விற்பனை

எம்.டி வாசுதேவன் நாயர்

தமிழில்: தி.இரா.மீனா

அந்தப் பெரிய நகரத்தின் பூகோளம் அவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. .போனில் தரப்பட்டிருந்த விவரங்களைப் புரிந்து கொள்வது அவ்வளவு கடினமானதாக இல்லை.சித்தி விநாயகர் கோவிலின் அருகிலிருந்த பஸ் நிலையத்தில் இறங்கிய பிறகு, கடற்கரைக்கு அருகிலுள்ள சாலை அதுதானா என்பதைப் பொருத்தமான சில கேள்விகளால் உறுதி செய்து கொண்டு அவன் நடந்தான். அவன் காரில் வருகிறானா என்று அந்தப் பெண் கேட்ட போது, தான் டாக்சியில் வருவதாக சுனில்ராய் சொன்னான்—தேவையற்ற வகையில்பொய்ப் பெருமை பேசியதற்காகத் தன்னையே கடிந்து கொண்டான். டாக்சியில் வருபவர்களுக்குச் சொல்லும் விவரங்கள் நடந்து வருபவர்களுக்கும் பொருத்தமானதே. கான்வென்ட் ஆங்கில உச்சரிப்பில் மென்மையான குரலில் அந்தப் பெண் சொன்னது  “கடலை ஒட்டிய சாலையில் நீங்கள் ஒரு கிலோ மீட்டர் வந்த பிறகு, வலது புறத்தில் கட்டுமான வேலை நடந்து கொண்டிருக்கிற, பார்வையிலிருந்து தப்ப முடியாத ஓர் உயரமான கட்டிடத்தைப் பார்க்க முடியும்.அங்கு பெரிய வீடுகள் கட்டப்பட்டு கொண்டிருக்கின்றன. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் நீங்கள் இந்தக் கட்டிடத்தைப் பார்ப்பீர்கள். இதன் பெயர் சாகர்,நினைவில் வைத்திருங்கள்,சாகர்.  நான்காவதுமாடியில் வீட்டு எண் ஒன்பது”.

“உங்கள் பெயர்?”

“அது அவசியமற்றது.சாகர், வீட்டு எண் ஒன்பது.”

வீட்டு உபயோகத்திற்கான சாமான்களை விற்பதால், வீண் பெருமை அவளையும் பெயரை வெளிப்படையாகச் சொல்வதிலிருந்து தடுத்து இருக்கலாம்.

அவன் எதிர்பார்த்ததைவிட அது தொலைவில் இருந்தது. பெரும்பாலான கட்டிடங்களின் பெயர்கள் கடலோடு தொடர்பு  உடையதாகவே இருந்தன. தாராளமான காம்பவுண்டுகளுக்குள்ளே  பழைய பெரிய கட்டிடங்கள் அதிகமான மரங்களுடன்,அலங்கார சிறுசெடிகளுடன்.கடைசியாக, வலது புறத்திலிருந்த பல மாடிகளை உடைய அந்தப் பெரிய கட்டிடத்தின் எலும்புக் கூட்டைப் பார்த்தான்.

கட்டிடத்தின் உச்சியில் ஒரு பெரிய கிரேன் இருந்தது, அதன் கீழிருந்த பணியாட்கள் பார்ப்பதற்கு பல எறும்புகள் போலத் தெரிந்தனர். சிறிது நடந்து போய் சாகர் இருக்குமிடத்தை அடைந்தான். இப்படித்தான் மிகச் சரியாக ஒருவர் வழியைச் சொல்ல வேண்டும்.

அது ஒரு பழைய கட்டிடம். அடித்தள முகப்பில் ஒரு காவலாளி மிகச் சலிப்படைந்தவன் போல் தன் கையைச் சாய்த்துக் கொண்டு பாதி உட்கார்ந்தும்,பாதி சரிந்தும் கிடந்தான். லேசாக அசைந்து வந்திருப்பவரைப் பார்த்தான், ஆனால் எதுவும் சொல்லவில்லை. லிப்ட் மேலே போயிருந்தது. பட்டனை அழுத்தி விட்டுக் காத்திருந்தான். அந்தப் பழைய கட்டிடத்தில் மேலும் கீழுமாகப் போய்ப் போய் வந்ததில் களைத்து, நகரும்போதெல்லாம் அந்த இயந்திரம் கீரிச்சிடுவதையும், முனகுவதையும் அவனால் கேட்க முடிந்தது. கையில் பெட்டியுடன் ஒரு நடுத்தர வயது மனிதர் லிப்டின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தார். அவர் கையிலும்,உதட்டிலும் வெண்குஷ்ட தழும்புகள்.முதன் முதலில் அவன் வேலை செய்த செய்தித்தாள் அலுவலகத்தில் கேசியராக வேலை பார்த்த கோபால்தத்தின் சாயலில் அவரிருந்தார்.

மூன்றாவது மாடியில் இறங்கியவனின் முன்னால் மூன்று கதவுகள் தெரிந்தன. எண் ஒன்பது முன்னால் இருந்தது, வெளியில் எந்தப் பலகையுமில்லை. வீட்டுச் சொந்தக்காரர்களின் பெயர்கள் எல்லாம் அடித்தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கலாம். அவன் அதை கவனித்திருக்க வேண்டும். விற்பது,வாங்குவதுமான அறிவியலில் ஒரு மனிதரைப்  பெயர் சொல்லி அழைப்பது பயனுடையதாக இருக்கும்.

தன் பழைய விற்பனை அதிகாரியின் செயல்பாட்டை நினைத்துப் பார்த்தான். அந்தமாதிரியான இயந்திரங்ளை வாங்கி,விற்கும்அறிவிய  கைதேர்ந்தவனாக அவனால் செயல்பட முடியாததால் ஐந்து வருடங்களுக்குப் பிறகு சுனில் பத்திரிகைத் தொழிலுக்கே திரும்பிவிட்டான்.

அழைப்பு மணியை அழுத்தினான்.கதவிலுள்ள மந்திரக் கண்ணால்அவன் சோதிக்கப்படுகிறானா? பகல் நேரத்திலும் கூட அந்தச் சிறிய காரிடாரின் வெளிப்பகுதி இருட்டாக இருந்தது. உள்ளேயிருந்து பார்ப்பவர்களுக்கு எதுவும் தெளிவாகத் தெரியாது.  இன்னொரு தடவை மணியை அழுத்தலாமா என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போது, கதவு மெதுவாகத் திறந்தது.

“சுனில் ராய் என்ற பெயரில் சிறிது நேரத்திற்கு முன்பு நான் போன்  செய்திருந்தேன்.”

கதவு முழுவதுமாகத் திறந்தது. நீல நிறப் புடவையில் இருந்த அந்தமெல்லிய, உயரமான பெண்ணின் முன் நெற்றியை ஒட்டிய தலைமுடி, சிறிது சாம்பலான வண்ணத்திலிருந்தது. அவளது சிவந்த தோலில் மஞ்சளும் கலந்திருப்பது போல இருந்தது.

“உள்ளே வாருங்கள்.”

அவன் போனில் கேட்ட குரல்.

“கடவுளே!” அவள் குரலில் திடீரென ஒரு பதட்டம். “அதன் மேல் கால்வைத்து விட்டீர்களா?”

அவள் கீழே குனிந்து எதையோ எடுத்தாள். ஒரு சிறிய காகிதப் பை. “பூஜைக்கான பூக்கள்.வழக்கமாக வேலைக்காரப் பெண்மணி உள்ளேகொண்டு வந்து விடுவார். நீங்கள் அதை மிதிக்கவில்லை, இல்லையா?”அவள் விளக்கினாள்.

“இல்லை” அவன் அவளைப் பின் தொடர்ந்தான்.

“மன்னியுங்கள். ஒரு நிமிடம்.வேண்டுமென்றால் உட்கார்ந்து கொள்ளுங்கள்.”

அறையின் கதவைத் திறந்து கொண்டு அவள் உள்ளே போனாள். அதுதான் மாஸ்டர் பெட்ரூமாக இருக்க வேண்டும்.வீட்டு எஜமானர் பூஜை செய்து கொண்டிருக்கிறாரா அல்லது குளிக்கிறாரா?

வெளியிலிருந்து பார்க்க அந்தக் கட்டிடம் எவ்வளவு மோசமாக இருந்தது! என்றாலும் உள்ளே வந்தவுடன்,அந்த வீடு மிக அழகாக இருக்கிறது! கண்ணாடி ஜன்னலின் ஷட்டர் திறந்திருக்க, சில்லென கடற்காற்று உள்ளே வந்தது. வெண்கலஜார்களில் வளர்ந்து கொண்டிருந்த மணி பிளாண்ட்டுகளின் இலைகள் காற்றில் அசைந்தன.

