மின்னல் சங்கேதம் – 8

This entry is part 08 of 12 in the series மின்னல் சங்கேதம்

(பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் எழுதிய ‘அஷானி ஷங்கேத்’ வங்காள மொழி நாவலின் தமிழாக்கம்: சேதுபதி அருணாசலம்)

பிபூதிபூஷண் பந்த்யோபாத்யாய்

இரண்டு நாட்கள் கழித்து கங்காசரண் பள்ளியை சீக்கிரம் முடித்துக்கொண்டு நரஹரிப்பூர் சந்தைக்குப் போனான். முன்பெல்லாம் அந்த பிரபலமான பெரிய சந்தைக்கு, பிஷ்டுபூர், பாட்சாலா, சுபர்ணபூர், காரிடிகி போன்ற கிராமங்களிலிருந்து அரிசி வரும். ஆனால் இப்போது அங்கே அந்தப் பெரிய கடைகள் காலியாகக் கிடந்தன. ஒரே ஒரு கிழவி ஓரமாக உட்கார்ந்து அரிசி விற்றுக்கொண்டிருந்தாள்.

கங்காசரண் அவளிடம், “என்ன அரிசி?” என்றான்.

”கேலே தானா (கருப்பரிசி) தாகுர் மஷாய். வேணுமா? பிரமாதமான தரமான கேலே தானா. அரிசிங்க மத்தியில கேலே தானா, மனுஷங்க மத்தியில மகன் மாதிரி.”

கங்காசரணுக்கு அவள் கவிதையை ரசிக்கும் மனநிலை இல்லை. கையில் கொஞ்சம் அரிசியை எடுத்துப் பரிசோதித்துப் பார்த்தான். குருணையாகப் புழுதியண்டியிருந்தது. மனிதன் சாப்பிடுவதற்கு ஏற்றதில்லை. ஆனாலும் அது அரிசி. அதைச் சாப்பிட்டுக் கொஞ்சம் பேர் உயிரோடிருக்கலாம்.

”எவ்வளவு இருக்கு?”

”எல்லாமே வேணுமா? என்கிட்ட மூணு காதா இருக்கு.”

“விலை?”

“காதா ஒன்னரை ரூபா.”

கங்காசரண் திகைத்துப்போனான். முதலில் அவன் தவறாகக் கேட்டுவிட்டதாக நினைத்தான். அவன் மீண்டும் கேட்டு கிழவி மீண்டும் அதை விலையைச் சொன்னதும், அவனுக்கு நெற்றியில் வியர்க்கத் தொடங்கியது. இரண்டரை சேருக்கு ஒன்றரை ரூபாய். அப்படியென்றால் மணங்கு இருபத்திநான்கு ரூபாய்! கடவுளே! அனங்கா அரிசி புடைத்துக் கொண்டு வந்து தந்து கொண்டிருந்ததால் அவன் சந்தைக்கு இரண்டு நாட்களாய் வரவில்லை. அதனால் விலை எவ்வளவு ஏறியிருக்கிறது என்று அவன் அறிந்திருக்கவில்லை. அவனைச் சுற்றிலும் இருள் சூழ்ந்ததைப் போல உணர்ந்தான். இவ்வளவு பெரிய சந்தையில் அரிசி இல்லை. மக்களெல்லாம் இப்போது இறக்கப் போகிறார்களா? என்ன கெட்ட சகுனம் இது? இரண்டு நாட்களுக்கு முன் கூட விலை இத்தனை அதிகமாக இருக்கவில்லை. இரண்டு நாட்களில் மணங்கு பதினாறு ரூபாயிலிருந்து இருபத்திநான்கு ரூபாயாகிவிட்டதா? அதுவும் இந்த குருணையான, புழுதியண்டிய வாயில் வைக்க முடியாத அரிசியா?

கங்காசரண் அதிர்ச்சியில் உறைந்துபோனான். அவன் குடும்பத்துக்கு எப்படி சோறு போடுவான்? அவனுக்கு சொந்தமாக வயல் கிடையாது. சம்பளம் பண்ணிரண்டு ரூபாய். இருபத்து நான்கு ரூபாய்க்கு அரிசி எப்படி வாங்க முடியும்? அனங்கா பட்டினி கிடந்து செத்துப் போவாள். ஹபுவும், படோலும் கூட. முடியாது. அவனால் அதற்கு மேல் வேறெதுவும் யோசிக்க முடியவில்லை.

அரிசி வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வரும் வழியில், நிறைய பேர் காலி சாக்குப்பைகளோடும் கூடைகளோடும் சந்தைக்கு ஓடுவதைப் பார்த்தான். சிலர் அவனிடம், “இன்னிக்கு விலை என்ன பண்டிட் மஷாய்?” என்று கேட்டார்கள்.

