
அன்புள்ள சௌந்தர் வணக்கம்
இனி நான் உன்னுடன் போனில் பேசும் துணிவை இழந்துவிட்டேன். என்னுடைய எண்ணிலிருந்து அந்த லிங்க் சென்ற வாரமே உனக்கு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நேற்றுதான் நான் அதை கவனித்தேன். அது எப்படி நடந்ததோ என்ன நடந்ததோ உண்மையாகவே எனக்குத் தெரியவில்லை.. ஆனால் இதைச் சொன்னால் உன்னால் நம்ப முடியாது. ஏன் என்றால் நமக்குள் ஏற்கனவே இருக்கும் விஷயங்கள் அப்படி. அதனால் தான் நான் அதற்காக பதட்டப்படவோ உன்னிடம் விளக்கம் சொல்லவோ முயற்சிக்கப் போவதில்லை..
நமக்கிடையேயான ஒரு சகஜமான உறவை இயற்கையே விரும்பவில்லை என நான் இதை புரிந்து கொள்கிறேன். விதி என்பதன் அர்த்தம் தெரியாமல் அல்லது அது சோம்பேறிகளால் சொல்லப்படும் வார்த்தை என நினைத்திருந்தேன். இந்த சம்பவத்திற்குப் பின் விதி என்பதற்கான சரியான விளக்கம் இதுவாகத்தான் இருக்க முடியும் என நான் நினைக்கிறேன்.
நேற்று உனக்கு ஏதாவது மெசேஜ் அனுப்பலாமா என உன்னுடைய வாட்ஸ் அப் இணைப்பைத் திறந்தபோது என்னிடமிருந்து உனக்கு ஒரு போர்னோ பக்கத்தின் இணைப்பு தரப்பட்டிருப்பதைக் கண்டு நான் அவ்வளவு அதிர்ச்சி அடைந்தேன். அதை நீ பார்த்துவிட்டதற்கான நீல நிற டிக் குறியும் இருந்ததைக் கண்டு மிகவும் கசப்பாகவும் வேதனையாகவும் இருந்தது. அது ஒரு வெறும் போர்னோ வீடியோ இணைப்பாக இருந்திருந்தால் ஒரு வெடிச் சிரிப்போடு அதை நாம் இருவரும் கடந்திருக்கலாம். ஆனால் அது கே செக்ஸ் வீடியோ இணைப்பு.
அதைப் பார்த்து உனக்கு அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும் அல்லது குழப்பம் ஏற்பட்டிருக்கலாம் அல்லது நீ இன்னும் மாறவே இல்லையா என நினைத்திருக்கலாம் இல்லையென்றால் சீ உன் புத்தி… நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வெச்சாலும் என நினைத்திருக்கலாம். ஆம் உன்னுடைய இயல்புக்கு நீ அப்படித்தான் நினைத்திருக்கக் கூடும்.
நடந்திருக்கத் தேவையில்லாத அந்த சம்பவத்திற்குப் பின் ஏறக்குறைய பதினேழு ஆண்டுகள் கழித்து நாம் மீண்டும் நண்பர்கள் ஆகியிருக்கிறோம். அப்படிப்பட்ட உறவை நான் இப்படி போட்டு உடைக்கக் கூடிய அளவுக்கு முட்டாளா என நீ யோசித்திருக்கலாம். ஆனால் எப்படி யோசித்தாலும் இது தவறுதாலாக அனுப்பப்பட்டிருக்கக் கூடும் என்ற இடத்துக்கு மட்டும் உன்னால் வந்திருக்க முடியாது. உன்னால் மட்டுமல்ல யாராலுமே அப்படி நினைக்க முடியாது.
இனி நாம் மீண்டும் சகஜமாக பேசிக் கொள்வதோ சந்தித்துக் கொள்வதோ சாத்தியமா என தெரியவில்லை. எனவே நம் சந்திப்பின் நினைவுகளை மீண்டும் ஒருமுறை இங்கே நினைவுகூற நீ என்னை அனுமதிக்க வேண்டும்.
