எஞ்சும் சூடு

கமலதேவி

தலைக்கு மேல் வெயில் காய்ந்து கொண்டிருக்க நெல்லம்பயிர்களின் ஊடாக கால்களை ஊன்றி, தண்ணீரில் நின்று குனிந்து களைகளைப் பறித்து என் வரியில் வீசிக்கொண்டிருந்தேன். சேலைக்கு மேல் அணிந்திருந்த முழுக்கைசட்டை கைப்பித்தானில்லாமல் மடித்து விடவிட அவிழ்ந்து கொண்டிருந்தது. பக்கத்து வீட்டு ஆனந்தன் அண்ணனுடையது. தயங்கித்தயங்கி கேட்டு வாங்கியது. 

வெயில் ஏறஏறத் தண்ணீரின் ஆவி அடித்து எழுந்தது. இந்த மலையடிவாரத்தில் வயல்களில் வேலைசெய்து வருஷங்களாகிறது . தர்மன் வயிற்றில் இருக்கும்போது ஒரு வருஷம் போல ஊருக்கு வந்து இருக்கப்பட்ட நாட்கள் அவை. அப்பா அம்மாவிடம் உலையறையின் கடைசித் தங்கம் இருந்த இடத்தைச் சைகையில் காட்டி எடுத்து, தருமனுக்கு முதல் தங்கமாக கொடுத்து அம்மாவுடன் திருப்பூருக்கு அனுப்பினார். திருப்பூரில் இல்லாத ஒருவித காங்கை இங்கு வந்தால் பேய்  ஏறுவதைப்போல மனதில் ஏறிக்கொள்கிறது. பொழுது உச்சிக்கு வந்ததும் வேலைக்காட்டிலிருந்து வரப்பேறினோம்.

“கவிதாக்கா…இன்னிக்கி நான் பருப்புத்தொவையல் அரைக்கிறேன்…நீ சோறாக்கி ரசம் வச்சிரு. கூத்துல இன்னிக்கு அருக்காணிக்கு வளைகாப்பு. நடுவலூராங்க வூட்ல கூத்துக்காவ புளிசோறு கிண்ட வரச்சொன்னாங்க.” என்றபடி சாந்தி அக்கா ஓடையில் இறங்கினாள்.

“பிறவு எதுக்குக்கா வூட்ல சோறாக்கறீங்க. இருக்கறதோட விட வேண்டியதுதானே…” என்று நான் ஓடைப் புங்கையின் அடியில் நின்று கைகால்களைக் கழுவினேன். மலையிலிருந்து சரிந்து, நிழலில் தவழும் தண்ணீரின் சில்லிப்பில் உடல் சிலிர்த்துக்கொண்டது. பூவூதிர்ந்து இலைகளுடன் நீரில் சுற்றி வருவதைக் காலால் தள்ளியபடி சீலையை நன்றாக இறுக்கிக் கொண்டிருந்த கவிதா அக்கா, “எங்க ரெண்டு வூட்டு பயலுங்களும் ராங்கனுங்க. வூட்ல சோறு இல்லாதப்பதான் வம்பிழுப்பானுங்க. அவசரத்துக்கு்ச சோத்து வேலைய மாத்திக்குவோம்…இவ இல்லைன்னா சோத்து வேலையிலயே கெடக்கனும்…”என்றாள்.

“லஜபதிராமரு பெரியாளு வூட்ல எலும்பிச்சம்பழ சோறும், கத்திரிக்கா கூட்டுமாம்…என்னிட்ட காலையிலயே அந்த அத்தை வர சொன்னுச்சு. அவங்க வயல்லருந்து ரெண்டுகூடை காய் இப்பதான் எடுத்துட்டு போறாங்க…பாக்கல?” என்ற சாந்திஅக்கா கரையேறினாள்.

“ஆமா…அவரு மவன் செந்திலு கூடைய வண்டியில கட்டிட்டு போனாப்ல…கூட்டு செய்யத் தெரியுமாடீ சாந்தீ…”

“குழம்பு வச்சுதான் பழக்கம். கொண்டைக்கடலை ஊற வச்சிருக்காங்க…நாம காய்கசவு அரியறது. நம்மள மட்டும் நம்பியா இருப்பாங்க…கூடவே இருந்து இன்னிக்கி கத்திரிக்கா கூட்டு வைக்கறத படிச்சுட்டா போச்சு…”

இரண்டு கை ஓடைத்தண்ணீரை அள்ளிக்குடித்தேன். திருப்பூர் தண்ணிக்கு இந்த ருசி எட்டாது.  வயல்வேலை நிறைஞ்ச ஊர்.  தொழில்காரங்க வாழ்க்கைதான் சிதறிப்போகிறது. விவசாயம், மாடு ஆடு, விவசாயக்கூலிகள் மனம் நிறைஞ்சு வாழும் ஊரில் கூத்துக்கென்ன குறை. முப்பது நாட்களுக்கு மேலாக நடந்து கொண்டிருக்கிறது.

