ஆர்த்தேறும் கடல்

இந்தப் பெருந்தொற்றுக் காலம், மற்றப் பெரிய சிக்கல்களைப் பின் தள்ளித் தன்னையே ஒரு வருடக் காலமாகக் கவனிக்க வைத்து விட்டது. இன்னமும் அதைத்தான் கவனிக்க வேண்டிய நிலையில் உலகம் இருக்கிறது. ஆனால், சூழல் அழிவுகள் ஏற்பட்டுக் கொண்டுதானிருக்கின்றன. உலகம் இதன் பாலும் அக்கறை செலுத்த வேண்டும். புவி வெப்பமயமாதல், கரிப் பதிவுகள், பசுமை இல்ல வாயுக்கள், நீர் மாசுபடுதல், காற்று மாசுக்குள்ளாவது போன்ற பல இன்னல்களை மானுடம் எதிர் கொள்கிறது. இவை ஒவ்வொன்றும் விரிவாக ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தக் கட்டுரையில் நிலத்தடி நீரை நாம் உறிஞ்சி எடுத்து பயன்படுத்துவதால் கடல் நீர் உட்புகுவது, நிலம் தாழ்ந்து, கடல் மட்டம் மேலோங்குவது போன்றவற்றைப் பற்றி பார்க்கலாம்.

நிலத்தடி நீரை மிகவும் அதிகமாகப் பயன்படுத்தும் இன்றைய தேவைகளால், 2040 வாக்கில் 1.6 பில்லியன் மனிதர்கள் மிகப் பாதிப்படைவார்கள் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. ஆமாம், ஏன் பூமியின் மடியிலிருந்தும் குடிக்கும் அதீத தாகம் நமக்கு ஏற்பட்டுள்ளது?

மனிதர்கள் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளனர். கடற்கரை அருகே பல பெரு நகரங்கள், மலைகளை வெடித்துப் பொடித்து வாழ்விடங்கள், தொழிற்சாலைகள் என்று இயற்கையின் நில அமைப்பை மாற்றிவிட்டோம். மழை நீர் பூமியில் சேர்வதற்கேற்ற சாலை அமைப்புகள், நீர் வடிகால்கள், சிறிய தடுப்பணைகள் போன்றவை, குடி மராமத்துப் பணிகள் எல்லாம் ஏட்டளவில் இருக்கின்றன. ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரங்களில் அல்லது கடற்கரை ஒட்டிய இடங்களில், முக்கியமாகப் பெரு நகரங்களில்  நாம் மேற்கொள்ளும் கட்டுமானப் பணிகள் நில அமைப்பினைக் குலைத்து விடுகிறது. இதை நில வீழ்ச்சி என்று அழைக்கிறார்கள். இந்த வீழ்ச்சி இரண்டு காரணிகளால் நடை பெறுகிறது. அதிகமாக நீர் உறிஞ்சப்படும் நீர் கொள் படுகை, மற்றும் நிலம். நீர் கொள் படுகையில் மணல், சரளை, அல்லது களிமண் இவற்றிற்கிடையில் நீர் சேகரமாகிறது. நீர் கொள் படுகையில் களிமண் மிகுந்திருக்கையில், ஒழுங்கற்ற விதமாக கழுவும் தொட்டியில் போடப்பட்டுள்ள பாத்திரங்கள் போல, மண் கற்கள் தங்களை அமைத்துக் கொள்ளும். அவை இயற்கையாகவே அவ்வாறு செயல்படுகின்றன. நீர் இத்தகைய படுகையில் சேர்ந்து நிலத்தடி நீராகிவிடும். அத்தகைய நீரினை நாம் அதீதமாகப் பயன்படுத்தத் தொடங்கும் போது மணற்பருக்களின் இடைவெளி குறைந்து அவை ஒழுங்காக அடுக்கப்பட்ட தட்டு தாங்கிகளைப் போலாகிவிடும்; இடம் குறைகிறது; எனவே சேமிக்கப்படும் நீர் குறைகிறது. நிலத்தடி நீர் குறைந்து அதில் கடல் தண்ணீர் உட்புகுந்து நிலத்தில் ஆர்த்தேறி வருகிறது.