“இருப்பதிநாலு ரூபா.”

”என்ன சொல்றீங்க பண்டிட் மஷாய்? அதுவும் இந்த குருணை அரிசிக்கா?”

“போ, நீயே போய் பார்த்துக்கோ.”

கிழவன் தீனு நந்தி கையில் ஒரு கூடையோடு நொண்டி நொண்டி வந்து கொண்டிருந்தான். அவன் கிராமத்துப் பொற்கொல்லனாக வேலை செய்துகொண்டிருந்தான். கிராமத்தினர் வெள்ளியில் அதிகம் கவனம் செலுத்தியதால் அவன் தங்கநகை வேலை அதிகம் செய்யவில்லை. ஆனால் இப்போதெல்லாம் யாரும் வெள்ளிநகை கூட செய்வதில்லை என்பதால் அவன் வருமானம் சுத்தமாக வற்றிவிட்டது. அவனுக்கு இரண்டு விதவை மச்சினிகளும், வயதான தாயும், சில குழந்தைகளும், இளைய மூன்றாவது மனைவியும் உண்டு. “பண்டிட் மஷாய், எனக்கு அரிசி கிடைக்கும்னு நினைக்கிறீங்களா?” என்று கேட்டான்.

”சீக்கிரம் போ. ஒரே தள்ளுமுள்ளா இருக்கு.”

”வேகமா நடக்கக் கூட முடியாது. அப்புறம் எங்க ஓடறது? இந்த முடக்குவாதம் ரொம்ப தொல்லை பண்ணுது. ஒழுங்கா சாப்பிடறதில்லை – “

”நிஜமாவா?”

”நிஜமா பண்டிட் மஷாய். நீங்க ஒரு பிராமணர். உங்ககிட்ட பொய் சொல்லிட்டு நான் நரகத்துக்குப் போக முடியாது.”

தீனு நொண்டிக்கொண்டே முடிந்த அளவு வேகமாகச் சென்றான்.

கங்காசரண் வீட்டுக்கு வந்து சேர்வதற்குள் சந்தையிலிருந்து வெறும்கையோடு திரும்பிவந்த பலரைப் பார்த்தான். ஸாகர்தலா கர்மாகார் வீட்டில் ஹுக்காவுக்காக நின்றபோது, அரட்டையடிப்பதற்காக மேலும் சிலர் வந்து சேர்ந்தார்கள்.

“நரஹரிபூர்லயே அரிசி கிடைக்கலைன்னா வேற எங்க கிடைக்கும்?” என்று கேட்டான் ஒருவன்.

இன்னொருவன், “அங்கே ஒரே கூட்டம். சில பேர் மூணு நாளா சாப்டலையாம். சிலர் அஞ்சுநாளா சாப்டலையாம். எங்க வீட்ல ரெண்டு நாளா எல்லாரும் பட்டினி.” என்றான்.

கங்காசரண், “கோதுமையும், மைதாவும் கூட கிடைக்கல. அதைக்கூட சாப்ட முடியாது.” என்றான்.

”கெட்டுப்போன கோதுமை மாவு இருக்காம், சேருக்கு பண்ணிரண்டு அணாவாம். அதைப் போய் யாரால சாப்பிட முடியும்?”

கங்காசரண் மேலும் ஒரு மைல் நடந்து சென்றிருப்பான். கோல்ஸேகாளி கிராமத்தின் சனாதன் கோஷ் வீட்டு முற்றத்தில் அமர்ந்து ஹூக்கா பிடித்துக்கொண்டிருந்தார். ”பண்டிட் மஷாய், என்ன கிடைச்சுது? அரிசியா?” என்றார்.

“ஆமா.”

“எங்கே கிடைச்சுது?”

”அதையேன் கேக்கறீங்க! ஒரு கிழவிட்டேருந்து கொஞ்சம் கிடைச்சுது. அதுவும் விலை ரொம்ப மேல போய்டுச்சு.”

”எங்கே நான் பாக்கறேன்.”

சனாதன் கோஷ் இறங்கிவந்து சாக்குப்பையை வாங்கிக்கொண்டார். பிறகு அரிசியை பரிசோதித்துப் பார்த்தார். அவர் முகபாவம் மாறியது. “இப்படி உடைஞ்சு குருணையா இருக்கே. இதுக்கு எவ்வளவு குடுத்தீங்க? நான் ஒண்ணு கேக்கட்டுமா?”

”என்ன?”

