இடைவேளை

அம்மா ஈரம் சொட்டும் கூந்தலின் நுனி முடிச்சிட்டிருந்தாள். காதோரம் சரியும் முடியில் ஒரு விரல்கடையளவு இரண்டு பக்கமும் எடுத்து உச்சியில் ஒரு ஹேர்பின் குத்தியிருந்தாள். கருநீலப் பூக்கள் சிதறியிருந்த பூனம் புடவையைத் தூக்கி செருகியிருந்தாள். கையில் பித்தளை அரிக்கஞ்சட்டி இருந்தது.

கூடத்தில் பிள்ளைகள் அங்குமிங்கும் ஓடி விளையாடின. விரிக்கப்பட்டிந்த பவானி ஜமுக்காளம் சுருங்கியும், மடங்கியும் கிடந்தது. அதில் கால் சிக்கிப் பிள்ளைகள் விழுவதும், எழுவதுமாயிருந்தனர். அரிசி களைந்த தண்ணீரைத் தொட்டி முற்றத்தில் ஊற்றிவிட்டு நிமிர்ந்தவளுடைய நெற்றியில் மினுங்கிய வியர்வையில் சிங்கர் சாந்துப்பொட்டு கோடுபோல் மூக்கில் வழிந்திருந்தது. வளர்மதியின் பெண் முழு அங்கி உடையை இரு கைகளாலும் தூக்கிப் பிடித்துக்கொண்டு பிரயத்தனப்பட்டு ஓடிக்கொண்டிருந்தது.

” காத்தோட்டமா ஏதாவது கவுனப் போட்டு வுடறத வுட்டுட்டு இந்த வளரு ஏன் இம்மாம் பெரிய பாவாடைய போட்டு வுட்ருக்கா….”

யாரிடம் என்றில்லாமல் பொத்தாம் பொதுவாக கேட்டு வைத்தவள் சமையல்காரர் குரல் கொடுக்க உள்ளுக்கு விரைந்தாள்.

” கத்திரிக்கா கொத்சுக்கு வயலட் கலர் கத்திரிக்கா கேட்டுருந்தனே. “

” இருந்துச்சே….”

கூடத்தில் ஒரு மூலையில் மூங்கில் தட்டுகளில் பரப்பி வைக்கப்பட்டிருந்த காய்கறியிலிருந்து கத்தரிக்காய்களைப் பிரித்து ஒரு முறத்தில் அள்ளியவளுக்கு மூச்சு வாங்கியது. அதிகாலை மூன்று மணிக்கு எழுந்தவளை வேலைகள் வரிசை கட்டி நின்று அயரவைத்தன. வளர்மதி அங்கேயும், இங்கேயும் நின்று ஒப்பேத்திவிட்டுப் பக்கத்து வீட்டுப் புனிதாவிடம் கதையளக்கப் போய்விட்டாள்.

” அங்கதான் வேல, வேலன்னு கெடந்தழியிறா. இங்க வந்தாளாவது நாலு பேர்ட்ட பேசிக்கிட்டு கலமுலான்னு கெடக்கட்டும்” என்று சொல்லிவிடுவாள் அம்மா.

சின்னவளுக்கு மெகந்தி போட டவுனிலிருந்து ஆள் வந்துவிட்டிருந்தது. போய்ப் போட்டுக்கொண்டால் காசு குறைச்சல். அவர்களே வீடு தேடி வந்து போட்டுவிட்டால் ரெட்டை ச் செலவு. ஆட்டோவில் டவுனுக்குப் போய் வரும் செலவைக் கணக்கிட்டால் கொஞ்சம்தான் அதிகம். அதனால் வீட்டுக்கு வரச்சொல்வதே சரியென்று பட்டது.

குடலையில் பூ பந்து, பந்தாக திரண்ட வெண்ணெய் போல சுற்றி வைக்கப்பட்டிருந்ததில் வீடு முழுக்க மல்லிகையின் வாசனை.

” நாளன்னிக்கு கல்யாணத்துக்கு இன்னிக்கு எதுக்கு பூ…..வர்றவுங்களுக்கு நாளையிலிருந்து குடுத்தா போறாதா….?”

அப்பா கேட்டுப் பார்த்தார். அம்மாவுக்கு அதில் உடன்பாடில்லை.

” அங்க பூசணிக்கா போறது தெரியாது. கடுகு போறத காரியமா நோட்டம் வுட்டுக்கிட்டிருக்க வேண்டியது.”

அம்மாவுக்குத் தலையில் பூவிருக்க வேண்டும். யாரைப் பார்த்தாலும் துண்டுப்பூவை வெட்டித் தருவாள். பூக்காரனிடம் இரண்டு முழம் வாங்குவாள். அதைப் பங்கு பிரிக்கும் சூட்சுமம் அவள் மட்டுமே அறிந்தது.

