ஒத்தப்பனை

“எல்லாம் டூப்ளிகேட் சரக்கு. மிக்ஸ்ட் மால்ட், மல்டி கிரேயின். சிங்கிள் மால்ட் விஸ்கி டேஸ்ட் எப்படி இருக்கும் தெரியுமா? நாக்குல பட்டா அந்த மால்ட் நொதிச்ச சுவை வரணும். இதுல எல்லாம் கெமிக்கல்..” இப்படி உயர்தர மதுக்கூடத்தில் தன்னெதிரே பேசிக் கொண்டிருந்தவனை கவனிக்காமல் இருந்தவன், ஆறடிக்கு முன்னே இருந்த கண்ணாடியின் வழியே, எதிரே சாலையை பிரிக்கும் மூன்றடி கான்கிரிட் தடுப்பில் ஏறி உட்காந்திருந்த கிழவியையும், அவளின் காலுக்கடியில் தலையை நுழைத்து, பின் நாவால் அவளின் கன்னங்களை வருடிய செவலை நிற நாயையும், அதன் பின்னே பத்தடி தள்ளி நின்றுக் கொண்டிருந்த கருப்பு நிற நாயையும் கவனித்துக் கொண்டிருந்தான். அந்த தடுப்பில் சாலையின் அழகிற்காக வெளிநாட்டு குட்டை மரங்கள் வளர்க்கப்பட்டு இருந்தன, எனவே அந்த தடுப்பு நான்கு அடி அகலத்தில் இருந்தது. அந்த மதுவிடுதியின் மூன்றாவது மாடியில் சாலையை பார்க்கும் வகையில் அவர்கள் அமர்ந்திருந்தமையால் எல்லாம் தெளிவாகத் தெரிந்ததது. சில நூறு அடித் தொலைவில் அவர்கள் பணிபுரியும் அலுவலகமும் இருந்தது.

அலுவலகத்தின் வெளியே தேநீர் கடைக்கு மாலை நான்கு மணிக்கு அவர்கள் செல்லும் போது அங்கே ஓரமாய் சாலை விரிவாக்க பணிக்கு பாதி இடித்த மண்டபத்தில் கர்ப்பக்கிரகத்தை விட்டு வைத்த, சாலை ஒப்பந்தக்காரரின் தயவால் தனியாய் இருக்கும் கங்கையம்மனின் கோவிலில் கிழவி இருப்பாள். மழையிலும், இரவிலும் இங்கேதான் தஞ்சம். பகலிலே கோவிலின் முன்னே நிற்கும் ஒத்தப் பனையின் அடிமாட்டில் தான் பெரும்பாலும் இருப்பு. இதுதான் இந்தப் பகுதியில் இருந்த பனங்காட்டிற்கு கடைசி சாட்சி. தேநீர் கடைக்காரர் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர், கிழவிக்கு திருச்செந்தூர். என்ன பூர்வ சென்மப் பந்தமோ? இவளுக்கு அதிகாலை, முன்மதிய வேளை, மாலை மற்றும் முன்னிரவு தேநீரும், மற்றவேளை மீந்துப் போன வடைகளையும் கொடுப்பார். சென்னையின் மிகநீண்ட பழைய மகாபலிபுரச் சாலையில் இல்லாத உணவகமா? கிழவி அந்தப் பக்கமாய் போனால் பகட்டு ஆடம்பரமாய் உடையணிந்தவரின் அருகே செல்லாமல், அவள் அறிந்த