காந்தியை நேசித்தவர்! காந்தியை சுவாசித்தவர்!!

கல்யாணம் அவர்கள் இறப்பதற்கு சுமார் 10, 15 நாட்களுக்கு முன்பு என்னை தொலைபேசியில் அழைத்து ”இன்னும் இரண்டு நாட்களில் நான் இறந்து விடுவேன். நீங்கள் எப்போ வீட்டிற்கு வருவேள்?” என்று கேட்ட போது ”நான் நிச்சயம் வருகிறேன். நீங்கள் அப்படி ஒன்றும் இறக்க மாட்டீர்கள். ஒரு வாரம் கழித்து வருகிறேன். இப்போது நகரமெங்கும் கொரோனா தொற்று வெகு வேகமாக பரவி வருகிறது”.  என்றேன். அவர் என்னிடம் கடந்த ஒன்றரை வருடங்களில் பல தடவை நான் இன்றே இறந்து விடுவேனென்று கூறி பல தடவை என்னை அவரை சந்திக்க வைத்திருக்கிறார். 

கடந்த மே மாதம் நான்காம் தேதியன்று நான் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் போது கல்யாணம் அவர்களின் இளைய புதல்வி நளினி கல்யாணம் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு “ சார். அப்பா இறந்திட்டார். சற்று முன்னதாக 330 மணிக்கு” என்ற போது எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அவரது கடைசி தொலைபேசி அழைப்புதான் என் நினைவில் வந்து வருத்தியது. ஒரு சிறு குழந்தையிடம் விளையாட்டாக சொல்வதைப் போல்தான் அவரிடம் கூறினேன். ஆனால் எனக்கு அவருடைய உடலை மட்டுமே பார்க்க இயன்ற துர்பாக்கியமான சூழல். காரணம் அவர் என்னை சந்திக்க வேண்டுமென்பதற்காக அவரின் வலியானத் தருணங்களில் “ நான் நாளையேக் கூட இறந்து விடுவேன் “  என்பார். அடுத்த நாள் தேனீயைப் போல் மிகுந்த உற்சாகமாய் இயங்கிக் கொண்டிருப்பார். 

கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு வரை தேனாம்பேட்டையில்தான் இருந்தார். அநேகமாக தினமும் அவரை சந்தித்திருக்கிறேன் அல்லது தொலைபேசியிலாவது பேசி விடுவார். அவர் இயங்க முடியாதச் சூழலில் கேளம்பாக்கம் படூரிலுள்ள அவரது இளைய மகள் நளினியின் பராமரிப்பிலிருந்து வந்தார். சுமார் 28 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும்  அவருடைய இருப்பானது எனக்கு தொலைவானது. ஆனால் அவருடைய அழைப்பிற்கு இணங்கி ஒரு ஐந்து நிமிடமாவது அவரை சந்தித்தும் வந்தேன். கொரோனா என்ற கொடுந்தொற்றின் தீவிரம் காரணமாக  மருத்துவ பராமரிப்பிலிருக்கும் அவரை வெளியிலிருக்கும் நான் சந்திக்க கூடாது என்ற எனது கட்டாயக் கொள்கையின் காரணமாகவே அன்று அவரை நான் சந்திக்கவில்லை.  

சுமார் 10 வருடங்களுக்கு முன்பென்று நினைக்கிறேன். காந்தியடிகளின் இறுதி நேர்முக உதவியாளராக இருந்த கல்யாணம் அவர்களைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுப்பதற்காக மராட்டிய மண்ணிலிருந்து ஒரு பெண்மணி தனது படப் பிடிப்புக் குழுவினரோடு விமான நிலையத்திலிருந்து நேரடியாக அவர் வீட்டிற்கு வந்தார். அவர் ஒரு அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவரென்றும் சொன்னார். முதன்முதலாக அவர் கல்யாணம் அவர்களைப் பார்க்கிறார். மிகுந்த வியப்போடு ”உங்களுக்கு 90 வயதா… இளவரசர் போல இருக்கிறீர்கள்” என்றார். இனி நான் அவர் உருவத்தைப் பற்றி சொல்ல எதுவும் தேவையில்லை.

காந்தியடிகளின் இறுதிக் காலத்தில் நேர்முக உதவியாளராக இருந்த கல்யாணம் 1922 ஆகஸ்ட் 15 அன்று சிம்லாவில் பிறந்தவர். இன்னும் சில மாதங்களில் நூறினை எட்டும் தொலைவில் இருந்தார். அவரது மனைவி சரஸ்வதி 30 வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார். அவருக்கு மாலினி கல்யாணம், நளினி கல்யாணம் என இரண்டு புதல்விகள் உள்ளனர்.

