நீர் தான் ரசிக சிகாமணி!

ஓரு வித்வானை ஞானத்தில் சிறந்தவர், இசையில் வல்லுனர் என்று அவருடைய ரசிகர்கள் புகழாரம் சூட்டுவது சஹஜமாக நடக்கும் விஷயம். ஆனால், ஒரு வித்வான் தன் ரசிகரை இப்படி புகழ்ந்து கேள்விப்பட்டிருக்கிறோமா? தனிப்பட்டிருக்கும் சமயங்களில் பாராட்டி சொல்வதை இங்கு குறிப்பிடவில்லை. வித்வான்கள் குழுமியிருக்கும் ஓரு ஸதஸ்ஸில், எல்லோருக்கும் முன்னிலையில் ஒரு பாடல் வழியாகவோ அல்லது ஒரு கவிதையாகவோ, ஒரு வித்வான் தன் ரசிகரை “நீர் தான் ரசிக சிகாமணி” என்று பாராட்டியிருப்பதுண்டா?

இதற்கு இல்லை என்று தான் பெரும்பான்மையானவர்களின் பதிலாக இருக்க முடியும்.

ஆனால் இப்படி ஒரு பெருந்தன்மையான வித்வான் இருந்துள்ளார் என்பதற்கு சான்று உள்ளது. அந்த வித்வான் யார்? அந்த ரசிக சிகாமணி யார்? அறிந்து கொள்ள எட்டய்யபுரம் சமஸ்தானத்திற்குள் நுழைய வேண்டும்.

எட்டய்யபுர சமஸ்தானம்

சுதந்திரத்துக்கு முன் நமது நாட்டை பாளையக்காரர்கள் என்று சொல்லக்கூடிய குறு நில மன்னர்கள் பலர் ஆண்டு வந்தனர். அவர்கள் ஆண்ட பகுதியை சமஸ்தானம் என்று அழைப்பதுண்டு. அப்பேர்ப்பட்ட பாளையக்காரர்களில்  முக்கியமானவர்கள் எட்டய்யபுரத்தை மையமாக வைத்து ஆண்ட மன்னர்கள். இவர்கள் எட்டப்பன் என்று தங்களை குறித்து கொண்டார்கள். இவர்களில் பலர் கலா ரசிகர்களாக இருந்து பல கலைஞர்களை ஆதரித்ததோடு மட்டுமல்லாமல் இசை, இலக்கியம், நாடகம், ஓவியம் போன்ற நுண்கலைகளில் நிபுணர்களாகவும் திகழ்ந்தார்கள். இந்த எட்டப்ப வம்சத்தில் வந்த ஒரு முக்கியமான மன்னர் வேங்கடேஶ்வர எட்டப்ப மஹாராஜா. 

தீக்ஷிதர் பரம்பரை

கர்னாடக சங்கீதத்தில் பரிச்சயம் இருக்கும் பலருக்கும் ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் என்கிற மஹானைப்பற்றி தெரியாமல் இருக்காது. 18ம் நூற்றாண்டில் அவதரித்த உன்னதமான வாக்கேயக்காரர். சமஸ்க்ருதத்திலும், அத்வைத சித்தாந்தத்திலும் கரை கண்டவர். ஆனால் பலருக்கும் தெரியாத விஷயம் இவர் சங்கீத பரம்பரையில் வந்தவர், இளமை காலம் முதலே சங்கீதத்திலேயே ஊரித் திளைத்தவர் என்பது. இவருடைய தப்பனார் ஸ்ரீ ராமஸ்வாமி தீக்ஷிதர் மற்றும் இவரது இளைய சஹோதரர்கள் சின்னஸ்வாமி மற்றும் பாலஸ்வாமி தீக்ஷிதர்களும் சங்கீத விற்பன்னர்கள். முத்துஸ்வாமி தீக்ஷிதர் க்ருதிகளை ஆராய்கையில் இவர்களுடைய கீர்தனங்களையும் ஆராய்ந்தால் மட்டுமே அந்த ஆராய்ச்சி முழுமை பெரும். இவர்கள் அனைவரையும் ஆதரித்தவர்கள் எட்டய்யபுர மன்னர்கள்.

