மின்னல் சங்கேதம் – 9

This entry is part 9 of 12 in the series மின்னல் சங்கேதம்

(பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் எழுதிய ‘அஷானி ஷங்கேத்’ வங்காள மொழி நாவலின் தமிழாக்கம்: சேதுபதி அருணாசலம்)

(‘ஆஷானி சங்கேத்’ படப்பிடிப்பில்)

அது ஆவணி மாதக் கடைசி.

வேலியெங்கும் தித்பல்லா பூத்திருந்தது. நதி மீது ஏராளமான பறவைகள் வலசை சென்றன.

அனங்கா நதிக்கு நீர் கொண்டுவருவதற்காகச் சென்றிருந்தாள். பூஷண் கோஷின் மனைவி கெட்டியான சேற்றில் குனிந்து ஏதோ செய்து கொண்டிருந்ததைப் பார்த்தாள். அனங்கா அதைப் பார்த்துவிட்டதைக் குறித்து அப்பெண் சங்கடப்பட்டாள். யாரும் அவளைப் பார்த்துவிடக்கூடாது என்று அவள் நினைத்திருந்திருக்கலாம்.

அனங்காவுக்கு அவள் என்ன செய்துகொண்டிருக்கிறாள் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. “என்ன செய்றீங்க கோலா தீதி?’ என்றாள்.

பூஷண் போமுக்கு அனங்கா வயதுதான் இருக்கும். இல்லை, ஓரிரண்டு வயது அதிகமிருக்கலாம். அவள் உடனே முந்தானையில் எதையோ மறைத்து, “ஓ, ஒண்ணுமில்லை – “ என்றாள்.

“ஒண்ணுமில்லையா? அப்புறம் ஏன் சகதில நிக்கறீங்க?”

”சும்மாதான்.”

“நிஜமா?”

”ஷுஷ்ணி கீரை பறிச்சிட்டிருந்தேன்.” என்று சொல்லிவிட்டு, சிரித்தபடியே நாணிக்கொண்டு, முந்தானையைத் திறந்து காட்டினாள். “சரி, பிராமணங்ககிட்ட நான் பொய் சொல்ல மாட்டேன். இதோ பாருங்க – “ என்றாள்.

”இது எதுக்கு உங்களுக்கு? வீட்ல வாத்து இருக்கா என்ன?”

அவள் சேலைத் தலைப்பில், ஒரு பிடி நத்தைகளும், சிப்பிகளும் இருந்தன. அவள் சிரித்தபடியே, “வாத்தெல்லாம் இல்லை, எங்களுக்குதான்.” என்றாள்.

”இதை எப்படி சாப்பிடுவீங்க?”

”ஓட்டை உடைச்சு, மசாலா போட்டு சாப்பிட வேண்டியதுதான்.”

”ஓ!”

“நிறைய பேர் சாப்பிடுவாங்களே? உங்களுக்குத் தெரியாதா? எங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்.”

”எப்படி சமைக்கறதுன்னு சொல்லித்தர்றீங்களா?”

”மாட்டேன். நீங்க எதுக்கு இதையெல்லாம் சாப்பிடனும்? நான் சொல்லித் தர மாட்டேன்.”

அன்று சற்று நேரம் கழித்து, காபாலி போம் மீண்டும் வந்து, “பாமும் தீதி, மறுபடியும் ஒரு ஆழாக்கு அரிசி கடன் கிடைக்குமா? கேக்கறதுக்கே சங்கடமாத்தான் இருக்கு – “

”என்ன ஆச்சு?”

“பூஷன் காகாரோட மனைவி அரிசி வேணும்னு கேட்டாங்க. ரெண்டு நாளா சாப்பிடலையாம். நத்தையெல்லாம் பிடிச்சு வேகவச்சுட்டாங்களாம். ஆனா பிசைஞ்சு சாப்பிட அரிசி இல்லையாம். இப்போ எங்க வீட்ல வந்து கேட்டாங்க. எங்ககிட்டயும் அரிசி இல்லை. ’நானே கலயத்துல குடிச்சிக்கிட்டு இருக்கேன், எங்கிட்ட வந்து நான் குளத்துலேருந்து குடிக்கனும்னு சொன்னானாம்’ங்கற மாதிரி என்கிட்ட வந்து அரிசி கேக்கறாங்க.”

”என்கிட்டயும் அரிசி இல்லையே சுட்க்கி.”

“ஒரு கைப்பிடி கூட இல்லையா?”

“நான் உங்கிட்ட மறைக்க மாட்டேன். என்கிட்ட நாலு சேர் அரிசி இருக்கு. மூணு வேளைக்குதான் வரும்.”

காபாலி போம் தரையில் அமர்ந்து, “இப்போ என்ன செய்யறது? எங்கேயுமே அரிசி கிடைக்கல.” என்று பிலாக்கணம் வைத்தாள்.

”பிஸ்வாஸ் மஷாய் இருந்தப்போ கொஞ்சமாவது கிடைச்சிட்டு இருந்தது. இப்போ அவரும் இல்ல.”

“ஆமா.”

“நான் ஏன் ஒரு பருக்கை அரிசி கூட தர மாட்டேங்கறேன்னு இப்போ புரிஞ்சிருக்கும்.”

“அது புரியுது.”

அனங்கா சிரித்துக்கொண்டே, “என் மேல கோவமில்லைதானே?” என்றாள்.

“இல்லை தீதி. உங்க மேல நான் எப்படி கோவப்படுவேன்?”

”இந்தா பிடி, உன்னோட அரிசி. சேலையை விரி.”

“அப்போ உங்களுக்கு?”

“என்ன நடக்குமோ நடக்கட்டும். என்கிட்ட இருக்கற வரையிலும் உன்னை வெறுங்கையோட அனுப்ப என்னால முடியாது.”


ன்னும் கொஞ்சநாள் கழிந்தது. எல்லார் வீட்டிலும் அரிசித் தட்டுப்பாடு மேலும் அதிகமானது. எல்லோரும் எல்லோரிடமும் அரிசி கடன் கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால் யாரிடமுமே கடன் கொடுக்குமளவுக்கு அரிசி இருக்கவில்லை. அனங்கா தன் மகன்களுக்கு இரண்டு நாட்கள் வெறும் வேகவைத்த முருங்கை இலைகளையே கொடுத்து வந்தாள். ஒருநாள் காபாலி போம் அவளுக்கு ஸுஷ்னி கீரை கொண்டுவந்து கொடுத்தாள். இன்னொருநாள் கங்காசரண் எங்கிருந்தோ வாழைத்தண்டு கொண்டுவந்தான். திரிபூராவிலிருந்து பட்டினியாகக் கிளம்பிவந்தவர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று, கஞ்சிக்குப் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்கள். எல்லா கிராமங்களிலும் உரத்த அழுகைக்குரல் கேட்டுக்கொண்டிருந்தது.

ஒருநாள் மாலை ராம்லால் காபாலி கங்காசரண் வீட்டுக்கு வந்து, ரகசியமாக, “பண்டிட் மஷாய், உங்களுக்கு அரிசி வேணுமா?” என்று கேட்டான்.

கங்காசரண் ஆச்சரியப்பட்டான், “எங்கே இருக்கு?”

”என் மாமனார் மேட்டேரா பஜித்பூர்லேருந்து ஒரு மூட்டை அரிசியோடு ரகசியமா இங்கே வந்துட்டாரு. எங்க வீட்ல ஒன்றரை மணங்கு நல்ல தரமான பேனாமூரி அரிசி இருக்கு. என் இளைய சம்சாரம் உங்களுக்குதான் முதல்ல குடுக்கனும்னா.”

“விலை எவ்வளவு?”

