டால்கம் பவுடர் – பகுதி 2

This entry is part 24 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

(உடல் நலம் சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள்)

1886–ல் தொடங்கப்பட்ட நிறுவனம் ஜான்ஸன் & ஜான்ஸன். 2018–ல், இவர்களது விற்பனை ஏறக்குறைய 82 பில்லியன் டாலர்கள். அமெரிக்காவின் நியு ஜெர்ஸி மாநிலத்தைத் தமது தலைமையகமாகக்கொண்ட இந்த நிறுவனம் உலகில் பிரசித்தி பெறப் பல காரணங்கள் இருந்தாலும் இவர்களது குழந்தைகள் டால்கம் பவுடர், தலைமுறை தலைமுறையாகப் பெண்களால் நம்பப்பட்ட ஒன்று.

இதற்கு முந்தய பகுதியில், 1970 முதல் விஞ்ஞான ஆராய்ச்சி, டால்கம் பவுடர், பெண்களுக்கு முட்டையகப் புற்றுநோய் (ovarian cancer) வரக் காரணமான ஒரு பொருள் என்று சந்தேகத்துடன் பார்க்கத்தொடங்கி, 2016–ல் (அதாவது 56 ஆண்டுகள்) நீரூபிக்கப்பட்டதைப் பார்த்தோம். இந்த ஆராய்ச்சி ஜான்ஸன் & ஜான்ஸனுக்கு (ஜா & ஜா என்று சுருக்கம்) முழுவதும் தெரியும். நாம் முன்னே பார்த்த சில நிறுவனங்கள்போல, டால்கம் பவுடருக்கு மாற்று ஒன்றை, இந்த 56 வருடங்களில் கண்டுபிடித்திருக்கலாம். அல்லது, புற்றுநோய் உருவாக்கும் பொருளை ஏன் தயாரிக்க வேண்டும் என்று, அந்தப் பொருளைத் தயாரிப்பிலிருந்து நீக்கிவிடலாம். இது ஒன்றும் ஜா & ஜா வுக்குப் பெரிய விஷயமன்று. ஆனால், இதில் எதையுமே இந்த நிறுவனம் செய்யவில்லை. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பேண்ட் எய்டு, பெனடிரில், பெனலின் (இருமல் மருந்துகள்), லிஸ்டரின் (பல்துலக்கி), நியூட்ரோஜினா சோப்புகள், காயம்பட்டால் பயன்படுத்தும் பாலிஸ்போரின், தலைவலி வந்தால் பயன்படுத்தும் டைலினால் எல்லாம் இவர்களது தயாரிப்புகள். சிகரெட் நிறுவனங்கள் பயன்படுத்திய விஞ்ஞானத் திரித்தல் முறைகளைக் கடைசிவரை ஜா & ஜா பயன்படுத்திவந்துள்ளது.

வழக்கம்போல, தன்னுடைய தயாரிப்பிற்கும், புற்றுநோய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தாய்மார்களை என்றும் நாங்கள் கைவிடமாட்டோம். அதுவும், சமூகத்திற்குத் தீங்கு விளைவிக்கும் ஒன்றை ஜா & ஜா என்றுமே தயாரிக்காது என்று ஒரேடியாக மறுத்தது. சிகரெட் நிறுவனங்கள்போல, விஞ்ஞானத்தைக் கிண்டலடிக்காவிட்டாலும், ஒரேடியாக மறுப்பதில் சிகரெட் நிறுவனங்களுக்கு ஜா & ஜா ஒன்றும் குறைந்ததன்று.

ஜா & ஜா னின் திரித்தல் முறைகளைப் பற்றிப் பார்ப்பதற்குமுன், சில விஷயங்கள் நாம் மனதில் கொள்ளவேண்டும்:

  1. ஜா & ஜா னின் தலைமையில் என்றும் ஆண்களே இருந்துள்ளார்கள். இவர்களுக்குப் பெண்கள் சம்பந்தமான நோய்களின் தாக்கம் புரியவில்லையோ என்று தோன்றுகிறது
  2. மருந்துகளுக்கு அரசாங்கக் கட்டுப்பாடு இருப்பதுபோல, அழகுப் பொருட்களுக்கு இருப்பதில்லை
  3. அழகுப் பொருட்கள் தயாரிப்பாளர்கள், தாங்களே தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்வதாகச் சொல்லிப் பல காலமாய், அரசாங்கங்களை நம்ப வைத்துள்ளார்கள்
  4. ஜா & ஜா கதையிலிருந்து, சுயகட்டுப்பாடு இந்தத் தொழிலில் என்றுமே இருந்ததில்லை என்பது தெளிவாகிறது
  5. உலகெங்கும் ஏராளமான லாபம் ஈட்டும் அழகு பொருட்களில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் வழிகள் மிகவும் குறைவு. உதாரணத்திற்குக் காரில் குறை இருந்தால், இலவசமாக அந்தக் குறையைக் கார் தயாரிப்பாளர் சரி செய்யவேண்டும். அழகுப் பொருட்கள் நுகர்வோருக்கு, இந்தக் குறைந்தபட்ச வழிகூடக் கிடையாது.
  6. மருந்துகளை முதலில் பிராணிகளுக்குக் கொடுத்து வெற்றி பெற்றால், பிறகு, மனிதர்களுக்குக் குறைந்த அளவில் பயன்படுத்தி, அந்தச் சோதனைகளின் முடிவுகளை அரசாங்கத்திற்குச் சமர்ப்பித்து, அதன் பிறகே பொது மக்களுக்கு விற்க முடியும்.
  7. ஆனால், அழகுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் பட்டியலிடப்படுவதில்லை. அத்துடன், அதைப் பிராணிகளுக்கு முதலில் பயன்படுத்திச் சோதனையும் செய்யப்படுவதில்லை. முதல் படியிலேயே, தயாரிக்கப்பட்ட பொருள் நுகர்வோருக்கு அளிக்கப்படுகிறது!

