அது இருளால் செய்த ஒரு வழிச்சாலை!

வித்யா அருண்

அது இருளால்  செய்த ஒருவழிச்சாலை. அதை அறியாதவளாய் அவள் இருந்தாள். மனது, யாரோ அதை முற்றாய்த் துடைத்தது போன்று எண்ணங்களற்று இருந்தது. இருளின் நிழலுருவில் தெரிந்த மெத்துமெத்தான நாற்காலி போன்ற ஒன்றில் உட்கார்ந்ததும் அது அம்மாவின் மடியைப்போல அவளை உள்வாங்கிக்கொண்டது. கால்களை மடக்கி வயிறோடு அண்டக்கொடுத்து ஒரு புறமாய் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.

நீண்ட, மாறுபாடு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து சலித்துவிட்டதாய் அவளுக்கு தோன்றியது. எந்தத் தீர்மானமும் இல்லாத அந்த நொடியில் ஒளி வந்த வாசல்கள் அனைத்தும் மூடிக்கொண்டன. வெகுவேகமாக அவள் எங்கோ நகர்ந்துகொண்டிருக்கிறாள். அவளது கால்கள் அந்தரத்தில் தொங்குவதை அவளால் தெளிவாய் உணரமுடிந்தது.

கன்னக்கதுப்புகளில் உணர்ந்த குளிரையும் தாண்டி ஒரு அழுத்தம் மார்புகளில் பரவியது. முலைகளில் ஒரு வித கூச்சத்தை அனுபவித்தாள்.

கால்களுக்கிடையில் பரவிய அழுத்தமான திரவம், அவளின் இரவு உடையை தொட்டுவிடும் தருணத்தில் ரேணு விழித்துக்கொண்டாள்.

கழிவறைக்கு செல்லும் முன்னரே அவள் கண்கள் அணையாடைகள் இருந்த கைப்பையை தேடின.அவசரமாக எண்ணிவைத்துக்கொண்டாள்.குறைந்தது ஒரு நாள் தேவைக்கென்று ஏழாவது வேண்டியிருக்கும். கடவுளின் படைப்பில் பெண் உடலை என்ன வென்று சொல்வது? அதிசயம் என்றா? உடைக்கமுடியாத பல  புதிர்களின் கலவை என்றா?

விடிவதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது.

கண்ணுக்கெட்டும்தூரத்தில் தெரியும் கான்பரா எம். ஆர். டி நிலைய வேலைகள் மட்டும் மஞ்சள் ஒளியில் நடந்துகொண்டிருக்கின்றன.

மனம் கனமாக இருக்கும்போதெல்லாம், காலாற நடப்பது ரேணுவின் பழக்கம். சாலையோர மாதுளைகளும், நந்தியாவட்டைப் பூக்களையும் பார்த்தபடி, புதிதாய்த் திறந்திருக்கும் கான்பரா லிங்க் வழியாக செம்பவாங் பேரங்காடி வரை சென்று திரும்புவாள்.

இந்த நள்ளிரவில் எங்கே நடப்பது ?

ரேணுவின் கணவன் பிரேமுக்கு  நான்கு நாட்களுக்கு ஒரு முறைதான் வீட்டுக்கு வரும்படியான வேலை. செம்பவாங் கப்பல் கட்டும் தளத்தில் பொறியாளர்.

யாருமில்லாத வீட்டின் தனிமைக்குத் துணையாகப் பொத்தான்களை அமுக்கி, தொலைக்காட்சியை உயிர்ப்பித்தாள். சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதா இல்லையா என்று விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்த ரத்தப்போக்கையும், அதற்கு ஈடாக தொப்புளிலிருந்து அடிவயிறு வரை தசைகளின் உள்ளே பிசைந்த வலியையும், அது உண்டாக்கிய அதிர்வுகளையும் உற்றுநோக்கினாள்.

“எந்த விஷயமாக இருந்தாலும் பெண்களுக்கு மட்டும் வாழ்க்கை ஏன் அதிக வலிகளையும், முரண்களையும் கொண்டதாய் இருக்கிறது?”