அன்று ஆகஸ்ட் 27ம்தேதி 1997ம் ஆண்டு. அன்று ஒரு கவிதை நூல் வெளியீட்டு விழாவில் நாம் சந்தித்துக் கொண்டோம். நீ அருகில் இருந்த கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவனாய் இருந்தாய். நான் அப்போதுதான் கல்லூரி முடித்திருந்தேன். நாம் இருவருமே அதற்கு முன் எத்தனையோ லட்சம் முகங்களைப் பார்த்திருப்போம்- அவர்கள் யாரிடமும் நமக்கு அவ்வளவு ஈர்ப்பு ஏற்பட்டதில்லையே. நமக்கேன் ஒருவர் மீது ஒருவருக்கு அவ்வளவு ஈர்ப்பு ஏற்பட்டது. ஒரு காதலன் காதலியின் முதல் சந்திப்பைப் போல. ஆமாம் என்னால் அதை உறுதியாகச் சொல்ல முடியும். நீயும் அவ்வளவு ஈர்க்கப்பட்டிருந்தாய்.
ஒருவர் பெயரை ஒருவர் கேட்டுக் கொண்டு அருகருகே அமர்ந்து கொண்டு ஏதோ பல காலம் பழகியவர்களைப் போல சள சளவெனப் பேசிக் கொண்டு நாம் அன்று எத்தனை மகிழ்ச்சியாய் இருந்தோம். அந்த நிகழ்வு ஒரு கல்யாணமோ அல்லது வேறு எதுவாகவோ இல்லாமல் ஒரு கவிதை தூல் வெளியீட்டு விழா என்பதை நாம் திரும்பத் திரும்ப நினைவு கூர்ந்து கொண்டோம். அந்த நாளை நாம் என்றுமே மறக்கக் கூடாது என பேசிக் கொண்டோம். ஆம் அந்த நாளை நான் இன்றும் மறக்கவில்லை. அந்த நாளின் ஒவ்வொரு வினாடியும் நகர்ந்த விதம் அன்று பலமுறை வீசிய புழுதிக்காற்று, அடித்த வெயில் அன்று மதியம் நாம் சாப்பிட்ட சாப்பாடு அதன் ருசி நாம் அணிந்திருந்த சட்டை எதையுமோ நான் இன்னும் மறக்கவில்லை. இனி எப்போதும் அதை மறக்க சாக்தியமில்லை. நினைத்துப் பார்த்தால் அந்த நாளைப் போல எந்த நாளும் என் நினைவில் இல்லை.
அதன்பின் நாம் அடிக்கடி சந்தித்துக் கொண்டோம். ஞாயிற்றுக் கிழமைகளில் நான் உன் ஆஸ்டலுக்கு வந்துவிடுவேன். உன் வகுப்பு தோழர்கள் ஆஸ்டல் தோழர்கள் எல்லாம் எனக்கும் நண்பர்கள் ஆனார்கள். நாம் இந்த வானத்துக்கு கீழே இருக்கிற வானத்துக்கு அப்பால் இருக்கிற எல்லா விஷயங்களையும் பேசினோம். ஒரு கட்டத்தில் உன் நண்பர்கள் எல்லாம் சலித்துப் போனார்கள். டேய் அப்படி என்ன தான்டா பேசுவீங்க என அலுத்துக் கொண்டார்கள். சந்திப்பு போதாதென்று கார்டு கவர் என நம் உரையாடல் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே இருந்தது.
