விண்வெளிக் கழிவுகள் அகற்றம் சீராக நடைபெறவில்லை

(மூலம்: சைண்டிஃபிக் அமெரிக்கன் பத்திரிகைக் கட்டுரை. எழுதியவர் லியொனார்ட் டேவிட்)

1968-ல் அமெரிக்க சூழலியலாளரான Garret ஹார்டின் முன்வைத்த “Tragedy of Commons” என்னும் நிலைப்பாடு, பொதுப் பயன்பாட்டுக்குரிய இயற்கை வளங்கள் அளவுக்கு மீறி சுரண்டப் பட்டு அருகிப் போய்விடும் என்றும் அதனால்  பயனர் அனைவரும் இடருறுவர் என்றும் கூறுகிறது. குடியிருப்புகள் மற்றும் சாயப் பட்டறைக் கழிவுகளால் மாசடையும் குடிநீர், மணல் திருட்டால் அழியும் ஆற்றுப் பாசனம், காடழிவு, விலங்கின அழிவு,  முற்றிலும் வற்றிப் போன நிலத்தடி நீர், புவி சூடாதல் இவை அன்றாடம் உலகில் அரங்கேறும் அவலக் காட்சிகள். இந்த விண்வெளி யுகத்தில் இதே போன்ற பொதுச் சொத்து அவலம், கழிவுகள் என்னும்  வடிவில் விண்வெளியிலும் ஏற்பட்டுள்ளது.

1957-ல் ஏவப்பட்ட முதல் செயற்கைக் கோள், ஸ்புட்னிக் -1, ஸ்பேஸ் ஏஜ் வருகைக்குக்  கட்டியம் கூறியது. அதன் பின்னர் உலகளவில் சுமார் 5000 ஏவுகைகள் (launches) நடந்து விட்டன. ISRO 2017-ல் PSLV-C37  மூலம் 104 செயற்கைக் கோள்களை ஒரே மூச்சில் பழுதின்றி ஏவி உலக சாதனை படைத்ததும், அதை முறியடித்து  2021-ல் ஏலான் மஸ்க் -ன் Space X ஒரே மூச்சில் 143 செயற்கைக் கோள்களை ஏவியதும் அண்மைய நிகழ்வுகள்.

இந்த சாதனைகளுக்கு இணையான மற்றொரு சாதனை விண்வெளியில் ஒரு விஸ்தாரமான குப்பை மண்டலமும் உருவாகியது தான். ஓரிரு வேண்டாத பொருட்கள் நாளடைவில் தாக்குப் பிடிக்க முடியாமல் கீழிறங்கி வருகையில் வளிமண்டலத்தில் எரிந்து போகலாம். பிற அனைத்தும் வட்டப் பாதையில் வருடக் கணக்கில் சுற்றிக் கொண்டிருக்கும்.  சிறிதும் பெரிதுமாக பலவித விண்வெளிக் குப்பைகள் மிகுந்து இருப்பதால், அவற்றிற்கிடையே அடிக்கடி சிறு மோதல்கள் ஏற்பட்டு  அதன் உடைசல்களாலும் குப்பைகள் பெருகிக் கொண்டே  இருக்கும், புது ஏவுகைகள் (launches ) அல்லது பெரு வெடிப்புகள் நிகழா விட்டாலும் கூட 

2009ல் செயலிழந்த ரஷியன் செயற்கைக் கோளுடன் (Cosmos 2251) அமெரிக்க தொடர்பாடல் செயற்கைக் கோள் (Iridium 33) 22300mph வேகத்தில் மோதி வெடித்த நிகழ்வே முதன்முதலாக பெருகி வரும் விண்வெளிக் கழிவுகளின் அபாயத்தை உலகுக்கு உணர்த்தியது.