“யக்கா…நம்ம ரண்டுபேரும் கூத்துக்காரவுங்களுக்கு ஒரு சிப்பம் அரிசி குடுக்கலாமா?” 

“இன்னிக்கெல்லாம் வயவஞ்சிக்காரவுங்க சிப்பம் சிப்பமா அரிசியை கொண்டு வருவாங்க. நம்மது நிக்காது. கூத்துல விசேசம் இல்லாத நாளாப் பாத்துக் குடுப்பம்…அப்பதான் பொன்னரு கண்ணுக்குத் தெரியுவோம்.”

“என்ன சாந்தி…பொன்னர் புராணத்த இன்னிக்கு மதியானமே ஆரமிச்சுட்ட…”

“பின்ன…என்ன ஒசரம், தாட்டியம், ஆட்டம்…நம்ம குடுக்கறது அவுங்க கண்ணுக்குத் தெரியனுமில்ல…”

“நேத்து ஒம்மவன் கேக்கும் பன்னும் வாங்கிட்டு வந்து நல்லத்தாங்காவ தேடிப்போயி குடுத்தானே…”

“எம்மவன் மட்டுமா…சின்னபயலுக்க, பெரியாளுங்க,பொம்பளைக எல்லாருந்தான் தீனி வாங்கித் தராங்க…பகல் பூராவும் சும்மா இருக்குங்க. வாய்க்கு எதாச்சும் போடனுன்னு தோணுமில்ல…”

இருவரும் முகம் பார்க்காமல், மேற்கே நின்ற கொல்லிமலையில் கண்ணோட்டிக் கொண்டு முடியை உதறிப் பின்னினார்கள்.

“உம்மவனுக்கு எத்தனநாளு சோறு போட்டுருப்பேன்…எனக்கு ஒரு கேக்கு உண்டா…பன்னு உண்டா…”

“விடுடீ…நா வாங்கித்தாரேன்…நமக்கு ஆசையின்னா நாம வாங்கிக்க வேண்டியதுதான்…அவனுக்கு ஒரு கல்யாணத்தப் பண்ணிடனும். தலைய முழுகிட்டு சிவனேன்னு இருக்கலாம். சனியன்களை இழுத்துக்கட்டி ஓட்ட முடியல. சோறு நல்லா இல்ல. கொழம்பு நல்லால்லன்னு உயிர எடுக்கறான். ஒருத்தி வந்துட்டா வூட்ல ஆக்கறத தின்னுடான்னு ஒதச்சி சோறு போடுவால்ல.”

நான் மனசு லேசாகி அவர்களிடம் பொதுவாக, “யக்கா… கூத்துல நேத்து நாள்வசூலு மூவாயிரமாமே…”என்றேன்.

“ நீ வேற பொன்னாத்தா…அருக்காணி கல்யாணத்தன்னிக்கு மொய் பத்தாயிரத்தை தாண்டிருச்சு தெரியுமா? கூத்துக்காரங்க நம்ம ஊரு நல்லாருக்கனுன்னு வாயார எத்தனை கொண்டாட்டமாக பாடினாங்க. அந்த பொன்னரு மாமா மங்குன குரல்ல என்ன சொன்னாரு தெரியுமா? இம்புட்டு காசு…இப்புட்டு அரிசிக்காவ பாடல. இம்புட்டு கும்பல் தெனமும் வாரியளே.  அதுக்காவ உங்க கால்ல விழறம்யா…இத்தனை கும்பல எங்க அப்பம் காலத்துல பாத்தம்யான்னு கலங்கிச் சொன்னாரு,”

“பொன்னரு ஒனக்கு மாமான்னா? சங்கர் என்ன பண்ணுனாப்பிடி…”

“சங்கரெல்லாம் மாமா இல்லக்கா. பொன்னரு மட்டுந்தான்…”

“பொன்னரு மாமா கண்கலங்கவும் கூட்டத்தில் ஒருபய, ‘விடு பொன்னரே…ராசா கலங்கலாமா? எடுவாளை…வீசு தலையை…’ன்னு சொல்ல கூட்டம் சிரிச்ச சிரிப்பென்ன. அத்தன மனுசரும் சேந்து சிரிக்கறத பாக்கனுமே. அதுக்காவவே அவங்களுக்கு என்னமாச்சும் செய்யனுக்கா.”

இருவரும் பேசியபடி ஓடையிலிருந்து மேலேறி வரப்பில் அமர்ந்தார்கள்.

