கன்னிக்கருவறை: பார்த்தீனியம்

ஒரு பிராந்தியத்தில் இயற்கையாக தோன்றியிராத, ஆனால் அவை அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பகுதியில் பல்கிப்பெருகி, இந்த புதிய வாழ்விடங்களில், பூர்வீக பல்லுயிர் பாதிப்பு, பொருளாதார இழப்புக்கள் , மனிதன் மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவித்தல் போன்ற பல எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகின்ற தாவரங்களே  ஆக்கிரமிப்பு தாவரங்கள் (Invasive plants).

  உணவுப் பொருட்கள், உரங்கள், வேளாண் இடுபொருட்கள் இறக்குமதியாகும் போது அவற்றுடன் கலந்து இப்படியான ஆக்கிரமிப்பு தாவரங்களின் விதைகள் தவறுதலாக ஒரு புதிய சூழலுக்கு அறிமுகமாகும்.. பல  சந்தர்ப்பங்களில், அலங்கார, மலர் வளர்ப்பு அல்லது விவசாய பயன்பாடுகளுக்காka வேண்டுமென்றே அறிமுகப்படுத்தப்பட்ட  தாவரங்களும் ஆக்கிரமிப்பு தாவரங்களாக மாறிவிடுவதுண்டு

 உதாரணமாக வெப்பமண்டல அமெரிக்க புதர் லந்தானா (Lantana camara லந்தனா கமாரா) 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்தியாவில் ஒரு அலங்கார தாவரமாக அறிமுகப்படுத்தப்பட்டது; இது இப்போது கிராமங்கள், விளைநிலங்கள், நகர்புறங்கள், அடர் காடுகள் உள்ளிட்ட பல்வேறு நிலப்பரப்புகளை ஆக்கிரமித்திருக்கிறது.

ஆக்கிரமிப்பு  தாவர இனங்கள் குறுகிய வாழ்க்கைச் சுழற்சிகளைக் கொண்டுள்ளன, இனப்பெருக்கத்தில் அதிக கவனம் கொண்டு,மிக அதிக அளவில் விதைகளை உற்பத்தி செய்து, வேகமாக முளைத்து,அதிகமாக  பரவுகின்றன..மேலும் பல ஆக்கிரமிப்பு தாவரங்கள் ‘பினோடிபிக் பிளாஸ்டிசிட்டி’  Phenotypic plasticity  எனப்படும் ஆக்கிரமித்திருக்கும் புதிய  வாழ்விடங்களுக்கேற்ப மாறும் திறனையும் கொண்டிருக்கின்றன.பெரும்பாலும், மனிதர்களாலும், சாலைப் போக்குவரத்து, மற்றும் கால்நடை மேய்ச்சல் ஆகியவற்றினால் ஆக்கிரமிப்பு தாவரங்கள்  பல்கிப் பெருகுகின்றன.

2015 ஆம் ஆண்டில் மேற்குத் தொடர்ச்சி மலையின் வால்பாறை பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில் ,  குரோமோலேனா ஓடோராட்டா, லந்தானா மற்றும்  தோட்ட மரமாக அறிமுகமான குடை மரம் எனப்படும் மீசோப்சிஸ் எமினி (Siam weed Chromolaena odorata, lantana and umbrella tree Maesopsis eminii) ஆகியவற்றினால்  அச்சூழலின் இயல் தாவரங்களுக்கு உண்டாகியிருக்கும் குறிப்பிடத்தக்க இடையூறுகள் கண்டறியபட்டது. இது சமீபத்திய ஒரு முக்கிய உதாரணம்