விண்வெளியில் சேர்ந்துள்ள கழிவுகளில் 70 விழுக்காடு நம் தலைக்கு மேல் 2000 கி. மீ. உயரத்திலுள்ள தாழ்-புவி சுற்றுப் பாதையில் (low-earth orbit) வெகு வேகமாகச் சுற்றி வருகின்றன. மடிந்த செயற்கைக்கோள் முதல் உதிரி திருகு மறைகள் வரையான பற்பல மனிதத் தயாரிப்புகள் புவியைச் சுற்றி வருவதால் அவற்றால் மோதுற்று இயக்கத்திலுள்ள  முக்கிய செயற்கை கோள்கள் ஆபத்துக்குள்ளாகும் சாத்தியக் கூறுகள் அதிகமாகி வருகின்றன.

தாழ்-புவி சுற்றுப் பாதையில் தோராயமான மதிப்பீட்டில் 23000 பெரிய உடைசல்கள் (10cm. நீளம் 3cm அகலம் ) மற்றும் 5 லட்சம் சிறிய உடைசல்களும் (1cm-10cm) எய்த அம்புகளாய் விரைந்து செல்கின்றன. பூமிக்கு 2000 கி.மீ உயரத்தில் லட்சக்கணக்கான உடைசல்கள், நெரிசல் இல்லாமல் சுற்றி வர பரந்த விண்வெளிப் பரப்பு உண்டு.  தாழ்-புவி சுற்றுப் பாதையே புவியை சுற்றிவரும் பெருவாரியான செயற்கைக் கோள்களின் ஓடு பாதை. நாசா-வின் (NASA) புவி கண்காணிப்பு செயற்கை கோள் தொகுதிகள் மற்றும் பன்னாட்டு விண்வெளி நிலையம் இயங்குவதும் இப் பாதையில் தான். சின்னஞ்சிறிய உலோகத் துணுக்கு மோதினாலும் கடும் வேகம் காரணமாக பெருத்த சேதம் ஏற்பட்டுவிடும்.

செயற்கைக் கோள் தொகுதிகள் நமக்கு தொடர்பாடல், வழிகாட்டுதல் (navigation ), வானிலை முன்னறிவிப்பு மற்றும் பல விதங்களில் உதவி வருகின்றன. பெருத்த நம்பிக்கையுடன் அதைத் தொடரவே விரும்புகிறோம். எனவே  புதிய  ஏவுகைகள் வெற்றி   பெறவும், பயன்பாட்டில் இருக்கும் செயற்கைக் கோள்களுக்கு  விபத்து நேராமல் இருக்கவுமே, தற்போது  விண்வெளிக் குப்பைகளை அகற்றுவதிலும் குறைப்பதிலும் ஆய்வாளர்கள் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

விண்வெளிக் கழிவகற்றம் எளிதல்ல. அவை சிறந்த வணிக முன்வடிவாகப்(business model) பரிணமிக்க நாளாகும்.  அதற்கான  பரிந்துரைகள் நமக்கு அறிவியல் புனைவுகள் போலத் தோன்றும். சில உதாரணங்கள்: 

  • குத்தீட்டிகள்(spatula) மற்றும் வலைகள் அல்லது எந்திரன் கைகள் (robotic arms) மூலம் விண்வெளிக் கழிவுகளைத் திரட்டி பூமிக்குக் கொண்டு வந்து அழித்து விடலாம் என்கிறார் Lemmens.
  • ஒரு விண்கல இயக்க கட்டுப்பாடு வல்லுநரின் பரிந்துரை: சிறப்பு விண்வெளி உடைசல்கள் ஒழிப்பு வட்டப் பாதை(disposal orbit ) ஒன்றை ஒதுக்கீடு செய்து அதில் விண்கலக் கட்டங்கள்(stages ), நிரவு ஏவுகலன்கள் (booster) மற்றும் பிற உடைசல்களை அங்கே கொண்டு சேர்ப்பது ; தாழ்-புவி வட்டப் பாதையிலிருக்கும் கழிவுகளை சேகரம் செய்து ஒழிப்பு வட்டப் பாதைக்கு எடுத்துச் செல்வதற்காக தனித்தனிப்  பொறிகள்(Engines ) பொருத்தப்பட்ட தொகுதிகளைக் (modules) கொண்ட ஒரு சிறப்பு விண் கலத்தை வடிவமைப்பது; தாழ்-புவி வட்டப் பாதைகளிலுள்ள விண் கழிவுகளுடன்  தாமாகப் பொருத்திக் கொள்ளுமாறு தொகுதிகளை  வடிவமைப்பது ஆகியன. நகராண்மைக் கழகங்கள் குப்பைக் கிடங்குகளை இடம் மாற்றுவது போன்ற முயற்சியே இது.

