செயற்கைச் சர்க்கரை ரசாயனங்கள் – பகுதி-1

This entry is part 26 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

வாழ்கையில் எல்லா வெற்றிகளுக்கும் நம்முடைய கலாசாரத்தில், சர்க்கரைப் பதார்தங்கள் வேண்டியுள்ளது. ‘ஆத்தா, நான் பாஸாயிட்டேன்’ என்ற தமிழ் சினிமா வசனத்துடன், ஏதாவது ஒரு நடிகர், தன் தாய்க்கு மைசூர் பாக்கை வாயில் திணிப்பது, நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமான காட்சி. சின்ன விஷயங்களுக்கு டிரீட் என்று பள்ளிச் சிறுவர்கள் முதலில் நாடுவது ஏதாவது ஒரு சாக்லேட் மிட்டாயைத்தான். சினிமா கவிஞர்களைக் கேட்கவே வேண்டாம். ‘சர்க்கரை நிலவே’ என்று பிதற்றவும் செய்கிறார்கள். அல்லது, ‘தேனும், பழச்சாறும், சர்க்கரையும்’ என்ற பாடல் நன்றாக இருக்கிறதோ இல்லையோ, கேட்டாலே நீரிழிவு நோய் வந்துவிடும் என்பது போன்ற ஒரு பிரமையை உண்டாக்குகிறார்கள்!

அடிப்படையில் சர்க்கரையை அளவுடன் சாப்பிடுவதால் பிரச்னை இல்லை. ஆனால், பல நூறு ஆண்டுகளாக மனிதர்கள் கசப்பையும் புளிப்பையும் துறந்து, இனிப்பையே நாடுவது வழக்கமாகிவிட்டது. உண்டவுடன் சர்க்கரை ருசியைத் தவிர மற்றொரு முக்கிய விஷமொன்றைச் செய்கிறது. மூளைக்கு ஏராளமான பிராணவாயுவை அனுப்புகிறது. இதனால், நமக்கு உடனே ஒரு உந்துசக்தி ஏற்படுகிறது. இதனால்தான் சாக்லேட்டைத் தின்றவுடன் குழந்தைகள் சுறுசுறுப்பாகிவிடுகின்றன. குளிர்பான விளம்பரங்களும், அநாவசிய சிரிப்பைத் தவிர ஏராளமான சக்தி உடலில் உண்டாவாவதுபோலக் காட்டுவதும் நமக்குப் பழக்கமாகிவிட்டது. சக்திக்குக் காரணம் சர்க்கரையே தவிர, குளிர்பானமன்று. குளிர்பானத்தின் குளிர் மற்றும் அதில் நிரப்பப்படும் வாயு இவ்விரண்டையும் நீங்கினால், அதில் உள்ள சர்க்கரையின் அளவு கண்கூடாகிவிடும்.

ஒவ்வொரு துறையிலும் ஒரு முக்கியத் தேடல் இருக்கும். வேதியியலில் இப்படிப் பல தேடல்கள் இருக்கின்றன. அதில் ஒன்று, எப்படியாவது சோதனைச் சாலையில் இயற்கை உருவாக்குவதைப்போல, ஓர் இனிக்கும் ரசாயனத்தை உருவாக்குவது. இன்றுவரை, இந்தத் தேடல் முழுவதும் வெற்றி பெறவில்லை என்றே சொல்லவேண்டும். கரும்பிலிருந்து உருவாகும் சர்க்கரையை மனிதர்களின் சுவை அரும்புகள் (taste buds) கையாளும் விதம் அலாதியானது. இதுவரை எந்த ரசாயனத்தாலும், சுவை அரும்புகளை இயற்கைச் சர்க்கரைபோல, திருப்தி அளிக்க இயலவில்லை. சர்க்கரையை ஓர் இயற்கைப் பொருள் என்று சொல்வதும் முற்றிலும் சரியன்று. கரும்புச் சாற்றிலிருந்து ஏராளமான ரசாயன மாற்றங்களைத் தாண்டித்தான் சர்க்கரை வியாபாரத்திற்கு வருகிறது. ஆனாலும், இது எந்த ஒரு சோதனைச் சாலையிலும் உருவாக்கப்படவில்லை.

சர்க்கரையைத் தவிர, மனிதர்கள் மற்ற இனிப்பு தரும் விஷயங்களையும் விடுவதில்லை. தேன், ஒரு முக்கிய இனிப்பு மூலம். இதில்தான் எத்தனை வகை? மலர்கள், மற்ற தாவரங்கள் என்று தேனில் பல வகைத் தேன்கள் இன்று உண்டு.

