இலவசமாய் ஒரு வேலைக்காரி

ல்லம்மாள்கண்விழித்து எழுந்தபோது, அலாரம் இன்னும் அலரவில்லை! அலருவதற்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் எஞ்சியிருந்தன. ‘இன்றைக்கும் நீ அலர வேண்டாம்..’ என்பதுபோல், கடிகாரத்தின் தலையில் தட்டி அடக்கி வைத்தாள். அவளின் உடலுக்குள் ஓர் உயிரியல் அலாரம் இருந்ததுபோல் தினமும் சரியாக 6.25–திற்கு எழுந்துக்கொண்டிருந்தாள்.

வெளியில் பெய்த மழை, உள்ளே படுக்கையில் குளிர்ந்தது. உடலும்; மனமும் போர்வையில் சுருண்டுக்கொள்ளும் சுகத்தைக் கோரின. மல்லம்மாள் மீண்டும் படுத்துக்கொண்டு இமைகளை மூடினாள். நித்திரை வருவதற்கு பதில், செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியலே நினைவில் நீண்டது. கலைந்துப்போன நித்திரையை, என்ன போர்த்தியும் மீட்க முடியாமல் படுக்கையை விட்டு எழுந்தாள்.

மகள் ராதாபாய், கீழேயிருந்த அறையில் மகனை பள்ளிக்கு தயார் படுத்திக்கொண்டு அவளும் வேலைக்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்த அரவம் கேட்டது. மல்லம்மாள், மகளின் படுக்கையறைக்குள் எட்டிப் பார்த்தாள். பேத்தி ஹிரண்யா, நித்திரையில் வரைந்த ஓவியத்தைப்போல் அலங்கோலமாய் தூங்கிக் கொண்டிருந்தாள். நித்திரை வரும்வரை கன்னத்தில் தடவிக்கொள்ளும் வெல்வெட் துணி பொம்மைக் குருவி, பறந்துவிடாமல் இருக்க கைக்குள்ளேயே பிடித்து வைத்திருந்தாள். பேத்தியின் பிஞ்சு இதழ்கள், பாலை உறிஞ்சிகொண்டிருப்பதுபோல் வாய் மூடி அசைந்துக்கொண்டிருந்தன. ‘ நாலு வயசுதான் ஆவுது, அதுக்குள்ளியும் இன்னா பேச்சு!..’ என்று அவள் முகத்தை வழித்த விரல்களை தன் நெற்றிப் பொட்டுகளில் மடக்கி வைத்து, நெட்டி உடைத்துக்கொண்டாள். கதவை ஒருக்களித்து சாத்திவிட்டு கீழே வந்தாள். பேரன் ஹிரிதிக், சோபாவில் சாய்ந்துக்கொண்டு, தாயின் கைப்பேசியில் வெடிகுண்டுகள்; கனரக துப்பாக்கிகள் கொண்டு கொரில்லா போரில் ஈடுபட்டிருந்தான். நினைத்துப் பார்க்கமுடியாத வன்முறையுடன் போர் செய்துக்கொண்டிருந்தான். எதிராளியின் மேல் வெடிகுண்டுகளை வீசியடித்து அவன் தலைச் சிதறிப் பிண்டங்களாகிப் போவதை அவ்வளவு ரசனையுடன் பார்த்து கிளர்ச்சியுற்று மகிழ்ந்தான். முகம் பிரகாசத்தில் ஒளிர்ந்தது.

“ காலீலயே என்னட பாபு இது?..” என்று காதில் கிசுகிசுத்தாள் பாட்டி. அவன் ஒருவித போதையில் இருந்ததால், காதுகள் மரத்துப் போயிருந்தன. தாயின் குரல்கூட செவிடன் காதில் ஊதிய சங்குதான். வலுக்கட்டாயமாகப் கைப்பேசியை பிடுங்கிக்கொண்டால், தொட்டாற்சிணுங்கியைப்போல் சுருங்கிப் போவான். அப்படிப்பட்ட நேரங்களில் கோபத்தை சாப்பாட்டின்மேல் காட்டி, பிடுங்கியவர்களைத் தண்டிக்கப் பார்த்தான்.

மல்லம்மாள் அடுப்படிப் பக்கம் போனாள். நேற்றைய இரவின் சோம்பல், அசிங்கமாய் பேசினில் நிறைந்துக் கிடந்தது. அவர்களின் தர்ம சிந்தனைக்கு தலை வணங்கி, வழக்கம்போல் பூனைகளும் எலிகளும் வந்திருக்க வேண்டும். தரையெல்லாம் மீன் முட்களும், எலும்புத் துண்டுகளும் இரைந்துக் கிடந்தன. அதைப் பார்த்ததும் அவளுக்கு எப்போதும்போல் சலிப்பே மீந்தது. அவளும், சாப்பிட்ட தட்டுகளை இப்படிக் காயப் போடுவது குடும்பத்திற்கு நல்லதில்லையென்று எத்தனையோ தடவைகள் சொல்லிவிட்டாள். ஆனால், தட்டுகள் இன்னும் காய்ந்துக்கொண்டுதான் இருந்தன.!. சாப்பிட்டவுடன் கழுவி வைத்தால் அது மகள் செய்யவேண்டிய வேலையாய் இருக்கும். அதையே மறுநாளுக்கு ஒதுக்கி வைத்தால், காலையிலேயே வேலைக்கு போகின்ற அவசரத்தில் அதையெல்லாம் செய்துவிட்டுப் போவதற்கு எங்கே நேரம் இருக்கிறதென்று குறைப்பட்டுக்கொண்டு தாயிற்கு விட்டுச் செல்லலாம்! மல்லம்மாளின் இளமையில் அத்தகைய சோம்பேறித்தனமெல்லாம் கண்டிப்புக்கும் தண்டனைக்கும் உரிய தவறுகளாய் இருந்தன. ஆனால் இப்போதோ கொஞ்சம் கண்டிப்பாய் சொன்னால் போதும்! மிகவும் கட்டுப்படுத்துவதாகவும்; கட்டளை இடுவதாகவும் சலித்துக்கொள்கின்றனர். சொந்தக் கடமைகளை செய்துக்கொள்ளக்கூட யாருமே தயாராய் இல்லை. அதிலும் மருமகனோ இன்னும் மோசம்! சாப்பிட்ட பிளேட்டிலேயே கையைக் கழுவி, தட்டையே நிறைத்து வைப்பான். அதைத் தூக்கிக்கோண்டு மல்லம்மாள் புதியதாய் நடைப் பழக வேண்டும்.

