சதி எனும் சதி

(கோன்ராட் எல்ஸ்ட்டின் ஹிந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும், அத்தியாயம் – 11)

முன்னுரை:

இந்துத்வத்தைச் சதா வசைபாடும் கூட்டங்கள், விதவைகளை ஹிந்து மதம் வலுக்கட்டாயமாக உடன்கட்டை ஏற்றுகிறது என்பது வழக்கமான ஒன்றாகும். இவ்வழக்கம் சில ஜாதிகளில் குறிப்பிட்ட சமயங்களில் நடைபெற்றதாகும். 200 வருடங்களுக்கு முன்பே சட்ட விரோதம் என்பதால் மறைந்துபோன ஒன்று. இருந்தாலும், இத்தலைப்பு இந்துத்வத்தைப் பற்றிய விவாதங்களில் தொடர்ந்து தொல்லை கொடுக்கின்றது.

மீனாக்ஷி ஜெயின் அவர்கள் 2013ல் அயோத்தி சர்ச்சையைப் பற்றி எழுதிய “ராமரும் அயோத்தியும்” (Rama and Ayodhya) என்ற புத்தகத்தின் மூலம் வரலாறு படைத்துள்ளார். இப்போது, “Sati: Evangelicals, Baptist Missionaries, and the Changing Colonial Discourse” (Aryan Books International, New Delhi 2016) எனும் பளுவான புத்தகத் தொகுதியை வெளியிட்டுள்ளார். உன்னிப்பு நிறைந்த வரலாற்றாசியர் என்பதால் சதியைப் பற்றிய பழங்கால, இடைக்கால, தற்கால விவரங்களைத் தரும் மூலங்களையெல்லாம் கோர்வையாக அளித்துள்ளார். சதியைத் தடைசெய்வதற்குக் காரணமான வில்லியம் பென்டினிக் (Lord Wllam Bentinick) என்ற பிரபுவின் Minute on Sati (1829) முழு உரையையும் தந்துள்ளார். சதியைப் பற்றிய அனைத்து ஆதாரங்களும் இந்நூலில் உள்ளதால் இனிவரும் விவாதங்களுக்கு இது இன்றியமையாத குறிப்பேடாகும்.

சதியைப் பற்றிய காலனிக் கால விவரங்களை அறிய இந்நூல் உறுதுணையாக உள்ளது. அதிலும், இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு எடுத்துச்செல்லும் கிருத்துவ மதத்திற்கு ஹிந்துக்களை கூட்டங்கூட்டமாக மாற்றுவதற்கு எவ்வாறு பாதிரிமார்கள் சதியை உபயோகப்படுத்தினர் என்பது நன்கு விவரமாகிறது. இப்பழக்கம், ஒருவரை முகத்தில் குத்துவதுபோல் உள்ளதால் ஹிந்து மதம் காட்டுமிராண்டித்தனமானது என்று விவரிப்பதற்கு உபயோகமாக இருந்தது.

ஆத்திரம்:

பேராசியர் ஜெயின் தனது முன்னுரையில் சதியைப் பற்றித் தற்போது கிடைக்கக்கூடிய அனைத்து உரைகளையும் சேகரித்துள்ளார். அது மட்டுமல்லாமல், சில கருத்துகளுக்குத் தனது ஒப்புதலையும் அளித்துள்ளார். உதாரணமாக, ராகுல் சப்ரா என்பவர் சுட்டிக்காட்டும் “ஆங்கிலேயர்கள் ஹிந்துக்களைத் தங்களுடைய வடிவிற்கு மாற்றவேண்டிய அவசரத் தேவைக்குச் சதியை தெளிவான சான்றாகக் காண்பித்தனர்” என்ற காயத்ரி ஸ்பீவாக் அவர்களின் கவனிப்பாகும். இதில் மூவருமே, சில நூறாண்டுகளாக, ஐரோப்பியர்களின் படிப்படியான ஊடுருவல்களால் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை அலட்சியப்படுத்திவிட்டனர். 17ம் நூற்றாண்டில் உள்ளூராருடன் சேர்ந்துகொண்டு உடன்கட்டையேறும் விதவைகளைப் புகழ்ந்த ஐரோப்பிய வணிகர்கள் 19ம் நூற்றாண்டில் அவ்விதவைகளைக் கொடூரமான மக்களின் கைப்பிடியிலிருந்து மீட்பவர்களாக மாறிவிட்டனர். இதன் காரணம், கவர்ச்சியான புதிய நாட்டில் வர்த்தகப் பயணிகளாக வந்தபோது உள்ளூர் மக்கள் தயவு தேவைப்பட்டவர்கள், 200 ஆண்டுகளுக்குப் பிறகு அதே மக்களை அடிமைப்படுத்தியதனால் தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற மமதையேயாகும்.