மேலும் ஜப்பானில் உள்ள செயற்கைக்கோள் சேவைகள் கம்பெனியான Aristoscale, செயற்கைக் கோள் பழுது நீக்கம் அல்லது முடிப்புப் பணிகளை நிறைவேற்றக் கூடிய அமைப்பை உருவாக்கி சோதனை ஓட்டத்துக்கு தயாராகி வருகிறது.

https://www.nationalgeographic.com/science/article/space-junk

மேலே குறிப்பிட்டவை அனைத்தும் விண்வெளிக் கழிவுப் பிரச்னையின் நிகழ் பொழுதுக் (update) குறிப்புகள். குறிப்புதவி சுட்டிகள் வருமாறு :

https://www.scientificamerican.com/article/space-junk-removal-is-not-goinhttps://scitechdaily.com/spacecraft-movement-control-specialist-suggests-how-to-clean-up-space-debris/g-smoothly/

அகலப் பட்டை இணைய(Broadband internet ) நெட்ஒர்க் பயன்பாட்டுக்காக, தாழ்-புவி வட்டப் பாதையில் மெகா செயற்கைக்கோள் தொகுதிகள் நிறுவப் பட்டு வருகின்றன. SpaceX (30000), OneWeb(648), அமசானின் Kuiper(3236) நிறுவும்  சிறிய ரக செயற்கைக் கோள்கள் வட்டப் பாதையில் நெரிசல் உண்டாக்கும். அதனால்  2009-ல் நடந்தது போன்ற பெரிய மோதல்கள் நிகழவும் சிதை பொருட்கள் பெருகவும் சாத்தியக் கூறுகள் அதிகரிக்கும். புவி வட்டப் பாதை சிதை பொருள் ஆய்வில் ஈடுபட்டிருந்த ஓய்வு பெற்ற நாசா மூத்த விஞ்ஞானி Donald Kessler, 1970களின் இறுதியிலேயே தாழ்-புவி வட்டப் பாதையில் மேலும் விண்வெளிப் பணிகள் மேற்கொள்வது ஆபத்து என்று எச்சரித்தார்.

பல தசாப்தங்களாக சேகரமாகிக் கொண்டிருக்கும் இந்த அதிவேகக்  குழப்பத்தில் முழு   காலாவதியான விண்கலம், உலோகக் கட்டிகள், இலேசான கணப்புப் போர்வைகள், பெயிண்ட் கீரல்கள், தேடப் படாத மறை திருகுகள், செத்த அல்லது சாகப் போகிற செயற்கைக் கோள்கள், முடிந்து போன ஏவுகணைக் கட்டங்கள், கசடுகள் எனப் பலவும் அடங்கும்.இவை ஒவ்வொன்றும் தனித்தனையே பிற உடைமைகளைப் பழுதாக்கவும் பயனற்றதாக்கவும் வல்லவை. வட்டப்பாதை சிதைக்கூளம் அகற்றும் பணிகள்  தொழில் நுட்ப ரீதியாக சவாலானவை.எல்லாக் கழிவுகளுக்கும்  பொதுவான அணுகுமுறை சாத்தியமில்லை. மேலும் 

விண்வெளிக் கழிவுகளை அகற்றத்தை வெற்றிகரமாக செயல்படுத்தும் தொழில் நுட்பமே, பயன்பாட்டில் இருக்கும் செயற்கைக் கோள்களை அழிப்பதற்கு பயன்படுத்தப் படலாம் என்ற அச்சமும் தவிர்க்க முடியாமல் எழுகிறது.

