
இளமையின் தீவிரமான செயலூக்கம் முதுமையில் இருப்பதில்லை என்பார்கள். கலையில் லயிப்பு கொண்டவர்களிடம் இதை மாறாகப் பார்க்கலாம். முதுமை கொண்டு வரும் கனிவும், அமைதியும் அவர்களுடைய கலை பங்களிப்பிற்கு மேலும் மெருகூட்டுகிறது. தன்னுடைய தொன்னூற்றைந்து அகவையிலும், அண்மையில் மறைந்த எழுத்தாளர் திரு. கி ராஜநாராயணன் அவர்களால் சிறுகதை ஒன்றை எழுதிவிட முடிந்திருக்கிறது. அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர், கிரா அவர்கள் முதன்முதலில் ‘மாயமான்’ கதையை எழுதியது போலத்தான், நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய ‘கதை சொல்லி’ புனைவையும் உற்சாகத்துடன் கைப்பட எழுதி முடித்தார் என்பார்கள். அண்மையில் க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களின் நினைவேந்தலின் போது பேரா அ இராமசாமி அவர்களும், இயக்குநர் அம்ஷன்குமாரும் கி ராஜநாராயணனின் உற்சாகமான எழுத்துப் பணியை வியப்புடன் குறிப்பிட்டு சொன்னது நினைவிலாடுகிறது.
அப்படித்தான் அவரால் இருக்க முடியும் என நினைக்கிறேன். இயல்பாக, தன் வாழ்விலிருந்து அள்ளியெடுத்து வைத்த அனுபவப் பதிவுகளின் வழியே அவர் தன் இலக்கியத் தடத்தை செறிவாக கட்டமைத்திருக்கிறார். தன் பின்னே, கூடி வரும் ஒரு சந்ததியினருக்கு அவரளித்த கொடை, அவருடைய எழுத்து மட்டுமல்ல. அவருடைய வாழ்க்கையேதான்.
என்னுடைய பள்ளிக்கூடக் கால வாசிப்பனுபவத்தில், கரிசல் காட்டு வாசத்துடன் அறிமுகமானது கிட்டப்பா, அச்சிந்திலு காதல் அனுபவங்கள். வீட்டுப் பெரியவர்களின், மாலை நேர திண்ணைப் பேச்சின் சுவாரசியத்துடன், கிராமிய மக்கள் வழக்கில், துள்ளிப்பாயும் நடையில் கோபல்ல கிராமம் நமக்கு அறிமுகமாகியது. கிட்டப்பன் அச்சிந்திலு தவிர, கோவிந்தப்ப நாயக்கர், காரவீட்டு லச்சுமண நாயக்கர், கோவப்ப நாயக்கர், ராசப்ப நாயக்கர் என புலம்பெயர்ந்த கம்மாள நாயக்கர்களைப் பற்றிய அழுத்தமான சித்திரத்தை கூட்டிக் காண்பித்தது கோபல்லபுர கிராமம். இன்னமும் பல பத்தாண்டுகள் நின்று பேசப்படும் ஓர் இலக்கிய படைப்பாக, பலரின் வாசிப்பின் வழியே அச்சிறு கிராமம் பரந்து விரிந்த பெருநிலமாக உருவாகியிருக்கிறது. சிறிய பாதத்தைக் கொண்டு உலகை அளந்த திரிவிக்கிரமன் போல, கிரா-வால் இந்த ரசவாதத்தை நிகழ்த்தி காட்ட முடிந்திருக்கிறது. நாட்டாரியல் மரபில், பாலியல் கதைசொல்லலை, கி ரா அளவிற்கு இயல்பாக கையாண்டவர் இல்லை எனலாம். முதிர்ந்த அகவையில் மிளிரும் குறும்பு பகடிகளைப் போல, அவர் சொல்லிச் சென்ற பாலியல் அங்கதக் கதைகளை அவருடையச் சொற்களில் விவரித்த்தால் அவை ஓர் ஆரோக்கிய சௌந்தர்யம்.