2017–ல் ஜா & ஜா நீதிமன்ற விசாரணையில், 1970-க்குப் பிறகே, நிர்வாக மேலாண்மை புற்றுநோய் ஆபத்துக்களைப் பற்றி அறிந்ததாகச் சொன்னது. (இந்தக் கட்டுரைத் தொடரைப் படிக்கும் உங்களுக்கு எந்தவித வியப்பும் இருக்க நியாயமில்லை.) எதுவரை லாபம் ஈட்ட முடிமோ, அதுவரை ஈட்டிவிடலாம் என்பதே ஜா & ஜா னின் போக்கு.

இன்று, பல நீதிமன்ற வழக்குகளில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களிலிருந்து, ஏறக்குறைய 60 வருடங்களாக, ஜா & ஜா தன்னுடைய டால்கம் பவுடரில் உள்ள பிரச்னைகளை அறிந்திருந்தது தெரியவந்துள்ளது. 1957/58–ல் ஒரு தனிபட்ட சோதனையகம் செய்த ஆய்வின் அறிக்கையில், ஜா & ஜா னின் டால்கம் பவுடரில் ஆஸ்பெஸ்டாஸின் அளவு அதிகமாகவும், ட்ரமோலைட் கலந்திருந்ததும் தெரியவந்துள்ளது. ஒரு பொறுப்புள்ள பணக்கார நிறுவனம் உடனடியாக அல்லது ஓர் ஐந்து ஆண்டுகளில் மாற்று கண்டுபிடிக்க வேண்டும், அல்லது தயாரிப்பை நிறுத்தியிருக்க வேண்டும்.

1976–ல் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுக் கழகம் (FDA) அழகுப் பொருட்களில் ஆஸ்பெஸ்டாஸ் உள்ளதா என்று எல்லா அமெரிக்க அழகுப் பொருள் தயாரிப்பாளருக்கும் வேண்டுகோள் விடுத்தது. ஜா & ஜா, எல்லாம் தெரிந்திருந்தும் தங்களது தயாரிப்புகள் எதிலும் ஆஸ்பெஸ்டாஸ் இல்லவே இல்லை என்று மறுத்தது.

மேலும், இன்றைய நீதிமன்ற ஆவணங்களிலிருந்து ஜா & ஜா, தன்னுடைய குழந்தை டால்கம் பவுடரின் சோதனைகள் எதையும் பெரிதாகச் செய்யவில்லை என்பது தெரியவருகிறது. மிகப் பெரிய அழகு நிறுவனங்கள் (யுனிலீவர் உட்பட) வெளி நிறுவனங்களிடம் தயாரிப்பை விட்டுவிடுகிறார்கள். இவர்களின் விருப்பம், விற்று காசு பண்ணுவது மட்டுமே. ஆனால், வெளியே தயாரிக்கப்பட்ட பொருளைச் சோதிப்பது, ஜா & ஜா னின் தார்மீகப் பொறுப்பு.

உலகச் சுகாதாரச் சங்கம் (WHO), ஒரு தயாரிப்பில் எந்த அளவிற்கு ஆஸ்பெஸ்டாஸ் இருந்தால், மனித சுகாதாரத்திற்குக் கேடு விளைவிக்கும் என்று சரியாகச் சொல்லவில்லை. அத்துடன், ஆஸ்பெஸ்டாஸ் மீதிருந்த தீவிரப் பார்வை, முட்டையகப் புற்று நோய்மீது அந்தக் கால கட்டத்தில் இல்லை.

இதனால், பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிமன்றம் ஏறி, நீதி கேட்டுப் பல தோல்விகளைச் சந்தித்தனர். ஒவ்வொரு முறையும் நீதித்துறை, இந்தப் பெண்களிடம் தகுந்த ஆதாரம் இல்லை என்று வழக்குகளைத் தள்ளுபடி செய்தன.