ஒரு பெரிய நகரத்தில் தனக்குப் பிடித்தவளுடன் வாழும் போது, தனது வீடு எப்படியிருக்க வேண்டுமென்பது பற்றி இதுவரையொரு ஒரு மேலோட்டமான எண்ணம்தான் வைத்திருந்தான் .இங்கே அவன் முன்னால் ஒரு சிறந்த மாதிரியே இருந்தது.

கருப்புத்தோலில் மெத்தையுடன் ஒரு சோபா செட். நடுவில் ஒரு கம்பளம். அதன் மேல் இதய வடிவமான ஒரு பெரிய கண்ணாடிமேஜை, அதைச் சுற்றி மேலுறையுடன் வட்ட வடிவமான சிறியஸ்டூல்கள். அவன் அதன் விலையைத் தேடினான்.ஒரு வேளை அது விற்பனைக்கானது அல்ல போலும். பொதுவாகப் பெரிய வீடுகளில் விற்பனைக்கு இருக்கும் பொருட்கள் தனியாக வைக்கப்பட்டிருக்கும். பேரத்தைத் தவிர்ப்பதற்காக, ஒவ்வொரு பொருளின் மீதும் விலை அட்டை தொங்கவிடப்பட்டிருக்கும். இதற்கு முதல் இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளில் அவனுக்குக் கிடைத்த அனுபவம் அதுதான்.பார்த்து விட்டு பிடித்திருந்தால் வாங்கலாம் அல்லது போய்க் கொண்டே இருக்கலாம்.

உள்ளே அவள் பூஜை செய்யவில்லை என்பதையும் ஒரு அலமாரியுடன் போராடிக் கொண்டிருக்கிறாள் என்பதையும் உணர்ந்தான். வலதுபுறக் கதவின் மூலம் அவன் சமையலறைக்கு வந்திருந்தான். அதன் முகப்பு படுக்கையறையைப் பார்த்திருந்தது. அந்த முகப்பிலிருந்து உணவை எடுத்து விருந்தினர்களுக்குக் கொடுக்கலாம். விருந்தினர்கள் அழுக்கான சமையலறையையோ அல்லதுவேலைக்காரர்கள் முகத்தையோ பார்க்கவேண்டாம். எப்படி நளினமாக வாழ வேண்டுமென்பதை ஒருவர் அறிவதற்கு வெறும் பணம் மட்டும் போதாது  அது அப்பாவின் அருமையான கருத்து. அப்பாவிற்குப் புதுப்பணக்காரர்களிடம் அலட்சியம். அவர்களைக் கண்டிப்பதை வேடிக்கையாக நினைத்தார். தன் கடைசி நாட்களில், வேதனைகளிலிருந்து விடுபட கஞ்சா வாங்க பணமில்லாத போது கூட ,நேர்முகத்தேர்வின்போது ஆங்கில அதிகாரிக்கு முன்பு காதி உடையுடன் போன தனது தைரியத்தைப் பற்றி விவரித்துக் கொண்டிருப்பார். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பி.ஏ.முதல் வகுப்பில் தேர்ச்சியடைந்தவர். ஆரம்பப் பள்ளி ஆசிரியராக நாற்பத்தி ஐந்து ரூபாயில் வாழ்வதற்குப் போராடியவர். தன் நண்பர்களிடம் இதைப் பலமுறை திரும்பத் திரும்பச் சொல்லியவர்.

“என்ன தொல்லை! அலமாரிகளில் ஒன்றைத் திறக்க முடியவில்லை.” வீட்டு எஜமானி திரும்ப வந்து சொன்னார்.

“சாவி தொலைந்து விட்டதா? அது விற்பனைக்கானதா?” அவன் ஒரு மரியாதைக்காகக் கேட்டான்.

“இதுதான் அதன் சாவி. நேற்று கூட இதை வைத்துத் திறந்தேன்.”

“நான் உதவட்டுமா?” தயக்கத்தோடு சுனில் கேட்டான். அவன் இப்படியானவன் என்று பலருக்குத் தெரியாது; பெண்களுக்கு உதவுவது, அவர்களுக்குச் சேவை செய்வது ஆகியவை அவன் குணாதியசத்தின் ஒரு பகுதி. அதனால் அவன் செய்யும் சிறிய செயல்கள் பெரும்பாலும் தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டன. அது உதவியல்ல, ஆணாதிக்கம் என்று அவர்கள் சொல்வார்கள். அது திரையிடப்பட்ட  ஆணாதிக்கம் என்று சொல்லும் அளவிற்கு கௌரி போய்விட்டாள்.

“உங்களால் முடியுமா? சரி” என்று அவனிடம் சாவியைத் தந்தாள்.

“நேற்று முன்தினம் தான் என் கணவர் இந்த விளம்பரத்தை அனுப்பினார். .அதன் பிறகு அவர் சுற்றுப்பயணம் போக வேண்டியதாகி விட்டது.இப்போது கஷ்டப்படுவது நான்தான்.”

அறைக் கதவைத் திறந்து அலமாரியைக் காட்டினாள். சுனில் புதிய ஏர் கண்டினரை கவனித்தான். கதவைத் திறப்பதற்கு அவள் சாவியை பலமாக அழுத்தியதால் அது வளைந்து போயிருந்தது. தான்தோற்று விடக்கூடாது என்று பிரார்த்திக் கொண்டு,அவன் அதைத் திறக்க முயற்சித்தான்.

“மன்னியுங்கள்.அதைத் திறக்க முடியாது.”

“போகட்டும்,விடுங்கள்.”

“உங்களுக்கு அவசரமாகத் தேவைப்படும் பொருள் ஏதாவது அதில்…?”

“இல்லை,அப்படியெதுவுமில்லை.” அவர்கள் ஹாலுக்கு வந்தனர். போன் ஒலித்தது.அவள் எடுத்து தன் எண்ணைத் தந்தாள். “ஆமாம்.சரிதான்.வந்து பாருங்கள். ஒவ்வொன்றின் விலையையும் உங்களுக்குச் சொல்ல வேண்டுமெனில்…வந்து பாருங்கள். அதுதான் நல்லது.”

“இனி எல்லா வகையான மனிதர்களும் வருவார்கள், ஒன்றும் விலை போகாது .என்னிடம் சொல்லாமலே அவர் விளம்பரம் கொடுத்து விட்டார். யார் வந்தாலும் இப்போது நான்தான் பேச வேண்டும். இன்று காலை ஆறரை மணியிலிருந்தே அழைப்புகள்தான்.” என்று போனைக் கீழே வைத்து விட்டுச் சொன்னாள்.

தனக்கு என்ன வேண்டுமென்று சுனில்ராய் அவளுக்கு ஞாபகப்படுத்தினான்.

“விற்பனைக்கான பொருட்கள்?”

“இவையெல்லாம்.சோபா செட்.டைனிங் டேபிள்.படுக்கை எல்லாம் விற்பனைக்குதான்.”

“நீங்கள் மும்பை போகிறீர்கள், இல்லையா?”

“அகமதாபாத். என் கணவருக்கு பதவியுயர்வும், வேலை மாற்றமும். உங்களுக்கு என்ன பொருட்கள் வேண்டும்?”

சுனில் ஒரு நிமிடம் யோசித்தான்.

“விளம்பரத்தில் ஒரு டைப்ரைட்டர் குறிப்பிடப்பட்டிருந்தது.”

“ஓ,அது போய்விட்டது. இந்தக் கட்டிடத்திலேயே இருக்கும் ஒருவர் காலையிலேயே வந்து– அடுத்த வீட்டின் வேலைக்காரர்.அவருடைய சகோதரர் டைப் அடித்து பிழைப்பவராம்.பாவம்!”

பரிதாபப்பட்டு அவள் கொடுத்து விட்டாளா என்று அவன் நினைத்தான். டைம்ஸ் பேப்பரைப் படித்தவுடனேயே  புறப்பட்டு வந்திருந்தால் அதை மலிவான விலையில் வாங்கியிருக்கலாம் என்று வருத்தமாக நினைத்தான்.

“அது…எனக்குத் தேவையாக இருந்தது டைப்ரைட்டர்.”

“அது மிகப் பழைய இயந்திரம். முதல்வேலை கிடைத்த போது அவர் வாங்கியது.”

அவனுக்கு வேறு எதன் மீதும் விருப்பமில்லையெனினும் “சோபா செட்டின் விலையென்ன?” என்று கேட்டான்.

“இது” தன் வலது காதைத் தடவியபடி சில கணம் யோசித்துவிட்டு, “அந்தத் தாள் எங்கே போனதென்று தெரியவில்லை..”

