மஹான் சக்கரக்கத்தி

நான் கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்கிறேன் என்று சொன்னதற்கு, “ஒரு இடத்தில் அமுங்கி உக்காரு. சும்மா ஊர சுத்துனா எல்லாம் தெரிஞ்ச மாதிரி ஆகிடாது.” என்று தாத்தா கடிந்திருந்தார். “கிழவனுக்கு அலைந்து திரிதல் பற்றி என்ன தெரியும்” என்பதுதான் அவர்மீது எனக்கிருந்த கடைசி உணர்வு. தாத்தா நேற்றே காலமாகி இருந்தார். அவர் சுமூகமாக என்னிடம் விடைபெறவில்லை. நிலபுலன் சம்பாதித்து அதைச் சிதறாமல் தந்துவிட்டுச் சென்றவரிடம் கொஞ்சம் சரியாக நடந்திருக்கலாம். மன உளைச்சல் இல்லை என்றாலும் நான் அவரைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். அமர்ந்தார்; எழவில்லை. அவ்வளவுதான். வாக்கியத்தை முடிக்காமலேயே முறிந்து கொண்டார். சஞ்சலமாகவே இருந்தது.

சில வருடங்கள் முன்னாள் பாட்டி இறந்த போது நாங்கள் ஒரு குழுவாக அமர்ந்து அவரது பழம்பெருமை பேசித் தீர்த்தோம். அது பாட்டிக்குச் செய்த சிறந்த மரியாதை போன்று இருந்தது. பாட்டி எங்களிடம் எல்லாம் சொல்லிக் கொண்டு சென்றதுபோல் உணர்ந்தோம். மனம் தாத்தாவுக்கும் அதையே எதிர்பார்த்தது. தாத்தாவை நேற்றே காடு சேர்த்தாகிவிட்டது. துக்கம் விசாரிக்க சிலர் இன்றும் வந்து கொண்டிருந்தனர். அப்பாவும் அம்மாவும் அவர்களை சந்தித்து கொண்டிருந்தனர். நான் தாத்தாவிடம் கொண்ட உரசலை நினைத்துக் கொண்டிருந்தேன். வீட்டிற்கு எதிரே உள்ள பெரிய வேப்ப மரத்தடியில் உள்ள திண்ணையில் அமர்ந்துகொண்டேன். கணேசன் வந்தான். மாமா பையன். வந்தவன் அருகில் அமர்ந்தான் . நான் “வா…” என்பது போல் தலை அசைத்தேன்.

“சாப்பிட்டாச்சா டா..” என்று தொடங்கினேன்.

“ஆச்சு” என்ற கணேசன், “உண்மையிலேயே தாத்தா போய்ட்டாருல்ல”

தாத்தா அவனுக்கு என்ன செய்தாரோ! அவனும் தாத்தாவின் பழம்பெரும் கதையாடல் செய்யத்தான் வந்திருக்கிறான்போல. போய்விட்ட தாத்தாவை அப்படியே விட்டுவிட முடியவில்லை. சடுதியில் செல்வோரை அனுமதிக்க கூடாது. அவர்களை நிறுத்தி வைத்து, கடைசி கணக்கையும் சீரமைத்துவிட்டுதான் அனுப்ப வேண்டும். இல்லை என்றால் இப்படித்தான். அவர்களின் நினைப்பு நம்மை சுற்றியே ரீங்காரமிடும். பாட்டிக்கும் அப்படித்தான். பாட்டியை பற்றி கதையடிக்க நிரம்ப இருந்தது. பாட்டியின் கருணை, தாய்மை , தியாகம், வீரம் என்று பல பிரதாபங்கள். நாள் முழுக்க இரவு முழுக்க பேசித் தீர்த்தோம். கொஞ்சம் விட்டிருந்தாள் எங்கள் ஊர் கோயிலில் பரிவார தேவதையாய் கூட ஆகி இருப்பாள். இப்போதும் ஒன்றும் குறை இல்லை. மங்களகரமாக வீட்டு ஆணியில் தொங்குகிறாள்.

“உண்மையிலேயே தாத்தா போய்ட்டாருல்ல” என்று மீண்டும் கணேசன் சொன்னான்.