2017 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு  ஆய்வு இந்தியாவில் மட்டும் சுமார் . 200 க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு தாவர இனங்கள்  உள்ளதால், உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான ஆக்கிரமிப்பு தாவரங்களைக் கொண்ட பிராந்தியங்களில் ஒன்றாக இந்தியாவையும் சுட்டுகின்றது. முன்னர் குறிப்பிட்ட லந்தானாவுடன், பார்த்தீனியம், சியாம் களை, மெக்ஸிகன் பிசாசு (ஏகெரடினா அடினோஃபோரா – Ageratina adenophora ) மற்றும் கருவேலம் (புரோசோபிஸ் ஜூலிஃப்ளோரா – Prosopis juliflora) ஆகியவை இந்தியாவின் மிகவும் மோசமான ஆக்கிரமிப்புகளில் சில. வெங்காயத்தாமரை (ஐச்சோர்னியா கிராசிப்ஸ் – Eichhornia crassipes) பல உள்நாட்டு நீர் நிலைகளை முற்றிலுமாக ஆக்கிரமித்துள்ளது., பொன்னாங்கண்ணி கீரை போலவே இருக்கும்  அலிகேட்டர் களையான  (ஆல்டர்னான்திரா பிலாக்ஸீராய்டெஸ் – Alternanthera philoxeroides) இந்தியாவில் நீர்வாழ் மற்றும் நிலப்பரப்பு வாழ்விடங்களை  வெகுவாக ஆக்கிரமித்திருக்கிறது.

இவற்றில் மிக குறிப்பிட்டு சொல்லும்படியான உலகளாவிய இடையூறுகளை கொடுத்துக்கொண்டிருப்பது பார்த்தீனியம் களைச்செடி. இதன் அறிவியல் பெயர்: – Parthenium hysterophorus L.

பிற அறிவியல் பெயர்கள்; (synonyms)

  • Argyrochaeta bipinnatifida Cav.
  • Argyrochaeta parviflora Cav.
  • Parthenium glomeratum Rollins
  • Parthenium lobatum Buckl.

பிற மொழிப்பெயர்கள்

English: barley flower; bastard feverfew; bitterweed; broomweed; carrot grass; congress grass; congress weed; dog flea weed; false ragweed; featherfew; feverfew; mugwort; ragweed parthenium; Santa Maria feverfew; star weed; white top; white top weed; whiteheads; wild wormwood; wormwood

Spanish: ajenjo cimarron; amargosa; camalote; escoba amarga; hierba amargosa; istafiate; requeson

French: fausse camomille; matricaire; parthenium matricaire

Portuguese: mentruz

கேரட் களை, காங்கிரஸ் களை, வெள்ளை தொப்பிக்களை, நச்சு பூடு என பலபெயர்களில் அழைக்கப்படும் இந்தப் பார்த்தீனியம் சூரியகாந்தி குடும்பமான அஸ்டரேசியேவை  சேர்ந்த ஆண்டுக்கொரு முறை பூத்துக் காய்க்கும் களைச்செடி.  மத்திய அமெரிக்காவை சேர்ந்த இது விவசாய நிலங்களில் தரிசு நிலங்களில்,மற்றும் சாலையோரங்களில் காணப்படும் மிக மோசமான களைச் செடிகளில் ஒன்று. பார்த்தீனியம் ஆற்றங்கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், கடற்கரையிலும், வீட்டு தோட்டங்களிலும், வறண்ட நிலப்பரப்புகளிலும் என எங்கெங்கும் பரவி வளரும் ஒரு ஆக்கிரமிப்பு அயல் களை செடியாகும்.( Invasive, exotic  weed) .

 பார்த்தீனியம் இந்தியா முழுக்க விவசாய நிலங்களுக்கும், விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும், சூழலுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. முற்றிலும் இவற்றை அழிக்க முடியவில்லை. ரசாயன களைக்கொல்லிகள் உபயோகித்தும்  அழியவில்லை, சூழல் இன்னும் மாசுபட்டது. அதை உண்ணும் வண்டுகளை மெக்சிகோவிலிருந்து வருவித்தும் பலனில்லை. ஆடு மாடுகளுக்கு அளிக்கப்படும்  தீவனத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கலந்து கொடுத்து உயிரியல் கட்டுப்பாட்டுக்கு  முயற்சி செய்தும் தோல்வி. தீ வைத்து எரிப்பது, உப்பு நீரை தெளிப்பது என்று எல்லா முயற்சிகளுக்கும் அசையவே இல்லாமல் உலகின் எல்லா கண்டங்களிலும் பரவி  உலகின் மோசமான களைச்செடிகளின் பட்டியலில் இருக்கிறது.