“மணங்குக்கு நாப்பது ரூபாய்னு மாமனார் சொல்றாரு.”

”நாற்பதா? அதுவும் அவ்ஷ் அரிசிக்கா?”

”ஆனா அது கூட எங்கேயும் கிடைக்காது, உங்களுக்கே தெரியும்.”

கங்காசரண் தயங்கினான். அவன் மனைவியிடம் இருப்பவை இரண்டே இரண்டு மெலிந்த வளையல்கள்தான். அவையும் கையை விட்டுப்போய்விட்டால் மீண்டும் கிடைப்பதற்கு வாய்ப்பேயில்லை.

ஆனால் அவனால் என்ன செய்யமுடியும்? அவன் குடும்பத்தை உயிரோடு வைத்திருப்பது முக்கியம். அனங்காவைக் கேட்டபோது அவள் மறுபேச்சு பேசாமல் வளையல்களைக் கழற்றிக் கொடுத்தாள். ஒரு மணங்கு அரிசி வாங்கினான்.

ராம்லால் காபாலி, “ஜாக்கிரதையா யார் கண்ணுக்கும் படாம கொண்டு போங்க. யார்க்கிட்டயும் சொல்லாதீங்க.” என்றான்.

கங்காசரண் இருட்டியபிறகு மகன்களோடு சேர்ந்து போய் அரிசியைக் கொண்டு வரும்வழியில் மீனவன் நிமாய் கண்ணில் பட்டுவிட்டான்.

“யாரு அங்கே போறது?”

“நாங்கதான்.”

”யாரு? பண்டிட் மஷாயா? வணக்கம்! என்ன எடுத்துக்கிட்டுப் போறீங்க?”

“ஒண்ணுமில்லை.”

“நெல்லா?”

“ஆமா.”

நிமாயின் விதவை மகள் அடுத்தநாள் அதிகாலையிலேயே அவர்கள் வீட்டுக்கு வந்துவிட்டாள். அவர்கள் பட்டினியால் செத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்குக் கொஞ்சம் நெல் வேண்டும். அனங்காவுக்குப் பொய் சொல்வதில் சாமர்த்தியம் போதாது. “நெல் இல்லை. நேத்திக்கு அவர் அரிசிதான் கொண்டு வந்தாரு.”

“அப்போ கொஞ்சம் அரிசி குடுங்க. நாங்க பட்டினியா கிடக்கோம்.”

அவள் கொடுத்துத்தான் ஆக வேண்டியிருந்தது. அதன் விளைவாக, பட்டினியில் வாடும் பக்கத்து வீட்டுக்காரர்களும், நண்பர்களும் அவர்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். சிலருக்கு சமைத்த சோறு தேவைப்பட்டது, சிலருக்கு அரிசி. ஒரு மணங்கு அரிசியும் பத்தே நாட்களில் காலியாகிவிட்டது. அதையெல்லாம் விட – அனங்காவின் இரண்டு வளையல்கள் – அவளுடைய கடைசி நகைகள் – நிரந்தரமாக அவளை விட்டுப் பிரிந்தன.


தற்கு நடுவே ஒருநாள் பாட்சாலாவின் மோத்தி முச்சினி கங்காசரண் வீட்டுக்கு வந்தாள்.

அனங்கா அதிசயித்துப்போனாள். “மோத்தி! வா, வா!”

மோத்தி சற்று தள்ளியிருந்தே மரியாதையாக விழுந்து வணங்கினாள். “ப்ரணாம், தீதி தாக்ருன்.”

”எப்படியிருக்கே மோத்தி? இப்படி இளைச்சுப் போய்ட்டியே?”

“ஒண்ணும் சரியில்ல தீதி தாக்ருன். சாப்டாததாலதான் இப்படியாகிட்டேன்.”

”அங்கேயும் பஞ்சமா?”

”என்ன சொல்றது! எவ்வளவு பெரிய அருந்ததியர் குடியிருப்பு! நிறைய பேர் ஓடிப் போய்ட்டாங்க.”

“எங்கே?”

“எங்கே போகமுடியுமோ அங்கே. தீதி தாக்ருன், நான் ஏழு நாளா ஒண்ணுமே சாப்டல. சின்னச் சின்ன மீன், நத்தைங்கள்லாம் பிடிச்சு சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன். இப்போ அதெல்லாமும் குறைஞ்சு போச்சு. பாட்சாலா தாமரைக்குளம் இருக்குல்ல, அதெல்லாம் இப்போ வெறும் சேறும் சகதியுமாய்டுச்சு. முச்சிப்பாரா, பாக்திபாராலேருந்து வந்த சின்னப்பசங்க, பொண்ணுங்க எல்லாம் கழுத்தளவு தண்ணில நின்னுக்கிட்டு மீன், நத்தையெல்லாம் கிடைக்காதான்னு அளைஞ்சுக்கிட்டு இருக்காங்க. எல்லாம் காலி. அரை சேர் மீன் கூட பிடிக்க முடியல. சின்னக்குழந்தைகள்லாம் கரையில் உட்கார்ந்து அழுதுக்கிட்டு இருக்காங்க. அதுங்க அழுகைய நிறுத்தறதுக்காக, அம்மாக்காரிங்கள்லாம் பச்சை நத்தையைப் பிடிச்சு அவங்க வாய்ல திணிச்சிட்டு இன்னும் கிடைக்குமான்னு குளத்துக்குள்ள போறாங்க. அதையெல்லாம் சாப்பிட்டு எத்தனையோ குழந்தைங்க செத்துப் போய்டுச்சு. நீத்து புனோவோட கடைசிப் பொண்ணு வயித்துப்போக்குல செத்துப்போச்சு.”

”ஐயோ கடவுளே, மோத்தி!”

”என்ன சொல்றது பாமுன் தீதி! எவ்வளவு பெரிசு எங்களோட அருந்ததியர் சமுதாயம், இப்போ எல்லாம் சிதறிப்போச்சு!”

“ஏன்?”

“எல்லாரும் எங்க போக முடியுமோ அங்க போய்ட்டாங்க! எவ்வளவு நாள் அங்கே இருக்கறது, சொல்லுங்க. என்னோட ரெண்டு மருமகப் பசங்க, நல்ல வலிமையா, ஆரோக்கியமா இருப்பாங்க. துரும்பா இளைச்சுப்போய் ஒரு நாள் எங்கே போனாங்கன்னே தெரியல – போய்ட்டாங்க. என் நிலைமைய நீங்களே பாக்கறீங்க – “

மோத்தி இரண்டு கைகளையும் நீட்டி உடைந்து அழத்தொடங்கினாள்.

அனங்கா வேகமாக அவளருகே சென்று, ”அழாதே மோத்தி, இந்தா, கொஞ்சம் தண்ணி குடி. அப்புறமா வெல்லப்பாகுல பிசைஞ்ச சாதம் தரேன். சாப்பிட்டு எத்தனை நாளாச்சு?”

மோத்தி விரல்களைக் காட்டிச் சொன்னாள், “ஏழு நாளாச்சு.”

அவள் நிலையைப் பார்த்து அனங்காவுக்கு பயமாக இருந்தது. மக்கள் பட்டினியால் இப்படியும் துன்பப்படக்கூடும்! பாட்சாலாவின் அத்தனை பெரிய அருந்ததியர் சமுதாயம் எப்படி இப்படி மோசமான நிலைக்குள்ளானது?


நோனாதாலா அருகே ஒரு குறுகிய ஓடைக்கருகிலிருந்து அனங்கா அன்று ஆலைக்கீரை பறித்திருந்தாள். அந்த இடம் ஒரு அருமையான கண்டுபிடிப்பு. காபாலி போம்தான் அவளுக்கு அந்த இடத்தைக் காட்டியிருந்தாள்.

