இருக்கு. மணங்குக்கு அறுபத்தஞ்சு ரூபா. உன்னால வாங்க முடியுமா?”

அனங்கா புன்னகைத்து, “என்கிட்ட இன்னுமொரு வளையல் இருக்கு. வித்து அரிசி வாங்கிட்டு வாங்க.” என்றாள்.


மேலும் மூன்று நாட்கள் சென்றன.

சந்தையில் அரிசி மட்டுமல்ல, வேறெந்த உணவுப்பொருளுமே இல்லை. உளுத்தம்பருப்பு மணங்கு பதினாறு ரூபாய். அதுவுமே கிடைப்பது துர்லபம்தான்.

சரியான உணவில்லாததால் காபாலி போம் இளைத்துவிட்டாள். பொலிவும் குறைந்துகொண்டே வந்தது. ஒருநாள் மாலை மெல்ல அனங்கா வீட்டு சமையலறையை எட்டிப்பார்த்து, “பாமுன் தீதி, என்ன செஞ்சிட்டு இருக்கீங்க?” என்றாள்.

”சும்மாதான் இருக்கேன், சமைக்கறதுக்கு ஒண்ணுமில்ல.”

”எல்லார் வீட்லயும் இதே கதைதான்.”

”ஏதாவது சாப்பிட்டயா? நிஜத்தை சொல்லு.”

காபாலி போம் பதில் பேசவில்லை.

அனங்கா சமையலறையை நோட்டம் விட்டாள். அரை மூடி தேங்காய் எடுத்துவைத்த நினைவு இருந்தது. இப்போது அதையும் காணோம். ஒருவேளை மகன்கள் தின்றிருக்கக்கூடும்.

காபாலி போம் ஒரு விதமாகப் பார்த்தபடி இருந்தாள். அனங்காவுக்கு அவளை நினைத்துப் பாவமாக இருந்தது.

காபாலி போம் கொஞ்சம் நெருங்கி வந்து, “இன்னிக்குப் போகப் போறேன்.” என்றாள்.

”எங்கே?” அனங்காவுக்கு வியப்பாக இருந்தது.

”இத்கோலா.”

”எந்த இத்கோலா?”

”குளத்துக்குப் பின்னாடி ஒரு பெரிய செங்கல் சூளை இருக்கே, அங்கே. ஏதோ உங்களுக்குத் தெரியாத மாதிரி.” காபாலி போம் கிண்டலாகச் சொன்னாள்.

“அங்கே எதுக்குப் போகப் போற?”

காபாலி போம் அமைதியாக இருந்தாள்.

”சுட்க்கி?”

”சொல்லுங்க, நான் செய்யறது தப்புன்னு சொல்லுங்க. உங்களாலதான் நான் இன்னும் அதைச் செய்யாம இருக்கேன். ஆனால் என்னால இதுக்கு மேலயும் பசி தாங்க முடியாது. எப்படியிருந்தாலும் சாகத்தான் போறேன்னா என்ன பெரிசா ஆகப்போகுது? நான் போகப்போறேன் பாமுன் தீதி. நான் நரகத்துக்குப் போனாலும் பரவாயில்லை.”

அனங்கா ஏதும் பதில் சொல்வதற்கு முன் காபாலி போம் விறுவிறுவென்று சென்று விட்டாள்.

அனங்கா, “சுட்க்கி! சுட்க்கி, நில்லு, நான் சொல்றதைக் கேளு…” என்று கத்தினாள்.


ருட்டில் செங்கல் சூளைக்கருகேயிருந்த இலவ மரத்தடியில் யாரோ நின்றிருந்தார்கள். காபாலி போம், முன்னனுபவம் இல்லாமல், இருட்டில் தட்டுத் தடுமாறி அங்கே சென்று கொண்டிருந்தாள்.

போரா-ஜது அங்கே அவளுக்காகக் காத்திருந்தான். (போரா – ‘தீயில் கருகிய’.) சிறு வயதில் தீ விபத்தில் உடம்பெங்கும் காயம் பட்டதால் கிராமத்தினர் அவனை அப்படி அழைத்தனர். அந்தத் தழும்புகள் நிரந்தரமாகத் தங்கிவிட்டன. செங்கல் சூளைகளுக்கு அவன்தான் எரிபொருள் விற்பவன். அதில் அவனுக்கு நல்ல சம்பாத்தியம்.

போரா-ஜது அவளைப் பார்த்ததும், “ஏய்! இங்கே… இந்தப் பக்கம்…” என்று அழைத்தான்.

காபாலி பழித்துக் காட்டினாள். “இந்தப் பக்கம்! உன்னை நான் முன்னாடியே பார்த்துட்டேன். இருட்டிலே பேய் மாதிரி நிக்கற. யாரா இருந்தாலும் பயந்திருவாங்க!”

போரா-ஜது, “ஒரு வழியா, கடைசீல…” என்றான்.

காபாலி போம் அவன் விரசமாக அதற்கு மேல் எதுவும் சொல்வதற்கு முன் அவனை நிறுத்தி, “அரிசி எங்கே?” என்றாள்.

”என்கிட்டே இருக்கு, என்னை நம்பு.”

”இல்லை, எனக்கு முதல்ல பார்க்கனும். எவ்வளவு இருக்கு?”

“அரைப் பாலி. அதுவும் எவ்வளவோ கஷ்டப்பட்டுதான் கிடைச்சுது. உனக்கு வாக்கு குடுத்துட்டேன்னுதான் அவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கினேன்.”

”அசிங்கமாப் பேசாதே. மொதல்ல ஆரம்பிச்சது யாரு? சரி, என்கிட்ட ஜாஸ்தி நேரமில்ல. ஏற்கனவே இருட்டாய்டுச்சு. மொதல்ல அரிசியைக் காட்டு. எனக்கு உன்மேல நம்பிக்கை இல்ல.”

தன் நேர்மை கேள்விக்குள்ளாக்கப்பட்து குறித்து போரா-ஜது மனம் புண்பட்டான். அவன் பதில் பேசும் முன், காபாலி போம் மீண்டும் கொதித்தாள், “சரி, நான் கிளம்பறேன். சிதையில எரிஞ்ச பாதி மரக்கட்டை கூட செலவழிக்கறதுக்கெல்லாம் எனக்கு நேரமில்லை.” என்றாள்.

போரா-ஜது அவசரமாக, “நில்லு, நில்லு, போகாதே. அடேயப்பா, இவளுக்கு ரொம்பத்தான் அவசரம் போல. இந்தா பார் அரிசி, கூடையில இருக்கு. இவளுக்கு என்ன இத்தனை ஜம்பம்!” என்றான்.

காபாலி போம், “வாயை மூடு!” என்றாள்.

“சரி, சரி, நான் எதுவும் சொல்லல. அது வந்து….”

அரை மணி நேரம் கழித்து, காபாலி போம், அரைப் பாலி அரிசியைத் தன் சேலையில் முடிந்து கொண்டு செங்கல் சூளையை விட்டு வெளியேறினாள். போரா-ஜது அவளைப் பின்தொடர்ந்தான். சாலையின் இருபுறமிருந்த குட்டிப்பிரைப் புதர்களில் மின்மினிப்பூச்சிகள் பறந்துகொண்டிருந்தன.

காபாலி போம், “இப்போ ஏன் என் பின்னாடியே வரே?” என்று எரிந்து விழுந்தாள்.

”உன்னை வழியனுப்பத்தான்…”

”போதும்! திரும்பிப் போ – “

”இருட்டுல எப்படி தனியாப் போவே?”

”அதைப் பத்தி நீ ஒண்ணும் கவலைப்பட வேண்டாம், நீ போய்த் தொலை!”

”ஊர்க்காரங்க யாரும் இந்தப் பக்கம் வர மாட்டாங்க. நீ கவலைப்படாத.”

”எனக்கு அதைப் பத்தி ஒண்ணும் கவலையில்ல. எல்லாருக்கும் என்னைத் தெரியும். நீ போ.”

