மின்னல் சங்கேதம் – 7

This entry is part 07 of 12 in the series மின்னல் சங்கேதம்

(பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் எழுதிய ‘அஷானி ஷங்கேத்’ வங்காள மொழி நாவலின் தமிழாக்கம்: சேதுபதி அருணாசலம்)

ஒருநாள் கங்காசரண் பிஸ்வாஸ் மஷாய் வீட்டுக்குச் சென்றிருந்தபோது அங்கே கிராமத்தினர் பலரும் கூடியிருந்ததைப் பார்த்தான். ஹூக்கா புகை எங்கும் படர்ந்திருந்தது.

”கொஞ்சம் நெல் குடுங்க பிஸ்வாஸ் மஷாய். இல்லாட்டி நாங்கள்லாம் பட்டினிதான் கிடக்கனும்.” என்று கேட்டான் ஹிரு காபாலி.

உடனே மேலும் ஐந்தாறு பேர் அவனோடு சேர்ந்துகொண்டு, “நீங்க எங்களுக்குக் கொஞ்சமாவது நெல்லு குடுத்தே ஆகனும். இல்லாட்டி கண்டிப்பா நாங்க பட்டினி கிடந்து செத்துப் போய்டுவோம்.” என்றனர்.

”சரி, போய் களஞ்சியளத்துலேருந்து எடுத்துக்கோங்க. எங்கிட்டே இருக்கறது அதிகபட்சம் ஆளுக்கு ரெண்டோ அஞ்சோ அரி (முற்காலத்து அளவை) தான் வரும். எங்கிட்ட இருக்கறவரையிலும் எல்லாருக்கும் குடுக்கறேன். அதுக்கு மேல என்ன ஆகுதோ பார்க்கலாம்.” என்றார் பிஸ்வாஸ் மஷாய்.

கங்காசரணும் அவரிடம் அரிசி கடனாகக் கேட்டுப் பெற்று வருவதற்காகத்தான் போயிருந்தான். பிஸ்வாஸ் மஷாய் அவனிடம், “நீங்க ஒரு பிராமணர். நான் உங்ககிட்ட என்ன சொல்ல முடியும்? உங்களுக்கு நான் கடனா குடுக்க முடியாது. ஆனா அஞ்சு அரி நெல் எடுத்துக்கோங்க. என்கிட்ட அவ்வளவுதான் இருக்கு.” என்றார்.

கங்காசரண் ஆச்சரியப்பட்டான். பிஸ்வாஸ் மஷாயிடம் பல களஞ்சியங்களில் நெல் நிறைந்திருந்தது. இதற்கு மேல் இல்லையென்று எப்படிச் சொல்ல முடியும்?

வீட்டுக்குத் திரும்பும் வழியில், ஹிரு காபாலி அவனிடம் ரகசியமாகச் சொன்னான், “பிஸ்வாஸ் மஷாய் நெல்லையெல்லாம் ஒளிச்சி வச்சிட்டாரு. நாம எல்லாம் சேர்ந்து காலி செஞ்சிடுவோம்னு பயப்படறாரு. பெரிய பெரிய யானைங்க மாதிரி அவர்க்கிட்ட களஞ்சியங்கள் இருந்துது. திடீர்னு அரிசி இல்லைன்னு அவரால எப்படிச் சொல்ல முடியும்?”.

”நீ அவர் களஞ்சியத்துலேருந்து நெல்லு எடுத்தேல்ல? எவ்வளவு இருந்துது?”

“சுத்தமா காலி பண்டிட் மஷாய். என் ரெண்டு கண்ணால பார்த்தேன். ஒரு குந்துமணி கூட மிச்சமில்ல.”

”ஓ.”

”இப்போ இதெல்லாம் தீர்ந்து போனப்புறம், பட்டினி ஆரம்பமாகும்.”

“ஏன்? புரட்டாசி மாசத்து மத்தியில சிவப்பரிசி அறுவடையாகுமே? அப்புறம் ஒரு கவலையுமில்லை.”

“அது உடம்புக்கு நல்லதில்லை மஷாய். புது அறுவடை சாப்பிட்டா காலரா வரும். நீங்களே பாருங்க, பசிக்கொடுமைல எல்லாரும் அதைச் சாப்பிட்டு செத்து விழப்போறாங்க. கார்த்திகை அறுவடைய சாப்பிடறதுதான் நல்லது.”