இது ஒரு பிரச்சினையா, நிலத்திற்குள் நீரை மீண்டும் செலுத்திவிடலாமே, அதன் மூலம் நீர்ப்படுகையைப் பழைய நிலைக்குக் கொண்டு வந்துவிடலாமே என்பவர்கள் ஒன்றை கவனிக்க வேண்டும்;(பிதுக்கி எடுக்கப்பட்ட பற்பசையை அதே குழலுக்குள் செலுத்தத் தெரிந்தவர்கள் சொல்லலாம்!) மிகச் சிறிதளவே அந்த மணற்பருக்கள் உள்ளுக்குள் நகர்கின்றன. மிக மிகச் சிறிய அளவில்தான் நிலம் மீள்கிறது. இது இரட்டைச் சீர் கேடு- ஒன்று நிலம் மறுபடி ஊதாது; நீர்ப்படுகை முன்னளவில் நீரை உள் உறிஞ்சாது.

சூழல் சீர் கேடுகளுக்கும் நில வீழ்ச்சிகளுக்கும் மறைமுகமானத் தொடர்பு இருக்கிறது. வெப்பமயமாகும் புவியில் வறட்சி என்பது அதிகத் தீவிரத்துடன் அடிக்கடி ஏற்படும் சாத்தியங்களுள்ளது. ஒரு வருடத்தில் எத்தனை அளவு மழை பெய்திருந்தாலும், நீடித்த வறட்சி, சூழல் சீர்கேடுகளால் ஏற்பட்டு விடுகிறது. அதிக வறட்சியின் காரணமாக அதிக அளவில் நிலத்தடி நீர் எடுக்கப்படும்; ஏறி வரும் கடலோ, மூழ்கும் நிலத்தில் வெள்ள அபாயத்தை ஏற்படுத்திவிடும். இந்த நிலையை நில வீழ்ச்சி என்று சொல்லும் அறிவியலாளர்கள், $8.19 ட்ரில்லியன் சொத்துக்கள் உலகளவில் பாதிக்கப்படும் என்று கணக்கிடுகிறார்கள். இந்த ஆபத்து உலகெங்கும் காணக் கிடைக்கிறது; நீர் ஆதாரங்களை அழித்து அதன் மீது செய்யப்படும் கட்டுமானங்கள், நில வீழ்ச்சியினால் பெரும் வெள்ளத்தைக் கொண்டு வரும். கலிபோர்னியா முதல் நெதர்லாந்து வரை, மெக்ஸிகோ தொடங்கி, இந்தோனேஷியா வரை இந்த அபாயம் இருக்கிறது. மனிதர்கள் ஆற்று முகத்துவாரங்களில் நகர்களை அமைத்துக் குடியேறினார்கள்; அந்த வண்டல் மண்ணைப் பயன்படுத்தினார்கள். கரையோரத் தட்டையான வண்டல் மண் பகுதிகளில் நில வீழ்ச்சி ஏற்படுவதற்கு சாதகமான சூழல் இருக்கிறதாம். முன்னர் ஏரியாக இருந்த இடத்தின் வண்டலின் மீது கட்டிடங்கள் கட்டிய மெக்ஸிகோவில் தற்போது நிலவீழ்ச்சி அபாயம் உணரப்படுகிறது. 20ஆம் நூற்றாண்டில் பொருளாதார வளர்ச்சியில் சிறப்பிடம் பெற்ற, விவசாயத்தில் நல்ல மகசூல் அடைந்த கலிபோர்னியாவின் San Joaquin Valley ஒரு நல்ல உதாரணம். பெரும் வறட்சிகள் ஏற்பட்டதால், நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்பட்டு, 1970க்குள் நிலம் 28 அடி உட்புதைந்து, நீர் கொள் படுகையின் மேலிருக்கும் கட்டுமானங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில் இருக்கின்றன.