எண்ணற்ற இந்தியர்களும், குறிப்பாக, வரலாற்றைச் சளைக்காமல் மாற்றி எழுதும் கற்றுக்குட்டிகளும், வரலாற்றைப் பற்றிய முழு உணர்வு இல்லாததால் “நிகழ்வுகளில் மாற்றம்” என்பதை அறியாதவர்களாக இருக்கிறார்கள். வரலாற்றைத் திருத்தி எழுதுபவர்கள் மேலை நாட்டினர் இந்தியாவை மறுபடியும் ஆக்கிரமித்துக் கொள்வதற்காகப் பல திட்டங்களை வைத்துள்ளார்கள் என்று எழுதுவதைப் பார்த்தால் இவர்கள் விக்டோரியா காலத்திலேயே இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. அதுபோலவே, சதியைப் பற்றிய ஆங்கிலேயர்களின் எண்ணம் எப்போதும் ஒரே மாதிரியாக இருந்தது என்பதும் தவறானதே. சதியைப் பற்றிய பார்வை ஆதிக்கத்திற்கும் அதிகாரத்திற்கும் ஏற்றார்போல் மாறியது மட்டுமல்லாமல் இந்தியர்களைப் பற்றிய எண்ணங்கள் மாற மாறச் சதியை அவர்கள் பார்த்த விதமும் மாறியது. உடன்கட்டையேறுதல் என்ற பழக்கத்தில் மாறுதல் இல்லையென்றாலும் அதைப் பற்றிய பார்வை மாற்றங்களையும் அதற்கான காரணங்களையும் ஒரு சிறந்த வரலாற்று ஆசியரால் மட்டுமே கோர்வையாக எழுதமுடியும்.

”உங்கள் பாரம்பரியத்திலுள்ள குறைபாடுகள் என்னவென்று எங்களுக்குத்தான் தெரியும். உங்களை உங்களிடமிருந்து காப்பாற்றுவதற்காகவே நாங்கள் வந்துள்ளோம்” என்று ஆங்கிலேயக் காலனியாளர்களின் கலாசாரத் தலையீட்டைத்தான் வென்டி டோனிகர், ஷெல்டன் பொல்லாக் போன்ற இடதுசாரி அறிவாளிகள் தற்போது தொடர்கின்றனர்.

மேல்நாட்டினரின் சதியைப் பற்றிய அணுகுமுறை ஜாதியை ஒத்ததாகவே உள்ளது. 20ம் நூற்றாண்டு ஆரம்பம் வரை எல்லா நாடுகளிலும் காணப்படும் சமூக ஏற்றத்தாழ்வுகள்தான் இந்தியாவில் ஜாதி என்ற பெயரில் உலவுவதாகக் காணப்பட்டது. பிரெஞ்ச் புரட்சிக்குபிறகு சமத்துவம் மெதுவாக மக்களின் மனத்தைக் கவர ஆரம்பித்தது. சமூகத்தில் ஒருவரின் நிலை அவரது ஜாதியைப் பொருத்தது என்பது பிரச்சனைக்கு உரியதாகிவிட்டது. ஆனால், பிறவியிலேயே பெண்கள் தாழ்வானவர்கள் என்ற மனப்பான்மை இன்னும் குடிபெயரவில்லை, சமத்துவம் பெண்களைத் தீண்டாத காலம். ஆண்களுக்குச் சரிநிகர் சமானமானவர்கள் இல்லையென்பதால் பெண்கள் உடன்கட்டையேறுவது ஆங்கிலேயர்களைப் பாதிக்கவில்லை. இரண்டாவது உலக யுத்தத்திற்குப்பிறகு மனித உரிமைகளும் சுய நிர்ணய உரிமைகளும் எல்லோருடைய பொது உடமை ஆனதால், ஜாதி, சதி இரண்டுமே பொறுக்க முடியாத கொடுமைகளாக மாறிவிட்டன. சதி என்ற பெயரைக் கேட்டாலே பொங்கிவரும் ஆத்திரம் மார்க்கோ போலோ இந்தியாவிற்கு வந்தபோது இல்லை. சதி என்பது தற்சமயம் வெறும் நினைவாக மாறிவிட்டாலும், 1987ல் எதிர்பாராது நடந்த ஓரூ சதி ஏற்படுத்திய கலவரம் இந்தக் கோபத்தின் அறிகுறியாகும்.

