காமத்தால் உண்ணப்படும் பொருளாகிப் போனவள்

“உடலின் ஆகாயத்துக்கும் மனதின் நிலத்துக்கும் இடையிலான வெளியில் உருவாகின்ற உணர்வுகளின் தீவிரம் கொண்ட கவிதைகள் இவை”

– கவிஞர் சுகுமாரன்.

பின் நவீனத்துவம் நவீனத்துவத்தின் எல்லைகளைத் தாண்டியபோது வந்துசேர்ந்த சிந்தனைப் போக்குகளில் பெண், பெண்ணுடல், பெண் மொழி, பெண் வாழ்க்கை போன்றவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ஆண்களின் வாழ்வியல் கோட்பாடுகளின் வழிமுறையில் பெண்ணையும் அவளின் இருப்பையும் பதிவு செய்து வந்த பெண் எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டுப் பெண்களின் காதலையும் காமத்தையும் பெண்ணியச் சிந்தனையில் இலக்கியமாக்கும் புதுப்போக்குத் தொண்ணூறுகளில் வரத்தொடங்கியது.  இக்காலத்தில் தன்னைத் தீர்க்கமாக வெளிப்படுத்தி பெரும் அதிர்வுகளைச் சிந்தனைத் தளத்தில் ஏற்படுத்தியவர்களில் ஒருவர் சுகிர்தராணி.

தமிழ்க் கவிதை மரபில் மாபெரும் மாற்றமும் உள்ளடக்க வெளிப்பாட்டில் இதுவரை கண்டிராத புதுமையும் கவிதை மொழியில் தனக்கான தனித்துவத்தையும் கவிதைக் கட்டமைப்பில் நேர்த்தியும் கொண்டு கவிதைப் புனைந்தவர் இவர். இவர்முன் முரண்பாடுகளின் ஒட்டு மொத்த தொகுப்பாகச் சமூகம் இருந்தது. இவரின் வாழ்க்கை இரண்டு அடிமைத்தனங்களால் மிகவும் ஒடுக்கப்படுவதாக இருந்தது. சாதியின் கொடுமையும் பெண் அடிமைத்தனமும் இவரை மொழி ஆயுதமேந்த செய்தன. அன்றாட வாழ்க்கையில் அனைவரும் கண்டும் காணாமலும் சகித்துக் கொண்டு வாழும் இந்த வாழ்க்கை இவருக்குப் படைப்பாளுமை என்ற நிலையடைய உரமாக இருந்தது. பெண் குடும்பத்தைச் சார்ந்து இயங்க வேண்டிய சமூகக்கட்டமைப்புக் கொண்ட இந்த வாழ்க்கையில் குடும்ப உறுப்பினர்கள் முகம் சுழிக்கும், ஒதுக்கித் தள்ளும், அவமானப்படுத்தும் அனைத்தையும் தனது கவிதையில் உலவ விட்டார். ஒட்டு மொத்த சமூகமே ஆயுதமேந்தி இவருக்கு முன் நின்றபோது பெண்மையையே ஆயுதமாக்கி காமப் பேயைச் சமூகத்தின் மேல் ஏவிவிட்டார் . பயந்து ஓடிய சமூகமும் ஒரு கோப்பை மதுவோடு கூடிப் பழகிய சமூகமுமாக எதிர்ப்பையும் ஆதரவையும் ஒரு சேர பெற்றார்.

விளிம்புநிலை சிந்தனைகள் உலா வரத் தொடங்கிய சூழலில் முந்திக் கொண்டு கொண்டாடப்பட்டவர் இவர். சாதிய ஒடுக்குமுறையும், பெண்ணிய ஒடுக்குமுறையும் அநாகரிகத்தின் உச்சமாகப் பார்க்கத் தொடங்கிய நிலையில் சுகிர்தராணியின் கவிதையும் கவித்துவம் பெற்றுத் தமிழ் இலக்கியப் பரப்பில் பவனி வரத்தொடங்கியது. இவரின் கவிதையுலகம் முழுக்க முழுக்க பெண்ணும் அவளிடம் பூக்கும் காமமுமே. தமிழ்க் கவிதைச் சிந்தனை மரபில் ஆண் பார்வையில் வெளிப்படுத்தப்பட்ட பெண் காமத்தைப் பெண்ணியப் பார்வையில் கவித்துவத்தோடு வெற்றிகரமாகப் புனைவுக்குள் கொண்டு வந்தவர் இவர். இவரின் பெண் மொழி சங்க இலக்கியப் பெண் காமத்திலிருந்தும் சமூகத்தில் இருந்தும் உரம் பெற்றதாக வெளிப்படுகிறது.

