தடங்க(ல்)ள்

ரங்கசாமி தன் மகள் ரியாவின் திருமணச் சீருக்காகப் பலா மரத்தில் கட்டில் செய்ய முன்பணம் கொடுத்து ஒருமாதம் ஆகிவிட்டது. ஆனால், மணநாளின் மதியம்தான் கட்டில் வந்திறங்கியது. 

மரத்தாலேயே வளைத்தும் நெளித்தும் பலவாறு அலங்காரம் செய்யப்பட்டு, வார்னீஷ் பூசி அழகாக்கப்பட்ட கட்டில் அது. இருவர் தாராளமாக உருண்டு புரண்டு படுக்கும் அளவுக்குப் பெரிய கட்டில் என்பதாலேயே அங்கிருந்தவர்களின் அனைவரின் கவனத்தையும் அந்தக் கட்டில் ஈர்த்துவிட்டது. 

மாப்பிள்ளையின் அக்காவின் கணவர்தான் முதலில் அந்தக் கட்டிலின் கால்களைத் தடவிப் பார்த்தார். அவர் ‘நல்ல வழவழன்ணு இருக்கு’ என்று நினைத்துக்கொண்டே, தன் மனைவியிடம், “கல்யாணத்துக்குச் சீரா ஒங்க வீட்டுல ஸ்டீல்கட்டிலத்தான் கொடுத்தாங்க” என்றார். 

அவர் மனைவி ஒன்றும் கூறாமல் முகத்தைத் திருப்பி, தன் தம்பியின் மனைவி ரியாவைப் பார்த்து முறைத்தார். ரியா குனிந்துகொண்டார். எரிச்சலோடு தன் அம்மா பஞ்சவர்ணத்தைப் பார்த்தார். அவரும் குனிந்துகொண்டார்.  

பெண்வீட்டில்தான் முதலிரவு என்பதால், பஞ்சவர்ணம் தன் மகனை மட்டும் அங்கேயே விட்டுவிட்டுத் தன் மகளையும் மருமகனையும் அழைத்துக்கொண்டு தன் வீட்டுக்கு வந்துவிட்டார். வழிநெடுக, மருமகன் தன் மகளிடம் அந்தக் கட்டிலைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தது பஞ்சவர்ணத்துக்குப் பிடிக்கவில்லை. 

அதுமட்டுமல்ல, அவர் பேச்சினூடாக, “நாம ஸ்டீல்கட்டுல்ல படுத்துக் கிடக்குறதாலத்தான் நமக்குப் பிள்ளை புறக்கல” என்று கூறியது பஞ்சவர்ணத்துக்கு மனத்தாங்கலாகிவிட்டது. ஆனால், அதைத் தன் மருமகனிடம் வெளிப்படுத்தவில்லை. தனக்குள்ளேயே புழுங்கிக்கொண்டார். 

இரவில் பலவண்ணப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தக் கட்டிலில் மாப்பிள்ளை அமர்ந்திருந்தார். அவர் நல்ல உயரம். அவரின் கால்கள் மடிந்து, தரையில் படிந்திருந்தன. அவர் ரியாவிடம் முதலில் பேசியதே அந்தக் கட்டிலைப் பற்றித்தான். 

அவர் ரியாவிடம், “உங்க அப்பா ஒனக்கு ஏத்தமாதிரியே கட்டிலையும் செஞ்சுட்டார்” என்றார். 

ரியாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் கட்டிலையே பார்த்தாள். 

அவர் சற்று உரத்த குரலில், “நீயும் குள்ளம் இந்தக் கட்டுலும் குள்ளம். பாரு! எங்காலு தரையில புரளுது” என்றார். 

மறுநாள் காலையில் ரியா தன் அப்பாவிடம் பேசும்போது, 

“அப்பா! இந்தக் கட்டில் காலைக் கொஞ்சம் உயர்த்த முடியுமா?” என்று கேட்டாள். 

“ஏம்மா? முடியுமே” என்றார்.

“இல்ல, உங்க மாப்பிள்ளை உயரம்ல” என்றாள் ரியா.

மறுநாள் ரியாவைப் புகுந்தவீட்டுக்கு அனுப்பும்போது சீர்பொருட்களோடு சேர்த்து, நாலு இஞ்சு உயரத்தில் உள்ளங்கை பரப்பளவில் சதுரவடிவில் உருவாக்கப்பட்ட சிமெண்ட் கால்கள் நான்கினையும் சேர்த்தே அனுப்பிவைத்தார் ரங்கசாமி.

