
1
பறந்து வந்த பறவை
அமர்ந்த கிளைக்கு
கணத்தில் உயிர் வந்து போனது
இலைகளுக்கும் முட்களுக்கும்
நடுவில் பூத்த ரோஜா
அதனை சமன் செய்தது
எத்தனை வித்தியாசம்
எத்தனை மாற்றங்கள்
காலம் தப்பிய காட்சிகள்
மரத்தின் பருமனைத் தொடுகையில்
அத்தனை கனமில்லை என்றாலும்
அவ்வளவும் வாஞ்சை
மலர் பூத்த கீரைகளின் நடுவே
மானிடர் கண்கண்ட மனதில்
மௌனமாக விழுந்தது
ஒரு மலர்
கிடைத்த நிழலில்
நான் உணர்ந்த
இலைகளின் அடர்த்தியில்
பேசிய காற்று
சத்தம் போக மிச்சத்தால்
என் மேனியை வருடியது
2
நிலை குலையச் செய்தது
நீயும் அல்லாத
நானும் அல்லாத
ஒரு நான்
நான் கண்ட கனவில்
கண்ணுக்கு எட்டிய
தூரம் வரை கிட்டியது
பாலைவனத்தில் ஒரு பயணம்
சூரியனால் எரிந்த நகரத்தின்
பொழுதுகள் கழிந்த பின்
இரவில் கனிந்த
மெல்லிய ஈரமான
விரகத்தின் உச்சம்
வீணாய்ப் போன போது
போர்வையாய் போர்த்திய
வானத்தின் உயரத்தில்
நட்சத்திரங்கள் ஊசலாடியது
மௌனமாய் வெடிக்கும்
புத்தம் புது காலையைத்
தயார் செய்யும்
இயந்திரத்தை ஓசையின்றி
ஓட்டிக்கொண்டிருந்தது
இன்னொரு உலகம்
வாழ் நாள் என்பது
கற்பனைக்கும் எட்டாதபோது
வாழ்ந்து தான் பார்க்கவேண்டும்
வேறு என்ன செய்ய
3
என் நினைவுகள்
நான் அந்த பையனாக
இருந்த போதிலிருந்து
இன்றுவரை இருக்கிறது
எத்தனை விடலை பருவ
ரகசியங்கள் யாருக்கும்
தெரியாமல் போய்விட்டது
அது ஒரு வெய்யில் காலம்
வீட்டிற்குள் அறை முழுக்க
இருள்தான் இருக்கும்
அவளோடு நான்
அந்த அறையிலிருந்தேன்
சுவர் ஓரம் இருந்த
செடிகளில் மலர்களின்
மலர்ந்த ஓசை கேட்டது
அவளுடன் உரசிக்கொண்ட
ஓசை இன்றும் ரம்மியமாக
காதில் கேட்கிறது அந்த
பொக்கிஷத்தைப் பேணிய
இரு உள்ளங்கள்
அன்று போலவே இன்றுமிருந்தது
4
அந்த அறையில்
படுத்திருந்தவனிடம்
மற்றவர்களுக்குத் தெரியாமல்
ஒரு கனவு வந்தது
உண்மையாகவே இவ்வளவு
உயிருள்ள நியாயமான
வாழ்க்கை தருணத்தை
இதற்குமுன் இவ்வாறு
அவன் எப்போதும் உணர்ந்ததில்லை
அது அவன் தசைகளை
நடுங்கச் செய்தது
அது வெறும்
உன்மை போல் அல்லாமல்
வேறு எதோ ஒன்று
உன்மையை விட
வலுவானதாய் இருந்தது
விழித்தபோது அவன் வாய் கசந்தது
விழிப்பின் பூட்டை திறக்கும் சாவி
கிடைக்காத போது
யாரும் சிறை கைதி தான்
தனிமையில் அந்தரங்கத்தில்
வறண்டப் புரிதலின் ஆழத்தில்
அவன் நீந்திக்கொண்டிருந்தான்
அவனை நகர்த்திய உணர்ச்சிகள்
அவனைச் சோகத்தில் ஆழ்த்தியது
மீண்டும் அவன்
எழுந்து நடக்கும் போது
அவனுக்கு வயது கூடியிருந்தது
5
உன்னிடம் ஒன்றும் இல்லை
என்றபோது
நீ எது நினைத்தாலும்
அது உன்னிடம் இருக்க
தொடங்கி விடுகிறது
நீ நான் என
உரசிக் கொள்கிற
ஒரு ஆள் ஆனபோது
உனக்குச் சொந்தமானதை
உனக்கு நினைவு தெரிந்த
நாளிலிருந்து நீ சேகரித்து
வைத்து இருப்பதை ஓரிடத்தில்
அடைத்து வைத்திருக்கிறாய்
வாழ்நாள் முழுவதும்
அதை நீ உன் மனதின்
வைரத்தில் உள்ள
பட்டைகளில் ஒளிறச்செய்கிறாய்
சொல்வதற்கு வார்த்தைகளற்று
மிகப் பிரம்மாண்டமாய்
விரிந்து கிடக்கும்
இந்த இயற்கையின் முன்
நீ தனியனாய் நிற்கிறாய்