தன்னுள் கள்ளூறி மன மயக்கும் அனுபவத்தை வெளிப்படுத்த எத்தனிக்கும் இவர் அக்கவிதையைத் தொடங்கும்போது எடுத்துக்கொள்ளும் தன்னெழுச்சியே அக்கவிதைக்கு உயிர்ப்பைத் தருகிறது. ஒவ்வொரு கவிதையும் அற்புதமான தொடக்க வரிகளைக்  கொண்டுள்ளது. இவ்வரிகள் கவிஞனுக்கு ஒரு முக்கியத்துவத்தையும் தன்னிருப்பையும் வாசகனுக்குத் தந்துவிடும் அற்புதம் இவரின் கவிதைகளில் நிகழாமலில்லை. ஒரு கவிதை இப்படித் தொடங்குகிறது.

“கனிந்த வேப்பம் பழத்திலிருந்து
வெளியேறும் விதையென
என்னிலிருந்து நீங்குகிறது வெட்கம்”

வெளியேறும் இத்தகைய வெட்கத்தை முழுமையாகப் படிக்க வேண்டும் என்ற உணர்வை இவ் வரிகள் தந்து விடுகின்றன. கனிந்த வேப்பம் பழம் என்ற சொல் பயன்பாடு கவிஞனின் கவிதை வெளிப்பாட்டுத் தன்மை அன்பு கலந்த நெருக்கத்தையும் நம்பகத்தன்மையையும் ஏற்படுத்தி விடுகின்றது. மற்றொரு கவிதை,

“அகற்றப்படாத கண்ணிவெடியைப் போல
துக்கித்துக் கிடக்கிறது காலம்”

எப்போது வேண்டுமானாலும் வெடித்து விடலாம் என்ற நிலையற்ற காலத்தை உணர்த்த கவிஞர் எடுத்துக்கொள்ளும் உவமை ‘கண்ணிவெடியைப் போல’ என்பது. இத்தகைய அனுபவம் தமிழ்ச் சமூகத்திற்கு இல்லையென்றாலும் ஈழப்  போராட்டமும் தமிழர் படுகொலையும் நமக்கான அனுபவத்தோடு இணைத்துப் பார்க்கும் அனுபவத்தைத் தந்துவிடுகிறது. மேலும்,

“வெடிக்கும் காமப் பருத்தியைப் போல
ஆழ்ந்த வெக்கையுடன்
வந்து விடுகிறது கோடைக்காலம்”

இவ்வாறு மலைப்பாம்பென வளைத்து விடுகிறது கவிதை. தன்னுள் எத்தகைய மீறல்கள் இருந்தாலும் அனைத்தையும் கேள்வி இல்லாமல் ஏற்றுக் கொள்ளும் அல்லது கடந்து விடும் மனநிலைக்குக் கொண்டு சென்று விடுகிறது.

பெரும்பாலான கவிதைகளில் மலர்ந்து பூத்து வாசனைப் பரப்புகின்றன மலர்கள். இவை அனைத்து உணர்வுகளுக்கும் இடம் தருவதாக அமைகின்றன. மரங்களும் பழங்களும் மனித உணர்வுகளுக்கு உவமையாகி புதுவெளியைக் கட்டமைத்து விடுகின்றன.