” எங்க வீட்டு சனம், ஒங்க வீட்டு ஆளுங்கன்னு ஒரு அம்பது பேராவது ரெண்டுநா முந்தியே வந்துடமாட்டாங்களா….வந்தவங்களுக்கு இம்மாம் பூ குடுத்தா என்ன குறைஞ்சா போயிடுவீங்க…..”

வலது கையை விரித்து, குழித்து கட்டைவிரலை நடுவிரலின் மத்தியில் வைத்துக்கேட்டாள். அ ப்பா ஒன்றும் பேசாமல் துண்டால் பிடரியைத் துடைத்தபடி அகன்றார், சின்னவளுக்குப் புடவைக்கு பொருத்தமாக மாலை கட்ட எட்டாயிரம் ஆகும் என்றார் கடைக்காரர், அப்பாவுக்கு மயக்கமே வந்துவிட்டது. ஒருநாள் கூத்து அதுவும் நாலைந்து மணிநேர கூத்து. அப்பா வேண்டாமென்றார். மகளின் முகம் சுணங்கியதை அம்மா பார்த்துவிட்டாள்.

” அந்த ஒருநாதான் மாலை போட்டுக்கிட்டு நிக்க முடியும். மய்க்காநா போட்டுக்க முடியுமா…….செய்யிறத நெறைவா செய்யிங்களேன். இதுல என்ன பிசினாறித்தனம். “

தனியே அழைத்துப்போய் வைதாள். அப்பா மெதுவாக தலையசைத்தார். அம்மாவுக்கு செய்து முடிக்க ஆயிரம் வேலைகளிருந்தன. இரண்டே இரண்டு கைகளை வைத்துக் கொண்டு அவள் அல்லாடிக்கொண்டிருந்தாள். சுத்துப்பட்டு வேலைகளுக்கு ஆட்களிருந்தனர். இருந்தாலும் அந்த ஆட்களும் அவளையே சார்ந்திருந்தனர். வளர்மதியின் பெண்ணும் நடுநடுவில்,

” பாட்டி, பாத்தூம் போகணும்…” என்றது.

” கக்கா வருது ” என்று கைகளைத் தூக்கிற்று. தூக்கிக்கொண்டு கொல்லைக் கடைசியிலிருந்த கக்கூசுக்கு ஓடினாள்.

” கமலா, குலதெய்வத்துக்கு என்னிக்கி பத்திரிகை வச்சீங்க…..?”

திடீர், திடீரென்று கேள்விகள் வந்தன. அதற்கும் நின்று பதில் சொல்ல வேண்டியிருந்தது. உறவுக்காரப் பெண்கள் ஓரிருவர் பேருக்கு இரண்டு வேலைகள் செய்துவிட்டு அரட்டையடிக்க ஆரம்பித்தனர். வளர்மதி மெகந்தி போட்டுக்கொள்ள தங்கையுடன் அமர்ந்துவிட்டாள். பல ஜோடி கைகள் நீண்டன. அப்பாவுக்கு வியர்த்துவிட்டது. இதை அவர் எதிர்பார்க்கவில்லை. தெருப்பிள்ளைகள் வேறு வந்துவிட்டனர். உள்ளங்கைகளின் அளவு வைத்து விலை சொன்னார்கள். அம்மாதான் புடவையிடுக்கில் அவ்வபோது சேர்த்து வைத்திருந்த பணத்தைக் கொடுத்து சமாளித்தாள். அப்பா கண்டுகொள்ளவில்லை. மேம்போக்காக இருந்துவிட்டார்.

” பொண்ணுக்கு அடைப்பா போட்டு விடுங்க. மத்த கைகளுக்கு பேரு பண்ணிடுங்க.”

அம்மா மெல்ல கேட்டுக்கொண்டாள். வளர்மதி காதில் வாங்கிவிட்டு முறைத்தாள்.

” உனக்கில்லடி. மத்தவங்களுக்கு….”

அம்மா அவள் கூந்தலில் சரிந்து தொங்கிய பூவை சரிசெய்து விட்டாள்.

” மாப்ள எப்ப வர்றாராம்….?”

பெரியம்மா கேட்டாள்.

” நைட்டு டிரெயினேறி காலையில வந்துடுவாரு…….”

அம்மாவுக்கு முகம் கொள்ளாப் பூரிப்பு. வளர்மதி வீட்டுக்காரனுக்கு மூத்த மாப்பிள்ளை மரியாதைக்கு குறைச்சலிருக்காது. அப்படியொரு கவனிப்பு நடக்கும். எண்ணெயில் குளித்த பொன்முறுகல் பணியாரமென்றால் அவனுக்கு உயிர். தொட்டுக்கொள்ள வெங்காய சட்னி வைத்து விட்டால் போதும். அவன்பாட்டுக்கு டிவி பார்த்தபடியே பாஸ்கட் பால் ஆடி விடுவான்.

