தேர்ந்த வாசகருக்கான ஒப்பீட்டு அறிமுறை பற்றிய படப் புத்தகம்

கென் லூ

[ஆங்கில மூலத்திலிருந்து தமிழாக்கம்: மைத்ரேயன்]

(சென்ற இதழின் தொடர்ச்சி)

பாகம்-2

[1](ஒரு கவிதை)
மற்ற சூரியன்களை ஒருகால் சுற்றிச் சுழலும் நிலவுகளோடு,
ஆணும், பெண்ணுமான ஒளிகளால் பேசுவதை
நீ காண்பாய்;
பெருமையுள்ள அவ்விரண்டு பாலாரே உலகின் உயிரோட்டம்
ஒவ்வொரு கோளிலும் ஒருகால் அப்படி
உயிர்த்த சில இருக்கலாம்.
இயற்கையின் இத்தனை பிரம்மாண்ட வெளி,
உயிரேதும் இல்லாத பாலையாய் பாழாய், வெறுமே ஒளிர
மட்டும் இருக்குமா, ஒவ்வொரு கோளுக்கும்
சிறிதே காண ஒளியைக் கொடுத்து, இத்தனை தொலைவு
வாழ்வைக் கொண்ட இவ்விடத்திற்கு அனுப்புவதும்,
இது ஒளியைத் திருப்பி அனுப்புவதும் மட்டுமா அங்கிருப்பது,
அந்தக் கருத்து கேள்விக்குரியதென்பது தெளிவு.

 “அவர்கள் எதைப் பற்றி யோசிக்கிறார்கள்? இந்த உலகத்தை எப்படி அனுபவிக்கிறார்கள்? நான் அந்த மாதிரிக் கதைகளை என் வாழ்நாள் முழுதும் யோசித்து வந்திருக்கிறேன், ஆனால் நிஜம் என்பது எந்த மாயாஜாலக் கதையையும் விட வினோதமாகவும், அபாரங்கள் கொண்டதாகவும் இருக்கும்.”

அவள் ஈர்ப்பு விசை குவிவில்லைகளைப் பற்றியும், அணுக் கரு உந்து சக்தி பற்றியும் என்னிடம் உரையாடினாள். ஃபெர்மி முரண்புதிர், ட்ரேக் சமன்பாடு, அரேஸிபோ, யெவ்படோரியா, ப்ளூ ஆரிஜின் விண்கல நிறுவனம், மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பற்றிப் பேசினாள்.[2]

”உனக்குப் பயம் ஏதும் இல்லையா?” என்று நான் கேட்டேன்.

“நான் நினைவு கூரத் தொடங்குமுன் கிட்டத்தட்ட சாக இருந்தேன்.”

அவள் தன்னுடைய குழந்தைப் பருவம் பற்றிப் பேசினாள். அவளுடைய பெற்றோர் தீவிர மாலுமிகள், அதிர்ஷ்ட வசமாக சீக்கிரமாகவே வேலையிலிருந்து ஓய்வு பெற அவர்களுக்கு முடிந்தது. அவர்கள் ஒரு படகை வாங்கினார்கள், அதிலேயே வாழ்க்கை நடத்தினார்கள். அந்தப் படகுதான் அவளுடைய முதல் வீடு. அவளுக்கு மூன்று வயதிருக்கையில், அவளுடைய பெற்றோர் பசிஃபிக் மாக்கடலைப் படகில் கடக்கத் தீர்மானித்தனர். அந்தப் பெருங்கடலில் பாதி தூரம் போயிருக்கையில், மார்ஷல் தீவுகளுக்கு அருகில் அவர்களின் படகில் நீர்க்கசிவு ஏற்பட்டது. அவர்களுக்குத் தெரிந்த அனைத்தையும் அவர்கள் முயன்று அந்தப் படகைக் காப்பாற்றப் பார்த்தார்கள். கடைசியில் ஆபத்து அறிவிப்புக்குப் பயன்படும் சமிக்ஞை ஒளியை வீசி உதவி கேட்க நேர்ந்தது.

“அதுதான் என் முதல் நினைவு. கடலுக்கும், ஆகாயத்துக்கும் நடுவில் இந்த பெரிய பாலத்தில் நான் ஆட்டத்தில் நின்றேன். அது தண்ணீரில் மூழ்கியது, நாங்கள் வெளியே குதிக்க வேண்டி இருந்தது. அம்மா என்னை அதற்கு விடை கொடுக்கச் செய்தாள்.”

அவர்கள் கடற்கரைக் காவல் படையினரால் காப்பாற்றப்படுமுன், அவர்கள் கடல் நீரில் ஒரு முழு நாளும், இரவும் மிதந்து கொண்டிருந்திருக்கிறார்கள். சூரியனின் வெப்பத்தால் தோல் வெந்து போய், கடலின் உப்பு நீரைக் குடித்ததால் வாந்தி எடுக்கும் நிலைக்கு வந்து, அவள் மருத்துவ மனையில் ஒரு மாதம் படுத்திருக்க வேண்டி வந்தது.

“ஒரு குழந்தையை இப்படி பேராபத்துக்கு உட்படுத்தினார்கள் என்று என் பெற்றோர் மீது நிறையப் பேர் கடும் கண்டனத்தையும் விமர்சனத்தையும் முன்வைத்தார்கள். ஆனால் நான் அவர்களுக்கு என்றென்றைக்குமாக நன்றியுள்ளவளாக இருக்கிறேன். ஒரு குழந்தைக்கு பெற்றோர் கொடுக்கக் கூடிய பரிசிலேயே விலை மதிப்பற்ற ஒன்றை அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள்: அது அச்சமின்மை. அவர்கள் மறுபடி வேலை செய்தார்கள், சேமித்தார்கள், இன்னொரு படகை வாங்கினார்கள், நாங்கள் மறுபடி கடலில் பயணம் போனோம்.”

இந்த வித சிந்தனை எனக்கு முற்றிலும் அன்னியமான ஒன்று, அதனால் இதற்கு என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. அவளுக்கு என் சங்கடம் புரிந்திருக்க வேண்டும், அதனால் என் புறம் திரும்பி புன்னகைத்தாள்.

“தங்கள் படகுகளில் முடிவில்லாத பசிஃபிக் மஹாசமுத்திரத்தைக் கடக்கவென்று பயணம் போன பாலினீசியர்களுடைய, அல்லது அமெரிக்காவைக் கண்டு பிடிக்கக் கடற்பயணம் மேற்கொண்ட வைகிங்குகளினுடைய மரபை நாம் தொடர்கிறோம் என்று நினைப்பது என் இச்சை. நாம் எப்போதுமே ஒரு படகில்தான் வாழ்ந்திருக்கிறோம், உங்களுக்குத் தெரிகிறதா? அதுதான் பூமி, அண்ட வெளியில் ஒரு படகு.”