இனிப்பைத் தேடும் மனித வாழ்க்கை மாறிக்கொண்டே வந்ததால், நம்மிடையே நீரிழிவு நோய் பரவி வந்துள்ளது. இதற்குப் பல மரபியல் காரணங்கள் இருந்தாலும், பெரும்பாலும் வாழ்க்கை முறைகளே காரணங்களாக இருக்கின்றன. சுருக்கமாகச் சொல்வதானால், நாம் தேவைக்கு அதிகமாகச் சர்க்கரையை உட்கொள்வது கடந்த 50 ஆண்டுகளாக நடந்துவரும் விஷயம். தேவைக்கு அதிகமாகச் சர்க்கரையைச் சாப்பிடுவது நமக்குப் பிடிக்கிறது. ஆனால், அதிக சர்க்கரை நம் உடல் பருமனைக் கூட்டுவது நமக்குப் பிடிப்பதில்லை. அதாவது, சர்க்கரையின் இனிப்புப் பிடிக்கும்; ஆனால், அதன் கலோரிகள் பிடிக்காது.

அட, கட்டுரை எழுதப்போய், ஒரு விற்பனைச் சுருக்கத்தை (marketing brief) எழுதிவிட்டேனோ? எப்படிச் சர்க்கரையின் இனிப்பைக் கூட்டி, உடலில் கலந்தவுடன் கலோரிகள் அதிகமாகாமல் பார்த்துக்கொள்வது? இதுவே செயற்கைச் சர்க்கரை ரசாயனங்களின் தாரக மந்திரம். நாம் இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகும் அத்தனை செயற்கைச் சர்க்கரை ரசாயனங்களும் சர்க்கரையைவிட இனிமையானது. ஆனால், கலோரிகள் மிகக் குறைவு. கோக்கும், பெப்ஸியும் சும்மாவா இருப்பார்கள்? ஜனத்தொகையை உறிஞ்ச வைக்கவேண்டாமா?

இதற்குமுன் நாம் விவாதித்த அனைத்து விஷயங்களிலும், ஒரு வியாபாரப் பார்வை மற்றும் ஒரு விஞ்ஞானப் பார்வையை முன்வைத்தோம். இந்த செயற்கைச் சர்க்கரை ரசாயன விஷயத்தில், இன்னும் முடிவு சரியாகத் தீர்மானம் ஆகவில்லை. அதனால், வெறும் வியாபாரங்கள்மீது, பழி சுமத்த முடியாது. அத்துடன், விஞ்ஞானம் இன்னும் முழு வெற்றி பெறவும் இல்லை. ஆங்கிலத்தில் சொல்வதுபோல, ஒரு புகைக்கும் துப்பாக்கி இன்னும் சிக்கவில்லை. அப்படி இருக்க ஏன் வீணாக வாசகர்களைக் குழப்பவேண்டும்? விஞ்ஞானம் என்றும் படிப்படியாக உண்மையைக் காணும் முறை. அதாவது, negotiated truth என்று சொல்வதுண்டு. விஞ்ஞான அடிப்படையில் இயங்கும் அரசாங்கங்களும் இந்த விஷயத்தில் சற்றுக் குழம்பித்தான் போயுள்ளன. சில செயற்கைச் சர்க்கரை ரசாயனங்களைத் தடைசெய்வது, பிறகு அனுமதிப்பது என்பது இன்று வழக்கமாகிவிட்டது.

இன்னொரு முக்கிய விஷயம் செயற்கைச் சர்க்கரை ரசாயனங்கள் விஷயத்தில் குழப்பத்தை மேலும் அதிகரித்துள்ளது. மின்னஞ்சல் மற்றும் சமூக வளைத்தளங்கள் மூலம், பல வதந்திகள் விஞ்ஞானம் மற்றும் வியாபாரம் இரண்டையும் சாடிய வண்ணம் இருக்கின்றன. முதன் முறையாகச் சில வதந்திகளைப் பற்றியும் எழுத எண்ணம். ஏனெனில், இன்று வாட்ஸாப் மூலம் இவ்வகை வதந்திகள் விஞ்ஞானமாக உலா வருகின்றன. கடைசியாகச் சில வலைத்தளங்கள், இதன் பின்னணியில் நடந்துள்ள சதி வேலைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவும் எழுதிவந்துள்ளன. ஒவ்வொரு செயற்கைச் சர்க்கரை ரசாயனத்தைப் பற்றி விவாதிக்கும்போது விஞ்ஞானம், வியாபாரம், வதந்தி மற்றும் சதி என்று பிரித்துக்காட்டுவது என் திட்டம். முடிவாகாத விஷயத்தில் குழப்பம் இருக்கத்தான் செய்யும். சிக்கலான விஞ்ஞானம், ஒன்றும் மேஜிக் அன்று.