“பாமுன் தீதி, என்னோட வாங்க.”

“எங்கே, சுட்க்கி?”

“நோனாதாலா ஓடைக்கு.”

“ஏன்? அங்க உன்னோட காதலன் எவனாவது காத்துக்கிட்டு இருக்கானா?”

“ஐயோ, ஒழிஞ்சு போங்க பாமுன் தீதி! எனக்குப் புருஷன் இல்லையா? கல்யாணமான ஒருத்தியைப் பார்த்து நீங்க இப்படியெல்லாம் பேசக்கூடாது. நீங்க அழகி. உங்களுக்கு நிறைய காதலர்கள் இருக்கலாம். என்னை மாதிரி அவலட்சணமானவளையெல்லாம் யார் பார்ப்பாங்க? அதெல்லாம் ஒண்ணுமில்லை. அங்கே ஆலைக்கீரை எக்கச்சக்கமா விளைஞ்சிருக்கு. இன்னும் யாருக்கும் தெரியாது. வாங்க, எல்லாரும் காலி செய்யறதுக்கு முன்னாடி நாம பறிச்சிக்கிட்டு வந்துடலாம்.”

நோனாதாலா ஓடை கிராமத்துக்குப் பின்னிருந்த மூங்கில் தோப்புகளுக்கும், மாமரங்களுக்கும் பின்னால் அடர்த்தியான வனம் நடுவே இருந்தது. மழைக்காலத்தில் அந்த ஓடை நிரம்பியிருக்கும். இப்போது இலையுதிர் காலத்தில் தண்ணீர் இல்லை. ஆனால் அந்த ஈரப்பத நிலத்தில், ஏராளமான ஆலைக்கீரைகள் விளைந்திருந்தன. அனங்கா பிரமித்துப்போனாள். “அடேயப்பா! எவ்வளவு!”

காபாலி போம் சிரித்தாள். ”இது பசிச்சவனுக்கு படையல் வச்ச மாதிரி.”

”இருக்கட்டும். நாம ஒண்ணும் யார்க்கிட்ட இருந்தும் திருடலையே.”

“இது கடவுளோட பிரசாதம். பறிச்சு சாப்பிட வேண்டியதுதான். நல்ல வேளை இன்னும் யாரும் பார்க்கல. இல்லாட்டி ஒண்ணும் மிஞ்சி இருக்காது.”

அனங்கா கொஞ்சம் பயந்த சுபாவம். நரியொன்று உண்டாக்கிய சலசலப்பு அவளை சஞ்சலப்படுத்தியது. “புலியா?”

”ஆமா, புலி, அங்கே பாருங்க.”

”அது சரி, இந்த இடம் உனக்கெப்படி தெரியும்? உண்மையைச் சொல்.”

அனங்காவுக்கு காபாலி போமின் நடத்தை குறித்து ஏற்கனவே தெரியும். இதில் ஏதோ கள்ளமிருக்கிறது என்று அவள் யூகித்திருந்தாள்.

காபாலி போம் வெறுமனே சிரித்து மழுப்பினாள், “அதை விடுங்க – “

”மறுபடியும் என்கிட்ட மறைக்கப் பார்க்கறியா? எப்போ நீ இங்கே வந்தே? யாரும் இங்கே தனியா வர மாட்டாங்க.”

“நான் வந்தேன்.”

“ஏன்?”

காபாலி போம் நாணத்தால் முகம் சிவந்தாள், “அது வந்து …”.

”கள்ளி! உன்னால இன்னும் பழைய கெட்டப் பழக்கத்தை விட முடியலை இல்ல? கட்டின புருஷனுக்கு இப்படி துரோகம் பண்ற, வெக்கமா இல்ல உனக்கு?”

காபாலி போம் அமைதியாக இருந்தாள். சொன்னது வேறு யாராவதாக இருந்திருந்தால் அவள் பெரிய சண்டைக்குப் போயிருப்பாள். ஆனால் அனங்காவின் ஆளுமையில் இருக்கும் ஏதோ ஒன்று அவளிடம் யாரும் சண்டைக்குப் போகவிடாதபடி தடுத்தது.

அனங்கா, “இல்லை சுட்க்கி, என்னைத் தப்பா நினைக்காதே. உன் நல்லதுக்குதான் சொல்றேன் – “ என்றாள்.

காபாலி போம் ஒரு மலர் மலர்வதைப் போல முகத்தை உயர்த்தி, “ஏதோ நான் வேணும்னு செய்யற மாதிரி. அவன் கட்டாயப்படுத்தினதாலதான் – “ என்றாள்.

“யார்?”

“பேர் வேண்டாமே.”

“சரி, அவன் கட்டாயப்படுத்தலைன்னா நீ வந்திருக்க மாட்டியா?”

”அவன் எனக்கு அரிசி தரான். பெள தீதி, நீங்க ரொம்ப நேர்மையானவங்க, சதி சாவித்திரி மாதிரி. உங்களுக்கு உண்மையான ஒரு புருஷனும் கிடைச்சதுக்கு நீங்க புண்ணியம் செஞ்சிருக்கீங்க. உங்ககிட்ட நான் பொய் சொல்ல மாட்டேன். பிராமணங்க தெய்வம் மாதிரி. என்னால சின்ன வயசுலே இருந்தே பசி தாங்க முடியாது. அதனால என் அப்பா அம்மா எப்படியாவது பழைய சோறும், வெங்காயமுமாவது குடுத்திருவாங்க.”

“சொல்லு….”

“அன்னிக்கு நான் பட்டினியா இருந்தேன். அவன் வந்து என்ன சொன்னான்னா – “

காபாலி போம் நாணத்தால் முகம் தாழ்த்தி, “இல்லை, இதுக்கு மேல சொல்ல முடியாது.” என்றாள்.

“என்ன சொன்னான்?”

“எனக்கு அரை காதா அரிசி தரேன்னு சொன்னான்.”

“அவ்வளவுதானா? அதுக்குப் போய்…”

அனங்கா வேறெதுவும் சொல்லவில்லை. அவள் கைகளைப் பற்றி, “சுட்க்கி” என்றாள்.

காபாலி போம் அமைதியாக இருந்தாள்.

”நீ ஏன் என்கிட்ட வரல?”

“நீங்களே அன்னிக்குக் கீரைதான் பறிச்சிக்கிட்டு இருந்தீங்க. உங்ககிட்டயும் அன்னிக்கு அரிசி இல்லை.”

“பாட்சாலாலேருந்து மோத்தி முச்சினி வந்தாளே, அன்னிக்கா?”

“ஆமா.”

அனங்காவின் கண்களில் நீர் தளும்பியது. அவள் எதுவும் பேசாமல் காபாலி போமின் வலது புஜத்தைப் பற்றிக்கொண்டிருந்தாள்.

அன்று துர்கா பண்டிட் அவர்கள் வீட்டுக்கு வந்து முற்றத்தில் அமர்ந்திருந்தார். வீட்டில் வேறு யாருமில்லை. கங்காசரண் பள்ளியிலிருந்தான். அனங்கா கீரைகளைப் பறித்துக்கொண்டு வந்தபோது, ’கஷ்டகாலம்’ என்று நினைத்தாள். அவர் அன்று பார்த்தா வர வேண்டும்! அவர்கள் அந்தக் கீரையையும், கங்காசரண் எங்கிருந்தோ கொண்டு வந்த சொற்பம் நாக்ரா அரிசியையும்தான் சாப்பிட வேண்டும். அது ஒருவருக்குக் கூடப் போதாது.

துர்கா பண்டிட், “இதோ பாரும்மா, நான் திரும்பி வந்துட்டேன்.” என்றார்.