அவள் அதைத் தேடத் தொடங்கினாள்.“ அந்தந்தப் பொருட்களின் மீதே நாங்கள் விலையைஎழுதித் தொங்கவிட்டிருக்க வேண்டும். வாங்குபவர்களுக்கும் அது வசதியாக இருந்திருக்கும். ஆனால் யாரும் எதையும் வாங்குவார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. நேற்று என் கணவர் புறப்படும் போது நான் இந்த விளம்பரம் பற்றி நினைவு படுத்த,ஒரு சிறிய தாளில் ஏதோ எழுதி வைத்து விட்டுப் போனார்.”

கடைசியில் ஒரு புத்தகத்தின் பக்கங்களுக்கிடையே அந்தத் தாளைக் கண்டு பிடித்து விட்டாள்.

“இதோ இங்கே.பார்க்கிறேன்.சோபாசெட்…நான்காயிரம்..”

அவன் தன் வியப்பை மறைத்துக் கொண்டான்.

“நாங்கள் கல்கத்தாவிலிருந்த போது செய்யச் சொல்லி வாங்கியது. இதற்கு மிக அதிகமாகச் செலவழித்திருக்க வேண்டும்.இருப்பினும், யாராவது நான்காயிரத்திற்கு வாங்குவார்களா? எனக்குச் சந்தேகம்தான்,  இது அதிகமில்லையா?” என்று கேட்டாள்

“அப்படித்தான் நினைக்கிறேன்.” அவன் சிரித்தபடி சொன்னான்.

“இவையெல்லாம் இப்போது மிகப் பழையதாகி விட்டன என்று என் கணவர் நினைக்கிறார். எப்படியும்,நீங்கள் வாங்கப் போவதில்லைதானே? இவைகள் எல்லாம் புதியவையாகத் தெரிகிறதல்லவா?”

“ஆமாம் நிச்சயமாக.”

“நீங்கள் மும்பை வாசியா?”

“இல்லை,நான் கல்கத்தாவிலிருப்பவன்.”

“வங்காளியா?”

“ஆமாம்,மேடம்.”

அவள் முகத்தில் திடீரெனத் தெரிந்த வேகத்தைப் பார்த்தான்.

“எனக்கு வங்காளிகளைப் பிடிக்கும்.பெரும்பாலான என் நண்பர்கள், நெருங்கிய நண்பர்கள் வங்காளிகள்தான்.கல்கத்தா–எனக்கு மிகப் பிடித்த இடம்.மனிதர்கள் என்ன சொன்னாலும்,இந்தியாவிலேயே மிகச் சிறந்த இடம் கல்கத்தாதான்.மும்பையில் என்ன இருக்கிறது?..”

அவன் சிரிக்க முயற்சித்தான்.கல்கத்தா தன் பங்கிற்குச் சில காயங்களை அவனுக்குத் தந்திருக்கிறது. தப்பிக்கும் ஒரு நம்பிக்கையில்தான் அவன் டெல்லிக்கு வந்தான். ஆனால் அந்த நகரமும் காயப்படுத்துவதில் குறைந்ததாக இல்லை— செய்தித்தாள் அலுவலகம் மூலம், கௌரியின் மூலம்.இது அவனது மூன்றாவது நகரம்.

“நான் இங்கு வந்து மூன்று மாதங்கள்தான் ஆகிறது.”

“நீங்கள் விரைவில் புரிந்து கொள்வீர்கள்.மும்பை உங்கள் வாழ்க்கையைச் சக்கையாகப் பிழிந்துவிடும்.பாருங்கள், நான் இங்கு வந்த பிறகுதான்  என் தலைமுடி நரைத்துப் போனது.” தன் முன் நெற்றியிலிருந்த நரைமுடியைத் தடவிக் கொண்டாள்.

“ஒரு முறை மும்பையில் இருந்தவர்கள் அந்த நகரத்தை விட்டு  வெளியேற விரும்ப மாட்டார்கள் என்று சொல்வார்கள். நான் ஒரு நாள் முன்னதாகவே ஓடி விட முடிந்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன். அகமதாபாத் எப்படியிருக்கும்?”

“எனக்குத் தெரியாது.நான் அங்கு போனதேயில்லை.” அவன் தன் அறியாமையை ஒப்புக் கொண்டான்.

“இதைவிட நன்றாகவேயிருக்குமென நம்புகிறேன்.கல்கத்தாவில்— லேக் சாலையிலிருந்த என்னுடைய வீடு மிக அமைதியானது.”

“இது அருமையான வீடில்லையா? கடல் மிக அருகில் குளுமையான காற்று.” ஏதாவது புகழ்ச்சியாகச் சொல்ல விரும்பினான். போன்  ஒலித்தது.

“நாள் முழுவதும் இந்தத் தொல்லை இருந்து கொண்டேயிருக்கும்.” என்று முணுமுணுத்துக் கொண்டே போன் அருகே போனாள்,

அழைப்பு மணி ஒலித்தது. “தயவுசெய்து பாருங்கள்.பொருள் வாங்க வந்தவராக இருக்க வேண்டும் .என் சார்பில் அவர்களிடம் பேசுங்கள்.” என்று உடைந்த வங்காள மொழியில் சொன்னாள்.

அவனுடைய தாய்மொழியில் பேசி அவன் சுதந்திரத்தை எடுத்துக்கொள்கிறாளோ?அவனுக்கு வேடிகையாக இருந்தது. பழைய டைப்ரைட்டரை விலைக்கு வாங்க வந்தவன், அந்த வீட்டு  எஜமானன் வேடத்தைப் போடப் போகிறானா?

கதவைத் திறந்தான். வெள்ளை சபாரியில், கண்ணாடி அணிந்த ஒரு குள்ளமான மனிதரும்,அவரருகில் முன் நெற்றியில் பெரிய குங்குமம் அணிந்திருந்த ஒரு பருத்த பெண்மணியும் நின்றிருந்தனர். உயர் நடுத்தர வகுப்பினராக இருக்க வேண்டும். திருமணமான தம்பதியர். பல ஆண்டுகளானதால் ஒரே சாயல் உடையவர்கள் போலாகி விட்டனர்.

“விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த இடம் இதுதானே?” என்று கணவர் எந்த வடக்கிந்திய மொழிச் சாயலுமின்றி, ஆங்கிலத்தில் கேட்டார்.

அவருக்குப் பின்னால்,திருமதி பரேக் வீட்டு சாமான்களைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தாள்.போனில் பேசிக் கொண்டிருந்தவர் எல்லா விவரங்களையும் தெளிவாக அறிய விரும்பியவராக இருக்கவேண்டுமென்று அவன் நினைத்தான்.

“இந்த இடம்தான்.உள்ளே வாருங்கள்,பாருங்கள்.”என்று விற்பனையாளனுக்குரிய சிரிப்போடு சொன்னான்.

“என்ன பொருட்கள் இருக்கின்றன?”

“இவை எல்லாம்.” சோபா செட், டைனிங் டேபிள் என்று அவற்றின் மேல் ஒரு அரைவட்டம் அடிப்பது போல காட்டினான்.

திருமதி.பரேக் பெரிதாகச் சிரித்துக் கொண்டிருந்தாள். போனை பொத்தியபடி வங்காள மொழியில்“படுக்கையின் விலை ஆயிரம் ரூபாய் என்று சொன்னதும், அதில் அப்படி என்ன விசேஷம் என்று கேட்கிறார். அதனோடு சேரும் அளவிற்கு வேறு ஏதாவது இருக்கிறதா என்றும் கேட்கிறார்.”

அவனுக்குச் சிரிக்க மனமில்லை. வந்திருந்தவர்களை உள்ளே அழைத்தான்.

“நான் என் நண்பரோடு சேர்ந்து சிரித்துக் கொண்டிருந்தேன். வாருங்கள்.ஏதாவது பிடித்திருந்தால் வாங்கிக் கொள்ளுங்கள்.” என்று திரும்பவும் திருமதி.பரேக் போனில் பேசிக் கொண்டிருந்தாள்.

“நீங்கள் வங்காளிகள்தானே?” என்று வந்திருந்த பெண் கேட்டாள். அவன் ஆமாம் என்பதாகத் தலையாட்டினான்.அவர்களின் கவனம் செதுக்கிய கால்கள்,உயர்வான பின்புறம்,எட்டு பேர் உட்காரக்கூடிய ஓவல் வடிவான டைனிங் டேபிளின் மேலேயேயிருந்தது.

“இது எவ்வளவு?”

தன் கையிலிருக்கும் தாள் தெரியும்படி அவனுக்கு பக்கத்தில் வந்து திருமதி.பரேக் நின்று கொண்டாள். திரு.பரேக்கின் கையெழுத்து  படிப்பதற்குக் கடினமாக இருந்தது.ஒரு டைனிங் டேபிள், எட்டு நாற்காலிகள் அடைப்புக் குறிக்குள்— வார்த்தைகளுக்கு எதிராக எழுதப்பட்டிருந்த எண்ணைச் சொல்வதற்கு அவனுக்குத் தயக்கமாக இருந்தது.

