
நம் பொதுவான அறிதல் என்பது ‘கொம்பேறித் தாவும் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்’ என்பது. 150 வருடங்களுக்கு முன்னர் இன்றைய மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியிருக்கக்கூடுமென்று டார்வின் ஊகித்தார். அதை ஒட்டியும் வெட்டியும் பல சிந்தனைகள், ஊகங்கள், சில ஆதாரங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. பெரும்பாலும் வாலில்லாக் குரங்குகளின் தொல்லெச்சங்களை மையப்படுத்தி நம் முன்னோரை அதில் தேடுவதையும் அதையே மையப்படுத்தி அதை நிராகரிப்பதையும் அதிகமாகப் பார்த்துவருகிறோம்.
மே 7 ‘சைன்ஸ்’ இதழில் வெளி வந்துள்ள ஒரு கட்டுரை டார்வினின் காலம்தொட்டு இன்றுவரை பரிணாமவியல் முக்கியமாகக் கண்டடைந்தவற்றைத் தொகுப்பதுடன், ‘ஹாமினின்’ ((Hominins)களை மேலும் புரிந்துகொள்ள, ‘ஏப்’ (Ape)களின் தொல்லெச்சம் உதவக்கூடும் என்று சொல்கிறது. அவற்றைப் புரிந்துகொள்ளவும், நம் இரு இனத்திற்குமான பொது மூதாதையை அறியவும் இது தேவை என அவர்கள் சொல்கிறார்கள். மயசீன் (Miocene) சகாப்தம் கிட்டத்தட்ட முடிவுறும் சமயத்தில், அதாவது, 9.3 மில்லியன் மற்றும் 6.5 மில்லியன் ஆண்டுகளுக்கு இடையில் நாம், குறிப்பாகச் சிம்பன்ஸி வகைக் குரங்குகளிடமிருந்து பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கலாம். உடற்கூறு பரிணாமவியல் துறையினர், (Paleoanthropologists) ‘ஹாமினின்’ தோற்றத்தை அறிந்துகொள்ளும் முகமாக, நடத்தை, உடல் மொழி, வாழ்க்கைச் சூழல் இவற்றைக் கட்டமைத்து மனிதனுக்கும், சிம்பன்ஸிகளுக்கும் பொதுவான கடைசி மூதாதை யாராக இருக்கக்கூடுமென அனுமானிக்கப் பார்க்கிறார்கள். ‘ஹாமினின்’ தோற்றத்தை ஆராய்வதில் காணப்படும் குழப்பங்கள் வேறு எந்த விஞ்ஞானத் துறையிலுமில்லை என்று அமெரிக்க மானுடவியல் வரலாற்று அருங்காட்சியகத்தில் பணி புரியும் வரலாற்று மானுடவியல் துறை சார்ந்த Sergio Alme’cija சொல்கிறார்.
இதில் ‘மேலிருந்து கீழ்’ என்பது வாழும் சிம்பன்ஸிகளின் நடத்தை போன்ற மற்றவற்றை அடிப்படையெனக் கொண்டு ஆராய்வது; மற்றொன்று ‘கீழிருந்து மேல்’ – இது அழிந்து போன உயிர்களை அடிப்படையெனக் கொள்வது. விரல் எலும்புகளால் நடந்த, சிம்பன்ஸி போன்ற மூதாதையரிடமிருந்து ‘ஹாமினின்’ தோன்றியிருக்கலாம் என சில அறிவியலாளர்கள் ஊகிக்கிறார்கள். வேறு சிலரோ, சில உடற்பாகங்கள், சில விநோத ‘மயசீன்’ வகைக் குரங்குகளை ஒத்திருப்பதால், மனித இனத்தின் பொது மூதாதை அவற்றில் அறியக் கிடைக்கலாம் என்று சொல்கிறார்கள். புதை படிம இயல் (Palaeontology), மரபு சார் வழி இயல்,(Phylogenetic) உடற்கூறுகள் வரலாற்றை ஒட்டிய மானுடவியல் ஆகிய பலத் துறைகளைகளைச் சேர்ந்தோர் இந்த இரு மாறுபட்ட ஆய்வுகளைப் பற்றி இவ்வாறு சொல்கிறார்கள்- ‘மேலிருந்து கீழ்’ கட்சியாளர்கள் கவனம் கொள்ளாத ஒன்று எதுவெனில் சிம்பன்ஸிகளோ, மனிதனோ ஏற்கெனவே அழிந்த உயிரினங்களின் தக்க வைக்கப்பட்டவர்கள் தான் அல்லது தப்பிக்க முடிந்தவர்கள் தான்; பெரும் உயிர் வரலாற்று மரத்தின் அனைத்துமே கவனத்திற்குரியவை. ‘கீழிருந்து மேல்’ ஆட்கள் முன்னரே கூறப்பட்ட ‘குரங்கு தொல்லெச்சங்களுக்கு’ முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.