அந்த நாட்கள் தான் எவ்வளவு இனிமையானவை. கால இயந்திரம் மட்டும் இருந்தால் நாம் மீண்டும் ஒரு முறை அந்த நாட்களுக்குப் போகலாம். அந்த வெயிலில் காயலாம். அதே போல் பேசிக் கொண்டே இருக்கலாம். இனிமையான தருணங்களை இழந்து கொண்டு வரும்போதுதான் தெரிகிறது. காலம் எவ்வளவு கொடூரமானது இரக்கமில்லாதது. நம்முடைய அந்த காலம் இறந்துவிட்டது. நாம் உயிரோடு இருந்து கொண்டு அதை இறந்த மனிதர்களைப் பார்ப்பது போல ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
நம்முடைய உரையாடல் எப்போதும் இப்படித்தான் தத்துவக் கடலுக்குள் சென்று சேர்ந்துவிடும். அதில் நாம் ஆளுக்கொரு புகழ்பெற்ற வாக்கியங்களைப் பற்றிக் கொண்டு தத்தளித்துக் கொண்டிருப்போம். நமக்கிடையே உருவாகியிருந்த இந்த மிகச் சிறந்த நட்பின் மீது எந்தக் கண் பட்டிருக்கும். இப்போது யோசித்தால் நம் கண்ணே தான் பட்டிருக்கும் என்று தோன்றுகிறது. நாம் பயந்திருப்போம். இதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என நாம் நினைத்திருப்போம். அதற்குப் பின் தான் அந்த சம்பவம் நடந்திருக்கக் கூடும்.
நம்முடைய சந்திப்புக்குப் பின் நீ உன்னுடைய கல்லூரியில் அந்த வருடம் சேர்ந்த புவனாவை காதலிக்கத் துவங்கினாய். அதன்பின் நம்முடைய சந்திப்பின் போதெல்லாம் உன்னுடைய பேச்சு புவனாவைப் பற்றி உன் காதல் உணர்வுகளைப் பற்றியதாக உன் எதிர்கால கலக்கங்களைப் பற்றியதாக மாறிப் போனது.உனக்கு வேறு நினைவே இல்லை. நீ எப்போதும் அதையே பேசிக் கொண்டு அதையே சிந்தித்துக் கொண்டு புவனாவையே நினைத்துக் கொண்டு இருந்தாய். உன்னுடைய இந்த காதல் கை கூடாது என என் உள்ளுணர்வு சொல்லிக் கொண்டே இருந்தது. அது உள்ளுணர்வா இல்லை என்னுடைய எதிர்பார்ப்பா என இப்போது நான் யோசித்துப் பார்க்கிறேன். நம் நட்புணர்வுக்கு இணையாக அல்லது அதற்கும் மேலாக உனக்கு காதல் உணர்வு ஏற்பட்டதை நான் சகிக்கவில்லை என நினைக்கிறேன். அதனால் தான் எனக்கு அப்படி உள்ளுணர்வு ஏற்பட்டிருக்கும்.
பிபிஏ படித்துக் கொண்டிருந்த நீ திடீரென டிவி மீடியா பக்கம் போனாய். சென்னையில் நீ உன் நண்பர்களுடன் தங்கியிருந்தாய். என்னிடம் பேசும்போதெல்லாம் சென்னைக்கு வரச் சொல்லிக் கொண்டே இருந்தாய்.
அதன்படி நான் சென்னைக்கு வடபழனியில் நீ தங்கியிருக்கும் அறைக்கு வந்தேன். அங்கே என்னால் எதுவுமே பேச முடியவில்லை. நீ தான் புவனாவைப் பற்றி காட்டாற்று வெள்ளம்போல் பேசிக் கொண்டே இருந்தாய். உங்கள் சந்திப்பைப் பற்றி நீ புவனாவிடம் பிரப்போஸ் செய்த விதம் பற்றி உங்களிடையே நடந்த உரையாடல்களை வார்த்தை மாறாமல் அப்படியே என்னிடம் ஒப்பித்தாய். அப்போது நீ கிட்டத்தட்ட ஒரு இந்திய சினிமா கதாநாயகன் போல இருந்தாய். எனக்கு போரடித்து விட்டபோதிலும் உன்னால் பேசுவதை நிறுத்த முடியவில்லை. உன் அறைவாசிகள் நம்மை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். அன்றிரவு நான் அங்கு தங்கினேன். நீ தூங்கிவிட்டாய். ஆனால் பகல் முழுவதும் நீ பேசிய பேச்சுகள் தூங்கவிடாமல் எனக்குள் திரும்பத் திரும்ப ஓடிக் கொண்டே இருந்தது. நான் உன்னை இழந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது. அதை என்னால் தாங்கவே முடியவில்லை.