திருமதி.பரேக் அந்த வரிகளைத் தன் ஆள்காட்டி விரலால் சுட்டிக் காட்டினாள். அவள் விரல்களில் நகச்சாயத்தின் சுவடு இருந்தது.

“ஆறாயிரம்”அவன் சொன்னான்.

நகைச்சுவையைக் கேட்டது போல அந்தப் பெண் உடனிருந்தவனை ஒரு சிரிப்போடு பார்த்தாள்.

அவன் சுனில்ராயை துளைப்பது போலப் பார்த்து “உண்மையாகவா?”என்றான்.

“இது புதியது.ஒரு வருடத்திற்கு முன்பு ஆர்டர் செய்து வாங்கியது. இது மாதிரியான ஒரு செட் செய்வதற்கு எவ்வளவு ஆகியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?” ஒரு விற்பனையாளன் என்ற வேலையிலோ அல்லது அந்த வீட்டின் தற்காலிக எஜமானன் என்ற நிலையிலோ தோற்றுவிடத் தயாராக இல்லாமல் அவன் தீவிரமாகப் பேசினான்.

“நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம்.ஆனால் பொருட்களை இந்த மாதிரி வாங்க விரும்புபவர்கள் மலிவாகக் கிடைக்கும் என்றுதான் வருவார்கள்.” அந்தப் பெண் சொன்னாள்.

“இந்த சோபா செட்டிற்கு எவ்வளவு எதிர்பார்க்கிறீர்கள்?” என்று இன்னொரு நகைச்சுவையை எதிர்பார்ப்பவன் போல கணவன்  கேட்டான்.

“ஐயாயிரம் ரூபாய்.”அந்தத் தாளைப் பார்த்தபடி திருமதி.பரேக் சொன்னாள்.

அவன் அவளைப் பார்த்து விட்டு அவள் எதுவும் தவறாகச் சொல்லவில்லை என்றுணர்ந்தான். ஹாலின் ஒரு மூலைக்குக் கணவனும் மனைவியும் போய் ரகசியமாக ஆலோசித்துவிட்டுத் திரும்பினர். தன் கைப்பையிலிருந்த ஒரு கார்டை எடுத்து அந்தப் பெண் சுனிலிடம் கொடுத்து “எங்கள் கார்டு இது. டைனிங் டேபிளின் விலையில் ஏதேனும் மாற்றமிருந்தால் இந்த எண்ணை  அழையுங்கள்.”என்று சொல்லிவிட்டு திருமதி.பரேக்கைப் பார்த்துச் சிரித்து விட்டு கணவன் பின்தொடர வெளியே போனாள்.

அவன் அந்தக் கார்டைப் பார்த்தான், திரு,திருமதி தாராதர். வெளிநாட்டுப் பட்டம் பெற்ற டாக்டர்கள் அவர்களிருவரும்.

“டாக்டர்கள்… தங்களுக்கென சொந்த கிளினிக் உள்ளவர்கள். நிறையப் பணமிருக்க வேண்டும்.இருவரும் டாக்டர்களாக இருப்பதால் அவர்கள் குடும்பம் எப்படியிருக்குமென்று நினைத்துப் பார்க்கிறேன். எந்த ரகசியத்தையும் தங்களுக்கிடையே மறைத்துக் கொள்ள மாட்டார்கள் என்று தோன்றுகிறது,இல்லையா?” என்று அந்தக் கார்டைப் பார்த்தபடி கேட்டாள் திருமதி.பரேக்.

நேரடியான எந்த பதிலும் அவனுக்குத் தோன்றாததால் “யாருக்குத் தெரியும்?” என்று மேலோட்டமாகச் சொன்னான்.

நாடகத்தில் தன் பாத்திரத்தின் பங்கு முடிந்து விட்டது என்பதை உறுதி செய்துகொள்ள, “நான் புறப்படுகிறேன்.”என்றான்.

“உட்காருங்கள்.திரு.பரேக் போலவே நீங்கள் மிக அதிகாரமான தொனியில் பேசினீர்கள்.நீங்கள் இங்கே வந்தது கடவுள் அருள்தான். இந்தக் குழப்பமான சூழ்நிலையில் நான் தனியாக இருந்திருந்தால் கிறுக்குப் பிடித்திருக்கும்.”என்று அவள் சொன்னாள்.

கண்ணாடி ஜன்னலருகே இருந்த ஓர் இருக்கையில் உட்கார்ந்தான்.

கீழே கடற்கரையில்,சலவைத் தொழிலாளிகள் இங்குமங்குமாகக் கிடந்த கிரானைட் கற்களில் துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் நீலக் கடலின் பெரும்பரப்பு கருமையாக உப்பி  இருந்தது. உள்கடல் தண்ணீர் ஓர் உலோக மினுமினுப்பாக அவனுக்குத் தெரிந்தது.    

“மிக அழகான காட்சி.” உணர்ந்து சொன்னான்.

“லேக் ரோடிலிருந்த அந்த வீடு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  தனியாக அங்கிருந்த நாட்களிலும் கூட எனக்குச் சலிப்பு ஏற்பட்டதில்லை. எனக்குக் கல்கத்தாவில் பயமேயிருந்ததில்லை.”

“திரு.பரேக் என்ன செய்கிறார்?“ மிக உயர்ந்த பதவியிலிருக்கும் ஒருவரோடு பழக்கம் வைத்துக்கொள்ள இது ஓர் ஆரம்பமாக இருக்கலாம் என்ற ஒரு ரகசிய நம்பிக்கையோடு கேட்டான்.

“பிரெட் அண்ட் நிறுவனத்தில் எக்சிக்யூட்டிவ். விரைவில் இந்திய டைரக்டர் ஆகிவிடுவார். ”செல்வமும்,சோம்பேறித்தனமும் ஒரு கூட்டாகச் சேர்ந்து ஏற்படுத்தும் சலிப்பிலிருந்து தப்பிக்க  இப்படிப்பட்டப் போக்கை விரும்பியேற்கும் பெண்களைப் பற்றி  அவன்  கேள்விப்பட்டிருக்கிறான். பெரும்பாலும் கதைகள் வன்மத்திலிருந்துதான் வடிவெடுக்கின்றன. அந்த மாதிரியான ஒரு சந்தர்ப்பத்தை மூலதனமாகப் பயன்படுத்திக்கொண்ட விபின் என்ற ஒரு கலைஞரை அவன் டெல்லியில் சந்தித்திருக்கிறான்.

நாற்பத்தியோரு வயதான ரத்தமும்,சக்தியும் ஒடுங்கிய ஒளியற்ற அந்த முகத்தை எல்லோருக்கும் தெரிந்திருந்தது. தறிகெட்டோடியத்  தன் சிந்தனையைத் தடுத்து நிறுத்தினான்.

“நீங்கள் என்ன செய்கிறீர்கள் இங்கே?”

“இதழியல்.”

அவள் மேலே ஏதாவது கேட்டிருந்தால்,அடுத்த மாதத் தொடக்கத்தில் தனக்கு வேலை தரச் சம்மதித்திருக்கிற செய்தித்தாளின் பெயரைச் சொல்லியிருப்பான்.

அவளுடைய உயரத்திற்கும், மெல்லிய தோற்றத்திற்கும்  இடையே அவள் வயிறு பெரியதாகத் தெரிந்தது. பக்கத்தில் அவள் நின்ற போது தன்னைவிட ஒரு அங்குலமாவது உயரமாக இருப்பாள் என்று நினைத்தான். பதினைந்து வருடங்களுக்கு முன்னால், கூட்டமான இடங்களில் அவள் நடக்கும் போது பல கண்கள் அவளை பாராட்டுதலோடும் பொறாமையோடும், பார்த்திருக்கலாம்.

“நீங்கள் மும்பையில் எங்கேயிருக்கிறீர்கள்?”

“சையன்.”

“நான் அதைப் பற்றி கேள்வி மட்டுமே பட்டிருக்கிறேன்.”

கல்லறைக்கு அருகே, ஒரு மளிகை வியாபாரிக்குச் சொந்தமான ஒரு பழைய கட்டிடத்தின் முதல்மாடியில் இருட்டான வெளிச்சமற்ற ஓர் அறையில் தானிருப்பதைச் சொல்ல வேண்டியதில்லை என்று நினைத்தான்.

“நீங்கள் குடும்பத்துடன் வசிக்கிறீர்களா?” ஒரு நிமிட யோசனைக்குப் பின் “இல்லை,தனியாகத்தான்” என்றான்.