போரா-ஜது நிற்காமல் வந்தபடியே இருந்தான். காபாலி போம் கோபமாக, “இன்னும் நிக்காம வந்துக்கிடே இருக்கியா, போ – “

அவன் இனிமையாக, “நீ ஏன் இப்படி நடந்துக்கற? நான் உன்னோட ஆள் இல்லையா?” என்றான்.

காபாலி போம், “எனக்கு அதிலெல்லாம் விருப்பமில்ல. எனக்கு உதவி செய்னு யாரும் உன்கிட்ட கேக்கல. இப்போவே திரும்பிப் போ. இல்லாட்டி இந்த அரிசியை இந்த சாக்கடைல கொட்டிடுவேன்.” என்று உறுதியாகச் சொன்னாள்.

போரா-ஜது இப்போது நின்றான். “சரி, சரி, நான் போறேன். ஒரு விஷயம் – “

“என்ன?”

“என்கிட்ட இன்னும் அரிசி இருக்கு. நாளைன்னிக்கு சாயந்திரம் வா.”

”ஒழிஞ்சு போ!”


னங்கா, தன் வீட்டு முற்றத்தில் சேலையை விரித்துப் படுத்திருந்தாள். கங்காசரண் வெளியே எங்கோ போயிருந்தான். நிழலிருளில் யாரோ வந்து முற்றத்தருகே நின்றார்கள்.

அனங்கா திடுக்கிட்டாள். “யார் அது?”

மீண்டும் நன்றாகப் பார்த்தாள். “கடவுளே! ஏன் இப்படி சத்தமில்லாம வந்து நிக்கிற?”

காபாலி போம் சேலைத் தலைப்பால் வாயைப் பொத்தி சிரித்துக்கொண்டிருந்தாள்.

அனங்கா, “என்ன விஷயமா வந்திருக்கே?” என்று கேட்டாள்.

”கொஞ்சம் உப்பு தர்றீங்களா?”

”தாராளமா. எங்கேருந்து வரே?’

”எங்கேருந்தோ.”

”கொஞ்சம் உட்காரேன்.”

“வேண்டாம். பசிக்குது.”

“என்ன சாப்பிடப் போற?”

காபாலி போம் சேலைத் தலைப்பில் முடிந்திருந்த அரிசியைக் காட்டி, “இதைத்தான்.” என்றாள்.

“என்ன அது?”

“அரிசி. பார்த்தா தெரியலையா? கொஞ்சம் உப்பு குடுங்க. இதை சமைச்சு சாப்பிட்டுக்கறேன்.”

”எங்கேருந்து இந்த அரிசி கிடைச்சுது?”

“அதைச் சொல்ல மாட்டேன். உங்களுக்கும் கொஞ்சம் வேணுமா?”

அனங்கா தீவிரமான குரலில், “சுட்க்கி, ரொம்பவே கெட்டுப் போய்ட்ட. எல்லை மீறிப் போற…” என்றாள்.

”உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கறேன் பாமுன் தீதி. இதுலேருந்து கொஞ்சம் எடுத்துக்கோங்க.”

”அதுக்கு முன்னாடி நான் உன்னை நரகத்துக்கு அனுப்ப வேண்டி வரும்.”

“இருக்கட்டும் பாமுன் தீதி. நாங்கள்லாம் எப்படியிருந்தாலும் நரகத்துக்குத்தான் போகப்போறோம். ஆனால் நீங்க சதி லக்ஷ்மி. நான் நரகத்துலயும் இந்த மாதிரி பட்டினி கிடக்கக்கூடாதுன்னு ஆசிர்வாதம் பண்ணுங்க.”

அனங்காவிற்கு அழுகை வந்தது. ஆனால் அமைதியாக இருந்தாள்.

காபாலி போம், மீண்டும், “அரிசி எடுத்துக்கறீங்களா?” என்று கேட்டாள்.

”வேண்டாம். நீ முதல்ல கிளம்பு.”

”சரி. நீங்க பட்டினி கிடங்க. எனக்குக் கொஞ்சம் உப்பு கொடுங்க.”

அவள் உப்பு வாங்கிக் கொண்டு நகர்ந்தாள். ஆனால் மீண்டும் வந்து, “ஓ பாமுன் தீதி, இன்னிக்கு என்ன சாப்பிட்டீங்க?”

“சோறு!”

“சரிதான்! உண்மையச் சொல்லுங்க – “

”என்னவா இருந்தாலும் அது உனக்கு அவசியமில்லாதது. கிளம்பு நீ முதல்ல.”

காபாலி போம் அருகில் வந்து, “உங்க பாதத்தைத் தொட்டுக்கறேன். நான் கங்கைல குளிக்க வேண்டிய அவசியமில்ல.” அவள் அனங்காவின் பாதம் தொட்டு, மேலும் ஏதோ சொல்ல வந்தாள். அதற்குள் கங்காசரண் வந்துவிடவே ஓடிவிட்டாள்.

“யார் அது?” என்று கேட்டான் கங்காசரண்.

“காபாலி போம்.”

“என்ன வேணுமாம்?”

“சும்மாதான் வந்திருந்தா. அரிசி கிடைச்சுதா?”

”ஒரு இடத்தில இருக்காம். மணங்கு அறுபது ரூபாயாம். ஏதாவது பாத்திரத்தை விக்கலாம்னு நினைக்கறேன்.”

”அதுல அறுபது ரூபாய் கிடைக்குமா?”

“இருபது ரூபாயாவது கிடைக்கும். பதிமூணு சேர் அரிசி கிடைக்கும். நிஜத்தைச் சொல்லனும்னா, நாம இப்படியே வாழ்க்கைய ஓட்ட முடியாது.”

”என்னோட தங்க முலாம் பூசின சங்கு வளையல்களை எடுத்துக்கோங்க. பாத்திரம் இருக்கட்டும்.”

”உன்னோட சங்கு வளையள்களையா?”

”இல்லாட்டி பட்டினிதான் இருக்கனும். எது சரின்னு படுதோ அதைச் செய்ங்க.”


டுத்த நாள் கங்காசரண் ஒரு ஜோடி சங்கு வளையல்களை விற்பதற்காக ஸார்பா நகைக்கடைக்குச் சென்றான். ஸார்பா, “இத்தனை நல்ல பொருளை ஏன் விக்கறீங்க?” என்று கேட்டார்.

”தேவையிருக்கு.”

ஆனால் அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு கூட, அரிசி வாங்குவது பெரும்பாடாக இருந்தது. கங்காசரணுக்கு ஒரு விவரமுமில்லை. ஷங்கர்பூர் நிபாரண் கோஷிடம் அரிசி இருக்கிறதென்று யாரோ சொன்னார்கள். அதிகாலையிலேயே அங்கு சென்று பார்த்தால், ஏற்கனவே பத்து கிராமத்தினர் வந்து கூடையோடு காத்திருந்தார்கள். அந்த வீட்டில் யாரும் இன்னும் எழுந்திருந்திருக்கவில்லை. நிபாரண் வெளியே வந்தபோது எல்லோரும் சூழ்ந்துகொண்டார்கள்.

“அரிசி இல்லை!” என்றார் அவர்.

”அது தெரிஞ்சுது. உங்க வாயால அதைக் கேக்கனும்னு காத்திருந்தேன்.” என்றான் கங்காசரண்.

கங்காசரண் அங்கேயே உட்கார்ந்திருந்தான். அரிசியில்லாமல் எப்படி வீட்டுக்குப் போவது? இரண்டு நாட்களாக வீட்டில் யாரும் சோறு சாப்பிட்டிருக்கவில்லை. மகன்களின் முகத்தைப் பார்க்க அவனுக்கு வேதனையாக இருந்தது. அங்கே வந்திருந்தவர்களெல்லாம் ஒவ்வொருவராகக் கிளம்பிவிட்டார்கள். நிபாரண் வீட்டின் உள்ளறையையும் மூடிவிட்டார்.