பிறந்த ஊர் என்று இங்கு வரும்போதெல்லாம் மனசு எரியும். ஆனாலும் என்னமோ ஈரமா பதமா இருக்கு இங்க. ஓடைக்கரையில் வைத்து கூலிக்காசு இருநூற்றைம்பதை கைகளில் தரும் போது சீனியம்மா, “பொன்னாத்தா…இந்தத் தோடு உங்கப்பாரு செஞ்சுக்குடுத்ததுதான்…எங்கஅப்பன்வூட்ல கல்யாணத்துக்கு போட்டது. இன்னும் காதுல கெடக்கு,” என்றாள். நிமிர்ந்து பார்த்தேன். எட்டுகல் கெட்டித்தோடு. எண்ணெய் ஊறி ஒளிமங்கியிருந்தன சிவப்புக்கற்கள்.

சுற்றி பச்சை நிறை கட்டியிருந்தது. வரப்பிலிருந்து இறங்கி பாதையில் நடந்தேன். காத்து கூடவே வந்தது. இங்கதான் காத்து வந்து தொடுறது இப்படி உணர்க்கையாக தெரிகிறது. திருப்பூரில் இப்படி கூடவே வெயில் இருக்கிறது தெரியும். ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு குணம்.

தார் ஊற்றிப் பாதை நடக்கச் சமமாக இருக்கிறது. அன்றெல்லாம் மேடும் பள்ளமுமாக செம்மண் பாதை. மழைநாட்களில் பழகும்வரை பிடிமானம் கிடைக்காது. முதல்நாள் தான் உடன்வராமல் பிள்ளைகளுடன் வேலைக்கு அனுப்பும் போது அம்மா தெருவில் நின்று காய்ச்சல் குரலுடன் சொன்னாள்.

“பாதையப்பாத்து நடக்கனும். வேலக்காட்டுல பேசறத காதுல வாங்கிக்கப்பிடாது. நீ எதாச்சு பேசிறப்புடாது. நம்ம கஷ்டத்துக்கு வேலைக்குப் போறம்…அண்ணந்தம்பியா பழகற வரைக்கும் தான் இது நம்ம ஊரு நம்ம ஆளுக…”

“எனக்குந்தெரியும்மா…”என்று சொன்னாலும் ஒவ்வொருநாளும் வேலைக்கும் போகும் போதும், திரும்ப வரும்போதும் ஒருபாட்டாய் பாடுவாள். எனக்குச் சொல்கிறாளா ஊருக்குச் சொல்கிறாளா என்று குழப்பமாக இருக்கும்.

பொன் ஆசாரி பெற்ற பிள்ளைதான் நான். எனக்கு அன்றைக்குத் தோடுகளைத் தவிர வேறில்லை. அப்பா மேட்டுப்பாளையத்திலிருந்து தங்கம் வாங்கி வருவார். அங்குதான் அப்பாவின் கூட்டாளிகள் நிறைய இருந்தார்கள். வீட்டிற்கு வெளியே தாழ்வாரத்தின் பக்கவாட்டில் முருங்கைமரத்தை ஒட்டிய சிறிய ஓரறை வீடுதான் நகை செய்யும் உலையறை.

எங்கெங்கோ பெரியபெரிய நகைக்கடைகள் வந்ததால் அப்பாவால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அப்பா எம்மாத்திரம் மேட்டுப் பாளைய ஆசாரிகளே ஆடிப்போய்விட்டார்கள். ஒவ்வொருவராக ஆவணியாவிட்டம் விரதம் கும்பிட்டு உலையை எடுத்து ஆற்றில் விட்டுவிட்டு பிழைப்புத்தேடி டவுன்பக்கம் சென்றார்கள்.

அப்படி திருப்பூருக்கு செல்லவிருந்த மேட்டுப்பாளையம் சுக்கிரன்மாமா அப்பாவிடம் சொல்லிவிட்டு செல்ல வந்தார். அவரின் அட்டகாசமான சிரிப்பு மாறி துவட்டமான புன்னகை மட்டும் எஞ்சிய முகத்துடன் உலைவீட்டின் வாசல்படியில் அமர்ந்தார்.

“கண்ணுல பாக்கற வரைக்கும் போட்டு வதச்சு எடுக்குதுடா…உலையக் கழட்டி ஆத்துல கரைச்சுவுட்டுட்டு முணுதரம் முழுக்கு போட்டுட்டு திரும்பிப் பாக்காம எங்கூடவே திருப்பூருக்கு வந்துருடா…நெதமும் வேல இருக்காம். மரியாதையா சோறு தின்னுட்டு காடு போய்ச்சேரலாம். சொந்தஊர்ல எறங்கி நிக்கமுடியாது ஆறுமுகம்…”

“இந்தப்பிள்ளை வேலைய முடிச்சுட்டேன்னா வந்துருவண்டா…எம்பிள்ளைய உங்கவூட்டு மருமவளா கூட்டிக்கிறியா…என்னால எதுவும் செய்ய முடியாதுன்னு உனக்கே தெரியும்,” என்று அப்பா கையெடுத்து கும்பிட்டார்.