அவள் பேசுவதைக் கேட்கையில், ஒரு கணத்துக்கு, எங்களிடையே இருக்கிற தூரத்தை நான் கடக்க முடிந்ததைப் போல, உலகத்தின் எதிரொலியை அவளுடைய காதுகளின் வழியே நான் கேட்க முடிந்ததைப் போல, நட்சத்திரங்களை அவள் கண்களூடே பார்க்க முடிந்ததைப் போல உணர்ந்தேன்: அதிலிருந்த தவம் செய்து கிட்டும் மனத் தெளிவு என் இதயத்தை தாவிக் குதிக்கச் செய்தது.

மலிவான ஒய்னும், தீய்க்கப்பட்ட குழல் மாமிசங்களும், ஒருகால் மற்ற சூரியன்கள் ஆகாயத்திலிருந்த வைரங்களோ, கடலில் துடுப்பின்றி மிதக்கும் படகிலிருந்து பார்க்கப்பட்டனவோ, காதல் வசப்படுகையில் கிட்டும் உக்கிரமான தெளிவு. 

***

மொத்தப் பேரண்டத்திலும் நமக்குத் தெரிந்து யுரேனியத்தால் உருவான ஒரே ஜீவராசிகள் டிக்-டாக்குகள்.

அவர்களின் கிரகத்தின் மேல் பரப்பு முடிவில்லாத பாறைவெளி. மனிதக் கண்களுக்கு அது பாழ்நிலமாகத் தெரியும், ஆனால் அந்தப் பரப்பில் பிரம்மாண்டமான அளவில் பரந்து விரியும், வண்ணமயமான அலங்காரப் பாணிகள் செதுக்கப்பட்டிருக்கின்றன, ஒவ்வொன்றும் ஒரு விமான நிலையம், அல்லது ஒரு பெரும் விளையாட்டு அரங்கம் போன்ற பேரளவுள்ளவை: எழிலார்ந்த கையெழுத்தைப் போல வளைவும் நெளிவுமான பாணிகள்; சுருள் பரணிகளின் நுனிகளைப் போன்ற சுழல்கள்;குகைகளின் சுவர்களில் அலைப்புறும் கை மின்விளக்குகள் வீசும் நிழல்கள் போன்ற அதிபரவளையங்கள்; விண்ணிலிருந்து பார்த்தால் மின்னும் நகரங்கள் போன்ற அடர்ந்த, விரிவளையங்களான கொத்துகள். ஒவ்வொரு சமயங்களில், திமிங்கிலங்கள் மூச்சு விடுகையில் பீய்ச்சும் நீர்ப் பெருக்கு போலவோ, என்செலடாஸ் கோளில் பனி எரிமலையின் வெடிப்பில் எழும் நீராறு போலவோ, மிகையாக சூடாக்கப்பட்ட நீராவி தரையிலிருந்து பொங்கி எழுகிறது.

பிரம்மாண்ட நினைவுச் சின்னங்கள் போன்ற இத்தகைய வரைவுகளை, வாழப்பட்ட வாழ்வுகளுக்கு புகழாரமானவற்றை, குதூகலங்களின், தெரிந்திருக்கிற மற்றும் மறக்கப்பட்ட சோகங்களின் பதிவுகளை விட்டுச் சென்ற ஜீவராசிகள் எங்கே இருக்கிறார்கள்?

நீங்கள் தரையடியில் தோண்டுகிறீர்கள். கருங்கல் அடித்தளத்தின் மேல் படிந்த அடுக்கு மணற்பாறைகளுக்குள் தோண்டி, நீங்கள் நீரில் கசிந்திருக்கும் யுரேனியம் படிவுகளைக் காண்கிறீர்கள்.

இருட்டில் யுரேனியம் அணுவின் கரு தானாக உடைகிறது, சில நியூட்ரான்களை விடுவிக்கிறது. அந்த நியூட்ரான்கள் அணுக்களிடையே உள்ள பெரும் பாழ் வெளியில், நட்சத்திரங்களை நோக்கிப் போகிற விண்கலங்களைப் போலச் செல்கின்றன (இது சரியான வர்ணனை இல்லை, ஆனால் இது கிளர்ச்சியூட்டும் ஒரு பிம்பம், சித்திரிக்கச் சுலபமான உத்தி). நீரின் மூலக்கூறுகள், நெபுலாவைப் போல, நியூட்ரான்களை அவை இன்னொரு யுரேனியத்தின் அணுக்கருவை, இன்னொரு உலகைத் தொடும் வரை வேகமிழக்கச் செய்கின்றன,

ஆனால் இந்தப் புது நியூட்ரானின் சேர்க்கை, அந்த அணுக்கருவை சமன்நிலை இழக்கச் செய்கிறது. அந்த அணுக்கரு கடிகார அலாரம் ஒலிப்பது போல அலை மோதுகிறது, உடைகிறது, இரண்டு புது அணுக்கருக்களாகவும், இரண்டு அல்லது மூன்று நியூட்ரான்களாகவும் உடைகிறது, புது விண்கப்பல்கள் தொலைதூர உலகுகளை நோக்கிப் பயணிக்கின்றன, மறுபடி அந்தச் சுழற்சி துவங்குகிறது.

யுரேனியத்தில் தானாகத் தொடரும் அணுக் கருப் பரிமாற்றத்தைப் பெற, சரியான வகையான யுரேனியத்தின் செறிவு தேவையாக இருக்கும். அது யுரேனியம் 235  என்கிற வகை யுரேனியம். விடுபட்ட நியூட்ரான்களை ஏற்கும்போது அது உடைந்து சிதறுகிறது. அப்போது விரைந்து ஓடும் நியூட்ரான்களை வேகம் குறைத்து மெதுவாக்க வேறேதாவது தேவைப்படும். அப்போது அவை உள்ளே இழுத்துக்கொள்ளப்படும். அதற்கு நீர் உதவுகிறது. படைப்பு சக்தி டிக்-டாக்குகளின் உலகை இந்த இரண்டாலும் ஆசீர்வதித்திருக்கிறது.

