
அமெரிக்க பகல்பொழுதில், எனது சக அலுவலருடன் தனிப்பட்ட உரையாடலை, அப்பொழுதுதான் ஆரம்பித்திருந்தேன். இளவேனில் பாபுவின் பெயர் என் கைபேசியில் மின்னியது. இது நல்லதற்கல்லவே என்று எடுத்தேன். சக அலுவலரிடம், இது இந்தியாவிலிருந்து வரும் அழைப்பு என்று சொன்னதும், நாம் அப்புறம் பேசலாம் என்று துண்டித்துக்கொண்டார். இளவேனில் பேசவேயில்லை, குரல் கம்மியது. ‘எத்தனை மணிக்கு?’ என்றேன். ‘பதினொரு மணிக்கு’ என்றார்.
தமிழ் எழுத்தாளர்களில், நான் முதன் முதல் எனது ஆதர்சமாகக் கருதியது கி.ராஜ நாராயணன் அவர்களைத்தான். ஒரு விவசாயியாக இருந்துகொண்டு தமிழ் எழுத்தில் சாதனையை செய்த அவரையே ஒரு விவசாயி மகனான நான், எனது கதாநாயகனாக அவரை வரித்துக்கொண்டேன். அவர் எழுதிய புனைவுகள் என்று இல்லை, அவர் தொகுத்த நாட்டுப்புறக் கதைகள், நாட்டார் விளையாட்டு, கரிசல் அகராதி என அன்னம் பதிப்பகம் வெளியிடுவதை ஒன்று விடாமல் வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். நான் முதுகலை இரண்டாம் வருடத்தில் (1986-1987) இருந்தேன். அவரை புதுவைக் கல்லூரியில் நாட்டாரியல் நடத்தும் பேராசிரியராக பதவி கொடுத்து அமர்த்துவதாக சொன்ன செய்தி, வளரும் வயதில் ஊக்கம் கொடுத்த முக்கியமான விஷயங்களில் ஒன்றாக அமைந்தது. கல்யாணம் ஆன புதிதில், கி.ரா-வின் நாட்டார் கதைகளின் உரையாடல்களை எடுத்துச் சொல்லி புது மனைவியை சிரிக்கவைப்பேன்.
‘கோபல்ல கிராமம்’, ‘கோபல்ல புரத்து மக்கள்’ நாவல்களை முதன் முதலில் வந்தபொழுதே வாசித்திருந்தாலும், இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை பாடப் புத்தகங்களை வாசிப்பதுபோல் வாசிப்பேன். கோபல்லபுரத்து மக்கள் நாவலில், சில சரித்திர நிகழ்வுகளை, கிழமையும், மாதமும் வருடமும் போட்டிருப்பார். இணையத்தில் போய் அந்த வருடத்தை தேடி தேதியைப் பார்த்தால், கிழமை சரியாக இருக்கும். ஜெயமோகன் வரிகளில், கி.ரா. என்றால் தெளிவு.
2018, டிசம்பரில், என் மனைவி மக்களுடன் சென்று பாண்டிச்சேரி அரசினர் குடியிருப்பில் தனது குடும்பத்தாருடன் வசிக்கும் கி.ரா-வைப் பார்த்தேன். ஈசிச் சேரில் ஓய்வாக சாய்ந்து படுத்ததுபோல் அமர்ந்திருந்த அவரிடம், பெயர் ஊர் போன்ற அத்தியாவிசிய விபரங்களுடன் , கோபுல்ல கிராமம் நாவலை நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் படிக்கும் ரசிகன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டேன். ‘அந்த நாவல் வந்த சமயம், யாரும் அதை அப்படியொன்றும் கண்டுகொள்ளவில்லை’ என்று ஒரு சிரிப்புடன் பகிர்ந்துகொண்டார். சாகித்ய அகாடமி வாங்கிய நாவலான, கோபுல்லபுரத்து மக்கள் நாவல் பற்றிய பேச்சு வர, அது விகடனில் வந்தபொழுது, என்னவெல்லாம் எழுதமுடியாமல் போய்விட்டது என்று சுபாஷ் சந்திர போஸ் சம்பந்தப்பட்ட அரசியல் நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டார். மகாபாரதம், வெண்முரசு என்று எனது அறிவை அவரிடம் அள்ளிவிட, நான் சொன்னதையெல்லாம் ஒன்று விடாமல் கேட்டுக்கொண்டார். நீண்ட விரல்களைக்கொண்ட தனது நீண்ட கைகளை உரையாடலுக்கு இசைவாக அசைத்து அசைத்து , மகாபாரதத்திற்கு முதலில் வைத்த பெயர் ‘ஜெயம்’ என்றும், மகாபாரதத்தின் கதாநாயகன் , பீஷ்மர்தான் என்றும் மகாபாரதம் திரும்ப திரும்ப பலரால் எழுதப்படுவதையும், முகத்தில் எப்பொழுதும் அமர்ந்திருக்கும் ஒரு புன்னகையுடன் விளக்கிச் சொன்னார். மகாபாரதத்தின் நாயகன் யார் என்ற கேள்விக்கு, நாவலின் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரைக்கும் இருந்து இறந்துவிடும் பீஷ்மரே என்றார். அவர் கையில் வைத்திருந்த ‘மகாபாரதம் ஒரு மறுபார்வை’ என்ற ஒரு புத்தகத்தை எனக்கு கொடுத்து அதில் இருக்கும் சில பகுதிகளை பார்க்குமாறு கேட்டுக்கொண்டார்.