நீண்ட நேரம் கழித்து, நிபாரண் வெளியே வந்தார். கங்காசரண் இன்னும் அங்கேயே உட்கார்ந்திருந்ததைப் பார்த்து, “பாபா தாகுர்! நீங்க இன்னும் அரிசிக்காகக் காத்திருக்கீங்களா? என்னால தர முடியாது. என்கிட்ட அரிசி இருக்கு. இல்லைன்னு மறுக்க மாட்டேன் – பொய் சொல்லி நரகத்துக்குப் போக விரும்பல – ஆனா, இதையும் வித்துட்டா, என் குடும்பம் கண்டிப்பா பட்டினி கிடந்து செத்துப்போகவேண்டி வரும்.”

“உங்ககிட்ட எவ்வளவு இருக்கு?”

”ரெண்டு மணங்கு.”

”அவ்வளவுதானா?”

”இல்லை தாகுர் மஷாய். உங்ககிட்ட நான் பொய் சொல்ல மாட்டேன். இன்னும் கொஞ்சம் இருக்கு. ஆனால் என்னால அதை விற்க முடியாது. காசை வெச்சுக்கிட்டு நான் என்ன பண்ணுவேன். அதைச் சாப்பிட முடியாது.”

கங்காசரண் எழுந்து நின்றான். நிபாரண் பணிவாக, “நான் ஒண்ணு சொல்லட்டுமா? நீங்க ஒரு பிராமணர். ரொம்ப தூரத்திலிருந்து அரிசி தேடி வந்திருக்கீங்க. உங்களுக்குக் கொஞ்சம் அரிசி தரேன். ஆனால் நீங்க இங்கேயே சமைச்சு சாப்பிடனும். தொழுவத்துல நீங்க சமைச்சுக்கலாம். எங்க குளத்துல மீன் இருக்கு. அதிலேருந்து உங்களுக்கு ஒண்ணு அனுப்பறேன். கறவைப்பசுவும் இருக்கு. சோறு, மீன் கறி, புதுப்பால் சாப்பாடு சாப்பிடலாம் நீங்க. உங்களுக்கு ஒரு பைசா செலவு கூட இல்லை.” என்றார்.

கங்காசரண், “வேண்டாம். வீட்ல மொத்த குடும்பமும் ரெண்டு நாளா பட்டினி. எனக்குக் குழந்தைகள் இருக்கு. என்னால முடியாது. எனக்கு சமைக்க அரிசி குடுக்கறதுன்னா, இன்னும் கொஞ்சம் சேர்த்துக் குடுங்க. நான் காசு தரேன். அறுபது ரூபாய் விலை.”

நிபாரண் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அவர் மீது கோபப்படுவதும் சாத்தியமில்லை. பணிவே உருவாக இருந்தார். அதுவுமில்லாமல், கங்காசரணை ஏற்கனவே தானச்சாப்பாட்டுக்கு அழைத்துவிட்டார்.

கங்காசரண் கோபப்படுவதாகக் காட்டிக்கொண்டான். ”நான் ஒண்ணும் பிச்சையெடுக்க வரலை. போங்க, போங்க – இனிமே என்னை சாப்பிடச் சொல்லி கேக்காதீங்க.”

ஆனால் அவனிடம் பழைய மன உறுதி இல்லை. அவன் மனக்கண் முன் மீன் துண்டுகளும், உருளைக்கிழங்குகளும், கத்திரிக்காய்களும், இறால்களும் வந்து சென்றன. சோற்றில் மீன் கறியைப் பிசைந்து, கொஞ்சம் பச்சை மிளகாயைத் தொட்டுக்கொண்டு –

நிபாரண், “தயவுசெய்து வாங்க, தாகுர் மஷாய். இந்த ஒரு வேண்டுகோளை மட்டும் நிறைவேத்துங்க. நீங்க என்ன சொன்னாலும் கேக்க மாட்டேன். எங்க வீட்டை விட்டு நீங்க சாப்பிடாமப் போகக்கூடாது.” என்றார்.

ஹபு இரண்டு நாட்களாகச் சாப்பிடவில்லை. அனங்காவோ அதற்கும் மேலே. அவள் என்ன சாப்பிட்டாள், எப்போது சாப்பிட்டாள் என்று கங்காசரணுக்குத் தெரியாது. எல்லோருக்கும் உணவிடுவதிலும், தான் பட்டினி கிடப்பதிலும் அவள் திறமைசாலி. தான் மட்டும் இங்கே சாப்பிடுவது சரியில்லை. மீண்டும் கேட்டான், “சரி. நான் இங்கே சாப்பிட்டா, எனக்கு அரிசி விற்பீங்களா?”

”முடியாது பாபா தாகுர். நான் உங்ககிட்ட பொய் சொல்ல மாட்டேன். என்னோட அரிசியை நான் தர முடியாது. ஆனால் நீங்க என்னோட அதிதியா அரை காதா அரிசி இங்கே சமைச்சு சாப்பிட்டுக்கலாம்.”

”உங்களுக்கு பிடிவாதம் ஜாஸ்தி.”

“என்ன செய்யறது மஷாய்? எல்லாம் இந்தப் பஞ்சகாலத்தாலதான். எல்லாருக்கும் பீதி!”

”உங்களுக்கு வேறே எங்கேயிருந்தும் அரிசி கிடைக்காதா?”

”எங்கேருந்து கிடைக்கும்? எந்த விவசாயிக்கிட்டயும் நெல்லு இல்ல. சந்தைக்கு ஒரு தானியம் கூட அரிசி வர்றதில்லை. எங்க கிராமத்துக்குப் பின்னாடி ஒரு குட்டை இருக்கு. நாங்க அதை தஸ்பாரா குளம்னு சொல்லுவோம். இப்போ நீங்க அங்கே போய் பாருங்க. முப்பது நாப்பது பொம்பளைங்க தாமரை வேரைப் பிடுங்கிட்டு இருப்பாங்க. நத்தை, சிப்பின்னு ஒண்ணையும் விட மாட்டாங்க. ஏன் நாணல் செடியைக் கூட விட்றதில்லைன்னா பாருங்க.”

”அப்படியா?”

“அந்தப் பக்கமாப் போகும்போது நீங்களே பாருங்க. நேரமாக நேரமாக கூட்டமும் அதிகமாகும். தண்ணி முழுக்க சேறாகிடும். பொம்பளைங்கள்லாம் சேறு படிஞ்ச பேய் மாதிரி இருப்பாங்க. அவங்களுக்கு ஒண்ணுமே கிடைக்கறதில்லை. இருந்தாலும் நத்தைங்களையும், வேர்களையும் தேடிக்கிட்டே இருக்காங்க. பார்க்கவே பயமா இருக்கும். அதெல்லாம் மூணே நாள்ல தீர்ந்து போச்சு. குளத்துக்கும் ஒரு அளவு இருக்கே. இப்போ வெறுமனே சேத்துல அளைஞ்சுக்கிட்டு இருக்காங்க.”

“இன்னமும் ஏன் தேடிக்கிட்டு இருக்காங்க?”

”அவங்ககிட்ட சாப்பிட வேற ஒண்ணுமேயில்ல. மத்தவங்க கண்ணுல படாம எதாவது தப்பிச்சிருக்காதாங்கற நப்பாசைதான். நீங்களே யோசிச்சுப் பாருங்க. நான் இந்த அரிசியை வித்துட்டேன்னா, என் குடும்பமும் அவங்களை மாதிரி ஆகிடும். அதெல்லாம் இருக்கட்டும். நீங்க வாங்க பாபா தாகுர். வந்து சாப்பிடுங்க. எவ்வளவு வேணுமோ சாப்பிடுங்க.”

கங்காசரண் சம்மதித்தான். வேகவைத்த நத்தையும், சிப்பியும் இல்லை – அவன் நல்ல சோறும், மீனும் சாப்பிட்டான்.