மறுபடி மறுபடி அதே சுழற்சி தான். மாறாத வலியையும் சேர்த்து விழுங்க அவளது உடலும் மனமும் பழகிவிட்டிருந்தன.

பெண்ணுக்கு பேரனுபவம் என்று சொல்லப்படுகின்ற தாய்மை, திருமணமான இந்த இரண்டரை ஆண்டுகளில் இயல்பாக வாய்க்கவில்லை.

ஃபோலிக் அமில மாத்திரைகளை விழுங்கிப் பார்த்தாள். உடல் எடையைச் சரியாக ஐம்பது நான்கு கிலோவில் தான் வைத்திருக்கிறாள்.

வேலை.. வீடு.. குழந்தை என்று படிநிலைகளை அடுக்குவது நம் சமூகத்தில் பழகிப்போன ஒன்று தானே!

முதல் வருடம் இந்தியாவிலிருக்கும் உறவுகள் நல்ல செய்தி இருக்கிறதா என்று அடிக்கடி கேட்டு நச்சரிக்கவில்லை. இப்போதெல்லாம் யாருக்கும் வாட்ஸாப் செயலியில் பேசக்கூட பிடிக்கவில்லை

யாரைத்தொடர்பு கொண்டாலும், நல்ல செய்தி உண்டா என்று கேட்டு அவளை விசனப்படவைக்கின்றனர்.

வாழ்க்கை தரும் கனமான நாட்களில், யாரோடும் பேசாமல் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையில் மனதில் நின்ற தருணங்களை நினைவில் கொண்டு வருவதில் ரேணுவுக்கு ஒரு சுகம் இருக்கவே செய்கிறது.

 திருமணத் தொடர்புக்கான இணையதளம் வழியாக அமைந்தவன் தான் பிரேம். மாநிறமும் ஐந்தடி பத்து அங்குல உயரமும், அடர்ந்த மீசையுமாக இருந்தவனை உடனே பிடித்துப்போனது ரேணுவுக்கு.

பிரேமுக்கும் அப்படித்தான். திருத்தமான முகவெட்டோடு, சுருட்டை கேசமும், சிறிய ஜிமிக்கியோடும் வந்தவளை முதல் பார்வையிலே தன் மனதோடு சேர்த்துக்கொண்டான்.

எந்தச் சொந்தமும் இல்லாத, தாங்களே பார்த்து நிச்சயித்த திருமணம். இருமுறை தான் அவர்கள் திருமணத்துக்கு முன் சந்தித்துக்கொண்டார்கள்.

“ரேணு. நண்பர்களோட தான் அறை எடுத்து தங்கிகிட்டு இருக்கேன். நீ சிங்கப்பூர் வரதுக்குள்ள தனியா வீடு எடுத்துட்றேன். என் குடும்பம் எப்படி இருக்கணும்னு கனவு எனக்கு நிறைய இருக்குது. குறைஞ்சது ரெண்டு பெண்பிள்ளைங்க.. ஒரு பையன். வாழ்க்கை குழந்தைகளை சுத்தி இருக்கணும்.”

உனக்கு வாழ்க்கை எப்படி இருக்கணும்னு யோசிச்சிருக்கியா?”

“இதுவரைக்கும் எங்கப்பாவுக்கு கஷ்டம் கொடுத்துடக்கூடாதுங்கிற எண்ணம் மட்டும் தான் மனசுல இருக்குது. எனக்கு அந்தந்த நேரத்தைத் தாண்டி 

ரொம்ப யோசிக்கற பழக்கம் இல்லங்க. எங்கம்மா உயிரோட இருந்த வரைக்கும் திட்டுவாங்க. ஏண்டி இப்படி இருக்கேனு?

வாழ்க்கை போற வழியில போய் ஒரு பெரிய ஆத்துல மிதக்கிற இலை மாதிரி அந்த நீரோட்டத்தோட போற பயணம் கூட நல்லா தான் இருக்கும்னு நான் நம்பறேன்.”

