‘தான்’ அமுதம் இறவாதது

வெயில், பனி, மழையென இயற்கையில் உறையும் காலம் தன் இறும்பூதலுக்குத் தேடும் உயிர், கவிஞன். அவனுக்குப் பிறப்புண்டு இறப்பில்லை ; தரிப்பதுண்டு மரிப்பதில்லை. உலகில் ஒவ்வொரு மொழியும் தமது உன்னதத்தை அறிய, மேன்மைபடுத்த, மெருகூட்ட தவமிருந்து பெற்ற, பெறும் பிள்ளை. உலகறிந்த கவிஞர்கள் சிலரை நினைவுகூர்ந்து பார்க்கிறேன் ஷேக்ஸ்பியர், பொதுலேர், தாகூர் என்கிற வரிசையில் பாரதியின் கவிதை நிலம் பரந்தது, வளம்கொழித்த வண்டல்மண் பூமி, நஞ்செய் புஞ்செய் இரு வகைச் சாகுபடியையும் செய்து உயர்ந்த கவிதை மகசூலையும் தமிழுக்குப் படியளந்த நிலம். மகாகவி என்றொரு அடைமொழியை அவனாக வரித்துக்கொண்டவனில்லை. அவன் கவிதையில் தோய்ந்தவர்கள் சூட்டியபெயர். பாரதி என்ற சொல்லே போதும், சட்டென்று முண்டாசுடன் நம் முன்னால் நிற்பான், அப்படியொரு ஆகிருதி, தேஜஸ். அவனுக்கெதற்கு அடைமொழிகள். கூழாங்கற்கள் மார்தட்டிக்கொள்ளட்டும். அவன் மலை, இமையமலை, சிகரங்களின் கொள்ளிடம். இயற்கை, சமயம், தேசியம், சமூகம், பெண், மனிதர்கள், பறவைகள், விலங்குகள், என எதையும் பாடியிருக்கிறான, எதுவாகவும் வாழ்ந்திருக்கிறான். இலக்கணத்திற்கு உள்ளே வெளியே இரண்டிலும் தேர்ந்தவன்.

உங்களில் பலரைப் போலவே தமிழில் திரும்பத் திரும்ப வாசிக்க நேர்வது பாரதி கவிதைகள் . அப்படி வாசிக்கிற்போது அவருடைய வசன கவிதைகளில் ‘இன்பம்’ என்ற தலைப்பின் கீழ் இடம்பெற்ற இரண்டு கவிதைகள் கூடுதலதாக எனக்குச் சில செய்திகளை, சித்தாந்த உரையிலிட்டுக் கையளிக்கப்பட்டதுபோன்ற உணர்வு :

    ‘தான்’ வாழ்க 

எல்லா உயிரும் இன்ப மெய்துக.
எல்லா உடலும் நோய் தீர்க.
எல்லா உணர்வும் ஒன்றாதலுணர்க.
‘தான்’ வாழ்க.
அமுதம் எப்போதும் இன்பமாகுக.