”வாங்க, உட்காருங்க.”

“நீங்க எல்லாம் செளக்கியமா?”

“ஏதோ இருக்கோம்.”

துர்கா பண்டிட் முகம் கழுவி ஓய்வெடுத்து அரை மணி நேரமானதும், அவருடைய சொந்த சோகக் கதையைச் சொன்னார். ஏதோ அனங்கா அவருடைய நெடுநாள் நட்பைப் போல.

”மூணு நாளா நீங்க ஒண்ணும் சாப்பிடலையா?” என்றாள் அனங்கா.

”நான் மட்டுமில்ல, மொத்த குடும்பமும் பட்டினி. என்னால பொறுக்க முடியல. அதான் என் லக்ஷ்மி உன்னைத் தேடி வந்தேன்.”

“நீங்க வந்தது குறிச்சு சந்தோஷம்.”

அனங்கா அவருக்கு என்ன கொடுப்பது என்று கவலைப்பட்டாள். போனமுறை அவர் வந்தபோது கடன் வாங்கிய டீத்தூள் இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கிறது என்று அவளுக்குத் திடீரென்று நினைவுக்கு வந்தது. ”டீ குடிக்கிறீங்களா?” என்றாள்.

“ஆஹா! அது அம்ருதம் மாதிரி இருக்குமே? எவ்வளவு நாளாச்சு ஒரு டீ குடிச்சு.” என்றார்.

அனங்கா, “ஆனால், உப்பு டீ. வீட்ல சர்க்கரையோ பாலோ இல்லை.” என்றாள்.

”அது போதும். எனக்கு உப்பு டீன்னா ரொம்ப இஷ்டம்.”

ஒரே ஒரு குவளை உப்பு டீதான் அவளால் தர முடிந்தது. கொடுப்பதற்கு வேறொன்றுமில்லை.

இரவில் கங்காசரண் அவர் வந்ததைப் பார்த்து மிகவும் கோபப்பட்டான்.

“அந்த யாசகன் திரும்பி வந்துட்டானா?”

அனங்காவுக்கும் எரிச்சலாகத்தான் இருந்தது. “ஆமா! இப்போ என்னதான் செய்யறது?”

”உன்னால போகச் சொல்ல முடியாதா? நம்மகிட்ட ஒண்ணுமே இல்ல.”

”நமக்குத் தெரியாம இருக்கலாம். ஆனால் கடவுள் நம்ம எல்லாரையும் காப்பாத்துவாரு.”

”ஆமா. நமக்குதான் ரெண்டு வேளை சோறு போடறாரு! அந்தக் கிழவனுக்கும் ஏன் போடக் கூடாது? அவனை ஏன் உன் தோள்ல ஏத்தி வைக்கனும் அந்தக் கடவுள்?”

”கடவுளைப் பத்தி அப்படிப் பேசாதீங்க. அவர் கண்டிப்பா ஏதாவது செய்வார். நம்பிக்கை வைங்க. அவர் நம்மகிட்ட இவரை அனுப்பி வச்சிருக்கார். அதுக்கான வழியையும் அவரே காட்டுவார்.”

“நல்லது. எப்படி காப்பாத்தறாருன்னு பார்க்கறேன்.”

“சரி, போய் முகம் கழுவிட்டு வாங்க. உப்பு டீ தரேன்.”

துர்கா பண்டிட் வசதியாக அங்கேயே தங்கிவிட்டார். கங்காசரணுக்கு படு எரிச்சலாக இருந்தது. ஆனால் எதுவும் சொல்ல முடியவில்லை. அவர் வந்து மூன்று நாட்களாகிவிட்டன. அனங்கா அவரை நன்றாகப் பார்த்துக்கொண்டாள். அவர் சாப்பிடுவதற்கு எப்படியாவது எதையாவது கொண்டு வந்துவிடுவாள்.

ஒருநாள் துர்கா பண்டிட் வேலியைச் சரியாக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த கங்காசரண் கடும் எரிச்சலடைந்தான். “உங்களை யார் இதைச் செய்யச் சொன்னது?”

துர்கா பண்டிட் திக்கித் திணறி, “நான் சும்மாதான் இருக்கேன், அதான் ஏதாவது செய்யலாம்னு.”

“வேண்டாம் விட்டுடுங்க. ஹபு அதைப் பார்த்துக்குவான்.”

“அவன் சின்னப் பையனாச்சே…”

“அவனுக்கு எப்படி செய்யறதுன்னு தெரியும். நீங்க அந்த கனமான கோடாரியில காயம் பட்டுக்குவீங்க. வேண்டாம்.”

துர்கா பண்டிட் தயங்கினார். அவர் வீட்டு வேலைகள் ஏதாவது செய்ய நினைத்தார். ஆனால் அது கங்காசரணை மேலும் எரிச்சலாக்கியது. அவருடைய திட்டமென்ன? இங்கேயே தங்கிவிட முடிவு செய்துவிட்டாரா? அனங்கா சந்தோஷமாக அவருக்கு உணவிட்டு, டீ கொடுத்து வந்தாள். எப்படி சமாளிக்கிறாள் என்று கேட்க அவனுக்குத் தயக்கமாக இருந்தது.

அரிசித்தட்டுப்பாடு நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வந்தது. எல்லோரும் புலம்பினார்கள். ஒருநாள் ஸாது காபாலி, குலேகாளியிலிருக்கும் ஒரு கோனாரிடம் அரிசி விற்பனைக்கு இருக்கிறதென்ற தகவலைச் சொன்னார். கங்காசரணுக்கு அதில் முழு நம்பிக்கை இல்லையென்றாலும், அவனுக்கு அவசரமாக அரிசி தேவைப்பட்டது. அதனால் முயற்சித்துப் பார்ப்போம் என்று நினைத்தான். கங்காசரணும், ஸாது காபாலியும் பதினான்கு மைல்கள் நடந்து அங்கே சென்று சேர்ந்தார்கள். அங்கே ரயில் வசதி இல்லை, பெரிய சந்தையும் இல்லை. ஆனால் ஒருவேளை அரிசி இருக்கலாம் என்று கங்காசரண் நம்பினான்.

நீண்ட நேரம் தேடி அந்தக் கோனாரின் வீட்டைக் கண்டுபிடித்தார்கள். அவன் ஒரு பிராமணன் என்பதை அறிந்த கோனார், அவனை வரவேற்று உபசரித்து, புதிய புகையிலையை நிரப்பி ஹூக்காவைக் கொடுத்தார்.

”இது நல்ல ஊர்.” என்றான் கங்காசரண்.

உண்மையில் அவனுக்கு பேசும் தைரியமே இல்லை. தப்பாக எதையாவது சொல்லிவிட்டால் என்ன ஆவது? அரிசி கிடைக்கவில்லையென்றால், அவர்கள் எல்லோரும் பட்டினி கிடக்க வேண்டி வரும்.

”நல்ல ஊர்தான் மஷாய். ஆனால் மலேரியா தொல்லை அதிகம்.”

“அது எல்லா ஊர்லயும் இருக்கறதுதான்.”

“உங்க ஊர்லயும் இருக்கா என்ன? நீங்க நதுன்காவ்ம்ல இருந்துதானே வரீங்க? அது நதிக்கரையில்தானே இருக்கு?”

”ஆமா. ஆனா அங்கேயும் மலேரியா இருக்கு.”

”என்ன விஷயமா வந்தீங்க?”

“உங்களைப் பார்க்கத்தான்.”

”என்னையா? உங்களை மாதிரி ஒரு பிராமணர் என்னைப் பார்க்க வந்ததுக்கு நான் புண்ணியம் செஞ்சவன். நான் உங்களுக்கு என்ன செய்யனும்?”