  • “கள்ளிப் பழம் புசித்தலை ஒத்திருக்கிறது”
  • “ஊமத்தைகள் தளும்புகின்றன”
  • “வெம்மை படர்ந்த விருட்சத்தின் உரிகின்ற பட்டையைப் போல”
  • “செங்காந்தள் போலக் கொய்ய ஆரம்பித்தோம்”
  • “அலரிப்பூக்கள் அவிழ்ந்திருக்கும் இடுகாட்டில்”
  • “பிடவம் பூக்களை அலகுகளில் தரித்த”
  • “காட்டுத்தீப் பூக்களை என்மேல் உதிர்த்து”
  • “புன்னை இலைப் புருவம் திருத்தப்படவில்லை”

இவ்வாறு இவரின் கவிதைகள் பூக்களைச் சூடிக் கொள்கின்றன. காமத்தைக் கவித்துவப்படுத்தும் கலையில் பூக்களின் தேவை அவசியப்படுகிறது கவிஞருக்கு. இத்தகைய கவிதைக் கட்டமைப்பு கவிதைக்குள் இழுத்துச் செல்வதை உணர முடிகிறது. கவிதையின் பாடுபொருள் எல்லைத் தாண்டும்போது  கவிதைப் பெண்ணுக்குள் அணைத்துக் கொள்ளும் அற்புதம் இதன் மூலம் நிகழ்ந்து விடுகிறது.

ஈழப் போராட்ட வாழ்க்கையின் அதிகொடூர போர்க் குற்றங்களைப் பல கவிதைகளில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது இவரின் சமூக அக்கறையை வெளிப்படுத்தி நிற்கின்றது. உலக அளவில் போரின்போது பெரும்பாலும் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள், குழந்தைகள். ஈழப் போரில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகள் உலக அறத்தோடு மோதியபோதும் நீதியின் சாயல்கூட இன்னும் வந்து சேரவில்லை. கவிஞராகப் பெண்ணின் காமத்தையும் காதலையும் போற்றிய, நிலைநிறுத்த முயற்சித்த அனுபவங்களுக்கு இடையில் ஈழப் பெண்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளைத் துணிவுடன் பதிவு செய்துள்ளதைச் சிந்திப்பதும் பேசுவதும் அவசியம். அவற்றின் சில,

“குருதி உறைந்த வாய்க்கால்களை
மனிதம் வறண்ட வதைக்கூடங்களைப்
பச்சையமற்ற முகாம்களை”

“சயனைடு குப்பியைக் கழுத்திலணிந்த மாவீரரில்லை
கொல்லப்பட்ட பிறகும்
புரணரப்பட்ட பெண் போராளிகளில்லை
பிஞ்சுக் குழந்தைகள் மீது
குண்டு வீசப்பட்ட செஞ்சோலைகளில்லை”

“பதுங்கு குழிக்குள் சிறுநீர் கழிக்கவும்
ருசியை வென்று இலைகளை உண்ணவும்
ஆயுதமேந்தி வனங்களில் திரியவும்”

இவ்வரிகளைப் படிக்கும்போது இவரின் சமூகக் கவனிப்பும் எதிர்வினையும் வாசகனை உணர்வுள்ளவனாக மாற்றி விடுகிறது. அறிவுத் தளத்தில் இயங்க எத்தனிக்கும் வாசகனைச் சற்று இதயத் தளத்தில் இனிக்க வைப்பதும் சூரியப் பழமாகத்  தணல வைப்பதும் இவரின் பரந்த அனுபவத்தை வெளிப்படுத்துகிறது.

உடலுற்றிலிருந்து சுரந்து பெருகும் காம ரசம் பெரும் நெருப்பாகச் சூரியனை விட சுடர் விட்டு எரிவதை இவர் கவிதையின் ஒவ்வொரு வரியிலும் பார்க்க முடிகிறது. காமத்தைப் பாடுதல் என்பது பெண்களுக்கு மறுக்கப்பட்ட பழமாகவே இருந்து வந்த நிலையில் முன்னத்தி ஏராக ஒரு தலை காமத்தை எழுத்து ஆயுதமாகக் கொண்டு ஒரு காமப் போரையே நிகழ்த்திச் செல்கிறார் கவிதையின் ஊடாக. வாசகனை அதிர்ச்சியடைய செய்ததும் ஆணின் ஆதிக்கம் சற்று நேரம் காணாமல் போயி அடிமையாகப் பயணிக்க முன்னெடுப்பதுமான மொழியை நளினமாகக் கையாண்டுள்ளது இவருக்கான ஆளுமையை நிலைநிறுத்த பெருந்துணையாக அமைந்துள்ளது. இதனைச் சில வரிகளில் அனுபவிக்கலாம்.