சாக்கரீன் (Saccharin)

முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட செயற்கைச் சர்க்கரை ரசாயனம் சாக்கரீன் ஆகும். 1879–ஆம் ஆண்டு, கரித் தாரில் (coal tar) ஆராய்ச்சி செய்தபோது, கான்ஸ்டான்டீன் ஃபால்பெர்க் என்ற வேதியல் விஞ்ஞானியால் ஏதேச்சையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. தான் கண்டுபிடித்த ரசாயனத்திற்குச் சாக்கரீன் என்று ஓர் ஆண்டுக்குப் பின்னர் பெயரிட்டார். ஃபால்பெர்க் அதற்கான உரிமைக் காப்பும் பெற்றார். இங்கிலாந்தில் உற்பத்தியைத் தொடங்கியதும், உடனே அது அவ்வளவு பிரபலமாகவில்லை. சாக்கரீன், Sweet n Low என்ற வணிகப் பெயரில் இளஞ்சிவப்பு பாக்கெட்டுகளில் விற்கப்பட்டது. முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின்போது, சர்க்கரைத் தட்டுப்பாடு இருந்த சமயத்தில் சாக்கரீன் ஏராளமான லாபம் ஈட்டியது.

விஞ்ஞானம்

ஆரம்பத்தில், ஃபால்பெர்க் கண்டுபிடித்த முறைகள் பின்பற்றப்பட்டாலும், 1950-க்குப் பிறகு பல புதிய முறைகளில் சாக்கரீன் உருவாக்கப்பட்டது. இயற்கைச் சர்க்கரையைவிட 300 மடங்கு இனிப்பானது சாக்கரீன். ஆனாலும், ஒரு கசப்பான சுவையை விட்டுச்செல்லும் தன்மை கொண்டது. ஆனால், இயற்கை சர்க்கரைப்போல அதில் கலோரிகள் கிடையாது. மற்ற உணவுப் பொருட்களுடன் புதிய ரசாயன மாற்றங்களை இது உருவாக்குவதில்லை.

வியாபாரம்

பல பில்லியன் டாலர்கள் புழங்கும் வியாபாரம் சாக்கரீன் வியாபாரம். கேக், குளிர்பானங்கள், மெல்லும் கோந்து, பிஸ்கட்டுகள் மற்றும் பலவகையான இனிப்புகளில் கோடிக்கணக்கில் பயன்படுத்தப்படுகிறது. சூப்பர் மார்கெட்டில் நீரிழிவுப் பிரிவு (diabetic foods) என்று குறிப்பிடப்பட்டிருக்கும் உணவுப் பகுதிகளில் இவ்வகைச் சாக்கரீன் கலந்த தின்பண்டங்கள் விற்கப்படுகின்றன. இன்று, ராட்சச வியாபாரங்களான பெப்ஸி மற்றும் கோக், சாக்கரீனைப் பயன்படுத்துவதில்லை.

அரசாங்கக் கட்டுப்பாடு

20–ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு, சாக்கரீனை ஆராயத் தொடங்கியது. ஒரு 50 ஆண்டுகளுக்கு முன்னும் பின்னும் முரணான பல முடிவுகளை FDA சாக்கரீன் விஷயத்தில் எடுத்து வந்தது. விஞ்ஞானச் சோதனைகள் பல முரணான முடிவுகளை முன்வைத்ததே இதற்குக் காரணம். 1969–ல், சாக்கரீன் மனித உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கும் என்று FDA சொன்னாலும், விஞ்ஞான முறைப்படிச் சரியாக நிரூபிக்க முடியவில்லை. 1977–ல், சாக்கரீன் உட்கொண்ட எலிகளுக்குப் புற்றுநோய் வந்ததை விஞ்ஞானிகள் வெளியிட, FDA சாக்கரீனைத் தடைசெய்ய முனைந்தது. ஆனால், பொதுமக்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் எதிர்ப்பின் காரணமாகச் சாக்கரீன் பயன்படுத்தும் பொருட்களில், ‘புற்றுநோய் வர வாய்ப்புள்ளது’ என்று அச்சடிக்குமாறு உத்தரவிட்டது. அமெரிக்காவைத் தொடர்ந்து பல நாடுகள் சாக்கரீன் மீதிருந்த தடையை விலக்கிக் கொண்டுள்ளன. இன்று செயற்கைச் சர்க்கரை ரசாயனங்களில், சாக்கரீன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

வதந்திகள்

சாக்கரீன் அறிமுகப்படுத்தப்பட்ட காலகட்டங்களில் அதிக சமூக வலைத்தளங்கள் இல்லாததால், வதந்திகளிலிருந்து தப்பியது. அந்தப் பெருமை என்னவோ ஆஸ்பர்டேம் என்ற செயற்கைச் சர்க்கரை ரசாயனத்திற்கே உரியது.