இந்த தீக்ஷிதர் குடும்பத்தின் க்ருதிகளை உண்மையான வடிவத்தில் ஆராய்வதற்கும், பாடுவதற்கும் ஹேதுவாக ஸ்வரப்படுத்திக்கொடுத்தவர் தீக்ஷிதர் பரம்பரையில் வந்த  ஸ்ரீ சுப்பராம தீக்ஷிதர். இவர் பாலஸ்வாமி தீக்ஷிதரின் பெண் வயிற்று பேரன். பாலஸ்வாமி தீக்ஷிதரால் எட்டய்யபுர ராஜாவின் ஆரூடத்தின் படி ஸ்வீகாரம் எடுத்து கொள்ளப்பட்டவர். சுப்பராம தீக்ஷிதர் அவருடைய கீர்தனங்களையும், அவருடைய குடும்பத்தாருடைய கீர்த்தனங்களையும், ஏனைய பல கீர்த்தனங்களையும் ஒரு புத்தகமாக பதிப்பித்துள்ளார். அது ‘சங்கீத சம்ப்ரதாய ப்ரதர்ஶினி’ என்ற பெயரில் 1904 ம் ஆண்டு அப்பொழுது இருந்த எட்டய்யபுர ராஜா ‘ராஜா ஜகத்வீர ராம வேங்கடேஶ்வர எட்டப்பர்’ அவர்களின் உதவியால் பிரசுரிக்கப்பட்டது.   

வேங்கடேஶ்வர எட்டப்ப மஹாராஜா (1816-1839)

தீக்ஷித சஹோதரர்களிடையே மிகுந்த ஒற்றுமை உண்டு. ஆனால் காலத்தின் கதியால் முத்துஸ்வாமி தீக்ஷிதர் அவருடைய சஹோதரர்களிடமிருந்து பிரிந்து விடுகிறார். சின்னசாமி மற்றும் பாலஸ்வாமி தீக்ஷிதர்கள் சில காலம் ஒன்றாக இருக்கிறார்கள். சின்னசாமி தீக்ஷிதரின் மறைவுக்கு பிறகு மிகுந்த வருத்தத்துடன் இருக்கையில் எட்டய்யபுர சமஸ்தானம், வேங்கடேஶ்வர எட்டப்ப மஹாராஜா மூலமாக பாலஸ்வாமி தீக்ஷிதரின் வாழ்க்கையில் ஒரு புதிய வெளிச்சத்தைக் காட்டுகிறது. பாலஸ்வாமி தீக்ஷிதரின் வழியாக வேங்கடேஶ்வர எட்டப்ப மஹாராஜா பாலஸ்வாமிக்கு மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார் எனவும் தெரிகிறது. பிற்காலத்தில் முத்துஸ்வாமி தன்னுடைய தமயனை தேடி வரும் சமயத்தில் அவருடைய மஹிமையை உணர்ந்து அவரையும் ஆதரித்துள்ளார். முன்னவருடைய கடைசி காலம் எட்டய்யபுரத்திலேயே கழிந்தது என்பதை இங்கு நினைவு கூர வேண்டும்.

பொதுவாகவே எட்டய்யபுர மன்னர்கள் உதார குணமுள்ளவர்கள். தங்களுடைய ஆதிக்கத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு பல நற்பணிகள் செய்துள்ளனர். இதனுடன் பல கலைஞர்களையும் ஆதரித்து நமது பாரம்பரியக்கலைகளை போற்றி பாதுகாத்துள்ளனர். இந்த மஹாராஜாவே பல கீர்த்தனங்கள் புனைந்துள்ளார். இசைக் கலைஞராக மட்டுமல்லாமல் பரம ரசிகராகவும் இருந்துள்ளார் என்றும் தெரிகிறது. இவர் முத்துஸ்வாமி தீக்ஷிதருக்கு கனகாபிஷேகம் செய்து கௌரவப்படுத்தினார் என்கிற செவி வழி செய்தியும் இருக்கிறது. 