“உங்களுக்கு வேறு ஏதாவது வேண்டுமா? அலமாரி அல்லது டிரஸ்ஸிங் டேபிள்? நல்ல எழுதும் மேஜை ஒன்றிருக்கிறது. வாருங்கள், காட்டுகிறேன். அதை மறந்தே போய்விட்டேன்.”

அவள் கதவைத் திறக்க,உள்ளே போனான். இன்னொரு படுக்கையறை. மிகச் சமீபத்தில் பயன்படுத்தியதற்கான அறிகுறிகள் தெரிந்தன.

ஒரு நல்ல எழுதும் மேஜையும் ,நாற்காலியும். அந்த மேஜையின் மேல் ஏராளமான பழைய புத்தகங்கள்,அப்பா[ABBA] ஒசிபிசாவின் [OSIBISA] படங்கள் இரண்டு பக்கங்களிலும் ஒட்டப்பட்டிருந்தன.

“ஒரு மேதை வேலை செய்கிறான். அமைதியாக இருங்கள்” என்று ஒரு பிளாஸ்டிக் பலகை எச்சரித்தது.

“யார் அந்த மேதை?” அவன் மெல்லிய சிரிப்போடு கேட்டான்.

“என் மகள். இது அவள் அறையாக இருந்தது.”

“இப்போது?”

“அவள் லண்டனிலிருக்கிறாள். நிர்வாக மேலாண்மை படிப்பிற்கானஉதவித் தொகை கிடைத்துப் படிக்கப் போனாள். அங்கேயே திருமணம் செய்துகொண்டு தங்கிவிட்டாள்.”

“உங்களுக்கு ஒரே பெண்ணா?”

“ஆமாம்.”

“உங்களுக்கு மும்பையிலிருப்பது சலித்துப் போனால், ஒரு மாறுதலுக்காக நீங்கள் மகளுடன் லண்டனிலிருக்கலாம்.”தான் சொல்லுவது அவளுக்குக் கேட்கவில்லை என்று நினைத்தான்.தனக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களைப் பேசுவதாக தன்னையே கடிந்து கொண்டான்.

“லண்டனிலிருக்கிறாளோ அல்லது வேறெங்குமோ, யாருக்குத் தெரியும்! அவள் கடைசியாக எழுதிய ஒரு கடிதம் தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் இளைஞனைப் பற்றியது. பிறகு ஒரு வருடமாகிவிட்டது. நாங்கள் அப்போதுதான் இங்கு வந்திருந்தோம்.”

“அவள் கணவர்?”

ஒரு ஜெர்மானியர். அவள் ஒரு புகைப்படம் அனுப்பியிருந்தாள். அது இங்கேதானிருக்க வேண்டும்.” அறையிலிருந்த அலமாரியில் சில புத்தகங்களிருந்தன. சுவற்றில் சிலவெளிநாட்டு இயற்கைகாட்சிப்  படங்களிருந்தன.

“அவள் மிகவும் புத்திசாலியான மாணவி. எல்லா குவிஸ் போட்டிகளிலும் முதல் இடம், பரிசு. இரண்டு உதவித்தொகைக்காக நானூறு பேர் அந்தத் தேர்வெழுதினார்கள். ஒன்று தீபாவிற்கு கிடைத்தது.உங்களுக்கு அந்த எழுத்து மேஜை பிடித்திருக்கிறதா?”

“அது நன்றாக இருக்கிறது. ஆனால் அது என் அறைக்குள் பொருந்துமா என்பது சந்தேகம்.”

“உங்களுக்கு வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள். விலையைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அது பட்டியலிலேயே இல்லை. யாருக்காவது அது பயன்படட்டும்.எடுத்துக் கொள்ளுங்கள்.”

“விற்பனையாகி விட்டது” என்று மேஜையின் மேல் பெரிய எழுத்தில் எழுதிவிட்டு அதன் கீழ் கையெழுத்திட்டாள். புழுதியாக இருந்த பகுதியில் அவள் எழுத்தும், கையெழுத்தும் தெளிவாகத் தெரிந்தன.

சுனில் தன் வியப்பை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. போன் மீண்டும் ஒலித்தது.

“எப்படியாவது இவையெல்லாவறையும் நான் விற்றுவிடவேண்டும் ,பிறகு தூங்கமுடியும்.” சொல்லிக் கொண்டே வெளியே போனாள்.

அவன் தொடர்ந்தான். தேவையின்றி தான் ஏன் அங்கே சுற்றிக் கொண்டிருக்கிறோம் என்று தனக்குள்ளே கேட்டுக் கொண்டான். அதற்கான விடையையும் கண்டு பிடித்தான்; இன்னொரு ஞாயிறன்று அந்தப் பகுதித் தெருக்களைச் சுற்றிவரும் கொடுமையிலிருந்து தப்பித்திருக்கிறான்.

சோபா,மற்றும் டைனிங் டேபிள் பற்றி அவள் தொலைபேசியில் விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“இல்லை, மின்சார பொருட்கள் எதுவுமில்லை. இல்லை, அதுவுமில்லை.”

மீண்டும் அழைப்பு மணி ஒலித்தது.கதவைத் திறக்கும்படி சைகை காட்டினாள். அவன் திறந்தான். விளம்பரங்களில் வரும் தம்பதி அல்லது காதலர்களை நினவூட்டுவதைப் போல ஓர் இளைஞனும், பெண்ணும் நின்றிருந்தனர் . வெளுத்துப் போன ஜீன்ஸ் அணிந்திருந்தனர். அவன் தோளில் கை போட்டபடி அவள் நின்றாள்.

“அவர்களுக்குச் சுற்றிக் காண்பியுங்கள்.நான் குடிக்க உங்களுக்கு எதுவும் கொடுக்கவில்லையே. தேநீர் அல்லது காப்பி?” போனைக் கீழே வைத்து விட்டு மென்மையாகச் சொன்னாள்.

“நன்றி, இப்போது எதுவும் வேண்டாம். உள்ளே வாருங்கள்.”

“இது விளம்பரத்தில் வந்த …”

“இந்த இடம்தான். ஒரு விற்பனையாளனின் வேலையைச் செய்ய வேண்டியிருந்த அந்தச் சூழ்நிலையின் எரிச்சலைப் புறம் தள்ளினான்.

“இது டைனிங் டேபிள், சோபா செட்.அந்தப் பகுதியிலிருக்கிற சீட்டுகளில் அதன் விலை.”

“உங்களிடம் கட்டிலிருக்கிறதா?”

அவன் திருமதி.பரேக்கைப் பார்த்து விட்டு’ இல்லை’ என்று சொல்லத் தயாரானபோது அவள் “இரண்டு இரட்டைக் கட்டில்களும்,இரண்டு தனிக் கட்டில்களும் இருக்கின்றன. பார்க்கலாம்.வாருங்கள்.”என்றாள்.

அந்தப் படுக்கையில் ஏதாவது சிறப்பு இருக்கிறதா என்று போனில் கேட்ட இளைஞன் இல்லை இவன். இந்தப் புதிய மாப்பிள்ளை அல்லது காதலன் பக்குவமானவனாகத் தன்னைக் காட்டிக் கொள்ள த் தேவைக்கு அதிகமாகவே நடித்தான். அவர்களை திருமதி பரேக்குடன்  போகும்படி சொன்னான்.

இளைஞன் இரட்டைப் படுக்கையை கையால் தட்டிப் பார்த்தான். அந்தப் பெண்மெத்தையை கீழாக அழுத்தினாள்.“கட்டிலுடன் மெத்தையைக் கொடுப்பீர்களா?” கேட்டாள்.

“நிச்சயமாக.எடுத்துக் கொள்ளலாம்.” திருமதி.பரேக் அவனை வெளியே வரும்படி அழைத்தாள்.

“இரண்டும் சேர்த்து என்ன விலை சொல்லட்டும்? மெத்தையின் மேல் விலையில்லை.”

“நீங்கள் அதை விற்க விரும்புகிறீர்களா?”

“திரு.பரேக் பழைய பாணியிலான எல்லாவற்றையும் விற்க முடிவு செய்திருக்கிறார்.”

அவள் மென்மையாகச் சிரித்தாள்.“இதில் நான்தான் பழசு.” குரல் லேசாக நடுங்கியது.“வெளியே வந்த அந்தப் பெண்ணும், இளைஞனும் விலையை அறியும் ஆர்வத்தில் காத்திருந்தனர்.

“இரண்டு கட்டில்கள், இரண்டு மெத்தைகள், தலையணைகள்; எல்லாம் சேர்த்து இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய்.”