”அது வந்து… நிஜத்தைச் சொல்லட்டுமா?”

“சொல்லுங்க பாபா தாகுர்.”

”உங்ககிட்ட விற்பனைக்கு அரிசி இருக்குன்னு கேள்விப்பட்டோம். நீங்க தயவுசெஞ்சு எங்களுக்கு அரிசி தரணும். நாங்கள்லாம் பட்டினியா இருக்கோம்.”

அவர் சற்றுநேரம் அமைதியாக இருந்துவிட்டு, “யார் சொன்னது?” என்றார்.

“எங்க கிராமத்துல கேள்விப்பட்டோம்.”

”பாபா தாகுர், ஒரு பிராமணர்கிட்ட நான் பொய் சொல்ல மாட்டேன். நீங்க கடவுள் மாதிரி. என்கிட்ட அரிசி இருக்கறது உண்மைதான். ஆனால், அது விற்பனைக்கு இல்லை.”

”எவ்வளவு இருக்குன்னு சொல்ல முடியுமா?”

“மூணு மணங்கு. அரசாங்கத்துலேருந்து யார்க்கிட்ட எவ்வளவு அரிசி இருக்குன்னு கணக்கெடுக்க வந்தப்போவே நான் பூமிக்கடியில புதைச்சு வச்சுட்டேன். புதைச்சு வச்சதால கொஞ்சம் வாடை அடிக்குதே தவிர, மோசமில்லை. ஆனால், என்கிட்ட நெல்லு இல்லை. இவ்வளவுதான் என்கிட்ட இருக்கு. இதையும் வித்துட்டேன்னா – எங்க வீட்லயும் சின்னக் குழந்தைங்க இருக்கு. தயவு செஞ்சு என் மேல கோவப்பட்டு சாபம் கீபம் கொடுத்துடாதீங்க பாபா தாகுர். என்னால முடிஞ்சா, உங்களுக்குக் கட்டாயம் கொடுத்திருப்பேன். ஆனால் என்கிட்ட அரிசியைத் தவிர வேறெதுவும் இல்லை, பிராமணரான உங்க பாதம் தொட்டு சொல்றேன்.”

அவர்களுக்கு அரிசி கிடைக்கவில்லை. திரும்பி வருகையில் கங்காசரண் விரக்தியாக இருந்தான். நான்கு மைல்கள் நடந்தபின், இருவரும் பசி தாகத்தில் தவித்தார்கள். ”என்னால் இதுக்கு மேல நடக்க முடியாது மஷாய்”, என்றார் ஸாது.

”எனக்கும் முடியல. பக்கத்துல ஏதாவது கிராமம் இருக்கா?”

”அடுத்து பாமுண்டங்கா-ஷேர்பூர். அதுக்கப்புறம் ஜிகர்ஹாதி.”

பாமுண்டங்கா-ஷேர்பூரில் நுழைந்தபிறகு, ஒரு பெரிய வீட்டைக் கண்டார்கள். ஸாது காபாலி, “இங்கே கொஞ்ச நேரம் உட்காரலாம். கண்டிப்பா, குடிக்கறதுக்கு தண்ணியாவது கிடைக்கும்.” என்றார்.

அந்த வீட்டுக்காரர் ஸாடகோப ஜாதியைச் சேர்ந்தவர். அவர் அவர்களை மரியாதையாக வரவேற்று, பக்கத்திலிருந்த மரத்திலிருந்து இளநீர் பறித்துக் கொடுத்தார். அடுத்து குடிக்கத் தண்ணீரும், வெல்லமும் தந்தபின், “நீங்க இங்கேயே சமைச்சு சாப்பிடனும்.” என்றார்.

கங்காசரண் வியப்படைந்தான். “இங்கே சமைக்கனுமா?”

”ஆமா, பாபா தாகுர். ஆனா இங்கே அரிசி இல்லை.”

கங்காசரண் மேலும் வியப்படைந்தான். “அப்போ நான் எதில சமைக்கறது?”

”பாபா தாகுர், அரிசி காலியாகி ரொம்ப நாள் ஆச்சு. இங்கே பத்து நாளா யாரும் அரிசியே சாப்பிடலை.”

“அப்போ சமைக்க என்ன தரப்போறீங்க?”

“பாபா தாகுர், சொல்றதுக்கே வெக்கமாதான் இருக்கு. இங்கே எல்லாரும் வேகவச்ச பருப்புதான் சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம். உங்களுக்கும் அதையே தரேன். கூடவே பரங்கிக்காயும் தரேன். அவ்வளவுதான் எங்ககிட்ட இருக்கு.”

ஸாது காபாலி உடனே சம்மதித்தார். அவர் முகத்தைப் பார்த்த கங்காசரணும் சம்மதித்தான். “சரி. உங்களால என்ன முடியுமோ அதைக் குடுங்க.”

உப்பும், மிளகாயும் போட்டு வேகவைத்த பருப்பையும், பொறித்த கத்தரிக்காயையும்தான் அவர்கள் சாப்பிட வேண்டியிருந்தது. ஸாது, “இதுவும் நம்ம தலைவிதி!” என்றார்.

கங்காசரண், ”இப்படியும் சாப்பிடலாம்னு இன்னிக்குத் தெரிஞ்சிக்கிட்டோம். ஆனால் இதை எத்தனை நாள் சாப்பிட முடியும்னு தெரியல.” என்றார்.

கங்காசரண் வீடு வந்த சேர மாலையாகிவிட்டது. ஸாது அவனுக்கு சில கத்தரிக்காய்கள் கொடுத்தார். அவர் ஒன்றும் ஏழை இல்லை. அவர் காய்கறிகள் பயிரிட்டு, சந்தையில் விற்று, மாதத்துக்கு மூன்றோ நான்கோ ரூபாய் சம்பாதித்து வந்தார். ஆனால் அந்தப் பணத்தில் வாங்கலாம் என்று முயற்சித்தால் கூட எங்கும் அரிசி கிடைப்பதில்லை.

துர்கா பண்டிட்டும், மகன்களும், அனங்காவும் அன்று நாள் முழுவதும் எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை என்பதை அவர்கள் முகத்திலிருந்தே கண்டுகொண்டான் கங்காசரண். அவனாவது வேகவைத்த பருப்பு சாப்பிட்டிருந்தான். அவன் வெறுங்கையோடு வந்ததைப் பார்த்த அனங்கா அவனை எதுவும் கேட்கவில்லை. கைகால் கழுவிக்கொண்டு வந்ததும், கொஞ்சம் டீ கொண்டு வந்து கொடுத்தாள். துர்கா பண்டிட்டும் அரிசி தேடி அலைந்திருந்தார். அவருக்கும் எதுவும் கிடைக்கவில்லை. “இப்போ சாப்பிடறீங்களா?” என்று கேட்டாள் அனங்கா. கங்காசரண் தட்டில் சாதம் இல்லாமல், வெறும் காய்கறிகள் மட்டுமே இருந்ததைப் பார்த்தான். வேகவைத்த பரங்கிக்காய் துண்டுகளும், வெல்லமும்தான் அன்றைய இரவுணவு. அவன் மனைவி அன்னபூரணியைப் போன்றவள். என்னவோ மாயமந்திரம் செய்து, அவர்கள் எல்லோருக்கும் ஏதாவது சாப்பிடக் கொடுத்துவிடுவாள்.

கங்காசரண் விசனப்பட்டாலும், அவனுக்கு தீர்வு எதுவும் தெரியவில்லை. எத்தனை நாள் இப்படி தாக்குப்பிடிக்க முடியும்? “பாமுண்டங்கா-ஷேர்பூர்ல வேகவச்ச பருப்பைத்தான் சாப்பிடறாங்க. நாமளும் ஒருநாள் அதை சாப்பிட்டுப் பாப்போமா?”