ராதாபாய், மல்லம்மாளுக்கு ஒரே பிள்ளையாதலால் மகளுடனேயே அவள் வசித்து வந்தாள். கணவன் இருந்தவரை மல்லம்மாளின் குரலுக்கு ஒரு அதிகாரம் இருந்தது. அவர் இறந்த கையோடு கணவனில்லாத நிராதரவில் அவளின் குரல் தானாகவே மங்கிப் போனது. கோபதாபங்களையும், மனஸ்தாபங்களையும் மனசிற்குள்ளேயே அடக்கிப்போட்டு மௌனத்தில் ஆழ்ந்துப்போகப் பழகிக்கொண்டாள்.

முதலில், எழும்புத் துண்டுகள் இரைந்துக் கிடந்த குசினியை சுத்தம் செய்தாள். பிறகு சட்டிப் பானைகள், சாப்பட்டு பாத்திரங்களை கழுவி வைத்தாள். மீந்தச் சாப்பாட்டை முதலில் குப்பைத் தொட்டியில் கொட்டிவிட்டு பின்னர் பிளேட்டுகளை பேசினில் போடாமல் அப்படியே போட்டதால் கவலைகள் நிறைந்துக் கிடந்த அவளின் மனசைப்போல் பேசின் அடைத்துக்கொண்டது. எண்ணைய் மிதக்கும் தண்ணீரைப் பார்க்க அருவருப்பாய் இருந்தது. அடைத்துக் கிடந்த சோற்றை அகற்றிவிட்டு பேசினைச் சுத்தம் செய்து முடித்தாள்.

“ அம்மா, லேட் ஆயிறிச்சி. நாங்க மொத கலம்பறம்மா…”

ஹாலிலிருந்துக் கேட்ட மகளின் குரல், அவசரமும், பதற்றமும் கலந்து பரபரத்தது. கழுவிக்கொண்டிருந்த வேலையை அப்படியே விட்டுவிட்டு, கைகளை கைலியில் துடைத்துக்கொண்டே ஹாலுக்கு வந்தாள். வெளியே மகளின் வாகனம், சற்று முன்னர் மின்னி மறைந்த மின்னலைப்போல் தெருமுனையில் மறைந்துக்கொண்டிருந்தது. மகனிடம், பாட்டிக்கு ‘ பாய்.. பாய்..’ சொல்லிவிட்டு வரும்படி கேட்டுக்கொள்ளவோ, குசினிக்குள் எட்டிப் பார்த்து ஒரு வார்த்தை சொல்லிவிட்டுப் போகவோ மகளுக்கு நேரம் போதவில்லை. எப்போதும் ஏதோ ஒரு அவசரத்திலேயே இருந்தாள்.

மருமகன் வேலைக்குப் போக தயாராகிக்கோண்டிருந்தான். மல்லம்மாள், நெஸ் காப்பியை தயாரித்து ஃபிளாஸ்கில் ஊற்றி மேசையில் வைத்துவிட்டு, நேற்றிரவு மகள் வாங்கி வைத்திருந்த மாசிமோ ரொட்டித் துண்டுகள் நான்கை வாட்டி, ‘பட்டர்’; ‘ஜாம்’ போத்தல்களோடு ஃபிளாஸ்கின் பக்கத்திலேயே மூடி வைத்துவிட்டு, பேத்திக்கு பசியாறை தயாரிக்க ஆயத்தமானாள்.

‘மன்னா’ சிறுதானிய மாவு மூன்று கரண்டிகள் எடுத்து, தண்ணீரில் கரைத்து, குறைந்தத் தீயில் அக்கரைசல் அடிப்பிடிக்காமல் மெல்ல கிண்டி விட்டுக்கொண்டிருந்தாள். பார்வை பானைக்குள்ளும் கவனம் வெளியிலும் சிதறிக் கிடந்தது. கிண்டப்பட்டது கரைசலாகவும் திரண்டது என்ணங்களாகவும் ஆகிப் போயின.