நிபாரணின் மூத்த மகள் – விதவைப்பெண் – காந்தோமணி, மாட்டுத்தொழுவத்தை நன்றாகச் சுத்தம் செய்து கொடுத்தாள். விறகுகளையெல்லாம் ஒரு பக்கமாக ஒதுக்கி, சமையல் செய்ய இடம் செய்து கொடுத்தாள். கங்காசரண் குளித்து வந்ததும், உடுத்திக்கொள்ள புதிய தஸர் பட்டு வேட்டியைக் கொடுத்தாள். காய்கறிகளையும், மீனையும் அரிந்து கொடுத்து, சமையலுக்குத் தேவையான மசாலா பொருட்களையும் கொடுத்தாள். கங்காசரண் சமைக்கும்போது, “தாதா-தாகுர், இவ்வளவு உப்பா? சமையல் கெட்டுப்போகும்.” என்று புன்னகைத்தாள்.

”ரொம்ப அதிகமா?”

“ஆமா. உங்களால சாப்பிட முடியாது. உங்களுக்கு சமைச்சுப் பழக்கமில்லைதானே?”

”ஆமா.”

”நான் சொல்ற மாதிரி செய்ங்க. நீங்க உட்கார்ந்து கிளறிவிட்டாப் போதும்.”

காந்தோமணி மிகவும் அன்பானவள். கங்காசரண் அதனை உடனேயே உணர்ந்து கொண்டான். எங்கிருந்தோ வெல்லமும், வீட்டில் உருவாக்கிய பசு நெய்யும் கொண்டு வந்தாள். கங்காசரண் நன்றாகச் சாப்பிட வேண்டுமென்று அவள் மிகவும் அக்கறை எடுத்துக்கொண்டாள். ஆனால் அவனால் சோற்றை விழுங்க முடியவில்லை. படோல், ஹபுவைக் காட்டிலும், அனங்காதான் அவனை மிகவும் தொந்தரவு செய்தாள். அவள் சாப்பிட்டு எத்தனை நாளானதோ யாருக்கும் தெரியாது. ஒருபோதும் அதைக்குறித்துப் புகாரிட்டதில்லை.

”இன்னும் கொஞ்சம் வெல்லம்?”

“வேண்டாம். இது சுத்தமான புதுப்பால். வெல்லம் போட்டா அந்தச் சுவை கெட்டுப் போய்டும்.”

இத்தனை கெட்டியான, சுத்தமான பாலை அவன் இங்கே குடித்துக் கொண்டிருக்கிறான். அங்கே அனங்கா ஒரு கூடையை எடுத்துக் கொண்டு சாப்பிட லாயக்கற வெங்காயத்தாமரைக் கொடிகளையோ, காட்டுக்கீரைகளையோ தேடிக்கொண்டிருக்கலாம். மாலையானதும் அக்கம்பக்கத்துச் சிறுவர்களெல்லாம் சேர்ந்து கொள்வார்கள். செடிகளில் ஒரு இலையையும் விட்டுவைக்கமாட்டார்கள்.

சாப்பிட்டு முடித்ததும், காந்தோமணி தாம்பூலம் கொண்டு வருவதற்கு உள்ளே சென்றாள். தட்டில் இன்னும் கொஞ்சம் சாதம் மிச்சமிருந்தது. அதை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு சென்றுவிடலாம் என்று நினைத்தான். ஆனால் எப்படிச் செய்வது? மேல் துண்டில் முடிந்து கொள்ளலாமா? ஒரு பிராமணன், சாப்பிட்ட மிச்சத்தை எடுத்துக்கொண்டு போவதா? அதைச் செய்ய முடியாது.

எப்படி இந்த மிச்சத்தை எடுத்துக்கொண்டு போவது என்று கங்காசரண் யோசித்துக்கொண்டிருந்தான். வளர்ப்பு நாய்க்கு எடுத்துப் போவதாகப் பொய் சொல்லலாமா? அவர்கள் அவனைப் பற்றி என்ன நினைப்பார்கள்? அது நாணக்கேடாக இருக்கும். அது அதிகம் ஒன்றுமில்லை. இருந்தாலும் அனங்காவுக்கு நான்கைந்து கைப்பிடி சோறு வரும். அதை எப்படியாவது எடுத்துப் போக வேண்டும். அதில் வெட்கப்படுவதற்கு ஒன்றுமில்லை.

காந்தோமணி திரும்பிவந்து கங்காசரணுக்குத் தாம்பூலம் கொடுத்தாள். உடனேயே அவன் தைரியமெல்லாம் வடிந்து, வெட்கமும், தயக்கமும் சூழ்ந்துகொண்டது. காந்தோமணி மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தாள். அடர்த்தியான கருங்கூந்தலும், மூக்கருகே சிறு மச்சமும் கொண்ட இளம்பெண். கங்காசரண் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவள் முகத்தில் சில பெரியம்மைத் தழும்புகள் இருந்தன.

”காந்தோ, உனக்குப் பெரியம்மை வந்துச்சா?”

“ஆமா தாதா தாகுர். மூணு வருஷத்துக்கு முன்னாடி.”

”முகத்தை இளநீர்ல கழுவிருந்தா, இந்தத் தழும்புகள்லாம் வந்திருக்காது.”

”நீங்க ரொம்ப தமாஷ் செய்யறீங்க தாதா-தாகுர். என்னோட முக லட்சணத்தைப் பத்தி இனிமேல் எனக்கென்ன கவலை? அந்த நாள்லாம் போச்சு. விதவைக்கோலம் என்னோட துரதிர்ஷ்டம். சீக்கிரமே நிம்மதியா செத்துப் போய்டனும்ங்கறதுதான் என்னோட விருப்பம்.”

பிறகு அவன் காதில் கிசுகிசுத்தாள். “மூங்கில் தோப்புக்கிட்ட இருக்க குளத்துக்கிட்ட நில்லுங்க.”

கங்காசரண் வியப்போடு ”ஏன்?” என்றான்.

”ஷ்! மெதுவா! உங்களுக்குக் கொஞ்சம் அரிசி தரேன். ஆனால் அப்பாவுக்குத் தெரியக்கூடாது. உங்க சாப்பாட்டுக்குன்னு தந்ததுல அரை பாலி எடுத்து வச்சிருக்கேன். எடுத்துக்கோங்க. உங்க குடும்பத்தை விட்டுட்டு சாப்பிட்டதுக்காக நீங்க வருத்தப்படறீங்கன்னு புரியுது.”

பெண்கள் நிஜமான லக்ஷ்மிகள்! நிதர்சனமான அன்னபூரணிகள்! இல்லாதவர்களுக்கும், பசியோடிருப்பவர்களுக்கும் உணவிடுபவர்கள். கங்காசரண் இப்படி நினைத்துக்கொண்டிருக்கையிலேயே, காந்தோமணி சேலைத்தலைப்பில் அரிசியை ஒளித்துக் கொண்டு வந்தாள்.

கங்காசரணின் பாதம் தொட்டு நமஸ்கரித்து, “ஒரு பிராமணருக்கு இதைச் செய்யறதுக்கு நான் புண்ணியம் செஞ்சிருக்கனும். இந்தக் கஷ்ட காலத்துல யாருக்கும் தானம் குடுக்கறதே முடியாத காரியமா இருக்கு. எல்லாம் எங்க தலைவிதி! நல்லா ஒளிச்சு வச்சுக்கோங்க – “

“கண்டிப்பா.”

”இல்லைன்னா எல்லாரும் வந்து கேட்பாங்க. கொடுக்கலைன்னா அழுவாங்க. இங்கே ஒவ்வொரு வேளை சாப்பிடறதுக்கும் கஷ்டமா இருக்கு. ஜனங்க எங்க வீட்டு முன்னாடி வந்து அழறாங்க. எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு. ஆனால் என்ன செய்ய முடியும்? எல்லாருக்கும் எப்படி சாப்பாடு போடறது? அதனால எல்லா கதவையும் அடைச்சு வச்சுக்கறோம். இன்னொரு வேண்டுகோள் – “

”சொல்லு.”