”அப்போ ஜனங்க என்னதான் பண்ணப் போறாங்க?”

“இருக்கற நிலைமையை பார்த்தா சாகத்தான் போறாங்கன்னு தோணுது.”

கங்காசரணால் நம்ப முடியவில்லை. பட்டினி கிடந்து நிஜமாகவே மக்கள் செத்துப் போகக் கூடுமா? அவன் அப்படி எதையும் பார்த்ததோ கேள்விப்பட்டதோ இல்லை. எப்படியாவது மக்கள் என்னவாவது செய்து சாப்பிட்டுவிடுவார்கள். சாப்பிடுவதற்கு என்னென்னவோ இருக்கையில், சாப்பிடக் கிடைக்காமல் மக்கள் எப்படி சாகக் கூடும்?

அனங்கா, “நானே இந்த தானியங்கள புடைக்கிறேன். நாம யாரையும் கேட்கத் தேவையில்ல. ஆனா, இது எத்தனை நாள் வரும்?” என்றாள்.

”அதைத்தான் நானும் யோசிக்கறேன்.”

“மத்தவங்களுக்கும் புடைச்சுக் கொடுத்தா என்னன்னு யோசிக்கறேன். மணங்குக்கு ரெண்டு காதா கிடைக்கும்.”

“சீச்சீ! என்ன பேச்சு பேசற! ரெண்டு காதாவுக்காக பத்து அரி நெல்லு புடைக்கனுமா? அப்படியொன்னும் கஷ்டப்பட வேணாம்.”

”ஒரு கஷ்டமும் இல்ல. ரெண்டு காதா என்ன விலை விக்குதுன்னு உங்களுக்கே தெரியும். ஒவ்வொரு தானியமும் முக்கியம்.”

”ஆனா ஜனங்க என்ன சொல்லுவாங்க?”

”சொல்லட்டுமே. ரெண்டு காதா கிடைக்குதுன்னா, யார் என்ன சொன்னாலும் எனக்குக் கவலை இல்ல.”

”சரி உன் இஷ்டம். ஆனா உன்னால அவ்வளவு புடைக்க முடியாதுன்னு நினைக்கறேன். கஷ்டமான வேலை.”

”நீங்க அதைப்பத்தி கவலைப்பட வேணாம்.”

அனங்கா சிரித்துக்கொண்டே, “நான் உங்கள ஏமாத்தீட்டேன்.” என்றாள்.

“என்ன? எப்படி?”

“உங்ககிட்ட சொல்லாம மறைச்சுட்டேன்.”

“என்ன?”

“நான் ஏற்கனவே ரொம்ப நாளா நெல்லு புடைச்சிக்கிட்டுத்தான் இருக்கேன்.”

“நிஜமாவா?”

“ஆமா, ஆமா. நம்பிக்கை இல்லையா என்ன? ரெண்டு காதா அரிசியை நீங்க சந்தையிலிருந்து வாங்கிட்டு வந்து எத்தனை நாளாச்சுன்னு ஞாபகம் இருக்கா? இருந்தாலும் எப்படி சமாளிச்சிக்கிட்டு இருக்கோம்?”

”நீ இத்தனை நாளா வேலை செஞ்சிக்கிட்டு இருந்தும் என்கிட்ட சொல்லவே இல்லையா? யார் வீட்ல?”

“ஹரி காபாலி, ஷ்யாம் பிஸ்வாஸ்…”

”கைப்பிடி அரிசிக்காகவா? வேண்டாம். நம்ம பேரு கெட்டுப்போகும். நீ ஒரு பிராமணப் பொண்ணு. காபாலிங்க வீட்ல வேலை செய்யலாமா? யாருக்காவது தெரிஞ்சா என்ன சொல்லுவாங்க? என்கிட்ட கேக்காம நீ எப்படி இதையெல்லாம் செய்யலாம்?”

”இருக்கட்டும். என் பிள்ளைங்க வயிறு நிறையுதுன்னா எனக்கு எதைப் பத்தியும் கவலை இல்ல. அதுவுமில்லாம காபாலிப் பொண்ணுங்கதான் அரிசியைத் தள்ளறாங்க. நான் தேம்கியை மிதிக்கறதோடு சரி.”

