உடற் சக்கரத்தின் உறுப்பையும் காட்டி….

பானுமதி ந.

விநாயகர் அகவலில் ஒளவையார் சித்தம், உடலினுள் காற்றின் இயக்கம், போன்ற பலவற்றைச் சொல்கையில் ‘இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும், உடற் சக்கரத்தின் உறுப்பையும் காட்டி’ எனப் பாடுகிறார். பரு உடலைத் தாண்டி எலும்பும், சதையும், தோலும், நரம்பும் உள்ளே பொதியப்பட்ட உறுப்புகள் தத்துவ அறிஞர்களையும், அறிவியலாளர்களையும் ஒருங்கே ஈர்த்திருக்கின்றன. சித்தர்கள் ஐவகை உடற்கூறுகளைச் சொன்னவர்கள்- அன்னமயம், பிராண மயம், மனோ மயம், (விஞ்)ஞான மயம், ஆனந்த மயம் என கோசங்களை வகைப்படுத்தி அவற்றின் செயல்பாடுகள், பலங்கள், பலவீனங்கள் என்று பட்டியலிட்டுச் சொன்னார்கள்.

1762-ம் வருடம், டென்மார்க்கின் அரசனான 5-ஆம் ஃப்ரெட்ரிக்கிற்கு ஒரு பொட்டலம் வந்தது. அதில் மிகத் துல்லியமாக வார்த்தெடுக்கப்பட்ட மனித உள் உறுப்புகள்- பகுக்கப்பட்ட இதயம், சிறுநீரகம், குடல், காது, கண், சிறுநீர்ப்பை போன்ற சவ்வுப் பைகள், ஆண்குறி உள்ளிட்ட இனப் பெருக்க உறுப்புகள் போன்றவை இருந்தன. மனம் மகிழ்ந்த அரசன், இவற்றை வடிவமைத்த மிகச் சிறந்த உடற்கூறு இயலாளர், கலைஞர், மற்றும் ஆசிரியரான செல்வி மாரி மார்கரீட் பைரானுக்கு* ( Marie- Marguerite Biheron) தக்க வெகுமதி அளித்தார். இதற்கும் முன்பே அறிஞர்கள் சபையான  ‘அகெதெமி டெஸ் ஸியான்ஸில்’ (Academie des Sciences) இவர் தன் படைப்புகளைக் காட்சிப் படுத்தி 1759-ம் வருடம் உரையாற்றுகையில் ஜோர்னெல் டு ட்ரெவோ(Journal de Trévoux) அதை ‘உடற்கூறியல் அற்புதங்கள்’ என்று பாராட்டி எழுதியது. 10 ஆண்டுகளுக்குப் பின்னர் பாரிஸ் வந்த லின்னெயுஸ்சின் (Linnaeus) சீடர், வியெல்லே, ரூ டெ லா வியேய் எஸ்ட்ரபாடில் (rue de la Vieille Estrapade) இருந்த மேரியின் காட்சியகத்தை, அனைவரும் காண வேண்டிய ‘உடற் கூறு விந்தைகள்’ என்று சிலாகித்தார். 1771-ல் டெனீ டிடெரோ** (Dennis Diderot) தன் நண்பரான ஜான் வில்க்ஸ்சிற்கு (John Wilkes) எழுதிய கடிதத்தில் மேரியின் மெழுகு மாதிரிகளைச் சிலாகிக்கையில், அவற்றின் மிக கச்சிதமான அமைப்புகளாலும், உண்மைத்தன்மையாலும் மிகுந்த பயனுள்ளவை என்று குறிப்பிட்டிருந்தார்.