அவன் கூற்றிற்கு நான் இப்போது இசைந்து ஏதாவது சொல்ல வேண்டும். தாத்தாவைப் பற்றி எனக்கு இன்னும் அவர்மீதான அங்கலாய்ப்பு தீர்ந்தபாடில்லை. அவரைப் பற்றி உயர்வாக இப்போது நான் என்ன சொல்ல? நேரம் செல்கிறது. “ஆமாம் நம்ப முடியவில்லை ” என்ற சொற்களின் மூலம் இன்னும் கொஞ்சம் அவகாசம் எடுத்து தாத்தாவைப் பற்றி நல்ல விதமாக சொல்ல எண்ணங்களை புரட்டினேன். அவர் ஊதாரியும் இல்லை பொறுப்பானவரும் இல்லை. கண்டிப்பானவரும் இல்லை பாசமானவரும் இல்லை. பேசினால் பேசுவார். இல்லையென்றால் இல்லை. என்னுடைய ஊர் சுற்றலை மட்டும் கொஞ்சம் அக்கறையாக கேட்ப்பார். சென்ற ஊர், பார்த்த மனிதர்கள், சென்ற திசை, தூரம், உணவு என்று. நான் கைலாயத்தை பற்றி சொன்னபோதுதான் என் மேல் கடிந்தாற்போல் பேசினார். அப்புறம் இறந்து போனார்.

ஓஹ் நேரமாகிவிட்டது ஏதாவது கணேசனுக்கு தாத்தாவைப் பற்றி சொல்ல வேண்டும். “நல்ல மனுஷன்..”

கணேசன் தலை தூக்கிப் பார்த்தான். இதனால் தான் ஆண்களுக்கு பெண்களை பிடிக்கிறது. பெண் தெய்வத்தை பிடிக்கிறது. பேசிக்கொண்டே போகலாம். ஆண்களை பற்றி ஆண்கள் என்ன பேச?

மாமா கார்மேகம் எங்களை நோக்கி வந்தார். அவரை நாங்கள் கார்மேகப் புலவர் என்றுதான் பரிகாசம் செய்வோம். வந்தவர் அமராமல் “விஷயம் கேட்டியா?” என்றார்.

“புலவரே என்ன? அமைதியா உக்காரும்..” கணேசன் முந்திக்கொண்டான்.

“சக்கரக்கத்தி இறந்துட்டாரு…”

கணேசன், “யாரு?”

“அதான் குருமஹா சக்கரக்கத்தி…. அட நம்ம நாவிதர் டா..”

நான் அவர் சொன்னதை உள்வாங்கி அரைப்பதற்குள் கணேசன் எழுந்து நின்றான்.”எப்படி மாமா… நேத்துதான நம்ம தாத்தாவுக்கு எல்லா சாங்கியமும் பக்கத்தில இருந்த செஞ்சாரு. சவரம் செஞ்சு குளிப்பாட்டி கோடித் துணி போட்டு பாடையில் தூக்குற வரைக்கும் செஞ்சாரு. அதுக்குள்ள என்ன ஆச்சு? ஏதும் மருந்து கிருந்து.. ” என்று இழுத்தான். எனக்கு யாரை சொல்கிறான் என்று பிடி பட்டது . நாவிதர் பழுத்த கட்டைதான். ஊருக்குள்ள சட்டை போடாத ரெண்டு பெருசும் போய் சேர்ந்து விட்டது.

மாமா, “அதெல்லாம் நெறஞ்ச சாவுதான். நம்ம தாத்தா மாதிரி தான். அவர் வீட்டு திண்ணையிலே உக்காந்த மேனிக்கு. ரொம்ப நேரங்கழிச்சு தான் பாத்திருக்காங்க…”

எனக்கு அவர் சொன்னதில் ஒன்று தான் நறுக்கென்று பட்டது. “உக்காந்த மேனிக்கா? தாத்தா உக்காந்துக்கிட்டேவா போனாரு.?” என்று பதட்டமாக கேட்டேன். அதில் என்ன இருக்கு என்பதுபோல் இருவரும் என்னை பார்த்தார்கள்.

மாமா சொன்னார், “திண்ணையில உக்காந்து தான் இருக்க மாறி இருந்திருக்கு. பக்கத்து வீட்டுக்காரன் பேச்சுக் கொடுத்திருக்கான். ரொம்ப நேரமா பதில் வராம இருக்க பக்கத்தில போய் தட்டி இருக்கான். சரிஞ்சு விழுந்திடுச்சு பாடி.”