” நீ அம்மியில அரைக்கிற வெங்காய சட்னின்னா அவருக்கு ரொம்ப இஷ்டம்….”

வளர்மதிக்குப் பெருமையில் குரல் பொங்கிவழியும். அம்மா முற்றத்து விளிம்பில் கிடக்கும் அம்மியைக் கழுவிவிட தயாராகிவிடுவாள். சின்ன வெங்காயத்தைப் பரவலாக அம்மியில் வைத்துக் குழவியை நகர்த்தி, நகர்த்தி நசுக்கி உப்பு, வரமிளகாய் சேர்த்து அரைத்து வழித்தால் சட்னி ஆரஞ்சும், சிவப்பும் கலந்த நிறத்தில் மினுமினுக்கும். அதன்மேல் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி கலந்து விடும்போதே அம்மாவின் முகத்தில் அதை சப்புக்கொட்டி தின்னும் மருமகனின் பரவசத்தைக் கண்டுவிட்ட திருப்தி உண்டாகிவிடும். அதுமட்டுமில்லாமல் அடை – அவியல், தேங்காய் பர்பி, உருளைக்கிழங்கு போண்டா, தயிர்வடை என்று பட்டியல் நீளும்.

” கல்யாண வேலையோட நீ பாட்டுக்கு அதையும், இதையும் இழுத்து வுட்டுடாத……” என்று அப்பா எச்சரித்திருந்தார்.

வளர்மதிக்குப் பட்டுப்புடவை, குழந்தைக்குப் பட்டுப்பாவாடை, மருமகனுக்குப் பட்டு வேட்டி, சட்டை எல்லாம் பத்திரிகையுடன் வைத்து தந்தபோதே அம்மா குழைந்துவிட்டாள்.

” மாப்ள, நம்ம வீட்டுக்கு நீங்கதான் புள்ள….. அதனால நீங்க முன்னாடி வந்து நின்னு சிறப்பா செஞ்சு குடுக்கணும். “

குரல் தழைந்து வந்தது.

” ஏதோ ஒசத்தியா பேரு சொல்றாங்களே. அந்த சட்டத்துணிதான். மாப்ளைக்குப் புடிச்ச நெறமாத்தான் எடுத்திருக்காங்க அப்பா. அவர்ட்ட காட்டு…….”

வளர்மதியை நச்சரித்தாள். துணிமணி எடுக்க அழைத்தபோது அவனுக்கு பேங்கில் ஆடிட்டிங் சமயம். வளர்மதிக்கு மகளை சமாளிப்பது பெரிய சவால். அவள் ஓரிடத்தில் நிற்க மாட்டாள். துருதுருவென்று ஓடிக்கொண்டிருக்கும் அவளைக் கண்காணிப்பதே பெரும் வேலை. அம்மாவிடம் தள்ளிவிடலாம்தான். ஆனால் குறுக்கும், மறுக்கும் ஓடுபவளை அம்மாவால் பிடிக்க முடியாதே. அதனால் வளர்மதி அரைமனதோடு இருந்துவிட்டாள். சின்னவள் வாட்ஸ்அப்பில் ஒவ்வொரு புடவையாய் அனுப்ப அதிலிருந்து ஒன்றைத் தேர்வு செய்துகொண்டாள். அப்படியும் நேரில் பார்த்தபோது நிறம் வேறு மாதிரி இருப்பதாக குறைபட்டுக் கொண்டாள்

” பச்சக்கலர் அப்ப வேற மாதிரி தெரிஞ்சுது…..”

அவள் விரல்கள் புடவையைத் தடவிப் பார்ப்பதை அம்மா கவனித்து விட்டாள். அவசரமாக பத்திரிக்கையை எடுத்து அதில் மின்னும் வளர்மதி புருஷன் பெயரைப் பெருமையாக காண்பித்தாள்.

” இந்த பாத்தியா…. இதுல மாப்ள பேரு தங்க

நெறத்துல தகதகங்குது.”

வளர்மதிக்குப் புடவையை விட்டு கண்ணிறங்கவில்லை.

” நானும் வந்திருக்கணும். தப்பு பண்ணிட்டன். இந்தப் பிசாச வச்சுக்கிட்டு சமாளிக்க முடியாதுன்னு நெனச்சது தப்பாப் போச்சு. சரிகையும் ஒரு கோட்ட இழுத்து வுட்டாப்ல ரொம்ப மெல்லிசா இருக்கு.?

அவளுக்கு குரலில் சுருதி குறைந்திருந்தது. அம்மா எழுந்து அப்பாவிடம் போனாள். அப்பா தெருப்பக்கம் அமர்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தார்.