சீர்பொருட்கள் வீட்டுக்குள் வரும்போதே பஞ்சவர்ணம், “எல்லாத்தையும் வெளியேயே வையுங்க. ஊரார் பார்க்கணும். அதுதான் எங்களுக்குப் பெருமை. அப்புறமா எங்களோட தோதுக்கு எதை எங்க வைக்கணுமோ அதை அங்க வச்சுக்குறோம்” என்று கறாராகச் சொல்லிவிட்டார்.

மாப்பிள்ளையின் அக்கா ஆலத்தி எடுக்க வந்தார். ரியாவின் அம்மா அங்கிருந்த பெரியவர்களிடம் சூசகமாகச் சொல்லித் தடுக்கப் பார்த்தார். 

ஆனால், மாப்பிள்ளை, “என்னோட அக்காவுக்கு இப்ப பிள்ளை இல்லை. அதனால எப்பவுமே பிள்ளை இல்லையினா ஆயிடும். இனிமே பிறக்கும். எனக்கு என்னோட அக்காதான் ஆலத்தி எடுக்கணும்” என்று கறாராகச் சொல்லிவிட்டார்.

மணமக்களை வீட்டுக்குள் அழைத்தார். அந்தக் கட்டிலைத் தெருவில் இறக்கிவைத்தனர். அதன் மேல் சீர்பொருட்களை அடுக்கினர். தெருக்காரர்கள் கூடிநின்று அவற்றைப் பார்வையிட்டனர். எல்லோரின் கண்களும் அந்தக் கட்டிலின் மீதுதான் இருந்தன. மாப்பிள்ளையின் அக்காவின் கணவர் குனிந்து அந்தக் கட்டிலின் ஒரு காலை மட்டும் தடவிப் பார்த்தார். ‘வாழைத்தண்டு மாதிரி வழவழணு இருக்கு’ என்று நினைத்துக்கொண்டார்.

பெண்வீட்டுக்காரர்கள் அனைவரும் சென்றபின்னர், மாப்பிள்ளை தன்னுடைய நண்பர்களின் துணையோடு எல்லாப் பொருட்களையும் வீட்டுக்குள் கொண்டுவந்தார். அவர்கள் அந்தக் கட்டிலைக் கவிழ்த்தி வீட்டுக்குள் கொண்டுவந்து, படுக்கைஅறைக்குள் நுழைக்க முயன்றனர். முடியவில்லை. 

கட்டில் கால்கள் பிரித்து இணைக்கும் முறையில் செய்யப்படவில்லை. பிரித்து அமைக்கும் முறையில் செய்யப்படும் கட்டில்கள் நாள்பட சத்தம் தரும் என்பதாலும் அது தலைமுறைக்கும் நீடித்து நிலைக்காது என்பதாலும்தான் ரங்கசாமி அந்தக் கட்டில்கால்களைப் பிரித்து இணைக்கும் முறையில் செய்யவில்லை. 

வேறுவழியே இல்லை. கட்டில்கால்களைப் பிரிக்கவே முடியாது. கட்டிலை அப்படியேதான் அறைக்குள் கொண்டுசெல்ல வேண்டும். அது முடியாது. 

அதுமட்டுமல்ல, அந்த அறைக்குள் இந்தக் கட்டிலை வைக்கும் அளவுக்கு இடவசதியும் இல்லை. என்ன செய்யலாம் என்று எல்லோரும் திகைத்து நின்றபோது பஞ்சவர்ணம் உரத்த குரலில், “அதை ஹால்லையே போட்டுடுங்க” என்றார். ரியாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. எல்லோரும் சென்றுவிட்டனர்.

பஞ்சவர்ணம் தன் மகனை அழைத்து, “டேய்! அந்தக் கட்டில் இங்கையே இருக்கட்டும்டா. நீங்க மெத்தையை மட்டும் ரூமுக்குள்ள போட்டுப் படுத்துங்கோங்க. நான் தனிக்கட்டைதானே, நான் இந்தக் கட்டில்ல மெத்தை இல்லாம, பெட்சீட்டை விரிச்சு படுத்துக்குறேன்” என்றார். வழக்கம்போல அவர் தன் அம்மாவை மீறி எதுவும் பேசவில்லை. 