அணுப்பிளப்பின் பக்க விளைவுகளாக, யுரேனியம் அணுவிலிருந்து பிரியும் துகள்கள், இரு முகட்டுப் பரவலாக விழுகின்றன[3]. ஸீசியம், அயொடின், ஸீனான், ஜ்ஸிர்கோனியம், மாலிப்டினம், டெக்னீஷியம்…. சூபர்நோவா ஆன நட்சத்திரம் ஒன்று வெடித்த பின் அதிலிருந்து புது நட்சத்திரங்கள் உருவாவதைப் போல, இவற்றில் சில ஒரு சில மணி நேரங்களே இருக்கின்றன, மற்றவை லட்சக்கணக்கான வருடங்கள் தாக்குப் பிடிக்கின்றன.

டிக்-டாக்கர்களின் எண்ணங்களும், நினைவுகளும் கருங்கடலில் மின்னும் இந்த நட்சத்திரங்களால் உருவானவை. அணுக்கள் நம் மூளையின் நியூரான்களைப் போலச் செயல்படுகின்றன, நியூரான்கள் நரம்புகளிடையே செய்தியைப் பரப்புகின்றன. அணுக்களின் பரவல் வேகத்தை மட்டுப்படுத்தும் ஊடகமும், நியூட்ரானின் விஷங்களும் தடைகளாகச் செயல்பட்டு, நியூட்ரான்களின் பாய்ச்சலைத் திசை திருப்புகின்றன, பாழ்வெளியில் நரம்பு மண்டலப் பாதைகள் போல உருவாக்குகின்றன. கணக்கிடும் நடைமுறைகள் அணுக்கூறுகளின் நிலைகளிலேயே துவங்குகிறது, அது புலப்படுவது செய்தியைப் பரப்பும் நியூட்ரான்கள் பறக்கும் பாதையில்;  அந்த பரப்பின் தன்மை, உள்கட்டமைப்பு, மேலும் அணுக்களின் சீர்  ஆகியவற்றில்; மேலும் அணுவெடிப்பிலும், சிதைவிலும் உருவாகும் அபாரமான மின்னல்களில்.

டிக் டாக்கர்களின் எண்ணங்கள் மேன்மேலும் உயிர்ப்புள்ளதாகவும், கிளர்ச்சியுற்றதாகவும் ஆகும்போது, அந்த யுரேனியச் சேமிப்பிடங்களில் உள்ள நீர் சூடாகிறது. அங்கு அழுத்தம் பெருமளவாகும் போது அதி வெப்பமான நீர்ப் பெருக்கு அங்குள்ள மண்பாறையடுக்கில் உள்ள பிளவுகள் வழியே பீறிடுகிறது, தரையின் மேல்பரப்பில் ஒரு நீண்ட தாரையான நீராவியாகப் பீய்ச்சி உயரே எழுகிறது. தரை மீது பலவண்ண உப்புப் படிவுகள் விட்டுச் செல்லும் உத்துங்க மிக்க, நுட்பமான, முடிவிலி பாணிகள், ஒரு குமிழ்க் கலத்தில் எலெக்ட்ரானின் சேர்க்கையால் மின்னூட்டம் பெற்ற அணுஉட்டுகள் விட்டுச் செல்லும் தடங்களை ஒத்திருக்கின்றன.

முடிவில், போதுமான அளவு நீர் ஆவியாகி விட்டபடியால், விரையும் நியூட்ரான்களை யுரேனியம் அணுக்கள் கைப்பற்றி தொடர் வினைகளை நடத்த முடியாமல் போகிறது. அண்டம் அமைதியில் ஆழ்கிறது, சிந்தனைகள் இந்த அணுக்களின் விண்மண்டலத்திலிருந்து மறைகின்றன. இப்படித்தான் டிக்-டாக்குகள் மடிகிறார்கள்: தங்களுடைய உயிர்த்துடிப்பின் வெப்பத்தால்.

நீர் படிப்படியாக, மண்பாறைகளின் இடுக்குகள் மற்றும் கருங்கல் பிளவுகள் வழியே சொட்டுச் சொட்டாக இறங்கி, சுரங்கங்களில் கசிந்து சேர்கிறது. கடந்த காலத்தின் வெறும் கூட்டில் போதுமான நீர் சேர்ந்தபின், எதேச்சையாக சிதைந்து கொண்டிருக்கும் ஓர் அணு நியூட்ரானை விடுவிக்கவும், அது தொடர் வினையை மறுபடி துவங்கும், புது எண்ணங்களையும், நம்பிக்கைகளையும் மலரச் செய்யும், பழைய தழலிலிருந்து புதுத் தலைமுறைகளின் உயிரூட்டத்தை அது ஏற்றி வைக்கும்.

டிக்-டாக்குகள் சிந்திக்கக் கூடியவர்கள் என்று சொல்வதைச் சிலர் கேள்விக்குரியதாக்குகிறார்கள். நியூட்ரான்களின் ஓட்டம் இயற்பியல் விதிகளுக்கு உட்பட்டதாகவும், மிகச் சிறு அளவு க்வாண்டம் உள்தொடர்பின்மையையும் பொருத்து இருக்கையில், டிக்-டாக்குகள் சிந்திக்கிறார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும் என்பது ஐயமுற்றோரின் கேள்வி. இதில் தன் சுதந்திர விருப்பு என்பது எங்கே இருக்கிறது? சுய-நிர்ணயம் என்பது எங்கே? இடைப்பட்ட நேரத்திலோ, ஐயச்சாமிகளின் மூளையில் வேதிப்பொருள் அணு உலைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன, இயற்பியல் விதிகளைத் தவிர்க்க முடியாத உறுதிப்பாட்டோடு பின்பற்றிக் கொண்டிருக்கின்றன.

கடல் நீர்மட்டத்தின் ஏற்ற இறக்கங்களைப் போல, டிக்-டாக் அணு தொடர்வினைகள் துடிப்புகள் வழி இயங்குகின்றன. அடுத்தடுத்த சுழற்சிகளில், ஒவ்வொரு தலைமுறையும் உலகைப் புதிதாகக் கண்டு பிடிக்கிறது. பண்டையோர் எந்த ஞானத்தையும் தமக்கு அடுத்த தலைமுறைகளுக்கு விட்டுச் செல்வதில்லை, இளந்தலைமுறைகள் பிந்தைக் காலத்தை எதற்கும் நோக்குவதில்லை. அவர்கள் ஒரு பருவகாலத்துக்கு மட்டுமே வாழ்கிறார்கள், ஒரே ஒரு பருவகாலத்துக்கு மட்டும்.