ராதாபாய், கல்யாணமாகி இரண்டு வருடங்களாகியும் கருத்தரிக்காதபோது, ‘எங்கே மலடியாக இருப்பாளோ?’ என்று கதி கலங்கிப் போனாள். ஜாதகத்தில் வேறு புத்திர பாக்கியம் மத்திமம் என்று இருந்தது இப்போது அச்சத்தைக் கொடுக்க ஆரம்பித்திருந்தது. முதல் வருஷத்திலேயே பிரதி வெள்ளியும் அம்பாளுக்கு நெய்விளக்கு ஏற்றி வணங்க ஆரம்பித்தாள். தாயிற்கு வேறு, அவள் மட்டுமே ஒரே பிள்ளையாக இருந்தது அவளுக்கு மேலும் கவலையை கொடுத்தது. அவ்வப்போது, ‘ஏன் மேற்கொண்டு பிள்ளைகள் பெற்றுக் கொள்ளவில்லை?’ என்று தாயிடம் கேட்கலானாள். இரண்டாவது வருட மத்தியில் அவள் கருவுற்றபோது ஆனந்தத்தில் திக்குமுக்காடிப் போனாள். அனால், மூன்றாவது வாரமே அக்கருக் கலைந்தபோது தீவிரமான மன உளைச்சலுக்கு உள்ளாகி, மாத்திரைகள் சாப்பிட வேண்டிய நிலைக்கு ஆளானாள். எனினும், கரித்தரிப்பதற்கான ஆற்றல் இருப்பது நிரூபனமாகியிருப்பதை எண்ணி மனம் சாந்திக்கொள்ளுமாறு மருத்துவர் ஆலோசனை சொன்னபோது ராதாபாய் கொஞ்சம் ஆறுதல் அடைந்தாள். மூன்றாவது வருடம் ஒரு மகன், ஆரோக்கியத்துடன் பிறந்து ராதாபாயின் வயிற்றில் பாலை வார்த்தான். பிரசவ விடுமுறையில் இருந்தவரை, மகனை உற்சாகத்துடன் பராமரித்து திளைத்தாள். பாலூட்டியப் பின்னர் மகனை தோளில் கிடத்தி முதுகைத் தேய்த்துவிட்டு ஏப்பம் எடுக்க வைத்தாள். விக்கல் வந்தபோது துணி முனையிலிருந்து நூலை பீய்த்தெடுத்து எச்சிலில் நனைத்து நெற்றியில் வைத்து உச்சந்தலையில் ஊதி விட்டாள். மூத்திரம் பெய்த மறுகணமே ‘நெப்கின்னை’ மாற்றி விட்டாள். அழுது கவனத்தை ஈர்க்க மகனுக்கு அவள் அவகாசமே கொடுக்கவில்லை. இரவு நேரங்களில் மட்டும் பாதி தூக்கத்தில் எழுந்து பாலூட்ட வேண்டியது அசௌகரியமாய் இருந்தது. வேலைக்கு போக ஆரம்பித்த பின்னர், வீட்டிற்கு வந்தவுடன் மகனை பார்த்துக்கொள்ள வேண்டியது அலுப்பு மிக்கதாய் இருந்தது. நல்ல வேளையாக தாயும் தந்தையும் இருந்தது மிகவும் உதவியாய் இருந்தது. மகன் பிறந்து இரண்டு வருடங்களுக்குப் பின்னர் பெண்குழந்தை ஒன்று பிறந்தபோது, தன் அதிர்ஸ்டத்தை எண்ணி பூரித்துப்போய் கையோடு கர்ப்பப்பையை அகற்றிக்கொண்டாள். இரண்டு வருட இடைவெளிக்குள் பிறந்த குழந்தைகளை ஒரே நேரத்தில் வளர்த்தெடுப்பதில் இருந்த கஷ்டத்தை அனுபவித்துப் பார்த்தபோது பாவம் ராதாபாய் துவண்டுப் போனாள். இரண்டு குழந்தைகள் பிறந்து, பொறுப்புகள் கூடிப்போனதும் படிப்படியாக சாயம் போன சேலையைப்போல் அவள் வர்ணம் இழந்துப் போனாள். அப்பா இறந்த பிறகு அம்மாவால் தனியொருத்தியாய் இருவரையும் பார்க்க முடியாமல் மிகவும் திண்டாடினாள். வீட்டிற்கு வந்த கையோடு இருவரையும் ராதாபாயே பார்த்துக்கொள்ள வேண்டி வந்தது. பிள்ளைகள்மேல் பாசம் இருந்த அளவிற்கு அவர்களுக்காக பிரயத்தனப்பட பொறுமை இருக்கவில்லை. பிள்ளைகள் வளர வளர அவர்களின் பிடிவாதமும் நச்சரிப்பும் அவளை மிகுந்த சங்கடத்திற்குள்ளாக்கின. உடனடியாக ஏதாவது – அது அந்த வயதினருக்கு ஆபத்தானது என்றாலும் – செய்து, காரியத்தைச் சாதித்துக்கொள்ளப் பார்த்தாள். நின்று, நிதானமாக அவர்களுக்கு வேண்டிதைப் பார்த்துக்கொள்வதற்கு தான் வீட்டிலில்லை என்று சமாதானம் பட்டுக்கொண்டாள். ஆனால் சனி, ஞாயிறுகளில் வீட்டிலிருந்த போதோ, ‘ வாரத்துல ரெண்டு நாளுதான் லீவு, அதுலயிம் கொஞ்சம் ரெஸ்டா இருக்க முடியாட்டி எப்படி?..’ என்று தனது சோம்பலை, ஏதோ ஒரு காரணத்தில் மறைக்கப் பார்த்தாள். அதனாலேயே சாப்பிடும் போதும், சும்மா இருக்கும் போதெல்லாம் பிள்ளைகள், கைப்பேசியின் தேவைக்கு ஆளாகிப் போயினர். விளையாடுவதற்கு வீட்டில் சைக்கிளும், வெளியே திடலும் பரந்தே இருந்தன. ஆனால் கைப்பேசியில் இருந்த அடுத்த நிமிட ஆச்சரியங்களும், கண்ணைக் கவரும் வர்ணங்களும் வெளியில் இல்லாததால் அவர்களுக்கு ரசிக்கவில்லை. மழையும், வெயிலும் வேறு உடலில் படக்கூடாத பருவங்களாய் பெற்றோராலேயே பயமுறுத்தப்பட்டிருந்தன. வெயிலில் காய்ந்து கருத்துப் போகாமலும்; மழையில் நனைந்து சளி பிடிக்காமலும் இருக்கும்படி எச்சரிக்கப்பட்டனர். பிள்ளைகளின் தாத்தா இருந்தவரை, காலையில் கதைகள் படிப்பதையும் மாலையில் ஓடியாடி விளையாடுவதையும் தவறாமல் செய்து வந்தார். அவர் இறந்ததோடு அவைவும் முடிந்துப் போயின. சனி ஞாயிகளில்கூட பிள்ளைகளோடு வெளியில் போய் விளையாடி வர, பெற்றோருக்கு நேரம் இருக்கவில்லை. எப்பொழுதும் கைபேசியில் பார்ப்பதற்கு இருவருக்கும் ஏதோ இருந்துக்கொண்டே இருந்தன். ம்ம்ம்.. உலகம் எப்படியெல்லாமோ மாறிக்கொண்டு வருகிறது.


“அம்மம்மா..” பேத்தி கூப்பிடுகிறாளா! மல்லம்மாள், அடுப்பை அடைத்துவிட்டு அவசரமாய் மாடிக்குப் போனாள்.

“ அங்கியே இரு தல்லி!.. படிக்கட்டுகிட்ட வந்துறாத..”

பேத்தி, ஆட்காட்டி மற்றும் நடு விரலை சப்பியபடி, இன்னொரு கையில் துணிக் குருவியைப் பிடித்துக் கன்னத்தில் தேய்த்துக்கொண்டே படியருகே நின்றுக்கொண்டிருந்தாள்.

“ வா தல்லி… தல்லிக்கி தூக்கம் போச்சா!.. “ என்று கொஞ்சிக்கொண்டே பேத்தியை தூக்கிக்கொண்டு கீழே வந்தாள்.

சாப்பாட்டு மேசையில் காலியான நெஸ்காப்பி கோப்பை, மருமகன் வேலைக்குப் போய்விட்டதை சொன்னது. அவனுடைய சோம்பலில் ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தன. கோப்பைகளையும், பிளேட்டுகளையும் பேசினில் போட்டுவிட்டு வந்தாள்.