சொல்லி முடித்து புன்னகைத்த ரேணுவின் கைவிரல்களைக் கோர்த்துக் கொண்டான் பிரேம்.

அவர்களைப்பார்த்தபடியே, தூரத்தில் தெரிந்த கப்பல்களை தன் மடியில் தாங்கியபடி குதியாட்டம் போட்டுக்கொண்டிருந்தது கடல்.

பிரேம் சராசரி இந்தியசமூகத்தின் மனஇயல்பை கொண்டவன். சுற்றிலும் உற்சாகத்தைப் பகிர நண்பர்கள், வார இறுதிகளில் ஒரு சில பியர்கள், எப்போதாவது வீரமாகாளியம்மன் கோயில் என்று வாழும் வாழ்க்கை அவனுடையது.

தன் பதின்ம வயதில் அம்மாவைப் புற்றுநோய்க்குப் பலி கொடுத்தவள் ரேணு.

தானுண்டு தன் படிப்புண்டு என்று வளர்ந்தவள். நெருங்கிய சொந்தங்கள் விழுதாய்த் தாங்குகிற உறவு சுகம் வாய்க்காத குடும்பம் அவளுடையது.

சிங்கையில் வந்து இறங்கியதுமே, “எங்கப் பார்த்தாலும் பச்சைபசேல்னு இருக்குங்க!” என்று குழந்தை போல குதூகலித்தாள் ரேணு.

வானம் அவளைத் தூறல் போட்டு வரவேற்றது. மிக லேசான தூறல், அவளுக்கான பிரத்தியேகமான வரவேற்பாக அதை அவர்கள் இருவருமே நினைத்தார்கள்.

நான்கு பெரிய அறைகள் கொண்ட வீடு. பக்கத்திலே தமிழர் ஒருவரின் கடை.. காலாற நடக்க அழகான சாலைகள் என இருந்த சுற்றுப்புறம் ரேணுவை சிங்கையோடு ஒட்ட வைத்தன.

முதல் நான்கு மாதங்களுக்குளேயே ரேணுவுக்கும் வேலை கிடைத்துவிட்டது.

பாங்காக், லங்காவி என்று இரண்டு மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கும்போதெல்லாம் ஊர் சுற்றி வந்தார்கள்.

குழந்தை வேண்டாம் என்ற முடிவு இருவருக்குமே இல்லை. ஆனால் இப்போதே வேண்டும் என்ற உந்துதலும் இல்லை. ஒருவர் மற்றவருக்கு தன் அன்பைப் பகிரும் வழியாகத்தான் அவர்களின் தாம்பத்யம் இருந்தது.

பிரேமின் நண்பர்களான குமாருக்கும், மணிக்கும் கூட அவர்களுக்கு திருமணம் ஆன அதே ஆண்டு தான் திருமணம் ஆனது. அவர்கள் எல்லாம் வளைகாப்பு, குழந்தைக்கு பெயர்சூட்டுவிழா என்று வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்திற்கு பயணிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

நண்பர்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் வாழ்க்கையின் ஒரே நிலைகளில் உள்ளவர்களோடு பயணிக்கத்தொடங்க, தாங்கள்  தனிமைப்படுத்தப்படுகிறோம் என்ற எண்ணம் பிரேமுக்கு அதிகமாகிக் கொண்டிருந்தது. 

ரேணுவின் எண்ணச்சங்கிலிகளை வாசல்மணி அறுத்தது.

“என்ன ஒரு மாதிரியா இருக்க!” காலையில் வேலை முடிந்து வந்த பிரேம்  முகத்தின் உள்ளேயும் படித்தான்.

“வீட்ல இல்லங்க.”

ஒன்றும் சொல்லாமல் முகத்தைத்தூக்கி வைத்துக்கொண்டு போன பிரேமை என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தாள் ரேணு.