ஆனால், கிரகத்தின் மேல் பரப்பில், அந்த அபாரமான பாறைச் சித்திரங்களில், அவர்களின் எழுச்சிக்கும், வீழ்ச்சிக்குமான படிவுகள் அழிக்கப்பட்டு எழுதப்பட்டு மறுபடி அழிக்கப்பட்டு புதிதாக எழுதப்படத் தயாரானவையாக உள்ளன. சாம்ராஜ்யங்கள் விட்ட மூச்சுகளின் தடயங்கள் அவை. டிக்-டாக்குகளின் வாழ்க்கைச் சரிதங்கள் அண்டப் பெருவெளியின் இதர ஜீவராசிகளால் பிரித்தறியப்பட வேண்டியதாக உள்ளன.

டிக்- டாக்கர்கள் செழித்திருக்கையில், அவர்கள் யுரேனியம்- 235 இன் செறிவைத் தளரச் செய்கின்றனர். ஒவ்வொரு தலைமுறையும், அவர்களது அகிலாண்டத்தில் திரும்பப் புதுப்பிக்கப்பட முடியாத வளங்களை நுகர்கின்றனர், அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு படிப்படியாகக் குறைவான வளங்களையே மீதம் விட்டுச் செல்கின்றனர். ஒரு நாளில் சங்கிலித் தொடரான வினை சாத்தியமில்லாமல் போகும். ஒரு கடிகாரம் தவிர்க்கமுடியாதபடி விசை இழந்து போவதைப் போல, டிக்-டாக்குகளின் உலகம் அப்போது நித்தியத்தின், குளிர்ந்த மௌனத்தில் அமிழ்ந்து போகும்.

***

உன் அம்மாவின் கிளர்ச்சி நாம் ஸ்பரிசிக்கக் கூடியதாக இருந்தது.

“வீடு விற்கிறவர் ஒருத்தரைக் கூப்பிடறீங்களா?” அவள் கேட்டாள். “நம்முடைய பங்குகளை எல்லாம் சந்தையில் விற்று விட நான் ஏற்பாடு செய்கிறேன். நாம் இனிமேல் சேமிக்கத் தேவையில்லை… உன்னோட அம்மா ரொம்ப நாளாப் போகணும்னு சொல்லிக் கொண்டிருக்கிற சுற்றுலாக் கப்பல் பயணத்தில் போகப் போகிறாராம்.”

“நாம் எப்போ லாட்டரிலெ ஜெயிச்சோம்?” நான் கேட்டேன்.

அவள் என்னிடம் ஒரு கற்றை காகிதங்களைக் கொடுத்தாள். லென்ஸ் செயல்திட்டம் பற்றிய அறிமுக நிகழ்ச்சி.

நான் வேகமாக அவற்றைப் புரட்டிப் பார்த்தேன். … உங்கள் விண்ணப்பக் கட்டுரை எங்களுக்கு வந்த மிக அதிசயமான பதிவுகளில் ஒன்று. … தேக நலச் சோதனை, மன நலச் சோதனை ஆகியவற்றின் முடிவுகளைப் பொறுத்து… உங்கள் உடனடிக் குடும்பத்துக்கு மட்டுமே இது பொருந்தும்.

“என்னது இது?”

எனக்கு இது என்னவென்று நிஜமாகவே தெரியவில்லை என்று புரிந்ததும், அவளுடைய முகம் வாடியது.

அண்டவெளியின் பெரும்பரப்பில் ரேடியோ அலைகள் வெகு வேகமாக க்ஷீணிக்கின்றன, அவள் விளக்கினாள். தொலைதூர நட்சத்திரங்களின் சுற்றுப் பகுதியில் உள்ள கோள்களிலிருந்து அண்டவெளியின் பாழில் யாராவது தொடர்புக்கான செய்திகளை விநியோகித்துக் கொண்டிருந்தால், அவர்களுடைய அண்மையில் உள்ளவர்களைத் தவிர வேறு யாரும் அவற்றைக் கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள். ஒரு நாகரீகம் தன் செய்தியை விண்வெளி மண்டலங்களூடே பரப்ப வேண்டுமானால் அது ஒரு முழு நட்சத்திரத்தின் சக்தியையும் பயன்படுத்திச் செய்தியைப் பரப்பினால்தான் சாத்தியம்- அது எத்தனை முறை நடந்து விடும்? பூமியை எடுத்துக் கொள்வோம்: நாம் ஒரு பனிப்போரைத் தாண்டி வரவே பெரும்பாடு பட்டோம், அதற்குள் இன்னொன்று ஆரம்பித்து விட்டது. சூரியனின் சக்தியைப் பயன்படுத்துவதற்கு நாம் முயலத் தொடங்கு முன்னரே, நம் சந்ததியினர் பேரழிவைக் கொணரும் பெரும் வெள்ளத்தின் நீர் பரவிய நிலப்பரப்பில் நடந்து தடுமாறப் போகிறார்கள், அல்லது அணுப் போரால் விளைந்த கடும் குளிர்காலத்தில் சிக்கப் போகிறார்கள், இன்னொரு கற்காலத்துக்குள் சிறைப்பட்டிருப்பார்கள்.

 “ஆனால், இன்னொரு வழி இருக்கிறது, இந்தத் தடைகளைத் தாண்டி வர முடியும். நம் போன்ற மிகப் பின் தங்கிய நாகரீகம் கூட விண்மீன் மண்டலங்கள் வழியே மிதக்கும் தேய்ந்த மென்குரல்களைக் கேட்க முடியலாம், ஒருகால் பதில் கூட அனுப்ப முடியலாம்.”

சூரியனின் ஈர்ப்பு விசை தொலைதூர நட்சத்திரங்களிலிருந்து வரும் ஒளி மற்றும் ரேடியோ அலைகளைத் தன்னைச் சுற்றி வளைக்கிறது. இது பொது சார்பியலின் முக்கியமான விளைவுகளில் ஒன்று.[4]

நம் நட்சத்திர மண்டலத்தில் வேறோர் உலகம் இருக்கிறது, அது நம்மை விட அதிகம் முன்னேறியதில்லை, அதில் அவர்களால் முடிந்த அளவு பெரும் சக்தியுள்ள ஆண்டென்னாவைக் கட்டி இருக்கிறார்கள், என்று வைத்துக் கொள்வோம். அதன் உதவி கொண்டு அவர்கள் ஒரு செய்தியை அண்டவெளியில் அனுப்பினார்களென்றால், நம்மை வந்து சேருமுன் அந்த மின்காந்த அலைகள் நாம் கண்டு பிடிக்க முடியாதபடி மெல்லியதாக ஆகி இருக்கும். நம் மொத்த சூரிய மண்டலத்தையே ஒரு பரவளையக் கிண்ணமாக[5] ஆக்கினால்தான் அவற்றை நம்மால் கைப்பற்ற முடியும்.