(தேம்கி – ঢেঁকি என்பது அரிசி புடைக்க உதவும் இயந்திரம். ஒரு பெண் ஏர் போன்ற இயந்திரத்தில் காலை வைத்து மிதிக்க, இன்னொரு பெண் அதற்குக் கீழே தானியங்களைத் தள்ளி விடுவாள். காண்க: படம்.)

”உனக்கு அரிசி தள்ளத் தெரியுமா? ரொம்ப கஷ்டமான வேலை இல்லையா அது?”

“கத்துக்கிட்டா எல்லாம் வரும். வேகமா கையைத் தள்ளனும். நான் கொஞ்சம் கத்துக்கிட்டிருக்கேன்.”

கங்காசரண் கவலையடைந்தான். தன் மனைவி வேலைக்குப் போகிறாள் என்று அவனுக்குத் தெரியாது. இரண்டு காதா அரிசியில் இத்தனை நாள் எப்படி ஓட்டுகிறாள் என்று அவனுக்கு சந்தேகம் இருந்தது. ஆனால் இப்படிக் கஷ்டப்படுகிறாள் என்று தெரியாது. பாவம். அது கடினமான ஆபத்தான வேலை. எந்திரத்தில் கை சிக்கிக்கொண்டால் என்ன ஆகும்?

அவன் பள்ளிக்குக் கிளம்பிப் போனபின், ஹரி காபாலியின் இளைய மனைவி பின் வாசலுக்கு வந்து கிசுகிசுத்தாள், “அவர் போய்ட்டாரா?”

”ஆமா தீதி. இதோ நான் கிளம்பிக்கிட்டே இருக்கேன்.”

”சீக்கிரம் வாங்க பாமுன் பெள. எல்லாரும் உங்களுக்காக காத்துக்கிட்டு இருக்காங்க.”

“இன்னிக்கு எவ்வளவு இருக்கு?”

“அஞ்சு அரியும், மூணு காதாவும். அது போக மூணு காதா அவலும் இருக்கு.”

”அரிசி தள்றது எப்படின்னு சொல்லித் தரியா தீதி?”

”அது உங்களால முடியாது. சம்பங்கிப்பூ மாதிரி இருக்க உங்க விரல் தீம்கில சிக்கி நசுங்கிடுச்சுன்னா அதுக்கு நான் பொறுப்பாக முடியுமா பாமுன் பெள?”

“உனக்கு ஒரு பொறுப்பும் கிடையாது. ஆஹா! ஆளும் அவ பங்கியும்!”

காபாலியின் மனைவி அனங்காவைப் பார்த்து கண்ணடித்தாள். அவளுக்கு ஒருவேளை அனங்காவை விட இரண்டு வயது அதிகமிருக்கலாம். இன்னும் குழந்தைகளில்லை. அதனால் அவள் அழகும், கட்டுக்கோப்பும் குலையாமலிருந்தது. அவள் நல்ல நிறமும் கூட. தெருவில் செல்பவர்கள் இன்னும் அவளை வெறித்துப் பார்க்கிறார்கள்.

அனங்கா சிரித்துக்கொண்டே, “இந்த கண்ணடிக்கிற வேலையெல்லாம் வேற யார்க்கிட்டயாவது வச்சுக்கோ. அதான் இன்னும் பல பேரைத் திரும்பிப் பார்க்க வைக்கறியே?”

காபாலி மனைவி குபீரென்று சிரித்து, “என்னால அவ்வளவுதானே செய்ய முடியும்?”

“எனக்கெப்படி தெரியும்?”

“நீங்க எப்படி பாமுன் பெள? உங்க அழகுக்கு, நீங்க நினைச்சா எந்த சாமியாரையும் மயக்கலாம். நாங்கள்லாம் உங்க விரலுக்குக் கூட சமானமில்ல. நான் ஒண்ணும் சும்மா சொல்லல. உண்மைதான். ஊருக்குள்ள எல்லாரும் பேசிக்கிறாங்க.”

அனங்கா நாணத்தில் முகம் சிவந்து, “அசிங்கம்!” என்றாள்.