முகச்சாயலில் தெரிவோரின் பக்கம் செல்வாள். அவர்கள் பெரும்பாலும் சிறுநகரங்கள், கிராமங்களில் இருந்து சென்னையில் குடியேறி பணிப் புரிபவர்கள். குறிப்பாய் அதில் பெண்கள் கையில் இருக்கும் பத்தையோ, இருபதையோ கொடுப்பதை தவிர்ப்பதில்லை. இதில் சிலப் பெண்டிர் இதையே வழக்கமாய் கொண்டுள்ளனர், இதனால் ஏமாற்றம் இருவருக்குமில்லை. கிழவிக்கு சொந்தமென்று கோயிலின் ஓரத்தில் கிடக்கும் பழைய போலி ரீபோக் முத்திரை குத்திய பை ஒன்றுண்டு. அதுவும் வெள்ளிக்கிழமை மட்டுமே வரும் பூசாரியால் அன்று ஒருநாள் வெளியே வைக்கப்பட்டு இரவே உள்ளே வைக்கப்படும். அதில் அவள் உடுத்திக்கொள்ளும் பாலியஸ்டர் சேலை நான்கும், கருப்பு நிற ஜெம்பர் மூன்றும், வெளிறிய நிறம் காணமுடியாத பாவாடைகள் இரண்டும், கடந்த மாத மழை வெள்ளத்தின் போது கிடைத்த போர்வை ஒன்றும் உண்டு. கூடவே இரண்டுக்கு இரண்டு இன்ஜில் பழுப்பேறினாலும் கருத்த மீசை தனியாய் கட்டையைப் போலத் தெரியும் சுருட்டை முடிக்காரர் அளவாய் சிரித்தபடி அடங்கி கிடக்கும் புகைப்படமும் இருக்கும். இவரையன்றி அவள் அறிந்தவள் தேநீர் கடைக்காரரும், வழக்கமாய் அவளுக்கு கொஞ்சம் ருபாய் கொடுக்கும் அந்தப் பெண்களும் தான். இதுபோக இப்போது அவளுக்கு இரண்டு பிள்ளைகள் என அவளே சொல்லிக்கொண்டாள். ஒருத்தி ரோஸி செவலை நிற நாய், மற்றவன் கருப்பன், கிழவியைத் தவிர பெயர் சூட்டல் வேறு யாரும் அறியவில்லை. எல்லா வேளையும் தூரமாய் கிடக்கும் சதுப்பு நிலத்தில் மேய்பவன் ராத்திரி மாத்திரம் செவலையை தேடிவருவதால் அவனை செவலை அண்டவிடுவதில்லை. கிழவி இருவருக்கும் இடையே பஞ்சாயத்து பண்ணியும் எந்த முன்னேற்றமும் உறவில் பலப்படவில்லை. முழுக் காரணமும் கருப்பன் தான், வைப்பாட்டி உண்டு எனக் கிழவி உத்தேசித்தாள். அவளைக் கட்டியவன் பனையேறி சுயம்பு நாடாருக்கு திருவைகுண்டத்திலும், பரமன்குறிச்சியிலும் வைப்பு உண்டென சிறுபிராயத்தில் கிழவியின் காதுப் பட பேசிய ஆட்கள் உண்டு. காலை எங்கு போனாலென்ன ராத்திரிக்கு தங்கக்கனி இல்லாமல் உருண்டு பிரண்டு படுக்க சுயம்புவால் முடியாது. இதனாலே ஐந்து பெத்த புண்ணியவதி கருப்பனின் காரியம் அறியாமல் இருப்பாளா!.