“என்ன விலையா இருந்தாலும் பரவால்ல, நான் தரேன், எனக்கு இதுல பாதியைக் குடுக்கனும். ரெண்டு நாளா குடும்பமே பட்டினி. என் மகளை சம்பந்தி வீட்டுலேருந்து கூட்டிட்டு வந்த தப்பை வேற செஞ்சுட்டேன். இப்போ அவளும் பட்டினி. ரெண்டு நாளா ஒரு பருக்கை அரிசி கூட கிடைக்கல. நானும் என்னன்னெவோ செஞ்சு பார்த்துட்டேன், எங்கேயுமே அரிசி கிடைக்கல – “

சனாதன் கோஷ் வசதியானவர்தான். அவரிடம் நிறைய பசுக்கள் இருந்தன. நரஹரிப்பூரிலிருந்த இனிப்புக் கடைகளுக்கு பாலும், பன்னீரும் விற்று வந்தார். கங்காசரண் கூட ஒன்றிரண்டு முறை நல்ல, புதிய பன்னீரை அவரிடமிருந்து வாங்கியிருக்கிறான். ஆனால் இன்று அவரும் கஷ்டத்திலிருக்கிறார். ஆனால் கங்காசரணிடம் மூன்று கதா அரிசிதான் இருக்கிறது. அவனுக்கும் அதற்குமேல் கிடைக்கவில்லை. இதுவும் இல்லையென்றால் அவன் குடும்பமும் பட்டினிதான் கிடக்கவேண்டும். அவனுக்கு அரிசியைக் கொடுக்க மனமில்லை. ஆனால் சனாதன் சாக்குப்பையை பிடுங்கிக்கொண்டுவிட்டார். திருப்பிக்கொடுக்கிற வழியாகத் தெரியவில்லை. அவரோடு சண்டை போட்டுதான் திரும்பிப் பிடுங்க வேண்டியிருக்கும்.

இதற்குள், சனாதன் வீட்டுக்குள்ளிருந்து யாரையோ கூப்பிட்டு, “ஏய், ஒரு கூடையும், அளக்கற படியும் எடுத்துட்டு வா.” என்றார்.

சனாதன் ஒரு காதாவை அளந்தவுடன், ”போதும், தயவு செஞ்சு இதுக்கு மேல எடுக்காதீங்க.” என்று பணிவாகச் சொன்னான்.

”இன்னும் அரை காதா மட்டும்.”

“வேண்டாம். உண்மையாலுமே என்னால இதுக்கு மேல தர முடியாது. எங்க வீட்லயும் அரிசி இல்ல. உங்களுக்குப் புரியலையா?”

சனாதனின் பேரன், “தாத்தா, வேண்டாம் இதுக்கு மேல எடுக்காதீங்க. போதும். திருப்பிக் குடுத்துடுங்க.” என்றான்.

சனாதனுக்கு கோபம் வந்துவிட்டது. ”நான் உனக்காகத்தான் இதெல்லாம் செய்யறேன். நான் மட்டும்னா எப்படியோ சமாளிச்சிக்குவேன். உனக்கு வேண்டாம்னா சரி, இதை எடுத்துக்கிட்டு போங்க. என்ன வேணா செஞ்சுக்கோங்க.” என்றார்.

சனாதனின் கோபம் கங்காசரணுக்குக் கடவுளாகப் பார்த்து கொடுத்தது. எந்த தயக்கமுமில்லாமல் சாக்குப்பையை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.

வீட்டில் அனங்கா அடுப்படியில் அமர்ந்து சேப்பங்கிழங்குகளை நறுக்கிக்கொண்டிருந்தாள். ”இதைக் கேளுங்க – இன்னிக்கு ஒரு நல்ல காரியம் செஞ்சிருக்கேன். அன்னிக்கு ஒருநாள் ஒரு போஷ்டமி (বোষ্টম – வைணவ சம்பிரதாயப் பாடல்களைப் பாடிச்செல்பவர்.) இங்கே வந்து ரொம்ப அருமையா பாடினாரே, ஞாபகம் இருக்கா? இன்னிக்கும் வந்திருந்தார். ஓ! என்ன குரல்!”

”யாரைப் பத்தி சொல்லிக்கிட்டு இருக்க?”