தான் சரியாகக் கணக்கிட்டிருக்கிறோமா என்று தெரிந்து கொள்ள விரும்பியவள் போல சுனில் ராயைப் பார்த்தாள். அவன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்’

“மிக அதிகம்.”பெண் சொன்னாள்.

விற்பனையாளனைப் போலப் பேச வேண்டுமா என்று அவன் யோசித்த போது “விலை அத்தனை அதிகமில்லை.நாங்கள் சொல்ல வந்ததுஎங்களால் கொடுக்க முடியாது என்பதைத்தான்.” என்று இளைஞன் விளக்கினான்.

திருமதி.பரேக்கின் முகம் பிரகாசமானது.

“சரி .உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?”

“ஆமாம்.”

“உங்களுக்குப் பயன்படுமா?”

“நிச்சயமாக.”

“உங்களால் எவ்வளவு கொடுக்க முடியும்?” “

அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். “இப்போது ஐந்நூறு. மீதம் ஆறு தவணைகளில்.”

“ஆறு இல்லை,நான்கு. நான்கிற்குள் கொடுத்து விடுவோம்.” இளைஞன் அவளைத் திருத்தினான்.

“நாங்கள் நான்கு தவணைக்குள் முடிக்க முடிந்தால்…”

“மொத்தமாக அது எவ்வளவு?”

திருமதி பரேக்கின் கேள்வி அவர்களை மட்டும் ஆச்சர்யத்துக்கு உள்ளாக்கவில்லை. இங்குள்ள கடனை, அகமதாபாத் போன பிறகு எப்படிவசூலிக்க முடியுமென்று சுனில்ராயும் ஆச்சர்யப்பட்டான்.

“ஆயிரத்து ஐந்நூறு.அவ்வளவுதான் எங்களால் முடியும்” என்று அந்தப்பெண் தைரியமாகச் சொன்னாள்.

“பணம் கொடுங்கள். வேனிலோ அல்லது லாரியிலோ எடுத்துச் செல்லுங்கள். வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.”

பெரியதாக எதையோ சாதித்தவர்கள் போல அவர்கள் திருப்தி அடைந்தனர்.

“நீங்கள் விரைவாக எடுத்துச் சென்றுவிட வேண்டும்.போனசாக நான்கு மும்பை மில் படுக்கை விரிப்புகளையும் தருகிறேன்.”

அவர்கள் கதவருகே போனபோது திருமதி பரேக் சொன்னாள்.

அவர்கள் போனபிறகு நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

“கடைசியில் ஒரு விற்பனை. அவர்களுக்கு இது பயன்படலாம்.”

ஏதோ திடீரென ஞாபகம் வந்தவள் போல வேகமாக உள்ளே போய், மேஜையின் மேல் சிதறிக் கிடந்த தன் மேக்கப் பெட்டியில் உதட்டுச் சாயத்தை திறந்து, படுக்கையின் மேல் கிடந்த மூன்று தலையணைகளில் ’”விலை போனது, விலை போனது, விலை போனது’ எனறு எழுதினாள்.

போன் ஒலித்தது. அவள் வேண்டுகோளையேற்று அவன் போனை எடுத்தான்.

“834242?”

“ஆமாம்.”

“ஆமாம்.நாங்கள்தான் விளம்பரம் கொடுத்தோம்.” யார் பேசுவது என்று அழைத்தவர் கேட்க “இது திரு.பரேக்கின் வீடு” என்றான்.

திருமதி.பரேக்கின் முறையையே பின்பற்றி அவர்களிடம் ஒரு பட்டியலைக் கொடுத்தான். அவர்கள் விரும்பும்போது வந்து பொருட்களைப் பார்க்கலாம் என்று சொன்னான்.

அவன் போனைக் கீழே வைத்தபோது “கடவுள்தான் உங்களை இங்கே அனுப்பினார். தனக்கென்று யாருமில்லாதவர்களுடன் அவர் இருப்பார்.” என்றாள்.

அவன் இதை ரசிக்கத் தொடங்கியிருந்தான். கடல் பார்வையில் படும்படியாகவும் காற்று நன்றாக வரக்கூடியதுமான ஓரிடத்தில், ஒரு ஸ்டூலைப் நகர்த்திப் போட்டு உட்கார்ந்தான்.

“தேநீர்?”

“வேண்டாம்.”

“அங்கே பீர் இருக்கிறது .இங்கே விஸ்கியும், ஜின்னும் இருக்கின்றன.”

“இவ்வளவு சீக்கிரமாகவா? வேண்டாம்” அவன் தயங்கினான்.

“உங்கள் அனுமதியோடு” டைனிங் டேபிள் அருகேயிருந்த அலமாரியைத் திறந்து பாட்டில்களை வெளியே எடுத்தாள்.

அரைகிளாஸ் அளவு ஜின்னை ஊற்றி, அதை பெரிய மடக்காகக் குடித்தாள். கையில் கிளாஸோடு அவனுக்கு எதிராக உட்கார்ந்தாள்.

“உம், கல்கத்தாவைப் பற்றி ஏதாவது சொல்லுங்கள்.”

“நான் என்ன சொல்லட்டும்?நான் இருபத்தியெட்டு வருடங்கள் அங்கே இருந்திருக்கிறேன். அவ்வளவுதான்.” என்று சிரித்தான்.

அவள் கடலை வெறித்தபடி கிளாஸிலிருந்தை ஒரு மடக்கு குடித்தாள். அவளறியாமலே அவன் அவளை நோட்டமிட்டான். கண்களுக்குக் கீழே கருவளையங்கள்.ஒரு துளி திரவம் அங்கு உருகியது போல விழிகளின் ஓரத்தில் ஓர் ஈரம் .நல்ல நிறம் என்பதால் தோளில் நீல நரம்புகள் வெளிப்படையாகத் தெரிந்தன.

திடீரென அவள் அவனைப் பார்த்த போது, தன் சங்கடத்தைத் தவிர்க்க, “எப்போது திரு.பரேக் திரும்புகிறார்?” என்று கேட்டான்.

“ஒரு வேளை இன்றிரவு வரலாம். நாளை வரலாம். அழைப்பதாகச் சொல்லியிருக்கிறார். எப்படியோ,ஒரு விற்பனையை நாம் சமாளித்து விட்டோம். எனக்கு எதையும் திறமையாகச் செய்யத் தெரியாது என்பது அவருடைய எண்ணம்..வேலையாட்களை வைத்துக் கொள்வது அல்லது, லாண்டரி கணக்குகளைச் சரிசெய்வது என்பதெல்லாம் கூட.” அவள் நிறுத்தினாள்.

கடலை வெறித்தபடி ,“இங்கேயிருந்து நேராகக் கடல் பயணம் செய்தால் எந்த நாட்டை அடையமுடியும்?”

இது அரேபியக் கடல்.இதன் மறுபுறத்தில்…அவன் நிலப்படத்தை தன் மனதுள் வரைய முயன்று தோற்றான்.அதனால் “எனக்குத் தெரியாது ஒருவேளை ஆப்பிரிக்காவாக..”

“தான் விரும்பும் போது ஒருவரால் எதிர்கரைக்குப் போக முடியவேண்டும். இல்லையா?”

அவன் சிரித்தான்.

“நான் மிக மிக ஆச்சாரமாக இருந்த அப்பாவின் கீழ் வளர்ந்தவள். வீட்டில் முட்டைகளுக்கும், வெங்காயத்திற்கும் கூடத் தடை. என் திருமணத்திற்குப் பிறகு, முதல் பார்ட்டியிலேயே என்னை ஒருவர் ஜின் குடிக்க வற்புறுத்தும் போது நான் மயங்கி விட்டேன். அன்றிரவு வீடுதிரும்பிய பிறகு அந்த மாதிரி பழக்கங்களுக்குப் பழகாததால் கணவர் என்னைக் கோபித்துக் கொண்டார்….” தன் காலியான கிளாஸைப் பார்த்துச் சொன்னாள்.

அவளுடைய கதையில் விருப்பமானவன் போல அவன் அவள் கண்களைப் பார்த்தான்.

“நான் பகல் நேரத்தில் குடிப்பதாக என்னுடன் இப்போது சண்டை போடுகிறார். பகல் நேரத்தில் செய்வதற்கு என்ன இருக்கிறது? செய்ய எதுவுமில்லை, நிறைய தூக்கம்தான். இரவில் விருந்துகள்.”

“நீங்கள் நிறைய விஷயங்கள் செய்யலாம். சமூக சேவை. அல்லது ஒருவேலைக்குப் போகலாம்.” ஆலோசகர் பொறுப்பை எடுத்துக் கொண்டான்.

அழைப்பு மணி ஒலித்தது.

“நான் போகிறேன்.எனக்கு இன்னொரு கிளாஸ் வேண்டும். இப்போது

நீங்களும் குடிக்கலாமல்லவா? ”என்று போவதற்கு முன்னால் சொன்னாள்.