கடந்த 20 ஆண்டுகளாக, அமெரிக்கா மற்றும் கனடாவின் பெண்கள் தொடர்ந்து ஜா & ஜாமீது வழக்குகளைத் தொடர்ந்து வந்தனர். இவர்களின் குறிக்கோள், தனக்கு நேர்ந்த்தைப்போல, மற்ற பெண்களுக்கும் புற்று நோய் அவஸ்தை வரக்கூடாது என்ற ஆவல். இதனால், ஜா & ஜா பலவாறு முயன்றும் நீதிமன்றத்திற்கு வெளியே ஒன்று முதல் இரண்டு மில்லியன் டாலர் வரையிலான நஷ்டஈடு வேலை செய்யவில்லை. இவர்கள் ஜா & ஜாவின் பணத்திற்கு விலை போகவில்லை என்பது சமூகத்திற்கு நல்லது.

2018 முதல், பல வழக்குகள் பெண்களுக்குச் சாதகமாக முடிவாகி வருகின்றன. செயிண்ட் லூயிஸ் வழக்கு முடிவில் ஜா & ஜா–வை 4.69 பில்லியன் டாலர்கள், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்டஈடு தருமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையிலும் ஜா & ஜா, தன்னுடைய குழந்தை டால்கம் பவுடர் பாதுகாப்பானது என்று சாதித்தது.

2019–ன் இறுதியில், ஒரு வழியாக ஜா & ஜா, அமெரிக்கா மற்றும் கனடாவில் குழந்தை டால்கம் பவுடர் விற்பதை நிறுத்தியது. நீதிமன்றத்தில், ஜா & ஜா கொடுக்கவேண்டிய நஷ்டஈடு 12 பில்லியன் டாலர்களைத் தாண்டிவிட்டது. இந்தியாவில் தயாரிக்கப்படும் பாண்ட்ஸ், கோகுல் மற்றும் பல டால்கம் பவுடரில் இதே அபாயம் உள்ளது. விளம்பரம் கண்டு மயங்கி டால்கம் பவுடர் வாங்குவதை நிறுத்தினால், இந்தக் கட்டுரை எழுதியதற்கு பயன் இருக்கும். இந்திய நீதிமன்றங்களில் நீதி கிடைக்க மேற்குலகைவிடப் பல வருடங்கள் ஆகும். இந்த தயாரிப்புகளைத் தவிர்ப்பதால், பெண்களுக்கு முட்டையகப் புற்று நோய் வருவதாவது குறையும்.

சும்மா பூச்சாண்டி காட்டுவது, இக்கட்டுரையின் நோக்கமன்று. பெண்கள் என்னதான் செய்வது?

  1. டால்கம் பவுடரை பிறப்புறுப்புகளில் பயன்படுத்த்தீர்கள்
  2. அப்படியே பயன்படுத்த வேண்டுமெனில், சோளப் பொடியால் (corn starch) தயாரிக்கப்பட்ட பவுடரைப் பயன்படுத்துங்கள்

இந்தத் துறையில், இன்னும் சரியான அரசாங்கக் கட்டுபாடு இல்லை. சகட்டு மேனிக்குச் சந்தையில் பாரிஸிலிருந்து, நியுயார்க் வரை அழகுப் பொருட்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. போதாத குறைக்கு, சைனாவிலிருந்தும் அழகுப் பொருட்கள் குவிக்கப்படுகின்றன. அமெரிக்காவில், எப்படியாவது சுய-கட்டுப்பாடு என்று சொல்லிச் சமாளிக்கப் பார்க்கிறது இந்தத் தொழில். கனடா, இதற்கான அரசாங்கக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது எப்போது நிறைவேறும் என்று தெரியாது. அத்துடன், இந்தக் கட்டுப்பாடு, எப்படி நுகர்வோருக்கு உதவும் என்றும் சொல்ல முடியாது.

சிகரெட் நிறுவனங்கள்போல இயங்காவிட்டாலும், ஜா & ஜா மறுத்த வண்ணம் இருந்துள்ளது. அத்துடன், நஷ்டஈடு கொடுத்துப் பெண்களின் வாயை மூடவும் முயற்சித்துள்ளது. சந்தையில் ஜா & ஜா சரிவைச் சந்திப்பது உறுதி. ஆனால், ஜா & ஜா–வுக்கு, டால்கம் பவுடர் ஒரு தயாரிப்பு. 82 பில்லியன் டாலர்களில், இது 5 முதல் 8 பில்லியன் டாலர்கள் வருமானம் தரும் தயாரிப்பு. ஓரிரு ஆண்டுகளில், இது வழக்கம்போல மறக்கப்படும். குறைந்தபட்சம், 2019 வரை இழுத்தடிக்காமல், ஒரு 15 ஆண்டுகளுக்குமுன் இந்தக் காரியத்தைச் செய்திருந்தால், பெயரையாவது காப்பாற்றியிருக்கலாம்.

Series Navigation<< டால்கம் பவுடர்விஞ்ஞானத் திரித்தல் – ஜி.எம்.ஓ. சர்ச்சைகள் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.