மக்கள் தொகைப் பெருக்கமும், அதிக நீர்த் தேவைகளும் உலகம் எதிர் கொள்ளும் சிக்கல்கள். சூழல் சீர்கேடுகள் வறட்சியினைக் கொணர்கின்றன.  ஜாகர்த்தா, இந்தோனேஷியாவின் தலைநகர், ஆண்டிற்கு 10 இஞ்ச் வீதம் கடலிற்குள் சென்று கொண்டிருக்கிறது. கடல் மட்டம் ஏறி வருகிறது. இன்னும் முப்பதாண்டுகளில் 95% வட ஜாகர்த்தா கடலுக்குள் சென்று விடும் என கணிக்கிறார்கள். இந்தோனேஷியா தன் தலை நகரை மாற்றும் திட்டத்தில் இருக்கிறது.

வறட்சியைப் பற்றிப் பேசும் போது ‘மின்னல் வறட்சிகள்’ பெரும் கவனம் கோரும் ஒன்றாகும். இந்தியாவில், 1951 முதல் 2020 வரையிலும் 5  மின்னல் வறட்சிகள் ஏற்பட்டுள்ளன. பாதிப்பு மதிப்பீட்டின் படி அவை இவ்வாறு வரிசைப்படுத்தப் பட்டுள்ளன- 1979, 2009, 1951, 1986, 2005. பொதுவாக வறட்சி ஏற்பட மாதக் கணக்கிலாகும்; ஆனால், மின்னல் வறட்சிகள் மண்ணில் ஈரப்பதம் விரைவாகக் குறைகையில் சட்டென்று ஏற்பட்டுவிடும். 

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் ஒரு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேற்புற மற்றும் நிலத்தடி நீர் சேமிப்பு 2002-லிருந்து 0.12 செ. மீ அளவில் ஆண்டு தோறும் குறைந்து வருகிறது. (சமீபத்தில் பெய்த வட கிழக்குப் பருவ மழையால் நிலத்தடி நீர் சற்று மேம்பட்டுள்ளது.) மீஞ்சூர், மற்றும் தாமரைப்பாக்கத்தை மாதிரியாக எடுத்துக் கொண்டார்கள். இரண்டிடத்திலும் நிலத்தடிப் படுகையின் ஆழம் சமமாக இருந்தது. ஆனால், மீஞ்சூரில் கடல் நீர் உள் நுழைந்திருந்தது. கரைப்பகுதியின் நீர்ப்படுகைகளில் ஆண்டிற்கு 2 மி.மீ என்ற அளவில் கடல் நீர் உட்புகுந்துள்ளது. விளைவு, நன்னீர் குறையும்; உப்பு நீராகிவிடும்.

இது சுழல் போன்றது. அதிக வறட்சி ஏற்படுகையில் அதிகமான அளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப் படுகிறது. அதனால், அதன் அமைப்பு குலைகிறது. கடலோரங்களில் இந்த நிகழ்வால், உப்பு நீர் உட் புகுந்து விடுகிறது. நல்ல நீர் ஆதாரங்கள் அழிந்து விடுகின்றன. அமெரிக்க நிலவியல் கணக்கெடுப்பு மையத்தில் பணிபுரியும் Michelle Sneed மற்றும் அவர் குழு இந்த நில வீழ்ச்சிக்கான  காரணிகள்,  மற்றும் உலகெங்கும் இதன் நிலைமை என்பதற்கான ஒரு மாதிரியை அமைக்க முயன்றார்கள்.  உலகெங்கும் வெளியாகும் சூழலியல் செய்திகளை 200 இடங்களலிருந்து பெற்றார்கள். அந்தந்த மண் வாகு, மக்கள் தொகை, பொருளாதார வளர்ச்சி, நீர் பயன்பாட்டு அளவு, சூழல் மாறுபாடுகள் போன்ற தரவுகளைத் திரட்டினார்கள். எதிர் வரும் இருபது ஆண்டுகளில் 4.6 மில்லியன் சதுர மைல் நிலம் உலகளவில் வீழும் என்பது அதிர்ச்சி தரும் செய்தி. ஆம், இந்த நில வீழ்ச்சி என்பது ஒரு நில நடுக்கத்தைப் போல, எரிமலை கக்குவதைப் போல கண்களுக்குத் தெரியும் ஒன்றல்ல. Gerardo Herrera Garcia என்ற நிலவியல் அறிவியலாளர், ஸ்பெயினில், புவியியல் மற்றும் சுரங்க அமைப்பில் பணியாற்றுபவர், சொல்கிறார்: “பேரழிவு உணரப்படாமலே நடந்து விடும்- கட்டமைப்புகள் பாதிக்கப்படலாம், பெரும் வெள்ளப் பெருக்கு நேரலாம். கடற்கரைப் பகுதிகளிலும், ஆற்று முகத்துவாரத்திலும் வெள்ளத்தால் அதிக இடங்கள் அவதியுற நேரலாம்.” இது கவலை தரும் செய்தி. Patrick Barnard சொல்வதின் படி கரையோரப் பெரு நகரங்கள் மிகப் பெரிய பாதிப்புக்களை இதனால் அடையலாம்; கிட்டத்தட்ட 70% மக்கள் நகரங்களில் 2050 களில் வசிக்கக்கூடும் என்ற நிலையில் நில வீழ்ச்சியின் ஆபத்துப் பரிமாணம் அச்சம் தரக்கூடும்.