நள்ளிரவில் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்ற நினைவில் அந்த நண்பர்களில் இருவர் திடீரென ஆவேசமாய் புணர ஆரம்பித்தார்கள். நான் அதை எதிர்பார்க்கவில்லை. படுத்தபடியே அச்சத்தோடு அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அந்த நிகழ்வு எனக்குள் ஒரு பெரும் குழப்பத்தை உண்டாக்கியது. ஒருவேளை நமக்குள்ளும் நடக்க வேண்டியது இதுதானோ. ஆனால் நான் இதை நினைத்தேனா என்ன? இப்போது யோசித்துப் பார்த்தால் நினைத்திருக்கிறேன் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் அந்த இரவில் ஒன்றும் தெரியாதவன் போலவும் பயங்கரக் குழப்பத்தில் இருப்பது போலவும் நான் என்னிடமே நடித்துக் கொண்டிருந்தேன். அதை நான் நம்பியும் விட்டேன்.
நான் இப்படி நினைத்தேன். ஒருவேளை நீ என்னிடம் எதிர்பார்ப்பது இந்த உறவைத்தானோ? ஆனால் இவ்வளவு தூரம் பழகிவிட்டு இனி இப்படி ஒரு நகர்வை எப்படி ஏற்படுத்துவது என்று நீ இருந்துகொண்டாயோ அப்படியென்றால் ஒரு நண்பனாகிய உன்னுடைய அந்த ஆசையை நிறைவேற்ற வேண்டியது என்னுடைய கடமை அல்லவா? என் மனம் அந்த இடத்தில் என்னைக் கொண்டு வந்து நிறுத்தியது.
இன்று நினைத்துப் பார்த்தால் பலவீனமாகிவிட்ட நம் உறவை இதன் மூலம் பலப்படுத்திக் கொள்ள முடியும் என உள்ளூர நான் நினைத்திருக்கலாம் அல்லது அதுதான் என்னுடைய ஆசையாகவும் இருந்திருக்கலாம். அதை உன் நண்பர்களின் செயல் உடைத்துக் காட்டிவிட்டபோதும் அப்படியான ஒரு சிந்தனையை ஒப்புக் கொள்ளத் தயங்கிக் கொண்டு அதுதான் உன்னுடைய விருப்பம் என எவ்வளவு சாமார்த்தியமாகப் புனைந்து கொண்டு அந்தப் பாதையில் துணிந்து செல்ல ஆரம்பித்துவிட்டது என் மனம். (எல்லாவற்றையும் வெளிப்படையாக பேச வேண்டும் என்ற முடிவில் நான் இவ்வாறு எழுதுகிறேன். ஆனால் அது என்னுடைய ஆசையாக இருக்கக் கூடும் என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை)
நான் மறுநாளும் அங்கு தங்கினேன். அன்றும் நான் தூங்கவில்லை. நண்பர்கள் அனைவரும் தூங்கிவிட்டார்கள். தூங்கிக் கொண்டிருந்த உன்னை நான் இறுக்கி அணைத்தேன். என் முகம் அருகே ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த உன் முகத்தில் உன் கன்னத்தில் முத்தமிட்டேன். அப்போது என் உதடுகள் அத்தனை சூடாய் இருப்பதைப் பார்த்து நான் அச்சத்தில் வியர்த்தேன். அதற்கு மேல் என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. மேலும் என் பிடியை இறுக்கினேன். ஒரு நிமிடம் போல என்னுடைய பிடியில் இருந்த நீ திடீரென என்னை உதறித் தள்ளினாய். என்னுடைய புனைவுகள் அனைத்தும் சுக்குநூறாய் உடைந்து சிதறின.