தன் அம்மா வசதியாகப் படப்பதற்காக அந்த சிமெண்ட் கால்கள் நான்கையும் அந்தக் கட்டிலின் கால்களுக்கு ஒன்றாக வைத்து, கட்டிலை உயரப் படுத்தினார். கட்டிலில் ஒரு பெட்சீட்டை விரித்தார். மெத்தையைத் தன் அறைக்குக் கொண்டுசென்றார்.

இரவில் ரியா தன் கணவரிடம், “நான் வேணும்னா எங்க அப்பாக்கிட்ட சொல்லி, அந்தக் கட்டிலைக் கொடுத்துட்டு இந்த அறைக்கு ஏத்தாப்புல ஒரு சின்னக் கட்டிலைச் செஞ்சுதரச் சொல்லட்டுமா?”

“வேண்டாம்” என்றார் அவர்.

“நாம வேணும்னா ஒரு சின்னக் கட்டிலை வாங்கி இந்த ரூமுக்குள்ள போட்டுக்குவோமா?”

“வேண்டாம்” என்றார் அவர்.

இனிமே தரையிலதான் மெத்தையைப் போட்டுப் படுக்கணுமா?” என்று அழும் குரலில் கேட்டாள் ரியா.

“கட்டுல்ல மெத்தையைப் போட்டாலும் தரையில மெத்தையைப் போட்டாலும் நல்ல மனசு இருந்தாத்தான் நிம்மதியாத் தூங்க முடியும்” என்றார் அவர்.

அதற்குப் பின்னர் ரியா ஏதும் பேசவில்லை. கட்டிலைப் பற்றிப் பத்து வருஷமாகப் பேசவேயில்லை. பத்து வருஷமாகப் பஞ்சவர்ணம் அந்தக் கட்டிலில்தான் தூங்கினார். 

இரவு எட்டுமணி முதல் விடியற்காலை ஐந்து மணிவரை தூங்குவார். உருண்டு புரண்டு தூங்குவார். பகல் முழுக்க அந்தக் கட்டிலில்தான் அமர்ந்திருப்பார். அந்தக் கட்டிலில் அமர்ந்தபடியேதான் மூன்று வேளையும் உணவு உண்பார். அந்தக் கட்டிலில் அமர்ந்தபடியேதான் ஒரு நாளைக்கு ஐந்துக்கும் மேற்பட்ட முறைகள் சிற்றுண்டி உண்பார். 

அந்தக் கட்டிலில் சாய்ந்தமர்ந்தபடியேதான் தொலைக்காட்சி பார்ப்பார்; வானொலியும் பண்பலையும் கேட்பார்; கைப்பேசியில் உரையாடுவார்; நாளிதழ்களையும் புத்தகங்களையும் படிப்பார். 

அந்தக் கட்டிலின் மீது பஞ்சவர்ணம் பயன்படுத்தும் பனையோலை விசிறி, தலைவலித்தைலம், ஆயுர்வேத மருந்துகள், பேன்சீப்பு, வார இதழ்கள், கந்தசஷ்டிக் கவசம் புத்தகம் போன்றவை இருக்கும். 

அந்தக் கட்டிலின் கீழே தலைக்குத் தேய்க்கும் எண்ணெய், கால்வலித் தைலம், சிற்றுண்டிகள் நிறைக்கப்பட்ட சிறிய தூக்குவாளிகள், ஆவிபிடிக்கப் பயன்படுத்தும் பாத்திரம், கருவேற்பிள்ளைப்பொடி நிறைக்கப்பட்ட டப்பா போன்றன இருக்கும். 

எப்போதாவது தன் மகனை அழைத்துத் தன்னருகில் அந்தக் கட்டிலில் அமரவைத்துப் பேசிக்கொண்டிருப்பார் பஞ்சவர்ணம். 

ஒவ்வொரு நாளும் காலையில் பத்து மணிக்கு அந்த ஹாலைக் கூட்டும்போது ரியா அந்தக் கட்டிலின் கீழிருக்கு அனைத்துப் பொருட்களையும் எடுப்பாள். கூட்டுவாள். மீண்டும் அவற்றை அடுக்குவாள். கட்டிலின் மீதிருக்கும் பொருட்களை எடுத்துவிட்டு, பெட்ஷீட்டை மாற்றுவாள். மீண்டும் அந்தப் பொருட்களை அடுக்குவாள்.       