கன்னிமை, கருவறை கொண்டிருக்கும்  எனப்பொருள்படும் இதன் அறிவியல் பெயரான Parthenium hysterophorus, எங்கெங்கும் அழிக்க முடியாதபடிக்கு விரைவாக பெருகிக் கொண்டிருக்கும் இதன் இயல்பினால் வைக்கப்பட்டது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் அடர்வனங்களில் கூட காட்டுசெடிகளை அழித்துவிட்டு அவை வளர வேண்டிய இடங்களில் எல்லாம் பார்த்தீனியம் பெருகிக்கொண்டே இருக்கிறது. பாலாடை நிறத்தில் சின்னச் சின்ன வெள்ளை நட்சத்திர பூக்களுடன் அழகிய. ஆனால் ஆபத்தான ஆக்ரமிக்கும் களையான இதை, மிக வேகமாக பரவும் களையாக     ஆப்பிரிக்காவில்  முதலில் 1880ல் கண்டறிந்திருக்கிறனர் அதன் பின்னர் இது உலகெங்கிலும் பரவத்தொடங்கி இருக்கலாம் என்று கருதப்படுகின்றது

அமெரிக்காவில் அதிகமாக இருக்கும் உணவு தானியங்களை, அப்போதைய டாலர் மதிப்புக்கு இணையான இந்திய ரூபாய்களில் 50 சதவீதமும், கூடுதலாக கடல் வழிச்செலவும் கொடுத்து வாங்கும் Public Law 480 எனப்படும்  PL 480 அமெரிக்க இந்திய பொருளாதார ஒப்பந்தத்தின் பேரில் கப்பலில் வந்த   கோதுமை மணிகளுடன் கலந்து பார்த்தீனிய விதைகளும் 1910’ல் இந்தியாவுக்கு வந்தது. நம்மிடமிருந்து  IPKF  ராணுவத்தினருக்கு உணவுக்கென 1987’ல் அனுப்பி வைக்கப்பட்ட செம்மறியாடுகளின் உடலில் ஒட்டிக்கொண்ட விதைகளின் மூலம் இலங்கைக்கு போனது.

ஆனால் தாவரவியல் ஆவணங்களில் பார்த்தீனியம் இந்தியாவில் 1810லிருந்தே காணப்பட்டதற்கான சான்றுகளாக அப்போது பாடம் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டிருக்கும் உலர் தாவரங்கள் எனப்படும் ஹெர்பேரியங்களும் இருக்கின்றன என்றாலும் அப்போது இதன் பரவல் கட்டுப்படுத்தப்பட்டதாக  இருந்திருக்கலாம்.. விதைகளின் மூலம் அமெரிக்காவிலிருந்து ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவிற்கும் இவை பரவியது.

உடல் முழுவதும் மென்மையான ரோமங்களை கொண்டிருக்கும், கிளைகளுடன்,  2 மீட்டர் உயரம் வரை நேராக வளரும் இயல்புடைய, 3-20 செமீ நீளமும் 2-10 செமீ அகலமும் உடைய, விளிம்புகளில் ஆழமான கிழிசல்கள் போன்ற மடிப்புகள் இருக்கும் மாற்றடுக்கு இலைகளும், 4 மி மி அளவுள்ள நட்சத்திரம் போன்ற மலர் தொகுப்பையும், (floral heads) ஏராளமான மிருதுவான கருப்பு விதைகளையும் கொண்டது பார்த்தீனியம்.

சாம்பல் பச்சை நிறத்தில் இருக்கும் பார்த்தீனியம் நல்ல நெடியுடையது,  இவற்றின் ஆணிவேர்த் தொகுப்பு ஆழமானது. முதிர்ந்த செடிகளின் இலைகளின் அளவு, இளம் செடிகளின் இலைகளை விட சிறியதாக காணப்படும். ஒரு சிறிய தாவரம் 800க்கும் மேற்பட்ட மலர் தொகுப்புக்களை உருவாக்கும். 5 இதழ்களை கொண்டிருக்கும். ஒவ்வொரு மலரும் கைப்செல்லா எனப்படும் கனிகளையும், அவற்றினுள் 2-2.5 மிமி அளவுள்ள நீள் முட்டை வடிவ அக்கீன்கள் எனப்படும் விதைகளையும் உருவாக்கும். பிற சூரியகந்தி குடும்பச் செடிகளில் சாதாரணமாக காணப்படும் விதைகள் பரவ வகைசெய்யும் மெல்லிய நூலிழைகள் போன்ற பேப்பஸ் (Pappas) இதில் இருக்காது. விதைகளின் முளைப்பு திறன்  85%.ஆகும்.