”ரொம்ப சமாளிக்க முடியாத சூழல் வந்தா, என்னை ஞாபகம் வச்சுக்கோங்க. என்னால முடிஞ்ச உதவியைச் செய்யறேன். தெய்வமாக் கருதப்படற பிராமணருக்கு என்னால உதவி செய்ய முடியலைன்னா, அப்புறம் வாழ்ந்து என்ன பிரயோஜனம்?”

வீட்டுக்குப் போகும் வழியில், கங்காசரண் நஸ்ராபூர் குளத்தின் பக்கத்தில் ஒரு கடைக்கருகே நின்றான். அது மாலை நேரம். கடைக்காரன் புகைப்பிடிப்பதைப் பார்த்து முற்றத்தில் ஏறி, “கொஞ்சம் புகையிலை கிடைக்குமா?” என்றான்.

கடைக்காரன், “நீங்க….” என்றான்.

”பிராமணன்.”

“ப்ரணாம்.”

“ஆசிர்வாதம்.”

கடைக்காரன் ஒரு வாழையிலையில் சுருட்டு போலச் செய்து, புகையிலையை நிரப்பி கங்காசரணிடம் கொடுத்தான்.

”உங்க ஊர் எது?”

“நதுன்காவ்ம். போல்தா மணல்திட்டுக்கிட்ட.”

”எங்க இவ்வளவு தூரம்?”

“பக்கத்து கிராமத்துல நிபாரண் கோஷ் வீட்டுக்கு வந்திருந்தேன்.”

“அந்த மூட்டைல என்ன அரிசியா?”

“ஆமா.”

“நல்லா மறைச்சு வைங்க. இங்கே அரிசியப் பார்க்கறதே ரொம்ப அபூர்வமாய்டுச்சு. ஜனங்க தொந்தரவு செய்வாங்க.”

கங்காசரண் உட்கார்ந்து புகைத்துக்கொண்டிருந்தபோது துலே-பாக்டி ஜாதியைச் சேர்ந்த மூன்று பெண்கள் வந்து உளுத்தம்பருப்பை வாங்கி சேலையில் முடிந்துகொண்டு சென்றார்கள். ஒருத்தி தரம் குறைவான தேயிலைகளும், கல் பாத்திரத்தில் சிறிது வெல்லமும் வாங்கிச் சென்றாள். கடைக்காரன் கங்காசரணிடம், “கொஞ்ச நேரம் ஓய்வெடுங்க தாகுர் மஷாய்.” என்றான்.

”இல்லை நண்பா. நான் ரொம்ப தூரம் போகனும். நான் கிளம்பறேன்.”

”கொஞ்சம் டீ குடிச்சே ஆகனும். என்கிட்ட குடுக்கறதுக்கு வேற ஒண்ணுமேயில்லை.”

”டீயா? இந்த நேரத்துலயா?”

”ஆமா, கொஞ்சம்தான்.”

மேலும் ஐந்தாறு பேர் கடைக்கு வந்தார்கள். யாருமே பருப்பைத் தவிர வேறெதையும் வாங்கவில்லை.

ஒரு கண்ணாடிக் குவளையில் டீ வந்தது. கங்காசரண் அந்தக் கடைக்குள் ஏராளமான வெண்கலப் பாத்திரங்கள் அலமாரிகளிலும், தரையிலும் நிறைந்திருப்பதைப் பார்த்தான். பெரும்பாலும், தட்டுகளும், பெரிய கிண்ணங்களும். மளிகைக்கடையில் எதற்கு இந்த பாத்திரங்கள் என்று கங்காசரணுக்குப் புரியவில்லை. அவன் என்ன வெண்கலப் பாத்திரங்களையும் விற்கிறானா? இவையெல்லாம் விலைக்கா?

கடைக்காரன் ஹூக்காவை மீண்டும் நிறைத்தபின், கங்காசரணின் மனநிலையை ஊகித்து, “நீங்க பார்க்கிற இந்த பாத்திரங்கள்லாம் ஜனங்க அடகு வைச்சது. இந்தப் பக்கம் பெரும்பாலும் துலே பாக்டி, மாலோ ஜாதி ஜனங்க. அவங்ககிட்ட காசு கிடையாது. அதனால பாத்திரங்களை அடகு வச்சு பருப்பு வாங்கிட்டுப் போறாங்க.”

“எல்லாருமே உளுத்தம்பருப்புதான் வாங்கறாங்களா?”

“வேற ஒண்ணுமே இல்லையே தாகுர் மஷாய்.”

”அரிசி இல்லையா?”

“இல்லை, தாகுர் மஷாய்.”

“காசு தர்றேன். உண்மையைச் சொல்.”

“இல்லை தாகுர் மஷாய். உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கறேன். அரிசி மட்டும் கேக்காதீங்க.”

“வீட்ல என்ன சாப்பிடறே?”

”உங்கிட்ட பொய் சொல்லமாட்டேன். அரிசி கால் பங்கு. உளுத்தம் பருப்பு முக்கால் பங்கு. கொஞ்சம் கீரையும் பயிர் செஞ்சிருந்தோம். ஆனால் பட்டப்பகல்ல ஜனங்க வந்து பறிச்சிட்டாங்க. பட்டப்பகல்ல பொம்பளைங்க, சின்னப் பசங்க எல்லாரும் வந்து கைநிறையப் பறிச்சிட்டாங்க. எல்லாம் காலி. இந்தக் கடைக்கு மேல கூரையில பூசணிக்காய் விளைஞ்சிட்டிருந்தது. அதுவும் போச்சு. இனிமே எதையும் இங்கே விளைவிக்க முடியாது.”

கங்காசரண் கிளம்புவதற்காக எழுந்து நின்றான்.

”தாகுர் மஷாய், உங்களுக்கு உளுத்தம்பருப்பு வேணுமா?”

”சரி குடு.”

”ஒரு சேர் எடுத்துக்கோங்க. காசு தரவேண்டாம். அப்புறம் இன்னொரு விஷயம் – இந்தக் கொய்யாப்பழங்கள எடுத்துக்கோங்க. இது என் வீட்டுக் கொல்லையில விளைஞ்சது. நல்ல உயர்ந்த ரகம். ஆனால் அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாத்தையும் பறிச்சிக்கிட்டாங்க. ஒரு டஜன் கொய்யாப்பழங்கள மட்டும் காப்பாத்த முடிஞ்சுது.”

வீட்டுக்கு வந்து சேர்ந்த கங்காசரண், அனங்கா அமைதியாகப் படுத்திருந்ததைப் பார்த்தான். அந்த நேரத்தில் அவள் படுத்ததேயில்லை.

கங்காசரண், “ஏன் படுத்திருக்க? உடம்புக்கு முடியலையா?” என்று கேட்டான்.

அனங்கா, “யாரையாவது கூப்பிடுங்க” என்று முனகினாள்.

”யாரை?”

“காபாலியோட மூத்த மனைவியைக் கூப்பிடுங்க. சீக்கிரம். எனக்கு ரொம்ப முடியல.”

கங்காசரண் ஹபுவை அழைத்து, “காபாலி வீட்டுக்கு ஓடு. அந்த வீட்டம்மாவை உடனே வரச்சொல்லு. அம்மாவுக்கு ரொம்பவே முடியல.”