”அதான் அன்னிக்குப் பாடினாரே, ’உடோ கோ உடோ நந்தாராணி, கத நித்ரா யாவ் கோ’ (எழுந்திரு நந்தாராணி எழுந்திரு, இன்னும் ஏன் உறக்கம்?) – அருமையான குரல், நல்ல உயரம், வெளுத்த நிறம். அவர் சொந்த ஊர் பேனாபோல். அங்கே ஒரு ஹரிதாஸ் கோயில் இருக்காம். அங்கேதான் வேலை பார்க்கறார். தெய்வீகமாப் பாடறார். அதனால நம்ம வீட்டுக்கு தினமும் காலைல வந்து பாடச் சொல்லி இருக்கேன். காலங்காத்தால பக்திப்பாட்டெல்லாம் கேக்கறதுன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். மாசத்துக்கு ஒரு ரூபாயும், ஒரு காதா அரிசி, எண்ணெய், உப்பு, காய்கறி, போரி (வடை), உருளைக்கிழங்கு மாதிரி தட்சிணைகளும் கேட்ருக்காரு. நாளைக்குக் காலைலேருந்து ஆரம்பிக்கிறார். நான் இப்படி செஞ்சேன்னு என் மேல கோவம் இல்லேதான?”

”உனக்குப் பைத்தியம்தான் பிடிச்சிருக்கு! நம்ம சாப்பாட்டுக்கே வழியக் காணோம், இதுல இது வேறயா? எப்படி அவருக்கு சாப்பாடு போடுவ?”

”நீங்க இப்படி சண்டை போடாதீங்க. தினமும் காலைல அவர் குரலைக் கேட்டுப் பாருங்க, அப்புறம் தெரியும். அவர் சாப்பாட்டை நான் எப்படியாவது சமாளிச்சிக்கிறேன். நாம ஏழையா இருக்கலாம், அதுக்காக நல்ல சங்கீதத்த ரசிக்கக் கூடாதுன்னு ஒண்ணுமில்ல.”

அடுத்தநாள் அதிகாலை போஷ்டமி அவர்கள் வீட்டுக்கு வந்து பக்திப்பாடல்களைப் பாடினார். அனங்கா வெகுவாக சந்தோஷப்பட்டாள். ”எப்படி இனிமையாப் பாடறார் இல்ல? காலங்காத்தால இதைக் கேட்டா எவ்வளவு சந்தோஷமா இருக்குல்ல?”

கங்காசரண் வெறுமனே புன்னகைத்துத் திரும்பிப் படுத்துக்கொண்டான்.

அனங்கா புண்பட்டாள். ”இப்போ உங்களுக்கு என்ன கோபம்! கொஞ்சம் நல்ல பாட்டெல்லாம் கேளுங்களேன். உங்க கெளரவம் ஒண்ணும் குறைஞ்சு போய்டாது.”

”தினமும் போஷ்டமி வந்து பாட்டுப்பாடி எழுப்பி விடறதுக்கு நான் என்ன ராஜாவா? நீதான சம்பளம் குடுக்கற? நீயே கேட்டுக்கோ ராணி!”

”நீங்களும் கேக்கறதால நீங்களும் சம்பளம் குடுத்துதான் ஆகனும். இல்லாட்டி காதைப் பொத்திக்கோங்க.”

கங்காசரண் புன்னகைத்து காதுகளை மூடிக்கொண்டான், “இதோ பார்த்துக்கோ! போதுமா?”

பிற்பாடு அனங்கா சமைத்துக்கொண்டிருந்தபோது, அவர்கள் வீட்டிலிருந்த அரிசி இன்னும் பத்துப் பண்ணிரண்டு நாட்கள்தான் வரும் என்று கணக்குப்போட்டாள். அதற்குப்பிறகு? அரிசியே இல்லை என்று எல்லோரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவள் கணவன் சண்டை போட்டு வாங்கக்கூடியவனும் கிடையாது. என்ன செய்யப்போகிறான்? அவனை நினைத்து அனுதாபப்பட்டாள்.

காபாலி போம் (காபாலியின் இளைய மனைவி) வந்து கிசுகிசுத்தாள், “பாமுன் தீதி, உங்ககிட்ட ஒண்ணு கேக்கட்டுமா? ஒரு ஆழாக்கு அரிசி கிடைக்குமா?”

“தீதி, அது ரொம்ப கஷ்டமாச்சே. என்ன ஆச்சு? உங்க வீட்ல அரிசி கொஞ்சங்கூட இல்லையா?”

”கொஞ்சங்கூட இல்லை. நேத்திக்கு கொண்டைக்கடலையை சுண்டல் செஞ்சு சாப்பிட்டோம். சின்னவனுக்கு மட்டும் இன்னிக்கு சோறு இருந்தா நல்லாருக்கும். நாங்கள்லாம் எப்படியோ சமாளிச்சிக்குவோம்.”

அனங்கா சற்றுநேரம் யோசித்துவிட்டு, “சரி, இந்தா எடுத்துக்கோ. இந்த அளவு அரிசியால எங்களுக்கும் ஒண்ணும் குறைஞ்சு போய்டாது.” என்று கொடுத்தாள்.