சுவிசேஷ பிரச்சாரம் :

சதியை ஆங்கிலேயர்கள் அணுகுவதில் ஏற்படும் மாற்றங்களுக்கு மற்றொரு காரணமும் இருந்தது. 1793 இல் கிழக்கிந்திய நிறுவனத்தின் பட்டயத்தைப் பற்றிய பிரிட்டிஷ் பாராளுமன்ற விவாதங்களில், வர்த்தகக்காரர்களே தாங்கள் பார்த்த சதிகளைப் பற்றி நிறைய எழுதியிருந்தாலும், உறுப்பினர் எவரும் சதி என்ற பேச்சையே எடுக்கவில்லை. 1829 இல், கிழக்கிந்திய வர்த்தகக் களங்கள் அனைத்திலும் சதி தடை செய்யப்பட்டுவிட்டது. இந்த மாற்றம் மத போதகர்களின் பிரச்சாரத்தினால் ஏற்பட்டதாகும். கிருத்துவ மத போதகர்கள் இந்தியாவில் காலடி வைத்த தருணத்திலிருந்து கீழ்த்தரமான மற்ற சமயங்களிலிருந்து தீங்கற்ற கிருத்துவ மதம் எவ்வாறு மாறுபட்டது என்று ஓத ஆரம்பித்துவிட்டனர். இவர்களது நடத்தை புதியதன்று. கனான் பிரதேச மக்கள் அவர்களது கடவுள் மோலோக்கிற்குக் குழந்தையைப் பலி கொடுப்பதை விவிலியம் நிந்திக்கிறது. ரோமானியர்களும் கனான் மக்கள் வசித்துவந்த கார்த்தேஜ் பகுதியை முற்றுகையிட்டபோது இப்பழக்கத்தை உறுதிப்படுத்தினர். விவிலிய எழுத்தாளர்களும் அதன் மதபோதக உதவியாளர்களும் குழந்தைப் பலி பல கடவுள் வழிபாட்டின் முக்கிய அம்சமென்றும் ஒரு கடவுள் வழிபாடு மனிதர்களை இக்கொடூரமான செயலிலிருந்து காப்பாற்ற வந்துள்ளது எனப் பிரச்சாரம் செய்தனர். ரெவரென்ட் வில்லியம் கேரி இதற்கு வேண்டிய சான்றுகளைச் சேகரிக்க முனைந்தார். முடிவில் சதியே போதுமானது எனத் தீர்மானித்துக் குழந்தைப் பலியை கைவிட்டுவிட்டார்.

