கரிமக் கவர்வு (Carbon Capture) எந்திரங்கள் கண்காட்சி

வளிமண்டலத்திலிருந்தும் தொழிற்கூட உமிழ்வுகளிலிருந்தும் பசுமைக் குடில் வாயுக்களைப் பிரித்தெடுக்கும் புதுமுகத் தொழில்நுட்பம், கரிமக் கவர்வு எனப்படுகிறது. கரிமக் கவர்வு எந்திரங்களுக்கான சிறப்புக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ள லண்டன் அறிவியல் அருங்காட்சியகம், கவரப்பட்ட கரிமம் என்னென்ன நுகர்பொருட்களைத் தயாரிக்க உதவும் என்பதையும் காட்சிப்படுத்தியிருக்கிறது. மென்காற்றிலிருந்து உறிஞ்சப்பட்ட கரிமப் பயன்பாட்டில் தயாரிக்கப்பட்ட வோட்கா போத்தல், பற்பசை பிதுக்குகள், பேனாக்கள் மற்றும் யோகா பாய்கள் போன்ற நுகர்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கண்காட்சியின் “வருங்காலத்தில் நம் கோள்” என்னும் பகுதியில் கரிமக் கவர்வுக்கான முன்மாதிரி (proto) கரிம வாயு அறுவடை எந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. உயிருள்ள தாவரங்களைப்போல் கரிம வாயுவை உள்ளுக்கிழுத்து உயிரிய வாயுவை (oxygen) வெளிவிடும் லக்நேர் (Lackner) செயற்கை மரமும் அதில் அடங்கும். ஹீத் ராபின்சனின் (Heath Robinson) கார்ட்டூன்போலக் கரிமம் உறிஞ்சும் பொருட்களைக்கொண்ட பலகைகள் தொங்கிக்கொண்டிருக்கும் இந்த விசித்திர எந்திரம், அரிசோனா மாகாணப் பல்கலைக்கழகத்தில் (Arizona State University) கிளவுஸ் லக்நேரால் (Klaus Lackner) வடிவமைக்கப்பட்டு இந்தக் கண்காட்சியில் முதன்முதலாகக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

காட்சிப்படுத்தப்பட்டுள்ள பிற கரிமக் கவர்வு எந்திரங்கள்:

  • சுவிஸ் கிளைம்ஒர்க்ஸ்-ன் கரிமப் பிரிப்பு அமைப்பு
  • அபெர்தீன் (Aberdeen) பல்கலையில் உருவாக்கப்பட்ட கரிமக் கவர்வு சாதனம்

இவை காற்றிலிருந்து பிரித்தெடுக்கும் கரிமம், சாராயம் அல்லது பற்பசை போன்ற நுகர் பொருட்களாகிவிடும். மேலும் நாளைய நறுமணச் சுவையூட்டியாகவும் ஆகிவிடும்.

படிம (fossil) எரிபொருட்கள் பயன்பாட்டால் ஆண்டுக்கு 50 பில்லியன் டன் கரிமம் வளிமண்டலத்தில் சேர்கிறது. ஆனால் கரிமக் கவர்வுக் கருவிகளால் பிரித்தெடுக்க முடிவது சொற்பமே, ஈரிலக்க டன்கள் அளவைத் தாண்டாது. இருப்பினும் பசுங்குடில் வாயு உமிழ்வுக் குறைப்பினால் மட்டுமே புவி வெப்பமாதலைத் தடுத்து நிறுத்திவிட முடியாதாகையால் கரிமக் கவர்வும் தொடர வேண்டும் என்கிறார், கண்காட்சியின் நெறியாளர் வார்ட் (Ward). பெரிய அளவில் கரிமக் கவர்வு தொழில்நுட்பங்களை உருவாக்கிப் பயன்படுத்துவது காலநிலை மாற்ற எதிர்ப்புப் போராட்ட வெற்றிக்கு மிக அவசரத் தேவை என்று உணர்த்துவதே கண்காட்சியின் நோக்கம் என்கிறார் அவர்.