நாடு, மதம் போன்ற பாகுபாடுகளின்றி இவரது படைப்புகள் பலரால் பாராட்டப்பட்டன- தத்துவவாதியான டெலாம்பேர் (D’Alembert), பிரிட்டிஷ் அரசர்களின் மருத்துவரான சர் ஜான் ப்ரிங்கில்(John Pringle), பென் ஃப்ராங்க்லின் (Ben Franklin) போன்றோர் அவர்களில் சிலர். ‘செயற்கையான உடல் உள் உறுப்புகளின் மாதிரிகளைத்’ தன் வாழ் நாள் தவமாய் செய்து, காட்சிப் படுத்தி, விளக்கி தன் சொந்த காப்பகத்தைத் திறமையாக நடத்தி வந்தார் இவர்.

உடற் கூறியல் துறையில் பலரும் ஆர்வம் காட்டிய 18-ஆம் நூற்றாண்டில், உடலின் அமைப்பு பற்றியும், அதன் உள் உறுப்புகளின் செயல்பாடுகளைப் பற்றியும் பலர் வியப்புடன் ஆய்வில் அல்லது அதைப் பற்றி சிறிதேனும் அறிவதில் முனைப்பு கொண்டனர். விரைவில் புலப்படாத, குழப்பங்கள் நிறைந்த, புரியாத புதிராக உடல் இயக்கம் கருதப்பட்ட காலம். பல ஊகங்களின் அடிப்படையிலேயே செயல் புரிய நேர்ந்தது. கல்வி கற்ற அனைவருக்குமே உடலின் கட்டமைப்புகள் புரிந்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது. மருத்துவரும், அறுவை சிகிச்சை செய்பவருமான ஜான் ஜோசப் ஷு(Jean-Joseph Sue) சொன்னார் : ‘வெட்டி, பிரித்துப் பார்ப்பதின் மூலம், குடல் அமைப்புகளை அறிகிறோம்; அது நாம் பயில வேண்டிய நூல்; வேறு முறைகளைப் பின்பற்றி நாம் அறிந்து கொள்வதைக் காட்டிலும் இம் முறையில் தெளிவும், நீடித்தப் புரிதலும் வருகின்றன.’

உடலைப் பகுத்து அறிவதன் முக்கியத்துவம் அறிந்த உடற் கூறியலாளர்கள் தங்கள் மரணத்திற்குப் பிறகு அதை வெட்டிக் கூறிட்டு மற்றவர்கள் அறியும் பொருட்டு தங்கள் உடல்களை அத்தகைய ஆய்வுச்சாலைகளுக்கு எழுதி வைத்தார்கள். யூரோப் முழுவதும் இதற்கான நிறைய திறந்த அரங்குகள் உருவாயின; பல விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. இவருடன் படித்த திருமதி.டு ழ்ஜான்லிஸ் (d’Genlis) இளைய தோழியான கோண்டெஸ் டு க்வான்யி (Comtesse de Coigny) தன் வாகனத்தில் உயிரற்ற உடலை உடன் எடுத்துச் சென்றார். இது அச்சமயத்தில் இத்துறையில் மக்களுக்கு உண்டான விஞ்ஞான ஈடுபாட்டைக் காட்டுகிறது; அதே நேரம் மனிதர்களின் பால் இதை அறிந்து கொள்வதில் ஏற்பட்ட கிளர்ச்சியையும்.

