ஆணின் அன்பு

இந்த தலைப்பு வைத்ததற்கே பெண்கள் பலரும் “க்கும்” என்று என்னை முறைப்பது தெரிகிறது.

உங்களுக்கு என்ன அங்க உட்காந்துகிட்டு எழுதுவீங்க, பஸ்ல போய் இடி வாங்கி பாருங்க அப்போ தெரியும் அன்பு கின்பு எல்லாம் என்று சொல்லும் அனைவருக்கும் அடுத்த பத்தி.

பண்டிகை சமயத்தில் ஒரு ஜவுளிக்கட்டை லிப்ட்டில் வயதான ஒரு நபர் கூட்ட நெரிசலில் என் கால் இடுக்கில் கையால் தடவிய போது, அந்த ஆணை அடிக்கத்தெரியாமல் ஓஓஓ என்று நான் கத்தி, எல்லோரும் என்னை விசித்திரமாக பார்த்திருக்கிறார்கள்.

ப்ளஸ் டூ படிக்கும் போது வழக்கமாக செல்லும் டவுன் பஸ் கண்டக்டர் தினமும் மார்பகங்களை இடித்தபடி பலமுறை சென்றது புரியவே கொஞ்ச நாளானது.

உறவினர் இருவர் செய்த பேட் டச்சை பள்ளி பருவத்தில் இயலாமையும் பயமுமாக கையாண்டிருக்கிறேன். இவை எல்லாம் நான் எதிர்கொண்ட ஆண்களின் இழி செயல்கள்.

 இதைவிட கொடுமைகளை பாலியல் தொல்லைகளாகவும், குடும்ப வன்முறையாகவும் எதிர்கொண்ட, தற்போதும் ஆட்படுகிற பெண்கள் இந்த நொடியும் உண்டு.

அவர்கள் அனைவரின் நியாயமான கோபம், ஆற்றாமை, அத்தகைய ஆண்கள் மீது அவர்கள் கொள்ளும் வெறுப்பு அனைத்தும் எனக்கும் உண்டு. அப்பெண்களத் தழுவிக் கொள்ளவே விழைகிறேன்.

அந்த நெருஞ்சி முட்களைத் தவிர்த்து, சில தருணங்களில் அன்பைச் சொரிந்த ஆண்களைப் பற்றியே இக்கட்டுரை.

இது அத்தகைய ஆண்களுக்கான சமர்ப்பணம் அல்ல. அவர்கள் சேர்த்த சிறு சந்தோஷங்கள், ஆசுவாசங்களைக் கொண்டு நெருஞ்சி முள் நினைவுகளைப் பின் தள்ளும் முயற்சியே.

எட்டு, ஒன்பது வகுப்பு படிக்கும் போது, பள்ளிக்கு அருகிலேயே என் வீடு என்பதால் பள்ளிக்கு ஆட்டோவில் செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.அதனால் ஆட்டோ ஓட்டும் அண்ணன்களின்  மீது பதின் வயதிற்கே உண்டான ஒரு ஈர்ப்பு இருந்தது எனக்கு. பள்ளிக்கு வரும் ஆட்டோ ஓட்டுநர்களிடம் நீங்க எந்த ஊர் என்று ஆரம்பித்து அவர்களிடம் பேச முயற்சிப்பேன். என் தந்தை வந்து அழைத்து செல்லும் வரை கேட்டின் பக்கவாட்டில் நின்று கொண்டு பேச முயற்சிப்பேன். பள்ளி விடும் நேரம் இருக்கும் சலசலப்பும் கூட்டமும் உங்களுக்குத் தெரியும். இத்தனைக்கும் நடுவில் வாட்ச்மேன் தாத்தா என்னை கவனித்துக்கொண்டே இருப்பார். ஒரு முறை கூட ஆட்டோகாரரிடம்  ஒரு வரிக்கு மேல் நான் பேசியதில்லை ..அண்ணா நீங்க எந்த ஊர் என்று நான் கேட்டு அவர்கள் திரும்பி யாரென்று பார்ப்பதற்குள், தாத்தா,  “பாப்பா பைய எடு, மரத்துக்குக் கீழ வா, உனக்கு யாரு அம்மாவா, அப்பாவா, கூட்டிட்டு போக யாரு வருவாங்க,”  என்று எதையாவது கேட்டு என் பேச்சைக் குறுக்கீடு செய்து ஆட்டோகாரரையும் பகைத்து கொள்ளாமல் உடல் மொழியாலேயே போக செய்து விடுவார். இது என்னை மட்டுமல்ல என் போன்ற வானரங்கள் அத்தனையையும் கண்காணித்து எங்களை அழைத்து செல்பவர் வரும் வரை சமாளிப்பார். இது தானே அவரின் பணி என்று சொல்லலாம். ஆனால் அவர் அதை, தான் ஒருவர் மட்டுமே செய்ய வேண்டிய கடமை போலக் கருத்தாகச் செய்வார். சுத்திச் சுத்தி அடிப்பது மாதிரி நாங்கள் அவரை அவ்வளவு அலைய வைத்திருக்கிறோம், தாத்தா, தாத்தா என்று ஆளாளுக்கு கத்துவோம்.