“பாரேன்.. அவளவுதான் மாமா மனுஷ வாழ்க்கை இல்ல”

“என்னத்த சொல்ல. அதிசயம் பாரேன். குருமஹானுக்கு இருந்த ஒரே கஸ்டமர் நம்ம தாத்தாதான். அவர் இருந்த வரைக்கும் இருந்தார். கடைசி ஆளும் போக. இவரும் போய்ட்டாரு.”

“அதிசயம்தான்” என்றான் கணேசன்.

“தாத்தாதான் கடைசி கஸ்டமரா..” என்று கேட்டேன்.

மாமா, “ஆமா. ஒரு காலத்துல இந்த கிராமமே இவருகிட்ட தான் கிராப்பு சவரம் எல்லாம். அப்புறம் அடுத்து வந்தவங்க கொஞ்சம் கொஞ்சமா ஊரவிட்டு போக. பழைய ஆளுங்களும் இறந்துபோக கடைசியா இருந்தது தாத்தாதான். இப்ப அவரும் இல்ல, இவரும் இல்ல.”

“ஹ்ம்ம்…”

“நம்ம ஊருக்காகவே இருந்த மனுஷன். ஊரப் பத்தி என்ன கேட்டாலும் சொல்லுவாரு. யாரு மகன் யாரு. அவன் அப்பன் தாத்தன் பாட்டன், அவன் பட்டான். ஆதிப் பூட்டன் எங்க இருந்து வந்தான். அங்க என்ன பண்ணினான். எல்லாக் கதையும் சொல்லும் லைப்ரரி.” அங்கலாய்ப்பாய் சொன்னார். “மனுஷன் போனதுக்கு அப்புறம் என்ன பண்ண. தெரிஞ்சிருந்தா உக்காந்து கதை கேட்டிருக்கலாம். தெரியாத பல விஷயம் சொல்லி இருப்பாரு. நம்ம ஊரு கலைஞ்சு ஊரு சேந்த விஷயம்கூட இவரு சொல்லி இருப்பாரு.”

கணேசன்,”ஊரு கலைஞ்சு ஊரு செந்துச்சா?”

“ஆமா.. பிளாக்கு வந்தப்போ ஊர காளி பண்ணிட்டு எல்லாரும் போய்ட்டாங்க. அப்புறம் வந்து சேந்தாங்க. நம்ம குருமஹான் சக்கரக்கத்தி மட்டும் இங்கயே தங்கிட்டாரு.”

“பிளாக்குனா?” நாங்கள் இருவரும் கேட்டோம்.

“இந்த எலி விட்டத்துல இருந்து கீழ விழுந்து கிறுகிறுன்னு சுத்தி சாகும். மனுஷங்களுக்கு எல்லாம் கழுத்து முதுகுன்னு புடைச்ச மாதிரி வீங்கும்”

நான், “பிளேக்..” என்றேன். கணேசன் “ஓகே ஓகே ” என்றான்.

“சரி வாங்க அங்க அவரு வீட்டுக்கு போய் பாப்போம். ஊர் பெரிய ஆளுங்க எல்லாம் வருவானுங்க.” என்ற மாமா சொல்ல நானும் கணேசனும் எழுந்தோம். மூவரும் குருமஹான் வீட்டிற்கு செல்லும் வழியில் நடந்தோம்.

மாமா, “அவர பத்தி ஒரு விஷயம் சொல்றேன் கேளுங்க. அவரு நம்ம ஊரே இல்ல.”

இந்தக் கதை ஆரம்பமே நல்ல இருக்கே “மேல சொல்லுங்க..” என்றேன்.

“நம்ம பக்கத்து ஊருதான் அவர் பூர்வீகம். சின்னப் பையனா இருக்கும் போது நம்ம ஊருக்காக அங்க இருந்து நெருப்பு எடுத்துக்கிட்டு வந்தவரு. நம்ம ஊரு நாவிதர் ஒரு பிரச்சனையில் ஊர விட்டு போயிட்டாரு. போனவருக்கு பதிலா இங்கயே நம்ம குருமஹானா தங்க வச்சிட்டாங்க.”

எனக்கு கொஞ்சம் துணுக்குற்றது. “நெருப்பு கொண்டுவந்தாரா?”

