ஆரம்பத்தில் முற்றத்தில்
எந்தப்பூவும் பூத்திருக்கவில்லை
வெறிச்சோடியிருந்த முற்றத்தில்
நாள் பார்த்து, வளர்பிறை காலமொன்றில்
அவள்தான்
அந்த செவ்வரத்தையை நட்டாள்
முதலில் ஒன்றாக, இரண்டாக
பூத்துக் கொண்டிருந்தது
அவளுக்கும், அவள் புருஷனுக்குமென.
பின் குழந்தைக்கும் சேர்த்து
எண்ணி மூன்று பூப் பூக்காத நாள்களிலெல்லாம்
மனங் கோணியிருந்தாள்
மூன்று பூ,
மூன்று பேருக்கும்
போதுமானதாயிருந்தது
பிறகு,
கணக்கேயின்றிப் பூத்துச் சொரிகிறது
செவ்வரத்தை.
அவளது அன்பு
இந்த மூன்று பேரைத் தவிர
எங்கெல்லாம்
பெருக்கெடுத்திருக்கக்கூடும்?
யார்,யாருக்கென்று
அவள் அந்தப் பூப் பூக்கக்
கோரியிருக்கக் கூடும்?