ஹரி காபாலியின் வீட்டில் களிமண்ணாலான இரண்டு அறைகள் இருந்தன. ஒரு பக்கம் பசலைக் கீரைக்கொடி படர்ந்திருந்தது. இன்னொரு பக்கம் வேலியிட்ட நிலத்தில் பரங்கிக்காய், பீர்க்கங்காய், கத்திரிக்காய் எல்லாம் பயிரிடப்பட்டிருந்தது. பசலைக்கீரைக்கொடிக்கு அருகே தானியங்கள் புடைப்பதற்கான தீம்கி இருக்கும் தீம்கிகர் என்ற அறை இருந்தது. அங்கே சில பெண்கள் கூடியிருந்தார்கள். ஹரி காபாலியின் மூத்த மனைவி அங்கிருந்தாள். அக்கம்பக்கத்துப் பெண்கள் இரண்டு மூன்று பேர்கள் இருந்தார்கள். தீம்கிகர்-ஐச் சுற்றிலும் சேப்பங்கிழங்கு, ஊமத்தைச் செடிகள் மழைநீரில் விளைந்திருந்தன. கூரையில் கோவைக்காய்க்கொடி படர்ந்து காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. எல்லாம் சேர்ந்து மழைக்குப் பின்னான, பசிய மணத்தைப் பரப்பிக்கொண்டிருந்தன.

அவர்கள் இருவரையும் பார்த்து அனைவரும் சந்தோஷப்பட்டனர்.

மூத்த காபாலி மனைவி, “அனங்கா தீதி, வாங்க! நீங்க வராம நாங்க அரிசி புடைக்க முடியாது.” என்றாள்.

”நம்ம தாக்ருன் தீதி வந்தாதான் களை கட்டுது, அவங்க இல்லைன்னா வெறிச்சுன்னு போய்டுது” என்றாள் கிட்டூரி காபாலி.

அனங்கா சிரித்துக்கொண்டே, “இன்னிக்கு இப்படி தலையில தூக்கி வைக்கிறீங்களே, என்ன காரணம்?” என்று கேட்டாள்.

இளைய காபாலி மனைவி, ”மருதாணி போட்ட உங்களோட சிவந்த பாதங்கள்லயே விழுந்து செத்துடலாம்னு தோணுது” என்றாள்.

மூத்த மனைவி, “பிராமண மனைவி கால்ல விழுந்து சாகறத்துக்கும் புண்ணியம் செஞ்சிருக்கனும், சுட்க்கி. அதெல்லாம் சும்மா நடந்துறாது.” என்றாள்.

இப்படியாக அவர்களது மதிய நேர ஜமா களைகட்டத்தொடங்கியது.

இந்த மதிய நேரம் மட்டுமே காபாலி பெண்களுக்கு ஓய்வுக்கும், பொழுதுபோக்குக்கும் கிடைத்த ஒரே நேரம். இந்த மதிய நேரம் தவறினால் அவர்களுக்கு அந்த நாளே வீணானது போலிருக்கும். அவர்கள் கிராமத்துப் பெண்கள். மதியத் தூக்கத்துக்கெல்லாம் நேரம் கிடையாது. மொத்த நாளுமே வீட்டு வேலைகளில் கழிந்துவிடும். ஓய்வு நேரமும் நெல் அரைப்பதிலும், அரிசி குத்துவதிலும் கழிந்துவிடும். வேலைக்கு நடுவேதான் அவர்களுக்கு பேசிச் சிரித்துக்கொண்டிருக்க முடியும்.

அனங்கா மூத்த மனைவியிடம், “எங்கேருந்து இந்த நெல் கிடைச்சுது?” என்றாள்.

”நேத்திக்கு வீட்டுக்காரர் எங்கேருந்தோ அஞ்சு காதா கொண்டு வந்தாரு. அரசாங்கமே மொத்த விளைச்சலையும் எடுத்துக்கப் போறதா சொன்னாரு.”

“யாரு சொன்னாங்களாம்?”

“சந்தையில பேசிக்கிட்டாங்களாம்.”

இளையவள், “இந்த சோகமான பேச்சையெல்லாம் விட்டுத் தள்ளுங்க. பாமுன் தீதிக்கு தாம்பூலம் எடுத்துக் குடுங்க.” என்றாள்.