நான் நடுங்கிப் போய்விட்டேன். என்ன செயலை செய்துவிட்டேன். இதை எப்படி சரிசெய்யப் போகிறேன். இப்படி செய்ய எப்படி எனக்குத் தோன்றியது. எந்த சாத்தான் எனக்குள் புகுந்தது என்னென்னவோ நினைத்துக் கொண்டு அன்றிரவு முழுவதும் நான் தூங்கவே இல்லை. ஜொலித்துக் கொண்டிருந்த நம் நட்பின் மீது நானே சேற்றை அள்ளிக் கொட்டிவிட்டேன். அதன் ஜொலிப்பு அவிந்துவிட்டது. இனி அவ்வளவு தான் இந்த வாழ்க்கையில் இந்த விஷயம் இவ்விதமாக முடித்து வைக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் மனதின் ஓரத்தில் எனக்கு கொஞ்சம் நம்பிக்கையும் இருந்ததைக் கண்டு எனக்கு வெட்கமாய் இருந்தது.
நீ எதுவும் பேசவில்லை. வேறு இடத்தில் சென்று படுத்துக் கொண்டாய். என்ன யோசித்தாலும் எதைச் செய்தாலும் இதை இனி சரி செய்யவே முடியாது என்ற வேதனையை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அச்சத்திலும் துயரத்திலும் மாற்றி மாற்றி என்னை நானே துவைத்துப் பிழிந்து கொண்டேன். அந்த இரவு நொடிப் பொழுதாக கடந்துவிட்டது.
மறுநாள் நான் எவ்வளவு தாமதமாக எழ முடியுமோ அவ்வளவு தாமதமாக எழுந்தேன். நீ வேலைக்கு சென்றுவிட்டாய். நான் செத்த சவம் போல் அறைக்குள் உட்கார்ந்து கொண்டே இருந்தேன். மாலையில் நீ வந்த போது நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்டேன். நீ என் முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டு இப்ப என்ன நடந்துடுச்சிப்பா என்றாய்.
ஆனால் அதற்குப் பின் நம்முடைய உரையாடலில் உயிர்ப்பில்லை. வெறும் நாடக மேடை வசனங்களைப் போல இருந்தது. பழையபடி சகஜமாய் இருக்க நீயும் எவ்வளவோ முயன்றாய். நானும் முயன்றேன். ஆனால் நம்மால் முன்பிருந்ததைப் போல ஆக முடியவில்லை. நம்மைவிட்டு வெகுதூரத்தில் இருந்த சம்பிரதாயமான மொழி நமக்கிடையே வந்து நம்மை மேலும் மேலும் வெவ்வேறு திசையில் விளக்கி இழுத்துச் சென்று கொண்டே இருந்தது. அதற்கடுத்த இரண்டு மாதத்தில் நம்முடைய உரையாடல் தேய்ந்து மறைந்துவிட்டது. நாம் வாழ்வின் கடலுக்குள் இரு தீவுகளாக அல்லது இரு மீன்களாக விலகிக் கொண்டோம்.
காலத்தால் எனக்கு வழங்கப்பட்ட ஒரு இணையற்ற நட்பை நான் விதியின் பலிபீடத்தில் வைத்து பலியிட்டுவிட்டேன் என்பதைப் புரிந்து கொண்டேன். அந்தக் கசப்பு என் வாழ்க்கை முழுவதும் படர்ந்திருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அதை நான் இனி எதைக் கொண்டும் சரிசெய்ய முடியாது
மற்ற நண்பர்களோடு பழையபடி சிரித்துப் பேச எனக்கு முழுமையாக இரண்டு வருடங்கள் ஆனது. ஆனாலும் உன் நினைவு உன் நட்பை தவறவிட்டுவிட்டோம் என்கிற ஏக்கம் எனக்குள் பெரிய இரும்பு முள்ளைப் போல உறுத்திக் கொண்டே இருந்தது.
