கொல்லி

அங்கங்கே சிராய்ப்பு காயங்களாய் இருந்தது. விஜயன் கை கால்களை திருப்பி பார்த்துக் கொண்டிருந்தான், இரவு கண் மண் தெரியாமல் ஓடியதில் கிடைத்த பரிசு அவை. ஸ்லிப்பர் செருப்பின் பிய்ந்து போன கவட்டை முனையை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்து விட்டு வெறுங்காலுடன் பக்கத்திலிருந்த ஓடையை நோக்கி போனான். பேன்டும் சர்ட்டும் பாறையில் காய்ந்திருக்க ஈர ஜட்டியுடன் கையை குறுக்கே கட்டியவாறு எங்கோ பார்த்து உட்கார்ந்து கொண்டிருந்தான். இருக்கிற பசியில் இந்த காட்டின் பச்சை இலைகளை சாப்பிட்டு விடலாமா என ஆங்காரமாயிருந்தது. தான் இங்கேயே பசியால் செத்து விடுவோமோ என்று வயிற்றுக்குள் பயஅமிலம் பாய்ந்தது. ஒருசில முறை நண்பர்களுடன் இதே இடத்திற்கு வந்திருக்கிறான் ஆனால் இப்போது அவன் இங்கிருப்பான் என யாருக்குத் தெரியும்?. யாருக்காக இப்படி சாக வேண்டும், ஏன் இப்பிடி இந்த அத்துவானக் காட்டிற்குள் வந்து ஒரு எலியைப் போல பதுங்க வேண்டும் என கண்டபடி நினைவுகள் ஓடியது. பசிமயக்கத்தில் விஜயன் அசந்துவிட தூரத்தில் காலடி சத்தம் கேட்டு பதறியெழுந்து மரத்தின் பின்னே ஒளிந்து கொண்டான். ஆனால் அவன் பேண்டு, சர்ட்டு அவன் முன்னே தான் காயந்து கொண்டிருந்தன. சத்தம் வந்த புதரையே பாரத்துக் கொண்டிருந்தவன் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தான். வந்தவன் அவனுடைய நண்பன் தான்; உற்சாகம் கையில் இருந்த தூக்கு வாளி தான் காரணம். என்ன ஏது என்று கூட கேட்காமல் தூக்கு வாளியைப் பறித்து அள்ளி அள்ளி விழுங்கத்தொடங்கினான். வாயின் இருபக்கமும் அமுக்கி அடக்கி தின்பதை பார்க்கும் போது வானரம் போலிருந்தான். பசிதான் மனிதனின் மிருக எச்சம் பேராசை அவனுடைய மனித எச்சம். ஓடையில் கை கழுவிவிட்டு; இப்போது தான் வந்தவனை உற்றுப் பார்க்கத் தொடங்கினான்.

“தர்மா! நான் இங்க தான் இருப்பேன்னு எப்பிடிடா தெரிஞ்சது”

“நேத்தி ராவு புல்லா டவுண அலசிருக்கானுவோ. ஊரெல்லாம் பேச்சாயிருச்சில்ல”

“அப்படியா”

“ஆமா..! டவுணுக்குள்ள தேடி முடிஞ்சி இன்னிக்கு காலைல நம்ம சிரமலைக்கே வந்துட்டாங்க”

“வந்து”

“எல்லாரையும் கூப்பிட்டு கேட்டானுவோ. என்னையும் கேட்டானுவோ.யாருக்கும் தெரியல எனக்கும் தெரியாதுன்னு சொன்னேன்.விடு விடுவென இறங்கிப் போயிட்டானுவோ”

“யாரையும் ஒன்னும் செய்யலியா”

“ம்ஹூம்.இல்ல” என்ற தர்மன் மிரட்சியான பார்வையோடு விஜயனைப் பார்த்தான்.

“என்ன பாக்குற”

“இல்ல விஜயா அவன் கேட்டதுக்கு நீ கொஞ்சம் அவசரப்பட்டியோன்னு தோணுச்சி”

“ஆமா இப்ப நினைச்சா அவசரப்பட்டு அந்த வேலையை செஞ்சிருக்க கூடாது தான் தோணுது. ஆனாலும் அவனும் அப்பிடி கேட்ருக்க கூடாதுல்ல நண்பா”.