சென்ற மாத வளிமண்டலக் கரிம வாயு 417ppm (parts per million )அளவை எட்டியது. (தொழிற்புரட்சிக்கு முந்திய காலத்தில் 289ppm ஆக இருந்தது). காற்றிலுள்ள கரிம வாயு சூரியக் கதிர்வீச்சை உறிஞ்சிக் கொள்வதால் காற்று வெப்பமடைந்து அதுவே தட்ப வெப்ப நிலை உச்சம், வறட்சி, கடல் மட்ட உயர்வு, துருவப் பனிச் சிகர உருகல் மற்றும் வேளாண்மை பொய்த்தல் ஆகிய அனைத்து நிகழ்வுகளுக்கும் காரணமாகி விடுகிறது.

Glasgow-வில் நடைபெறப் போகும் COP26 காலநிலை உரையாடல்களின் முடிவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையான நடவடிக்கைகளைத் அறிவிக்கப்போவது உறுதி. அதன் பின்விளைவாக எல்லா நாடுகளும் படிம எரிபொருள் பயன்பாட்டை நிறுத்திவிட நேர்ந்து புது உமிழ்வுகள் இல்லாது போனாலும், ஊக்கமுடன் வளிமண்டலத்துக் கரிம வாயு நீக்க வேலைகளைத் தொடர்ந்து செய்துவந்தால், எதிர்மை உமிழ்வுகள் (negative emissions) மூலம் புவி வெப்பமாதல் கணிசமாகக் குறையும். தொழில் புரட்சிக்கு முந்திய கால வெப்ப நிலைக்குக் கொண்டுசெல்ல முடியாவிட்டாலும், அதற்கு மேலே, ஆனால் சமாளிக்க முடிகிற 1.5 – 2.0°Cக்குள் நிலைப்படுத்த வேண்டும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

கரிமக் கவர்வு முயற்சிகள் அனைத்தும் கரிம உமிழ்வுக் குறைப்பு, புவிவெப்பமாதல் தடுப்பு இயக்கங்களை முறியடித்துக் கரிம உமிழ்வைத் தொடர எண்ணெய்க் கம்பெனிகள் மேற்கொள்ளும் சூழ்ச்சிகள் மற்றும் திசை திருப்பல்கள் என்று விமர்சிக்கிறார்கள் சூழலியலாளர்கள். பெட்ரோலிய வேதிமக் கம்பெனியான ஷெல் (Shell)-ன் நல்கையை (sponsorship) ஏற்றுக் கண்காட்சி நடத்தப்படுவது அவர்கள் ஐயத்தை உறுதிப்படுத்துகிறது என்கிறார்கள்.

உண்மையில் கரிமக் கவர்வு தொழில்நுட்பம் கீழ்கண்ட இருவிதப் பயன்பாடுகளுக்கும் உகந்தது என்கிறார் எடின்பர்க் (Edinburgh) பல்கலையின் நிலவியலாளரான (geologist) பேராசிரியர் ஸ்டுவர்ட் ஹஸ்செல்டைன் (Stuart Haszeldine).

  • படிம எரிபொருள் பயன்படுத்தப்படும் மின் உற்பத்தி நிலையங்களில் கரிம வாயு உமிழ்வைத் தடுக்கும் பயன்பாடு (கவர்வு விதம்)
  • முன்பே காற்றில் கலந்துவிட்ட கரிம வாயுவை மறுகவர்வு செய்தல் (recapture)

செய்யும் பயன்பாடு

கரிமக் கவர்வு மற்றும் மறுகவர்வு ஆகியவை புவி வெப்பமாதலின் தாக்கத்தைத் தணிக்க உதவும் முக்கியத் தீர்வுகள் என்கிறார் அவர்.

சுட்டி:

https://www.theguardian.com/environment/2021/apr/18/vodka-toothpaste-yoga-mats-the-new-technology-making-items-out-of-thin-air

மூலம்: தி கார்டியன் 18-04-2021 இதழ்
தலைப்பு: வோட்கா,பற்பசை ,யோகா பாய்கள்… இவற்றை மென் காற்றிலிருந்து தயாரிக்கும் புதிய தொழில்நுட்பம்
ஆசிரியர்: Robin Mckie


4 Replies to “கரிமக் கவர்வு (Carbon Capture) எந்திரங்கள் கண்காட்சி”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.