பார்த்தீனியத்தில் தூய வெள்ளை நிற மலர்களை கொண்டிருப்பது, வடஅமெரிக்க இனமாகவும் சற்று பழுப்பு அல்லது மஞ்சள் கலந்த பழுப்பு நிற மலர்களை கொண்டிருப்பது தென் அமெரிக்க இனமென்றும் அறியப்பட்டுள்ளது.

 மேலும் ஆஸ்திரேலியாவில் பரவும் வேகத்தில் வேறுபடும் இரண்டு வகைகள் – Biotypes உள்ளன. Toogoolawah biotype வகையானது முளைத்து வளரும் இடத்தில் இருந்து அதிகபட்சமாக 10 கிலோமீட்டர் தூரத்திற்கு மட்டும் பரவுகிறது ஆனால்  Clermont biotype  அதிகபட்சமாக  520,522 km2 வரை பரவுகிறது இவ்விரண்டிற்கும் இடையே விதை முளைப்புத்திறன், மகரந்த சேர்க்கையின் வழிமுறைகள் உள்ளிட்ட நுட்பமான மாறுபாடுகளும், மரபு ரீதியான மாற்றங்களும் உள்ளன.

பார்த்தீனியம் விதைகளின் மூலம் மட்டுமே இனப்பெருக்கம் செய்யும். தண்டுகள் அல்லது வேர்களிலிருந்து இவை இனப்பெருக்கம் செய்வது இல்லை. விதைகள் ஏராளமாக உற்பத்தி செய்யப்படுகிறது. சாதாரண அளவில் இருக்கும் ஒரு செடி  15 லிருந்து 20 ஆயிரம் வரைக்கும் விதைகளை உருவாக்குகிறது. பெரிய புதர் போன்ற செடி  1 லட்சம் விதைகளுக்கு மேல் உருவாக்குகின்றது.

இவற்றின் ஒவ்வொரு மலர்க்கொத்திலிருந்தும் சுமாராக 168,192 என்னும் அளவில் 15 – 20 μm அளவுள்ள உருண்டையான மகரந்த துகள்கள் உருவாகின்றன. அதாவது ஓரு செடியிலிருந்து சுமார்  624 மில்லியன்  அளவில் உருவாகும். மகரந்தத்துகள்கள், காற்று மண்டலத்தில் எப்போதும் காணப்படுகின்றன.

 நிலத்தின் மேற்பரப்பில் விழும் விதைகள் உடனே முளைத்து விடுகின்றன. ஆழப்புதைந்து விடுபவை 6-10 வருடங்கள் வரை முளைக்கும் திறனுடன் காத்திருக்கின்றன. செம்மண், கருப்பு, களிமண் அமிலத்தன்மை அதிகம் உள்ளவை, காரத்தன்மை அதிகம் உள்ளவை, வண்டல் மண் என எல்லா வகையான மண்ணிலும்  இவை செழித்து வளரும். எந்த உயரத்திலும், எந்த தட்பவெப்பத்திலும் மழைப்பொழிவு நன்றாக இருக்கும் இடங்களிலும், குறைவாக இருக்கும் இடங்களிலும், எங்கும்  பார்த்தீனியம் வளரும். 2002 ல் நடந்த ஒரு ஆய்வில் 10 வருடங்கள் கழித்து முளைத்த பார்த்தீனிய விதைகளைக் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது.

பார்த்தீனியம் அருகிலிருக்கும் செடிகளை அழிக்கும் அல்லது வளர்ச்சியை பாதிக்கும் சில வேதிப்பொருட்களை சுரந்து மண்ணில் கலப்பதால் அதனருகில் பெரும்பாலும் பிற தாவரங்கள்   வளருவதில்லை (allelopathic effects).