ஒரு ரெண்டாயிர் ரூவா குடுங்க…..”

நிலைப்படியருகில் நின்று சன்னமான குரலில் கேட்டாள். குழந்தை இடுப்பிலிருந்து பாட்டி முடியில் தொங்கிய மல்லிகைச் சரத்தை உதிர்த்துவிட்டு கொண்டிருந்தது. அப்பாவுக்கு சுள்ளென்று ஏறியது. எதுவும் பேசாமல் C.U.B. என்றெழுதியிருந்த ஹேண்ட்பேக்கிலிருந்து ரூபாய்த் தாள்கள் நான்கை உருவித் தந்தார்.

” பாட்டி, எக்கா……?”

குழந்தை தலையாட்டிக் கேட்டது.

” எல்லாமே உனக்குத்தான்டி ராசாத்தி….”

அம்மா முட்டி, முட்டிக் கொஞ்சினாள். முட்டிக் கொஞ்சுவது அவள் பழக்கம். அப்போது பற்களை இறுகக் கடித்துக் கொள்வாள். டீப்பாயிலிருந்த பத்திரிக்கை ஃபேன் காற்றுக்குப் படபடத்தது. அருகில் கொட்டுத் தாம்பாளத்தில் கிடந்த பழங்களின் கலவையான மணம் ஒரு மாதிரி வாசனையை உண்டாக்கிற்று. அம்மா பணத்தை ஜாக்கெட்டில் சொருகிக்கொண்டாள்.

பழங்களைப் பிரித்து இரண்டு பைகளில் போட்டுப் பிரிட்ஜில் வைத்தாள். புடவை, வேஷ்டியை அட்டைப்பெட்டிக்குள் வைத்து கட்டைப்பையில் பத்திரப் படுத்தினாள். சமையல்உள்ளில் வளர்மதி சாம்பாருக்கு வெங்காயம் தாளித்துக் கொண்டிருந்தாள். குழந்தையை அவள் பக்கம் நகர்த்தி விட்டு அம்மா சமையல் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள்.

” விடு நான் ஆக்கி, எறக்கிடறேன். சேமியா எதுக்கு எடுத்து வச்சிருக்க….?”

” கல்யாணப் பத்திரிக்கை குடுக்க வந்தவங்களுக்குப் பாயசம் வச்சி சமைச்சுப் போட வேணாமா…?”

வளர்மதியின் குரலும், முகமும் தன்னியல்பிலிருந்து மாறி சுணங்கியிருந்தது.

” பாயசமெல்லாம் வேணாம்டி. குழம்பு, கறி போதும். வரவர எது தின்னாலும் உங்க அப்பாவுக்கு செரிக்க மாட்டேங்குது.”

அம்மா நீரில் கிடந்த வெங்காய சருகுகளை சேகரித்துக் கொல்லையில் கொட்டிவிட்டு வந்தாள். அடுப்பில் வாணலியை வைத்து வெங்காயம் தாளித்து, வெந்நீரில் போட்டு வைத்திருந்த காலிஃப்ளவர் பூக்களைக் கொட்டிக் கிளறி விட்டாள். அப்பாவுக்கு காலிஃப்ளவர் என்றால் உயிர். மசாலா, காரம் போட்டு வறுத்துக் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்.

கிராமத்தில் காலிஃப்ளவர் கிடைப்பதில்லை என்று குறைபட்டுக் கொள்வார். வளர்மதி ஊருக்குப் போகும்போது காலிஃப்ளவர் வாங்கிப்போவாள். அம்மாவின் கைமணம் பெண்ணுக்கு வந்துவிட்டதாக அப்பா புகழ்ந்தபடியே சாப்பிட்டார்.

” நான் சமைக்கல…. அம்மாதான் சமைச்சது.”

வளர்மதி எங்கோ பார்த்தபடி சொன்னாள். அம்மாவுக்கு வியர்த்து வழிந்தது. ஜாக்கெட் முதுகோடு ஒட்டிக்கொண்டு கசகசத்தது. கிளம்பும்போது மகள் கையில் பணத்தை வைத்து அழுத்த அவள் முகத்தில் படிந்திருந்த நிழல் விலகியிருந்தது.

” ஜாக்கெட்டுல கல்லு, ஜமுக்கியெல்லாம் வச்சு தைக்கிறாங்களே. அந்த மாதிரி தச்சிக்க. சின்னப்புள்ள இப்பப் போடாம எப்ப போடுவ….இதுல ரெண்டாயிர் ரூவா இருக்கு. போதுமில்ல…..?”

அம்மாவின் தலை மெதுவாய் அசைந்தது.

” போதும், போதும்…..”

வளர்மதி எங்கோ பார்த்தபடி முனகினாள்.