பின்னர் இரண்டு ஆண்டுகளில் எனக்கு திருமணம் ஆனது. டிவி சேனலில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக நீ உயர்ந்தாய். புவனாவுக்கும் உனக்கும் திருமணம் ஆனது. உன் திருமணத்திற்கு அழைத்திருந்தாய். நானும் வந்திருந்தேன். கல்யாண பரபரப்பில் உன்னால் என்னோடு எதுவும் பேசமுடியவில்லை. அப்போது உன்னைப் பார்க்கும் போது நீ என் நண்பனைப் போலவே தெரியவில்லை. யாரோ வேற்றாள் மாதிரி இருந்தாய். நீ யார் நான் யார் எப்படி நமக்குள் இவ்வளவு உறவு என்றெல்லாம் யோசித்தபடியே மேடையில் உன்னை சந்திக்காமலேயே மண்டபத்திலிருந்து வெளியேறிவிட்டேன்.
அதற்குப் பின்னும் கூட நான் உன்னிடத்தில் நடந்து கொண்ட விதம் என்னை உறுத்திக் கொண்டே இருந்தது. அதற்காக மனப்பூர்வமாக உன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என நினைத்தேன்.
நான் செய்த தவறை நீ மன்னிக்க வேண்டும். பழையபடி நாம் நண்பர்களாக வேண்டும் எனக் கேட்டு நான் பலமுறை உனக்கு மெயில் செய்தேன். உன் நம்பருக்கு போன் செய்தபோது அதை நீ எடுத்துப் பேசவே இல்லை. உன்னிடமிருந்து எப்படியும் பதில் வரும் ஏனென்றால் நமக்கிடையே உள்ள பந்தம் அந்த மாதிரியானது என நானும் பல வருடங்கள் காத்திருந்தேன். ஆனால் என்னைத் தவிர்ப்பதில் உறுதியாக இருந்து நமக்கிடையே அப்படி சிறப்பான உறவெல்லாம் ஒன்றும் இல்லை என நீ நிரூபித்துவிட்டாய் என நான் அயர்ந்துபோய்விட்டேன்.
எனக்கும் உன்னை மறப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. நான் கொஞசம் கொஞ்சமாக என் முழுக் கவனத்தையும் என் வாழக்கைக்கு திருப்பினேன்.
ஏறக்குறைய பதினேழு ஆண்டுகளுக்குப் பின் என் முக நூல் கணக்கில் வந்து நீ கையசைத்து எப்படி இருக்கிறாய் எனக் கேட்டிருந்தாய். உண்மையில் அன்று நான் மிக மகிழ்ச்சியாக இருந்தேன். என்னுடைய கண்ணுக்குத் தெரியாத காயங்கள் எல்லாம் நொடிப் பொழுதில் ஆறி விட்டதைப் போல இன்பமாக இருந்தது. நாம் நம் புதிய தொலைபேசி எண்களை பறிமாறிக் கொண்டோம்.
மீண்டும் நம் பழைய உரையாடல்களைத் தொடங்கினோம். பார்த்த சினிமாக்கள் படித்த புத்தகங்கள் பாதித்த சம்பவங்கள் வாழ்க்கையின் வேடிக்கைகள் வினோதங்கள் என்ற பேச ஆரம்பித்தோம். நம் ரசனைகள் பல பரிமாணங்களை எட்டியிருந்தாலும் அவற்றின் வளர்ச்சிக்கிடையே அன்று போலவே இன்றும் இருந்த ஒத்திசைவைக் கண்டு அதிசயத்துப் போனோம். நமக்கிடையே இருந்த அந்த மிக நீண்ட காலவெளி ஒரு மணிப் பொழுதாய் சுருங்கிவிட்டிருந்தது.
