நுழைவாயில்

அவர் அறை கதவிலிருந்து புல்வெளியைத் தாண்டி சத்திரத்தின் நுழைவாயிலை நோக்கினார். நுழைவாயிலின் வளைந்த சிகரத்தில் அகல் விளக்குகள் ஏற்றப் பட்டிருந்தன. அப்பியிருக்கும் இருட்டில் அகல்விளக்குகள் ஏற்றப்பட்டிருப்பதாலேயே நுழைவாயில் புலப்பட்டது. முப்பது வருடங்களாக இவ்வழியில் பயணம் செய்து கொண்டிருப்பவர். இப்போதெல்லாம் சலிப்பே மிஞ்சுகிறது. இது சலிப்பு மட்டுமா? உயிர்ப் பயம் கூட. இந்த சாலையில் பயணம் செய்கையில் அவரின் நண்பர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். அவர்களின் பிணங்கள் கூட கிடைக்கவில்லை.