தற்சமயம் இந்தியாவில் பார்த்தீனியம், பருத்தி,  கரும்பு, கத்தரி, கொண்டைக்கடலை, வெண்டை, எள், ஆகியவற்றையும், பழ மரங்கள், முந்திரி, திராட்சை  ஆகிய பயிர்களின் விளைச்சலையும் பெருமளவு குறைத்து விட்டது

ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லாண்டிலும் மேய்ச்சல்  நிலங்களில் வனப்பகுதிகளில் இவையே ஆக்கிரமித்திருக்கின்றன.

எத்தியோப்பியாவில் சோளம்,  உருளைக்கிழங்கு  வெங்காயம், கேரட், எலுமிச்சை, வாழை. பாகிஸ்தானில் சோளம், மக்காச்சோளம் கோதுமை, அரிசி கரும்பு பூசணி மற்றும் தர்பூசணி, மெக்சிகோவில்  பெரும்பாலான காய்கறி மற்றும் உணவுப் பயிர்களின் வளர்ச்சியை இக்களைச்செடி பெருமளவில் பாதித்திருக்கிறது.  பயறு வகைத் தாவரங்களின் (Legumes) வேர் முடிச்சுகளில் இருக்கும்  வளிமண்டல நைட்ரஜனை நிலை நிறுத்தும் பேக்டீரியாக்களின் செயல்பாட்டை பார்த்தீனியம் குறைப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.  

ஆனால் விந்தையாக Bursera  மற்றும் மிக பெரியதாக வளரும் Ipomoea  தாவரங்களுடன் இணைந்து அவற்றை எந்த பாதிப்பிற்கும் உள்ளாக்காமல் பார்த்தீனியம் வளர்கிறது. இயற்கையில் உயிர்களுக்குள் இருக்கும் இப்படியான புரிதலை மனிதனால் விளங்கிக் கொள்ளவே முடியவில்லை.

இவற்றின் விதைகள் காற்றிலும், நீர்ப்பாசனத்தின் வழியாகவும் வாகனப் போக்குவரத்தில், மனிதனின் மூலம், தீவனப்பயிர்கள் வழியே, விலங்குகள், விலங்கு கழிவுகள், விவசாய இயந்திரங்கள் என்று பலவற்றின் வழியாகவும் பரவுகிறது

கட்டிட பணிகளுக்கு  கொண்டுவரப்படும் மணல் மற்றும் மண் ஆகியவற்றிலிருந்து நகர்புறங்களுக்கு பார்த்தீனியம் பரவுகிறது. கண்டங்களுக்கிடையேயான பரவல் பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படும் விவசாய இயந்திரங்களில் ஒட்டி இருக்கும் விதைகளின் மூலம் நிகழ்ந்திருக்கிறது

பார்த்தீனியச் செடியின் எல்லாப் பாகங்களிலும் காணப்படும்  caffeic acid, ferulic acid, vanicillic acid, anisic acid, fumaric acid, sesquiterpene lactones,  parthenin, hymenin ஆகிய வேதிப்பொருட்களே பிற உணவு மற்றும் தீவனப்பயிர்களின் அழிவுக்கு காரணமாகின்றன.

மேய்ச்சல் நிலங்களை ஆக்ரமித்துள்ள பார்த்தீனியம் கால்நடைகளின் ஆரோக்கியம், பால் உற்பத்தி, இறைச்சியின் தரம் ஆகியவற்றிலும்  பாதிப்புகளை உண்டாக்கியுள்ளது. கால்நடைகளுக்கு பார்த்தீனியத்தின்  sesquiterpene lactone, parthenin, ஆகியவை தோல் வியாதிகளையும்,  குடல்பிரச்சனைகளையும்-  ஏற்படுத்துகின்றது. பார்த்தீனியத்தை நுகரும், சிறிதளவு அவற்றின் பசுந்தழைகளை உண்ணும் கால்நடைகளின் இறைச்சியிலும், பாலிலும், தேனிலும் கூட பார்த்தீனியத்தின் வேதிப்பொருட்கள் இருக்கின்றது.   