அனங்கா வலியில் அலறினாள். கொஞ்ச நேரம் எழுந்து உட்கார்ந்தாள். கொஞ்ச நேரம் படுக்கையில் சுருண்டு படுத்தாள். கசாப்புக்கடைக்குச் செல்லும் விலங்கு கதறுவதைப் போலக் கதறினாள். கங்காசரண் என்ன செய்வதென்று தெரியாமல் வாசலில் உட்கார்ந்து ஹூக்கா பிடித்துக்கொண்டிருந்தான். அது மாலை நேரம். வானில் பிறைநிலா உதித்துவிட்டது. மாந்தோப்பில் சிள்வண்டுகள் ரீங்கரிக்கத் தொடங்கிவிட்டன. கங்காசரண் கிட்டத்தட்ட அழுதுகொண்டிருந்தான். அதற்குள் அக்கம்பக்கத்துப் பெண்களும் கூடிவிட்டார்கள்.

கங்காசரண் ஒரு மூதாட்டியை அழைத்து, “பாட்டி, அவள் ஏன் இப்படி இருக்கா?” என்று கேட்டான்.

சரியாக அதே நேரத்தில் அங்கே குழப்பம் கூச்சல் ஏற்பட்டது. தொடர்ந்து ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. சில பெண்கள் சங்கொலி எழுப்பினர்.

சதீஷ் காபாலியின் மகள் பிந்தி வெளியே ஓடி வந்து, “ஓ பாபா தாகுர்! உங்களுக்கு ஒரு குட்டிப்பையன் பிறந்திருக்கான். எங்களுக்கெல்லாம் சந்தேஷும், காசும் கொடுக்கனும்.” என்றாள்.

இப்போது, கங்காசரண் கண்களிலிருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது.

அடுத்த சில நாட்கள் அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். பாலூட்டும் தாய்க்கு உணவு கிடைப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. வீட்டில் கோதுமை மாவோ, சர்க்கரையோ எதுவுமேயில்லை. குழந்தை எந்நேரமும் அழுதுகொண்டேயிருந்தது. தாயோ அசையக்கூட முடியாமல் பலகீனமாகக் கிடந்தாள். கங்காசரண் காபாலியின் மூத்த மனைவியிடம், “அவனுக்கு ரொம்ப பசியா இருக்கு தீதி, கொஞ்சம் தேன் கொடுங்க.” என்றான்.

”ரெண்டு தடவை தேனை வாந்தி எடுத்துட்டான். அவனுக்கு ஒத்துக்கல.”

”அப்போ வேற என்ன கொடுக்கறது? கொஞ்சம் பாலைக் காய்ச்சட்டுமா?”

”ரொம்பச் சின்னக் குழந்தை. பசும்பால் செரிக்காது. அவளோ சமைக்கறத்துக்கு முடியாம பலகீனமா இருக்கா. நீங்க இப்படி சும்மா உட்கார்ந்திருந்தா வேலைக்காகாது. எங்கேயாவது போய் அவள் சாப்பிடறதுக்கு எதாவது கொண்டு வாங்க.”

கிராமத்தில் எதுவும் கிடைக்கவில்லை. சந்தைகளிலும் அதே நிலைதான். ஜில்லா ஸப்ளை ஆபிஸரிடம் போனால்தான் கோதுமை மாவு, சர்க்கரை, ரவை போன்ற உணவுப் பொருட்கள் கிடைக்கும். கங்காசரண் நண்பர்களிடம் கலந்தாலோசித்தபின் அதைச் செய்ய முடிவெடுத்தான்.

அது பதினைந்து மைல் தூரத்தில் இருந்தது.

அதிகாலையிலேயே கிளம்பி பதினொரு மணியளவில் சென்று சேர்ந்தான். கூடவே கேதார் காபாலியும் வந்திருந்தார். இங்கே கடைகளில் பொருட்கள் இருந்தன. ஆனால் வாங்குவதற்கு கங்காசரணிடம் அதிகம் பணமில்லை. காலைச் சாப்பாட்டுக்கென்று இரண்டணாதான் எடுத்து வைத்திருந்தான். ஆனால் எல்லாமே அதீத விலையாக இருந்தன. அவல் சேருக்கு அஞ்சணா, பொரியும் அதே விலை. இரண்டணாவுக்கு ஒரு சிறு கிண்ண அளவுதான் அவல் கிடைக்கும்.

கேத்ர காபாலி, ”ஓ! தாதா தாகுர்! இது ரொம்பக் கொடுமையா இருக்கே? நாம என்னதான் சாப்பிடறது?” என்று கேட்டார்.

கங்காசரணும், கேத்ர காபாலியும் ஸப்ளை ஆபிஸுக்குப் போனார்கள். அங்கே ஏற்கனவே ஏராளமான பேர் இருப்பதைப் பார்த்தார்கள். ஒரு சிறிய ஜன்னல் வழியே பர்மிட்டுகள் கொடுக்கப்பட்டன. ஆனால் அங்கே கூடியிருந்த கூட்டத்தைத் துளைத்துக்கொண்டு அந்த ஜன்னலைச் சென்று சேர்வது மிகவும் கடினம். பலதரப்பட்ட, பல ஜாதியைச் சேர்ந்த மக்கள் அங்கே கூடியிருந்தனர். மிகவும் பலசாலியான ஒருவனால்தான் அந்தக் கூட்டத்துக்குள் நுழைய முடியும். ஆபிஸுக்குள்ளிருந்து யாரோ அவர்களை விரட்டினார்கள். கொஞ்ச நேரம் கூட்டம் கலைந்தது. பிறகு மீண்டும் சேர்ந்தது. அவர்களெல்லாம் நீண்ட நேரமாக அங்கே காத்திருப்பவர்கள் போலத் தோன்றியது.

கங்காசரண் விரக்தியாகச் சில நிமிடங்கள் நின்றிருந்தான். கூட்டம் குறைகிறபடியாய்த் தெரியவில்லை. சொல்லப்போனால் நிமிடத்துக்கு நிமிடம் கூடிக்கொண்டே இருந்தது. கடும் உஷ்ணமாக இருந்தது. மேகங்கள் சூழ்ந்து புழுக்கம் வேறு அதிகமானது. ஒரு மணி நேரம் கழித்து திடீரென்று ஜன்னல் கதவு மூடப்பட்டது. ஆபிஸர் மதிய உணவுக்குச் சென்றுவிட்டதாகச் சொன்னார்கள். அவர் திரும்பி வருவார் என்பது நிச்சயமில்லை. கூட்டம் குறைந்தது. கொஞ்சம் பேர் வேப்பமரத்துக்குக் கீழமர்ந்து பீடி குடித்துக்கொண்டிருந்தனர்.

கேத்ர காபாலி, “என்ன செய்யலாம்?” என்று கேட்டார்.

”நாமளும் உட்காரலாம். வாங்க.”

”நாம ஏன் சந்தையில போய்க் கேட்கக் கூடாது? இந்தக் கூட்டத்துக்குள்ள நுழையறது சாத்தியமேயில்லைன்னு தோணுது.”

ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினார்கள். யாரிடமும் விற்பனைக்கு எதுவுமில்லை. பதிராம் குண்டு, “நான் ரகசியமா ரவை தரேன். சேருக்கு ஒன்றரை ரூபா. இருட்டினப்புறம் வாங்க.” என்றார்.

கேத்ர காபாலி, ”கோதுமை மாவு ஏதாவது இருக்கா?” என்று கேட்டார்.

“இருக்கு. சேருக்கு பன்னிரண்டு அணா.”

”சர்க்கரை இனிப்பு?”

”சேருக்கு ஒன்றரை ரூபா. இருட்டினப்புறம் கிடைக்கும்.”

கங்காசரண் தன்னிடமிருக்கும் காசுக்கு மிகக் குறைந்த பொருட்களே கிடைக்கும் என்று கணக்குப் போட்டான். ஒருவேளை பர்மிட் இருந்தால் கொஞ்சம் சகாய விலையில் கிடைக்கலாம்.

அவர்கள் மீண்டும் சப்ளை ஆபிஸுக்கு வந்தார்கள். இப்போது கூட்டம் அதிகரித்திருந்தது. ஆனால் ஜன்னல் இன்னும் மூடியே இருந்தது.