”வெத்தலை இருக்கு, ஆனா பாக்கு இல்லை. நேத்திக்கு சந்தைல ஒரு பாக்குக்கொட்டை ரெண்டு பைஸா வித்துது.”

சித்தேஷ்வர் காமாரின் மனைவி சொன்னாள், “தீதி, ஜனங்க பாக்குக்கொட்டைக்குப் பதிலா, ஈச்சங்கொட்டைய சாப்ட்றாங்களாம்.”

“நிஜமாவா?” என்று கேட்டாள் அனங்கா.

”உண்மையா பொய்யான்னு தெரியல. பிராமணங்ககிட்ட பொய் சொல்லி நான் நரகத்துக்குப் போக விரும்பல. ஆனா நான் கேள்விப்பட்டது இதுதான்.” என்று சொல்லி கைகளைக் கேலியாக அசைத்துச் சிரித்தாள்.

இவர்கள் கூட்டத்தில், காமாரின் மனைவியும், அனங்கா, இளைய காபாலி மனைவிக்கு அடுத்தபடியான அழகி. இவள் காபாலி மனைவியைக் காட்டிலும் இளையவள், நல்ல நிறத்தவள். ஆனால் காபாலி மனைவி இவளை விட லட்சணம் பொருந்தியவள். இவளைப் பற்றி ஊருக்குள்ளே அரசல்புரசலாக ஒரு பேச்சு உண்டு – பல பேரைப் பின்னால் சுற்ற வைக்கிறாள் என்றும், அதில் சிலபேரோடு இவளுக்குத் தொடர்புண்டு என்றும். ஆனால் இளைய காபாலி மனைவியைக் குறித்து அப்படி யாரும் சொல்லிவிட முடியாது.

அனங்கா, “முடிஞ்சுது நான் தாம்பூலம் போட்ட லட்சணம். எனக்கொண்ணும் தாம்பூலம் வேண்டாம். நான் ஈச்சங்கொட்டையெல்லாம் சாப்ட்றதில்ல.” என்றாள்.

இதைக்கேட்ட க்ஷித்தரி காபாலி பலமாகச் சிரிக்கத் தொடங்கினாள். அவள் பினோத் காபாலியின் விதவை சகோதரி. வயது இருபத்தாறு, இருப்பதேழு இருக்கும். அழகியில்லை, அதற்காக அவலட்சணமானவளுமில்லை. எதற்கெடுத்தாலும் பலமாகச் சிரிப்பது அவள் வழக்கம்.

அனங்காவும் சிரிக்கத் தொடங்கினாள், “நிறுத்து… நீ இன்னொரு பைத்தியக்காரி, எதுக்கெடுத்தாலும் சிரிச்சிக்கிட்டு….” என்றாள்.

இளைய காபாலி மனைவி, “ஆரம்பிச்சிட்டீங்களா?” என்றாள்.

இதற்கு நடுவில், மூத்த காபாலி மனைவி, எப்படியோ இரண்டு தாம்பூலங்களைத் தயாராக்கிக் கொண்டு முற்றத்திலிருந்து வீட்டு இறங்கி வந்தாள்.

“பாக்கு இல்லாமையா, தீதி?” என்று கேட்டாள் இளையவள்.

“இல்லை இல்லை, எப்படியோ தேடிப் பிடிச்சிட்டேன்.” என்றாள்.

“எங்கேருந்து?”

“நான் எதுக்கு சொல்லனும்?”

“ஏன் சொல்ல மாட்டே?”

“அப்புறம் நீ எல்லாத்தையும் எடுத்து செலவாக்கிடுவ. உன்கிட்டேருந்து எதையும் மறைச்சு வைக்க முடியாது. எதை எடுத்து வைச்சாலும், நீ வெளியே எடுத்து விட்டுடறே…”

இளையவள் புருவத்தை நெறித்து சண்டைக்குத் தயாரானாள். “நானா?”

”ஆமா, நீதான். உண்மையைச் சொல்றதுக்காக நான் பயப்படுவேன்னு நினைச்சியா? உன்னைத் தவிர வேற யாரு?”

“நான் எடுத்ததை நீ எப்போவாவது பாத்தியா?”