ஆனால், இதில் பெரும் சிக்கல் இருந்தது. ‘பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டு, சுடுகாட்டிடைக் கொண்டு சுட்டிட்டு’ என்பதுதான் நாற்றத்தைப் போக்கும் வழி. பிண உடல்கள் அழுகுவதால் ஏற்படும் துர் நாற்றம் தாங்க முடியாத ஒன்றாக இருந்தது; ஈரமும், வெப்பமுமான மே முதல் செப்டம்பர் வரை பிணங்களை அறுத்துப் படிப்பதை நிறுத்தி வைக்க வேண்டிய அவசியம் இருந்தது- குளிர் பதன வசதிகள் இல்லாத காலம். ‘ஒரு உடற்கூறு அரைப்பள்ள அமைப்பானது நடுங்க வைக்கும் இயல்புள்ளது- அதன் அழுகும் பிணங்கள், சிதையும் தசைகள், குருதி,  குமட்டல் வரவழைக்கும் செரிமான உறுப்பு, பயமுறுத்தும் எலும்புக் கூடுகள், கொள்ளை நோய் புகையும் நிலைகள்’ என்று சொல்கிறார் ரூஸோ (Rousseau). இதைத் தன் அறிவுத் திறத்தால் செயல்பாட்டால் மாற்றிக்காட்டியவர் பைரான். ஆண்டு முழுதும் கற்பிக்கும் வகையிலும், கற்கும் வகையிலும் தன் உருவாக்கங்களை இவர் திறமையாக வார்த்தெடுத்தார். குடலியல் (Splanchnology), வயிற்று உள்ளுறுப்புகள் போன்றவை பயிற்றுவிக்கப்பட்டன- ஆனால் அவற்றின் அந்த துர்வாசனையும், கோரத் தோற்றமும் இல்லாமல் பயிற்சி இருந்தது. எனினும், இந்த செயற்கையாக அமைக்கப் பெற்ற மாதிரிகளை உண்டாக்க, மேம்படுத்த, இவர் நிஜப் பிணங்களை அறுத்து உறுப்புகளை வெட்டி எடுத்து, அதன் வடிவம், இடம் மற்றும் அமைப்புகளை உணர வேண்டி இருந்தது. இவரது மாணவர்களும், இவரது காப்பகத்திற்கு வருகை தருபவர்களும் இந்த மாதிரிகளை மிகவும் கொண்டாடினார்கள். ரஷ்யாவின் பேரரசி கேத்ரீனிடம் டிடெரோ சொன்னார் “ இவர் அறிந்துள்ள அளவில், இதைப் பற்றிப் படிக்கும் ஆண்கள் அறியவில்லை.” பாரிஸ் மருத்துவத் துறையில் கற்றதைக் காட்டிலும் இவரது காப்பகத்தில் உள்ள உறுப்பு மாதிரிகளிலிருந்து நான் கற்றது அதிகம் என்று டெலாம்பேர் சொன்னார். புவியியலாளரான மாண்டெல்(Mentelle) இவர் ‘உடற்கூறின் உரிமையாளர்’ என்றார்.

தன் நாற்பதாவது வயதில் இந்தப் பெருமை அடைந்த இவர் மருந்து உற்பத்தி செய்து விற்கும்  பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில்,  நான்காவது குழந்தையாக ழ்ஜீல் (Gilles) பைரானுக்குப் பிறந்தவர். நான்கு வயதில் தந்தையை இழந்தார். இவருடைய ஒரு சகோதரி கன்யாஸ்த்ரீ ஆனார். பெரிய அண்ணன் மருந்தாளர். மற்றொரு அண்ணன் இராணுவத்தில் அறுவை சிகிச்சையாளர். இவரின் அப்பா இவரின் குழந்தைப் பருவத்தில் இறந்திருக்காவிட்டால் இவரும் மருந்துத் துறைக்கே சென்றிருப்பார். இவருக்கு உடற்கூறியல் கற்பித்த ஆசிரியர், ஃப்ராங்கோ மோஹான்(Franco Morand), தான் தன் தந்தையைப் போல அறுவை சிகிச்சையாளனாக உருவானதைப் போல இவரும் தன் பாரம்பரியத்திலிருந்தும், தன் குடும்ப சூழலிலிருந்தும் உடற்கூறு சார்ந்த அறிவினைப் பெற்றிருக்கக்கூடும் என நினைத்தார்.

