எதுவுமற்ற ஒன்றைத் தொலைத்தல்
மழையில் நடுங்கியபடி நாம் நின்றுகொண்டிருந்த காலத்தில்
தொட்டுக்கொள்ள முடியாத ஜிமிக்கிகள்
அழகாகப் பேசிக் கொண்டிருந்தன
செல்லுமிடம் தெரியாமல்
முதல் தடவை பயணிக்கையில்
“விழுந்துவிடப் போகிறாய்
சிறிதளவேனும் நெருங்கி அமரலாமே ” என்றேன்
சுண்டிவிடப்பட்ட ஜிமிக்கிகள்
முன்னும் பின்னுமாக சுழன்றாடித்
தொட்டுக் கொள்வதற்கு தயாராகின
இருவருக்குமிடையே அமர்ந்திருந்த
எதுவுமற்ற ஒன்று
கண்களை விரித்து ஏதோ சொல்ல வந்தது
அதைக்
கீழே தள்ளி விட்டுவிட்டு
கைகளைக் கோர்த்துக் கொண்டோம்
எல்லாவற்றின் வயிற்றிலும்
காரணங்கள் பிறக்க ஆரம்பித்தன

கடல் அழைத்துக் கொண்டே இருக்கிறது
மாபெரும் துயரங்கள்
அழுத்தும் ஆழ்கடலில்
புதிதாகக் கண்திறக்கும் சிப்பியும்
எழுதிக்கடக்கத்தான் வேண்டுமா
கரையேறும் வரையுள்ள
முடிவற்ற துயரங்களை
கலந்து
படிந்து
உறைந்து விட்ட
மணலைத் துழாவி
அள்ளி எடுப்பதெல்லாம்
வலியாகவே தோன்றும்போது
புதிதாகப் பிறந்தது என்று
கத்திக் குதிக்கவா முடியும்
மிகவும் விரும்பிய
அகாலத்தில் இறந்த ஒருவர்
மேலே வந்து முத்தமிட்டுச் செல்கிறார்
தாளமுடியாமல் பீறிடுகிறது அழுகை
வலியில் உப்பிய உள்ளங்கையால்
ரகசியமாக நெஞ்சில் எழுதுகிறார்
இரவெல்லாம் துடித்து உளறுகிறேன்
அதிகாலையில் கண்ணைத் தட்டும்
இன்னொருவரின் உள்ளங்கையும்
உப்பியிருக்கிறது
உன்னை விட்டு
நான் எங்கு நீந்துவது
துயரங்கள் கரிக்கும் கடலே

கவி வாழ்வு
நீண்ட தூரம் பயணித்து விட்டே
இல்லம் திரும்புவேனென்று
ஒவ்வொரு நாளும் விடைபெறுவேன்
நானில்லாத இல்லத்தில்
ஓடி ஓடித் தேடும்
குழந்தைகளின் கால்களில்
நீண்ட தூரமென்பது
உடலை மடக்கி அமர்ந்திருக்கிறது
விரைவிலேயே
இல்லத்துக்கு இழுத்துவிடும்
நாளின் அருளை உணராது
சலித்துக் கதவு தட்டும் என்னைக்
கட்டிக் கொள்ளும் பெரியவள்
ஓடிக் களைத்த வழிகளையும்
பாதங்களையும் திறந்து காண்பிக்கிறாள்
“தா தீ தை
தத்தித் தை தா தீ “
நடனமாடிக் காட்டும் சிறியவள்
சிறு பாதங்களைத் தூக்கி
நெஞ்சுக்கு நேரே நீட்டும் போது
நீண்ட பயணத்தை வணங்குகிறேன்
கவி வாழ்வது
விலகிச் செல்லும் போதா
ஒன்றாக இருக்கும் போதா