இப்போதெல்லாம் அடிக்கடி அவன் பேசும்போது குழந்தையை பற்றிய பேச்சு அதிகமாக இருக்கிறது. அவளை விட அவனுக்குத்தான் எதிர்பார்ப்பு அதிகம்.

சமீப மாதங்களில் இணையத்தில் உள்ள பக்கங்கள் எல்லாம் கரு உண்டாக என்ன செய்யலாம் என்று சொன்ன  அசட்டு யோசனைகளைக்கூட செயல்படுத்தத்தொடங்கிவிட்டாள்.

மூன்று ஆண்டுகள் முழுதாய்க் கடந்துவிட்ட திருமண நாளில்,

இனியும் தாமதிக்காமல் மருத்துவரைப்பார்க்க வேண்டும் என்றான் பிரேம்.

 யாரிடமோ விசாரித்து,  இணைய வழி தேடி குழந்தைப் பேறுக்கான சிறப்பு மருத்துவரைப்பார்க்க தாம்சன் மெடிக்கல் சென்டருக்கு சென்றார்கள்.

அவர் பெயர்  மருத்துவர் ஜேம்ஸ் ஒங். அழுத்தமான கண்ணாடிக்கு பின்னால் அவருக்கு முன்னால் அழுத நிறைய ஜோடிகளை பார்த்திருப்பார் போலத்தெரிந்தது.

இணையத்தில் அவரைப்பற்றி எழுதியவர்கள், கடைசி ஆயுதமாகத்தான் சோதனைக்குழாய்  முயற்சி செய்வார் என்றார்கள்.

அவர் தலைக்கு மேலே நிறைய குழந்தைகளின் புகைப்படங்களை ஒட்டி வைத்திருந்தார். “இத்தனை குழந்தைகளா சோதனைக்குழாய் முறையில் பிறந்திருக்கின்றன?” என்று அயற்சியாய் இருந்தது ரேணுவிற்கு.

சிங்கையின் தனியார் மருத்துவமனைகளில் முதலில் நம்மைச் செலவுக்கு தயார்படுத்த, விலைப்பட்டியலாகத் தகவல்களை கொடுத்துவிடுகிறார்கள்.

சிங்கையில் மகப்பேறு மருத்துவத்திலும், குழந்தையின்மை சிகிச்சையிலும் ஆண் மருத்துவர்கள் அதிகம் இருக்கிறார்கள்.

“திருமணம் ஆகி மூன்று ஆண்டுகள் தானே ஆகின்றன. முதலில் அடிப்படை சோதனைகள் செய்வோம். என்னால் ஆன முழுப்பங்களிப்பை செய்கிறேன். உங்களுக்கு நிச்சயமா குழந்தை பிறக்கும். கவலை வேண்டாம்,” என்றார்.

என்ன மென்மையாகப் பேசினாலும், மருத்துவர் ஆண் என்ற மனத்தடையை

ரேணுவால் தாண்டவே முடியவில்லை. பிரேமுக்கு அவளின் மனத்தடைகளை மதிக்கத் தோன்றவில்லை.

முதல் கட்ட சோதனையை முடித்தார்கள் அவனுக்கு விந்தணு எண்ணிக்கையிலும், அவற்றின் வேகத்திலும் பிரச்சனை இல்லை. அவன் முகத்தில் தெரிந்த நிம்மதியின் எதிர்வினையாய் அவளுக்கு கலக்கம் அதிகம் ஆனது. 

அவன் எப்போதாவது கோயிலுக்கு செல்பவன். அவளுக்கு இருந்த கடவுள் பக்தியில், செவ்வாய்க்கிழமைகளில் போடோங் பசிர் கோயிலில் சிவ துர்க்கைக்கு விரதமிருந்து, எலுமிச்சம் பழங்களில் விளக்கேற்றி நேர்ந்த பின்பும் ஒரு மாயமும் நடக்கவில்லை.