பேத்தியை குளியலறைக்கு கூட்டிப் போய் பைஜாமாவை கழற்றி துவைக்கப் போட்டாள். மூத்திரக் கவுச்சியில் ‘டைபர்ஸ்’ நாறிச் சொத சொதத்தது. கழற்றி குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு, சோப்பு போட்டு குளிப்பாட்டி சுத்தம் செய்துவிட்டு வேறு உடைகளை மாட்டிவிட்டாள். அவளுக்கு உணவு ஊட்டி விடுவது பெரும் தொல்லையாக இருந்தது. பசியாறை வேண்டாமென்று வாயைப் பொத்திக்கொண்டாள். வீடெல்லாம் ஓடப் பழகி, பாட்டியின் பிராணனையை வாங்கிக்கொண்டிருந்தாள். தோட்டத்திற்கு கூட்டிக்கொண்டுபோய் செடி, கொடி, பூக்கள், நத்தை மற்றும் பட்டாம்பூச்சிகளைக் காட்டி ஊட்டிவிட்டதெல்லாம் இப்போது பலிக்கவில்லை. கைப்பேசியில் ‘ஸ்னோ வையிட்’ காட்டச் சொல்லி அடம்பிடித்தாள். ஆனால் ராதாபாயோ, பாட்டிதான் பேரப்பிள்ளைகளை கெடுப்பதாகச் சொல்லி கோபித்துக்கொண்டாள். மகள் வீட்டிலிருக்கும் நாட்களிலும், ஆபீஸ் வேலையிருக்கிறதென்று சொல்லி, கைபேசியைக் காட்டி சீக்கிரம் ஊட்டிவிட்டதெல்லாம் சொல்லிக்காட்ட மல்லம்மாளுக்கு ஞாபகம் இருந்தது. ஆனால் பாவம், குரல்தான் இல்லாமல் போனது. மகளை அண்டி இருக்கிறாள்! சொல்லிக் காட்டுவதெல்லாம் அவ்வளவு தைரியமாக செய்துவிட முடியாது ஒன்று! பெற்றோரின் சுமை தாங்கமுடியாமல் முதியோர் இல்லங்களில் விடப்பட்ட செய்திகளையும்; படங்களயும் பார்த்து மல்லம்மாள் அச்சத்தில் இருந்தாள். எவ்வளவுக்கு எவ்வளவு மகளுக்கு ஒத்தாசையாக இருக்க முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு ஒத்தாசையாக இருந்து தனது தேவையை மகளுக்கு நிரூபித்துக்கொள்ள நினைத்தாள்.

மல்லம்மாளுக்கு நேரம் ஆகிக்கொண்டிருந்தது. அவள் இன்னும் முகம் கழுவக்கூட இல்லை. பசியாறியப் பிறகே இனிப்பு நீருக்கு மருந்து போட்டுக்கொள்ள வேண்டும்; சமைக்க வேண்டும்; துணி துவைக்க வேண்டும்; பேரப்பிள்ளைகளுக்கு ஊட்டிவிட வேண்டும். படுக்கைகளை எடுத்து வைக்கவேண்டும் என்று பட்டியலை நினைத்துப் பார்த்து மலைத்துப் போகவெல்லாம் அவளுக்கு அவகாசம் இல்லை.

கைப்பேசியில் ‘ராபென்ஸல்’ போட்டு விட்டு ஹிரண்யாவிற்கு ஊட்டிவிட்டாள். சூனியக்காரி ராபென்ஸலை காட்டுக் கோட்டையில் அடைத்து வைப்பதற்குள்ளாகவே அவள் சாப்பிட்டு முடித்து விட்டாள். ஆனால், கைப்பேசியை எடுத்துக்கொள்ள விடாமல் அடம்பிடித்தாள். அவள் விருப்பப்படியே விட்டுவிட்டு, மீதமிருந்தக் கோப்பைகளையும் பிளேட்டுகளௌயும் கழுவி வைக்க முனைந்தாள். அப்போது திடீரென்று மல்லம்மாவிற்கு தலை சுற்றிக்கொண்டு வர, கால்கள் வெட வெடத்துத் தளர்ந்தன. ஒரு கையால் பேசினின் கங்கைப் பிடித்துக்கொண்டு மறுகையால் முகத்தில் கொஞ்சம் தண்ணீரைத் தெளித்துக்கொண்டு அப்படியே பக்கத்திலிருந்த தூணோடு சரிந்து தரையில் உட்கார்ந்துக்கொண்டாள். சுற்றிக்கொண்டிருந்த தலை நிதானத்திற்கு வர கொஞ்ச நேரம் பிடித்தது. அதுவரை உட்கார்ந்துக் கிடப்பதே பாதுகாப்பாய் பட்டது. ஹாலில், இன்னும் ராபென்ஸ்சல் ஓடிக்கொண்டிருந்தது சன்னமாய் கேட்டது. கொஞ்ச நேரம் கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்துக் கிடந்தாள்.

‘ அப்படியே நான் ஏதும் மயக்கம் போட்டு உழுந்துட்டன்னா, ஹிரண்யா நெலம என்னாறது!..’

அந்த நினைப்பே ஒரு எல்லைக்குமேல் மின்சாரம் போன வீட்டைப்போல் இருண்டுப் போனது. மேலும் யோசித்துப் பார்க்காதவரை அந்தப் பேராபத்து தெரியாதது நிம்மதியாய் இருந்தது.

மணி பத்தாகியிருந்தது. இன்னும் பசியாறததால்தான் தலை சுற்றிவிட்டதென்று தன்னைத் தேற்றிக்கொண்டாள். கருப்பட்டி வெல்லம் போட்ட காப்பியைத் தயாரித்து, ‘நைஸ்’ ரொட்டி பிஸ்கட்டுகள் ஐந்தை அதில் நனைத்தெடுத்து சாப்பிட்டாள்.

ஹிரண்யா இன்னும் கைப்பேசியில் படம் பார்த்துக்கொண்டிருப்பதை அறிந்து பதறிப்போய் அதை பிடுங்கிக்கொண்டதும் அவள் ஒட்டாரமாய் அழ ஆரம்பித்தாள். அவளை வாசலுக்கு கூட்டிப்போய் தோட்டத்தில் தூவிய குருணை அரிசியைக் கொத்த வந்திருந்த அவளின் குருவி நண்பர்களைக் காட்டி கவனத்தை திருப்பிவிட்டாள். பேத்தியின் சமையல் பொருட்களை ஹாலில் கொட்டி, நடுவில் அவளை உட்கார வைத்து தனக்கு ஏதாவது சமைக்கும்படி சொல்லிவிட்டு, ஒரு கண்ணை அவள் மேல் வைத்துக்கொண்டே வாசிங் மிஷினில் போடமுடியாத துணிகளை துவைத்தெடுத்து காயப் போட்டாள். எங்கோ சாலையில் போன ஆம்புலன்ஸ் வண்டியின் சைரன் சத்தத்தில் மருந்து எடுத்துக்கொள்ளவேண்டியது ஞாபகம் தட்ட, மாத்திரைகளைப் போட்டுக் கொண்டாள்.

கொஞ்ச நேர சமையல் பணியிலேயே பேத்திக்கு தூக்கம் சொக்க ஆரம்பித்துவிட்டது. கைகளில் ஒரு சின்ன ‘போல்ஸ்டரை’ கொடுத்து, தூக்கி ஆட்டிக்கொண்டே தூங்க வைத்தாள்.. மூடிக்கிடந்த இமைகளுக்குள் ஒரு பங்கிற்கு தங்கிய நித்திரை, திறந்தக்கொண்ட இமைகளில் கால் பங்கிற்கு வெளியாக கண்கள் கிறங்கிக்கொண்டிருந்தாள். ஒரு வழியாக இமைகளை மூடி, தூக்கம் கசிந்து விரயமாவதை நிறுத்திக்கொண்டதும் கைகளுக்குள் பொத்திக் காத்த மெலுகுவர்த்தியைப்போல் பேத்தியின் நித்திரை அலுங்கிப்போகாமல் அவளை, மெத்தையில் கிடத்தினாள்.