இந்த நிலையில் தான் கடந்த வாரத்தில் என்னுடைய எண்ணிலிருந்து உனக்கு ஒரு கே செக்ஸ் வீடியோ பகிரப்பட்டிருந்ததைக் கண்டேன். அது எப்படி நடந்தது என இதுவரை எனக்குத் தெரியவில்லை.
எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு ராஜாவும் மந்திரியும் நண்பர்களாய் இருந்தார்கள். அவர்களுடைய நட்பை பிரிக்கும் சக்தி அவர்களைச் சுற்றியுள்ள எவருக்குமே இல்லாமல் இருந்தது. இந்த சமயத்தில் மந்திரிக்கு மோசமான விதியின் காலம் துவங்கியது. அதன் பின் ஒரு நாள் ராஜாவும் மந்திரியும் தனித்திருந்த வேளையில் ராஜா தனக்குக் கிடைத்த அரிய ரத்தினமாலையொன்றை கழற்றி ஒரு பதுமைமேல் வைத்துவிட்டு முகம் கழுவச் சென்றார். அப்போது அந்த பதுமை மந்திரியைப் பார்த்து சிரித்துவிட்டு அந்த ரத்தினமாலையை விழுங்கிவிட்டது. ராஜா திரும்பி வந்து இங்கே இருந்த ரத்தினமாலை எங்கே எனக் கேட்டார். மந்திரி அதை பதுமை விழுங்கிவிட்டதாகச் சொன்னார். இதற்கு மேல் நான் இந்தக் கதையை விளக்கத் தேவையில்லைமந்திரி சொன்னதை ராஜா நம்பினான். பதுமையை உடைத்தான். ஆனால், அதற்குள் மாலை இல்லை. நண்பன் என்பதால் என்ன சொன்னாலும் நம்பிவிடுவான் என நினைத்து, ரத்தினமாலையை பதுமை விழுங்கியதாக சொல்லி என்னை முட்டாளாக்கப் பார்த்தாயா? என ஆத்திரம் கொண்டு மந்திரியை சிரச் சேதம் செய்துவிட்டான்.
ஆமாம் சிரச்சேதம். இதுபோல எத்தனை கதைகள் சொன்னாலும் எவ்வளவு விளக்கங்கள் கொடுத்தாலும் அவையெல்லாம் கதைகள் தானே? அவை எதுவும் என்னைப் பற்றிய உன் சித்திரம் மாறிவிடும் என நான் நம்பவில்லை என்றாலும் எனக்குத் தெரிந்ததையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
எனக்கு இப்போது மிஸ்டர் பீன் திரைப்படத்தின் ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது. அதில் மிஸ்டர் பீன் ஒரு விலை மதிப்பு மிக்க ஓவியத்தை பாதுகாத்துக் கொண்டிருப்பார். தவறு எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாதே என்ற பதட்டத்தில் அவர் அதை அடிக்கடி திறந்து பார்த்துக் கொண்டிருப்பார். அப்போது அதில் ஏதோ ஒட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதை துடைத்து விடுவார். ஓவியம் லேசாக அழிந்துவிடும். பதட்டத்தில் அவர் என்னென்னவோ செய்யச் செய்ய அந்த ஓவியம் மேலும் மேலும் சிதைந்து கொண்டே போய்விடும். அது அவ்வளவு நகைச் சுவையாக சொல்லப்பட்டிருந்தாலும் இப்போது நினைத்துப் பார்க்க எனக்கு அவ்வளவு துயரம் மேலிடுகிறது.
திடீரென எனக்கு எல்லாவற்றின் மீதும் வெறுப்பு ஏற்படுகிறது.
அன்புடன்,
உன் நட்பை இழந்த நண்பன்.