“சார், வேற ஏதாச்சும் வேணுமா? சார் ப்ளீஸ்” குரல் கேட்க திரும்பியனின் எதிரே மீசை அரும்பிட ஒல்லியாக சிறுவனைப் போன்ற உடல்வாகுடன் இளைஞன் நின்றான். அவனையே சற்றுநேரம் பார்த்தவன் “ஒரு லார்ஜ் ராயல் சேலஞ்ச், பீநட் மசாலா ஒரு பிளேட், டேய் உனக்கு” என்று எதிரே இருந்தவனிடம் கேட்டான். “பீர் ஒன்னு. ட்ராகன் சிக்கன் ஒன்னு” உளறியப்படியே கூறினான். சொல்லிவிட்டு மீண்டும் அலைபேசியை நோக்கினான். “இவனுக்கு ஆப் பியர் போதும். நீ இங்க வேலை பாக்கறியா. சின்ன பையனா இருக்க ” கேட்டான் சிகரெட் பற்ற வைத்தப் படியே, “ஹோட்டல் மேனேஜ்மென்ட் முடிச்சிருக்கேன் சார். இப்போதான் இங்க ஜாயின் பண்ணிருக்கேன். வாரத்துல இரண்டு நாள் பார்ல வேலை பாக்கணும். வேற வழி இல்ல. உங்களுக்கு வேற ஏதாச்சும் வேணுமா” என்றவனின் முகம் சற்றே வாடியது. அங்கே வேறு எதுவும் கேட்கப்படாததால் கேட்டதை எடுத்துவர நகர்ந்தான். அவன் சாலையை நோக்கினான், இருப்பக்கமும் வாகனங்கள் மங்கோலியக் குதிரையை போல சீறின. சிலநொடிப் பொழுதிலே உச்ச வேகத்தை நெருங்கும் காரை சமீபத்தில் தான் வாங்கியிருந்தான். அவனின் கால்கள் வேகமுடிக்கியை அழுத்துவது போல உணர்ந்தான், இன்னும் இன்னும் வேகமாக, திசைதிருப்பியை வேகமாக சுழற்றுவது போல உணர அவன் தலை சுழன்றது. அது நிற்கும் போது, எதிரே கிழவி அங்கேயே தடுப்பில் இருந்தாள். கருப்பு நிற நாய், செவலையின் வாலின் பக்கமாய் மோந்துக் கொண்டிருந்தது.

சாம்பல் நிறம் போர்த்திய அன்றொரு நாள் மாலையில், கிழவி அழுதபடி கோயில் திண்டில் இருந்தாள். சற்று தொலைவில் நாற்பது வயது மதிக்கத்தக்க, தேரின் வடம் போல தங்க சங்கிலி கழுத்தில் மின்னும் நெடுநெடு உயரம் கொண்ட மனிதன் தேநீர் கடைக்காரரிடம் பேசிக்கொண்டிருந்தான். கடையிலும் கூட்டம் அதிகம் இருந்தது. அவர்கள் பேசியது கொஞ்சம் பேருக்கு கேட்கத்தான் செய்தது. “அண்ணே, நீங்களே சொல்லுங்க. வீடுனா சண்டை வரும். அஞ்சு அண்ணன் தம்பி ஒரே வீடுனே. அப்போ அஞ்சு மருமவ. ஒருத்திக்கு ஒரு குணம். ஒருத்தி கிழக்க போனா, மத்தொருத்தி மேக்கா போவா. இவிய கட்டி வச்ச பிள்ளைகளு, நாங்களா கூட்டியாண்டு வந்தோமா. அய்யா எங்க இளம்பிராயத்துலயே செத்துட்டு பாத்துகிடுங்க. அப்பா வழில, அம்மா வழில விளையும் சொத்தும் உண்டு. அம்மாதான் பாடுபட்டு வளத்துச்சு, இல்லைனு சொல்லல. இப்போ காலம் மாறிட்டு. நாங்க பொஞ்சாதி சொல்லதையும் கேக்கணும்ல. சின்ன சண்டை வந்தாலும் பொசுக்குன்னு கோவிச்சிட்டு ஊருக்கு போவா. இப்ப பெருங்குடில சொந்த கட அண்ணாச்சி. ஊருக்கு இப்போ போக்கிடம் இல்ல. நாங்க கைல அதுக்கு அதனாலயே ரூவா கொடுக்கது கிடையாது. பாருங்க இப்போ வீட்ட விட்டு வந்து மாசம் ஆராச்சு, இங்கனயே கிட. நீங்க இருக்க கணக்காக்கும். உங்களையும் என்ன சொல்ல. பேசி அனுப்பி வையுங்க என்ன. நா சொல்லுதேன், அது கேக்க மாட்டேங்கே. ஊருல விளை என்ன, நிலம் என்ன. இது கொழுப்புலா. ஊரு பாக்கு, அதாக்கும் சும்மா வந்துட்டு போறேன். அடுத்த வாட்டி பிடிச்சு இழுத்துட்டு போயிருவேன். நீங்க சொல்லுங்க. என்கூட அடுத்தவாட்டி