“அவன்ட அதிகாரமிருக்கு நண்பா. காக்கி உடுப்பு போட்டவனுக இதுக்கு முன்னாடி பண்ணாத அட்டூழியமா?. ஏதோ அவன் அந்த கேள்விய கேட்டுபுட்டான்.இது அவனுகளுக்கு வழக்கம் தான விஜயா”

“பின்ன என்ன நண்பா ஊரடங்கு போட்ருக்கானுவோ. ஆனா மருந்து மாத்திரை வாங்க போலாம்னு விலக்கு இருக்கு. அதத்தானே அன்னிக்கு அந்த வேல்ராஜ் சொன்னான். அவனைப் போய் அடிச்சி மூஞ்சி எல்லாம் பேத்துருக்கானுவோ. இவன் கேட்ட மருந்து கடையில இல்ல, பில்லும் இல்ல, ஆனா கொஞ்சம் விசாரிச்சி அந்த மெடிக்கல்காரன கூப்பிட்டு கேட்ருந்தா தெரிஞ்சிருக்கும். இப்பிடி மாட்ட அடிக்கிற மாதிரி அடிக்கிறதுக்கா இவனுகளுக்கு அதிகாரம்? மாட்ட அடிச்சாகூட கேக்க ஆளு இருக்கு. நம்மள மாதரி படிக்காத சனங்களுக்கே யாரு தான் கேப்பா? அதும் கேக்குறான் பாரு ‘மருந்து வாங்க போனியா ? இல்ல ரப்பர் வாங்க போனியானு?’ அப்ப தான் நண்பா எனக்கே தாங்க முடியல சட்டைய புடிச்சி செவுத்துல எக்கிட்டேன். எல்லாரும் புடிச்சி விலக்கி விட்டப்புறம் தெரிஞ்சது. ஆனா அதுக்கப்புறம் எல்லாம் முடிஞ்சிட்டுனு தோணிச்சி.

“நீ தப்பிச்சி ஓடினதுக்கு அப்பறம் வேல்ராஜ விட்டானுக. ஆனா உன்ன எங்கிருந்தாலும் பிடிக்காம விடமாட்டேன்னு அந்த ஆளு துடிக்கிறான். மனு குடுக்க வந்த கூட்டத்துல நீ அவன் சட்டய புடிச்சது அவனுக்கு அவமானமாயிட்டு. காக்கி மேல கை வச்சிட்டான் இனி அவன் செத்தான்டான்னு சொன்னான்”

“ம். இப்ப என்ன பண்றது. கோபப்பட்டு முடிச்ச பின்னாடி தான் மனசுக்கே படுது”

“சரி சரி இப்பிடியே புலம்பாம காட்டுப் பாதையா போய் நல்லமலை காட்டுக்கு போயிடு. போற வழில இந்த கம்பு கிழங்கு சுட்டு சாப்பிட்டுக்க. இடும்பாறு பக்கத்துல மண்டபத்துல ரவைக்குத் தங்கிட்டு காலைல மறுபக்கம் இறங்கிட்டா தப்பிச்சிறலாம். கொஞ்ச நாள் போகட்டும். என் மேலயும் சந்தேகப்படுவாங்க” என்ற தர்மன் கையில் வத்திப் பொட்டி, பீடி கட்டு, கம்பு கிழங்கு துண்டுகள், ஒரு சிகப்பு துண்டு, நுறு ரூபா பணமும் கொடுத்தான்.கண்ணீர் மல்க அவனை கட்டித் தழுவினான் விஜயன்.

அவன் போவதையே பாரத்துக் கொண்டிருந்துவிட்டு. உடுப்பு மாற்றி நல்ல மலை நோக்கி நடக்க தொடங்கினான். இருட்டுவதற்குள் இடும்பாறு மண்டபத்தை எட்டிவிட வேண்டும் என எட்டி நடை போட்டான். சூரியன் மெல்ல இறங்கி மரங்களின் ஊடே கண்ணாமூச்சி விளையாடத்த தொடங்கியிருந்தான். இடும்பாறு தூரத்தில் சலசலக்கும் சத்தம் கேட்டது. மனமே பாரமாயிருந்தது. கையில் கிடைத்த சுள்ளிகளை பொறுக்கி தீமூட்டி கிழங்குகளை சுடத் தொடங்கினான்.