இதனை ஒட்டி வங்காள தேசத்தில் கடல் உட்புகுவதும், அதனால், அந்த நாட்டவர் மட்டுமின்றி, அண்டைய நம் நாடும் இடர்களை அனுபவிக்க நேரிடும் என்பதையும் சுருக்கமாகப் பார்ப்போம். பெருகி வரும் மக்கள் தொகை, இனி விரிவாக்க முடியாத விவசாய நிலங்கள், இயற்கைப் பேரிடர்களான புயல், வறட்சி, நில அமைப்பு அனைத்துமே வங்காள தேசத்தின் நில வீழ்ச்சிக்குக் காரணமாக அமைகின்றன. அவர்கள் உடனடியாகக் கடலோரப் பகுதிகளை பலப்படுத்த வேண்டும். ஐக்கிய நாடு இணையம் இதற்கான ஆலோசனைகள், பொருளுதவி செய்கிறார்கள். உயரும் கடல் மட்டத்திற்கு இணையாக முகத்துவாரங்களிலிருந்து வண்டல் படிவுகள் நிலத்தைச் சார்ந்து அதன் மட்டத்தை உயர்த்தினால் கடல் நீர் உள் நுழைவதைக் குறைக்க முடியும் என்பது இதன் அடிப்படை. 

மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் பல்வேறு அமைப்புகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், ரோஹிஞ்சா(Rohingya) மக்களை  இயற்கை ஆபத்துக்கள் அதிகமுள்ள ‘பாஸன் சார்’(Bhasan Char) என்ற தீவில் வங்காள தேச அரசு குடியேற்றி வருகிறது. நிலைமை இவ்வாறிருக்க, இருக்கும் நிலத்தையும் கடல் பறித்துக்கொண்டால், பலர் புலம் பெயரும் அபாயம் உள்ளது. அம்மக்கள் மத ரீதியாகவும், பிழைப்புத் தேடியும், அருகிருக்கும் நாட்டிற்கு அனுமதி இல்லாமல் வருகிறார்கள். இந்த நிலையில் ‘சூழல் புலம் பெயர்தலும்’ சேர்ந்து கொண்டால் நம் சுந்தர வனமும், மேற்கு வங்காளத்தின் வடக்குப் பகுதியும், இந்தியாவின் துறைமுக நகரங்களும் பாதிக்கப்படக்கூடிய சாத்தியங்களை நாம் நினைக்க வேண்டுமல்லவா? உலகில் இன பேதம், நிற பேதம், மொழி பேதம், மத பேதம் போன்ற வன்முறைகள் நிலவுகையில் அசந்தர்ப்பமாக கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்பது நினைவிற்கு வருகிறது.

கட்டாயத்தின் பேரில் புலம் பெயர்பவர்கள் (ரோஹிஞ்சா), புலம் பெயர நேரிடும் ஆபத்து உள்ளவர்கள் (இந்தோனேஷியா, வங்காள தேசம்) பார்த்தோம். 