சுக்கிரன்மாமா  அப்பாவை இறுகக் கட்டிப்பிடித்துக்கொண்டார். அம்மா கூப்பிய கைகளை இறக்காமலேயே தாழ்வாரத்தில் நின்று கொண்டிருந்தாள்.

அவள்தான் பெரியகாரியத்திற்காக தர்மனின் பைக்கில் சென்று வேகத்தடையில் நழுவி விழுந்து, கட்டிலோடு கிடக்கிறாள். முகத்தில் இருந்த காயங்கள் ஆறி மாதங்களாகின்றன. உடல் நிலைக்கவில்லை. ஒரு மாதத்திற்கு மேல் இருந்தும் ஒன்றும் நடக்காமல் நாமக்கல் அரசு மருத்துவ மனையிலிருந்து அனுப்பிவிட்டார்கள். கழுத்துநரம்பு அடி.  அதுவாகவே சரியாகலாம் என்று சொல்லி அனுப்பினார்கள்.

எனக்கு பின்னால் நடந்து வந்தவர்கள் பேச்சுக்கொடுத்தார்கள்.

“ஏப்பிள்ள உங்க அம்மாவுக்கு ஒடம்பு தேவலையா?”

“தலையாட்டுது…கேக்கறது புரியுது…ஆனா ஒடம்பு நிக்கல. ஒக்காரவச்சா சரிஞ்சு விழுது…”

“ஆம்பளைப் புள்ள இல்லாத வூடு…பொட்டப்புள்ளைக தான் பாத்துக்கனும். உம் புள்ள புருசனுக்கு சோறு…”

“எங்க வூட்ல சோறு வச்சிருவாங்க. அந்த ஊர்ல கொழம்பு, பொரியல் தனித்தனியா இருவதுரூவா குடுத்தா வாங்கலாம். இப்ப ஆறுமாசமாச்சா…நான் போய் வர்றப்ப ஆக்கறத பாத்துக்கிறாங்க. அப்படி இப்படி செஞ்சுக்குறாங்க…”

“எங்க வூட்லகூட இப்பெல்லாம் சோறாக்குது. வயசு காலத்துல காலர தூக்கிக்கிட்டு திரிஞ்சது. மூத்தப்பய பக்கத்துலயே தனிக்குடித்தனம் பண்றத பாத்து இதுக்கும் கொஞ்சம் மனசு மலந்திருக்கு…” என்ற சீனியம்மாவைப் பார்த்து புன்னகைத்தார்கள்.

“மனசப் போட்டு ஒலட்டாத புள்ள…சாய்ந்தரமா கூத்து பாக்க வா. நம்ம ஊர்ல பத்துவருஷத்துக்கு முந்தி பொன்னர் சங்கர் கூத்து போட்டது. இன்னிக்கு அருக்காணிக்கு கட்டிச் சோறு கட்டிப்போடறாங்க தெரியுமில்ல…”

“சரிக்கா…அன்னிக்கு ஒருநா வந்தேன்.”

“நாமளா பாத்துதான் சிரிச்சுக்கிடனும்…உங்காத்தாளுக்கு எதாச்சுன்னா இந்த ஊருல உனக்குன்னு சொந்தமில்லன்னு பதறாத. உங்கம்மாவுக்கு எதுன்னாலும் கூடமாட நாங்க இருக்கோம். தனியா விட்ரமாட்டோம்…காரியம் முடியறவர வந்து வேல செஞ்சி தர்றோம் பிள்ள, ” என்று சாந்தி அக்கா கையைப்பிடித்துக் கொண்டாள்.

வீட்டில் அம்மா வெறித்து பார்த்தபடி படுத்திருந்தாள். தூக்கித் தலையணையில் சாத்தி வைத்து படுக்கையெல்லாம் அலசி வெயிலில் போட்டுவிட்டு  சோறுஊட்டிப் படுக்க வைத்தேன். சோற்றுத் தட்டுடன் அம்மா முன்னால் அமர்ந்தேன்.

“ம்மா…பொன்னர் சங்கர் கூத்துக்கு போயிட்டு வரேன்…நாளக்கி அக்கா வறேன்னு போன் பண்ணுனா…”

அம்மா பார்த்துக் கொண்டேயிருந்தாள். உடல்வலி தீர படுத்து எழுந்தேன். குளித்து விட்டு அம்மாவின் பச்சை சேலையை எடுத்துக் கட்டிக்கொண்டு கூத்து நடக்கும் மாதாயி கோயில் முற்றத்திற்கு நடந்தேன்.