உண்மை என்னவென்றால், குழந்தைப் பலி கொடுப்பதை ரோமானியர்கள் போன்ற பல தெய்வங்களை வழிபடும் கலாசாரங்கள் அனைத்துமே கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் நிறுத்திவிட்டன என்பதுதான். வாஸ்து எனும் கடவுளை வீடு கட்டுமுன் வழிபடும் வழக்கம் வேத காலத்திற்கு முந்தைய நரபலி வழக்கத்தை நினைவூட்டுவதுபோல உள்ளது என்பது சிலரின் ஊகம். இது உண்மையாக இருந்தாலும் நரபலி கொடுப்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நின்றுபோன வழக்கம். இந்த விஷயத்தில் பிரம்ம மதம் மற்ற மதங்களை முந்திக்கொண்டது. கிருத்துவ மத போதகர்கள் கனான் பிரதேசத்தை அவர்களிடமிருந்து பறிப்பதற்கும் அவர்களைக் கொலை செய்வதற்கும் உபயோகப்படுத்திக் கொண்டதுபோல் பல தெய்வங்களை வழிபடும் ரோமானியர்களும் உபயோகப்படுத்திக் கொண்டனர். தங்களிடையே சமீப காலம்வரை இருந்த பழக்கத்தை முற்றிலும் மறக்கவேண்டி அவர்கள் ஆக்கிரமித்துக்கொண்ட அனைத்து நாடுகளிலும் குழந்தைப் பலி கொடுப்பதைத் தடைசெய்தனர். இது தற்கால மேற்கத்தியர்கள், அவர்களிடேயே சமீப காலம்வரை புழங்கிய அடிமைத்தனம் நினைவிலிருந்து இன்னும் அகலாததால் இந்தியாவிலுள்ள ஜாதி வித்தியாசங்களை ஒழிப்பதை ஆதரிப்பதோடு மட்டுமல்லாமல் அதற்கான வேலைகளிலும் மும்முரமாக ஈடுபடுகின்றனர். கார்த்தேஜ் வாசிகள் குழந்தைப் பலி கொடுப்பதால் அவர்கள் காட்டுமிராண்டிகள் எனக் கூறி அவர்களை நாகரீகப்படுத்த வந்திருப்பதாகச் சாக்குச்சொன்ன ரோமானியர்களின் மூளைதான் இங்கும் வேலைசெய்கிறது. பின், சீஸரும் ட்ருய்ட்ஸ் வசித்த கால் பகுதியை வெற்றி கண்டபோதும் இதைத்தான் சொன்னார். சீனாவில், 11ம் நூற்றாண்டில் ஜூ பரம்பரை ஷாங் பரம்பரையின் ஆட்சியைத் திடீரென்று கவிழ்த்தபோது ஷாங் பரம்பரை நரபலி கொடுக்கும் வழக்கமுடையது என மக்களிடையே பரப்பினர்.

இதுபோல் சதியும் இந்தியாவில் எதிர்ப்பை எழுப்புவதற்கு மிக உபயோகமாக இருந்தது. ஆங்கிலேய ராணுவத்தைப் பொருத்தவரை, இந்தியாவை ஓரளவு ஆக்கிரமித்துக்கொண்டு விட்டதால், நாடு முழுவதையுமே விரைவில் தங்கள் ஆதிக்கத்திற்குக் கொண்டுவந்துவிட முடியும் என்ற இறுமாப்புடன் இருந்தது. எனவே, எதிர்ப்புக்குக் காரணம் ராணுவம் அன்று. கிழக்கிந்திய வர்த்தகத்தை முதலாவதாகவும், பிறகு அடிமைப்படுத்திய மக்களைக் கிருத்துவ மதத்திற்கு மாற்றுவதற்காகவும் செய்யப்பட்ட ஏற்பாடாகும். 1800இல், கிழக்கிந்திய வர்த்தகம் வணிகம் ஒன்றைத்தான் குறிக்கோளாகக் கொண்டிருந்தது. மத ஆர்வம் கலவரங்களை உண்டுபண்ணினால் வணிகத்திற்கு இடையூறாக இருக்கும் என்பதால் மத போதகர்களுக்குத் தடை விதித்திருந்தது. எனவே, கிருத்துவ இயக்கங்கள் இந்தியர்களைக் கிருத்துவர்களாக மாற்றுவது அத்தியாவசியமானதும் நன்மை தருவதுமாகும் என்ற நம்பிக்கையினால் கிழக்கிந்திய வர்த்தகம் தங்களுடன் ஒத்துழைக்க வேண்டும் எனப் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சம்மதிக்க வைத்தனர். வர்த்தகத்தின் ஒத்துழைப்பு இருந்தால்தான் சதி போன்ற காட்டுமிராண்டித்தனத்தின் தளையிலிருந்து மக்களை விடுவிக்கமுடியும் என்ற வாதம் இவர்களுக்கு அனுகூலமாக இருந்தது.