வளர்மதி பதினைந்து நாட்களுக்கு முன்பே வந்து விட்டாள். அக்காவும், தங்கையும் சேர்ந்து இரவு பன்னிரண்டு, ஒரு மணி வரை பேசித் தீர்த்தார்கள். பகல் பொழுதுகளில் முக்கால்வாசி டவுனிலேயே கழிந்தது. ஃபேசியல் செய்ய, புடவைக்குப் பொருத்தமாக வளையல்கள் வாங்க, விடுபட்ட எவர்சில்வர் சாமான்கள் பொறுக்கியெடுக்க என்று அவர்கள் டவுனுக்குப் போனமணியமாய் இருந்தார்கள். அம்மா குழந்தைக்குப் பொறுப்பேற்க வைக்கப்பட்டாள். அப்பாவுக்கும் பேத்தி என்றால் உயிர். ஆனால் பத்து நிமிடம் பார்த்துக்கொள்ள பொறுமையிருக்காது.

” இங்க பாரு குட்டி தாவாரத்துல ஒண்ணுக்குப் போயிட்டா……. நெலப்படி தடுக்கி வுழுந்து அழுவுறாப் பாரு…….” என்று ஏதொன்றுக்கும் அவர் அம்மாவை அழைத்தார். அம்மா பாதி சமையலில் போட்டுவிட்டு ஓடி வருவாள்.

” கண்ணூ…….வுழுந்துட்டியாடி சரி, சரி அழுவாத பாட்டி பா காட்டுறேன் வா….”

முந்தானையில் முகத்தை அழுந்தத் துடைத்து விட்டு அப்படியே வாரிக் கொள்வாள். பூரணி அத்தை வீட்டில் பசு மாடு கன்று போட்டிருந்தது. அழும் குழந்தைக்கு அது பொம்மை போல. அம்மாவுக்கு அடிக்கடி அங்கு செல்ல வேண்டிய நிலை வந்தது. இடுப்பில் குழந்தையை இடுக்கியபடி சற்று தூரமாய் நின்று காட்டுவாள். தெருவில் போவோர், வருவோர் வேலிப்படலருகில் வந்து நின்று கல்யாணம் பற்றி விசாரிப்பார்கள்.

” நாளு நெருங்கிடுச்சு போல…..”

” ஆமா….எண்ணி ஆறு நாளுதான் இருக்கு.”

அம்மாவின் நினைவு காத்துக் கிடக்கும் வேலைகளிலிருக்கும்.

” பெரியா பாப்பா மொவளா……அப்புடியே அச்சு அசலா அத மாதிரியே இருக்கு.”

வேலிக்கு இந்தப்புறமிருந்து கன்னத்தை வழிப்பார்கள். குழந்தை தலையாட்டி முகத்தைச் சுருக்கும்.

” போவமா தங்கம்….. பாட்டிக்கு வேல கெடக்கு.”

” மாத்தேன். பா பாக்கணும்.”

குழந்தை கால்களை உதைத்துக் கத்தும்.

” ஒன் தலையில கட்டிட்டுப் போயிட்டாளுவோளா……”

பூரணி அத்தைக்குப் பொறுக்காது.

” கல்யாண வீட்டுல வேலைக்குப் பஞ்சமிருக்காதுன்னு இந்தக் குட்டிகளுக்கு தெரியாதா….. புள்ளைய வுட்டுவுட்டுட்டு கெளம்பிடுறாளுக……”

அம்மா சிரித்து வைப்பாள். வெளியூருக்குப் பத்திரிக்கை தபாலில் அனுப்பியாகிவிட்டது. உள்ளூருக்கு மட்டும் அம்மாவும், அப்பாவும் நேரில் சென்று பத்திரிகை வைத்தார்கள். சரிகை வேலைப்பாடு செய்த புடவையில் நாலைந்து கொடியில் கிடந்தது.

” ஒரே பொடவையக் கட்டிக்கிட்டுப் போவாதம்மா. இன்னிக்கு ஒண்ணு, நாளைக்கு ஒண்ணா கட்டிக்கிட்டு போ.”

வளர்மதி பிடிவாதம் பிடித்து சாதித்துக் கொண்டாள். வியர்வை கசகசப்பில் இடுப்புப்பகுதி நசநசத்திருக்கும் புடவைகளை அப்படியே மடித்து வைக்க விருப்பமில்லாமல் அம்மா கொசுவிப் போட்டு வைத்தாள். பச்சை, சிவப்பு, நீலம், ஆரஞ்சு வண்ணங்கள் முற்றத்தில் அடித்த வெயிலுக்குப் பளீரென்று மின்னின. முக்கால்வாசிப் பத்திரிகை விநியோக வேலை முடிந்து விட்டாலும் அவ்வபோது அப்பாவுக்கு விடுபட்டவர்கள் முகம் ஞாபகத்துக்கு வரும்.