ஆனால் இந்த ரேடியோ அலைகள் சூரியனின் மேல்பரப்பை இலேசாகத் தொட்டுப் போகையில், ஒரு குவி வில்லை ஒளியை வளைப்பது போல, அந்த நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசை அவற்றைச் சிறிது வளைக்கும். சூரியனின் விளிம்பைச் சுற்றி இப்படிச் சற்றே வளைக்கப்பட்ட கீற்றுகள் சற்று தூரம் தாண்டி மறுபடி குவியும்.

“ஒரு சாதாரணக் குவி வில்லை எப்படி சூரியக் கிரணங்களை தரையில் ஒரு புள்ளியில் குவிக்குமோ அதே போல.”

சூரியனுடைய இந்த ஈர்ப்பு விசை உருவாக்கும் ’வில்லை’யின் குவி புள்ளியில் பொருத்தப்படும் ஒரு ஆண்டென்னாவின் உள்வாங்கும் சக்தி பிரம்மாண்டமானதாக இருக்கும். சில அலை வரிசை அளவுகளில் இது ஆயிரம் கோடிகள் தடவைகள் மேம்பட்டிருக்கும். மற்றவைகளில் அதை விடவும் பல மடங்கு மேம்படும். பனிரெண்டு மீட்டர் அளவு ஊதிப் பெருக்க வைக்கக் கூடிய கிண்ணம் கூட விண்மண்டலத்தின் மறு கோடியில் இருந்து அனுப்பப்படும் செய்திகளைக் கண்டு பிடித்து விடும். விண்மண்டலத்தில் உள்ள மற்றவர்கள் தங்களது சூரியன்களின் ஈர்ப்பு விசையைக் குவிவில்லையாகப் பயன்படுத்துவதைக் கண்டு பிடிக்குமளவு திறமை உள்ளவர்களாக இருந்தால், நாம் அவர்களோடு பேசவும் முடியலாம். ஆனால் இந்தப் பரிமாற்றங்கள் ஒருவழி உரையாடல் போலத்தான் இருக்க முடியும். அந்த ஒருவழிப் பேச்சுகள் நட்சத்திரங்களின் ஆயுள்காலத்தின் வழியேதான் நடக்கும். இரு வழிப் பேச்சாக இராது. புட்டிகளில் அடைத்து கடலில் வீசப்பட்ட செய்திகள் மிதந்து எங்கோ எப்படியோ எப்போதோ போய்ச் சேர்வது போல இந்தச் செய்திகள் போய்ச் சேரும். இறந்து அழிந்து போன ஒரு தலைமுறையின் செய்திகள், அனுப்புகையில் இன்னும் பிறந்திராத தலைமுறையினர்களால் பெறப்படும்.

இந்த இடம், ஈர்ப்பு விசையின் குவிவில்லையால் தகவல்கள் குவிக்கப்படும் இடம், சுமார் 550 ஆஸ்ட்ரொனாமிகல் யூனிட்டுகள் தூரத்தில் உள்ளது.[6] கிட்டத் தட்ட ப்ளூடோ எத்தனை தூரம் உள்ளதோ அதைப் போல 14 மடங்கு தூரம் அது. சூரியனின் ஒளி அந்த இடத்துக்குப் போய்ச் சேர சுமார் 3 நாட்களுக்கு மேல் ஆகும், ஆனால் நம் தொழில் நுட்பம் இப்போதுள்ள நிலையில் நாம் அனுப்பும் விண்கலம் அங்கு போய்ச் சேர நூறாண்டுகளுக்கும் மேலாகும்.

ஆனால் மனிதரை ஏன் அனுப்ப வேண்டும்? அதுவும் இப்போது ஏன்?

”தானியங்கி விண் துழாவி அந்த குவிபுள்ளியை அடைவதற்குள், இங்கே பூமியில் யாராவது இன்னும் இருப்பார்களா என்பதே நமக்குத் தெரியாது. மனித இனம் இன்னொரு நூறாண்டு தாக்குப் பிடிக்குமா? இல்லை, அதனால் நாம் கொஞ்சம் மனிதர்களை அங்கே அனுப்ப வேண்டும், அவர்கள் அங்கு கிட்டுவதைக் கேட்டுவிட்டு, ஒருகால் பதிலுக்கு ஏதும் பேசலாம்.”

“நான் போகிறேன். நீங்களும் என்னோடு வரணும்னு நான் விரும்பறேன்.”

***

தி-ரியல்கள் தங்களுடைய பெரும் நட்சத்திரக் கப்பல்களின் கூட்டுக்குள்ளேயே வாழ்கிறவர்கள்.

தம் உலகம் முடியப் போகிற பெருநாசத்தை முன்கூட்டி உணர்ந்த அவர்களின் இனம், தப்பிக்கவென்று பெரும் கலங்களைக் கட்டினார்கள். அவை மொத்த மக்கள் தொகையில் ஒரு சிறு சதவீதத்தைத்தான் ஏற்றிச் செல்ல முடிந்தவை. எல்லா அகதிகளுமே அனேகமாகக் குழந்தைகள்தான், ஏனெனில் தி-ரியல்கள் வேறெந்த ஜீவராசிகளையும் போலவே தம் குழந்தைகளை மிகவும் நேசித்தவர்கள்.

அவர்களின் நட்சத்திரம் மிகைசூடான விண்மீனாக மாறுவதற்குப் பல வருடங்கள் முன்னரே, அந்த சேமக் கலங்கள் வெவ்வேறு திக்குகளில் செலுத்தப்பட்டன, புது இருப்பிட உலகுகளைக் காணவே அந்த வழி. கப்பல்கள் வேகம் பிடிக்க ஆரம்பித்ததும், இறந்து கொண்டிருக்கும் உலகின் மரபுகளைத் தொடர்வதற்காக, குழந்தைகள் எந்திர ஆசிரியர்களிடமிருந்தும், கப்பலில் இருந்த சில வளர்ந்தவர்களிடமிருந்தும் பாடங்கள் கேட்டுக் கல்வி பயில ஆரம்பித்தனர்.