இப்போது நினைத்தால் அவர் மனதில் அந்த நேரத்தில் எங்களை ஏதோ ஒரு விதமாக பாதுகாக்க, ஓயாது ஒவ்வொருவரையும் தன் கண் பார்வையில் இருத்தி வைக்க அவரிடம் வெளிப்பட்ட பரபரப்பை முழுதாக உணர முடிகிறது. கோழி குஞ்சுகளை கூடைக்குள் இட்டுச்செல்வது போல வியர்வை வழிய எங்களை இந்தப்பக்கம் நிற்க வைத்து தடுப்பு அரண் மாதிரி தன்னை வெளிப்படுத்திக் கொள்வார். பள்ளியின் கடைசி நாளன்று எங்கள் நச்சரிப்பு தாங்க முடியாமல் ஐஸ் சேமியா வாங்கித்தந்து சிரிப்பார். 

பணி நிமித்தமாக நான் சிங்கப்பூரில் இருந்த போது 22 பேர் கொண்ட டீமில் நான் மட்டுமே பெண். பல நாட்கள் பின்னிரவு வரை வேலை நீளும். அதில் முக்கால்வாசி நாட்கள் நான் ரொம்ப சலிப்புடன் வேலை செய்திருக்கிறேன். என்னைக் கிண்டல் செய்துகொண்டே அப்படி இப்படி என்று என் குழுவில் இருந்தவர்கள், அவர்கள் அலுவலகத்தில் இருந்து செல்லும் வரை என்னையும் இருக்கச் செய்து என் வேலையை முடிக்கச் செய்து விடுவார்கள். அந்த வருட அப்ரைசலில் 5 பணியாளர்களுக்கு ஸ்டார் ரேட்டிங் கொடுக்கப்பட்டது, எனக்கும் சேர்த்து. அதற்குக் காரணம் என் டீமில் இருந்து இவர்கள், சக பணியாளர் பரிந்துரை என்று அவர்களை பரிந்துரைக்கக் கேட்ட போது என்னைப்  பரிந்துரை செய்ததும் மிக முக்கிய காரணம்.

நீங்கள் செய்த வேலைக்கு தானே நல்ல ரேட்டிங் கிடைத்தது என்று கேட்கலாம் ஆனால் என்னைச் சிறிது ஊக்கப்படுத்தி, “அவங்க எங்க செஞ்சாங்க, சீக்கிரமாவே போய்டுவாங்க,” என்று யாரும் சொல்வதற்கு இடம் கொடுக்காமல்,  எனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கச் செய்தார்கள்.

கடும் போட்டி  நிறைந்த என் துறையில் வருடாந்திர ரேட்டிங் என்பது ஒரு வருட உழைப்பின் விலை. 

சிகரெட் பிடித்துவிட்டு அவர்கள் வரும் போது நான் எதிரில் வர நேர்ந்தால், “அங்க நின்னே சொல்லு” என்று கொஞ்சம் தள்ளி நின்றே பேசுவது அடிப்படை நாகரிகம் தான் என்றாலும், அவர்களுடைய வார்த்தையில் துளி அளவு கரிசனம் இருக்கத்தான் இருக்கும்.

நான் கல்லூரியில் படிக்கும் போது என் மாதவிடாய் நாட்களில் கடும் வயிற்றுவலி, பித்த வாந்தி என்று ஒரு பெரும் அவஸ்தையாக இருக்கும். ஒரு முறை கல்லூரியை அடைந்த உடன் தொடங்கிய மாதவிடாயால் வலியில் அழ ஆரம்பித்துவிட்டேன். நான் அழுது துடிப்பதை்ப பார்த்து எங்கள் எச்.ஓ.டி. (அவர் பெயர் பரமகுரு) வீட்டுக்குத் தகவல் சொல்லி அழைத்துப் போகச் செய்தார்.