பார்த்தீனிய த்திற்கு இயற்கையில் கொன்று தின்னும் எதிரிகள் (Predators) இல்லையென்பதாலும், கால்நடைகள் இதன் இலைகளை எப்போதாவது மிகக்குறைவாகவே உண்ணுவதாலும், இவை சுரக்கும் நஞ்சினால் பிற தாவரங்கள் அந்நிலத்தில் வளரமுடியாமலாவதாலும், இவை உருவாக்கும் ஏராளமான மகரந்தம் மற்றும் விதைகளின் பரவலாலும், உலகிங்கிலும் இவற்றின் வளர்ச்சி கட்டுப்படுத்த முடியாத அளவில் பெருகிக்கொண்டே இருக்கிறது. உணவுச்சங்கிலியில் பெரும் மாற்றங்களை உருவாக்கும் பார்த்தீனியத்தினால் சூழல் சமநிலையும் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகி விட்டிருக்கிறது

 பார்த்தீனியப்பெருகல், மண் வளத்தை பெருமளவு குறைத்து, இயல் தாவரங்களின் வளர்ச்சியையும் மிக மிகக் குறைத்து விட்டிருக்கிறது. மழை மற்றும் பாசன நீரில் கழுவி வரப்படும் இவற்றின் நச்சுப்பொருட்கள் நீர்நிலைகளில் கலந்து அங்கிருக்கும் தாவர விலங்கினங்களையும் பாதிக்கின்றது.

மனிதர்களுக்கும்  சுவாசப்பிரச்சனை, தோலழற்சி உள்ளிட்ட பல ஒவ்வாமைகளை  ஏற்படுத்துகின்றது. பார்த்தீனிய ஒவ்வாமைக்கான சிகிச்சைகளும் மருந்துகளும் இன்னும் கண்டுபிடிக்கப்படாததால் இதனால் உண்டாகும் நோய்களின் தீவிரம் இன்னும் கூடியிருக்கிறது

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 7 சதவீத மக்கள் பார்த்தீனிய ஒவ்வாமை உள்ளவர்களாக இருக்கிறார்கள்.  இச்செடியின் ஹெபட்டொ டாக்ஸினான          Parthenin செம்பு உலோகத்துடன் வினைபுரிந்து இந்தியக் குழந்தைகளின் ஈரல் செயலிழப்பு நோயை Indian Childhood (Cirrhosis (ICC))   உண்டாக்குகின்ற தாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  தோல் அழற்சி, சளி கண்ணில் நீர் வடிதல், கண் எரிச்சல்,அரிப்பு,ஆஸ்துமா,ஆகியவை பார்த்தினியத்துடன் நேரடி தொடர்பில் இருக்கும் 50 சதவீதம் மக்களுக்கு  அதன் மகரந்தத்தால் ஏற்படுகிறது.

இக்களைச்செடியை இயற்கையான முறையில் அழிக்க கடந்த 20 வருடங்களாக பல முயற்சிகளும், ஆய்வுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இலை வண்டான  Zygogramma bicolorata  மற்றும் தண்டு துளைக்கும் அந்துப்பூச்சியான  Epiblema strenuana,  பக்ஸினியா (Puccinia) என்னும் ஒரு வகை பூஞ்சை ஆகியவை பார்த்தீனியத்தின் இயற்கை எதிரிகளாக கருதப்படுகின்றன. ஆஸ்திரேலியாவில் சூரியகாந்தி செடிகளை தாக்கும் வண்டுகளான  Pseudoheteronyx sp.மற்றும் இந்தியாவில் சணல் அந்துபூச்சி எனப்படும்  Diacrisia obliqua  எனப்படும் சணல் அந்துபூச்சி மற்றும் அவற்றின் புழுக்கள் பார்த்தீனியத்தை உண்ணுகின்றன

  இந்தியாவிலும், க்யூபாவிலும் தக்காளி மற்றும் உருளைக்கிழங்குகளை தாக்கும் (Tomato yellow leaf curl virus, Potato X virus and Potato Yvirus)  வைரஸ்களும் பார்த்தீனியத்தை தாக்குகின்றன. ஆனால் இவற்றால் குறிப்பிட்டுச் சொல்லும் படியான வளர்ச்சி குறைப்பை செய்ய முடியவில்லை.