”ஓ! நூத்துக்கணக்கான வாட்டி பாத்திருக்கேன். அன்னிக்கு என் அறையில ரெண்டு பாதுஷாவை எடுத்து வச்சேன், அதுக்கப்புறம் அதைக் காணோம். உன்னைத் தவிர வேற யார் அதைத் திருடித் திங்கப் போறா? நம்ம வீட்ல குழந்தைங்களும் இல்ல…”

ஒருவேளை அவள் சொன்னது உண்மையாக இருக்கலாம். மூத்தவள் இப்படி கணக்காகச் சொன்னதும் இளையவளின் சண்டையிடும் உத்வேகம் தணிந்தது. ”ஆமா, எனக்குத் திங்கனும்னு தோணுச்சு, தின்னுட்டேன். எனக்கும் பாத்தியதை இருக்கு.”

”ஓஹோ! உன்னோட பாத்தியதையப் பத்தியெல்லாம் பேச ஆரம்பிச்சிட்டியா?”

அனங்கா, “இந்தச் சின்ன விஷயத்துக்கு ஏன் நீங்க ரெண்டு பேரும் இப்படி சண்டை போட்டுக்கறீங்க, நிறுத்துங்க.” என்றாள்.

மூத்தவளுக்கு நிறுத்தும் மனமில்லை. “நீங்களே சொல்லுங்க பெளதீதி. நான் ஏதோ இந்தப் போர் காலத்துல கொஞ்சம் கொஞ்சம் சேமிச்சு வச்சா, இவ என்கிட்ட சொல்லாம எடுத்துக்கறா. இது சரியா?”

”அவ சின்னப் பொண்ணுதானே… உங்களுக்கு ஒரு மகள் இருந்திருந்தா இவ வயசு இருக்கும்.”

”ஆமா எம்மக. அது ஒண்ணுதான் குறைச்சல்!”

“ஏன் இவளுக்கு என்ன குறைச்சல்? நல்லா லட்சணமாத்தானே இருக்கா?”

இளையவள் திடீரென்று முழுவதும் தணிந்து போனாள். “சும்மா இருங்க பாமுன் தீதி. இப்போ நீங்க ரொம்பத்தான் சொல்றீங்க.”

மூத்தவள் இளையவளை முறைத்துப் பார்த்துவிட்டு, கைகளாலும், முகத்தாலும் பழிப்புக்காட்டி, “ஆஹா! என்ன ஒரு நாடகம்!” என்றாள்.

அவளுடைய பழிப்புக்காட்டலைப் பார்த்து க்ஷித்தரி காபாலி பலமாகச் சிரிக்கத் தொடங்கினாள். கிட்டத்தட்ட தேம்கியின் மீது விழப்போனாள். ஏதேதோ சொல்லிக்கொண்டே சிரித்தாள். “ஹிஹிஹி – கடவுளே – ஓ தீதி – நாடகம் – பாமுன் தீதி – ஹிஹிஹி – என்னால முடியலையே – ஹிஹிஹி”

காமார் மனைவி, “பாருங்க, என்னத்த ஆரம்பிச்சு விட்டிருக்கீங்கன்னு. இவ இந்த தேம்கி மேல விழுந்து மண்டைய உடைச்சுக்காம இருக்கனும்.”


வணி மாத மத்தியில் அனங்காவைப் போன்ற நம்பிக்கையாளர்களுக்கும் கவலை தொற்றிக்கொள்ளத் தொடங்கிவிட்டது. நெல்லும், அரிசியும், சந்தையிலிருந்து கற்பூரம் போல முழுமையாக ஆவியாகிவிட்டன. ஒரே ஒரு தானியம் நெல் கூட எங்கும் தென்படவில்லை. கோபிநாத்பூர் போன்ற பெரிய சந்தையில் கூட அரிசி இல்லை. மக்கள் காலி கூடைகளோடு அலைந்து கொண்டிருந்தார்கள். சந்தைகளிலும், கடைகளிலும் புலம்பல்கள் ஒலித்தன. மூட்டை மூட்டையாக நெல் அடுக்கிவைக்கப்பட்டிருந்த குண்டுவின் கடையும் இப்போது காலியாகக் கிடந்தது. தெருவெங்கும் பிச்சைக்காரர்கள் நிறைந்திருந்தனர். இத்தனை நாட்களாய் இவர்கள் எங்கே இருந்தார்கள்? யாருக்கும் கேட்கும் தைரியம் இல்லை. பிச்சைக்காரர்களில் பலர் வெளியூர்க்காரர்கள் போல இருந்தார்கள். ஒரு நாள் அனங்கா சமையலறையில் வேலையாக இருந்தபோது, கந்தலாடை அணிந்த, எலும்பும் தோலுமாக இருந்த ஐந்தாறு பெண்களும், நிர்வாணமாகவும், அரைகுறையாகவும் உடையணிந்து, இளைத்துத் தோலாகிப்போன சிறுவர்களும், சிறுமியரும் வீட்டு வாசலுக்கு வந்து, “கஞ்சி இருந்தா குடுங்கம்மா, நாங்க கஞ்சி குடிக்கறப் பழக்கம் – “ என்று இறைஞ்சினர்.