இவரது 15 வது வயதில் இவரது அன்னை மறுமணம் செய்து கொண்டார். அக்கால வழக்கப்படி இவர் சித்திரம் பழக பெஸ்பார்ட்(Basseporte) என்ற தாவரவியலாளரிடம்  சேர்ந்தார். அவர் இவரை விட 18 வயது மூத்தவர்.  தன் இருப்பிடத்தை விட்டுவிட்டு அதாவது, கடைகண்ணிகள் இருந்த பழைய பகுதியிலிருந்து (Vieille du Temple) இங்கே ‘ராஜாவின் தோட்டத்தில்’ குடிபுகுந்தார். சிலை வடிப்பதில் இவருக்கு இருந்த ஆர்வத்தை அந்த ஆசிரியர் உடனே புரிந்து கொண்டார். இவரது மருந்தகத் துறை சார்ந்த அறிவினை கூர் தீட்டி அப்போது பிரபலமாகிவரும் உடற் கூறியலில் கவனத்தைத் திசை திருப்பியர் இந்த ஆசிரியரே. அவர் ‘முப் பரிமாண வடிவ மாதிரிகளை’ அமைக்குமாறு இவரை ஊக்குவித்தார். இருவருக்கிடையில் ஆழ்ந்த நட்பும், புரிதலும் ஏற்பட்டன. பலர் இவ்விருவரையும் இணை எனப் பார்த்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆசிரியரின் சொத்துக்களை அவரது மரணத்திற்குப் பின்னர் நிர்வகித்த மாணவி இவர். அவர் தானே வரைந்த சுய ஓவியத்தை பொக்கிஷமெனப் போற்றிய மாணவி இவர்.

1744-ல் தன் 25 வது வயதில் அவர் படிப்பு முடிந்த பிறகு ஆசிரியருடன் தங்க இயலாததால் தோட்ட நுழைவாயிலுக்கருகே ஒரு இருப்பிடத்தில் வசிக்கத் தொடங்கினார். பெண்களுக்கு அனுமதி இல்லாததால், ஆண்  வேடத்தில், இவர் அறுவைகள் நிகழ்த்திக் காட்டும் ஆம்பி தியாட்டர்களுக்குப் போய் உடல்பாகங்களைப் பற்றி அறிந்து கொண்டார். தானும் பலவற்றை வெட்டி பகுப்பாய்வு செய்து வந்தார்.  எஸ்ட்ரபாடில்(Estrapade) இவர் இருந்த இல்லத்தின் மூன்றாவது மாடிக்கு,1747-ல் தன் குடும்பத்துடன் டிடெரோ குடி வந்தார்.

தன் ஆர்வத் துறையில் செம்மையுறுவதற்காக  இவர் பிணங்களைக் கண்டு பயப்படாத தன்மையை வளர்த்துக் கொண்டார். வெறும் பார்வையாளராக இல்லாமல், இவர் உயிரற்ற உடல்களைப் பிளந்தார், உறுப்புக்களை வெளியில் எடுத்தார், அவற்றின் வடிவ அமைப்புக்களைப் பயின்றார், உருவாக்கினார், உட்செலுத்தினார். மீளமைத்தார். முன்னர் உடற்கூறியிலாளர்கள் மேம்போக்காகப் பயின்ற விஷயம் இது; ஒரு காரணம்- சட்டப்படி இறந்த உடல்களைப் பெறுவதில் இருந்த சிரமங்கள் இரண்டாவது அவை அழுகிப் போவது. அழுகுவதைத் தடுப்பதற்காக மிகக் குளிரில் செயல்பட வேண்டி வந்தது. லியோர்னார்டோ டா வின்சி எழுதினார்: ”வறுத்தெடுக்கும் ஒன்று, அருவருப்பானது, கண்களால் பார்ப்பதில் துணுக்குறும் தாக்கம் கொணர்வது.” அத்தகைய அருவருப்பைக் கொடுக்கும் உடல்கள் முதலில் விறைக்கத் தொடங்கும், பின் உடனே திசுக்கள் அழுகத் தொடங்கும். இரவில் மீதமுள்ளவற்றை வினிகரில் தோய்க்கப்பட்ட துணியிலும், காகிதத்திலும் சுற்றி வைக்க வேண்டும். இத்தகைய சூழலில், ஒரு பெண்ணான இவர் காட்டியது அறிவுபூர்வமான துணிச்சல் என்றே சொல்லலாம்.