இச்செடிகள்  பூக்கும் காலத்துக்கு முன்னரே வேருடன் பிடுங்கி  நெருப்பிட்டு அல்லது குழி தோண்டி புதைத்து அழிப்பது அவற்றைக் கட்டுப்படுத்தும் ஒரே சிறந்த வழியாகும்.

இக்களைச்செடிகளின் பரவலால் நிலத்தின் மதிப்பு வெகுவாக குறைந்திருக்கும் எத்தியோப்பியாவில் பார்த்தீனியக்களை கட்டுப்பாடுகளை குறித்து  தொலைக்காட்சி, வானொலி, சுவரொட்டிகள் மற்றும் கருத்தரங்குகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் குவின்ஸ்லாண்டில் இக்களை உடனடியாக அழிக்கப்பட வேண்டிய P2 பிரிவின் கீழ் இருக்கிறது. விவசாய தரக்கட்டுப்பாட்டு விதிகளின் பேரில் பார்த்தினிய விதைகளை கொண்டு வரும் வாகனங்களுக்கும் இங்கு தடை விதிக்கப்படுகிறது, பிற விதைகளுடன் பார்த்தீனிய விதைகள் கலந்துவிடாமல் இருக்கவும் கவனம் செலுத்தப்படுகின்றது.  

கென்யாவின் நச்சுக்களை சட்டம் (Noxious Weeds Act of 2010) நில உரிமையாளர்களை அவரவர் நிலங்களிலிருந்து பார்த்தீனியத்தை  முற்றிலும் அழிக்க சொல்லுகின்றது

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இந்நச்சுக்களையின் பரவலை கட்டுப்படுத்த  இப்படியான எந்த  சட்டபூர்வமான கட்டுப்பாடுகளும், விதிகளும் இல்லை.   

 ஆவாரை, யூகலிப்டஸ், வேம்பு ஆகியவற்றின் இலைச்சாறு பார்த்தீனியத்தின் முளை திறனையும், வளர்ச்சியையும்  ஓரளவிற்கு மட்டுப்படுத்துகிறது. இந்தியாவில் பல கிராமங்களில் பார்த்தீனியத்தை வேருடன் பிடுங்கி குழிதோண்டி கல் உப்பிட்டு புதைத்துவிட்டு அவ்விடங்களில் ஆவாரையை வளர்க்கும் வழக்கம்  கடைப்பிடிக்கப்படுகின்றது. இம்முறையில் பார்த்தீனிய வளர்ச்சியை பெருமளவில் கட்டுப்படுத்தலாம். சமையல் உப்பை நீரில் கரைத்து நல்ல வெயில் நேரத்தில் இவற்றின் மீது தெளிப்பதால் இவற்றை ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம்.

இயற்கை முறைகள் முற்றிலும் தோல்வியுறும் சமயங்களில்  atrazine, dicamba, 2 ,4-D, picloram and glyphosate போன்ற ரசாயனங்கள் பார்த்தீனியத்தை  கட்டுப்படுத்த உபயோகப்படுத்தப்படுகின்றன. பிறகளைகளுக்கு பொதுவில் உபயோகப்படுத்தப்படும் களைக்கொல்லிகளான imazapyr, oxadiazon, oxyfluorfen, pendimethalin thiobencarb,  ஆகியவையும் பார்த்தீனியத்தை ஓரளவுக்கு கட்டுப்படுத்துகின்றன.

இதன் ஒரு சில பயன்களாக இதை மட்கச் செய்து உரமாக பயன்படுத்தலாம் என்பதையும், இதன் நச்சுத்தன்மையுள்ள  வேதிப்பொருட்களை கொண்டு பூச்சிக்கொல்லி மருந்துகளை தயாரிக்கலாமென்பதையும் சொல்லலாம். 

இப்பூமியில் பயனற்ற தாவரங்களே இல்லையென்பதால் களைச்செடிகளை ‘ A right plant in the wrong place” என தாவர அறிவியல் குறிப்பிடுகின்றது ஆனால் பார்த்தீனியம் எல்லா நாடுகளிலுமே   ”wrong plant in the right place’’  தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.