அவர்களின் வித்தியாசமான உச்சரிப்பின் காரணமாக, அனங்கா அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று புரிந்துகொள்ள கஷ்டப்பட்டாள். “நாங்க குடிக்கற பழக்கம்” என்று இறந்தகாலத்தில் ஏன் சொல்கிறார்கள் என்று அவளுக்குப் புரியவில்லை. அது புரிந்தவுடன், “கொஞ்சம் நில்லுங்க, கொண்டு வரேன்.” என்றாள்.

கஞ்சியை நசுங்கிய ஈயப்பாத்திரத்தில் பெற்றுக்கொண்டு அவர்கள் கிளம்பிச்சென்றார்கள். அனங்கா, இப்படி எப்போது ஒரு குடும்பமே, சோறு கூட இல்லை, வெறும் கஞ்சிக்காகப் பிச்சை எடுக்கும் நிலை வந்தது என்று திகைத்துப் போய்ப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கண்களில் நீர் துளிர்த்தது. அவளுக்குப் பள்ளியில் இருக்கும் தன் குழந்தைகளின் நினைவு வந்தது. அத்தனை பேருக்கும் கொடுக்கும் அளவுக்கு அவளிடம் அரிசியில்லை. இருந்திருந்தால் கொடுத்திருப்பாள்.

கொஞ்ச கொஞ்சமாக, பக்கத்து கிராமங்களிலிருந்தும், கவலையளிக்கும் செய்திகள் வரத் தொடங்கின. சில கிராமங்களில், ஒருவர் விடாமல் எல்லோரும் பட்டினி கிடக்கிறார்களாம், எங்கோ யாரோ ஐந்து முழு நாட்களானாதாம் சோறு சாப்பிட்டு – இப்படிப்பட்ட செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. சோறு சாப்பிடாமல் பட்டினி கிடந்து மக்கள் இறக்கக் கூடும் என்று இன்னும் பலராலும் நம்ப முடியவில்லை. அப்படி தங்கள் குடும்பங்களில் நடக்க வாய்ப்பேயில்லை என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள்.

ஒருநாள் அதிகாலை, அனங்கா, மீனவப்பெண் ஒருத்தி, சேப்பங்கிழங்குத் தண்டுகளைப் பிடுங்கி கரையில் சேகரித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தாள். அனங்கா அவளைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

”ரோயி போம், இன்னிக்கு சேப்பங்கிழங்கு சமையலா?”

அந்தப்பெண் கையும் களவுமாகப் பிடிபட்டுவிட்டது போல திகைத்துப் போனாள். அத்தனை அதிகாலை நேரத்தில் அவளை யாரும் பார்ப்பார்கள் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

”ஆமாம்மா” என்று கூச்சத்தோடு பதிலளித்தாள்.

”ஆனால் இவ்வளவா? இது ரெண்டு மூணு நாளைக்கு வரும் போல இருக்கே?”

“எல்லாரும் சாப்பிடுவாங்க, அதான்.”

சொன்னபின் அனங்காவை ஒரு முறை விசித்திரமாகப் பார்த்துவிட்டு அழத் தொடங்கினாள்.

அனங்கா, “என்னாச்சு ரோயி போம்? ஏன் அழற?”

”எங்களுக்கு வேற வழியில்லைம்மா. இதுதான் எங்களோட கதி” என்று சேலைத்தலைப்பால் கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.