ஒரு பிராமணக் கிழவர் உட்கார்ந்திருந்தார். கங்காசரண் அவரிடம், “எங்கேருந்து வர்றீங்க?” என்று கேட்டான்.

“மாலிபோதா.”

”அது ரொம்ப தூரமாச்சே? எப்படி வந்தீங்க?”

”நடந்துதான் வந்தேன். வேற கதி? நாங்கள்லாம் ஏழைங்க. மாட்டு வண்டி, படகுக்கெல்லாம் வசதியில்ல.”

”என்ன வாங்கனும்னு வந்தீங்க?”

“சாப்பிட ஒண்ணுமே இல்ல. என் விதவை அத்தை ஏகாதசிக்கு விரதம் இருக்கா. அவளுக்கு ரெண்டு ரொட்டி வேணும். அதுக்காகத்தான் கோதுமை மாவு வாங்க வந்தேன்.”

”உங்க கிராமத்துல அரிசி கிடைக்குதா?”

”கிடைக்குது. ஆனால் ஒரு காதா ரெண்டு ரூபா. அதுவும் அலைஞ்சு திரிஞ்சு வாங்கனும். சில நாள் கிடைக்கறதேயில்லை.”

ஜன்னல் திறக்கும் சத்தம் கேட்டது. மீண்டும் கூட்டம் அலைமோதியது. கங்காசரண் கிழவர் கையைப் பிடித்து இழுத்தான். “வேகமா வாங்க. இல்லாட்டி ஜன்னல் பக்கம் இடம் கிடைக்காது.”

இருந்தாலும் அவர்களால் ஜன்னலை எளிதாக நெருங்க முடியவில்லை. உணவு கிடைத்தே ஆகவேண்டுமென்று அலைமோதிய அத்தனை பேரோடு போராடுவது கஷ்டமாக இருந்தது. பெரும்பாலானோர் கோதுமை மாவுக்காக வந்திருந்தார்கள்.

ஒருவனுக்கு மதியம் அரிசி கிடைக்கவில்லை, கோதுமை மாவுதான் ஒரே வழி என்றான். இவர்கள் இப்படி அலைமோதுவதில் ஆச்சரியமில்லை.

ஒருமணி நேரம் கழித்து கங்காசரணுக்கு ஜன்னல் முன்னால் இடம் கிடைத்தது.

ஸப்ளை ஆபீஸர் அக்கறையில்லாமல், “என்ன?” என்றார்.

ஒரு கெளரவமான பிராமணன் என்பதால் தனிப்பட்ட கவனிப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த கங்காசரண் ஏமாற்றமடைந்தான். ஆபிஸர் அவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. அவர் கண்கள் காகிதங்கள் மேலேயே இருந்தன. கையில் பேனா தயாராக இருந்தது.

கங்காசரண் பதற்றமடைந்து, நடுங்கும் குரலில், “ஹுஸுர், மனைவிக்கு இப்போதான் பிரசவமாச்சு. ரொம்ப பலகீனமா இருக்கா. கொஞ்சம் கோதுமை மாவு – “

ஆபிஸர் அவசரப்படுத்தினார். “என்ன வேணுமோ அதை மட்டும் சொல்லு.”

”கோதுமை மாவு, சர்க்கரை, ரவை, கொஞ்சம் மிட்டாய்.”

“அதெல்லாம் இல்லை.”

”ஹுஸுர், தயவுசெஞ்சு கருணை காட்டணும், நாங்க செத்துப் போய்டுவோம்.”

”முடியாது. அரை சேர் கோதுமை, ஒரு பாவு ரவை, ஒரு பாவு மிட்டாய்.” என்று சொல்லிவிட்டு காகிதத்தில் கிறுக்கி கங்காசரணிடம் கொடுத்து, “அவ்வளவுதான், போ!” என்று கட்டளையிட்டார்.

”ஹுஸுர், நாங்க ரொம்ப தூரத்திலிருந்து வந்திருக்கோம். பத்து, பன்னிரண்டு மைல் நடந்து வந்திருக்கோம். இது ரொம்ப நாள் வராது. தயவுசெஞ்சு ஜாஸ்தி பண்ணுங்க – “

”நான் என்ன செய்யறது? முடியாது. போ – “

கங்காசரண் மீண்டும் கெஞ்சினான், “நான் ஒரு ஏழை பிராமணன். தயவுசெஞ்சு கருணை காட்டுங்க – “

ஆபிஸர் படு எரிச்சலாக காகிதத்தைப் பிடுங்கி, “இந்தா போ! ஒரு சேர் கோதுமை. ஒழிஞ்சு போ! இருக்கற பிரச்சினையெல்லாம் போதாதுன்னு – “

கங்காசரணைக் கூட்டம் ஒதுக்கித் தள்ளியது. சிலர் பின்னாலிருந்து கத்தினார்கள். “எதுக்கு இவ்வளவு நேரம்?”

ஒரு காவலன் அவனை நோக்கிக் கத்தினான். “நகரு!”

சந்தையில், ரவையும், கோதுமையும் மோசமான தரத்தில் இருந்தது. அதற்காக ஒரேயடியாக சாப்பிடவே முடியாது என்றும் சொல்லிவிட முடியாது.

சாப்பிட நினைத்து ஒரு மிட்டாய்க்கடைக்குச் சென்றார்கள். கேத்ர காபாலி சூடான சமோஸா சாப்பிட நினைத்தார். அவர்கள் நகரத்துக்கு வருவதே அரிது. ஆனால் ஒரு நடுத்தர அளவு சமோஸா இரண்டு பைஸா! எல்லாமே எக்கச்சக்க விலை. சந்தேஷ் எப்போதும் ஒரு சேர் பத்தோ பன்னிரண்டோ அணாதான் இருக்கும். இப்போது மூன்று ரூபாய். ரஸகுல்லாவும் இரண்டு ரூபாய்.

கேத்ர காபாலி பெருமூச்சுவிட்டார். “வேண்டாம் தாகுர் மஷாய்! நாம எதுவுமே வாங்க முடியாது – “

”அப்படித்தான் தெரியுது.”

”நான் என்ன சாப்பிடறது? ஒரு ரூபாய்க்குக் குறைஞ்சு ஒண்ணும் வாங்க முடியாது. நீங்க?”

”வேண்டாம். எனக்குப் பசிக்கல.”

”அப்படிச் சொல்லாதீங்க. என்கிட்ட இருக்கற காசுக்கு என்ன வருமோ அதுல ஆளுக்குப் பாதி சாப்பிடலாம், வாங்க.”

கங்காசரண், “சும்மா எதையாவது வெட்டிப்பேச்சு பேசிக்கிட்டு இருக்காதீங்க. போய் சாப்பிட்டுட்டு வாங்க” என்று திட்டினான்.

ஆனாலும் தட்டில் அடுக்கப்பட்டிருந்த ஒரு ஜோடி பெரிய சந்தேஷ்களைப் பார்த்ததும் அவனுக்கும் சபலம் ஏற்பட்டது. அவனுக்காக இல்லை, அவன் மனைவிக்காக. அனங்கா இது போன்ற பண்டங்களைச் சாப்பிட்டு நீண்ட காலமாயிற்று. ஒரேயொரு ஒரு ஜோடி வாங்க முடிந்தால் நன்றாக இருக்கும்.

“ஒரு ஜோடி சந்தேஷ் என்ன விலை?”

“நாலணா.”

“ஒரு ஜோடிக்கு நாலணாவா?”

“தமாஷ் பண்றீங்களா, தாகுர்? ஒண்ணு நாலணா.”

ஒரு காலத்தில் இது ஜோடி இரண்டணா இருந்தது என்று கங்காசரண் வியந்தான். இதை வாங்க முடியுமா? வாய்ப்பேயில்லை. அவனிடம் அவ்வளவு பணமில்லை. ஆனால் அவற்றைப் பார்த்துக்கொண்டேயிருந்தான். மிக அழகாகச் செய்யப்பட்டிருந்தன. மிட்டாய்க்காரன் பெரிய கலைஞனாகத்தான் இருக்க வேண்டும்.