காபாலி போம் அதை வாங்கி சேலைத் தலைப்பில் முடிந்து கொண்டபின் சொன்னாள், “தீதி, காட்டு சேனைக்கிழங்கு கிடைக்கற ஒரு இடத்தைக் கண்டுபிடிச்சு வச்சிருக்கேன். உங்களுக்கும் வேணுமா? நம்ம ஊர்ல எங்கியுமே இப்போ இல்லை. நிறைய பொம்பளைங்க எங்கெங்கேயோ சுத்தி முடிஞ்ச அளவு கிழங்குங்களைப் பறிச்சு வச்சிக்கிறாங்க. நம்ம ரெண்டு பேரும் சத்தமில்லாமப் போய் பறிச்சிக்கிட்டு வந்துடலாம் வாங்க.”

”சரி, இன்னிக்கு மதியம் போகலாம். அரிசி கிடைக்கறது ரொம்ப கஷ்டமாப் போய்டிச்சு. இனிமே நாமல்லாம் சேனைக்கிழங்குதான் சாப்பிட வேண்டியிருக்கும்.”

“பாமுன் தீதி, எந்த உலகத்துல இருக்கீங்க? அதுவும் காலியாகிட்டு இருக்கு. காரோபாராலேருந்து வந்த கஷ்டப்படற ஜனங்க நதிக்கரையில இருக்கற கிழங்குகள், ஷுஷ்னி, கோல்மி, ஹெலென்ச்சா மாதிரி கீரைங்களையெல்லாம் பறிச்சிட்டாங்க. எனக்கு நல்லாத் தெரியும், ஏன்னா ரெண்டு நாளா நாங்களும் இதையெல்லாம்தான் சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம். கூடவே கொண்டைக்கடலை. நான் ஒண்ணும் பொய் சொல்லல.”

பிஸ்வாஸ் மஷாயின் வீட்டில் ஒரு கூட்டம் நடந்து கொண்டிருந்தது.

அரிசி தட்டுப்பாட்டைக் குறித்து விவாதிப்பதற்குத்தான் அந்தக் கூட்டம் கூட்டப்பட்டது. ஆனால் காபாலிகளைத் தவிர வேறு யாரும் அதில் பங்கு பெறவில்லை.

கேத்ர காபாலி, “உங்களால நெல் தர முடியுமா, முடியாதா? நீங்களே சொல்லுங்க பிஸ்வாஸ் மஷாய்.” என்று கேட்டார்.

பிஸ்வாஸ் மஷாய், “என்கிட்ட அரிசியும் இல்லை, நெல்லும் இல்லை. நீங்களே கிடங்குல போய் பார்த்துக்கோங்க.” என்பதையே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார்.

ஆதார் காபாலி, “தயவு செஞ்சு நீங்க நம்ம ஜனங்களைக் காப்பாத்தனும். நாங்க இதைக் கடனாத்தான் கேக்கறோம். அடுத்த அறுவடையில கட்டாயம் நாங்க திரும்பித் தந்துருவோம்.” என்றார்.

பிஸ்வாஸ் மஷாய்க்கு இடப்புறம் கங்காசரண் அமைதியாக உட்கார்ந்திருந்தான். அவனும் இதே விஷயம் காரணமாகத்தான் பிஸ்வாஸ் மஷாயிடமிருந்து உதவி பெறுவதற்காக வந்திருந்தான். ஆனால் இங்கே இவ்வளவு பெரிய கூட்டம் நடந்து கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அதனால் எதுவும் பேசாமல் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.

திடீரென்று பிஸ்வாஸ் மஷாய் அவன் பக்கம் திரும்பி, “பண்டிட் மஷாய், இதோ பிடிங்க, தாணியக் கிடங்கோட சாவி. எவ்வளவு அரிசி இருக்குன்னு நீங்களே இவங்களுக்குக் காமிங்க.” என்றார்.

பிஸ்வாஸ் மஷாய் அவனிடம் சாவிக்கொத்தைத் தூக்கிப்போடும்போதே, கேத்ர காபாலி, “ஒண்ணும் அவசியமில்லை. கிடங்குல ஒண்ணுமில்லைன்னு எங்களுக்கும் தெரியும்.” என்றார்.

பிஸ்வாஸ் மஷாய் கோபமாக, “அப்போ வேற எங்க இருக்கு?” என்றார்.

”உங்க வீட்ல வேறே எங்கேயோ ஒளிச்சு வச்சிருக்கீங்க.”

“நீ பார்த்தியா?”