”என்ன ஆச்சு?”

”இந்த சேப்பக்கிழங்கும்மா… கடந்த மூணு நாளா எங்க வீட்ல ஒரு பருக்கைச் சோறு கூட யாரும் சாப்பிடல.”

”என்ன சொல்ற? மூணு நாளா நீ சாப்டலையா?”

”எல்லாம் எங்க விதிம்மா. என்ன செய்யமுடியும்? நாங்க எங்க போவோம்? காலங்காத்தால நான் உங்ககிட்ட பொய் சொல்ல மாட்டேன். இந்தப் போர் காலத்துல யார் எங்களுக்கு அரிசி தருவா? எல்லா இடத்திலயும் தட்டுப்பாடு. எல்லாருக்கும் இதே பிரச்சினைதான். அதான் யாரும் எந்திரிக்கிறதுக்கு முன்னாடி இந்த சேப்பங்கிழங்கையாவது எடுத்துக்கிட்டுப் போலாம்னு வந்தேன். அதையும் வேக வச்சுத்தான் சாப்பிடனும். எண்ணெய்யோ, உப்போ இல்ல.”

அனங்கா இப்படிப்பட்ட கொடும்பட்டினியை அதற்குமுன் நேருக்கு நேர் சந்தித்ததில்லை. அவள் குழந்தைகளுக்குக் கொடுப்பதற்காவது தன்னிடம் அரிசி இருந்திருக்கலாம் என்று நினைத்தாள்.

அந்த மீனவப்பெண் மேலும் தொடர்ந்து பேசினாள். “அவர் ஒரு நாளைக்கு ஒரு சேரோ, அரை சேரோ மீன் பிடிக்கிறாரு. அதை வித்தா அதிகபட்சம் பத்து, பண்ணண்டு அணா கிடைக்கும். இப்போ அரிசி காதாவுக்கு ஒரு ரூபாய். அதுவும் கூட சந்தையில கிடைக்கிறதில்லை. எங்களைப் போல பஞ்சப் பராரிங்க என்ன செய்ய முடியும்?”

அனங்கா மிகுந்த கவலையோடு வீட்டுக்குப் போனாள். கங்காசரண் எழுந்திருந்து ஹூக்கா பிடித்துக்கொண்டிருந்தான். அனங்கா அவனிடம் போனாள். “சந்தையில அரிசி சம்பந்தமா என்ன நடந்துக்கிட்டு இருக்கு? நாமெல்லாம் இனிமே பட்டினிதான் கிடக்க வேண்டி வருமா? நம்மக்கிட்டயும் ரொம்ப கொஞ்சம் அரிசிதான் இருக்கு. நெல்லைக்கூட யாரும் விக்க மாட்டேங்கறாங்க. எல்லாம் எங்க போச்சு?”

”தாமிர நாணயமெல்லாம் எங்கே போகுமோ, அங்கே.”

“தமாஷ் செய்யறத விடுங்க. நீங்க எதாவது செஞ்சே ஆகனும். நம்ம பசங்க பட்டினி கிடக்கறதப் பாக்கனுமா?”

கங்காசரண் தீவிரமானான். “நானும் அதைப் பத்திதான் கவலைப்பட்டுக்கிட்டு இருக்கேன். நான் ஒண்ணும் சும்மா உக்காந்திருக்கல. எனக்குப் பிரச்சினையைப் பத்தி நல்லா தெரியும்.”

”நடக்கறதெல்லாம் பார்த்தா எனக்கு பயமா இருக்கு. தாமதிக்காதீங்க. இப்போவே எதாவது செய்ங்க. நம்மக்கிட்ட அரிசி இன்னும் மூணு நாளைக்குதான் வரும்.”

“நெல்லு எவ்ளோ இருக்கு?”

“புடைச்சப்புறம் அஞ்சு காதா வரும். அது அதிகபட்சம் பத்துநாள் வரும். அதுக்கப்புறம்?”

“நான் யோசிச்சிட்டு இருக்கேன்.”

“சீக்கிரம் ஏதாவது செய்ங்க.”

(தொடரும்)

Series Navigation<< மின்னல் சங்கேதம் – 6மின்னல் சங்கேதம் – 8 >>

One Reply to “மின்னல் சங்கேதம் – 7”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.