தமது ஆராய்ச்சிப் புத்தகத்தில் மீனாட்சி ஜெயின் அவர்கள், மத போதகர்கள் தங்கள் லட்சியத்தை அடைவதற்காகச் செய்த சூழ்ச்சிகளையும் நிகழ்வுகளையும் பல அத்தியாயங்களில் விவரித்துள்ளார். இந்த அத்தியாயங்கள், கிருத்துவம் இந்தியாவில் நுழைந்ததையும் விரிவடைந்ததையும் அறிவதற்கு வாசகர்கள் கட்டாயமாகப் படிக்க வேண்டியவையாகும். ஆனால், நான் காலனி வரலாற்றில் மட்டும் கவனம் செலுத்தப்போவதால் இந்த அத்தியாயங்களைத் தவிர்க்க எண்ணியுள்ளேன். ஏனென்றால் இதில்தான் இந்தியர்கள் தங்கள் சக்தியை விரயமாக்கிக் கொண்டிருக்கின்றனர். காலனி வரலாறு தெரிந்து கொள்ளவேண்டிய ஒன்றுதான். சிலர் அதைச் செய்யத்தான் வேண்டும். ஆனால், பெரும்பான்மையான இந்துக்களுக்கு இந்து தர்மத்தை அறிந்து கொள்வதுதான் மிக உபயோகமானது. இந்து நாகரிகம் எவ்வாறு வளர்ந்தது என்றறிவது அதன் ஒடுக்கத்தையும் அதையொட்டி நடந்த இந்துக்களின் எதிர்ப்பையும்விட முக்கியமானது. இந்தியா ஒரு சுதந்திர நாடு. இந்து நாகரீகம் மறுபடியும் பலப்படுத்தக்கூடியது. எவ்வாறு சில நூற்றாண்டுகள் ஒடுக்கப்பட்டோம் என்ற நினைப்பிலேயே உழலாமல் இந்து நாகரிகத்தை மறுபடியும் உயிர்ப்பிப்பதே தகுதி வாய்ந்த இலக்காகும்.

இங்கு குறிப்பிடப்பட வேண்டியது ஒன்றுதான்; சதியை இந்து மதத்துடன் அளவுக்கு மீறி இணைத்தது கிருத்துவ மதபோதகர்களே . இவர்கள் இந்து மதத்தைத் தாக்குவதற்காகச் சதியை மிகைப்படுத்தினர். இப்பழக்கம் பல நூற்றாண்டுக் காலங்களில் ஒரு சில விதவைகள் மட்டும் மேற்கொண்ட விதிவிலக்கான செயலாகும். பின், 19ம் நூற்றாண்டில், சுவிசேஷப் பிரச்சாரகர்களும் பாப்டிஸ்ட் கிருத்துவர்களும் இந்தியாவைக் கிருத்துவத்திற்கும் ஆங்கிலேயத்திற்கும் மாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தினால் இதை மேலும் மிகைப்படுத்தினர்.

கிருஷ்ணர்:

பல ஹிந்துக்கள், சதி, இஸ்லாமியப் படையினரின் வெற்றிகளுக்குப்பின் போர் வீரர்களுக்கு அஞ்சிப் போரில் மாண்ட வீரர்களின் விதவை மனைவிகள் மற்ற நாடுகளில் நடந்ததையே மேற்கொண்ட ஒரு வழக்கம் என நினைக்கின்றனர். உண்மையில் சதி, ஹிந்து மத நூல்களைப் போலவே தொன்மையானதாகும். ரிக் வேதம் 10:18:7-8, இறுதிச் சடங்கில் இறந்த கணவனின் பக்கத்தில் சிதையில் படுத்திருந்த பெண்மணியையும் அவளைச் சமாதானப்படுத்திச் சிதையிலிருந்து அவளை எழுப்பி வாழ்வதற்கு அழைத்துச் செல்வதையும் விவரிக்கின்றது. இதிலிருந்து நடக்கவிருக்கும் சதியையும் பிராம்மண சம்பிரதாயம் அதை ஏற்றுக்கொள்ளாததையும் அறிகிறோம்.

இதுபோலவே, சிறந்த ஹிந்துவாக வாழ வழிகாட்டும் மஹாபாரதத்தில் பலர் சதியேறுவதைப் பார்க்கிறோம். பாண்டுவின் மனைவி மாதுரி, கிருஷ்ணரின் தந்தை வசுதேவரின் நான்கு மனைவிகள், கிருஷ்ணர் இவ்வுலகை நீத்தபின் அவருடைய மனைவிகளில் ஐவர் சதியேறினர். ஆனால், தீர்க்கதரிசி முகம்மது கூறியதைப்போலத் தன்னையே எல்லாவற்றிலும் பின்பற்ற வேண்டும் எனக் கிருஷ்ணர் கூறவில்லை. மேலும், ராமரின் வழிநடக்கும் பெண்கள் சதியை நினைத்துப் பார்த்ததுகூட இல்லை. இராமாயணத்தில், சீதா தேவி சிதையேறினபோதும் நெருப்பு அவரைத் தீண்டவில்லை என்றுதான் படிக்கிறோம்.