விந்து ‘தான்’ ஆக தாயொருத்தியின் வயிற்றில் கருவாகிறது. சிசுவாக பிறக்கிறது. தொடக்கத்தில் தாயைக் கொண்டு ‘தான்’-ஐ அல்லது குழந்தையை அடையாளப்படுத்துகிறோம். பிறகு நமது சமூக நெறி, குழந்தையை அடையாளப்படுத்த தாய்மட்டும்போதாது எனக் கூற, பெற்ற குழந்தைக்கு உரிய தந்தையைக் காட்டி, ‘தான்’ அடையாளத்திற்கு வலு சேர்க்கிறாள் தாய். ஆக பெற்றோர்களைக் கொண்டு குழந்தைக்கு அல்லது இந்த ‘தான்’ -உக்கு முதல் அடையாளம் கிடைக்கிறது. தந்தை தாய் இருவரும் பிறகு ஆவணங்களைக்கொண்டும் குழந்தைக்கும் தங்களுக்குமுள்ள உறவை உறுதிசெய்கிறார்கள். தவழ்ந்த குழந்தை நடக்கத் தொடங்குகிறது, இனி கல்வி, வேலை, பிற காரியங்கள் என பலவற்றிர்க்கு வீட்டைவிட்டு வெளியில் வரவேண்டும். குழந்தை போகும் இடமெல்லாம் பெற்றோர்கள் உடன் சென்று இன்ன நிறம், சுருட்டை முடி, கன்னத்தில் மட்சம் என ஒவ்வொன்றையும் பட்டியலிட்டுகொண்டிருக்க முடியாதில்லையா, எனவே தங்களுடைய குழந்தைக்கு ஒரு பெயரை (‘தான்’ – புறத்தோற்றத்திற்கு ) வைக்கிறார்கள். உதாரணத்திற்கு பாரதி என வைத்துக்கொள்வோம். பாரதி என்ற பெயரைக்கேட்டதும், பாரதியின் உறவினர்களுக்கு பாரதியின் பெற்றோர் பெயர்கள் மட்டுமல்ல, பாரதியின் தாத்தா பாட்டி பெயர்களெல்லாம் நினைவுக்கு வரும். நமக்கு பாரதியின் மனைவி செல்லம்மா பெயராவது நினைவுக்கு வருமா ? சொல்வதற்கில்லை. ஆனால் பாரதி என்றதும் நமக்கு முறுக்கிய மீசை, நெற்றியில் கூரைபோட்டிருக்கும் முண்டாசு, நேர்கொண்ட பார்வை, அடர்ந்த புருவங்கள், பொட்டு, புதுச்சேரி, எட்டயபுரம், திருவல்லிக்கேணி, பாரதிதாசன் எனப் பலவும் கண்முன்னே வந்துபோகும். ஆனாலும் ஐந்துவயதில் சுப்பிரமணியாக இருந்த ‘தான்’-உம் நாற்பது வயதில் திருவல்லிக்கேணியில் இறந்த பாரதிக்கும் பலவேறுபாடுகள், இருந்தும் ‘அவர்தான் இவர்’ என்பதில் நமக்கு ஐயங்கள் இருப்பதில்லை, காரணம் பொதுவாக ஒவ்வொரு ‘தான்‘ -உடனும் ‘ஒரு தனித்துவம்’ நிழல் தொடர்கிறது.

இதனைப் புரிந்துகொள்ள மேற்குலக மெய்யியல் சிந்தனையில் ஒரு புராணக் கதை உதாரணமுண்டு, உபயம் கிரேக்க நம்பிக்கைகள். இக்கிரேக்க கதையின்படி ஏதன்ஸ் நகரத்திற்கு மகாபாரத ஏகசக்கர கிராமத்து பகாசூரன் கதைப்போல ஒரு தலைவலியிருந்தது,அதன்படி ஒன்பதுவருடத்திற்கொருமுறைட, மனித உடலும் எருதுவின் தலையும் கொண்ட மினோத்தோர் (le Minautaure) என்கிற அரக்கனுக்கு ஏழு இளம்பெண்களையும், ஏழு இளைஞர்களையும் உணவாக வழங்கவேண்டுமென்பது,ஏதன்ஸை வென்ற எதிரி மன்னனின் கட்டளை. தீசஸ் (Theseus) மனித விலங்கோடு யுத்தம் செய்ய ஏதன்ஸ் நகரத்திலிருந்து படகில் செல்ல வேண்டியிருக்கிறது.மிருகத்தைக் கொன்றபின் நாடுதிரும்பும் தீசஸ் படகு ஏதென்ஸ் துறைமுகத்தில் நிறுத்தப்படுகிறது. ஆண்டுகள் பல கடக்கின்றன படகுக்கு வயது கூட அவ்வப்போது பழுதாகும் பகுதிகள் புதுப்பிக்கப்படுகின்றன. ஒரு கட்டத்தில் முற்றிலும் புதிய படகாக ஜொலிக்கிறது. உண்மையில் படகின் எந்த பாகமும் பல வருடங்களுக்கு முன்பு தீசஸ் எடுத்துச்சென்ற படகுக்கு உரியவை அல்ல. இருந்தும் ஏதன்ஸ் நகரைவிட்டு புறப்படும்போது படகு எத்தகைய பொலிவுடன் இருந்ததோ அப்படியே இருக்கிறது, தொடர்ந்து அப்படகை தீசஸ் படகென்றே மக்கள் நம்பினர். மனிதன் தீசஸ் படகுபோல மாற்றத்திற்கு உட்பட்டபோதிலும் அவன் சார்ந்த உண்மைகள் நிரந்தரமானவை, அழிவற்றவை. இளம் வயது பாரதிக்கும், தேசியக் கவிஞனாக இருந்த பாரதிக்குமாக கால இடைவெளியில் அவன் உடலும், உள்ளமும் தீசஸ் படகுபோல புதுப்பிக்கப்பட்டவை எனினும் வெளியுலகிற்கு – உங்களுக்கு – எனக்கு பாரதி என்ற கவிஞனின் பிம்பம் நிரந்தரமானது அழிவற்றது.
 