வரணும். நா போட்டுமா அண்ணாச்சி”, “அண்ணே, இவ்ளோ தூரம் வந்துட்டு டீ குடிக்காம போனா எப்படி. நில்லுனே”, “வேணாம் அண்ணாச்சி. அடுத்தவாட்டி பாப்போம். இவள பாத்தா மண்டை கடிக்கு கேட்டியளா. சரி நான் வாரேன்” பஜாஜ் எம்எய்டியில் வந்தவர் கிளம்ப. அங்கே இன்னும் நின்றவர்களை சுற்றிப் பார்த்து “இவனாக்கும் மூத்தவன். கூட இருந்தவள விரட்டிட்டு, இப்போ நல்லவன் நாடகம் போடுகான். இழவுல போறவன். ஊருல கிடக்க விளை இவ பேருல இருக்கு. சங்கதி இப்போதான் அறிஞ்சி இருப்பானுவ. தடி மாடு மாறி இருக்கான். இவ வந்து ஆறு மாசம் ஆச்சு, ரெண்டு வாரத்துக்கு முன்னாடிதான் பேதில போறவனுக்கு கண்ணு தெரியு போல. ஊருல போய் பட்டா வில்லங்கம்லா பாத்து இருப்பானுவ. செத்த பயக்க. என்ன சென்மமோ” கடைக்காரர் பேசிக்கொண்டே இருக்க, அவரின் மனைவி “ஏங்க, வியாபார நேரம்” என்றாள். அவர் அமைதியானர். கிழவி செவலையின் கழுத்தை வருடியப்படி குத்த வைத்து சிலைப் போல அமர்ந்திருந்தாள், கண்ணீர் இல்லை, முகத்தில் சலனமும் இல்லை. எல்லாமுமே அறிந்தவள் போல அமைதியாய் இருந்தாள். கருப்பன் அருகில் இல்லை, ராத்திரி தான் வரும் போல.

ராத்திரி வேலை முடித்து தேநீர் கடையின் அருகே காரை நிறுத்தி, அங்கே சென்றான். கடைக்காரர் மாத்திரம் வெளியே இருந்த பாய்லரை கழுவிக்கொண்டு இருந்தார். கிழவி கோயிலின் திண்டில் பொட்டலத்தில் இருந்த தோசையை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். பக்கத்திலே செவலையும், கருப்பனும் கொஞ்சியப் படி, ஒன்றை ஒன்றை விளையாட்டாய் கடித்தப் படி,  சுற்றியப் படி ஓடியது. கடையில் சிகரெட் வாங்கி பற்ற வைத்தப்படியே “பாட்டி வந்தவர் கூட போயிடாலாம்லா. தனியா இருக்காங்க. நா கூட என்னவோன்னு நினச்சேன்” என்றான். கடைக்காரர் “சார், நல்ல சொணையுள்ள பொம்பள. கருப்பட்டி காச்சியாக்கும் அஞ்சு பிள்ளைகளை வளத்துருக்கு. சுடு சொல்லு கேட்டா என்ன செய்யும் சொல்லுங்க. பொறுத்து போயிருக்கும். எப்போ என்னாச்சோ. இங்க வந்துட்டு, ஒத்தப் பனையாக்கும் அவ” சொல்லிவிட்டு கழுவிய பாய்லரை கவிழ்த்து வைத்தார். கொதிக்கும் தேயிலையும், வெந்நீரும் பட்டு புறங்கையில் வெள்ளை திட்டு திட்டாய் தெரிந்தது. “நைட் எங்க தங்குவாங்க. ரெஸ்ட் ரூம்லாம்” பாவமாய் கேட்டான். “கடைல தங்க விட்டுருவேன். எங்க அம்மா நா சின்னப் புள்ளையா இருக்கும் போதே செத்துட்டு. இருந்தா இப்போ இவிய வயசு தான் இருக்கும். காலைல கட தொறக்க முன்ன குளிச்சு முடிச்சு வெளிய வந்திரும். உள்ள பாத்ரூம் இருக்குலா. பாத்திங்களா சார், அஞ்சு ஆம்பள பிள்ள. மனசுல என்னென்ன கனம் கிடக்கோ. கடவுளுக்கு தான் தெரியும். எப்போ யார் யார் சங்கடம் தீரும்முன்னு” , பேசிக்கொண்டே அடுத்து பால் பாத்திரத்தை கழுவ ஆரம்பித்தார், பின் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு கடைக்குள் சென்றார். அவரின் இடதுகை முட்டி மடக்க முடியாதப் படியிருந்ததை அவன் இன்றுதான் கவனித்தான். சிகரெட் முடியவும் காரை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு கிளம்பினான்.