“அந்தக் காலத்துல தீப்பெட்டி எல்லாம் இல்ல. அந்த அந்த வீட்ல அடுப்பிலேயே நெருப்பு கங்கு இருக்கும். அது அவிஞ்சு போச்சுன்னா அந்த ஊரு நாவிதர் கிட்ட ஒரு கரண்டி கங்கு வாங்கிக்குவாங்க. நாவிதர் கண்டிப்பா நெருப்பு வச்சிருப்பாரு. அவருதான் சோர்ஸ். அவருதான் வெளிச்சம். நம்ம ஊரு பழைய நாவிதர் இல்லாம போக; பக்கத்து ஊர்ல இருந்து ஒரு கரண்டி நெருப்பு கங்கு கொண்டு வந்தவரு தான் இவரு.”

குருமஹான் வாழ்ந்த குடிலுக்கு வந்து சேர்ந்தோம். சிறிது பரபரப்பாகவே இருந்தது. பாடை தயார் ஆகிக்கொண்டிருந்தது. பந்தலும் போட்டுக் கொண்டிருந்தார்கள். ஊரில் தெரிந்தவர்கள் சிலர் அங்கு வந்து குழுமியிருந்தார்கள். நாங்களும் அங்கு சென்று சிறிது நேரம் நின்று கொண்டு வாய் பார்த்துக் கொண்டிருந்தோம். எல்லாம் சிறப்பாகவே அதனதன் வேலைகள் நடந்து கொண்டிருந்தது. மாமா, “உள்ள போய் பாத்துட்டு வரலாம்” என்றார்.

கணேசன் குடிலுக்குள் எட்டிப் பார்த்துவிட்டு, ” ஒரே லேடீஸா இருக்காங்க” என்று சொன்னான். மாமா, “சரி வாங்க கடை தெரு வரைக்கும் போய் வெடி வாங்கி வருவோம். பாடை ரெடி பண்றாங்க, சேர சரவெடியும் சேர்த்து வாங்கிட்டு வருவோம்.” என்றார். மூவரும் கடை தெரு வரைக்கும் நடை சென்றோம். அமைதியாகவே நடந்தோம். நல்ல சம்பாஷணை பாதியில் நின்றிருந்தது. எனக்கு ஏதாவது கேட்க வேண்டும் போல் இருந்தது. மாமாவுக்கும் ஏதாவது சொல்லவேண்டும் போல் தான் இருக்கும். கணேசன் வெறுமனே பெராக்கு பார்த்துக்கொண்டு வந்தான்.

நான்,”அதெப்படி எந்த பிடிமானமும் இல்லாம உக்காந்துகிட்டு இறுக்கப்ப உயிர் போகும்.”

கணேசன் கிண்டலாக முறைத்துவிட்டு, “வெளிக்கு போகும்போது பாம்பு கடிச்சிடுக்கும்… அட யார்டா இவன். பழம் விட்டுகிட்டு இருக்கப்பவே அவனவனுக்கு உயிர் போகுதாம். காலையில தேடிப் பார்த்த பொணம் வெப்பாட்டி வீட்டுல கெடக்கும். சாமானம் மட்டும் நட்டுக்கிட்டு இருக்கும் ஆள் புட்டுக்கிட்டு இருப்பான்.” சொல்லிவிட்டு கெக்குகெக்கு என்று சிரித்தான். நானும் மாமாவும் அவனை முறைத்துப் பார்த்தோம். அவன் பாதியிலேயே சிரிப்பை நிறுத்தினான்.

மாமா கேட்டார்,”அவருக்கு ஏன் குருமஹான்னு பேரு வந்துச்சு தெரியுமா?”

“…….”

அவர் இளவட்டமா இருக்கப்ப ஊருக்குள்ள போலீஸ் வந்துருக்காங்க. ஊர்ல இருக்க எல்லார்த்துக்கிட்டயும் இங்க எங்க சாராயம் காச்சுறாங்கன்னு கேட்டுருக்காங்க. யாரும் சொல்லல. சொன்னா சாராயம் போச்சுல்ல. அப்ப நம்ம ஆளு எங்கயோ ஓரமா உக்காந்து கல்லுல கத்திய சாண தீட்டிகிட்டு இருந்திருக்காரு. அவரும் போலீசை முன்ன பின்ன பாத்ததில்ல பாரு. கேட்டதுக்கு, ” அதோ அந்த பாம்பேரில தான் யாருக்கும் தெரியாம காச்சுறானுங்க. நான் சொன்னேன்னு சொல்லு; நல்ல பிரெஷா கிடைக்கும்” – ன்னு சொல்லிருக்காரு.போலீஸ் புடிச்சுட்டு போறப்ப குருமஹானே எங்க வேலைய காப்பாத்திடீங்கன்னு இவரு கால்ல விழுந்து கும்பிட்டுட்டு போனாங்களாம்”

நான் மிதமாக சிரித்தேன்.