அவன் எழுந்தான், ஆனால் குடிப்பதற்குத் தயாரில்லை. கழுத்தில் பெரிய வீக்கத்துடன், கூனான ஒரு முதியவளும், ஒரு சிறுமியும் வாசலில் நின்றனர்.

திருமதி.பரேக் இந்தியில் பேசத் தொடங்கியபோது முதியவள் ஆங்கிலத்தில்“ நான் திருமதி.காமத், இவள் என் பேத்தி” என்றாள்.

சோபா செட் அவளுக்குத் தேவைப்பட்டது. அதைச் சுற்றி வந்து கூர்மையாகப் பரிசோதித்தாள்.அந்த முதியவள் வாழ்க்கையில் பலதையும் எதிர்கொண்டிருக்க வேண்டும் என்று சுனிலுக்குப் பட்டது. அவள் நடை, பார்வை, பேச்சு எல்லாம் அவளுடைய ஆழ்ந்த சுயநம்பிக்கையைக்  காட்டுவதாக இருந்தன. அவள் வெளிநாட்டில் வசித்திருக்கிறாள். அவளது மூன்று மகள்களும் வெளிநாட்டில் இருந்திருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவருடனும் இருந்து விட்டு இப்போது மும்பை திரும்பியிருக்கிறாள். பரம்பரை வீட்டின் ஒரு பகுதி வாடகைக்கு விடப்பட்டிருக்கிறது. அவள் மற்றொரு பகுதியில் வசிக்கப் போகிறாள்.

“நான்காயிரம் ரூபாய் என்று என் கணவர் விலையெழுதி வைத்திருக்கிறார். எனக்கு நான்காயிரம் வேண்டாம். மூவாயிரத்து ஐநூறுக்கு எடுத்துக் கொள்ளுங்கள்.” என்றாள்திருமதி பரேக்.

அந்த முதியவளின் சிரிப்பு அழகானது. அவளுடைய ஒரு பல் கூட மோசமாக இல்லை. “விலை அதிகமில்லையா?” என்று அவனைப் பார்த்துக் கேட்டாள்.

“ஆன்ட்டி, சோபா செட்டிற்கான உங்கள் பட்ஜெட் என்ன?” என்று கேட்டாள் திருமதி பரேக். அவளுடைய மாற்றம் வெளிப்படையாகத் தெரிந்தது.

“சொல்வதற்கென்று எனக்கு எதுவும் பட்ஜெட் இல்லை. வாடகைக்கார்கள் சிறிது பணம் கொடுத்தார்கள். என் கணவரின் பென்ஷன் சிறிது எனக்கு கிடைக்கிறது.”

“எனினும் உங்கள் மனதில் ஏதாவது பட்ஜெட் இருக்குமில்லையா?”

“இல்லை.அப்படியெதுவுமில்லை.”

முதியவள் சோபாவில் உட்கார்ந்தாள்.திருமதி.பரேக் அவளருகில் உட்கார்ந்து,அந்தச் சிறுமியின் கையைப் பிடித்து தன்னருகே அவளை உட்கார வைத்துக் கொண்டாள். முதியவளின் தோளைத் தொட்டு மென்மையாக “ஆன்ட்டி,அது தவறு. பெண்கள் நாம் செய்கின்ற தவறு. நமக்கு எதற்கும் வரவு செலவு இல்லை. மதிப்பீடு இல்லை, கணக்கு இல்லை. அதனால்தான் நம் ஆண்கள் வெளியே கஷ்டப்பட வேண்டியிருக்கிறது” என்றாள். தான் சொல்வது சரியா என்று கேட்க விரும்புவது போல அவள் சுனில்ராயைப் பார்த்தாள். அவள் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாதவனாக, அவன் குழம்பினான்.

“நம் மனிதர்களுக்கு வியாபாரத்தில் பெரிய நஷ்டம் ஏற்படுகிறது. சீட்டாட்டத்தில் இழக்கின்றனர். இழப்பு அழகான உதவியாளர்களால் ஏற்படுகிறது. இது எதுவும் அவர்களைப் பாதிக்காது. ஆனால் வீட்டு வரவு செலவை நாம் கவனிக்காவிட்டால்,அவர்கள் நொறுங்கி விடுவார்கள்” என்று திருமதி .பரேக் அந்த முதியவளிடமும் அவள் பேத்தியிடமும் சொல்லிக் கொண்டிருந்தாள்.

முதியவளின் முகத்தில் ஒரு பரிதாபப் புன்னகை வெளிப்பட்டது.

“பெரியவளாகும் போது உனக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும்” என்று திருமதி பரேக் அந்தச் சிறுமியிடம் வாஞ்சையோடு சொன்னாள்.

கடந்த முறை ஏற்பட்ட இழப்பைச் சரிசெய்ய— அவன் என்ன இழந்தான்—ஒரு கிளாஸ் குடித்து விட்டுப் புறப்பட வேண்டியதுதான். சுனில்ராய் முடிவு செய்துவிட்டான். தன் காலியான கிளாஸை எடுத்துக் கொண்டு மது வைக்கப்பட்டிருந்த அலமாரியை நோக்கி நடந்தான். முதியவளின் கையைப் பிடித்துக் கொண்டு ஏதோ கெஞ்சுவதைப் போல மிக மெல்லிய குரலில் சொல்லிக் கொண்டிருந்தாள் திருமதி பரேக்.“நன்றி..நன்றி” என்றுமுதியவள் நினைவிழந்தவள் போலச் சொல்வதை அவன் கேட்டான். பேத்தியின் கையைப் பிடித்துக் கொண்டு அவள் போய் விட்டாள்.

”நல்ல பெண்மணி. நான் அவர்களிடம் விற்று விட்டேன். நிறைய விருந்தினர்கள் வரும்போது நன்றாக வைத்துக்கொள்வாள் என்று நினைக்கிறேன்.” என்று திருமதி பரேக் அவனிடம் சொன்னாள்.

அவளுடைய கிளாசில் மேலும் சிறிது கலக்க விரும்பினான், ஆனால் அவள் வேண்டாமென ஜாடை காட்டினாள். சிறிது தண்ணீரை தன் கிளாசில் ஊற்றிக் கொண்டு கிளாசை உயர்த்தி,“சியர்ஸ்” சொன்னாள்.

“சோபாவை எவ்வளவுக்கு விற்றீர்கள்?”

“கேட்காதீர்கள். விற்றாகி விட்டது. அந்த டாக்டர்களை திருப்பியனுப்புவது சரியானதல்ல. அந்த கார்டு எங்கே?” ஸ்டூலில் தான் வைத்துவிட்டுப் போன விசிட்டிங் கார்டைத் தேடினாள்.

அவன் கிளாசிலிருந்ததை வாய் நிறைய ஊற்றிக் கொண்டு ஜன்னலருகே போய் நின்றுகொண்டு கடலை பார்த்தான். இன்னொரு அர்த்தமற்ற நாள் அவனைக் கடந்து கொண்டிருந்தது. யாரிடமாவது அவன் பேச விரும்பினான். உண்மையானவன் என்று சொல்லிக் கொள்ள கடந்த மூன்று மாதங்களாக ஒரு சிநேகிதன் கூட இல்லை அப்போதுதான் அவன் மேஜையின் மேல் கிடந்த ஒரு பெண்கள் பத்திரிக்கையில் அந்த விளம்பரத்தைப் பார்த்தான். ஒரு புடவை விளம்பரத்தில் கௌரி வசீகரமான புன்னகையில். மூத்த பத்திரிகை ஆசிரியரான சுனில்ராயின் மனைவி கௌரி. தன்னைவிட்டு அவள் விலகிப் போனது குறித்து அவனுக்குப் பகை எதுவும் அவளிடமில்லை. கௌரியின் புன்னகை நிஜமாகவே வசீகரிக்கக் கூடியதாகஇருக்கிறதா? மாடலிங் துறைக்குப் போன பிறகு கௌரி மிக அழகாகி விட்டாள்.

விசிட்டிங்கார்டைக் கண்டுபிடித்த மகிழ்ச்சி வெளிப்படும்படியாக அவள்பெரிய குரலில் “டாக்டர் தாராதர்?” என்று போனில் கேட்டாள்.

“தயவுசெய்து அவர் இணைப்பைக் கொடுங்கள்” என்று சொல்லிவிட்டுத் தான் பேச விரும்பியவர் தொடர்பில் கிடைத்த மகிழச்சியில் அவனைப் பார்த்து குழந்தைத்தனமாகக் கண்ணடித்தாள்.

“இது திருமதி பரேக். டைனிங் டேபிளுக்கு என்ன விலை உங்களால் தரமுடியும்?” தயங்காமல் சொல்லுங்கள்.”