அடுத்த லார்ஜ், பியர் மேஜையில் வைக்கவும் உடனடியாக தீர்க்கப்பட்டது. சிக்கன் நிறைய மீதியிருந்தது. அவனின் அலைபேசி அழைத்தது, எதிரே இருந்தவன் அலைபேசியை நோண்டியப்படியே இருந்தான். “ஹலோ சித்து. டைம் என்னாச்சுப்பா. சீக்கிரம் வீட்டுக்கு வா. பாப்பா தூங்கியாச்சு. மறக்காம டெடி வேணும். காத்தால நீ பிராமிஸ் பண்ணினப்பா. எந்திச்சதும் கேப்பா. டைம் இப்போவே டென் தேர்ட்டி. ஷாப் லெவன் வரத்தான் இருக்கும். அப்படியே புட் ஸ்விக்கில போட்ருப்பா” மனைவியின் குரல் ஒலித்ததும், காலை மகளிடம் சத்தியம் செய்ததை நியாபகப்படுத்தினான். “ஹேய், நல்ல வேளை நியாபகப் படுத்தின. சரி நான் கிளம்பிட்டேன். கொஞ்சம் மழை வரது போல இருக்கும்மா. ஹீட்டர் ஆன் பண்ணி வைம்மா”, “சரி சித்து, லவ் யூ டா. லிமிட் தானே. பாத்து கார ஓட்டு”, “ஓகே, வரேன்” என்றான் சித்தார்த். “டேய் ரொமான்ஸ் போதும். ரொம்ப கிளாரா இருக்கு. என் பைக் இங்கேயே இருக்கட்டும். காலைல வந்து எடுத்துக்குறேன். நீ என்ன வீட்டுல ட்ராப் பண்ணுப்பா, போற வழிதானே” என்றான் பார்கவ். குடித்ததற்கு, சாப்பிட்டதற்கு ஆன செலவை இருவரும் அங்கேயே பிரித்து அளித்தனர். சித்து கண்ணாடியின் வழி வெளியே பார்த்தான். கிழவி அங்கில்லை. கண்ணாடியில் விழும் மழைத்துளியில் சாலையோர விளக்கின் ஒளி சிதறியப்படி தெரிந்தது. “சித்து சீக்கிரம் கிளம்புவோம். டேய் இருவது நிமிசத்துல வேளச்சேரி போணும்டா. ரோடு பிரீயா இருக்கு” என்றான் பார்கவ்.

சாலையின் வண்டியின் எண்ணிக்கை குறையத் தொடங்கியதால், எப்போதாவது செல்லும் வண்டியின் வேகம் வழக்கத்திற்கு மாறாக இருந்தது. கிழவி செவலையுடனும், கருப்பனுடனும் மழை தூர ஆரம்பித்த நேரமே பேருந்து நிறுத்தத்தில் இருந்த நிழற்கூடையில் ஒதுங்கி விட்டாள். செவலையும் கருப்பனும் , ஒருவரை ஒருவர் மழையில் தள்ளிவிட்டு, வாகனம் இல்லாத சாலையில் ஓடியப்படி விளையாடிக்கொண்டு இருந்தனர். கிழவியின் மனதில், கரும்பாறை போன்ற உடலில், தொடை வரை ஏற்றிய லுங்கியும், மார்பு வியர்க்க பனையிரங்கிய சுயம்புவும், அருகே சிவந்த உடல்காரி தங்கக்கனியும் நின்றுக் கொண்டிருந்தார்கள். சுயம்பு வலுவான அந்த கையால் கனியின் இடுப்பை வளைத்து, அவன் முன்னே இழுத்து, அவளின் மூக்கில் முத்தமிட்டார், அவனின் பலமான மூச்சு அவள் கழுத்தில் பட முகம் சிவக்க அவன் தோளில் சாய்ந்தாள், பனையேரியின் வியர்வை மனம் இப்போதும் கிழவியின் நாசியை துளைத்தது.