” நடுத்தெரு சேகருக்குப் பத்திரிக்கை வைக்க மறந்தாச்சு. சாயந்திரம் போயிட்டு வந்துடுவோம்” என்பார் திடீரென்று.

” தெக்கு மட விளாகத்துல பத்திரிக்கை வச்சப்ப செல்லத்தொரை ஊர்ல இல்ல. வந்ததும் குடுக்கலாம்னு இருந்தன். மறந்து போச்சு பாத்தியா……” என்று சோற்று உருண்டையை வாய்க்கருகில் கொண்டு சென்றவர் அப்படியே நிறுத்தி வைத்து விட்டு ஒருநாள் கேட்டார்.

அம்மா அதிரசத்துக்கு மாவிடித்து வைத்திருந்தாள். வீட்டு தெய்வத்துக்கு அதிரசம் படைக்கவேண்டும். மாவில் வெல்லப்பாகு சேர்த்து நான்கு நாட்களாவது புளிக்க வைக்க வேண்டும். அப்போதுதான் அதிரசம் மெத்து, மெத்தென்று மிருதுவாக இருக்கும். வெல்லப்பாகு சேர்க்கும் வேலையை காத்திருப்பில் போட்டுவிட்டு குழந்தையையும், குங்குமத்தையும் எடுத்துக் கொண்டு அம்மா, அப்பா பின்னோடு போனாள்.

சேகர் வீட்டில் உட்கார வைத்து உபசரித்தார்கள். அம்மாவுக்கு இருப்பு கொள்ளவில்லை. அதிரச மாவு அலைக்கழித்தது. குழந்தை ஓரிடத்தில் உட்காராமல் பென்ச்சில் ஏறுவதும், இறங்குவதுமாயிருந்தது. அப்பா கை வைத்த மர நாற்காலியில் சட்டமாக அமர்ந்து கல்யாணக் கதை பேசிக்கொண்டிருந்தார். சேகர் அருகில் ஒரு ஸ்டூலில் கால்கள் குறுக்கி அமர்ந்து பவ்யமாக கேட்டான். அம்மா கீழே விரிக்கப்பட்டிருந்த பாயில் அமர்ந்து குழந்தையைத் தவிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அதிரச மாவில் வெல்லம் சேர்த்து வைத்துவிட்டு படையலுக்குத் தேவையான சாமான்களுக்கு லிஸ்ட் போட வேண்டும். ராச்சாப்பாட்டுக்கு உப்புமா கிண்ட வேண்டும். வளர்மதியும், சின்னவளும் அசந்து போய் வருவார்கள். வந்து முகம், கை, கால் அலம்பி உடைமாற்றி வாங்கி வந்ததைப் பரப்பி சரி பார்ப்பார்கள். குழந்தை அருகில் போனால் வளர்மதி கத்துவாள்.

” அம்மா, புள்ளையத் தூக்கும்மா. எல்லாத்தையும் கலைச்சு வுடறா………..”

அம்மா ஓடி வருவாள். இரண்டு நாட்களாக அவளுக்கு தொடையிடுக்கில் எரிச்சல் அதிகமாயிருந்தது. நடக்கிற நடையில் இரு தொடைகளும் உராய்ந்து தோல் வறண்டு வழுவுண்டு போயிருந்தது. படுக்கும்போது தேங்காய் எண்ணெய் தடவிக் கொண்டாள். இருந்தும் எரிச்சல் குணமடையவில்லை.

வெள்ளிக்கிழமை வீட்டு தெய்வத்திற்கு படையல் போட்டு முடிப்பதற்குள் அம்மாவுக்கு ஆசு, ஊசென்று ஆகிவிட்டது. சாமியறை சுவரில் ஏழு திருநீற்றுப் பட்டை குழைவுகள். அவைகள்தான் வீட்டு தெய்வங்கள். சுமங்கலிகளாக இருந்தவர்களை வீட்டு தெய்வங்களாக வழிபடுவது வழக்கம். வடை, சுழியன், அதிரசம், சர்க்கரைப்பொங்கல், குழம்பு, காய் என்று சமையல்கட்டு அதகளப்பட்டது.

அம்மா அதிகாலையிலேயே எழுந்து தலைக்கு நீரூற்றி ஈர உடுப்போடு விபூதிப்பட்டை குழைவுகளை கலைத்துப் புதிதாய் போட்டாள். பின் ஆசாரப்புடவை உடுத்திக் கொண்டு பதார்த்த தயாரிப்பில் மூழ்கினாள். ஊரிலிருந்த உறவுக்கார வீடுகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. வீட்டில் விசேஷமென்றால் இப்படி அழைப்பது வழக்கம். வந்தவர்களுக்கு பத்து மணிக்கு ஒரு சுற்று காபி கொடுத்தாகிவிட்டது. பெண்கள் கூடத்திலமர்ந்து கல்யாண கதை கேட்டனர். வளர்மதிக்கும், சின்னவளுக்கும் வாய் ஓயவில்லை. வளர்மதி மட்டும் அவ்வபோது எழுந்து சமையல்கட்டு பக்கம் போய்விட்டு வந்தாள்.