சூழல் நிலைகள் ஏற்புடையதாக இல்லாததால், தங்கள் விருப்பத்தின் பேரில் புலம் பெயரும் சிலரையும் பார்ப்போம். ஒரு பழைய திரைப்படத்தை சமீபத்தில் சின்னத்திரையில் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் காச நோய் உள்ள நாயகியை சுவிஸ் தேசத்திற்கு அனுப்பி மருத்துவ உதவி செய்வார்கள். அமெரிக்காவில் ‘சூழல் புலம் பெயர்பவர்கள்’ அதிகரித்து வருகின்றனர். ஜூடித், தங்கள் இசை நண்பர்களைப் பிரிந்து செல்ல ரெனோ, நவாதாவில் நிலவும் தட்ப வெப்பச் சூழல் காரணம் என்று சொல்கிறார். அவர்கள் ந்யூ இங்கிலாந்தின் ஒரு கிராம நகரத்திற்கு புலம் பெயர்ந்துள்ளார்கள்.

தலைமுறைகளாக வாழ்ந்த இடம் என்பது அருகி வருகிறது என்கிறார்  போர்ட்லேன்ட் பல்கலையில் பயிற்றுவிக்கும் Jola Ajibade. நெஷுவா(Nashua) மாகாணம் தற்போதைய விருப்பத் தேர்வாக இருப்பதாக Sarah Marchant சொல்கிறார். ஃப்ளோரிடாவில் வெள்ளம் மற்றும் புயல் அச்சங்கள் உள்ளன; கலிபோர்னியாவிலோ பற்றி எரியும் காடுகள். ஆனால், இத்தகைய உள் நாட்டுப் புலம் பெயர்தல், நகரக் கட்டமைப்பில் எதிர் பாராத விளைவுகளைக் கொண்டு வருகிறது எனவும் சாரா சொல்கிறார். ஆனாலும் சீரமைப்புகள் நடை பெறுவதாகவும் அவர் தெரிவிக்கிறார். அதிகமாக மக்கள் ஒரு இடத்தில் குடியேற முயலும் போது போக்குவரத்து, வீடுகள், தொழிலகங்கள், நீர் ஆதாரங்கள், மருத்துவ வசதிகள், கல்வி போன்ற துறைகளில் தாக்கம் மிகும்.

நாம் மேலும் நில வீழ்ச்சியைப் பற்றிப் பார்க்கலாம். பேரளவில் கழிவுகள் புதைக்கப்பட்ட நிலங்களிலும் பூமி உள் வாங்கும் சாத்தியங்கள் உள்ளன. அரிஸோனா, மற்றும் பெர்க்லெ பல்கலையின் மாதிரிக் கணிப்பின் படி 165 சதுர மைல் விரிகுடாப் பகுதி இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் நீரால் சூழப்பட்டுவிடும். அரிஸோனா பல்கலையின் நில இயற்பியலளர் Manoochehr Shirzaei அவர்கள் ஆய்வில், இத்தகைய அபாயங்களுக்கு  அதிகமாக உள்ளாகும் இடங்களில் துல்லியமான கணக்கீடுகளுக்கான கருவிகளைப் பயன்படுத்தியும், வானூர்தியிலிருந்து லேசர் ஒளியைச் செலுத்தி அத்தகைய இடங்களின் வரைபடம் தயாரித்தும், செயற்கைக் கோள், ரேடார் மூலம் தரும் தகவல்களுடன் பொருத்தி இணைத்தும், நில வீழ்ச்சியினை, அதன் வேகத்தை கண்டறிவதாகச் சொல்கிறார். நிலத்தடி நீரை உபயோகிப்பதால் நில வீழ்ச்சி ஏற்படுகிறதென்று, வறட்சியால்  தவிக்கும் மனிதர்களை நிலத்தடி நீரை எடுக்காதீர்கள் எனச் சொல்ல முடியாது. அப்படியென்றால் தீர்வு தானென்ன? வெள்ள அபாயம் இருக்கும் இடங்களில் கட்டிட மட்டத்தை சற்று உயர்த்தலாம். கடல் நீரை நன்னீராக்கும் வழிகள் எடுக்கலாம்-ஆயினும் இதற்கு எரிசக்தி அதிகம் தேவைப்படும்; எனவே, செலவு மிகுந்த செயல். மழை நீர் சேமிப்புத் தொட்டிகள், வடிகால் அமைத்தல், கால்வாய்கள் கட்டுதல், மழை அதிகமாகப் பெய்யும் காலங்களில் சேமிக்கும் வண்ணம் சேகரிப்பு நிலையங்களை பராமரித்து, வலுவாக்கி, உட்கிணறுகள் அமைத்தல் போன்றவை பயன் தரும். மழை நீர் அறுவடை என்ற தமிழக முன்னெடுப்பு நல்ல பலன்களைத் தந்தது. வறண்ட தெப்பக்குளங்கள் நிரம்பின. ஸ்னீட் சொல்வது போல் ‘நிலவியல் நிலவியல் தான். அதை என்ன செய்ய முடியும்?’ 

