
போன வாரம் பாடும் நிலா பாலுவின் 75 –வது பிறந்த நாள். இந்தக் கட்டுரையின் காலகட்டம், அவருக்கு இந்தப் பெயர் வருவதற்குப் பல்லாண்டுகள் முன்பானது. அதாவது, அவருடைய ஆரம்ப வருடங்கள் – 1965 முதல் 1975 வரை.
எங்கப்பா ஒரு தீவிர எம்.எஸ்.வி, மற்றும் சிவாஜி ரசிகர். அவருக்கு டி.எம்.எஸ் என்றால் ஆண்குரல். மற்றவர்களை சேர்த்துக் கொள்ளவே மாட்டார். எப்பொழுதாவது பி.பி.எஸ் அவருக்கு ஓகே.
பிரச்சினை, எனக்கு பாலுவின் குரல் 1966 –ல் உடனே பிடித்ததுதான். அவருக்கு பாலுவின் சன்னமான குரல் சற்றும் பிடிக்கவில்லை. நான் அவரிடம், “இந்தக் குரல் இன்னும் 50 வருடம் ஒலிக்கும்” என்று சவால் வேறு விட்டேன். இத்தனைக்கும், இசைப்புரிதல் எதுவும் அந்தக் காலத்தில் எனக்கு இல்லை. அப்பாவை கடுப்பேத்த நான் சொன்ன வார்த்தைகள் உண்மையாகும் என்று நினைக்கவே இல்லை.
எங்கப்பாவிற்கு, தமிழை அழுத்தம் திருத்தமாய், கண்ணதாசன், மற்றும் வாலியின் வரிகளைப் பாட வேண்டும். இந்த புதுப் பையனுக்கு, சுமாராகத்தான் தமிழ் வந்தது. அதுவும் அவன் எம்.ஜி.ஆர் படத்தில் வேறு பாடி பிரபலமைடைந்து விட்டான். அதுவும் அவருக்குப் பிடிக்கவில்லை.
எங்கள் பக்கத்து வீட்டில் இளைஞர்கள் குடியிருந்தார்கள். அவர்களுக்கு, ‘நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடிதானுங்க’ என்ற எம்.ஜி.ஆர் பாட்டு மிகவும் பிடிக்கும். ஆனால், அப்பாவுக்கு அதுகூடப் பரவாயில்லை. ஏனென்றால், அதை எம்.எஸ்.வி இசையில் டி.எம்.எஸ் மற்றும் சுசீலா பாடியிருந்தார்கள். ஆனால், பாலு, பாடகர் வரிசையில் சேர்க்கப்படக் கூடாது!
உதாரணத்திற்கு, ‘தொடுவதென்ன தென்றலோ மலர்களோ’ என்ற பாட்டில் பாலுவின் பாணியைக் கிண்டல் செய்வார். ”இவனுக்கு முறையா சங்கீதமே தெரியல. ஏன் எம்.எஸ்.வி இவனையெல்லாம் பாட வைக்கிறாரோ”, என்று அங்கலயிப்பார். எனக்கோ, அந்தப் பாடல்கள், இளமையுடன் மிகவும் பிடித்திருந்தது.
என்னுடைய பாலு நச்சரவு தாங்காமல், ஒரு நாள், தன்னுடைய கோட்பாட்டை முன் வைத்தார், ‘இவன் டி.எம்.கே’ காரன்!”. எங்கப்பாவிற்கு முற்றிலும் பிடிக்காதவர் கருணாநிதி. அவரும் வளர்ந்து வந்தார். பாலுவும் வளர்ந்து வந்தார். இந்த ஒரே காரணத்தால், பாலுவை எங்கப்பா தி,மு.க வில் சேர்த்துவிட்டார்!
இன்று அவர் பாலுவின் ரசிகர். அந்தப் புண்ணியம், மாமாவைச் சேரும். 1980 –ல், சங்கராபரணத்தில், ‘ஓங்கார நாதானு…” என்று தொடங்கியவுடன், பாலுவை தி.மு.க. -விலிருந்து நீக்கி விட்டார்!
பிறகு, படிப்படியாக, இளையராஜாவும் பாலுவும் சேர்ந்து வழங்கியப் பாடல்கள், அவரை மேலும் பாலுவின் ரசிகராக மாற்றியது வேறு கதை.