டெல்லியில் வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். உடல் ரீதியான உழைப்பில் ஆர்வம் கொண்டிருந்த அவர் காந்தியின் ஆஸ்ரமத்தில் சேர்ந்தார். அவரது அர்ப்பணிப்பான ஆஸ்ரம சேவை காந்தியோடு இறுதி வரை பயணிக்க வைத்தது. சுதந்திர போராட்டத்தின் இலக்கான சுதந்திரம் பிறந்த காலக்கட்டத்தில் எல்லா அரசியல் நிகழ்வுகளையும் அருகிலிருந்து கண்ட ஆளுமை இவர். காந்தி சுடப்பட்ட போது காந்தியின் வெகு அருகிலிருந்த சாட்சி இவர். காந்தி இறந்த போது ஹே ராம் என்று சொன்னதாக எனக்கு படவில்லை என்றார். தமிழ், இந்தி, ஆங்கிலம், குஜராத்தி, வங்காளம், பஞ்சாப் என பன்மொழி வல்லுனர். 

எல்லா மனிதர்களையும் பாரபட்சமின்றி நேசித்தவர். தவறென்று அவர் உணர்கிற போது அவற்றை சுட்டிக் காட்டுவதில் அவர் எந்த சமரசமும் செய்து கொள்வதில்லை. சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் என கடந்த நூறாண்டில் வாழ்ந்த தலைவர்களை முக்கிய  ஆளுமைகளை முற்றும் அறிந்தவர். அந்தக் காலக் கட்டத்தில் இந்தியாவின் முக்கிய தலைவர்களோடும் உலகத் தலைவர்களோடும் மிகவும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். லார்டு மவுன்ட் பேட்டன், எல்லை காந்தி எனப்படும் கான் அப்துல் கஃபார் கான், ஜவகர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, பிர்லா, பட்டேல், மணிபென் படேல், மொரார்ஜி தேசாய், ராஜாஜி, காமராஜர், சர்.சி. வி. ராமன், கிருபானந்த வாரியார், எம்.எஸ். சுப்புலட்சுமி, அப்துல் கலாம் உட்பட்ட உலக ஆளுமைகளுடன் மிகுந்த நட்பில் இருந்தவர். 

இறுதிக் காலம் வரை தனது தேவைகளை தானே பூர்த்தி செய்தார். தனது உடைகளை தானே துவைத்தார், தானே முடி வெட்டிக் கொண்டார், தானே சவரம் செய்தார், தானே வீட்டையும் சுற்றுப் புறத்தையும் துடைப்பானால் தூசியின்றி பெருக்கினார். ஆயிரம் செடிகளை குழந்தைகளைப் போல் தண்ணீர் ஊற்றி வளர்த்தார். தனது உணவையும் தேநீரையும் தானே தயார் செய்தார். வரும் விருந்தினர்களுக்கும் ஒரு வருடத்திற்கு முன்பு வரை தானே சமைத்து உபசரித்தார்.  சின்ன அளவிலான காசுகளைக் கூட விரயம் செய்யாத சிக்கனவாதியான அவர் கோடிக்கணக்கான பணங்களை ஏழைகளுக்கும் பல்வேறு அமைப்புக்களுக்கும் தானமாக வழங்கிக் கொண்டிருந்தார். குறிப்பாக நரசிம்மலு என்ற உடல் முழுவதும் ஊனமுற்ற ஆந்திர மகிளா சபாவில் தங்கிவரும் ஓவியருக்கு மாதந்தோறும் அவருக்கான செலவை வழங்கி வந்தார். இன்னும் தொடர்ந்து வழங்கப் பட்டு வருகிறது.

கடந்த ஒரு வருடத்தில் பலத் தருணங்களில் தொலைபேசியில் குழந்தையாக என்னிடம் அழுவார். அப்போது அவர் என்னிடம்  “ சார். கடவுளுக்கு கருணையே இல்லை. என்னால் சும்மா படுத்துக் கிடக்க இயலவில்லை. ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும். கை கால் அசைக்க இயலவில்லை. வலிக்கிறது. கண் பார்வை மிகவும் மங்கி விட்டது. பார்க்க முடியவில்லை. வேலை செய்ய இயலவில்லை. எல்லாம் சரியாய் இருப்பவர்கள் வேலை செய்யாமல் பொழுதை போக்கிக் கொண்டு இருக்கிறார்கள். வேலை செய்ய தயாராக இருக்கும் என்னை கடவுள் படுத்த படுக்கையாக்கி விட்டார்” என்று கூறிவிட்டு எப்போது நீங்கள் இனி வீட்டிற்கு வருவீர்களென மிகுந்த தாகத்துடன் கூறுவார்.

அவரது ஓயாத உடல் உழைப்பும் எளிய உணவும்தான் அவரை வயதில் நூறிற்கு வெகு அருகில் கொண்டு வந்தது. செடிகள்தான் அவரின் உயிரும் வாழ்க்கையுமாய் இருந்தன. மண்ணோடு தன் வியர்வை சிந்தி தன்னை பரவசித்துக் கொண்ட கல்யாணத்தை மண் தன்னோடு சமீபத்தில் கரைத்து தன்னை புனிதப் படுத்திக் கொண்டது. அவர் வளர்த்த செடிகளைப் பார்க்கிற போது அவை பசுமையாக இருந்தாலும் பார்ப்பவர்களின் மனதை வாட வைக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.