சிறிதுநேர யோசனைக்குப் பிறகு பதில் வந்தது. “சரி.சம்மதம். வந்து எடுத்துச் செல்லுங்கள்.” போனைக் கீழே வைத்துவிட்டு “அற்புதம்! அதை விற்றாகிவிட்டது .டாக்டர் மகிழ்ச்சியாக இருக்கிறார்.”

தன் பையிலிருக்கும் கசங்கிக் கிடந்த சிகரெட் பாக்கெட்டின் நினைவு வந்தவனாக எடுக்க, அதில் அதிர்ஷ்டவசமாக ஒன்று இருந்தது. பற்றவைத்துக் கொண்டு கடலை பார்த்தான்.

திருமதி பரேக் அவன் எதிரில் வந்து உட்கார்ந்தாள். அவன் நரம்புகளில் ஒரு சிறிய உற்சாகம் பற்றிக் கொண்டது. கௌரியைப் பற்றிப் பேசலாமா என நினைத்தான். கௌரியின் மேல்தான் தவறு என்று யாரும் தன்னிடம் சொல்வதை அவன் விரும்பவில்லை. அவன் மீது தவறில்லை என்று யாராவது சொல்ல வேண்டுமென்றுதான் அவன் விரும்பினான். யாராவது தொடர்பில்லாத மூன்றாம் நபர்.

“நீங்கள் திரும்பவும் வரவேண்டும். நாங்கள் அகமதாபாத்திலிருந்தால்கூட. நீங்கள் பத்திரிகையாளர். நேரத்திற்காகப் பணம் பெறுபவர். நீங்கள்.திரு பரேக்கை பேட்டியெடுத்து அவரைப் பற்றி எழுதலாம்.சாதாரண விற்பனையாளன் எப்படி ஒரு டைரக்டராக உயர்ந்தார் என்று.”

“எல்லா வெற்றிகளுமே ஆச்சர்யமான கதைகளை உருவாக்குபவை.”

“விற்பதற்கு மீதம் என்ன இருக்கிறது? எல்லாம் விலை போகும் வரை இருங்கள். நான் தனியாக இருக்கிறேன். கடவுள்தான் உங்களை அனுப்பியிருக்கிறார்.”

“இந்த விற்பனை…செல்வந்தர்களுக்கு ஒரு வகையான பொழுதுபோக்கு?”அவன் குரல் கடுமையாக இருந்தது.

“நாங்கள் எல்லாவற்றையும் விற்றுவிட்டு வீட்டைக் காலி செய்ய வேண்டும். நீங்கள் இன்னும் சிறிது சிரமப்பட வேண்டியிருக்கும்.இன்னும் ஓர் உதவி செய்வீர்களா?” அவன் கேள்வியைப் பொருட்படுத்தாமல் கேட்டாள். அது என்ன என்று அறிய வேண்டுமென அவன் விரும்பினான்.

“எல்லாம் விற்பனையான பிறகும்,கண்டிப்பாக மனிதர்கள் வருவார்கள்.நான் தரையிலேயே படுத்துக் கொள்கிறேன்.ஒரு சீட்டில் ஏதாவது ஒரு விலையை எழுதி, என் கழுத்தைச் சுற்றிக் கட்டித் தொங்க விடுங்கள்.” அவன் சிரிக்க முயன்று தோற்றுப் போனான்.

“இது கேலியில்லை. என்ன விலை எழுதுவீர்கள்? நீங்கள் ஒரு புத்திசாலியாக எனக்குத் தெரிகிறீர்கள். என்ன விலை போடுவீர்கள்? சொல்லுங்கள்..”

அவன் எதுவும் சொல்லவில்லை.அவள் சோபாவில் சாய்ந்து கொண்டு, “நேற்றிரவு நான் தூங்கவில்லை.மூன்று தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொண்டும் கூட தூங்க இயலவில்லை. என் கழுத்தைச் சுற்றியதான சீட்டில் என்ன விலை எழுதுவீர்கள்?”

மறுபடியும் அழைப்பு மணி ஒலித்தது.

“என்ன விலை கொடுத்தாலும் பொருட்களை விற்றுவிடுங்கள்” கண்களைத் திறக்காமல் அவள் சொன்னாள்.

அவன் கதவருகே போனான். உயரமான, மெல்லிய மனிதர். வெளிநாட்டவரைப் போன்ற நிறம். மீசை கருமைப்படுத்தப் பட்டிருந்தது. நரை படர்ந்த அடர்த்தியான நீள முடி. நீலக் கண்கள். கையில் ஒரு சிறிய பெட்டி.

சுனில் கதவைச் சாத்தினான், வந்தவர் அவனை வியப்போடு பார்த்தார். “இதுதான் அந்த இடம். ஒரு அலமாரி, ஒரு சோபா செட், மற்றும்..”

“நீங்கள் யார்?” அவர் கேட்டார்.

திருமதி பரேக் எழுந்து உட்கார்ந்தாள்.“ வாருங்கள் நான் திருமதி

பரேக்.” சுனிலை சுட்டிக் காட்டி இது திரு.பரேக். நாங்கள் இந்தப் பழைய சாமான்களையெல்லாம் விற்றுவிட்டு புதிய சாமான்கள் வாங்கப் போகிறோம்.” பிறகு தன் மார்பை விரல்களால் தொட்டு “இது உள்பட நீங்கள் எல்லாவற்றிற்கும் விலை சொல்லலாம்.”என்றாள்.

வந்தவர் அதிர்ந்து போனதாகச் சுனில் நினைத்தான். திருமதி.பரேக் மென்மையாகச் சிரித்தாள்.அந்தச் சிரிப்பு பெரிதாகி, பெரிதாகி பிறகு விம்மலாக மாறியது.

வந்தவர் மூன்று நான்கு எட்டில் அறையைக் கடந்து திருமதி பரேக்கை கன்னத்தில் பெரிதாக அறைந்தார். பிறகு மெல்லிய குரலில் “மரியாதையாக நடந்து கொள்ளக் கற்றுக்கொள். மரியாதையாக நடக்க..” சிரிப்பு மெதுவாகக் குறைந்து அமைதி நிலவியது. வெளியில் அலைகளின் முணுமுணுப்பு கேட்டது.

மிகச் சிறிய எதிர்பார்ப்புகளுடனான இன்னொரு ஞாயிறு முடிவுக்கு வந்துவிட்டது. சுனில்ராய் கதவைத் திறந்து கொண்டு வேகமாக வெளியேறினான்.

ஒரு தவறு ஏற்படாமல் தவிர்க்க விரும்பி, அவன்  கதவிற்கு வெளியே சோதித்தான். ஒரு பூப்பொட்டலம் அங்கிருந்ததா? இல்லை, அங்கு இல்லை.

———————–

நன்றி:KUTTIEDATHI AND OTHER STORIES,ORIENT BLACK SWAN PVT LTD

மலையாள இலக்கிய உலகில் பன்முகப் படைப்பாளி என்று அடையாளப்படுத்தப்படும் எம்.டி.வாசுதேவன் நாயரின் பெரும்பாலான படைப்புகள் இந்திய, அயலக மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப் பட்டிருக்கின்றன. மஞ்சு,காலம், ரண்டாம் மொழம் ஆகியவை சிறந்த நாவல் வரிசையிலும், வானப்பிரஸ்தம், ஓளவும் தீர்வும், பந்தனம், குட்டியேடத்தி உள்ளிட்டவை சிறுகதை வரிசையிலும் சிறப்பானவையாக மதிப்பிடப்படுகின்றன. 

வயலார், வள்ளத்தோள், எழுத்தச்சன் விருதுகள் மற்றும் சாகித்ய அகாதெமி, ஞானபீடம் உள்ளிட்ட பல  விருதுகள்  பெற்றவர்.

                               —-

One Reply to “விற்பனை”

  1. அருமையான மொழிபெயர்ப்பு, வாழ்த்துகள் திருமதி.மீனா. திருமதி.பரேக்கின் துயர்மிகு அடிமை வாழ்வை விற்க விரும்புகிறாள்.வாங்குவோரில்லை. இதன் பின்னிலையாக கௌரியின் சுதந்திர வாழ்நிலையும் , சுனிலின் கையறு நிலையிலும் தவறு செய்யத்தோன்றா மனநிலையும் பகிரப்படுறது. இங்கு முரண்நகை என்னவென்றால் மணவாழ்வில் சுதந்திரம் தேடியவள் விளம்பரப்பெண்ணாகவும், அடிமைவாழ்வில் சிக்குண்ட. திருமதி. பரேக் விற்பனைப் பொருளாகவும் முன்னிறுத்திக் கொள்வது தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.