அந்த பேச்சு மும்மரத்திலும், உபசரிக்க மறக்கவில்லை அவர். “காலை உணவு முடிந்ததா?” என்று கேட்டார். வீட்டில் செய்து வைத்த சாப்பாட்டை வழியில் நின்று சாப்பிட்டோம் என்றதற்கு, “பராவாயில்லை, வெளியில் கடையில் சாப்பிடாமல் தப்பித்தீர்கள்” என்று குறுநகை புரிந்தார். அவரது மருமகளை, எங்களுக்கு சுக்கு காப்பி போட்டுக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். அமெரிக்காவில் வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்ட எனது மகனிடம், “உனக்கு பிடித்தால் குடி. போட்டுவிட்டார்கள் என்று குடிக்கவேண்டாம்” என்று அவனுக்கு சங்கடம் எதுவும் இல்லாமல் பார்த்துக்கொண்டார்.
மாடுகள் பேசும், குதிரைகள் பேசும் , தாவரங்கள் பேசும் என்ற அவரது எண்ணத்தை , தேசிங்கு ராஜன் குதிரையை அதன் காதில் பேசி அடக்கியது , காந்தி, “பாண்டிச்சேரி ஆசிரமத்தில் உள்ள வேப்ப மரத்தை இரவில் வெட்ட வேண்டாம் , அவை உறங்கி கொண்டிருக்கும்” என்று சொன்ன நிகழ்வுகள் என ஒவ்வொன்றையும் தெள்ளத்தெளிவாக அவரது மொழியில் எடுத்துரைத்தார்.

ஜி. நாகராஜன், கு. அழகர்சாமி, சுந்தர ராமசாமி போன்ற எழுத்தாளர்களுடனான அவரது உறவு பற்றிய எனது சிறு சிறு கேள்விகளுக்கு பதில் சொன்னார். அவர் வயது உள்ள எனது தந்தை, இன்னும் மாட்டில் பால் கறக்கும் உள்ள நலனை நான் சொல்ல நன்றாக கவனித்து கேட்டுக்கொண்டார்.
அவரிடம் பேச நிறைய விஷயங்கள் இருந்தன. எங்களுக்கும் கேட்கும் ஆவல் நிறைய இருந்தது. “பசித்தால் சாப்பிடுவேன், உறக்கம் வந்தால் உறங்குவேன், வியர்த்தால் குளிப்பேன்” என்று எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் வாழும் அவரை பிரிய மனம் இல்லமால், கோபல்ல கிராமம் நாவலில் அவரது கையெழுத்தை ஒரு நினைவாக பதிவு செய்துகொண்டு, போய் வருகிறோம் என்று சொல்லிக் கிளம்பினோம்.
மேற்படி பயணத்தை முடித்து ஆஸ்டினுக்குத் திரும்பி வந்ததும், நண்பர் கடலூர் சீனுவிடமிருந்து, ‘அண்ணா, நைனாவின் இந்த இவள்’ , ஒரு பக்கம் அவரது கையெழுத்து, மறு பக்கம் அச்சு என வந்துள்ளது’ என்று செய்தி அனுப்பியிருந்தார். நாட்டிற்காக போரில் முன் நின்று போராடி, அரசியலில் குதித்து மிதித்து முன்னேறி தலைவனாகி, நாலெழுத்து படித்து பட்டம் வாங்கி கலெக்டர் ஆகி என்று எதுவும் இல்லாமல், தனிமனிதர்கள் வாழ்க்கையில் ஐக்கியமாகி அவர்களின் இதயத்தில் குடிகொண்டுவிடும் நாயகிகளில் ஒருவரை, ‘இந்த இவள்’ குறு நாவலில், கி.ரா. அறிமுகப்படுத்தியிருந்ததைக் கண்டேன். நாவலிலிருந்து சில வரிகள்.
“சம்சாரிகள் வீடுகளில் நாலு அய்ந்து வெள்ளைச் சேலைக்காரிகள் இருந்தால் கூலி வேலைக்கு ஆட்கள் மிச்சம்தானே. கலர்கலராய் சேலைகள் எடுக்க வேண்டாம்.”
“பொதுவாக மனுச சாதிக்குப் புத்தி கிடையாது; புத்தி இருந்ததில்லை. எப்பவும் இருந்திருந்தால் அற நூல்கள் ஏன் இந்த அளவுக்கு ?”