“இதுக்கு மட்டும் ஏன்டா சிரிக்கிற”

“இது வேறடா.”

நான் கொஞ்சம் யோசித்துவிட்டு “அப்பா குருமஹான் அப்படின்னு கூப்பிடுறது சும்மாதானா?”

மாமா,”அப்படியும் சொல்ல முடியாது. அவருக்கு எத்தனை வித்தை தெரியும்ன்னு நினைக்கிற. ஊருக்கே அவரு தான் டாக்டர் அந்த காலத்துல.”

“சும்மா கதை விடாத மாமா” என்றான் கணேசன்.

“நெசமாலும்தான். சவரம், நகம் வெட்டுறது, முள்ளு வாங்குறது, தொக்கம் எடுக்கிறது, மாவு கட்டு, விஷக்கடி மருந்து, காயம் பட்டா தைலம், ஜுரத்துக்கு மந்திரிக்கிறது. சகலமும். உனக்கு கண்நோண்டி-ன்னா என்னன்னு தெரியுமா? இதோ இந்த விரல் நீளத்துக்கு ஒரு கம்பி வெச்சுருப்பாரு.” ஆள்காட்டி விரலை பெருவிரலால் அளந்து காண்பித்து தொடர்ந்தார். “கண்ணுல எந்த தூசி விழுந்தாலும் அதை வச்சு நொண்டி எடுப்பார்.”

“அப்பா குருமஹான் தான்னு சொல்லுங்க”

“அப்படியும் சொல்ல முடியாது. கிழக்கு வீடு துரைக்கண்ணு இவர் சாயலில் தான இருக்காரு.”

கணேசனும் மாமாவும் சிரித்தனர். மாமாவிற்கு ஏதோ மனதில் பட நிறுத்திக்கொண்டார். மாமா நிறுத்தியதால் கணேசனும் நிறுத்திக்கொண்டான்.

மாமா, “என்ன இருந்தாலும் அவர் நமக்கு மகன் முறை ஆகவும்.”

“அதெப்படி” என்றேன்.

“அதுக்கு நீ வாலிபுல்லா அரசனுடைய சரித்திரம் தெரிஞ்சிருக்கணும். அத அப்புறமா சொல்லுறேன். அவரு ஊர விட்டு எங்கயும் போக மாட்டாரு. ஊருக்குள்ள விசேஷம் வெச்சா மட்டும் தான் வந்து சாங்கியம் பண்ணுவாரு. யோசிச்சுப் பாரு. ஒரு காலத்துல இருநூறு முன்னூறு பேருக்கு முடி வெட்டி சவரம் செஞ்சுகிட்டு இருந்தவரு. ஒவ்வொரு ஆள செத்துப்போக நம்ம தாத்தா மட்டும்தான் கடைசி. அவரும் போய்ட்டாரு. தனக்கு வேலை முடிஞ்சுதுன்னு இவரும் போய்ட்டாரு.”

கணேசன்,”கேட்டாலே சிலுக்குது.”

“அப்ப! தன் காலத்துல எத்தனை சாவை பாத்திருக்கணும்.”

“எப்படியும் குறைஞ்சபட்சம் இருநூறு இருக்கும்.”

மூவரும் அமைதியானோம். மளிகை கடையில் இதற்கென்றே சரவெடி வைத்திருப்பார்கள். இருக்கும் எல்லாவற்றையும் வாங்கினோம். திரும்பி வருகையில் கூட்டம் அதிகரித்திருந்தது.

நாங்கள் அந்த குடிலுக்குள் சென்றோம். சில பெண்கள் அமர்ந்திருந்தனர். அங்கு குருமஹானுடைய பூத உடல் கிடத்தி இருந்தது. தாத்தா உடல் போலத் தான். அகலமான கூடு சுருங்கிய தோல். நரைத்த ரோமங்கள். நீளமான கை விரல்கள். ஒன்றோடு ஒன்று பின்னிய கால் விரல்கள். சூம்பிய தொடைகள். ஒட்டிய வயிறு. கிடக்கும் பிணம் பதற்றம். எனக்கு மூச்சு இழுத்தது. வீட்டின் கொல்லைப்புறம் சென்றேன். என்னை பின்தொடர்ந்து கணேசனும் மாமாவும் வந்தார்கள்.