அனங்கா இளைத்துவிட்டாற்போல் கங்காசரணுக்குத் தெரிந்தது. ஒருவேளை துர்கா பண்டிட் இங்கே தண்டச்சோறு சாப்பிட்டுக்கொண்டிருப்பதால் அவள் ஒழுங்கா சாப்பிடுவதில்லையாய் இருக்கும். ஓ! என்ன ஒரு குழப்பம்!

அனங்கா ஏதோ சொல்ல வாயெடுத்தபோது, வாசலில் இருந்து யாரோ கூப்பிட்டார்கள், “ஓ பாமுன் தீதி!”

அனங்கா வெளியே வந்தபோது வாசலில் பாட்சாலாவிலிருந்து மோத்தி முச்சினி வந்திருப்பதைப் பார்த்தாள். அவள் தலை முடியெல்லாம் சடை பிடித்து, அழுக்கான, கந்தலாகக் கிழிந்த சேலையைக் கட்டிக்கொண்டு நின்று கொண்டிருந்தாள். எலும்பும் தோலுமாக இருந்தாள்.

அனங்காவைப் பார்த்து அவள் சிரிக்க முயற்சித்தாள். ஆனால் அவளுடைய இளைத்த முகத்தில் அத்தனை பல்லும் தெரிந்து விகாரமாக இருந்தது. அனங்கா உடனே, ”யாரு மோத்தியா? எதுவும் சாப்பிடல போலிருக்கே? வா, உட்காரு.” என்றாள்.

இரண்டு நிமிடங்களில் வேகவைத்த பரங்கித் துண்டுகளை ஒரு வாழையிலையில் எடுத்துக்கொண்டு வந்து மோத்தி முன்னால் வைத்தாள். அருகே ஒரு விளக்கையும் வைத்தாள். ”சோறு இல்லையா பாமுன் தீதி?” என்று கேட்டாள் மோத்தி. அதைக்கேட்ட அனங்கா மிகவும் வேதனைப்பட்டாள்.

மோத்தி முச்சினி ஏமாற்றமடைந்தாள். அனங்காவால் அவளுக்கு சோறு கொடுக்க முடியவில்லை. கடந்த சில நாட்களாக வீட்டில் ஒரு பருக்கை சோறு கூட இல்லை. இந்தக் காய்கறிகள் கூட எவ்வளவோ கஷ்டப்பட்டுதான் கிடைத்தது.

அனங்கா பரிவோடு, “வேற ஏதாவது தரட்டுமா?” என்று கேட்டாள்.

மோத்தி, “ஓ! கண்டிப்பா! மீன் கறி, பாசிப்பருப்பு, வடை, காய்கறி…” என்றாள்.

”எல்லாம் தரேன். இப்போதைக்கு இதை சாப்பிடு. அது சரி, நீ, எத்தனை நாளா சோறு சாப்பிடல? சொல்லு.”

மோத்தி வாழையிலையைப் பார்த்தபடியே சொன்னாள், “பதினைஞ்சு பதினாறு நாள் இருக்கும். இத்தனை நாளா வெறும் சேனைக்கிழங்கும், கொடிப்பசலைக்கீரையும்தான் சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன். ஆனா அதுவும் இப்போல்லாம் கிடைக்கறதில்லை. அதான் உங்களைப் பாக்கலாம்னு வந்தேன். சாகறதுக்கு முன்னாடி ஒரு கைப்பிடி சோறாவது கிடைக்கும்னு நினைச்சேன்.”

அனங்கா கண்ணீரைத் துடைத்துக்கொண்டு உறுதியான குரலில் சொன்னாள், “மோத்தி, இன்னிக்கு ராத்திரி நீ இங்கேயே தங்கு. என்னாவானாலும் சரி, எப்படியாவது நாளைக்கு நான் உனக்கு சாதம் சமைச்சுப் போடறேன்.”

அனங்கா எப்படியோ இரண்டு நாளுக்கொருமுறை மோத்திக்கு சோறு சமைத்துப் போட்டாள். எப்படி அவளால் அது முடிந்தது என்று யாரும் கேட்கவில்லை. கிழவர் துர்கா காம்தேவ்பூருக்குத் திரும்பிப் போய்விட்டார். ஆனால் அவர் மீண்டும் வருவார் என்று கங்காசரண் உறுதியாக நம்பினான். இங்கே கிடைப்பது போன்ற ராஜ உபசாரம் வேறெங்கே கிடைக்கும்?

மோத்தி அன்று மதியம் திரும்பிவந்தாள். அன்றும் அவள் கிழிந்த சேலையில் சடை பிடித்த தலையோடிருந்தாள். அனங்கா, “இந்தா, கொஞ்சம் எண்ணெய். போய் ஆத்துல குளிச்சிட்டு வா.” என்றாள்.

“ஆனா, எனக்கு கொலைப்பசி பாமுன் தீதி. நேத்தி சாப்பிடவேயில்லை. குளிச்சா பசி இன்னும் அதிகமாய்டும்.”

”அதைப் பத்தி கவலைப்படாதே, குளிச்சிட்டு வா.”

மோத்தி ஒன்றும் முட்டாளில்லை. கொஞ்சம் நேரம் மெளனமாக இருந்துவிட்டு, “வேண்டாம், நான் இனிமே உங்க வீட்ல சாப்டப் போறதில்லை.” என்றாள்.

“ஏன்?”

“உங்களால எனக்கு தினமும் சாப்பாடு போட முடியாது.”

”சொன்னேன்ல, அதைப் பத்தி நீ ஒண்ணும் கவலைப்படாத. இப்போ போய் குளிச்சிட்டு வா, போ.”

மோத்தி முச்சினி குளித்திவிட்டு வந்தாள். அனங்கா ஒரு வாழையில் அரை சேர் வேகவைத்த பருப்பும், காய்கறிகளும் கொண்டு வந்தாள். ”இன்னிக்கு இதை சாப்பிடு” என்று கமறும் குரலில் சொன்னாள்.

மோத்தி அவளை ஆச்சரியமாகப் பார்த்து, “நீங்களும் இதை சாப்பிட ஆரம்பிச்சிட்டீங்களா?”

“ஆமா.”

“சோறு இல்லையா?”

“மணங்கு அம்பத்தஞ்சு ரூபா. அவ்வளவு காசு இருந்திருந்தா நான் வாங்கிருப்பேன்.”

”ஆனா நீங்க இதையெல்லாம் சாப்பிடக்கூடாது பாமுன் தீதி.”

“ஏன்?”

“உங்களால இதை ஜீரணிக்க முடியாது. என்னாலையே முடியாது.”

”சரி, பேசற நிறுத்திட்டு, சாப்பிடு.”

சாயந்திரம் மோத்தி, “பாமுன் தீதி, காட்டுல ஒரு இடத்துல சேப்பங்கிழங்கும், ராசவள்ளி கிழங்கும் (purple yam) கிடைக்கறதைக் கண்டுபிடிச்சேன். கடப்பாரை ஏதாவது இருந்தா குடுங்க. நான் போய் பறிச்சிக்கிட்டு வரேன். இன்னும் யாருக்கும் தெரியாது.” என்றாள்.

”நீ ஒருத்தியே கிழங்கைப் பறிச்சிடுவியா?”

”ஏன் முடியாது? கடப்பாரை குடுங்க.”

”நீ ஒழுங்கா சாப்பிட்டவேயில்ல. ரொம்ப பலகீனமா இருக்க. மயக்கம் போட்டு விழுந்திடுவ, இல்லை அடிபட்டுக்குவ, நானும் வரேன்.”