“எங்களுக்குத் தெரியும், நாங்க பாக்கனும்னு அவசியம் ஒண்ணும் இல்லை.” என்று சொல்லிவிட்டு கேத்ர காபாலி எழுந்து வெளியேறினார்.

ஆதார் காபாலி மீண்டும் கெஞ்சினார். “தயவுசெஞ்சு கேளுங்க மஷாய். நீங்கதான் நம்ம இனத்துக்குத் தலைவர். இந்த கஷ்டகாலத்துல நீங்க எங்களுக்கு உதவி செய்யலைன்னா, நாங்க பிள்ளை குட்டிகளோட எங்கே போவோம்? தயவுசெஞ்சு ‘இல்லை’ன்னு சொல்லாதீங்க. நீங்க எப்படியாவது எங்களுக்கு நெல் கொடுத்தே ஆகனும்.”

பிஸ்வாஸ் மஷாய் முகத்தைச் சுருக்கினார். “எல்லாரும் இதே பாட்டைப் பாடறீங்க. எல்லா பொறுப்பையும் என் தலை மேல போடறீங்க. நான் என்ன செய்யட்டும்? என்கிட்டையும் நெல்லு இல்லை.”

”கொஞ்சம் இருந்தா போதும் மஷாய். கொஞ்சம் கருணை காட்டுங்க. ரெண்டு நாளா பட்டினி.”

”சரி. என் பங்குலேருந்து அரை காதா எடுத்துக்கோ. நான் ஒரு கைப்பிடி கம்மியா சாப்பிட்டுக்கறேன். என்ன சொல்றீங்க பண்டிட் மஷாய்?”

கங்காசரண் அமைதியாக இருந்தான். ஏதாவது பதில் சொன்னால் மற்ற எல்லோரும் அவன் மேல் கோபப்படுவார்கள். அவர்கள் மத்தியில்தான் அவன் வசிக்க வேண்டும். அவன் யாரையும் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை.

கூட்டம் அதிக நேரம் நடக்கவில்லை. பிஸ்வாஸ் மஷாயிடமிருந்து அரிசி கிடைக்காதென்று காபாலிகள் புரிந்துகொண்டார்கள். அவர்கள் வீட்டுக்குக் கிளம்பிப் போனார்கள்.

கங்காசரணுக்கு இப்போதுதான் சரியான சந்தர்ப்பம் வாய்த்தது. ”பிஸ்வாஸ் மஷாய், நாங்கள்லாம் பட்டினி கிடந்து சாகப்போறோமா?”

”ஏன்?”

”சந்தையில அரிசி இல்லை. இன்னும் ரெண்டு நாள்ல என் குடும்பம் பட்டினி கிடக்கவேண்டி வரும். நாங்க என்ன செய்யறதுன்னு சொல்லுங்க.”

”என்கிட்டேருந்து ரெண்டு காதா அரிசி எடுத்துக்கோங்க.”

”ஆனா அது எத்தனை நாளுக்கு வரும்? நான் மூணு பேருக்கு சாப்பாடு போடனும். இதுக்கு ஏதாவது நிரந்தர தீர்வு வேணும். இல்லாட்டி இந்த இக்கட்டுல நான் யார்க்கிட்ட போய் நிக்கறது? பள்ளிக்கூடத்தை எப்படி நடத்தறது?”

”என்கிட்ட கிடங்குல அரிசியோ நெல்லோ இருந்திருந்தா நான் ஏதாவது செய்யலாம். இப்போதைக்கு இந்த ரெண்டு காதா எடுத்துக்கோங்க.”

கங்காசரண் இரண்டு காதா அரிசியோடு வீட்டுக்குப் போனான்.

அன்றிரவு சாப்பாட்டுக்குப் பின், பிஸ்வாஸ் மஷாய், குளத்துக்குப் பக்கத்திலிருந்த தொழுவத்திலிருந்து மாட்டை இழுத்து வருவதற்காகச் சென்றபோது மரத்துக்குப் பின் இரண்டு பேர் மறைந்திருப்பதைப் பார்த்தார். “யார் அது?” என்று சத்தம் போட்டார்.

”எமன்!”

திடீரென்று அந்த இரண்டு பேரும் கம்புகளைக் கொண்டு அவர் மண்டையில் பலமாகத் தாக்கினார்கள். வேல மரத்தில் அவரைக் கட்டிப்போட்டார்கள். வலியாலும், ரத்தக் கசிவாலும் பிஸ்வாஸ் மஷாய் மயக்கமடைந்தார்.