ஆங்கிலத்தில் identity (அடையாளம்) என்கிற வார்த்தையின் மூலம் இலத்தீன் ‘idem’, பொருள் : « அதுதான் இது ». ஒரு வகையில் அடையாளம் என்பது ‘தான்’ அன்றி வேறில்லை. சுருங்கக் கூறின் அடையாளப்படுத்துவதென்பது பெருங்கூட்டத்திலிருந்து ‘ தான்‘-ஐ பிரித்துணர்வது. ஒன்றை அடையாளப்படுத்த பல தனிமங்கள் இருக்கலாம், ஆனால் அவை அனைத்தும் கூட்டாக அடையாளப்படுத்துவது அந்த ஒன்றையே : அது ‘தீசஸ் படகு’ அல்லது ‘பாரதி’ என்கிற உண்மை. ‘தான்‘ எத்தனை அவதாரம் எடுத்தால் என்ன, அது எப்போதுமே தான் அன்றி வேறில்லை. அது ஒருபோதும் A =B ஆகமுடியாது.A=A ஆக மட்டுமே இருக்கமுடியும். 

இந்திய துணைக்கண்டத்தின் வேதமரபுகளில் ‘தான்’ என்ற சொல்லின் பூர்வாங்க வேரைத் தேடினால் ஒன்று, பரம்பொருள், முழுமுதல், ஆத்மா எனபொருள் தருகின்றன. பாரதி ‘ஆண், பெண் , மனிதர், தேவர்....’ என ஒரு பட்டியலிட்டு அனைத்தும் ஒன்று என்கிறான். 

 ‘தான்’ தெய்வம்

ஆண், பெண்,மனிதர், தேவர்,
பாம்பு, பறவை, காற்று, கடல்,
உயிர், இறப்பு – இவை அனைத்தும் ஒன்றே.
ஞாயிறு, வீட்டுச்சுவர், ஈ, மலையருவி,
குழல், கோமேதகம்- இவை அனைத்தும் ஒன்றே.
இன்பம், துன்பம், பாட்டு,
வண்ணான், குருவி,
மின்னல், பருத்தி – இஃதெல்லாம் ஒன்று.
மூடன், புலவன், இரும்பு, வெட்டுக்கிளி – இவை ஒரு பொருள்.
வேதம், கடல்மீன், புயற்காற்று, மல்லிகை மலர்-
இவை ஒரு பொருளின் பலத்தோற்றம்.
உள்ளதெல்லாம் ஒரு பொருள் ; ஒன்று.
இந்த ஒன்றின் பெயர் « தான் »
‘தான்’ தெய்வம்.
‘தான்’ அமுதம், இறவாதது.

அனைத்தயும் ஒன்றாகக் காண்பதன் மூலம் தன்னை பலவாக பார்க்கிறான், பாரதி. « முப்பது கோடி முகமுடையாள், உயிர் மொய் புற வொன்றுடையாள் – இநவள் செப்பு மொழி பதினெட்டுடையாள் – எனிற் சிந்தனை ஒன்றுடையாள் », எனப் பாடியவனும் அக்கவிஞன்தான். ஜீவராசிகள், பஞ்சபூதங்கள், தாவரங்கள் எல்லாம் ஒன்றே என்பதன் மூலம் பாரதி தெரிவிக்கின்ற உண்மை பாலுள் நெப்போல் ஞாலம் எங்கணுமூலமுதலுளது, என்ற உண்மை. நம்மில் அவனும் அவனில் நாமும் உய்த்திருக்கிற உண்மை, அவன் மரணத்தைவென்ற கவிஞன். ‘தான்’ தெய்வம். ‘தான்’ அமுதம், இறவாதது எனப்பாடியதற்கு வேறென்னபொருள் இருக்க முடியும் .

அகத்திலுறும் எண்ணங்கள் ;
புவியின் சிக்கல் அறுப்பவைகள் ;
புதியவைகள் ;
அவற்றையெல்லாம்
செகத்தார்க்குப் பாரதியார்
சித்தரிப்பார்
தெளிவாக,
அழகாக,
உண்மையாக !
– பாரதிதாசன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.