அப்போது அங்கே காபாலி போம் வந்தாள். “என்ன ரெண்டு பேரும் ரகசியம் பேசிக்கிட்டு இருக்கீங்க?

அதனால் அவளையும் கூட்டிக்கொண்டு போக வேண்டியானது.

கிராமத்துக்கு வடக்கே, சபாய்பூர் அருகே, நதி வளைந்தோடுகிறது. அந்த வளைவுக்கருகே அடர்ந்த காடுகள் இருந்தன. கீழே குட்டிப்பிரை (Streblus Asper – Toothbrush tree) புதர்கள் மண்டிக்கிடந்ததால், தவழ்ந்துதான் அந்தக் காடுகளுக்குள் நுழைய முடியும்.

மோத்தியும், காபாலி போமும் வெகு வேகமாக முன்னேறிச் சென்று விட்டார்கள். ஆனால் அனங்காவின் உடுப்புகள் முட்புதர்களில் சிக்கியபடியே இருந்தன. கொடூரமான முட்கள்!

மோத்தி-முச்சினி எரிச்சலாக, “நான்தான் வரவேண்டாம்னு அப்போவே சொன்னேன்ல? உங்களை மாதிரி மென்மையான ஆளுங்களுக்கெல்லாம் இந்த வேலை ஒத்துவராது. இந்த மாதிரி வேலையெல்லாம் எப்போவாவது செஞ்சிருக்கீங்களா? எங்கே காட்டுங்க …”

மோத்தி அவளை முட்களிலிருந்து விடுவித்தாள்.

அனங்கா, “சந்தியாகாலத்துல என்னைத் தொட்டுட்டயே” என்று முணுமுணுத்தாள்.

மோத்தி, “இப்போ நீங்க இன்னொரு வாட்டி குளிக்கனும்”, என்று சிரித்தாள்.

”சரி சரி, சிரிக்கறதை நிறுத்து, நேரமாச்சு.”

ஒரு மணி நேரமானது. ராசவள்ளிக்கிழங்கு மிகப்பெரியது. கொடியைப் பின்பற்றிப் போய் வேரைக் கண்டுபிடித்துவிட்டார்கள். ஆனால் அது ஐந்தாறு சேர் எடையிருக்கும். அதை அகழ்ந்தெடுக்க மிகவும் கஷ்டப்பட்டார்கள். மோத்தி உடலெங்கும் சேறு படிந்திருந்தது. காபாலி போமின் கைகளில் கொப்புளம் போட்டுவிட்டது. அனங்கா எதையோ இழுக்கப்போய் கொடிகளை இழுத்துக் கொண்டிருந்தாள்.

காபாலி போம் அவளைப் பார்த்து சிரித்து, “நிறுத்துங்க நிறுத்துங்க பாமுன் தீதி. இதெல்லாம் உங்களுக்கு சரி வராது. தள்ளுங்க.”

காபாலி போம் அவளுருகே வந்து இரு கைகளாலும் வேரை அகழ்ந்தெடுத்தாள்.

அனங்கா வெட்கப்பட்டு, “இதைச் செய்ய என்னால முடியல.” என்றாள்.

”உங்களோட பூ மாதிரி கைகளுக்கு இது ரொம்ப கஷ்டமான வேலை பாமுன் தீதி.”

”போதும், ஒண்ணும் சொல்லிக்காட்ட வேண்டாம்.”

அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது. தாடிவைத்த அந்நியன் ஒருவன் காட்டின் மறுபக்கத்திலிருந்து அவர்களை நோக்கி வந்தான். ஒருவேளை அவன் நதிக்கரையோரம் நடந்து சென்றிருக்கக் கூடும். இப்பெண்களின் சிரிப்பொலியைக் கேட்டு என்னவென்று பார்ப்பதற்காக அங்கே வந்திருக்கக் கூடும். இல்லையென்றால் மூன்று அந்நியப் பெண்களைப் பார்த்தபின்னும் அவர்களை நோக்கி அவன் ஏன் வர வேண்டும்?

மோத்தி முன்னேறிச் சென்று, “நீ யாரு? இங்கே பொம்பளைங்க இருக்கறது தெரியுதில்ல? அப்புறம் ஏன் இங்கே வர?” என்றாள்.

காபாலி போம், “கடவுளே! இவன் எப்படிப்பட்ட ஆளோ?” என்று தனக்குள்ளாகவே பேசிக்கொண்டாள்.

ஆனால் அவன் கண்கள் அனங்கா மீதே இருந்தன.

அவன் அவர்களை நோக்கி வந்தபடியே இருந்தான். அனங்கா பயந்து நடுங்கி மோத்திக்குப் பின் ஒளிய முற்பட்டாள். அந்த அடர்ந்த காட்டில் எளிதாக ஓடுவதற்கும் வழியில்லை. இருந்தாலும் அவன் நிற்கவில்லை.

மோத்தி அவனை நோக்கி கத்தினாள். “ஏய்! நில்லு! என்ன தைரியம் இருந்தா வந்துக்கிட்டே இருப்பே?”

காபாலி போமும் பின்னால் செல்ல எத்தனித்தாள். அவளும் பதற்றமாக இருந்தாள். அவன் அவளையும் பார்த்தான். ஆனால் ஒரு வார்த்தையும் பேசவில்லை.

இதற்கு நடுவே அனங்காவின் தலைமுடி சூரைமுள் புதர்களிலும் குன்றிமணிக்கொடிகளிலும் சிக்கிக்கொண்டது. அவள் சேலை நழுவத் தொடங்கியது. அவள் முகம் வியர்வையாலும், பதற்றத்தாலும் வெளிறத் தொடங்கியது. அவன் விளக்கை நோக்கி வரும் விட்டில் பூச்சியைப் போல அவளை நோக்கி வந்தான். அவன் அவளுடையை கையைப் பிடித்து இழுக்க முயற்சிக்கையில், மோத்தி தன் பலத்தையெல்லாம் திரட்டி அவனைத் தள்ளினாள். அனங்கா, “நெருங்காதே!” என்று அலறினாள். காபாலி போம் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினாள்.

அந்த ஆள் அவர்கள் அகழ்ந்திருந்த குழிக்குள் விழுந்தான்.

மோத்தி, அனங்காவை முட்களிலிருந்து விடுவிக்கப் போராடினாள். அவள் சண்டைக்குத் தயாராக இருந்தாள். காபாலி போம்மைப் பார்த்துக் கத்தினாள். “அந்த கடப்பாரையைக் குடு. இவன் மண்டையை உடைச்சுட்டுத்தான் மறுவேலை! நம்ம மேல கை வைக்கற அளவுக்கு என்ன தைரியம் இவனுக்கு!”

அனங்கா ஷான்ரா புதர்கள் மண்டிய காட்டின் அடர்ந்த பகுதிகளுக்குள் தவழ்ந்து சென்று ஒளிந்து கொண்டாள். அவள் பயத்தில் பயந்து கொண்டிருந்தாள். ஆனால் அந்த இடத்திலிருந்து வெளியேறுவதற்கு வேறு வழியேயில்லை. மோத்தியும், அந்த ஆளும் முன்னிருந்த இடைவெளியில் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த ஆள் குழியிலிருந்து வெளியேற முயற்சித்துக்கொண்டிருந்தான். மோத்தி காபாலி போமிடமிருந்து கடப்பாரையைப் பிடுங்கிக்கொண்டிருந்தாள். அனங்காவால் இதையெல்லாம் பார்க்க முடிந்தது. யார் அங்கே வருவதென்றாலும் அடர்ந்த முட்புதர்கள் வழியே தவழ்ந்துதான் வரவேண்டும். அங்கே முட்கள் கொண்ட குன்றிமணிக்கொடிகள் நிறைந்திருந்தன. இதற்கெல்லாம் முன்னால் மோத்தி ஒரு போராளியைப் போல கையில் கடப்பாரையோடு நிற்கிறாள்.