தியம் பேரப்பிள்ளைகளுக்கு என்ன சமைப்பதென்று ஒரு யோசனை இருந்தது. ஆனால், பெரியவர்களுக்குதான் என்ன சமைப்பதென்று ஒரே குழப்பம். தினமும் பெரியவர்களுக்கு சமைப்பதை தீர்மானிப்பதில் அவ்வளவு சங்கடத்தை உணர்ந்தாள். அப்படியே மகளுக்கோ, மருமகனுக்கோ பிடிக்காத சமையலாய் இருந்தால், ‘ இந்தக் கறியாம்மா வெச்சிங்க இன்னிக்கி?..’ என்று சர்வசாதாரணமான சலிப்பாய் ஒரு கேள்வி. இரவில், ‘டோமினோஸ்’ ஆர்டர் செய்து சாப்பிடும்போது, அவ்வளவு மெனக்கெடலும் மல்லம்மாவின் வயிற்றில் எரிச்சலை மூட்டி, எரிந்துத் தகிக்கும். அவள் ஒருத்திக்கு சோற்றில் தண்ணீர்விட்டு வெங்காயத்தைக் கடித்துச் சாப்பிடுவதுகூட பிடித்த உணவாகவே இருந்தது. தேவையில்லாமல் இவ்வளவு பிரயத்தனப்பட்டு சமைக்க வேண்டிய அவசியமே இல்லையென்று மனம் வெறுத்துப் போகும். மீந்ததை மறுநாளேனும் சாப்பிட்டாலும் பரவாயில்லை. அதுவும் செய்யமாட்டார்கள். அதைச் சாப்பிடுவதெல்லாம் மல்லம்மாளின் தலையெழுத்தாகவே இருந்தது.

பட்டண வாழ்க்கை!.. வீட்டில் கோழிகள் ஏதும் கிடையாது. ஆனால் பேத்தி, எங்கிருந்துதான் அவற்றின் தூக்கத்தை கற்றுக்கொண்டாளோ? படுக்கையிலிருந்து ‘அம்மம்மாஆஆ….’ என்று அழுகையின் மொழியில் அழைத்தாள். அவளைத் தூக்கி வைத்துக்கொண்டே கொஞ்ச நேரம் சமைத்தாள். இடுப்பு வலிக்க ஆரம்பித்தது. அவளை சோபாவில் உட்கார வைத்து, ‘வைட்டஜன்’ பால் பான போத்தல் ஒன்றை கையில் கொடுத்துவிட்டு பேரப்பிள்ளைகளுக்கு முட்டைப் பொறியலும், பெரியவர்களுக்கு கீரைக் கடைந்து. ‘அவுச்ச மீன்’ சம்பால் செய்து சமையலை முடித்தாள்.


பிற்பகல் மணி ஒன்று. ஹிரண்யாவிற்கு சாப்பாடு ஊட்டிவிட ஆயத்தமானபோதே அவள் மீண்டும் கைபேசிக்கு அடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டாள். மல்லம்மாவிற்கு எப்போதும் போல் கணவனின் ஞாபகம் வந்துவிட்டது. பேரப்பிள்ளைகளுக்கு உணவு ஊட்டுவது எப்போதும் அவருடைய வேலையாக இருந்தது. ‘அவர் இருக்கும்போது எனக்கு கஷ்டமே இல்லை. எதையாவது பேசியோ, படித்துக் காட்டியோ கவனத்தைத் திருப்பி சாப்பிட வைத்துவிடுவார். என்னா பேச்சு! மனுஷன் பேசியேதானே என்னையே மயக்கிப் போட்டார். பல்லு இருக்கும் போதே இந்தப் பேச்சு. அதுவும் இல்லட்டி வாசரு தேஞ்சிபோன பைப்புதான்! மேய்ன்னையே அடச்சிப் போட்டாதான் உண்டு..’ என்று ஒரு குறும்புப் புன்னகையில் கணவனின் பெருமையை நினைத்துக்கொண்டாள். தனக்கு அந்தத் திறமையெல்லாம் கிடையாது, அதற்கு நேரமும் இல்லையென்று கைபேசியில் ‘ சிலீப்பிங் பியூட்டீ’யை போட்டுவிட்டாள். சோற்றையும் கரண்டியையும் பார்த்து உணவை வாங்கிக்கொள்ளும் கவனமும்; அவசியமும் பேத்திக்கு இருக்கவில்லை. சரியாக வாயில் ஊட்ட வேண்டியது பாட்டியின் பொறுப்பாக இருந்தது.

பேரன் ஹிரிதிக், வீட்டிற்குள் நுழையும்போதே,

“ அம்மம்மா இன்னிக்கு சோறு வேண்டாம் அம்மம்மா..” என்று ஆங்கிலத்தில் கோரிக்கையை வைத்துக்கோண்டே வந்தான்.

“ ஒன்னுமே சாப்படாட்டி உங்கம்மா எம்மேல கோவிச்சுக்குவாடா பாபு. கொஞ்சுனாச்சும் சாப்புடு. அம்மம்மா ஊட்டிவிடறன்..” என்று மல்லம்மாளும் ஆங்கிலத்திலேயே கொஞ்சிக் கெஞ்சினாள். முதல் பேரப்பிள்ளை! அவன் பிறந்து மகளுக்கு ஏற்படக்கூடிய அவப்பெயரை மட்டுமா துடைத்தொழித்தான். மல்லம்மாளின் வாழ்க்கையையுமல்லவா நிறைவுசெய்தான். சொந்தமாகச் சாப்பிட சோம்பலாய் இருப்பதே அவனுக்கு பிரச்சினையாக இருந்தது. அவனுடைய குணநலன்களை உருவாக்கிக் கொண்டுவரும் கம்ப்பியுட்டர் விளையாட்டுகளில் பொறுமைக்கெல்லாம் இடமில்லை. பொறுக்கும் ஒவ்வொரு விநாடியும் கண்ணிவெடியில் வைத்துவிட்ட காலை எடுப்பதற்கு ஈடாகும். பாட்டி ஊட்டிவிடுவதற்கு ஒப்புக்கொண்டதும் கொஞ்ச நேரத்தில் சாப்பிட்டு முடித்து, காம்ப்பியூட்டரை முடுக்கிவிட்டு ‘மையிண்ட் கிராப்ட்’ விளையாட்டில் புகுந்துக்கொண்டான். மறுவிநாடி, அவன் உலகம் வேறாகிப் போனது.