ஜனங்கள் வீட்டுவாசலில் கயிற்றுக் கட்டிலில் நான்குபுறங்களிலும் சீவிச் செதுக்கிய புங்கை குச்சிகளை செறுகி கொசுவலை கட்டிப் படுத்திருந்தார்கள்.

“எங்க அப்பன் பாட்டனெல்லாம் இத்தன போட்டா எடுக்க கூத்தாடுனதில்ல…அரும்பு மீச வச்ச அழகனும்…அவனப் பாக்கற அழகிகளும் எங்களை இத்தனைப்போட்டோ எடுக்க ஆடுற நாங்களும் நல்ல கதிக்குப் பெறந்திருக்கமய்யா…”என்ற சங்கர் மஞ்சள்ஆடை சரசரக்க கூத்துப் பந்தலைவிட்டு முன்னால் வந்து ஆடினார். நடுநடுவே அலைபேசியை உயர்த்திப்பிடித்திருந்த கல்லூரி பிள்ளைகள் குனிந்து சிரித்தன.

பொன்னர் சங்கர் சிலைகளுக்கு முன்பாக வளைகாப்பு சீர்தட்டுகள் வைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. வளையல் தட்டுகள், சாக்லெட்தட்டுகள், கொய்யாப்பழம், தேங்காய், மாம்பழம், நெல்லிக்காய், கம்மஉருண்டை, இளநீர், நுனி சீவிய நுங்குக் காய்கள் என அவரவர்கள் கொண்டுவந்திருந்தார்கள். போகினிகளில் ஐந்துவகை சோறுகள். புளி, எலுமிச்ச, தயிர், தேங்காய் மற்றும் சீரகசம்பா அரிசியில் வெல்லப்பொங்கல். மணம் பசியை கிளர்த்தியது. 

கோவில் முற்றத்தில் பெண்களும் குழந்தைகளும் அமர்ந்திருந்தார்கள். எஞ்சிய கூட்டம் கல்சாலையில் சணல்சாக்குகளை விரித்தும், முக்காலிகள் பலகைக் கட்டைகள் இட்டும், பாய்கள் விரித்தும், வெறும் தரையிலுமாக அமர்ந்திருந்திருந்தார்கள். 

தாளம் தட்டிக்கொண்டிருந்த பூசாரிப் பாட்டா, “எதுக்கு கலங்குறீரு. அதான் எங்களக் கண்டுட்டீருல்ல ராசா. கஷ்ட்டன்னு வந்தா எங்க ஊருக்கு வா…சும்மா வேணாம். ரெண்டுநாளு கூத்து ஆடு. எங்கள நல்லாருன்னு நாலு நல்ல சொல்லு சொல்லி உன் காசை எடுத்துட்டு போ. காசு இல்லைன்னாலும் அரிசி குறையாது பாத்துக்க… ”என்றார். 

“மரக்கா நிறைய,

பக்கா வளர,

படி படியா லாபம் ஏறும் மண்ணு…” என்று சங்கர் பாட கூட்டம் அமைதியானது. ஒலிபெருக்கியில் குரல் தெளிவாகக் கேட்டது. தாளங்கள் ஒலிக்க ராகமாய் பாடியும், பேசியும் கூத்தை நடத்தினார்கள்.

ஒரு கட்டத்தில் கூத்துக்காரர்கள் சிரமப்பரிகாரத்திற்காக அங்கங்கே அமர்ந்தார்கள். முதலில் குழந்தைகளுக்கு சர்க்கரைப்பொங்கல் உணவு விநியோகம் நடந்துகொண்டிருந்தது. அப்படியே வயசுப்பிள்ளைகளும் குழந்தைகள் கணக்கில் சேர்ந்துவிடும்.

ஒலிவாங்கியை கைகளில் வைத்துக்கொண்டு இளஞ்சிவப்பு ஆடை மினுமினுக்க பொன்னர் தன் முன்னால் அமர்ந்திருந்த சாந்தியிடம், “ வயவேலைக்கு நாள்கூலி என்னத்தா…”என்றார்.

“எறநூத்தி அம்பது மாமா…”

கூட்டம் சிரித்தது.

“வேல நேரம் எப்பத்தா…”

“எட்டுமணிலந்து ஒருமணி…”

“நிக்காம வேலசெய்வியா…”

“சோத்துக்கு, டீக்குடிக்கன்னு நிக்காம இருக்க முடியுமா? நான் என்ன உன்னப்போல டான்சா ஆடுறேன்…”

“அப்பாடி..”என்று வாயில் கைவைத்தார்.

“நீ வந்து வெட்டவெயில்ல… தண்ணி ஆவி அடிக்க சேத்துல நில்லு பாப்பம். குளுகுளுன்னு சட்டை போட்டு நிழல்ல ஆடுற பாடுற… உம்பாட்டுக்கென்ன…நல்ல விதிக்கு வந்திருக்க…”

“நீ வந்து இங்க மணிக்கணக்கா நின்னு ஆடிப்பாரு. ஒரு வசனம் சொல்லித்தாரேன் சொல்லு பாப்பம்…”என்று சங்கருக்கு கைக்காட்டினார்.