அவர் கண்விழித்தபோது, ஜன்னல் வழியே சூரியக்கதிர்களைத்தான் முதலில் பார்த்தார். அவருடைய விதவை மகள் அவர் மேல் கவிந்து அழுதுகொண்டிருந்தாள்.

பிஸ்வாஸ் மஷாய், “திருடங்க! திருடங்க!” என்று கத்தினார்.

”கவலைப்படாதீங்க அப்பா! இது நான்தான், பாருங்க, இங்கே பாருங்க!” என்றாள் மகள் செளதாமினி.

பிஸ்வாஸ் மஷாய் அவளைக் களைப்பாகப் பார்த்துவிட்டு, அமைதியானார்.

”எப்படி இருக்கீங்க அப்பா?”

பிஸ்வாஸ் மஷாய் அக்கம்பக்கம் பார்த்துவிட்டு ரகசியமான குரலில் அவளிடம், “எல்லாத்தையும் எடுத்துக்கிட்டுப் போய்ட்டாங்களா?” என்றார்.

”என்னப்பா?”

”எல்லாத்தையும்?”

”அதைப்பத்தி கவலைப்படாதீங்க. எல்லாம் இருக்கு.”

“பரண்ல இருக்க மூட்டைங்க?”

”அவங்க அதை எடுக்கல.”

“எங்கே எனக்குக் காட்டு?”

செளதாமினி அவர் தலையைப் பரிவோடு வருடி, “முதல்ல உங்களுக்கு உடம்பு சரியாகட்டும். அப்புறமா நான் எல்லாம் காட்டறேன். நான் பொய் சொல்லல. என்னை நம்புங்க. அவங்க எதையும் எடுத்துக்கிட்டுப் போகல.” என்றாள்.

”கட்டிலுக்குக் கீழே இருக்க மூட்டைங்க?”

”அதெல்லாம் பத்திரமா இருக்கு. அதையெல்லாம் யாரு எடுக்கப்போறா?”

அப்போது கங்காசரண் உள்ளே நுழைந்தான். அப்பாவும், மகளும் மெளனமானார்கள்.

கங்காசரண் அருகிலமர்ந்து, “எப்படி இருக்கீங்க பண்டிட் மஷாய்?” என்றான்.

”ஏதோ இருக்கேன்.”

”உங்க நாடியைக் குடுங்க, பார்க்கறேன்.” என்று கங்காசரண் அதட்டலாகக் கேட்டான்.

பரிசோதித்தபின் முகத்தை ஒருமாதிரியாக வைத்துக்கொண்டு, “ம்ம்ம்…” என்றான்.

செளதாமினி, “அவருக்கு எப்படியிருக்கு?” என்றாள்.

”பரவாயில்லை. ஆனா நெஞ்சுச்சளி அதிகமாய்டுச்சு.”

செளதாமினி, “அப்புறம் என்ன ஆகும்?” என்றாள்.

“ஒண்ணும் பிரச்சினையில்லை. ஆனால் இந்த மாதிரி வயசான காலத்துல, நெஞ்சுச்சளி அதிகமாச்சுன்னா…”

”தயவுசெஞ்சு சொல்லுங்க.”

“இல்லை, இது நல்ல அறிகுறி இல்லை.”

பிஸ்வாஸ் மஷாய் இப்போது கெஞ்சினார். “என்னை இந்த முறை எப்படியாவது காப்பாத்துங்க பண்டிட் மஷாய். உங்களுக்கு பத்து சேர் அரிசி தரேன்.” என்றார்.

”இல்லை, இல்லை, அதுக்காக இல்லை.”

ஆனால் செளதாமினி அவசரமாக எழுந்து, “இல்லை, இப்போவே எடுத்துக்கோங்க. ஒரு கூடை எடுத்துட்டு வரேன்.” என்றாள்.

“இல்லை, இப்போ வேணாம். இருட்டினப்புறம் குடு. யாருக்கும் தெரியக்கூடாது.” என்றார் பிஸ்வாஸ் மஷாய்.

கங்காசரண் அவ்வப்போது கிராமத்து வைத்தியராகவும் வேலை பார்த்தான். ஆனால் அவனுக்கு அதிகம் கிராக்கி இல்லை. இந்த கிராமத்து மக்கள் ‘ஸார்குமாரி’ என்ற வைத்தியமுறையப் பின்பற்றினார்கள். அது ஒரு விநோதமான வைத்தியமுறை. எவ்வளவு அதிகம் காய்ச்சலடித்தாலும், நோயாளிகளைக் குளிக்க அனுமதித்தார்கள். ஏன் நன்றாகச் சாப்பிடக் கூட அனுமதித்தார்கள். கொஞ்சம் பேர் குணமானது உண்மைதான் என்றாலும் பலர் உயிரிழந்தார்கள். இருந்தாலும் கிராமத்தினர் வேறெந்த வைத்தியத்தையும் பின்பற்றவில்லை.