ரசிக சிகாமணி

பொதுவாக இசை கலைஞர்கள் ஒரு தெய்வத்தை முன்னிருத்தியே பாடல்கள் இயற்றுவார்கள். சிலர் அவரை போஷித்தவர்களை பற்றியோ அல்லது சில மன்னர்களைப் பற்றியோ இயற்றுவதுண்டு. ஆனால், பாலஸ்வாமி தீக்ஷிதர் மன்னர்களைப்பற்றியே பெரும்பாலும் இயற்றியுள்ளார். அபூர்வமாக ஒன்றிரண்டு கீர்த்தனங்கள் கழுகுமலையில் உறையும் முருகனைப்பற்றி இருந்தாலும், அவற்றிலும் எட்டய்யபுர ராஜாக்களை குறிப்பிட்டு அவர்களுக்கு முருகனுடைய கடாக்ஷம் வேண்டும் என்று ப்ரார்திப்பதாகவே அமைத்துள்ளார்.

அப்படி இவர் வேங்கடேஶ்வர எட்டப்ப மஹாராஜாவைக்குறித்து இயற்றிய ஒரு கீர்த்தனத்தில் தான் இந்த ராஜா ரசிக சிரோமணி என்று பதிவிடுகிரார். அக்கீர்த்தனம் ‘ருத்ரப்ரியா’ என்னும் அபூர்வ ராகத்தில் அமைந்த ‘நீவே ரசிக சிகாமணி’ என்பதாம். அக்க்ருதியின் எடுப்பிலேயே தான் சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக சொல்லி விடுவது மிகவும் சிறப்பான விஷயமாகும். அப்பேற்பட்ட ரசிக சிகாமணியைத்தேடி தான் வந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

கலைஞர்கள் தங்களை ஆதரிப்பவர்களை புகழ்ந்து பாடுவது புதிதல்ல. அவர்களுடைய வீரத்தை, உதார குணத்தை, அழகை வர்ணிப்பதும் வழக்கத்தில் இல்லாதது இல்லை. ஆனால் ‘ரசிக சிகாமணி’ என்று கூறுவது எளிதில் பார்க்க முடியாதது. அதுவும் அந்த குறிப்பையே முதல் வார்த்தையாக வைத்து சாஹித்யம் அமைப்பதென்பது அந்த ரசிகத்வத்திற்கு கொடுக்கும்  மதிப்பு என்பது மிக தெளிவு. 

இந்த கீர்த்தனத்தை சாதாரண ‘நர ஸ்துதியாக’ கடந்து விட முடியாது. பாலஸ்வாமி தீக்ஷிதர் வேங்கடேஶ்வர எட்டப்ப மஹாராஜாவைக்குறித்து பாடியுள்ள மற்ற கீர்த்தனங்களை காண்கையில் இந்த எண்ணம் மேலோங்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. அப்படிப்பட்ட கீர்தனங்களை நோக்குகையில் இருவருக்குமிடையே ஒரு அத்யந்த பந்தம் இருந்திருப்பது நிதர்சனமாக தெரிகிறது. ‘ராஜ ஶிகாமணி நீவே’ என்ற க்ருதியில் வேங்கடேஶ்வர எட்டப்ப மஹாராஜா தான் தனக்கு தாய், தந்தை, குரு என்று குற்றிப்பிடுகிறார் பாலஸ்வாமி தீக்ஷிதர். எவ்வளவு பெரிய வார்த்தை இது? என்ன தான் ராஜாவாக இருந்தாலும், தனக்கு பொன்னும் மணியும் கொடுத்து ஆதரித்தாலும், அவரை தந்தைக்கும் தாய்க்கும் சமானமாக குறிப்பிடுவது அசாதாரணமான விஷயம். அந்த ராஜாவானவர் தீக்ஷிதருக்கு ஏதோ மிகப் பெரிய உதவி செய்து அதன் காரணமாக ஒரு நன்றி கலந்த அன்பை தீக்ஷிதரிடம் ராஜா பெற்றிருக்கிறார் என்று யூகிக்க முடிகிறது. அது என்ன என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம்.