இந்திய சதியைப்பற்றி இருப்பதிலேயே பழமையான சாட்சியம் கிரேக்கர்களுடையது; பாரசீக ராணுவத்தில் படையாற்றிய இந்தியத் தளபதியின் மரணத்திற்குப்பின் அவரது இரண்டு மனைவியரில் யார் உடன்கட்டை ஏறுவது என்ற சர்ச்சையை விவரிக்கிறது; மூத்த மனைவி வயதானவள். இளைய மனைவிக்குக் குழந்தைப்பேறு இல்லை. இருவருமே தாம்தான் உடன்கட்டை ஏறவேண்டும் என வாதிட்டனர். மூத்தவள் உடன்கட்டையேறினால தளபதியின் குழந்தைகள் அனாதைகளாகிவிடுவர். எனவே, நான்தான் உடன்கட்டையேறுவேன் என இளையவள் வாதிட்டதால் அதிகாரிகள் தலையிட்டு இளையவளுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தனர். இங்கு சாதகம் என்பதற்கு உடன்கட்டையேறும் கௌரவத்தை அதில் மிக ஆர்வமாயிருந்த இளைய மனைவிக்கு அளித்தனர் என்பதுதான் பொருந்தும்.

ஹிந்து சமுதாயம் சதியைச் சாதாரண வழக்கமாக ஏற்றுக்கொள்ளாததால் அதை விரும்பிய இந்தியப் பெண்மணிகளுக்கு மனவுறுதி அத்தியாவசியமாக இருந்தது. பல சாட்சியங்களின் பிரகாரம், சதியேற விரும்பும் விதவையின் குடும்பத்தினரும் அதிகாரிகளும் ஆச்சாரியர்களும் தடுக்க முயல்வதைக் கடக்கவேண்டும். நவீன மனோநல மருத்துவர்கள் சங்கிலியால் தூணில் கட்டிவைப்பது போலல்லாமல் இவர்களனைவரும் சரியென்று சம்மதிக்க வேண்டும். இதனால்தான் சதியை ஆங்கிலேய அறிக்கைகள் விதவைகளின் தீக்குளிப்பு என்றே குறிப்பிட்டுள்ளன. வெளிநாட்டுப் பயணிகள் எவ்வாறு அறியாமையினால் இந்துக் கலாசாரத்தைப் பற்றிய பாரபட்சமான எண்ணங்களுடன் இங்கு இறங்குகிறார்களோ அதே மனோபாவத்தை உடைய நவீன பெண்ணியக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் கொலைகார ஆண் வர்க்கம் விவரமறியாத விதவைகளைப் பலவந்தமாகச் சிதையேற்றுகிறது என குற்றஞ்சாட்டுகிறார்கள். பெண்களே சுயமாக இம்முடிவை எடுத்தனர் என்ற விவரமறியாதவர்கள் இப்பெண்ணியக்கவாதிகள்தான்.

வீரச்செயல்களை வெகுவாக மதிக்கும் ராஜபுத்திர வம்சத்தினரும், படை வீரர்களின் குடும்பத்தினரும்தான் சதியேறுவதில் ஆர்வமுள்ளவர்களாக இருந்தார்கள் என்ற பொது அனுமானம் தவறான ஒன்றாகும். சிவாஜியும் , ரஞ்சித் சிங்கும் இறந்தபின் சில மனைவிகளும் வைப்பாட்டிகளும் உடன்கட்டை ஏறினர் என்பது வெகுகால நம்பிக்கை. முஸ்லீம் சமூகத்தில் புதிய விதவைகள் மறுமணம் செய்துகொள்வது வழக்கமாயிருந்தது. சமூக வளர்ச்சிக்கும் தேவையாயிருந்தது. ஆனால், வங்காளத்தில் ஓர் ஆங்கிலேயக் கணக்கெடுப்பு, உடன்கட்டையேறிய பெண்களில் 51 சதவீதம் பின்வகுப்புக் குடும்பத்தினர் என்கிறது. மேல்வகுப்பு விதவைகளும், பெரும்பான்பையான ராணுவக் குடும்பத்து விதவைகளும் பிறருக்குப் பணியாற்றினர் அல்லது துறவிகளைபோல் எளிமையாக வாழ்ந்தனர். சதி ஓர் அரிய வழக்கமாயிருந்தாலும் மிகவும் கொண்டாடப்பட்ட ஒன்று என்பதில் சந்தேகமேயில்லை. சதியேறிய பெண்மணிகளின் நினைவாகச் சிலைகளும் நினைவாலயங்களும் எழுப்பபட்டன.