” தேங்காயத் துருவிக் குடு……. ?

அம்மா பத்து, பத்து வடைகளாக தட்டிப் போட்டு கொண்டிருந்தாள். வளர்மதிக்கு ஒன்றிரண்டு வேலைகள் கொடுக்க அடிக்கடி குரலுயர்த்தி அவளைக் கூப்பிட்டாள்.

” வளரு, எலையெல்லாம் கழுவி வையி…….”

வளர்மதிக்கு சொன்ன கதையைப் பாதியில் விட மனமில்லை.

” ஆயிர்ரூவா தையக்கூலி. நுணுக்கமா கல் ஒட்டி, ஜமிக்கி வச்சி தைக்கிறாங்கல்ல. காசு கூடத்தான் ஆவும். “

அந்தப் பெண்மணியின் கையிலிருந்த ஜாக்கெட்டை நுனி விரலால் வாங்கி பீரோவில் வைத்துப் பூட்டினாள்.

” பத்தரை பன்னண்டு முடிஞ்சதும் எலைப் போட்ரணும். “

அம்மாவுக்கு கிறுகிறுத்து வந்தது. ஈரக்கூந்தல் பிடரியில் கசகசப்பை உண்டாகிற்று. அடுப்பின் அனல் சூடு முகத்தைச் சிவக்க வைத்திருந்தது.

சரியாக பதினொன்றே முக்காலுக்கு அம்மா சமையலை முடித்திருந்தாள். சாமியறையில் கலசம் வைத்து பட்டுப்புடவைகள், நகைகளை வளர்மதி அழகாக அடுக்கினாள்.

” எந்த எடத்துலேருந்து ஆரம்பிக்கணும்னு எனக்குத் தெரியாது. நீயே பரிமாறிடும்மா……”

அவள் நகர்ந்து கொள்ள அம்மா மெதுவாய் முன்னே வந்தாள். ஏழு இலைகளையும் இடத்திற்குத் தக்கவாறு நுனி பார்த்துப் போட்டு பதார்த்தங்களைப் பரிமாறி சாம்பிராணி காட்டி, தேங்காய் உடைத்து, நீர் விளாவி, சூடம் காண்பித்து நிமிர்ந்த அம்மா ஒரு நிமிடம் கண்கள் மூடி கூப்பிய கைகளோடு அப்படியே நின்றிருந்தாள். பொட்டுபொட்டாய் பூத்திருந்த வியர்வைத்துளிகளோடு முகம் பளபளவென்றிருந்தது.

அம்மா மாநிறத்தில் துடைத்து வைத்தது போலிருப்பாள். பூஞ்சையான உடல்வாகு. கல்யாண வேலைகளில் மேலும் ஒரு சுற்று இளைத்துப் போயிருந்தாள். நைவேத்தியம் முடித்து தாழ்வாரத்தில் இலைபோட்டு வந்திருந்தவர்களை உபசரித்து சாப்பிட்ட இலைகள் எடுத்தபோது மணி மூன்றாகியிருந்தது. அம்மாவுக்குப் பசி மரத்துப் போய்விட்டிருந்தது. பேருக்குக் கொஞ்சம் சர்க்கரைப்பொங்கல் சாப்பிட்டு எழுந்தவள் தூணைப் பிடித்தபடி சிறிது நேரம் போல அப்படியே நின்றாள்.

வளர்மதி கல்யாணத்தில் முழங்கால் வலி ஆரம்பித்தது. இப்போது மத்திம நிலையிலுள்ளது. அவ்வபோது வலது முழங்கால் விண், விண்ணென்று தெறிக்கும். நின்று, நிதானித்து ஒருவாறு சமாளித்துக் கொண்டு அடுத்த அடி எடுத்து வைப்பாள்.

மண்டபத்துக்குக் கிளம்ப ஒரு வேன், ஒரு பஸ், இரண்டு கார்கள் தயாராக நின்றன. மண்டபம் டவுனிலிருந்தது. கிட்டத்தட்ட முக்கால் மணி நேரப் பிரயாணம்.

” எல்லாம் எடுத்து வச்சிக்கிட்டியா….. சும்மா, சும்மா திரும்பி வர முடியாது.”

அப்பா புத்தம்புது வேட்டியை இறுக்கிக் கட்டிக் கொண்டு அம்மாவின் பரபரப்புக்கு மத்தியில் ஒரு கேள்வியை விட்டெறிந்தார். அம்மா உள்ளேப் போவதும், வருவதுமாயிருந்தாள்.