இந்த நாவல் வாசிப்பின் மூலமே பாபு என கி.ரா அன்புடன் அழைக்கும் இளவேனில் பாபு என்னும் ஒரு ஆளுமையை அறிந்துகொண்டேன். 2020-ல் கொரானா காலகட்டத்தில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக இணையத்தில் நிகழ்வு ஒன்றில் பேச, இளவேனில் பாபுவின் மூலமாக, அழைத்ததும் ஆவலாக ஒப்புக்கொண்டார். அந்த நிகழ்வில் எழுத்தாளர்கள் ஜெயமோகன், அ.முத்துலிங்கம் அவர்களும் கலந்துகொள்ள, மூம்முர்த்திகள் கலந்துகொண்ட ஒரு சரித்திர நிகழ்வானது. நிகழ்வு முடிந்தும் இளவேனில் மூலம் கி.ரா-வுடன் தொடர்பிலேயே இருந்தேன். மூன்று நாட்களுக்கு முன்னர்தான், “ஜெயமோகன் பரிந்துரைத்த மொழிபெயர்ப்பாளர்களின் மூலமாக கோபல்ல கிராமம் நாவலை மலையாளத்தில் முதலில் மொழிபெயர்க்கவிருக்கிறோம்.” என்று கைபேசியில் பதிவு செய்து இளவேனிலுக்கு அனுப்பி நைனாவிற்கு போட்டுக் காண்பியுங்கள் என்று அனுப்பினேன். கோபல்ல கிராமம் மலையாள பதிப்பை எடுத்துக்கொண்டு சென்று, ‘நைனா, பாருங்கள்’ என்று அவரிடம் நேரில் பார்த்துச் சொல்லலாம் என்று இருந்தேன். ஆனால், கோபல்ல கிராமம், பிஞ்சுகள், அவரது சிறுகதைகள் என்று மொழிபெயர்ப்பு பணியைத் தொடர்ந்து செய்து, கி.ரா-வுக்கு பெரு வணக்கம் செலுத்திய வண்ணம் இருப்பதே இனி இருக்கும் வாழ்வு என்று என்னை ஆசுவாசப்படுத்திக்கொள்கிறேன்!
நூல் வடிவில் வெளிவந்த கி.ரா.வின் எழுத்துக்கள்
- கதவு – சிறுகதைகள் : 1965
- தமிழ்நாட்டு நாடோடிக்கதைகள்: 1966
- கிடை – குறுநாவல்: 1968
- வேட்டி கதைகள், கட்டுரைகள், கடிதங்கள்: 1975
- கோபல்லகிராமம் – நாவல்: 1976
- தமிழ்நாட்டு கிராமியக் கதைகள்: 1977
- பிஞ்சுகள் – குறுநாவல்: 1979
- அப்பாபிள்ளை அம்மாபிள்ளை – சிறுகதைகள்: 1980
- மாந்தருள் ஒரு அன்னப்பறவை – ரசிகமணி பற்றி: 1981
- வட்டார வழக்குச் சொல்லகராதி: 1982
- கிடை – குறுநாவலும் பன்னிரெண்டு சிறுகதைகளும்: 1983
- தாத்தா சொன்ன கதைகள்: 1984
- கரிசல் கதைகள் – சிறுகதைகள் தொகுப்பு: 1984
- கொத்தைப் பருத்தி – சிறுகதைகள்: 1985
- அழகிரிசாமி கடிதங்கள் – கு.அ. கடிதங்கள் தொகுப்பு.: 1987
- கரிசல்காட்டு கடுதாசி – கட்டுரைகள் I,II: 1988
- கி.ரா. கடிதங்கள் – தொகுப்பு: 1989
- கோபல்லபுரத்து மக்கள் – நாவல்: 1990
- மக்கள் தமிழ் வாழ்க – நீள கட்டுரை: 1991
- நாட்டுப்புறக் கதைகள் 1 பாகம்: 1991
- நாட்டுப்புறக் கதைகள் ஒரு பன்முகப் பார்வை (ஆய்வரங்கக் கட்டுரைகள் தொகுப்பு): 1991
- கி.ரா. கட்டுரைகள் – தொகுதி: 1991
- நாட்டுப்புறக்கதைகள் II பாகம்: 1992
- வயது வந்தவர்களுக்குமட்டும்: 1992
- பதுவை வட்டார நாட்டுப்புறக் கதைகள்: 1993
- கி.ரா. பதில்கள்: 1993
- நாட்டுப்புறப் பாலியல் கதைகள்: 1994
- அந்தமான் நாயக்கர் நாவல்: 1995
- பெண் மணம் – (பெண்கள் பற்றிய நாட்டுப்புறக் கதைகள்): 1995
- காதில் விழுந்த கதைகள்: 1996
- புத்தகக் காதலர் கட்டுரைகள்: 1998
- கடிதங்கள் கடிதங்கள்: 1998
- ராஜநாராயணன் கதைகள்: 1998
- பெருவிரல் குள்ளன் – சிறுவர் சொல்கதை: 1999
Great writer with simplicity.