சங்கர் இடையில் கைவைத்து சிரித்தபடி எழுந்து நின்றார். ஒலிவாங்கியில் வசனத்தை சொன்னார்.

“காடு மலை மேடெல்லாம்
நாங்க பறந்து போனோமே…
ஒரு குருவி பறக்காத கரடெல்லாம் அலஞ்சு திரிஞ்சமே…
ஏன் அலஞ்சு திரிஞ்சம்…”

சாந்தி எழுந்து நின்றதும் கைத்தட்டல் பறந்தது. அவளுக்கு காடு மலைக்குமேல் வசனம் வாயில் வரவில்லை.

“லே…சாந்தி…உம் மாமன் சொன்ன வசனத்த சொல்லிக் காட்டாம வூட்டுப்பக்கம் வந்திராத…” என்று சாந்திபுருசன் பின்னாலிருந்து குரல் கொடுத்தார். அவரின் சிரிப்பு சத்தம் வந்த திசையைப் பார்த்து சாந்தி முறைத்தாள்.

“வம்பை இழுத்து விடாதய்யா பொன்னரு…சிறுசான வசனமா சொல்லேய்யா…”என்று பெரியாளுக பக்கமிருந்து குரல் கேட்டது. பொன்னர் விடுவதாயில்லை.

“என்ன…பேசிக்கிட்டுருக்கத்தா. பாடி ஆடு…”

சாந்தி ஓடிப்போய் உட்கார்ந்து கொண்டாள். 

“அங்க ஒக்காந்து பேசுனில்ல…இங்க வாத்தா…”

“நாளைக்கு உச்சிபொழுதுக்கு கருவாட்டுக்கொழம்பு வச்சு அப்பளம் பொறிச்சு, பொன்னி அரிசிச் சோறு போடறேன்…விட்ருய்யா மாமா…”

“அப்ப விட்ருவோம். பொண்ணு வூட்டுல மாமனுக்கு நாளைக்கு சோறு…”

என்று பாட தாளங்கள் ஒலித்தன.

“ஏபிள்ள சாந்தி… திரும்பி கொஞ்சம் பாரு…மாமா மாமான்னு முதவரிசையில ஒக்காந்து கிடக்கிறியே… கடைசியில உன்ன சின்னப்பிள்ளைன்ட்டாரு  மச்சான்…ராசான்னா ராசாதான்,” என்று சாந்தியின் கணவர் சொல்ல அவருடன் கூட்டாளிகளும் சிரிக்கும் ஓசை அலையென எழுந்து மறைந்தது.

வலது கைப்பிடிக்க பெரியண்ணரு,
இடது கைப்பிடிக்க சின்னண்ணரு,
மனசுப்பிடிச்சுக்க வேறென்ன வேணும்…
தலைக்கு மேல் எரியும் வெங்காடென்ன பண்ணும்
காலுக்கு கீழே நெருஞ்சியென்ன செய்யும்?
பெறந்தவனுங்க கை பிடித்து என் விதி கடப்பேன்…
மக்களே…கூடபெறந்த உறவுக்கும் உரிமைக்குமேல ஒன்னுண்டா சொல்லுங்க…”

என்று அருக்காணி பாடினாள். கத்தரிப்பூநிற கரை சேலையும், மாலையும், கைநிறைய வளையல்களுமாக முன்னால் வந்து நின்றாள். பொன்னரும் சங்கரும் இருப்பக்கமும் நின்றார்கள்.

பெண்கள் பக்கமிருந்த சிரிப்புகளும், கேலிகளும், கசகசப்புகளும் நின்று உறைந்திருந்திருந்தன. கூட்டத்தின் நடுவில் உட்கார்ந்திருந்த கவிதா உடலை முறுக்கிக்கொண்டு அம்பென எழுந்தாள். 

“எவண்டா…பொறந்தவன். நெதமும் நாரத்தண்ணிப்பக்கம் போறவனக் கண்ணெடுத்துப் பாக்கவும் பயமா இருக்கு. யாரிருக்கா பொறந்தவன்னு எனக்கு …”என்று அவளுடனே அவள் சண்டையிடுபவளாக அவள் உடல் முறுக்கி வலியில் திமிறியது. பொன்னர் தட்டிலிருந்த திருநீற்றை அவள் தலையில் தெளித்து நெற்றியில் அழுத்தினார். அவள் அழுதுகொண்டிருந்தாள். இருபெண்கள் அவளை பிடித்திருந்தார்கள்.