இவர் தன் வாழ் நாளில் பிடித்த பிணங்கள் ஏராளம். சிலது நேர் வழி முறைகள், பலது சந்தேகத்திற்கு உட்பட்டது. இவர் கூலிக்கு ஆள் அமர்த்தி இராணுவத்திலிருந்து உடல்களைத் திருடினார் என்றும் சொல்லப்பட்டது; சிலது, இறந்தவரின் உடல், சிலது அழுகும் நிலையில் உள்ளவை, சிலது இறந்தவுடனேயே கொண்டு வரப்பட்டவை, சிலது தோண்டப்பட்டவை, சிலது மெலிந்தவை, பல நாட்கள் நோய்வாய்ப்பட்டு இறந்த சில உடல்கள் மருத்துவ மனையிலிருந்து பெறப்பட்டவை. உடல்களைப் பதனிடுவதற்காக சில திரவங்களைப் பயன்படுத்தினார் இவர். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவில் இவர் உடல் உள் உறுப்புக்களை எடுத்து அவற்றை அச்சில் வடித்தார்.

மெழுகு மாதிரிகளையும் சுலபத்தில் அமைத்துவிட முடியாது. முன் பகுதிக்கும் பின் பகுதிக்கும் தனித்தனி வார்ப்புகள் வேண்டும். ஒட்டாமல் இருப்பதற்காக எந்த உறுப்பினை இவர் நகலெடுக்கப் போகிறாரோ அதில் எண்ணைப் பசை தடவ வேண்டும்; அச்சு வார்ப்பிலிருந்து வடிவத்தை வெளியே எடுப்பதற்காக நூல் போன்ற, எடுக்க உதவும் ஒன்றைப் பொருத்த வேண்டும்; பூச்சுக்கள் செய்ய வேண்டும். ஒரு உறுப்பின் இரு பகுதிகளை வார்த்து எடுத்த பிறகு அவற்றின் உள் பகுதிகளில், சிறு துளைகளை அடைப்பதற்காக சோப் அல்லது எண்ணை தடவ வேண்டும். இரு பகுதிகளையும் இணைத்து, வெற்றிடத்தில் மெதுவாக மெழுகினை ஊற்றி  பொறுமையாகச் சுழற்ற வேண்டும். இத்துடன் இவர் ஆலீவ் ஆயில், கெட்டிக் கொழுப்பு, டர்பன்டைன், பட்டு, கம்பிளி, இறகுகள், மரப் பிசின்கள், சாயங்கள் போன்ற சிறப்புக் கலவைகளைப் பயன்படுத்தினார். மெழுகு இறுகியவுடன் அச்சிலிருந்து எடுக்கப்பட்டு தேவையான சரி பார்த்தல்களைச் செய்து வர்ணம் பூசுதலைச் செய்ய வேண்டும். இவரது இந்த மாதிரிகள் உடையவுமில்லை, உருகவுமில்லை. தேவாலயத்தில், வழி பாட்டில், இடம் பெற்ற மெழுகின் இணக்கம் இவருக்கு உணர்த்திய இதில் மெய்ஞானமும், விஞ்ஞானமும் இணைகின்றன.

மொஹான், ஸியான்ஸ் அகதெமியில், 1759-ல், பெண்கள் நுழைய அனுமதி இல்லாத விஞ்ஞானக் கூடத்தில், இவரது உண்மை போன்ற மெழுகு மாதிரிகளைப் போற்றிப் பேசினார். மிக அதிசயமாக இவருக்கும் உரையாற்றவும், தன் உருவாக்கங்களைப் பற்றிப் பேசவும் அக்கல்விக் கூடத்தில் மூன்று வாய்ப்புகள் கிடைத்தன. முன்னர் நடைபெற்ற மெழுகு மாதிரிகளில், கியோம் டெனூ (Guillaume Desnoues) செய்திருந்தவற்றில், சில நுண்மைகள் இல்லாமல் இருந்தன. அவைகள் ஆழம் குறைவானவை ஆனால், இவரது படைப்புகள் உண்மை நிகர்த்ததாய் இருந்தன. மெல்லிய தசை நார்களையும், வெற்றிட உள்ளுறுப்புகளையும் இவர் செய்து காட்டிய விதம் பார்ப்போரை ஏமாற்றும் வண்ணம் அமைந்திருந்தது.