பேத்தியை குளியலுக்கு தூக்கிக்கொண்டுபோய் உடைகளை அவிழ்த்துப் போட்டாள். ‘டைபர்ஸ்’சிலேயே மூத்திரமும் மலமும் போனதால், நாத்தம் பொறுக்கக்கூடியதாய் இல்லை. எப்போது மலம் போனாளோ, பிருஷ்டமெல்லாம் அப்பிக்கொண்டு, பிள்ளைகள் உள்ள வீட்டைப்போல் அசிங்கமாய் இருந்தது. ‘டைபர்ஸ்சை’ அவிழ்த்து ஒரு நெகிழிப் பையில் போட்டு குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு வந்து, ஹிரண்யாவை வாசணை லோஷன் போட்டு நன்றாக குளிப்பாட்டி விட்டாள். அவளின் அம்மாவைப்போலவே அவளுக்கும் அடர்த்தியான கூந்தல். ‘ராபன்ஸல்’ கதையை இரவில் படித்துக் காட்டும்போது தனக்கும் அந்த மாதிரி நீண்ட கூந்தல் வளர என்ன செய்யவேண்டுமென்று தாயைக் கேட்டுக்கொண்டிருந்தாள். அதற்கு நன்றாக சாப்பிடவேண்டுமென்று சொன்னதெல்லாம் பலிக்கவில்லை. அடுப்பில் கொட்டாங்குச்சி எரியும் வாசம் வந்தது. பேத்தியைத் தூக்கிக்கொண்டுபோய் எரியும் கொட்டாங்குச்சியை தூபக்கல்லில் போட்டுவிட்டு வெயிலில் நிற்க வைத்து தலையை துவட்டிவிட்டாள். ஓரிடத்தில் நிற்காமல் பாட்டியை அலைக்கழித்துவிட்டாள். அவளைத் தூக்கிகொண்டுவந்து சாம்பிராணி போட்டு எடுப்பதற்குள் மல்லம்மாள் கலைத்துப் போனாள். வெந்நீரில் குளித்தது பேத்தியாகவும் வேர்வையில் நனைந்தது பாட்டியாகவும் இருந்தனர். ஹிரண்யா குளிக்கும்போது தலையில் தூக்கத்தை ஊற்றிக்கொண்டதுபோல் கொஞ்ச நேரத்திலேயே உடல் தளர்ந்து, தூக்கத்தில் கிறங்கிப்போய் இமைகள் திறக்கமுடியாமல் மூடிக்கொண்டாள். அப்படி மூடிக்கொள்வதற்கு முன்னர்தான் அவை, என்னமாய் கெஞ்சின!..


ல்லம்மாள் மணியைப் பார்த்தாள். மணி எப்போதும் போல் மூன்றாகியிருந்தது. கைகால்களை அலம்பிவிட்டு சாப்பிட உட்கார்ந்தாள். உடல் துவண்டுக் கிடந்தது. பேரப்பிள்ளைகளின் தாத்தா இருந்தவரை அவர்களைப் பார்த்துக்கொள்வது மல்லம்மாளுக்கு சிரமமாகவே இருக்கவில்லை. பேரன் பேத்தியென்று உறவை நிறைவு செய்துக்கொண்டு பிறந்த பிள்ளைகள். சந்தோஷத்திலும்; பக்க துணையாக அவர் இருந்ததிலும் நிறைய அசௌகரியங்கள் பார்வைக்கு தெரியவில்லை. அவர்களின் குறும்புத் தனங்கள் மனதில் பூரித்துக் கிடந்தன, அவர்களுக்கு பொழுது போகவும் பேரப்பிள்ளைகள் தேவைப் பட்டனர். ஆனால், இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவர் தவறிப் போனபோது, தனி ஒருத்தியாய் அவர்களைப் பராமரிக்க முடியாமல் மல்லம்மாள் தள்ளாடிப் போனாள். அவர்களின் பிடிவாதமும், நச்சரிப்பும் அவளின் உடல் மற்றும் மனோ திடத்தை விரயமாக்கிப் போட்டன. வயதிற்கே உரிய பொறுமையைகூட இழந்துக்கொண்டிருந்தாள். பேரப் பிள்ளைகளை பார்த்துக்கொள்ளும் ஆசையே விட்டுப் போனதுபோல் உணர்ந்தாள். பகற்பொழுது முழுவதும் அவர்களைப் பார்த்துக்கொள்வதற்கும்; வீட்டு வேலைகள் செய்வதற்கும் போதாமல் போனது. புதிதாக இப்போது, மூக்கின் நுனியிலேயே கோபம் விடைத்துக்கொண்டு நின்றது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவளுக்கிருந்த வயதும், பலமும் இப்பொது இல்லையென்பதை யாரும் உணர்ந்ததாகவே தெரியவில்லை. முன்போலவே இன்னும் நடமாடிக்கொண்டிருந்ததால், அவளின் வயதையும் நோயையும் மகள் ரொம்பவும் சௌகரியமாய் மறந்துப் போனாள்.

மகளையே ஒட்டுமொத்தமாக குறைச் சொல்வதற்கும் இல்லை. பாவம், அவள்தான் என்ன செய்வாள்? மாமியார்காரியும் ஒரு நோயாளி!. அதோடு, மாமியார்காரி இருந்தது நெருப்பெட்டியை போன்ற ஒரு ஃபிளாட் வீடு!. நாளெல்லாம் நெருப்பெட்டிக் குச்சிகளைப்போல் ஃபிளாட்டிற்குள்ளேயே அடைந்துக் கிடக்க வேண்டும். அதற்கேற்ற மாதிரி ஜெயில் கதவுகளைப்போல் வாசலில் இரும்பு கேட். அவ்வளவுதான்! ராதாபாய் பிடிவாதமாக பிள்ளைகளை அங்கே விடுவதில்லையென்று மறுத்துவிட்டாள். குழந்தைப் பராமறிப்பு இல்லங்களில் விடவும் பயமாக இருந்தது. பேபி சிட்டர்கள் பிள்ளைகளுக்கு இருமல் மருந்து கொடுத்து தூங்கவைப்பது; பாலியல் துன்புறுத்தல் செய்வது போன்ற பத்திரிக்கைச் செய்திகளைப் படித்து அவள் பெரும் கலவரத்திற்குள்ளாகிப் போனாள். மகளுக்கும் வேறு வழி இருக்கவில்லைதான்!. ஆனால்,வேலைக்குப் போவதற்கு முன்னர் அவளால் செய்துவிட்டுப் போகக்கூடிய சின்ன சின்ன வேலைகளைக்கூட செய்யாமல் போனதுதான் மல்லம்மாவிற்கு வயிற்றில் நெருப்பைப் பற்றவைத்தது. அவளின் கணவனுக்கு நெஸ்காப்பி கலக்கி ஃபிளாஸ்கில் ஊற்றிவைக்கலாம்; பேசினிலிருந்த பிளேட்டுகளை கழுவி வைக்கலாம்; தோசைக்கு ஊறப்போட்ட அரிசியை, தூங்கப் போவதற்கு முன்னர் அரைத்து வைக்கலாம்; வாஷிங் மிஷினில் துணிகளைத் துவைத்தெடுக்கலாம் என்று செய்வதற்கு எவ்வளவோ வேலைகள் இருப்பதாக மல்லம்மாவிற்கு தோன்றியது. மகள், தன் நெஞ்சில் குத்தியிருந்த ‘டெட்டு’வைப்போல் உடம்பில் ஊறிப்போயிருந்த சோம்பலை வேலைக்கு போய் வந்தக் களைப்பில் ஒளித்துவைத்து, மனசங்கடத்தைத் தூண்டினாள். ராதாபாய் குழந்தையாய் இருக்கும்போது தான் விடியற்காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து, வீட்டு வேலைகளை செய்து, அவளுக்கு வேண்டிய உணவைத் தயாரித்து, ஆறு மணிக்குள் பத்து வீடுகள் தள்ளியிருந்த தங்கையின் வீட்டிற்கு போய் அவளை விட்டுவிட்டு ஆறரை மணிக்கு வேலைக்குப் போனதை மல்லம்மாள் நினைத்துக்கொண்டாள்.