சதி

இதுவரை வதந்திகளும் அதிகம் இல்லாததால், சதி போன்ற கட்டுக் கதைகளும் அதிகம் இல்லை.

சுக்ரலோஸ் (Sucralose)

சுக்ரலோஸ், இயற்கைச் சர்க்கரையைவிட 300 முதல் 1,000 மடங்கு இனிப்பானது. அதென்ன 300 முதல் 1,000 சுக்ரலோஸ்? சில வியாபாரப் பெயர்கொண்ட செயற்கைச் சர்க்கரை ரசாயனங்களில் பல்வேறு அளவுகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆஸ்பர்டேம் என்ற மற்றொரு செயற்கைச் சர்க்கரை ரசாயனத்தைவிட மூன்று மடங்கு இனிப்பானது. இந்த ரசாயனம் நம் உடலில் கலப்பதில்லை. அதனால் கொஞ்சம்கூட கலோரிகளைச் சேர்க்காது. மார்கெட்டில், சுக்ரலோஸைப் பயன்படுத்தும் ஸ்ப்லெண்டா (Splenda) மிகவும் பிரபலம். செயற்கைச் சர்க்கரை ரசாயனங்களில் ஸ்ப்லெண்டா விற்பனையில் இன்று முதலிடத்தில் உள்ளது.

பல மிட்டாய்கள், பிஸ்கட்டுகள், சாக்லேட்டுகள், குளிர்பானங்களில் ஸ்பெலெண்டா பயன்படுத்தப்படுகிறது. கோக் பூஜ்யம் (Coke Zero) என்று ஸ்ப்லெண்டா கலந்த பானத்தை விற்பதில் பெரும் வெற்றி பெற்றுள்ளது.

விஞ்ஞானம்

1976–ல் லண்டனின் பிரபலமான கிங்ஸ் கல்லூரியில் வேதியியல் ஆராய்ச்சியின்போது, சசிகாந்த் பட்னீஸ் என்ற ஆராய்ச்சியாளர், அவருடைய வழிகாட்டி test என்று சொன்னதை taste என்று புரிந்துகொண்டதில், உருவான மிக இனிப்பான ரசாயனம், சுக்ரலோஸ். சில ஆராய்ச்சிகளில் எலிகளின் எடை, சுக்ரலோஸ் உட்கொண்டதில் அதிகமானாலும், மனிதர்களில் இவ்வகை எடைக் கூடுதல் இவ்வாறு கவனிக்கப்படவில்லை.

1990–க்கு பிறகு கனடாவில் ஆரம்பித்து, 80 நாடுகளில் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டது.

வியாபாரம்

பெப்ஸி நிறுவனம் 2015–ல் ஸ்ப்லெண்டா பயன்படுத்தி டயட் பானங்களை அறிமுகப்படுத்தியது. விற்பனை சரியில்லை என்று அடுத்த ஆண்டே ஆஸ்பர்டேமுக்கு மாறியது. கோக்கும் செயற்கைச் சர்க்கரை விஷயத்தில் குழப்பமான ஒரு கொள்கையையே பின்பற்றி வந்துள்ளது. இவர்களது போக்கு, எது விற்கிறதோ அதுவே அமிர்தம்.

அரசாங்கக் கட்டுப்பாடு

பெரிதாக அரசாங்கக் கட்டுபாடு விஷயத்தில் சிக்காமல் தப்பித்த ஒரு ரசாயனம் சுக்ரலோஸ். பெரிய சாக்கரீன் மற்றும் ஆஸ்பர்டேம் குழப்பங்கள் தீர்ந்த நேரத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டதால் இதைச் சார்ந்த குழப்பங்கள் நேரவில்லை.

சதிக் கோட்பாடு மற்றும் வதந்திகள்

ஸ்ப்லெண்டா பல நிறுவனங்களாலும் தயாரிக்கப்படுவதால், (Heartland foods, Tate & Lyle), அதிக வதந்திகள் மற்றும் சதிக் கோட்பாடுகள் இல்லை.

ஸ்ப்லெண்டாவைத் தவிர ஸ்டீவியா (Stevia), ஜைலிடால் (Zailitol) போன்ற செயற்கைச் சர்க்கரை ரசாயனங்கள் இன்று பயனில் உள்ளன. இவை எல்லாவற்றையும்விட அதிகமாகச் சர்ச்சைக்கு ஆளான ரசாயனம் ஆஸ்பர்டேம். இதை விரிவாக அடுத்த பகுதியில் பார்ப்போம்.

Series Navigation<< விஞ்ஞானத் திரித்தல் – ஜி.எம்.ஓ. சர்ச்சைகள்செயற்கைச் சர்க்கரை ரசாயனங்கள் – பகுதி 2 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.