13-05-1761 அன்று தன் இல்லத்தில் மருத்துவ காப்பகத்தினை அவர் அனைவருக்குமாகத் திறந்தார். உடற்கூறு பற்றி ஆழமாக அறிய விரும்பியவர்களுக்கு சிறப்பான விளக்கங்களும், மாதிரிகளின் அடிப்படையில் உள்ளுறுப்புகளை தெரிந்து கொள்ளும் பாடங்களும் நடத்தப்பட்டன.

பொதுவாகக் காப்பகங்களில் ‘தயவு செய்து தொடாதீர்கள்’ என்று பதாகை இருக்கும்; ஆனால், தொட்டுப் பார்க்கச் சொன்ன ஒரு ம்யூசியம் இதுதான். அனைவரும் உறுப்புக்களைத் தொட்டு அவற்றின் விநோதங்களில் மகிழ்ந்தார்கள். பலர் ஆர்வத்துடன் வந்து பார்த்தார்கள். பொதுவான நாட்டமுள்ள மனிதர்களுக்கு துர்வாசனையற்ற இந்த உறுப்புகளின் பின்னர் இருக்கும் இவரது கடின உழைப்பு பற்றிய கேள்விகளில்லை. ஆனால், விஞ்ஞான தாகம் கொண்டு ஒரு வழி காட்டியென, அயராமல் பாடுபட்டு, வெட்டி, ஆராய்ந்து, பிரித்து, வார்த்து, இணைத்து, இவர் செய்த அருஞ்செயல்கள் தத்துவவாதிகளாலும், அறிவியல் மாணவர்களாலும், பிறத்துறை வல்லுனர்களாலும் உனர்ந்து போற்றப்பட்டது. உடற்கூறில் தானும் ஈடுபட்ட மருத்துவர் ஜான் ப்ரிங்கில் சொன்னார் “இவை நாற்றமடிக்காத விதத்தில் மட்டும் தான் மாறுபடுகின்றன!”

உள்ளே உயிர் வளர்த்து உதிரத்தால் பால் கொடுக்கும் பெண்ணைவிட உறுப்புகளை யார் உணர்த்துவார்?

சித்தர் பாடல் ஒன்று:

கூறுவேன் தேகமது என்னவென்றால்
குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி
மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு
வன்மையுடன் நரம்பினால் வலித்துக் கட்டி
தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி
தேற்றமுடன் அதன் மேலே தோலை மூடி
ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி
அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே!

உசாவித் துணை:https://www.laphamsquarterly.org/roundtable/everything-stench  Nina Rattner Gilbert 07-06-2021

பின்குறிப்புகள்:

*  Biheron என்ற ஃப்ரெஞ்சுப் பெயரின் உச்சரிப்பு சரியாகக் கிட்டவில்லை. ஒரு தளத்தில் பைரான் என்பதாகவும் இன்னொன்றில் பிஹொன் என்றும் உள்ளன.

** டெனீ டிடெரோ ஒரு ஃப்ரெஞ்சு சிந்தனையாளர். மதியொளி யுகத்தின் முக்கியமான நூலாகக் கருதப்பட்ட ஆன்சைக்லோபீடீ (Encyclopédie ) என்ற பல்பொருளகராதிக்குப் பதிப்பாசிரியராகப் பணியாற்றிய தத்துவாளர், அறிவியலாளர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.