வளர்ந்தவர்களில் கடைசி நபர் இறக்கவிருக்கும் தருணத்தில்தான் ஒவ்வொரு கப்பலும் அந்தக் குழந்தைகளுக்கு உண்மையைச் சொல்லிக் கொடுத்தன: அந்தக் கப்பல்கள் எதுவும் வேகத்தைக் குறைக்க வழியில்லாமல் கட்டப்பட்டிருந்தன. அவை தொடர்ந்து வேகத்தைக் கூட்டிக்கொண்டே போய், ஒளியின் வேகத்தை எட்டப் போகும் அணுகுகோடு போல ஆகும், அவை எரிபொருள் தீரும் வரை அதே வேகத்தில் இருக்கும், அந்த வேகத்தில் பயணித்துக் கொண்டே போய் அகிலாண்டத்தின் முடிவை நோக்கிப் போகும்.

அந்தக் கலங்களின் உள்ளேயும், அவை அனுபவிக்கக் கூடிய கால-இடவெளியிலும், காலம் சாதாரணமாகக் கடப்பதாகவே தெரியும். ஆனால் கப்பலிற்கு வெளியே, அகில அண்டம் தன் இறுதி நாட்களை நோக்கிப் பயணித்தபடி இருக்கும், இறுதி ஜடநிலையை அனைத்துப் பொருட்களும் அடைய வகுக்கப்பட்ட வழியான எண்ட்ரபி அலைகளூடே செல்லும். வெளியிலிருந்து நோக்கும் ஒரு பார்வையாளருக்கு, கப்பல்களில் காலம் ஸ்தம்பித்ததாகத் தெரியும்.

கால நதியின் ஓட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, அந்தக் குழந்தைகளுக்கு வயது சில வருடங்களே கூடும். அவர்கள் அகிலாண்டம் இறக்கும்போதுதான் இறப்பார்கள். இந்த அணுகுகோட்டுப் பாதையில் பயணிப்பதுதான் சாவின் மீது அவர்களுக்கு வெற்றியைத் தரும், அதுதான் அவர்களின் பாதுகாப்புக்கு நல்ல வழி என்று வளர்ந்தவர்கள் அவர்களிடம் விளக்கினார்கள். அவர்கள் தம் வாரிசுகளை ஒரு போதும் பெற மாட்டார்கள்; சாவுத் துயரத்தால் பீடிக்கப்பட மாட்டார்கள்; அச்சப்படவோ, எதிர்காலத்துக்காகத் திட்டமிடவோ , தியாகங்கள் செய்யவென்று அசாத்தியமான தேர்வுகளைச் செய்யவோ தேவை இராது. தி-ரியல்களில் அவர்களே கடைசி நபர்கள், அனேகமாக அகிலாண்டத்தில் அவர்களே கடைசியாக இருக்கும் அறிவார்ந்த ஜீவிகளாகவும் இருக்கலாம்.

எல்லாப் பெற்றோர்களும் தம் வாரிசுகளுக்காகச் சில தேர்வுகளை மேற்கொள்கிறார்கள். அனேகமாக எப்போதுமே அவர்கள் தாம் எடுக்கும் முடிவுகள் நன்மைக்காக என்றே நினைக்கிறார்கள்.

***

கடைசி வரை, என்னால் அவளை மாற்ற முடியும் என்று நான் எண்ணியிருந்தேன். எனக்காகவும், எங்கள் குழந்தைக்காகவும் அவள் போகாமல், தங்குவாள் என்று நினைத்தேன். அவள் வித்தியாசமானவளாக இருக்கிறாள் என்பதால் அவளை விரும்பி இருந்தேன்; அவள் எங்கள் அன்பால் மாறுவாள் என்றும் நினைத்திருந்தேன்.

 “அன்புக்குப் பல வடிவங்கள் உண்டு, இது என் விதம்,” என்றாள் அவள்.

காதலிப்பவர்கள் வெவ்வேறு உலகுகளில் இருந்து வருபவர்களாக இருந்தால், அவர்களின் தவிர்க்கவியலாத பிரிவு பற்றிப் பல கதைகளை நமக்கே நாம் சொல்லிக் கொண்டு வந்திருக்கிறோம்: செல்கிகளும் ஹுவா நியாஒக்களும்; ஹாகரோமோக்களும் அன்னப் பெண்களும்…[7] பற்றிய கதைகள் அவை. அவற்றில் எல்லாம் பொதுவானது, அந்த ஜோடியில் ஒரு பாதியான நபர், மற்ற நபர் மாறுவார் என்று எதிர்பார்ப்பதுதான். நிஜம் என்னவோ அந்த இருவரிடையே ஈர்ப்பு வரக் காரணமே அவர்களிடையே உள்ள வேறுபாடும், மாறுவதற்கு அவர்கள் கொண்டுள்ள எதிர்ப்பும்தான். அவைதான் அந்த உறவுக்கு அடித்தளம் இடுகின்றன. பிறகு ஒரு நாள் வருகிறது, அப்போது பழைய ஸீலின் மேல் தோலோ, அல்லது பறவையின் இறகுகளோ கண்டு பிடிக்கப்படுகின்றன, அப்போது கடலுக்கோ, ஆகாயத்துக்கோ திரும்பிப் போகும் நேரம் வந்து விடுகிறது. அந்த மாய உலகுக்கு, நேசிக்கப்பட்ட அந்தப் பெண், தன்னுடைய உண்மையான வீட்டுக்குத் திரும்பும் நேரம் அது.  

‘குவி புள்ளி’ கலத்தின் குழுவினர் மொத்தப் பயணத்தில் பகுதியை குளிர் பெட்டியில் ஒடுக்கத்தில் கழிப்பார்கள்.[8] ஆனால் பயணத்தின் முதல் இலக்குப் புள்ளியை அடைந்ததும், அதாவது நம் விண்மீன் மண்டலத்திலிருந்து வெளியேறி, நம் சூரியனிலிருந்து  550 ஆ.யு தூரத்தை எட்டியதும், அவர்கள் விழித்து எழுந்து மீதமுள்ள பயணத்தின் போது எத்தனை முடியுமோ அத்தனை காலம் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் சூரியனிலிருந்து அகன்று சுருள் பாதையில் அந்தக் கலத்தைச் செலுத்துவார்கள்.  இந்த முறையில் விண்மீன் மண்டலத்தின் பெரும் பகுதியை, சமிக்ஞைகள் விண்வெளியில் செலுத்தக் கூடிய பகுதிகளை, அவர்களால் தேடிப் பார்த்து விட முடியும். சூரியனிலிருந்து எத்தனை தூரம் அகன்று போய்த் தேட முடியுமோ அத்தனைக்கு நல்லது, தூரம் அதிகமானால் சூரியனால் அந்த சமிக்கைகள் பெருக்கப்படுவது அதிகமாக இருக்கும், அங்கு திசை திருப்பப்படும் ரேடியோ அலைகள் மீது சூரியனின் ஒளிவட்டத்தின் தாக்கம் குறைந்திருக்கும். குழுவினர் சில நூறாண்டுகளுக்கு உயிரோடு இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது, வயதுக்கு வந்து, தாமும் குழந்தைகளைப் பெற்று வளர்த்து, வயதாகி, அந்தக் குழந்தைகள் வளர்ந்து பொறுப்புகளைத் தாம் ஏற்றுக் கொண்ட பின், அந்தப் பெரும் பாழில் இறந்து போவார்கள். அந்தப் பாழ் எளியதொரு நம்பிக்கைக்கான தொலைதூரத்துக் குடியிருப்பு, கண்காணிப்பு நிலையம்.