அந்த ஆளுக்கு ஒரு வழியாக விஷயம் புரிந்தது. மோத்தியிடமிருந்து கடப்பாரையைப் பிடுங்குவது கடினம்.

அவன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, மெல்ல பின்னகர்ந்து, திடீரென்று திரும்பி ஓடினான்.

மோத்தி முச்சினி, “வெளியே வாங்க பாமுன் தீதி. அவன் பயந்து ஓடீட்டான்.” என்றாள்.

அனங்கா இன்னும் பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தாள். காபாலி போமும் பயந்திருந்தாள் என்றாலும் அனங்கா அளவுக்கு இல்லை. இப்போது அவள் தன் தோழிகளைப் பார்த்து திடீரென்று சிரிக்கத் தொடங்கினாள்.

அனங்கா அவளைப் பார்த்து, “இப்போ எதுக்கு சிரிக்கிறே? வெட்கங்கெட்ட சிறுக்கி, இங்கே என்ன இப்போ சிரிக்கிறதுக்கு இருக்கு?” என்று திட்டினாள்.

மோத்தி முச்சினியும் புன்னகைத்து, “திரும்பி ஆரம்பிச்சிட்டா…” என்றாள்.

காபாலி போம்தான் அவர்களில் இளையவள். அவளுக்கு இந்த மொத்த நிகழ்ச்சியும் தமாஷாகப்பட்டது. அவள் சிரிப்பை நிறுத்த முயற்சித்தாலும் அடங்காமல் பீறிட்டுக்கொண்டு வந்தது. ”ஓ மோத்தி தீதி! கையில கடப்பாரையோட உங்களைப் பார்க்கக் கொடூரமா இருந்துது. ஹிஹிஹி”

அனங்கா, “திருப்பியும் சிரிக்கறா பாரேன்,” என்றாள்.

”விடுங்க பாமுன் தீதி, கோவப்படாதீங்க.”

“சரி, இங்கேருந்து கிளம்பலாம். இருட்டிக்கிட்டே வருது.”

இந்த அமளிதுமளிக்கு நடுவே அவர்கள் நேரமானதை கவனிக்கவேயில்லை. காட்டை விட்டு வெளியே வந்தபோது சூரியன் ஏற்கனவே அஸ்தமித்துவிட்தைப் பார்த்தார்கள். சபாய்பூர் வளைவின் நதியிலிருந்த வெங்காயத்தாமரைகள் மீதும், நோனாதாலா கிராமத்தின் மூங்கில் தோப்பின் மீதும் இருள் கவிழத் தொடங்கிவிட்டது. அவர்கள் இதற்கு மேலும் வேறெதுவும் அசம்பாவிதம் நடக்க வேண்டாம் என்று பிரார்த்தியபடியே, இருளில் தனியாக நடந்து வந்துகொண்டிருந்தார்கள்.

அனங்கா, “கடவுளே! நல்ல வேளை, வெளியே வந்துட்டோம்.” என்றாள்.

மோத்தி, “ஆனா, அந்தக் கிழங்கு?” என்றாள்.

”இப்போ என்ன செய்யறது?”

“அவ்வளவு பெரிய கிழங்க அங்கேயே விட்டுற முடியாது. நாளைக்கு அது அங்கேயே இருக்கும்னு நினைக்கிறீங்களா? அதுவும் இந்தப் பஞ்ச காலத்துல?”

அப்போதுதான் அது அவர்களுக்கு உறைத்தது. அந்தக் கிழங்கு அங்கேயே இருக்க வாய்ப்பில்லை. மக்கள் உணவுக்காகப் பேயாக அலைகிறார்கள். கண்டிப்பாக யாராவது அதைக் கண்டுபிடித்துவிடுவார்கள்.

காபாலி போம் சொன்னாள், “சரி, போய் எடுத்துக்கிட்டு வந்துடலாம். ஜனங்க எல்லாத்தையும் தோண்டிக்கிட்டு இருக்காங்க. காட்டுக்கிழங்குங்க, உருளைக்கிழங்கு, எதையும் விட்டுவைக்கறதில்ல. நாம அந்தக் கிழங்கைத் தோண்ட எவ்வளவு கஷ்டப்பட்டோம். நமக்கு மூணு வேளைக்காவது சாப்பாடாகும்.”

அவர்கள் மீண்டும் காட்டுக்குள் போய், கிழங்கை எடுத்து, சுத்தம் செய்து, எடுத்துக்கொண்டு வந்தார்கள். இதற்குள் மாலையின் மங்கிய வெளிச்சமும் போய், காடும், வயல்களும் அடர்ந்த இருளில் மூழ்கிவிட்டது.

மோத்தி முச்சினி, அவள் ஒருத்தியே, அந்தப் பெரிய கிழங்கை சுமந்தபடி முன்னால் நடந்தாள். அனங்கா மத்தியிலும், கடப்பாரையைப் பிடித்தபடி காபாலி போம் கடைசியாகவும் நடந்து வந்தார்கள். அச்சத்தோடு அங்குமிங்கும் பார்த்தபடி, அடர்ந்த இருளில் கிராமத்துக்குள் நுழைந்தார்கள்.
கிராமத்துக்குள் நுழையும் முன், அனங்கா, “ஏ பொண்ணுங்களா! இன்னிக்கு நடந்ததைப் பத்தி யார்க்கிட்டயும் சொல்லக்கூடாது.” என்றாள்.

காபாலி போம், “நிச்சயமா” என்றாள்.

“நீ ஒரு ஓட்டை வாய். ஒரு ரகசியமும் உன்கிட்ட தங்காது.”

“ஏன்? நான் எந்த ரகசியத்தை யார்க்கிட்ட சொன்னேன்?”

“அதைப் பத்திப் பேசிக்கிட்டிருக்க இப்போ நேரமில்ல. ஆனால், நீ யார்க்கிட்டயும் அதைப் பத்தி சொல்லக் கூடாது.”

“எதைப் பத்தி? கிழங்கு பறிச்சதப் பத்தியா?”

”ஏதோ நான் எதைப் பத்தி சொல்றேன்னு தெரியாத மாதிரி… சுட்க்கி, சொன்னா கேளு. இல்லாட்டி ஒருநாள் என்கிட்ட நல்லா வாங்கப்போற!”

காபாலி போம் மறுபடியும் ஒரு காரணமுமில்லாமல் சிரிக்கத் தொடங்கினாள்.

அனங்கா, “இந்தப் பைத்தியக்காரிய என்ன செய்யறதுன்னு தெரியலையே! நீ எல்லார்க்கிட்டயும் சொல்லப் போறதானே?”

காபாலி போம் சிரிப்பதை நிறுத்துவிட்டு, உறுதியான குரலில், “என்ன விளையாடறீங்களா? பாமுன் தீதியைப் பத்தின விஷயம்னா காகப் பக்‌ஷிகளுக்குக் கூட சொல்ல மாட்டேன். நம்ம தலைக்கு மேல நட்சத்திரங்க இருக்கற மாதிரி, நமக்கு மேல ஒரு கடவுளும் இருந்து பார்த்துக்கிட்டு இருக்கான்.” என்றாள்.

ராசவள்ளிக்கிழங்கை மூன்று பெண்களும் பங்கிட்டுப் பிரித்துக்கொண்டு வீட்டுக்குப் போனார்கள்.

(மேலும்)

Series Navigation<< மின்னல் சங்கேதம் – 8மின்னல் சங்கேதம் – 10 >>

One Reply to “மின்னல் சங்கேதம் – 9”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.