ஆனந்த் குமார்
மலை இறங்கும்போது
ஒரு மலையை
ஏறி முடித்தவுடன்
அது எனதானதாகிறதா
தெரியவில்லை.
ஆனால் அதன்பிறகு
அதனுடன் பேசமுடிகிறது
குறைந்தபட்சம் ஒரு வேண்டுகோள்
அது கேட்டுக்கொள்கிறது.
மலையிறங்குகையில்
‘கொஞ்சம் பிடிச்சுக்கோ’ என
அதனிடம் சொல்ல முடிகிறது.
இப்படித்தான்,
படியேதும் முளைக்காத
பெரும்பாறையொன்றை இறங்குகையில்
சின்னத் தடுக்கலில் கால்சறுக்க
சட்டெனத் திரும்பித்
தழுவிக்கொண்டேன்
மலையை.
நிறை

பௌர்ணமிக்குப் பிந்தைய தினம்
நிலவுக்கென்ன குறை என்கிறான்
நிரம்பித் ததும்பும் காபியை
கொஞ்சம் கொட்டிவிட்டே குடிக்கிறான்
பாதி கேட்ட பாடலைத்தான்
அன்று முழுதும் பாடுகிறான்.
ஒவ்வொரு குறையும்
மிகச்சரியாய் இருக்கிறது
அவன் அவனைப்
பொருத்தி நிரப்பும்
சிறுபள்ளமென.
பாதி உயிர்

இரண்டு பேட்டரிகளில்
ஒன்று தீர்ந்தது
ஒன்றை மட்டும் சுட்டித் துள்ளும்
ஓயாத விரல்.
இப்போது
இயல்பாய் இருக்கிறது
பைத்தியத்தின் சிரிப்பு
சிலிர்த்துக் கொள்கிறது
நோயென மாறாத வலி
நின்று நின்று
துடிக்கிறது
நின்ற இடத்தில்
ஆடுகிறது
இனிமையின்
மூவாத காந்தமுள்.
அருமையான கவிதை