“மூச்சுத் திணறி நம்மிடமிருந்து விடுபடுகிறது
களைத்து வீழ்ந்த காமக் கடல்”

“மேலிருந்து மூழ்குகிறது
காமத்தின் புராதனக் கோயில் நான்”

“குவளையிலிருந்து வழியும் மது வென
அள்ள முடியாமலிருந்தது அவர்களின் காமம்”

“மதகடைத்தபின் கசியும் நீரென
காமம் என்னுள் பரவுகிறது”

ஒரு பெண்ணாக அம்மாவை உணரும் தருணங்களில் தோன்றிய ‘அம்மா’ கவிதை வாழ்க்கைக்கும் அதனை உணர்தலுக்குமான நீண்ட கால இடைவெளியை இதில் அறிய முடிகிறது. அம்மாவை உணர நாம் அம்மாவாகும் வரை காத்திருக்க வேண்டிய அனுபவ யதார்த்தமும் அன்பின் அமைதியும் கவிதைக்குள் ஆழமாக வினையாற்றுகிறது. சாதியக் கொடுமையின் உச்சமாக விவாதிக்கப்பட்ட ‘திண்ணியம்’ இங்குக் கவிதையாக்கப்பட்டுள்ளது இவரின் சிந்தனைத்தளத்தைத் தெளிவாக்குகிறது.

தந்தைக்கும் மகளுக்குமான எதிர்ப்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் இருக்கும் வரை இல்லாமல் போவதில்லை. நிறைவேறாத  விருப்பங்கள் மனதின் ஆழப்பதிந்த வடுவாக என்றென்றும் தடவிப்பார்க்கும் ஆறுதலையும் ஏமாற்றத்தையும் தந்துகொண்டே இருக்கிறது.

இவ்வாறு தமிழ்க் கவிதை கண்டிராத பல அனுபவங்களைக் கவிதையாக்கத் துணிந்த முயற்சிகளின் விளைவே இவரது கவிதைகள். இத்தகைய உள்ளடக்கக் கூறுகளைக் கவிதையாக்கி காணாமல் போனவர்கள் மத்தியில் தன்னைத் தவிர்க்க முடியாத ஆளுமையாக உருவாக்கிக்கொள்ள எடுத்துக்கொண்ட கடின உழைப்பும் உண்மையுமே தூங்கவிடாமல் இவரைப் படிக்கத் தூண்டிக்கொண்டே இருக்கின்றன.

துணை நூற்பட்டியல்

1.தீண்டப்படாத முத்தம், சுகிர்தராணி, 2016, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் 629001.

2. காமத்திப்பூ, சுகிர்தராணி, (முதல் பதிப்பு 2012) 2021, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் 629001.

3. தமிழ் இலக்கியமும் பெண்ணிடமும், மல்லிகா.அரங்க. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், அம்பத்தூர்.

4. பறத்தல் அதன் சுதந்திரம், க்ருஷாங்கினி, 2013, காவியா பதிப்பகம், கோடம்பாக்கம் 600024.

5. கொங்குதேர் வாழ்க்கை 2, ராஜமார்த்தாண்டன் (தொ.ஆ), 2004, யுனைடெட் ரைட்டர்ஸ். சென்னை – 5

6. தமிழ்க்கவிதை, ஞானி, காவியா பதிப்பகம், கோடம்பாக்கம் 600024.

7. அவளை மொழிபெயர்த்தல், சுகிர்தராணி, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் 629001.

முனைவர் ம இராமச்சந்திரன்
உதவிப் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு-தமிழ்
ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.