“நான் இருக்கேன்…அங்க வீரப்பூர்ல உங்களுக்காவதான் மொட்டவெயில்ல சிவந்த நெலத்துல நிக்கறேன்…”

“நீரு எனக்காவ இருப்பீரா…பெரியண்ணரே…”என்று அவள் குரல் கரைந்தது. அவர் அவள் நெற்றியிலிருந்து தலையை வலதுகையால் தடவினார்.

உள்ளிருக்கும் சக்திமாதாவுக்கு பூசைக்காட்டியப்பின் பொன்னர் சங்கருக்கு கைக்காட்டினார். பனைமரத்தின் நுனியை மட்டும் வெட்டிவிட்டு வேண்டுதல்தூண் நடப்பட்டிருந்தது. பணம் வைத்துக் கட்டப்பட்ட சிவப்புதுண்டுகளின் நுனிகள் காற்றில் அசைந்தன.

“இன்னிக்கு அருக்காணிக்கு வளைகாப்பு பாத்துக்கங்க. யாருக்கு புள்ளவரம் வேணுமோ வேண்டிக்கிட்டு உங்களுக்குன்னு இருக்கப்பட்ட காசை துண்டுல முடிஞ்சு கட்டலாம்…” என்று சங்கர் அழைத்தார்.

அதற்குள் கண்ணாடி வளையல்கள் சாமிக்கு படைக்கப்பட்டு பெண்களுக்கும், வேண்டுதல்காரர்களின் வீடுகளுக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டு கூத்துத் தொடங்கியது.

“இந்த நிறம் உனக்கு எடுக்கும் பிள்ள, அந்தகலர் வளையலை எனக்குத்தா,” என்று மாற்றிக்கொண்டிருந்தவர்களை பார்த்தபடி பந்தலின் கீழ் ஒலிவாங்கி முன்னால் நின்ற பொன்னர், “வளையல் அழகு பாத்தது போதும். எங்க அழகப்பாருங்க. ஆடையப்பாருங்க…நடையப்பாருங்க…எங்க தங்கைக்கு வளைகாப்பு…”என்று தொடங்கினார். சங்கர் வந்து இணைந்து கொண்டார். அருக்காணி வேடமிட்டவர் நாற்காலியில் பொன்னர்சங்கர் சிலைகளுக்கு கீழ் அமர்ந்தார்.

இடைஇடையில் வெட்டிய வாழையிலையில் சோற்றை வைத்து ஆட்களுக்கு கொடுத்துக்கொண்டிருந்தார்கள். யாரும் எழுந்து நிற்காமல் கொடுப்பதை வாங்கிக்கொண்டு கூத்தே கண்ணாக இருந்தார்கள். கல்யாணம் ஆனவர்களுக்கு ஒருநினைப்பு, ஆகாதவர்களுக்கு மறுநினைப்பு, இழந்தவர்களுக்கு வேறுநினைப்பு, பிள்ளையில்லாதவர்களுக்கு பலநினைப்பு என்று அந்த கூத்துச் சடங்கு அத்தனை பேரையும் தனக்குள் இழுத்துக்கொண்டது.

கடைசியாக சங்கர், “ஊரு பிள்ளைக்குட்டி நலமா இருக்கட்டும், ஊர் பெருகட்டும், ஆடு மாடு ஈத்துஎடுக்கட்டும்,கோழியா நிறையட்டும், வீட்டு சால் குறையாதிருக்கட்டும், நெல்லம் பயிரு பால்பிடிக்க, தென்னம்மரம் பாளைவிட, மரமெல்லாம் செடிகொடியெல்லாம் பூத்து செழிக்கட்டும் ஊர்,” என்று அடுக்கிக்கொண்டே சென்றார். அங்கங்கே சிலர் கைக்கூப்பி நின்றார்கள். ஒருசிலர் கண்கள் கலங்க ஊரை வாழ்த்தி முடிந்தது அன்றையகூத்து.

குனிந்து பார்க்கையில் நானும் அழுதுகொண்டிப்பதைக் கண்டு முந்தானையால் கண்களை துடைத்துக்கொண்டேன். ஆட்கள் மெதுமெதுவாக கூத்திலிருந்து விடுபட்டவர்களாக எழுந்தார்கள். பொன்னர், சங்கர், அருக்காணி என்று தங்கள் மனம் தொட்டவர்களிடம் திருநீறு பூசிக்கொண்டு சென்றார்கள்.

நான் மெதுவாக உயர்ந்துநின்ற வேண்டுபனையை சுற்றிக்கொண்டு பொன்னரிடம் சென்றேன். பெருவிரலால் திருநீறைப் பூசிவிட்டு தலையில் கைவைத்து, “பொட்டப்பிள்ளைக்கு கூடுதல் வைராக்கியம் வேணுத்தா,”என்றார். கண்களை துடைத்தபடி தள்ளி நின்றேன். என்னைப் பார்த்து ஒரு அப்பாயி ஆடிஆடி அருகில் வந்தது.