சாப்பிட்டு முடிந்தப் பின்னர், சாப்பாட்டு பாத்திரங்களை கழுவி வைத்துவிட்டு மாடிக்கு படுக்கை அறைகளைச் சுத்தம் செய்யப் போனாள். நித்திரையின் அலங்கோலம், அச்சு பிசகாமல் அப்படியே படுக்கையில் கிடந்தது. முதலில் மகளின் படுக்கையை சீர் செய்தாள். பெட் ஷீட்டை உருவி எடுத்து உதறி, மறுபடியும் மெத்தைமேல் அழகாக போர்த்தி விட்டாள். ஒவ்வொருவருடைய போர்வைகளையும் உதறி தனித்தனியாக மடித்து வைத்தாள். தலையணைகளை தட்டி தலைமாட்டில் நேர்த்தியாக அடுக்கி வைத்தாள். மல்லம்மாளும் அதை செய்யாவிட்டாள் ராத்திரி மகளும், மருமகனும் வந்து அப்படியே படுத்துக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பேரனும், அவளும் படுத்துக்கொள்ளும் அறைக்குப் போனாள். பேரன், தான் விரல் சப்பும் பழக்கத்தை மறந்துவிடாதிருக்க தலையணையில் பெரிய வட்ட வடிவு திட்டை பதிவு செய்திருந்தான். அந்த உறையைக் அவிழ்ந்து துவைக்கப் போட்டுவிட்டு புது உறையை போட்டுவிட்டாள். மல்லம்மாளுக்கு தெரிந்து மகள், ஒரு நாளும் அதை செய்திராததை நினைத்துக்கொண்டாள். கட்டிலுக்குப் பக்கத்தில், இரவில் வரும் இருமலோடு, வயிற்றெரிச்சலையும் காறித் துப்புவதற்கு வசதியாய் வைத்திருந்த மணல் நிறம்பிய பால்டின் குவளை தரையில் விழுந்து மணல் சிதறிக் கிடந்தது. மணலை அள்ளி சுத்தம் செய்தாள். படுக்கை விரிப்பை உதறி, நேர்த்தியாய் மடித்து வைத்தாள்.

வெளியே, அன்று எரிந்த வெயிலில் தீய்ந்துப் போனதுபோல் மேகம் கருமைப் படர்ந்துக்கொண்டு வந்தது. ‘அப்பா, என்னா வெயிலு?..’ என்பதுபோல் இடி வேறு இடையிடையே முனகிக்கொண்டிருந்தது. மல்லம்மாள், அவசரமாகப் போய் உலர்ந்துப் போயிருந்த துணிகளை சேகரித்து வந்து மெத்தையில் போட்டாள். உறுப்பினர்கள் வாரியாக துணிகளை மடித்து வைத்தாள். மகள் மற்றும் அவள் குடும்பத்தினரின் துணிகளை அவளுடைய அலமாரியில் வைத்துவிட்டு தன்னுடையதை தன்னுடைய அலமாரியில் வைத்துக்கொண்டாள். மாடியிலிருந்து வீட்டைக் கூட்டிக்கொண்டே கீழே இறங்கினாள். மல்லம்மாவின் ஒரு நாள் பணிகளைப்போல் மாடிப்படிகள் நீண்டுக் கிடந்தன. ஹால், அவளின் மனசைப்போல் விளயாட்டுப் பொருட்களால் சிதறிக் கிடந்தது. அவற்றையெல்லாம் எடுத்து நாளை மீண்டும் ஹாலில் போட்டுச் சிதறடிக்க ஸ்டோர் ரூமில் அடுக்கி வைத்தாள். அந்த விளையாட்டுப் பொருட்களில் ரப்பர் ‘ஸ்டெதஸ்கோப்பை’ பார்த்ததும் தான் மத்தியானம் மாத்திரை சாப்பிட மறந்துப் போனது ஞாபகத்திற்கு வந்தது. இரவு உணவிற்குப் பின்னர் மீண்டும் மாத்திரை சாப்பிட வேண்டியிருந்ததால் தவறிப் போன முறையை அப்படியே விட்டு விட்டாள்.

இரவு சாப்பாட்டின் ஞாபகம் வந்ததும் மிச்சமிருந்தக் கறிக்குழம்பு போதுமா என்று பார்த்தாள். போதாதுபோல் தோன்றியது. ஏதாவது சமைக்கவும் சலிப்பாய் இருந்தது. இருந்த காய்கறியை சூடாக்கி வைத்தாள்.


மணி ஏழாகியிருந்தது. மகள் இன்னும் வந்திருக்கவில்லை. பேரப்பிள்ளைகள் எழுந்துவிட்டிருந்தனர். பேத்தியை குளிப்பாடி ‘டைபர்ஸ்’சை போட்டு, இரவு உடைகளை அணிவித்துக்கொண்டிருந்தபோது, மகள் வந்துச் சேர்ந்தாள். மருமகனும் கூடவே வீடு திரும்பியிருந்தான்.