இது நடந்நு 6 வருடங்கள் கழித்து கோயம்புத்தூர் செல்லும் பஸ்ஸில் அவரை பார்த்தேன். கண்டுகொண்டு பேசினார். “சரிங்க சார், கெளம்பறேன்” என்ற போது, “இப்போ ஒடம்பு எல்லாம் பரவால்லயா,” என்று கேட்டார். நான்  ஒரு நிமிடம், நல்லாதான இருக்கேன் என்று நினைத்துக்கொண்டு விழித்தேன். “அங்க காலேஜ்ல இருக்கும் யோது வயத்துவலி இருந்துதே, இப்போ பரவால்லயான்னு கேட்டேன்” என்றார்.நான் பதில் சொல்வதற்குள், “அன்னிக்கு எனக்கு வலிச்ச மாதிரி இருந்துச்சு போங்க” என்று அவர் சொன்ன போது அவரின் கண்ணாடி க்ளேரை தாண்டி அவர் கண் நிறைந்ததை கண்டேன். இன்றும் அத்தகு நாட்களில் நான் கேட்காமலே பேண்ட்ரியில் இருந்து டீ எடுத்துத் தந்துவிடடு,” எதாலது வேணும்னா கூப்டு” என்னும் சக பணியாளர்கள் உண்டு. இவர்களுக்கு எப்படி தெரியும் என்று உங்களை மாதிரி தான் நானும் முழிப்பேன். இன்னும் சில கூச்ச சுபாவிகள் எப்படி உதவ என்று தெரியாமல், “ஜண்டு பாம் போட்டுக்கறயா ” என்று அதை நீட்டுவார்கள். அந்த வெகுளித்தனமும் அன்பே.

என் அக்கா (பெரியம்மா பெண்), கல்லூரி விரிவுரையாளரான அவருக்கு 38 வயதில் திருமணம் நடந்தது. என் அக்கா என்னவோ  ஜாலியாகத்தான் இருந்தார். விடுவாரா என் பெரியம்மா, அக்காவுடன் வேலை பார்த்தவரிடம் புலம்ப, அவரும், அவரின் நண்பரும் சேர்ந்து அக்காவுக்காக தங்கள் மொபைல் எண்ணைக் கொடுத்து  மேட்ரிமொனி ஜ.டி க்ரியேட் செய்து சலிக்காமல் தேடினார்கள். இதற்காக அவர்கள் செலவிட்ட நேரமும், முயற்சியும் என் அக்காவின் குடும்பத்தாரைவிட அதிகம். ஒரு போதும் அந்த உதவியை அவர்கள் நாங்கள் ஆற்றும் சேவை என்றோ, அப்பாடா எனக்கு ஒரு புண்ணியம் சேரும் என்ற தொனியோ இல்லாமல்  தான் செய்தார்கள். அந்த குடும்பத்திற்கு்ச சந்தோசத்தை்க கொண்டுவந்துவிட வேண்டும் என்று மட்டுமே விரும்பினார்கள்.

என் அக்கா மகளும் (இது இன்னொரு அக்கா) நானும் எங்கள் தெருவில் நடந்து சென்ற போது எதிரில்  இருந்த தறி பட்டறையிலிருந்து வெளியே வந்த பையன் (15 வயதிருக்கும்), கையில் கொடல் பாக்கெட்டை (மஞ்சள் நிறத்தில் ஃபரைம்ஸ் மாதிரி இருக்கும்) வைத்து சாப்பிட்டுக்கொண்டே வந்தான். எதேச்சையாக நாங்கள் இருவரும் அதை இரண்டு விநாடி அதிகமாக பார்க்க, தயங்கியபடி அந்த பாக்கெட்டை எங்களிடம் நீட்டினான். வேண்டாம் என்ற போது திரும்பிச் சென்றவன், நாங்கள் தெரு முக்கு திரும்புவதற்குள் புதிதாக ஒரு பாக்கெட் வாங்கி ஓடி வந்து “இது பிரிக்காதது” என்று சொல்லி கையில் திணித்து விட்டுச் சென்றான்.இதை எப்படி வகைப்படுத்துவது என்றே தெரியவில்லை. இது விடலை வயதின் துறுதுறுப்பாக எனக்கு தோன்றவில்லை. எதையோ பேசிக்கொண்டே அம்மா நம் தட்டில் இன்னொரு இட்லி வைப்பாரே அப்படித்தான் அன்று இருந்தது.

அலுவலக பிரச்சனைகளோ, சொந்த பிரச்சனைகளோ நான் உணர்ச்சிவசப்பட்டு சுயபச்சாதாபத்தின் விளிம்பை தொடும் போது, என்னை இன்னோர் திசையில் சிந்திக்க வைத்து முடிவுகள் எடுக்க வைத்த ஆண்களை நினைத்துப் பார்க்கிறேன். 

மேலே சொன்ன பலவிதமான அன்பின் வெளிப்பாடுகளை நான் பெற்றுக்கொண்டது  ஒரு முறை மட்டுமே பார்த்தவர், உடன் பணிபுரிபவர் என்ற அளவு பரிச்சயமானவர்களிடம் இருந்தே.