பெண்ணுடலைப் பிறர்  சோதிக்கும்போது அதுவே அவளுக்கு

இன்னொரு சோதனை ஆகிவிடுகிறது. அணிந்திருந்த லெக்கிங்க்ஸும், அதனோடு சேர்த்து உள்ளாடையையும் கழட்டி, கால்களை அகட்டி, ரப்பர் படுக்கையில் படுக்க வேண்டும் என்றார்கள்.

இது வேறு வகையான சிலுவையாக அவளுக்குப்பட்டது. மருத்துவரும், தாதியும், கால்களைப் பிரிக்கவைத்து, உள்ளே ஊசி போன்ற கருவியைச் செலுத்திச் செய்யும் சோதனையில் மானமும் சேர்ந்து தானே போகிறது?

ரேணுவிற்கு கருமுட்டையின் வளர்ச்சி குறைவாக இருக்கிறது.கருப்பையில் நீர்க்கட்டிகளும் அதிகமாக இருக்கின்றன. கருப்பைக்குழாய்களில் அடைப்பு இருக்கிறதா எனப் பார்க்க ஒளிக்கற்றைகளைக்கொண்டு செய்யும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார் மருத்துவர் ஆங்.

இந்த சிகிச்சையில் கருப்பையில் பாதிப்பு வர ஆயிரத்தில் ஒரு பங்கு சாத்தியம் இருக்கிறது என்று விளக்கி, ஒப்புதல் கையெழுத்தும் வாங்கிக்கொண்டார்.

மருத்துவர் என்ன சொன்னாலும் கேட்கிற மனநிலையில் தான் இருக்கிறான் பிரேம். முடியாது என்ற மறுப்பு, ரேணுவை இந்த வாழ்க்கையிலிருந்து முற்றிலும் தூக்கி எறிந்து விடக்கூடும்.

அறுவை சிகிச்சைக்கென அனுமதித்த நாளில்  கைமுட்டியை மடக்கவைத்து மைய நரம்பில் ஊசி ஏற்றி, வாயை அகல திறந்ததும், உயிர் பறவை கூடு விட்டு போனது போல, ஒன்றுமே இல்லாமல் ஆனது.

மீண்டும் உணர்வு வந்தபோதுதான் தொப்புளிலும் அடிவயிற்றுக்கு கீழேயும் ஒரு பெரிய ஆணி அளவுக்கு ஓட்டைபோட்டு உள்ளே இறங்கியிருக்கிறார்கள் என்று புரிந்தது. கருப்பைக்குள் இருந்த நீர்க்கட்டிகளை எடுத்துவிட்டார்களாம்.

பல நேரங்களில் ரேணுவுக்கு தான் கோழி, வாத்து மாதிரி பறவையாக இருந்திருக்கலாம் என்று தோன்றும். முட்டை எந்த அளவில் இருக்கிறதென்று யாரும் பறவையின் உடலை நோண்டிப்பார்க்கப்போவதில்லை.

கருமுட்டை வளர்ச்சியை அதிகப்படுத்த வயிற்றுப்பகுதியில் போட்டுக்கொள்ளவேண்டிய ஊசியையும், ஹார்மோன் மாத்திரைகளையும்  வாங்கி வந்தாள். 

தனக்கும் சேர்த்துத் தீர்மானித்த கணவன், இந்த வலியை உணரக்கூடுமா என்று யோசித்தாள். சொல்லிக்கடக்க முடியாத இம்மாதிரி நாட்களை மௌனமாய்க் கடப்பதே அவற்றை வேகமாய் விழுங்கும் வழியாகபட்டது.

ரேணு யாரிடமும் சண்டை போடும் ரகம் இல்லை. தன் தேவைகளையும், நியாயங்களையும் சொல்லும் ரகமும் இல்லை. அவள் என்ன ரகம் என்று அவளுக்கே குழப்பம் தான்.

பணத்தைக் கொடுத்து மருத்துவப்படிப்புக்கான இடத்தை வாங்குவது மாதிரி, பெரும்பணம் கொடுத்தால் குழந்தை வந்துவிடுமா என்ன ?