இந்தப் பத்து வருஷத்தில் ரியா அந்தக் கட்டிலில் அமர்ந்ததுகூட இல்லை. அவள் இல்வாழ்வு அந்த அறைக்குள்ளேயே முடங்கிப்போனது. இரண்டு பிள்ளைகள் அந்த அறையின் உத்தரத்தில் கட்டப்பட்டதொட்டிலில் தூங்கி, அந்த மெத்தையிலேயே படுத்துறங்கி, வளரத் தொடங்கியிருந்தன.

ஒருநாள் விடியலில் பஞ்சவர்ணம் அந்தக் கட்டிலிலிருந்து எழவேயில்லை. 

அந்தக் கட்டிலை அதன் சிமெண்ட் கால்களோடு தெருவில்வைத்து, அதில் பஞ்சவர்ணத்தைக் கிடத்தி, எல்லாச் சடங்கையும் செய்துமுடித்தனர். காடேற்றம் முடிந்தபின்னர், கட்டிலை வீட்டுச் சுவரின் ஓரத்தில் சார்த்தி வைத்தனர். அந்த சிமெண்ட் கால்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி, ஜன்னலின் வெளிப்புறத் திட்டின் மீது ஓரமாக வைத்தனர். 

சம்மந்தக்காரர்களும் தூரத்து உறவினர்களும் சென்றபின்னர், அக்காவின் கணவர் அந்தக் கட்டிலின் ஒரு காலைத் தடவிப் பார்த்தார். ‘இன்னமும் வழவழப்புக் குறையவே இல்லை’ என்று நினைத்துக்கொண்டார். உடனே, தன் மனைவியை அழைத்துப் பேசினார். அவர் தன் தம்பியைத் தனியாக அழைத்துப் பேசினார். 

சற்று நேரத்துக்குள் ஒரு சிறிய வண்டி வந்தது. அதில் அந்தக் கட்டிலை ஏறினார் அக்காவின் கணவர். வண்டி புறப்பட்டபோதுதான் ரியா வெளியே வந்தாள். அந்த வண்டி அவளின் கட்டிலைச் சுமந்துகொண்டு தெருவைக் கடந்துகொண்டிருந்தது. 

ரியா பதற்றத்துடன் கணவரிடம் “ஏங்க கட்டிலைக் கொண்டுபோறாங்க? எங்க கொண்டு போறாங்க?” என்று கேட்டாள்.

அவர் சோகமான குரலில், “அந்தக் கட்டில் இங்க இருந்தா அதைப் பார்க்கும்போதெல்லாம் என்னோட அம்மா ஞாபகமாவே இருக்கும். அதான் அக்கா வீட்டுக்குக் கொடுத்துவிட்டுட்டேன்” என்றார். 

ரியா உரத்த குரலில், “அதுக்காக? என்று கேட்டுவிட்டு, தன்னைச் சற்றுத் நிதானப்படுத்திக்கொண்டு, “அப்ப அதைப் பார்க்கும்போது உங்க அக்காவுக்குமட்டும் உங்க அம்மா ஞாபகம் வராதா?” என்று கேட்டாள். 

அவர் ஏதும் சொல்லவில்லை.

ரியா தாழ்ந்த குரலில் அவரிடம், “அது எங்க அப்பா எனக்குச் சீராக்கொடுத்த கட்டில். நான் அதுல ஒரு தடவதான் படுத்திருக்கேன்” என்றாள்.

உடனே, அவர் ரியாவிடம், “உங்க அப்பா அந்தக் கட்டிலை மட்டுந்தான் வாங்கிக்கொடுத்தாரா? மெத்தையும்தானே வாங்கிக்கொடுத்தார். அதுலதான பத்து வருஷமா படுத்துக்கிடக்குற?” என்று கேட்டார். 

ரியா ஏதும் பேசவில்லை. மறுநாள் அவள் வீட்டைக் கூட்டும்போது, அந்தத் தடங்களை பார்த்தாள். ஹாலில் கட்டிலின் கால்கள் இருந்த இடத்தில் அந்த சிமெண்ட் கால்களின் பத்தாண்டுச் சதுரத்தடங்கள் அழுத்தமாக இருந்தன. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.