“ஆறுமுவம் பிள்ளையா…”

“ஆமா அப்பாயி…நீங்க…”

“வடக்காலத்தெருவு… இன்னிக்கி நம்ம வூட்லருந்துதான் பொங்கச்சோறு,”என்று திரும்பி அங்கு நின்ற பயலிடம், “தம்பி…ஒரு எலையில சோறு கொண்டா…” என்றாள்.

“அம்மா விழுந்துட்டாளா?”

“ஆமாப்பாயி…”

“யாருக்கு என்ன விதியோ…அதா அந்தப் பெரிய திண்ணையில ஒக்காந்துதான் உங்கப்பாரு தொழிலு தொடங்குனாங்க. அப்ப கல்யாணம் ஆவாத சின்னப்பையன் அவரு. எனக்கு ரெண்டாங்கல்யாணம் பாத்துக்க. மூத்தவரு தென்னமரத்துலருந்து விழுந்துட்டாரு. எனக்கு பதினஞ்சு பிராயந்தான்…அவுங்க பங்காளிக்கு கட்டி வச்சாங்க. உங்கப்பாரு எனக்கு தாலி செஞ்சி தொழில் தொடங்குனாங்க…தாலி நிலைக்கனுன்னு கொல்லிமல தாயம்மாட்ட வச்சி வேண்டி எடுத்துக்கிட்டு வந்தாங்கன்னு சொன்னாவ. கூடப்   பெறந்தாதானா…” என்று தாலியை எடுத்துக்காட்டியது.

“பாட்டா வரலையா?” என்றபடி தாலியைப்பார்த்தேன். இரண்டுபவுனிற்கு மேலான பழையகாலத்து கெட்டித்தாலி. கொம்புத்தாலியின் செதுக்கல்கள் அப்படியே இருந்தன.

“அவுகளுக்கு காலுவலித்தா…இம்புட்டு பொழுது ஒக்கார வைக்காது…”என்றபடி மார்பின் மீது தாலிமின்ன இலையில் இருந்த சோற்றை வாங்கி, “ஆத்தாளுக்கு குடுத்தா,” என்றது. நான் தலையாட்டினேன். கிழவி என்னிடம் பேச ஆசையாய் இருப்பதை அதன்முகம் காட்டியது.

“இந்தப்பாதையில நடந்து போறப்பை உங்கஅப்பாரு மூச்சுபிடிச்சு ஊதாந்தட்டைய ஊதற மூச்சுசத்தம் கேட்டுக்கிட்டே இருக்கும். அது உண்டாக்குன கங்குல ஒன்னுதான் இந்தநெஞ்சு மேலே மின்னுது…அவரு நெனப்பு அது. நான் இனி ஒருக்கா தாலி அறுத்தறப்பிடாதுன்னு அந்த மனசு நெனச்சது,” என்ற கிழவி பேச்சை நிறுத்திவிட்டு நின்றது. பின் என்கன்னத்தை வழித்து முத்தமிட்டது. 

சித்திரைக் கனலை அதுவரை ஊதிக்கொண்டிருந்த காற்று தண்மைக்கு மாறும் இரண்டாம் ஐாமம் எழுந்திருக்கும் பொழுதாகிவிட்டது. கூட்டம் கலைந்து அனைத்தும் ஆன பின் பொன்னர், சங்கர், அருக்காணியை நிற்கவைத்த சம்பூரணம் அக்கா ஆரத்தி எடுத்து பொட்டு வைத்து கண்திருஷ்டி கழித்தாள். ஆரத்தி நீரால் அவர்களுக்கு முன்னால் குறுக்காக நீண்ட படிரேகை வரைந்தாள். ரத்தத்தால் வரைந்ததைப்போல அடர்சிவப்பில் தெரிந்தது. அவர்கள் கை கூப்பியபடி அந்த கோட்டைத் தாண்டி தாங்கள் தங்கியிருந்த காரை வீட்டுப்பக்கமாக நடந்தார்கள். நான் திரும்பி வீட்டிற்கு நடந்தேன்.

அம்மா உறக்கத்திலிருந்தாள். இலைச் சோற்றை பழைய சாமான்கள் கிடந்த உலையறையின் வடகிழக்கு மூலையில் வைத்தேன். அடுப்புமேட்டிலிருக்கும் கதகதப்பு போல ஒருசூடு கால்களுக்குக் கீழே ஏறியதும் கால்களை உதறிக்கொண்டு தள்ளி நின்றேன். என் முகம் பூத்திருந்ததை, கண்களின் ஈரத்தை துடைக்கும்போது உணர்ந்தேன். இரு கன்னங்களில் இன்னும் மிக மெல்லிதான சூடு எஞ்சியிருந்தது.

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.