சாலையில் வேகமாய் வந்த காரின் முன்னே, செவலை விளையாட்டாய் துரத்த கருப்பன் விழப்போனான். முன்கூட்டியே இது நடந்தாலும், காரின் வேகம் அதிகமாய் இருந்ததாலும் கார் கட்டுப்படாமல் மோத, சில வினாடி கார் சாலையின் மேலே அரை அடிக்கு பறந்தது. அதன் அடியில் கருப்பனும் மாட்டி, காரின் அடிமாட்டில் அதன் உடலோடு கரும்சாலையின் சல்லியும் கீழும் உரச நெருப்பு பொறி பறந்தது. சட்டென்று கார் கீழிறங்கி வேகமாய் சென்றது. கருப்பனின் தலை அதே வேகத்தில் சப்பென்ற ஒலி மாத்திரமே அங்கே சுற்றிலும் ஒலிக்க சாலையில் பட்டு, ஒருமுறை பந்தைப் போல துள்ளி பின் தரையோடு சேர்ந்தது. கிழவி அலறியப்படி அங்கே ஓடி வர, செவலை அழும் குரலில் ஊளையிட்டது. அதை கேட்ட கருப்பன் பின்னங்கால்கள் சாலையோடு நசுக்கப்பட்டதால், முன்னங்காலை ஊன்றி எழும்பி செவலையை பார்த்து பெரும்வலியில் கத்தியது.  செவலை அருகே செல்லும் போது, அப்படியே உடல் சாய கருப்பன் விழுந்தது. செவலை அங்கேயே அழுதப் படி நின்றது, நாயின் அழுகை அதன் கதறலில் தூரமாய் நின்றோரும் உணரும்படி இருந்தது. இரத்தம் சாலையில் வழிந்தோடியது. கிழவி சாலையின் ஓரமாய் அமர்ந்துவிட்டாள், செவலையும் உடல் அருகே சென்று அழுதப் படி வந்து வந்து சென்றது. அதற்குள் இரண்டு வேகமாய் சென்ற வண்டிகள் கருப்பனை நசுக்கிவிட்டன. 

வேகமாய் சென்ற காரில் “டேய் சித்து. லூசு  பாத்துடா. செத்துருப்போம், நல்ல வேளை, நாயோடு போச்சு…”, பார்கவின் குரல் காதில் நுழைந்து. காரின் வேகம் தன்னிச்சையாய் குறைக்கப்பட்டு நிதானமாய் சென்றது. சித்தார்த்தின் முகம் வியர்வையில் நனைய, நெஞ்சு படபடக்க கிழவியின் முகம் மட்டுமே அவனுள் தெரிந்தது, அவனை சுற்றிலும் நாய்களின் குரைக்கும் ஒலி மாத்திரமே கேட்டது, நிற்காமல் சென்றது வண்டி.

செவலை அங்கே போய் போய் வந்தபடி கிழவியின் அருகிலே நின்றது. கிழவி அசைவின்றி இருந்தாள், பனைவோலை உரசும் சத்தத்தில் பின்னே திரும்பி ஒத்தப் பனையை பார்த்தாள். இருள் மறைய உச்சி சூரியன் காட்டாமாய் கொதிக்கும் முள்ளுக் காட்டில், சுயம்பு நாடார் முன்னே கருப்பன் ஓட, அவளை நோக்கி வந்துக் கொண்டிருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.