கங்காசரணுக்கு அது தெரியும். எனவே, ”நீங்க ஃபகீரைக் கூப்பிட்டு ஸார்குமாரி வைத்தியம் பார்க்கப் போறதில்லையா?” என்று கேட்டான்.

”கண்டிப்பா இல்லை. போன முறை, நல்லா ஓடியாடி விளையாடிக்கிட்டு இருந்த என் பேரனை வைத்தியம் செஞ்சு கொன்னுட்டான். அவன்கிட்ட நான் போறதை நிறுத்திட்டேன்.”

”நல்லா யோசிச்சுதானே சொல்றீங்க? ஏன்னா ஒரு நோயாளிக்கு நான் வைத்தியம் பார்க்கறதுன்னா ரொம்ப கவனமா இருப்பேன்.”

”நீங்க நேரம் எடுத்துக்கிட்டு அவரை நல்லா பரிசோதிச்சுப் பாருங்க. நாங்க வேற யாரையும் கூப்பிடப் போறதில்லை. சாயந்திரம் வந்து அரிசி வாங்கிக்கோங்க.” என்றாள் செளதாமினி.

பிஸ்வாஸ் மஷாய் இரண்டு நாட்களில் உடல் தேறினார். கங்காசரண் சென்று பார்த்தபோது அவர் கட்டிலில் அமர்ந்து ஹூக்கா புகைத்துக்கொண்டிருந்தார். பிஸ்வாஸ் மஷாய் கிராமத்தை விட்டுப் போகிறார் என்றும் கேள்விப்பட்டிருந்தான். மூட்டை முடிச்சுகளெல்லாம் தயாராக இருந்தன. வீட்டின் வெளியே தெரிந்த எட்டோ பத்தோ மாட்டு வண்டிகளின் வண்டித்தடம், இரவில் அவை சென்றிருக்கின்றன என்று காட்டியது. ஒருவேளை பிஸ்வாஸ் மஷாய், பதுக்கி வைத்திருந்த அரிசியையும், நெல்லையும் இரவோடிரவாக இடம்பெயர்த்திருக்கலாம்.

கங்காசரண், “உங்க சொந்த ஊரை விட்டு கிளம்பீட்டிங்களா? எங்க போறீங்க?” என்று கேட்டான்.

”இப்போதைக்கு, கங்கானந்தப்பூர்ல இருக்க என் மருமகன் வீட்டுக்குப் போறேன். இனிமே இங்கே இருக்கவே இஷ்டமில்லை. இது ரவுடிகள், திருடங்களோட ஊர். கைப்பிடி அரிசிக்காகக் கொலையும் செய்யத் தயாரா இருக்காங்க. எல்லாரும் வீட்ல ரெண்டோ மூணோ மணங்கு அரிசி வச்சிருக்காங்க, அதுக்காக கொலை செய்யறதா என்ன? இன்னிக்கு நான் தப்பிச்சிட்டேன். நாளைக்கு திரும்பியும் என்னைக் கொல்ல வரலாம். வேணாம் சாமி.”

”ஆனால் உங்க நிலம், குளம், தோப்பு துரவெல்லாம்?”

“என்னோட மருமகன் துர்காபதா அப்பப்போ வந்து பார்த்துக்குவான். ஆனா நான் இனிமே இங்கே வரப்போறதில்லை. நான் பட்டது போதும். அது சரி, என் பிரயாணத்துக்கு ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றீங்களா?”

புதன்கிழமை காலை, அவர் நிஜமாகவே மூட்டை முடிச்சுகளோடு நதுன்காவ்ம் கிராமத்தை விட்டுக் கிளம்பிவிட்டார்.

எல்லா விஷயத்தையும் கேள்விப்பட்ட அனங்கா, “இந்த கஷ்டகாலத்திலயும் நமக்கு உதவின்னு இருந்த ஒரே மனுஷர் அவர்தான். எப்படியாவது அவர் நமக்கு அரிசி குடுத்துக்கிட்டு இருந்தார். இப்போ அதுவும் இல்லை. இனிமேல்தான் நமக்கு நிஜமான கஷ்டகாலம் ஆரம்பமாகப் போகுது. பாவம், நாமெல்லாம் சேர்ந்து அவரை பயமுறுத்தீட்டோம்.” என்றாள்.

(தொடரும்)

Series Navigation<< மின்னல் சங்கேதம் – 7மின்னல் சங்கேதம் – 9 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.