 “நம் மகளுக்கு இப்படி ஒரு தேர்வை நீ செய்ய முடியாது,” என்றேன் நான்.

“நீங்களும்தான் அவளுக்கு ஒரு தேர்வைச் செய்கிறீர்கள். அவள் இங்கேயே பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பாள் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? இது தளைகளை மீறி உயர எழுவதற்கு ஒரு வாய்ப்பு, அவளுக்கு நாம் அளிக்கக் கூடிய பரிசுகளிலேயே மிகச் சிறந்தது இது.”

பிறகு வழக்கறிஞர்களும், செய்தியாளர்களும், உரக்கக் கத்தி வாதிடும் ஊடக ‘அறிஞர்களும்’ நுழைந்தார்கள்.

அப்புறம் வந்தது அந்த இரவு, அது உனக்கு இன்னமும் நினைவிருப்பதாக நீ என்னிடம் சொல்கிறாய். அது உன் பிறந்த நாள், நாமெல்லாரும் மறுபடி சேர்ந்திருந்தோம், நாம் மூவர் மட்டும் உனக்காக. அதுதான் வேண்டுமென்று நீ கேட்டிருந்தாய்.

நாம் சாக்லேட் கேக் வாங்கி இருந்தோம். (நீ ”டியோ-ப்ரூம்” வேண்டும் எனக் கேட்டிருந்தாய்). பிறகு நாம் வெளியே போய், பின்புறத்து மேடையில் அமர்ந்து நட்சத்திரங்களைப் பார்த்தோம். உன் அம்மாவும் நானும் நீதிமன்றங்களில் நடக்கும் வழக்கைப் பற்றியோ, அவள் கிளம்பிப் போகும் தினம் பற்றியோ ஏதும் சொல்லாமல் எச்சரிக்கையாக இருந்தோம்.

“நீங்க ஒரு படகிலே வளர்ந்தீங்கங்கறது உண்மையா, அம்மா?” நீ கேட்டாய்

“ஆமாம்.”

“அது பயமானதா இருந்ததா?”

“கொஞ்சம் கூட இல்லை. நாங்க எல்லாரும் படகிலேதான் இருந்தோம், செல்லமே. பூமியே நட்சத்திரங்கள் நடுவே இருக்கிற பெரிய படகு போலத்தான்.”

“உங்களுக்குப் படகுலெ வாழறது பிடிச்சிருந்ததா?”

“எனக்கு அந்தப் படகு ரொம்பப் பிடிச்சிருந்தது—ஆனாப் பாரு, அது எனக்கு அத்தனை நினைவில்லே. நாம ரொம்பச் சின்னவங்களா இருக்கையிலெ என்ன நடந்ததுங்கறது நமக்கு அவ்வளவு நினைவிருக்கிறதில்லே. மனுசங்களா இருக்கிறதுல இது ஒரு விபரீத நிலை. ஆனால் அந்தப் படகிடமிருந்து விடை பெறும் நேரம் வந்தபோது நான் மிகவும் துக்கப்பட்டேன் என்பது எனக்கு நினைவிருக்கிறது. நான் அதைச் செய்ய விரும்பவில்லை. அதுதான் என் வீடாக இருந்தது.”

“நானும் என் படகுக்கு விடை சொல்ல விரும்பவில்லை.”

அவள் அழுதாள். நானும். நீயும்தான்.

அவள் போகுமுன் உனக்கு ஒரு முத்தம் கொடுத்தாள். “உன்னை நான் நேசிக்கிறேன் என்று சொல்லப் பல வழிகள் உண்டு.”

***

அகில அண்டம் நிழல்களும், எதிரொலிகளும் நிறைந்தது. ஆற்றல் அனைத்தும் எட்டாது போகும் நிலை (எண்ட்ரபி) வருவதை எதிர்த்துப் போராடித் தோற்ற நாகரீகங்களின் இறுதி வார்த்தைகளும், அவற்றின் நினைவு நிழலுருக்களும் நிரம்பியது. பெரு விண்வெளியில் ஓய்ந்து போய்க் கொண்டிருக்கும் பின்புலக் கதிர்வீச்சுகளான அவை பெருமளவும், ஏன் சிலது கூட, எப்போதாவது புதிரவிழ்த்துப் புரிந்து கொள்ளப்படுமா என்பது ஐயமே.

அதேபோல, நம்முடைய சிந்தனைகளிலும், நினைவுகளிலும் அனேகமும் தேய்ந்து அழியவும், மறைந்து போகவும் விதிக்கப்பட்டவை, அது நாம் மேற்கொள்ளும் தேர்வுகளாலும், நாம் வாழ்வதாலுமே நடப்பது.

இது சோகப்படக் காரணமில்லை, அன்பே. ஒவ்வொரு ஜீவராசியின் விதியும் இப்படி அகில அண்டத்தையும் கொல்லப் போகிற வெப்பமான பாழில் மறைவதுதான். அதற்கு வெகுகாலம் முன்னர், பெயர் சொல்லத் தக்கதாக வாழ்ந்திருக்கிற எந்த ஒரு புத்தியுள்ள ஜீவராசியின் சிந்தனைகளும், அகிலாண்டத்தைப் போலவே அபாரமானவையாகத் தெரிய வரும்.

***

உன் அம்மா இப்போது ‘குவிப்புள்ளி’ கலத்தில் உறங்குகிறாள். நீ ஒரு மூதாட்டியாக ஆகும் வரை அவள் விழித்தெழ மாட்டாள், ஒருகால் நீயும் மறைந்த பின்னரே அவள் எழுவாளோ என்னவோ.