இந்த க்ருதி பல்லவி, அனுபல்லவி, சரணம் என்று மூன்று பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளது. சரணத்திற்குப் பிறகு மிக அழகிய சிட்டை ஸ்வரம் ஒன்றையும் பாலஸ்வாமி தீக்ஷிதர் அமைத்திருக்கிறார். இந்த க்ருதியின் ஆரம்பமே நிஷாத ஸ்வரத்தில் ஆரம்பிக்கிறது. அந்த ஸ்வரத்திற்கான சாஹித்யமும் நீ என்றே அமைக்கப்பட்டிருப்பதை கவனிக்க வேண்டும். இந்த அமைப்பை, அதாவது சாஹித்யமும் சங்கீதமும் ஒரே அக்ஷரமாக இருப்பதை ‘ஸ்வராக்ஷரம்’ என்று கூறுவதுண்டு. இப்படி அமைப்பதற்கு அபார மொழி ஞானமும், சங்கீத ஞானமும் அவசியம். இந்த அமைப்பு சாஹித்யத்திற்கு ஒரு அழுத்தத்தையும், அர்த்த புஷ்டியையும் கொடுக்கிறது என்பது நிதர்சனம். ஆரம்பத்திலிருந்து முடிவு வரை ‘நி’ என்ற ஸ்வரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதை இந்த க்ருதியை கேட்கையில் நம்மால் எளிதாக உணர்ந்து கொள்ள முடியும். 

இந்த க்ருதியின் அடுத்த முக்கியமான, அழகான அம்சம் சிட்டை ஸ்வரம். சிட்டை ஸ்வரம் என்பதை சுலபமாக விவரிக்க வேண்டும் என்றால் ‘ஸ்வரப்பகுதி’ என்று சொல்லலாம். அதாவது ஒரு க்ருதியின் அழகைக் கூட்டுவதற்கு ஒரு வாக்கேயக்காரர் பல யுக்திகளை கையாளலாம். ‘ஸ்வராக்ஷரம்’ அதில் ஒன்று. இன்னொன்று, சிட்டைஸ்வரங்கள். சில க்ருதிகளில் இந்த சிட்டைஸ்வரங்களுக்கு சாஹித்யமும் அமைக்கப்பட்டிருக்கும். ஶ்யாமா சாஸ்த்ரிகளின் ‘மரிவேரே கதியெவரம்மா’, சுப்பராம தீக்ஷிதரின் இதே ராகத்தில் அமைந்த ‘அம்ப பர தேவதே’ என்கிற கீர்த்தனங்களை உதாஹரணமாக சொல்லலாம். 

பொதுவாக சிட்டை ஸ்வரங்கள் அனுபல்லவிக்கு பிறகும், சரணத்திற்கு பிறகும் பாடப்படும். ஆனால் இந்த கீர்த்தனத்தில் சரணத்திற்கு பிறகே பாட வேண்டும் என்று சுப்பராம தீக்ஷிதர் தன்னுடைய புத்தகத்தில் கொடுத்துள்ளார். இந்த சிட்டை ஸ்வரத்திற்கும் மற்ற கீர்த்தனங்களில் அமைக்கப்பட்டிருக்கும் சிட்டைஸ்வரத்திற்கும் மிகுந்த வித்யாசம் உண்டு. இப்பொழுது ‘நெனருஞ்சினானு’, ‘தெலிசி ராம’ போன்ற த்யாகராஜ ஸ்வாமிகளுடைய க்ருதிகளில் (இவைகளை ஸ்வாமிகள் இயற்றவில்லை) அமைந்துள்ள சிட்டை ஸ்வரத்தை எடுத்துக் கொண்டால் ஸ்வரங்கள் நான்கு நான்காக அமைக்கப்பட்டிருக்கும். இந்த அமைப்பு க்ருதியின் நடையை விருவிருப்பாக எடுத்து செல்ல உதவும். ஆனால், இந்த அமைப்பு ‘நீவே ரசிக சிகாமணி’ கீர்த்தனத்தில் காண முடியாது. பல ஸ்வரங்களை நீட்டித்து, கார்வைகள் கொடுத்து மூன்றாகவே பல இடங்களில் வரும். இந்த சிட்டை ஸ்வரத்தை க்ருதியுடன் கேட்கையில், அது கீர்த்தனத்தின் ஒரு நீட்சியாகவே ஒலிக்கும். இப்பேர்ப்பட்ட அமைப்பு தீக்ஷிதர் குடும்பத்தின் க்ருதிகளின் காணப்படும் அம்சம் என்றே கூறலாம். இந்த அமைப்பை க்ருதியை விருவிருப்பாக்குவதற்கு பதில் அந்த ராகத்தை வெளிக் கொண்டு வரும் உத்தேசத்துடனேயே கையாண்டிருப்பதாக தெரிகிறது. பாலஸ்வாமி தீக்ஷிதரின் புலமையை அப்பட்டமாக எடுத்துக்காட்டும் இந்த கீர்த்தனத்தை கேட்டு அனுபவிக்க வேண்டும்.