பையிலிருந்து அவற்றை வெளியே எடுத்து, அனங்கா கைகளில் கொடுக்க முடிந்தால்…

”இங்கே பாரு, உனக்காக என்ன வாங்கிட்டு வந்திருக்கேன்.”

“என்னது?”

”ஒரு ஜோடி சந்தேஷ். பாரு – “

அவன் மனைவிக்கு அவன் ஒரு போதும் நல்ல ருசியான பண்டம் வாங்கிக்கொடுத்ததில்லை. எப்படி முடியும்! அவனிடம் ஒருபோதும் போதுமான அளவு பணமிருந்ததில்லை. எல்லாவற்றுக்கும் மேல் இந்தக் கொடூரமான பஞ்சம் வேறு.

கேத்ர காபாலியிடமும் அவனுக்குத் தருமளவுக்குப் பணமிருக்கவில்லை. அவருக்கு நன்றாகச் சாப்பிடுவதில் பெரு விருப்பம். கையில் இருந்ததையெல்லாம் ஜிலேபி, சமோஸாவில் செலவிட்டுவிட்டார்.


சூரியன் அஸ்தமித்துக்கொண்டிருந்தது. நதிக்கரையையொட்டி அவர்கள் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். கேத்ர காபாலி பீடி புகைத்துக்கொண்டே, ஓயாமல் பேசிக்கொண்டு வந்தார். கங்காசரண் கொஞ்சம் இனிப்புப்பொரியை வாங்கித் துண்டில் முடிந்து வைத்திருந்தான். அது ரொம்பவே கொஞ்சம்தான். ஆனால் வீட்டுக்குப் போனதும் மகன்கள், “அப்பா, நகரத்துலேருந்து என்ன வாங்கிட்டு வந்தீங்க?” என்று கேட்பார்கள். அவர்களுக்குப் பஞ்சம் குறித்தெல்லாம் புரிந்து கொள்ளும் வயதில்லை. ஒருவேளை அவர்கள் நாள் முழுவதும் பட்டினி கிடந்திருக்கக்கூடும். இந்தக் கொஞ்சம் பொரியையாவது அவர்கள் சாப்பிடலாம். அவனுக்கும் கொஞ்சம் சாப்பிட்டால் பரவாயில்லை என்று தோன்றியது. எங்காவது சுத்தமான இடத்தில் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு, நதியிலிருந்து கொஞ்சம் நீர் குடித்தால் நன்றாக இருக்கும். நாள் முழுவதும் எதுவும் சாப்பிடவில்லை. பசி மட்டுமில்லை தாகமும் தவிக்கிறது.

நதிக்கரையில் ஓரிடத்தில் அமர்ந்து கங்காசரண் கொஞ்சம் பொரி சாப்பிட்டான். நீருக்காக நதியில் இறங்கியபோது நீர்க்கொடிகளுக்குப் பின்னால் நீர்க்கீரைகள் (கொல்மி ஷாக் – ipomoea aquatica) நிறைய விளைந்திருப்பதைப் பார்த்தான். இப்போது அவன் கிராமத்தில் அது மிக அரிதாகிவிட்டது. கேத்ர காபாலியிடம், ”நதியில இறங்கி அந்தக் கீரைகளைப் பறிச்சிட்டு வர முடியுமா?” என்று கேட்டான்.

அவர் வேட்டியை மடித்துக் கட்டி, கழுத்தளவு நீரில் இறங்கி, ஒரு கொத்து கீரையைப் பறித்து வந்தார். அதை இருவரும் ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக்கொண்டார்கள்.

அவன் வீட்டுக்குத் திரும்பி வந்ததும், அனங்கா பலவீனமான குரலில், “வந்துட்டீங்களா? இங்க வாங்க – “ என்றாள்.

”இன்னிக்கு எப்படி இருக்கு?”

“கொஞ்ச நேரம் பக்கத்துல உட்காருங்களேன். இன்னிக்கு நாள் பூராவும் உங்களைக் காணோமே? எங்கே போயிருந்தீங்க? உங்களைப் பார்த்து ரொம்ப நாள் ஆன மாதிரித் தோணுது.”

”நகரத்துக்குப் போயிருந்தேன். போறத்துக்கு முன்னாடி உன்கிட்டே சொல்லிட்டுத்தானே போனேன்? தேவையான எல்லாத்தையும் வாங்கிட்டு வந்துருக்கேன்.”

அனங்கா அதையெல்லாம் காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை. “இங்கே உட்காருங்க. நாளெல்லாம் இங்கேயும் அங்கேயும் அலைஞ்சிட்டு வந்திருக்கீங்க. இப்போல்லாம் உங்களைப் பார்க்கவே முடியல.”

கங்காசரணுக்கு அவளை அப்படிப் பார்க்க வருத்தமாக இருந்தது. அவள் மிகுந்த பலவீனமாகவும், இளைத்தும் போயிருந்தாள். அவள் இப்படிப் பேசுகிற வழக்கமில்லை. இது ஒரு நோயாளி பேசும் பேச்சு. அவள் முழுச்சாப்பாடு சாப்பிட்டு மாதங்களாகின்றன. அவளுக்குப் பொதுவாக எதைக் குறித்தும் புகாரில்லை. எத்தனையோ முறை தன்னுடைய சாப்பாட்டை அடுத்தவர்களுக்குக் கொடுத்துவிட்டிருக்கிறாள். இப்போது அவள் உடம்பு அவளைப் பழிவாங்குகிறது.

கங்காசரண் மிகுந்த பிரியத்தோடு, “நீ மொதல்ல குணமாகு. நகரத்துலேருந்து உனக்கு ஒரு ஜோடி சந்தேஷ் வாங்கித் தரேன். ஹரி மிட்டாய்வாலா செய்யற சந்தேஷ் பிரமாதமா இருக்கும், பாரேன்.” என்றான்.


னங்கா பிரசவ அறையிலிருந்து வெளியே வந்துவிட்டாலும், சரியான ஊட்டச்சத்து இல்லாததால், அவளால் பழையபடி ஆரோக்கியமாகவும், பலமாகவும் இருக்க முடியவில்லை. கங்காசரண் அவள் உணவுக்காக எவ்வளாவோ போராடினாலும், பெரும்பாலமான முறை அதில் தோல்விதான் கிடைத்தது. கங்கானந்தப்பூர் ஷஷி கோஷிடமிருந்து கொஞ்சம் நெய் கிடைத்தது. முதலில் அவர் ஒரு சேர் எட்டு ரூபாய்க்குக் குறைவாக விற்பதற்குச் சம்மதிக்கவில்லை. அப்புறம் எவ்வளவோ கெஞ்சியும், பிராமணன் என்ற அழுத்தத்தையும் கொடுத்து அவரிடமிருந்து நெய் வாங்கிவிட்டான்.

ஆனால் அந்த கிராமம் வெகு தூரத்திலிருந்தது. அவனுடைய கிராமத்தில் பாலோ, மீனோ கிடைக்கவில்லை.

அனங்கா, “சொன்னா கேளுங்க. இப்படி நாள் பூராவும் அலையாதீங்க. உங்க உடம்பும் கெட்டுப்போகுது. கண்ணாடில உங்க முகத்தைப் பாருங்க.” என்றாள்.

“அதெல்லாம் பார்த்துட்டேன். நீ கவலைப்படாதே.”

”அரிசி கிடைச்சுதா?”

“நேத்திக்குக் கொஞ்சம் கிடைச்சுது.”

”நீங்க எல்லாம் ஒழுங்கா சாப்பிட்டீங்களா?”

“ஓ!”

(மேலும்)

Series Navigation<< மின்னல் சங்கேதம் – 9மின்னல் சங்கேதம் – 11 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.