மதியம் நடந்ததில் அசந்து தூங்கி விட்டான். விடிய கருக்கலில் காட்டுக் குருவிகளின் சலசலப்பில் எழுந்து விட்டவன் தூரத்தில் வண்டிமாடு வரவே மண்டபத்திலிருந்து இறங்கி வந்தான். மாட்டுக்காரன் மலை இறங்கி மறுபக்கம் போகிறேன் எனச் சொன்னான். விஜயனும் மலையிறங்க வேண்டும் எனச் சொல்லி வண்டியில் ஏறிக்கொண்டான். வண்டி அந்த காட்டுப் பாதையில் இறங்கத் தொடங்கிருந்தது. விஜயன் பீடி பற்ற வைத்து வண்டிக்காரனுக்கும் ஒன்று கொடுக்க வண்டி காரன் பேச ஆரம்பித்தான்.

“எங்கிருந்து வாறீங்க தம்பி”

“நல்லமலை கிராமம்க” வேண்டுமென்றே மாத்தி சொன்னான்.

“வண்டிகாரன் தலையாட்டி விட்டு என்ன பொழப்பு ! இந்த மலைநாட்டு பொழப்பு. ஆத்திர அவசரத்துக்கு எங்கேயும் போக முடியாது. ஆனைக்கும் சிறுத்தைக்கும் பயந்து பயந்தே வாழனும்”

“ஆமாங்கய்யா”

“கேள்விப்பட்டீங்களா தம்பி ! உங்க பக்கத்து ஊரு சிரமலைல வெள்ளாமையெல்லாம் தீ வச்சுப்புட்டாங்களாம். சனங்கள்லாம் ஒரே பேச்சு”

விஜயனுக்கு சுரீரென்றது. அதிர்ச்சியைக் காட்டிக் கொள்ளாமல் கேட்டான்.

“ஏங்கய்யா என்னாச்சு”

“அது தம்பி யாரோ ஒரு ஆளு தப்பிச்சி ஓடிட்டானாம். அவனைத் தேடி நேத்தி சாயந்தரம் ஊருக்குள்ள இறங்கி வீடு வீடா தேடி எல்லாத்தையும் உடச்சுப் போட்டானுகளாம். கடைசில யாரும் ஒன்னும் சொல்லலயாம். அப்புறம் ராத்திரி யாரோ வெள்ளாமையெல்லாம் தீ வச்சிட்டாங்களாம். என்ன அநியாயம் பாருங்க தம்பி. ஒரு ஆளுக்காக அவனைச் சேர்ந்த ஆளுகள்ளாம் ஒத்துமையா இருந்துருக்காங்க. ஆனா வருசம் பூரா பாடுபட்ட வெள்ளாமை போச்சே தம்பி. இனி அந்த மக்க அடுத்த ஆறுமாசம் பசியால வாடுமே. என்னமோ போங்க”

அவர் சொல்ல சொல்ல பதில் ஏதும் பேசாமல் நெஞ்சு வெடித்து அழமுடியாமல் சிலையாகிப் போயிருந்தான்.

“தம்பி…தம்பி என்ன ஒன்னும் சொல்லமாட்டக்கீக” வண்டிக்காரன் திரும்பி பார்த்தான். விஜயன் தூரத்தில் வெறித்துப் பாரத்துக் கொண்டிருந்தான். மறுபக்கம் இறங்கி சம வெளி வர ஆரம்பித்திருந்தது. வண்டி மாடு ‘ஜல் ஜல்’ என தாளத்தோடு வேகமெடுக்கத் தொடங்கியிருந்தது. நினைவு வந்த விஜயன்,

“அய்யா! வண்டி நிறுத்துங்கய்யா”

“ஏந்தம்பி இதோ ஊரு வந்துட்டு”

“இல்லங்கய்யா நான் மண்டபத்துலய ஒரு பொருள விட்டுட்டு வந்துட்டேன். நான் திருப்பி எடுக்கப் போறேன். இது வர கொண்டு வந்ததற்கு நன்றிங்கய்யா” என்று சில ரூபாய்த்தாள்களை நீட்டினான்.

“அட போங்க தம்பி போக்கு வண்டி தானே. இதுக்கு போயிட்டு. பாத்து போங்க ; இருட்டுறதுக்குள்ளே மண்டபத்துக்கு போயிடுங்க”

“சரிங்கய்யா” என்ற விஜயன் போகின்ற வண்டியையே பார்த்திருந்து விட்டு அங்கேயே நடக்க ஆரம்பித்திருந்தான். காட்டுப் பூச்சிகளின் ரீங்காரம் காதைத் துளைத்து. ஓ என அழத்தொடங்கினான். அவனுடன் சேர்ந்து கண்ணீர் துளிகளும் மலையேறின.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.