ஹிந்து சதி?

சதி ஹிந்துக்களை மட்டும் சேர்ந்ததன்று. எல்லா இடங்களிலும் எல்லா கலாசாரங்களிலும் இருந்த ஒன்றுதான். மனைவிகளும் வைப்பாட்டிகளும் வேலையாட்களும் பழங்காலத்தில் சீன, எகிப்திய நாட்டு மன்னர்களுடன் சேர்த்துப் புதைக்கப்பட்டிருக்கின்றனர். கிருத்துவத்திற்கு முன்னால் ஐரோப்பாவில் இவ்வழக்கம் பெண்களின் நிலையைப் பொருத்ததாக இருந்தது. அடிபணிந்த கிரேக்க நாட்டுப் பெண்களிடையே இவ்வழக்கம் சுத்தமாக இல்லை. ஆனால் சுதந்திரமான கெல்டிக் பெண்களிடையே இவ்வழக்கம் மிகுந்த அளவில் இருந்தது. ஜெர்மானியர்களிடையே மிகப் பிரபலமானது ப்ருன்ஹில்ட் என்ற பெண்மணி தனது ஆண் வேலையாட்களுடன் அவரது கணவர் சீக் ஃபிரீட் இறந்தபின் சதியேறியதுதான். இவ்வாறிருந்தும், இந்திய மதச்சார்பற்றவர்கள் சதி ஹிந்து சமூகத்திற்கே உரித்தான கொடிய தீமை என்கின்றனர்.

இம்மிகச் சிறந்த புத்தகத்தில் ஒரே ஒரு சிறிய குறைபாடு. குறைபாடு என்றுகூடக் கூறமுடியாது. விட்டுப்போய்விட்டது எனலாம். அலெக் ஹெஜிப், காதரின் யங் என்ற இருவர் எழுதிய “Sati, Widowhood and Yoga“ என்ற கட்டுரையைக் குறிப்பிட்டிருந்தாலும் அதை ஆசிரியர் மேற்கொண்டு விவாதிக்கவில்லை என்பதுதான் அந்தக் குறை. இக்கட்டுரையாசிரியைகள் சதியை யோகத்துடன் சம்பந்தப்படுத்தி ஹிந்து மதத்தின் ஒரு கோணமாகப் பார்க்கிறார்கள். விதவையோ சதியோ யோகத்தின் பரிணாமத்தை நேரடியாக உணராவிட்டாலும் பாரம்பரிய இந்துப் பெண்களிடம் அவர்கள் அறியாமலே யோக உணர்வு இணைந்துள்ளது என்கின்றனர். உலகத்திலேயே வேறெதையும்விட மிகுந்த கவனத்துடனும் ஒருமித்த உணர்வுடனும் செய்யவேண்டிய யோகம் எவ்வாறு ஒரூ பெண்மணியிடம் அவர் அறியாமலே அவருள்ளே புகும்? பேராசிரியர் ஜெயின் இக்கருதுகோளைச் (Hypothesis) சொல்வதோடு நிறுத்திக்கொண்டுவிட்டார். இதைப் பற்றித் தன்னுடைய கருத்து என்னவென்று கூறவில்லை. எனவே, நான் என் கருத்தைக் கூறுகிறேன்.