டெக்சாஸ் பல்கலை வட்டப்பாதை சிதைவுக் கூள நிபுணர் Moriba Jahவின் கருத்துகள் :

  1. வழக்கமாக விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் நாடுகள், அண்மை-புவி
  2. (near -Earth)  விண்வெளியும் கூட நிலம், காற்று, பெருங்கடல் போன்ற ஒரு சூழல் அமைப்பே; அது மட்டற்றதல்ல; சூழல் பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் அதற்கும் பொருந்தும் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.
  3. விண்வெளி தாக்குப் பிடித்தலைக் கருத்தில் கொண்டு புதிய அளவைகளை  (carbon foot-prints போன்றவை)  உருவாக்க வேண்டும். அத்துடன் வட்டப் பாதையின் நிரம்பல் (saturation) வரம்பும் நிர்ணயிக்கப் படவேண்டும். காலாவதியானவற்றை   விண் வெளிக் கழிவுகளாகச் சுற்றவிட்டுக் கொண்டிருக்கும்  உரிமையாளருக்கு அபராதம் விதிப்பது, அவர் ஒப்புதலுக்குக் காத்திராமல் விண்வெளி சொத்துகளை அப்புறப் படுத்துவது போன்ற நடைமுறைகளைக் கொண்டு வந்தால் விண்வெளிப் பொருட்கள் அகற்றத் தொழில் நுட்பங்கள் பெருகும். அதற்கான சந்தையும் உருவாகும்.
  4. வட்டப் பாதைக் கூளங்களை வகைப் படுத்துவது மிக முக்கியம். அதனால் ஒவ்வொன்றின் தனித் தேவைகளுக்கேற்ற  தொழில் நுட்பங்கள் உருவாகும்.  அறிய உதவும்.

பின் குறிப்பு  :விண்வெளிக் கழிவு அகற்றம் இன்னும் ஆரம்பமே ஆகவில்லையெனத் தெரிகிறது. விண்வெளிக் கழிவு அகற்றம் வெற்றி பெற  spacefaring நாடுகள் ஒன்றிணைந்து அனைத்துலக தாழ்-புவி வட்டப்பாதை ஒழுங்காற்று அமைப்பு உருவாக்கப்  பணியைத் தொடங்க வேண்டும்.  

4 Replies to “விண்வெளிக் கழிவுகள் அகற்றம் சீராக நடைபெறவில்லை”

  1. வளர்ச்சி என்னும் பெயரில் வீழ்ச்சி. சரியான நேரத்தில் வெளியாகியுள்ள கட்டுரை. சீனாவின் லாங்க் மார்ச் 5 பி ராக்கெட் கட்டுப்பாடு இழந்து பூமியில் இந்தியப் பெருங்கடலில் மாலத் தீவிற்கு அருகே சமீபத்தில் விழுந்தது. அதன் சிதறல்கள் கடல் வாழ் உயிரினங்களுக்கும், கடல் படுகைக்கும் என்ன பாதிப்புகளைக் கொண்டு வருமோ? அது மக்கள் வாழும் நிலப் பகுதியில் மோதியிருந்தால்……….?பெருந்தொற்றுப் பரவலுக்குக் காரணமாகச் சொல்லப்பட்டாலும் அந்த அரசு இன்று வரை தன் தவறை ஏற்கவில்லை. அப்படியிருக்க, இந்த விண் விபரீதம் பற்றியா அது பதில் சொல்லப் போகிறது? மேலும், நிலவின் மறு பகுதியில் அது செய்யும் ஆய்வும், பூமியில் நதி நீரைப் பாதிக்கும் என அச்சம் எழுந்துள்ளது. குறிப்பாக வெனிஸ் ஆறுகள்.

    1. தங்கள் பதிவுக்கு நன்றி. இன்று இதழ் -247 வெளியாகி இருக்கிறது. அதிலும் என் இரு கட்டுரைகள் உள்ளன. நேரம் கிடைத்தால் படித்துக் கருத்து சொல்ல வரவேற்கிறேன்… கோரா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.