கணேசன், “என்னடா”

“ஒண்ணுமில்ல!…… தாத்தா!!……” என்று மூச்சு வாங்கினேன்.

“சரி விடு விடு…”

அந்த பின்புற கொல்லைப்பக்கத்தில் ஒரு பெரிய அடுப்பில் நெருப்பு கங்குகள் புகை விட்டுக்கொண்டிருந்தது. அதைப் பார்த்து “இது….” என்று இழுத்தேன்.

மாமா,”ஆமா……..” என்றார்.

கங்குகள் அணைந்துகொண்டிருந்தது.

ஒருவரின் ஒருவர் இருப்பு உணராமலேயே வெகுநேரம் அங்கேயே அமர்ந்திருந்தோம். யாருக்கும் அணையும் கங்கை உயிர் ஊட்டும் எண்ணம் எழவில்லை. அது பூ உதிர்வது போல்; அந்தி சாய்வது போல்; பனி காய்வது போல் மரித்துக்கொண்டு இருந்தது.

குருமஹானுக்கு நடு வீட்டு சாங்கியங்கள் அனைத்தும் முடிந்திருந்தது. நாங்கள் மெல்ல எழுந்து வெளியே சென்று கூட்டத்தில் கலந்து கொண்டோம். அவருடைய பூத உடல் பாடையில் வைத்து தூக்கப்பட்டது. உடல் முன் செல்ல நாங்கள் பின் தொடர்ந்தோம். சரவெடி வெடித்தது . ஊர் முச்சந்தி வரை பெண்கள் வந்தனர். நாங்கள் தொடர்ந்து சென்றோம்.

மாமா, “குருமஹான் நம்ம ஊர் எல்லையை தாண்டுனதே இல்ல. சின்ன வயசுல வந்தவரு. இந்த ஊருக்குள்ளேயே தான் இருந்தாரு. சுடுகாடு ஊர் எல்லைக்கு அந்த பக்கம் இருக்குன்னு நம்ம தாத்தாவை புதைக்கும் போதுகூட வரலை.” என்றார்.

அணையும் கங்கை பார்த்ததில் இருந்து எனக்கு எதுவும் அதிர்ச்சியாக இருக்கவில்லை. “ஒருதடவை கூட ஊரை விட்டு போனதில்லயா?”

“அப்படிதான் ஊர்க்காரங்க பேசிக்கிறாங்க.”

“இருக்கலாம்…” என்றேன்.

அப்படி அது உண்மையா இருந்தா, சின்ன வயசில வந்தவரு இப்பதான் ஊரை விட்டு போறாரு.

கணேசன் ஒரு வினாடி தயங்கினான். நாங்கள் நின்று பார்த்தோம். “நீங்க போய்கிட்டே இருங்க, வந்துடறேன் ” என்று கூட்டத்தை விட்டு திரும்பி ஓடினான். நாங்கள் அவன் ஓடும் திசையை பார்த்தோம். மருதிசையில் சப்பரத்தில் சாமி செல்வதுபோல் குருமஹான் ஊர் எல்லையை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

ஊர் எல்லையும் வந்தது. எனக்கு இருக்கும் படபடப்பு மாமாவுக்கும் இருந்திருக்கும். பாடையை கீழ் வைத்து சில சாங்கியங்கள் செய்யப்பட்டது. அப்போது ஒருவர் வெறும் உடலுடன் வந்து பாடையின் முன் நின்று ஊர் இருக்கும் திசையை பார்த்து கை கூப்பிய வண்ணம் பாடத் தொடங்கினார். அவரது பாட்டு பகுதியை விட்டு பகுதியை சேர்த்து சென்றது.