இக்கட்டுரையைப் படிப்போர் மிகப் பரவலாக உள்ள ஒரு நிகழ்வு இக்கட்டுரையிலும் உள்ளடங்கியுள்ளது என்பதைக் கவனியார். அது என்ன? , ஹிந்து என்ற சொல்லை அற்பத்தனமாகக் கையாள்வதுதான். மதபோதகர்களும் மதச்சார்பற்றவர்களும் மோசமான விவரங்களை எப்பொழுதுமே ஹிந்து என்ற பெயருடன் இணைத்துச் சொல்வதும், நல்ல விவரங்கள் ஹிந்துக்களுடையதாகவே இருந்தாலும் ஹிந்து என்ற சொல்லை எவ்வாறாவது தவிர்ப்பதும் ஆகும். ஹிந்துக்களும் இவர்கள் கூறுவதை மறுவார்த்தை பேசாமல் மூலையில் ஏற்றிக்கொண்டுவிடுகின்றனர்.

யோகத்தை மேற்கத்தியர்கள் விரும்புகிறார்களா? உடனே மதச்சார்பற்ற இந்தியர்களும் அவர்களது மேற்கத்தியக் கூட்டாளிகளும் யோகம் ஹிந்துக்களுடையதன்று என நிச்சயித்துவிட்டனர். (இஸ்லாம் என்ற வார்த்தை இதற்கு எதிர்பதம்; முஸ்லீம்களுக்கு எதிர்மறையான தலைப்பில் செய்திவந்தால் உடனே, இச்செய்கைக்கு இஸ்லாம் பொறுப்பில்லை என அடித்துச் சொல்வார்கள்). சமண கணிதம், பௌத்தர்களின் கணிதம் அல்லது கேரள கணிதம் என்பார்களே தவிர ஹிந்து கணிதம் என்பதை அறவே தவிர்ப்பார்கள். ஏனென்றால், நல்லவை எதுவும் இந்துக்களிடமிருந்து வந்திருக்க முடியாது. ஆனால், ஏதாவதொன்று கோமாளித்தனமாகவோ, அசிங்கமாகவோ, துறவியல் சார்ந்ததாகவோ இருந்தால் அது ஹிந்துக்களுடையதாக விவரிக்கப்படும். சதி நீசத்தனமானது. எனவே அது ஹிந்து சதி.

சதியைப் பொருத்தவரை மதச்சார்பற்றவர்களின் நோக்கம் ஹிந்து மதத்தின் மேலுள்ள வெறுப்பாக இருந்தாலும் இது உண்மையே. சதி ஹிந்துக்களைச் சார்ந்ததுதான். ஆனால் பிராம்மணீயத்தைச் சார்ந்ததன்று. ரிக் வேதம் வாழ்க்கை வாழ்வதற்கே என விதிக்கிறது. சாத்திரங்கள் சதியைப் பற்றிப் பேசவில்லை. விதவைகள் வாழவேண்டிய முறைகளைத்தான் சொல்கிறது. இப்புத்தகத்தில் காணும் பல மேற்கோள் சாட்சியங்கள் ஹிந்து குருக்கள் விதவைப் பெண்கள் சதியேறுவதைத் தடுக்க முயன்றதைத்தான் கூறுகின்றன. சதி இந்தியாவில் மட்டுமல்லாமல் பல நாடுகளிலும் இருந்தது. கிருத்துவம், இஸ்லாம் இரண்டிலும் சதி இல்லை. எனவே, இது பல கடவுளை வழிபடும் சமுதாயங்களில் இருந்த ஒரு வழக்கமாகத் தெரிகிறது. இதே சமுதாயங்கள்தான் இதை நிராகரித்தும் உள்ளன.

இந்த அரைப் பக்க மாற்றத்தைத் தவிர இப்புத்தகத்தின் மற்றைய 500க்கும் மேலான பக்கங்கள் என்றும் நிலைத்து நிற்பதற்காக எழுதப்பட்டவை. சதியைச் சூழ்ந்துள்ள நெருப்புக் கனலால் எரிக்கமுடியாத சாஸ்வதமான புத்தகம்.

(Published on Bharata-Bharati, 24 March 2016; and Hindu Human Rights 27 March 2016; Review for Sati by Meenakshi Jain, a History Professor at Delhi University.)

Series Navigation<< இலா நகரில் பன்மைத்துவம்தார்மீக விழிப்புணர்வு யாருக்குத் தேவை – ஹிந்துக்களுக்கா? பா.ஜ.க.வினருக்கா? >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.