” அத்தாச்சி, நீங்க ஒரு வா காபியாவது குடிச்சீங்களா….?”

இடைநிறுத்தி விசாரித்த விசாலத்திடம் சிரித்தபடி ஏதோ பதில் சொல்லி அவளை பஸ்சுக்கு அனுப்பிவிட்டு தம்பதிகள் திரும்பி வந்ததும் ஆரத்தி காட்ட வசதியாக பித்தளைத் தாம்பாளம், குங்கும டப்பா, தீப்பெட்டி, சூடம், வெற்றிலை எடுத்து சன்னல் திட்டில் வைத்தாள். ஏற்றிய விளக்கின் சுடர் காற்றில் அசைந்தாடியது.

” கல்யாணம் நல்லபடியா முடியணும் சாமி……..”

கணக்கிலடங்காத முறைகள் மனம் அதை முணுமுணுத்து விட்டது. வரன் தகைந்ததிலிருந்து வேலைகள், அலைச்சல் உடம்புக்கு…. அத்தோடு மனமும் சரிசமமாக அல்லது அதற்கு மேலாக இயங்கிக்

கொண்டேயிருந்தது.

‘ குறையில்லாம, தடங்கலில்லாம கல்யாணம் முடியணும்.”

வளர்மதி தங்கையோடு காரில் ஏறிக்கொண்டாள். வளர்மதியின் புருசன் முன்னால் அமர்ந்து கொண்டான். அம்மா அவனை வழக்கம் போல கவனிக்கத் தவறவில்லை. முதல் பந்தி சாப்பாட்டில் அவன் இருந்தாகவேண்டும்.

” மாப்ளய கூட்டிக்கிட்டு வாங்க……? என்று அப்பாவுக்கு சாடை காட்டுவாள். புது டிகாஷனில் அறைக்குக் காபி போகும்.

” அத்தான் வந்திருக்காரு. கொஞ்ச நேரம் வந்து பேசிட்டு போகலாமில்ல….”

அந்தத் தெருவிலுள்ள விடலைப்பயல்களை விடாப்பிடியாக அழைத்துப் பேச வைப்பாள். மூன்று வருடங்களுக்குப் பிறகும் அவன் புதுமாப்பிள்ளை பொலிவோடிருந்தான்.

அம்மா வேனில் ஏறிக்கொண்டாள். இருக்கைகள் நிரம்பியிருந்தன. கடைசி இருக்கையில் ஆளில்லை.

” யத்த, பொடவையில பில்லு கிழிக்காம வுட்ருக்கப் பாரு…..” பாப்பாத்தி நிறுத்தி பில்லைப் பிரித்து ஏறிய கடைசி சீட்டுக்கு வந்தவள் முருகா என்று அமர்ந்தாள். மூட்டு வலி மூச்சு விடுவது போல சீரான இடைவெளியோடு வலித்துக் கொண்டிருந்தது. இரண்டு கார்களும் கிளம்ப பின்னாலேயே வேன் குலுங்கலோடு கிளம்பியது.

சன்னல் வழியே வெயில் படாத காற்று குளுந்து வீசியது. அம்மாவுக்குக் கண்கள் சொருகிக் கொண்டன. கல்யாணம் நிச்சயமானதிலிருந்தே அவளுக்கு சரியான தூக்கமில்லை. கல்யாணத்திற்காக கொஞ்சம் கடன் வாங்க வேண்டியிருந்தது. அத்தோடு விசேஷம் நன்றாக நடந்து முடிய வேண்டுமே என்கிற கவலை வேறு. அடிக்கடி விழிப்பு தட்டிற்று. அதனால் அடித்துப்போட்டது போன்ற உறக்கங்கள் அவளுக்கு வாய்க்கவில்லை. நன்றாக தூங்கிய உணர்வின்றி அவள் அலமலந்து போனாள்.

தூளியாட்டம் போல வேன் அசைந்து விரைய, அம்மாவுக்குக் கண்கள் சொக்கிக் கொண்டன. உள் திறப்புகள் அனைத்தும் தாழிட்டுக் கொள்ள, சிறு குழந்தையின் புன்னகை தேசத்துக்குள் புகுந்துவிட்டவள் வாய்பிளந்து, தலைசாய்த்து உறங்கினாள்.

4 Replies to “இடைவேளை”

  1. நடுத்தரகுடும்பத்து கல்யாண வேலைகளை, பாடுகளை, பதைபதைப்புகளை ரம்மியமாகக் கிருத்திகா எடுத்துரைத்துள்ளார். ஓர் ஆவணப்படம் பார்த்த உணர்வு.வாழ்த்துகள், கிருத்திகா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.