கிரேதா திரேதா துவாபுரி கலியுகம்
நாலு யுகத்துக்கும் நாராயணசாமிக்கும்
நான்தான் பெரியவன்- சுவாமி சுவாமி

மூங்கிற்புற்று நாயகனே
மூத்தோர் எனும் கணபதியே
காஞ்சீவரத்தில் இரு செப்பேடயம்
பெற்று வந்தேன் கேளு கேளு

அங்காளா கேளு அனைவரும் கேளு
இந்திரா கேளு இறைவனே கேளு
சந்திரா கேளு சதாசிவமே கேளு

ஆறு திசையிலும் நாலு மூலையிலும்
சனிமூலை என்பது எனக்கு சொந்தமானது
சலமூலை எனக்கு சொந்தமானது

அருணகிரி பொருணகிரி
அயோத்தி பட்டணமும்
நாட்டு துறைகளும்
நல்லதோர் குடிமக்களும்
இருக்கக்கூடி

நீ என்னயென்ன கொள்ளவந்தாய்
என்னயென்ன கொடுக்கவந்தாய்
என்று கேட்கும்போது.- சுவாமி

நான் கைக்கு காப்பு
கழுத்துக்கு மாலை
இட்டசட்டி பஞ்சாபரணம்
ஏகவேஸ்டி பூணூல்
கொள்ள வந்தேன். – சுவாமி

உடலுக்கு பிராணம்
உளத்துக்கு யோகம்
உயிருக்கு ஞானம்
கொடுக்க வந்தேன். – அதேபோல்

ஊருக்கு சேரவேண்டியதை ஊருக்கும்
உமக்கு சேரவேண்டியதை உமக்கும்
சவத்துக்கு சேரவேண்டியதை சவத்துக்கும்
சிவத்துக்கு சேரவேண்டியதை சிவத்துக்கும்
சேர்த்தாகிவிட்டது. – அதேபோல்

நாடு செழிக்கவேணும்
நல்லமழை பெய்ய வேணும்
ஊரு செழிக்கவேணும்
உத்தமர் வாழவேண்டும் என்று சொல்லி
வாழியோ வாழி.

எனக்கு குருமஹானே; இருக்கும் எங்களையும் இல்லாத எங்களையும் நோக்கி பாடுவது போல் இருந்தது. அவர் விடை பெற்று செல்வதுபோல். அவருக்கு உண்மையிலேயே விடை கிடைத்து செல்வதுபோல். உடல் சிலிர்த்தது. மாமாவை திரும்பி பார்த்தேன் அவருக்கு மயிர்கூச்செறிந்து இருந்தது. கைகளை தேய்த்து கொண்டார். இருவர் கண்களிலும் நீர் படலம்.

சாங்கியம் முடிந்து பாடையை மீண்டும் தூக்க எத்தனித்தனர். “நில்லுங்க நில்லுங்க….” என்று கணேசன் மூச்சிரைக்க ஓடி வந்தான். அவன் கையில் தொட்டாங்குச்சியில் வைத்த கடைசி நெருப்பு கங்குகள் புகை விட்டுக் கொண்டிருந்தது. அவனை அனைவரும் வினோதமாக பார்த்தோம். அவன் ஏதும் சொல்லாமல் அந்த தொட்டாங்குச்சியை குருமஹான் அருகில் வைத்தான். “அதுவும் சரிதான்…” என்று கூட்டத்தில் இருந்து யாரோ சொன்னார்கள். பாடை தூக்கப்பட்டது. கூட்டம் முன் சென்றது. எந்த ஆரவாரமும் இல்லாமல் குருமஹான் ஊர் எல்லையை கடந்தார்.

ஒவ்வொருவராக ஊர் எல்லைக்கோடு தாண்டி சென்றார்கள். நாங்கள் கடைசியாக சென்று கொண்டிருந்தோம். எல்லைக்கோடு வரவர எனக்கு கலவையான எண்ணங்கள் ஆற்று வெள்ளம் போல் தாக்கியது. தாத்தா, குருமஹான், பாட்டி, ஊரில் பிறந்தோர் வாழ்ந்தோர் இருந்தோர் இறந்தோர் இல்லாதோர் வந்தோர் சென்றோர் என்று எல்லா முகங்களும் ஒரு மின்னலென என் புந்தி நிறைந்தது. எல்லா முகங்களும் கலந்தடித்து ஒரு முகமாக; தாத்தா முகமாக. சிறு வயது தாத்தா முகமாக.

“தாத்தா ஊரை விட்டு வெளியே போய் இருக்காரா?” என்று மாமாவை பார்க்காமல் சன்னமாக கேட்டேன்.

உள்ளாழ்ந்து; க்ஷணங்கள் கழித்து; எந்த அதிர்ச்சியும் இல்லாமல். இல்லை என்பது போல் தலை அசைத்தார். அசைத்துக்கொண்டே முன் சென்று எல்லைக்கோடு தாண்டினார். நான் தாண்ட முடியாமல் நின்று கொண்டிருக்கிறேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.