கிரா-வின் எழுத்துலக பயணத்தில் முக்கியக் கூறுகளில் ஒன்றாக இருப்பது, இச்சமூகத்து மீதான அவருடைய கூர்மையான பார்வை. அதனடிப்படையில் அவர் இச்சமூகத்தின் மீது ஒரு பெரும் அக்கறை கொண்டிருந்திருக்கிறார் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஏதோ ஒரு காரணமாக, அவரை நைனா என விளிக்கத் தொடங்கிய இலக்கிய வாசகர் உலகின் மீது அவர் தந்தைக்கான அக்கறையைக் கொண்டிருந்தார் என்பது உண்மைதான். இதற்கு சான்றாக ஒரு சம்பவத்தை அவருடைய பதிவுகளிலிருந்து குறிப்பிடுகிறேன். அவருக்கு அறிமுகமான ஒரு நபர், ஒரு நல்ல சிறுகதையை எழுதியிருப்பதை இவர் குறித்து வைத்துக் கொள்கிறார். ஆனால், அதன்பிறகு அந்த நபரிடமிருந்து எந்தவித படைப்புகளும் வரவில்லை. சில ஆண்டுகள் கழித்து அவரை சந்திக்கும் போது ‘ஏன் பிறகு எதுவும் எழுதவில்லை’ எனக் கேட்டதும், ‘முதலில் எழுதியதற்கே பெரியதாக யாரும் அங்கீகாரம் செய்யவில்லை. அதனால் தொடர்ந்து எழுத ஆர்வமில்லை’ எனப் பதில் வருகிறது. மிகவும் வருத்தத்துடன் இந்த நிகழ்வை பதிவு செய்யும் கிரா அவர்கள், தொடர்ந்து கண்ணில் படும் நல் எழுத்துக்களை அக்கறையுடன் ஊக்குவிப்பது எவ்வளவு முக்கியம் எனக் குறிப்பிடுகிறார்.
கிரா-வின் எழுத்தின் அழகியலில் அவருடைய வர்ணனைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலர்த்திய துணியை உருவி எடுத்தது போல, அந்தி வானம் நிறம் மாறுவதைக் குறிப்பிடுகிறார். மஞ்சுவிரட்டில் மாட்டை அடக்குவது, இரண்டு நண்பர்கள் கட்டிப் பிடித்து உருண்டு சண்டையிடுவது, தண்டனையாக கழுமரத்தில் ஏற்றப்படுவது என அவர் விவரிக்கும் ஒவ்வொரு காட்சிகளிலும், வாசிப்பின்பம் கூட்டக்கூடிய சொல்லாட்சிகளும் கற்பனைகளும் அபரிமிதமாக நிறைந்து இருக்கின்றன. அதீத பாவங்களை எழுத்தில் கட்டமைப்பதில் அவருக்கு தனித்திறன் இருந்த்து.
நாட்டாரியல் என்பது பழமொழிகள், வீரக்கதைப் பாடல்கள், விடுகதைகள், புராணக் கதைகள், பாலியல் அங்கதங்கள் எனப் பலவற்றையும் உள்ளடக்கிய களஞ்சியம். கிரா-வால் இதன் வழியே செவ்வியல் இலக்கியத்திற்குள் கம்பீரமாக நடைபயில முடிந்திருக்கிறது. அவருக்கு பின்னர், வட்டார வழக்கிற்கென பெரும் அங்கீகாரம் பெற்ற பெரும் எழுத்து தலைமுறை உருவானதற்கு, நாம் அவருக்கு பெருமளவில் கடமைப்பட்டிருக்கிறோம். கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் என்கிற பெருமை அவருக்குண்டு. அதற்காக அவர் எதையும் வலிந்து இயற்றாமல், இயல்பாக நிகழ்த்திக் காட்டியதில்தான் அவருடைய தனித்த புகழ் இருக்கிறது. தந்தையென அவர் தன் பிற்கால சந்ததியினருக்கு உண்டாக்கியிருக்கிற புதிய பாதை அது. அவர் வாழ்ந்த நிறைவான வாழ்க்கையின் போதே அப்பாதை செறிந்து தழைத்தோங்கி பெருகுவதை அவரால் பார்க்க முடிந்திருக்கிறது. எத்தனை பேருக்கு அமையும் இப்படியானதொரு வாழ்க்கை?
போய்வாருங்கள் ஐயா! புகழோடு உங்களைப் போற்றி வணங்குகிறோம்!