“ கொஞ்ச இருங்கம்மா குளிச்சுட்டு வந்திர்றேன்…” மறுப்புச் சொல்லக்கூடாத ஆணையை இட்டதுபோல் பதிலுக்கும் காத்திராமல் ராதாபாய் குளிக்கப் போனாள். மல்லம்மாள் ஹாலை எட்டிப் பார்த்தாள். மருமகன், ஹாலில் கைபேசியை பார்த்துக்கொண்டிருந்தான். பேரனையும் குளிப்பாட்டி, உடைகளை மாற்றி விட்டாள். பேரப்பிள்ளைகள் இன்னும் சாப்பிட்டிருக்கவில்லை. சாப்பாட்டை எடுத்து மேசையில் வைத்தபோது மகள் குளித்துவிட்டு வந்தாள்.

மல்லம்மாள் குளிக்கப் போனாள். உடல் சுடுநீர் குளியலை வேண்டிச் சிலிர்த்தது. கொஞ்ச நேரம் ஷவரின் கீழேயே நின்றுக்கொண்டிருந்தாள். உடல் அசதிக்கு அந்த இளஞ்சூட்டு நீராட்டு இதமாக இருந்தது. சோப்பு போட்டு நன்றாக தேய்த்துக் குளித்ததில் அசதியும் தேய்ந்துப் போனதுபோல் உடல் புத்துணர்ச்சி பெற்று உதறியது. பாட்டியாகிப் போனவர்களின் சீருடையான தொளதொளத்த ரவிக்கையையும் கைலியையும் அணிந்து, கடவுளின் அனுக்கிரகம் வேண்டும் என்பதை நெற்றியில் தீட்டி கடவுளுக்கு ஞாபகம் படுத்திக்கொண்டே கீழே வந்தாள். மகளும் மருமகனும் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். வரக்கோப்பியை கலக்கி, இரண்டு மாசீமோ ரொட்டித் துண்டுகளை வாட்டி எடுத்துக்கொண்டு உட்கார்ந்தாள்.

“ ஏம்மா ரொட்டி சாப்புடறீங்க?.. சோறு சாப்புடுலியாம்மா?..”

“ இல்லம்மா.. வயிறு ஒரு மாரியா உப்பிசமா இருக்குற மாரி இருக்கும்மா. அதான்!..” என்று, போதாத குழம்பை இல்லாத உடல் உபாதையில் மறைத்து சமாளித்தாள்.

மகள். அம்மாள் சாப்பிடுவாளென்று மீதி வைத்திருந்த குழம்பையும் ஊற்றிக்கொண்டு சாப்பிடலானாள்.

சாப்பிட்டு முடிந்ததும் உடனே படுக்கக்கூடாது என்பதற்காக கொஞ்ச நேரம் தொலைக்காட்சி பார்க்கலாமென்று உட்கார்ந்தாள் மல்லம்மாள். வெளியே பெய்துக்கொண்டிருந்த மழையில் தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதாக ஆஸ்ட்ரோ அறிவிப்பு சொன்னது. தொலைக்காட்சியை ஆப் செய்துவிட்டு படுக்கப் போனாள். மெத்தையில் பேரன், இரண்டு விரல்களில் தூக்கத்தை உறிஞ்சிக்கொண்டிருந்தான்.

‘ ராமா..’ என்று மெத்தையில் படுத்தாள். நாள் முழுவதும் நின்றுக்கொண்டிருந்த அலுப்பை மெத்தைக்கு இடம் மாற்றினாள். மனசு கொஞ்ச நேரம் அன்றைய தினத்தை அசைப்போட்டது. பேத்தியின் பிடிவாதம்; பேரனின் கோபம்; மகளின் அவசரம், சோம்பல்; மருமகனின் கைபேசி உலகம்; தீராத வீட்டு வேலைகள் எல்லாம் அந்த நாளைப் போலவே சலிப்புடன் கடந்துச் சென்றன. நினைப்பெல்லாம் ஒரே கசப்பாய் இருந்தது. எதிரே, சுவற்றில் பல்லியொன்று யாரிடமோ புகார் ஒன்றை வைப்பதுபோல் கத்திக்கொண்டு ஓடியது. மல்லம்மாள் தன்னிரக்கத்தோடு அதைப் பார்த்து பெருமூச்செறிந்தாள்.

கட்டிலையொட்டி இருந்த ‘சைட் மேசையில்’, மல்லம்மாளைப் போலவே ‘சைலண்ட் மோட்’-ல் அவளின் கைப்பேசி!. நேற்றிலிருந்தே அது அங்கேயே இருப்பதை அறிந்து எடுத்துப் பார்த்தாள். ‘வாட்ஸ் ஆப்பீல்’ சில செய்திகள் வந்திருந்தன. மகளிடமிருந்து இன்று ஒரு ‘வாட்ஸ் ஆப்’ செய்தி வந்திருப்பதையறிந்து அதை மட்டும் திறந்துப் பார்த்தாள்.

‘ HAPPY MOTHER’S DAY, AMMA..’ என்று பலூன்கள் பறந்தன.

மல்லம்மாளுக்கு ஏனோ சம்மந்தமில்லாமல் முதியோர் இல்ல நினைப்பு வந்தது. அருகிலிருந்த கடிகாரத்தை எடுத்து, நாளை காலை ஆறரை மணிக்கு அலாரத்தை வைத்துவிட்டு, கண்களில் ஊறிய தூக்கத்தை மெல்ல மெல்ல இமைகளை மூடிப் பிடிக்கத் தொடங்கினாள்.

8 Replies to “இலவசமாய் ஒரு வேலைக்காரி”

  1. மல்லம்மாளின் இடைவிடாத வேலை பளு எல்லா பாட்டிமார்களும் அனுபவிப்பதுதான். பேரப்பிளைகளை பார்த்துக்கொள்ளும் சாக்கில் எல்லா வேலைகளையும் வயதோடிப்போன கிழவியிடம் விட்டுவிட்டு அவள் படும் துயரத்தை உணராமல் இருப்பது இப்போதுள்ள நவீன வாழ்க்கையின் எச்சமாகும். மல்லாமாளின் படும் சிரமம் நன்றாக உருப்பெற்றிருக்கிறது. கிலிஷே வகைக் கதை.

  2. வேலை அலுப்புத் தாங்காது தூணோடு சரிந்து தரையில் உட்கார்ந்து கொண்டது மல்லம்மா பாட்டி மட்டுமல்ல இந்த யந்திரத்தினமான வாழ்வியலும் கூடத்தான். முதியோர்களிடம் அனுசரணையுடன் இருப்பது இக்கால சூழலில் அரிதே.யதார்த்தம்.

    1. ஆமாம் தோழர். இந்த சோஷியல் மீடியாவின் ஆதிக்கம் ஆரம்பமானதிருந்து parenting skill குறைந்துப் போனது. பிள்ளைகளைப் போலவே அவர்களும் அதற்கு அடிமையாகிப் போயினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.