இன்னொரு உயிருக்கு உயிர்வலி தராமல் இங்கே வந்தவர்கள் யார்?

தினமும் ஊசி போடுவது அவனுக்குக் கடமையாயிற்று. ஊசியைக்கண்டாலே அலறும் அவளுக்கு வயிற்றுப்பகுதியில் நேராய் செலுத்தப்படும் ஊசி அது.

தொடர்ச்சியாய் மூன்று வாரங்களுக்கு பின்னர், கருமுட்டையை வெளியே எடுக்கும் நாள். கீழுடலை தனியாக கழற்றி வைப்பதாய் நினைத்துக் கொண்டு, கட்டிலில் ஏறிக்கொண்டாள் ரேணு.

மருத்துவர் வயிற்றுப் பகுதியை மரக்கச் செய்யும் ஊசியைப் போட்டுவிட்டு, ஒரு சிறு குழாயை அவளின் பிறப்புறுப்பின் வழிய நுழைத்து, நான்கு கருமுட்டைகளை வெளியே எடுத்தார்.

யாரும் பார்க்காத உடல்பகுதிகளை மறுபடி மறுபடி இவர்களிடம் காட்டவேண்டிருக்கிறது. வேசிகள் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமோ என்ற எண்ணம் மேலிடுவதை தடுக்கமுடிவதில்லை.

மனிதன் நிலவில் கூட வாழலாம். ஆனால் பிறக்க, எப்போதும் பெண்ணின் கருவறை தான் வேண்டிருக்கிறது. 

நியாயமாய் பார்த்தால் பெண் அனுபவிக்கும் பெருவலிகளுக்கு, கடவுள்தான் வந்து பதினெட்டு படி தாண்டி, பெண்ணுடலுக்கான வடிவமைப்பை வேறுமாதிரி யோசித்திருக்க வேண்டும் என்று சமரசம் பேசி இருக்கவேண்டும்.

பத்து மாசம் சுமந்து உன்னைப் பெத்தேனே என்று சொல்வதெல்லாம் போய், கருவுறுவதற்கான மாதங்களையும் சேர்த்துச் சுமந்தேனே என்று தான் சொல்ல வேண்டுமோ ?

இனி முட்டைகளை விந்தணுக்களோடு சேர்ப்பதை அவர்கள் செய்வார்கள்.

செயற்கையான மகரந்த சேர்க்கையில் உண்டாகப்போகும் கரு.

அடுத்த நான்கு நாட்களில், மருத்துவமனையிலிருந்து அவன் எதிர்பார்த்த நல்ல செய்தி வரக் காத்திருந்தான்.

இந்த “உள்ளே வெளியே விளையாட்டு” எப்போதும் முடியும் என்ற அயர்ச்சி மேலிட்டது ரேணுவிற்கு. சுரப்பிநீர்(Hormone) மாத்திரைகள் செய்த அட்டகாசத்தில், வாழ்நாளில் மொத்தக்கண்ணீரும் ஒரே வாரத்தில் கண்ணில் பெருக்கெடுத்தது.

முடிவாய் வயிற்றில் மறுபடி போட்ட ஊசியோடு, கருவை வயிற்றில் ஸ்தாபித்தார்கள். இன்னும் இரண்டு வாரங்களில் கரு வயிற்றில்  நஞ்சுக்கொடியோடு சேர்ந்துகொண்டதா என்று தெரியவரும். 

அடுத்து வந்த நாட்களில் பிரேம் நூற்றுக்கு நூறு வெற்றி மட்டுமே கிடைத்தாக வேண்டும் என்ற நம்பிக்கையில் பேசப்பேச, ரேணுவிற்கு தான் அந்தரத்தில் தொங்குவதான கனவு தினமும் வருவதைப் பற்றிச் சொல்லவே முடியவில்லை. ***

One Reply to “அது இருளால் செய்த ஒரு வழிச்சாலை!”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.