ஏர்போர்ட்களில் திக்கி முக்கி ட்ராலியில் பெட்டியை நான் தூக்கி வைப்பதற்குள் “ஹெல்பு வேணுமா” என்று கேட்காமல் டக்கென்று தூக்கி வைத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் சென்றவர், பழநியில் நான் மொட்டை போட்டுக்கொள்ள போனபோது “பூ முடி கூட குடுக்கலாம். எல்லாம் ஒன்னுதான்” என்று கத்தி நடுங்க மூக்கை உறிஞ்சிக்கொண்டு எனக்கு மொட்டை போட்டு முடித்தபின் என்னை நிமிர்ந்து பார்க்காத அந்த நடு வயதுக்காரர் (அவர் சர்வீஸில் எத்தனை மொட்டை பார்த்திருப்பார்) என்று அன்பின் குளிர்ச்சியை (அது என்ன,  அன்பின் கதகதப்புன்னு தான சொல்வாங்க என்று யோசிக்காதீர்கள். எனக்கு அதென்னவோ ஜில்லுன்னு தான் இருக்கு) சட்டென்று அளிக்கிறார்கள்.

தான் எடுத்து வரும் குழந்தையின்மைக்கான சிகிச்சை, முதலீட்டுக் குறிப்புகள், புளிக்குழம்புக்குச் சுவை கூட்டுவது, வெற்றிலைக் கொடி வளர்ப்பது வரை எதைப்பற்றியும் ஆண்கள் என்னிடம் பகிர்ந்திருக்கிறார்கள்.

இதுக்கும் அன்புக்கும் என்ன சம்பந்தம். .பட்டுப் புடவையின் ஊசி நூல் சரிகை போல மெல்லிய ஒரு அன்பு இல்லாவிட்டால் இத்தகு யதார்த்தமான உரையாடல்கள் நிகழாது. கடந்த ஒரு வருடமாக வீட்டிலிருந்து வேலை செய்யும் பெரும்பான்மையானவர்களுக்கு ஒரு இயல்பான உரையாடல் தரும் ஆசுவாசம் நன்றாக புரியும்.

நான் கூறிய சம்பவங்கள் எல்லாம் நேர்மறையானவை மட்டுமே. அதே சம்பவங்களில் உங்களில்  பலருக்கும் அதன் எதிர்மறை பக்கத்தை கடக்கும் சந்தர்ப்பம் வாய்த்திருக்கக்குடும்.. மறுக்கவில்லை.

கொஞ்சமேனும் என் நெருஞ்சி முள் வடுக்கள் தேய,  கிணற்றில் சத்தமில்லாமல் ஊறும் ஊற்று போல நான் எதிர்கொண்ட சில ஆண்கள் மனதில் அன்பு ( இவற்றை நான் அன்பு என்கிறேன். அப்படி சொல்ல முடியாது, அன்புக்கு கொஞ்சம் கம்மி என்று நீங்கள் கொண்டாலும் தவறில்லை) கசிந்து கொண்டுதான் இருக்கிறது. அது ஒரு சிறு உதவியோ, ஆறுதல் வார்த்தையோ, கரிசனப்பார்வையோ, நம் வலி உணரும் தருணமோ, அடியில் படர்ந்திருப்பது அன்பு தான். நம்புங்கள்.

6 Replies to “ஆணின் அன்பு”

 1. வணக்கம் நண்பரே,
  ஆண்கள் என்றால் ஆணவம்.. ஆதிக்க வர்க்கம்..என்ற நிலைப்பாட்டை கடந்து.. கிணற்றில் சத்தமில்லாமல் ஊறும் ஊற்று போல.. ஆண்களின் மனதில் அன்பு.. அருமை.. நம்பிக்கை தான் வாழ்க்கை.. நன்றி!!!

 2. ஆண் படைக்கப்பட்டதே பெண்ணிடம் அன்பு பாராட்ட வே.
  நடுத்தரப்பட்ட பெண்களின் வாழ்க்கையும் அவர்களின் எண்ணோட்டங்களும் மிக அருமையாக பதிந்து உள்ளார் இந்த படைப்பாசிரியர்.
  உங்களுக்கு என் அன்பு கலந்த நன்றிகள்
  இப்படிக்கு
  ஸ்ரீதர்

 3. ஆணினின் அன்பு உற்று பார்த்து புரிந்து கொள்ள வேண்டிய அழகான கோலத்தில் கண்ணுக்கு தெரியாமல் மறைந்திருக்கும் புள்ளி. அதை அழகாக கூறியுள்ளார் ஆசிரியர்

 4. நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களிடத்திலும் நாம் சந்திக்கும் அந்த சில மணித்துளிகளில் எந்த அளவிற்கு அன்பு காட்ட முடியுமோ உற்சாகத்தை தர முடியுமோ அந்த உற்சாகத்தையும் அன்பையும் கொடுப்போம் ..

  இது அன்பு சூழ் உலகம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.