வாழும் எந்த உயிரினங்களிலிருந்தும் மாறுபட்ட மனிதன் ஆப்பிரிக்காவில் தோன்றினான் என்று 1871-ல் டார்வின் சொன்னார். அப்போது படிமங்கள் அவ்வளவாகக் கிடைக்கவில்லை. கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவிலும், யூரோப்பில் சில இடங்களிலும் இந்த 150 வருடங்களுக்குப் பின்னர் மனிதன்- சிம்பன்ஸி பிரிந்த சான்றுகள் கிட்டுகின்றன. ஆப்பிரிக்காவிலும், யுரேசியாவிலும் 50 தொல் எச்சங்கள் கிடைத்துள்ள போதிலும், அவை குரங்கு-மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியின் முந்தைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வண்ணம் இல்லை. மனித தோற்றத்தைப் பற்றி சொல்லப்பட்ட விஷயங்கள், இன்றைய தொல்லெச்சப் பொருட்களுடன் ஆதாரபூர்வமாக இணையவில்லை.
இந்தக் கட்டுரையின் இணை ஆசிரியர், ஆஷ்லி ஹேமண்ட், (Ashley Hammond) உதவி மேற்பார்வையாளராக அமெரிக்க மானுடவியல் அருங்காட்சியகத்தில் பணி செய்பவர், சொல்கிறார்:” அழிந்த குரங்கினங்களின் (ஏப்) சிறு பிரதிபலிப்பு மட்டுமே இன்று வாழும் இவை. எனவே இதை ஒட்டி மட்டுமே செய்யப்படும் முடிவுகள் ஒரு முழுச் சித்திரத்தை அளிக்காது.”
கெல்சீ ப்யூ (Kelsey Pugh) சொல்கிறார்: “இன்று வாழும் இவ்வகை குரங்கினத்தின் தனிப்பட்ட அம்சங்களையும் அவற்றின் முன்னோரின் தொல்லெச்சப் பொருட்கள் காட்டும் அம்சங்களையும், அவற்றின் மாறுபாடுகளையும் உணர்ந்து செய்யும் ஆய்வு, ஹோமினின்கள், எந்த அம்சங்களை குரங்கின முன்னோர்களிடமிருந்து பெற்றார்கள், மனித வம்சத்தின் தனியான சிறப்பம்சம் என்ன என்பதில் தெளிவைக் கொண்டுவரும்.”
எனவே, இக்கட்டுரை, வாழும் குரங்குகள், ஹாமினின்கள் இவற்றுடன் மயசீன் வகையையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறது. இதைச் சார்ந்த தொல்லெச்ச ஆய்வுகள் சிறந்த வழி முறையாக இருக்கக்கூடும்.
இந்திய வேத அறிமுறைகள் உயிர் பரிணாமத்தைக் காட்டிலும் சிருஷ்டியைப் பற்றித்தான் பேசுகின்றன. இதை ஆன்ம பரிணாமம் எனச் சொல்கிறார்கள். ‘இல்லாததைக் கொண்டு வருவதல்ல சிருஷ்டி; அதுவே வளர்ச்சி. இது ஒரு செயல்முறை; நிகழ்வல்ல. இந்த உலகமே சைதன்யத்தின் சிறு துளி. ரிக் வேதத்தின் 7 மந்திரங்கள் இதை அழகாகச் சொல்கின்றன.
- அப்போது இருப்புமில்லை; இருப்பில்லாமலுமில்லை; உலகோ, ஆகாயமோ இல்லை.
- இறப்புமில்லை; இறப்பில்லாமலுமில்லை; இரவு பகலைப் பிரியவில்லை; அசைவில்லாத் துடிப்பு இருந்தது.
- முதலில் இருட்டில், மறைந்த இருட்டு இருந்தது.
- மனதின் விதையான விருப்பம் வந்தது. இருப்பற்றதிலிருந்து இருப்பானது தன் கிரணங்களை மேலே, கீழே, பக்கலில் என்று பரப்பி எழுந்தது.
- சிருஷ்டி பெருமையுற்றது. ஆக்க சக்தி மேலாக, தன்னை நிலை நிறுத்தும் இருப்பு சக்தி கீழாக வடிவெடுத்தது.
- யார் அறிவார் இதை? யாரால் சொல்லகூடும்? எப்போது தோன்றியது? எப்போது எவ்வாறு பரிணமித்தது?
- அவனையன்றி அறிவார் யார்?(ரிக் வேதம்-10 வது மண்டலம்-129-ம் சூக்தம்)
தொடக்கத்தில் தூய உணர்வான ஆன்மா ஒன்றே இருந்தது. வேறு ஒன்றுமில்லை. முக்குண விசேஷங்களால், அதில் சிந்தை தோன்றியது. சிந்தையில் மாயை வந்தது. அது சிருஷ்டி செய்தது.
‘புல்லாகிப், பூடாகி, புழுவாய், மரமாய், பல் விருகமாய், பறவையாய், பாம்பாய், பேயாய், கணங்களாய், வல்லசுரராகி, முனிவராய், தேவராய், சொல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும்’ – திருவாசகம்.
One Reply to “பரிணாம வளர்ச்சியும் தொல்லெச்சச் சான்றுகளும்”