ருத்ரப்ரியா

இவ்வளவு விஷயங்கள் இந்த கீர்த்தனையைப்பற்றி பேசிய பிறகு ஒரு சில வரிகள் இந்த ராகத்தைப்பற்றி சொல்லாமல் இருந்தால் அது இந்த கீர்த்தனைக்கும், அதை இயற்றியவருக்கும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள நாயகனுக்கும் இழைக்கப்படும் அவமரியாதையாகும். ஆகையால் இந்த ராகத்தைப்பற்றி ஒரு சில வார்த்தைகள்.

ருத்ரப்ரியா என்று சங்கீதம் தெரிந்தவர்களிடம் சொன்னால், உடனே வரும் பதில், கரஹரப்ரியா எங்கிற ராகத்தின் ஒரு வடிவம் இது என்பதேயாம். அதாவது கரஹரப்ரியா ராகத்தை அவரோஹண க்ரமத்தில் தைவதம் இல்லாமல் பாடினால் ருத்ரப்ரியா கிடைக்கும் என்று அபிப்ராயம் நிலவுகிறது.  இந்த க்ருதியையும், இவர் இயற்றியுள்ள ‘வள்ளி தேவசேன’ எங்கிற கீர்தனத்தையும், தீக்ஷிதர் பரம்பரையின் மற்ற அங்கத்தினர்களான முத்துஸ்வாமி மற்றும் சுப்பராம தீக்ஷிதர்களின் க்ருதிகளையும் ஆராய்ந்தால் இந்த அபிப்ராயம் தவறானது என்று புலப்படும்.

பல தனித்துவமான விஷயங்கள் இந்த ராகத்திற்கு இருந்தாலும் ஒரு முக்கியமான, தனித்துவமான விஷயத்தை மட்டும் இங்கே பார்ப்போம். சுருக்கமாக சொல்வதானால் இந்த ராகத்தை ஒரு மந்தியுடன் ஒப்பிடலாம். ஒரு மந்தி எப்படி கிளைக்கு கிளை அசாத்யமாக தாவுமோ அதே போன்று இந்த ராகத்திலும் ஸ்வரங்கள் தாவி தாவி செல்லும். க – நி, நி –ம, நி – க, ரி-த என்பதெல்லம் இந்த ராகத்தில் சுலபமாக பார்க்கலாம். வேறு விதமாக சொல்வதென்றால் இதைப் போன்ற ஸ்வர சேர்க்கைகள் இருந்தால் தான் ருத்ரப்ரியா ராகம் வெளிப்படும்.

பாலஸ்வாமி தீக்ஷிதரின் இந்த கீர்த்தனம் படித்து, கேட்டு அனுபவிக்க வேண்டிய ஒரு உருப்படி. கச்சேரி மேடைகளில் ஒலிப்பதில்லை. இந்த கீர்த்தனத்தையும், இந்த குடும்ப உருப்பினர்களின் மற்ற கீர்த்தனங்களும் மறைந்து போன அந்த கால சங்கீதத்தை புரிந்து கொள்ள உதவும் சாதனமாக இருக்கிறது என்றால் அது பொய் அல்ல. 

இந்த க்ருதியை இக் கட்டுரையாளர் பாடி கேட்கலாம்.

2 Replies to “நீர் தான் ரசிக சிகாமணி!”

Leave a Reply to Mrs. Hema Mohan Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.