ஆப்பிரிக்காவின் தெற்குப் பகுதியில் இருக்கிறது நமீபியா. அதில் உள்ள நமீப் பாலைவனத்தில் இருக்கும் நண்டு ஸ்டெனோகேரா க்ரஸிபி என்பதாகும். வருடத்திற்கு 2 செ. மீ மழை தான் அங்கே பெய்கிறது. இந்தப் பாலைவனம் அட்லாண்டிக் கடலை ஒட்டி அமைந்திருக்கிறது. அதனால் விடிகாலையில் கடலிலிருந்து பனிப்புயல் கிளம்பி பாலையில் கவிகிறது. பனித் துளிகளைத் தன் உடல் மேற்புறத்தில் அமைந்திருக்கும் புடைப்புகளில் மேற்குறிப்பிட்ட வண்டு ஏந்திக் கொள்கிறது. புடைப்பு நிரம்பி அதன் தலை பாகத்திற்குத் தண்ணீர் வருகிறது. அது பின்னர் தன் வாய் வழியே அந்த நீரைப் பருகி விடுகிறது. இதே அமைப்பைப் பின்பற்றி தென் அமெரிக்காவின் பெரு நகரில் பனிப்பொழிவு அதிகமுள்ள இடங்களில் பனி நீர் சேகரிப்பு வலைகள் அமைத்துள்ளார்கள். அதை சேகரிப்பதற்குண்டான கட்டமைப்புகளும் உள்ளன. 250 குடும்பங்களின் நீர்த்தேவையை இது தீர்க்கிறது; விவசாயத்திற்கும் பயன்படுகிறது. இயற்கை நமக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

இந்தியாவில் தற்சமயம் வானிலை இணைய முகப்பு ஒன்றினை அரசு செயல்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளது. கள வானிலையை அறியும் வண்ணம் கண்காணிப்பு மையங்கள் பல பகுதிகளில் இல்லை என்பதால் இந்த இணைய முகப்பு பல்வேறு இடங்களின் தட்ப வெப்பச் சூழல்களை அறிந்து துரிதமாகச் செயல்பட உதவும்.

காற்று மாசு, கண் பார்வைக் குறையை ஏற்படுத்தும் என்று பிரித்தானிய கண் மருத்துவர்கள் சங்கம் உலக சுகாதார நிறுவனத்திடம் ஒரு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. வயது சார் விழித்திரை தேய்மானம், (Age related Macular Disorder/Degeneration)) 8% அதிகரிக்குமென்றும் பார்வை பறிபோகும் சாத்தியங்கள் அதிகரிக்கும் என்றும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது. காற்று என்ற தலைப்பில் பாரதி எழுதியுள்ளது என்றென்றைக்குமான உண்மை

“காற்றே உயிர். அவனை வணங்குவோம். அவன் வரும் வழியிலே சேறு தங்கலாகாது; நாற்றம் இருக்கலாகாது; அழுகின பண்டங்கள் போடலாகாது; எவ்விதமான அசுத்தமும் கூடாது. காற்றின்  வழியிலே கற்பூரம் முதலிய நறும் பொருள்களை கொளுத்தி வைப்போம்.

அவன் நல்ல மருந்தாகி வருக
அவன் நமக்கு உயிராகி வருக
அமுதமாகி வருக
அவனுக்கு நல் வரவு கூறுகின்றோம்.
அவன் வாழ்க

– பாரதியார் 

உசாத்துணை:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.