அவளும் அவளுடைய சக குழுவினரும் விழித்தெழுந்த பின்னர், கேட்கத் துவங்குவார்கள், தாமும் ஒலி பரப்புவார்கள், இந்தப் பேரண்டத்தில் எங்கோ, ஏதோ ஒரு ஜீவராசி, தம் சூரியனின் சக்தியைப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டு, மெல்லிய கீற்றுகளான தகவல்களை ஒளிவருடங்களைத் தாண்டியும், யுகங்களைத் தாண்டியும் செலுத்துகிறார்கள் என்ற நம்பிக்கையில்தான் இதை அவர்கள் செய்வார்கள். அந்நியர்களுக்கு நம்மை அறிமுகப்படுத்தும் விதமாகத் தயாரிக்கப்பட்ட ஒரு செய்தியை அவர்கள் வெளியிடுவார்கள். அதன் மொழி கணிதமும் தர்க்கமும் கொண்டு உருவானது. நாம் ஒரு போதும் நம் வாழ்வில் தொடர்பு கொள்ளப் பயன்படுத்தாத ஒரு மொழியே, பிற ஜீவராசிகளிடம் பேசச் சிறந்த வழி என்று நாம் நினைப்பது நகைப்புக்குரியதாகவே நான் எப்போதும் கருதி வந்திருக்கிறேன்.

ஆனால் முடிவில், முடிவைச் சுட்டுவதற்காக, தர்க்க ரீதியாக அமைப்பு பெறாத ஒரு பதிவும் பரப்பப்படும்- அது நம் நினைவுகளின் அடக்கிக் கட்டப்பட்ட பதிவு: எழிலோடு கடல் பரப்பைக் கிழித்து திமிங்கிலங்கள் எழும் காட்சி, முகாம்களில் சடசடக்கும் கணப்பு நெருப்பின் ஒளியில் நடக்கும் மகிழ்ச்சி பொங்கும் நடனம்,  மலிவான ஒய்ன் மற்றும் காந்திப் போன குழல் மாமிச அப்பங்கள் போன்ற ஆயிரம் உணவுப்பண்டங்களில் உள்ள ரசாயனப் பொருட்களின் வேதியல் சூத்திரங்கள், கடவுள்களின் உணவை முதல் தடவையாகச் சுவைக்கும் சிறு குழந்தையின் சிரிப்பு போன்றன அந்தப் பதிவில் உள்ளன. மின்னும் ஆபரணங்களாய் உள்ள அவற்றின் அர்த்தங்கள் உடனடியாக விளங்காதவை, அதனாலேயே அவை உயிர்ப்போடு விளங்குகின்றன.

ஆகவே நாம் இதைப் படிக்கிறோம், என் இனிய மகளே, இந்தப் புத்தகத்தை உன் அம்மா எழுதினாள், பூமியை விட்டுப் போகுமுன். அதன் அலங்காரமான சொற்களும், விரிவான சித்திரங்களும் உனக்கு மாயாஜாலக் கதைகளைச் சொல்கின்றன, நீ வளர்கையில் இந்தக் கதைகளும் உன்னோடு வளரும், ஒரு மன்னிப்புக் கோரிக்கையாக, வீட்டுக்கு எழுதும் ஒரு கட்டுக் கடிதங்களாக, நம் ஆன்மாக்களெனும் கடலின் அறியப்படாத பகுதிகளின் வரைபடமாக.

இந்தக் குளிர்ந்த, இருண்ட, மௌனமான அகிலாண்டத்தில், எத்தனை மின்னும் நட்சத்திரங்கள் உண்டோ அத்தனை விதங்களில் உன்னிடம் நான் கொண்ட பிரியத்தைச் சொல்ல முடியும்.

***


[1] இந்த இடத்தில் கதாசிரியர் ஜான் மில்டனின் ‘பாரடைஸ் லாஸ்ட் ‘ காவியத்தின் 8 ஆவது புத்தகத்திலிருந்து சில வரிகளை மேற்கோளாகக் கொடுக்கிறார். (இது 1674 ஆம் வருடத்து வடிவம்.)

other Suns perhaps
With thir attendant Moons thou wilt descrie
Communicating Male and Femal Light,
Which two great Sexes animate the World,
Stor’d in each Orb perhaps with some that live.
For such vast room in Nature unpossest
By living Soule, desert and desolate,
Onely to shine, yet scarce to contribute
Each Orb a glimps of Light, conveyd so farr
Down to this habitable, which returnes
Light back to them, is obvious to dispute.

(நன்றி: பொயட்ரி ஃபௌண்டேஷன். ஆர்க் வலைத்தளத்திற்கு; இந்தப் பக்கத்தைக் காண இங்கே செல்லவும்: https://www.poetryfoundation.org/poems/45744/paradise-lost-book-8-1674-version )

[2] ஈர்ப்பு விசைக் குவி வில்லை= Gravitational lens

அணுக்கரு உந்து விசை= Nuclear Pulse Propulsion

ஃபெர்மி முரண் புதிர்= Fermi pardox

ட்ரேக் சமன்பாடு = Drake equation  பார்க்க: https://en.wikipedia.org/wiki/Drake_equation

அரேஸிபோ= Arecibo Spherical reflector Radio Telescope, Puerto Rico

யெவ்படோரியா= Yevpatoria RT-70 Radio Telescope and Planetary Radar, Ukraine.

ப்ளூ ஆரிஜின்= Blue Origin LLC, a aerospace manufacturing and sub-orbital spaceflight service company. Founded by Jeff Bezos, in 2000.

ஸ்பேஸ் எக்ஸ்= American aerospace manufacturer and space transport service company, founded by Elan Musk in 2002.

இந்த இடத்தில் ஒரு நியூயார்க் டைம்ஸ் கட்டுரையைக் கவனித்தல் உதவும்: https://www.nytimes.com/2016/10/18/science/two-trillion-galaxies-at-the-very-least.html

[3] இரு முகட்டுப் பரவல் = Bi-modal distribution

[4] பொது சார்பியல் கோட்பாடு= General Theory of Relativity

[5] பரவளையக் கிண்ணம் = Parabolic dish

[6] ஆஸ்ட்ரொனாமிகல் யூனிட்= Astronomical unit (AU) என்பது பூமியிலிருந்து சூரியன் உள்ள தூரத்தின் அளவு. இது சுமார்  150 மிலியன் கிலோமீட்டர்கள் தூரம் என்று கருதப்படுகிறது. அல்லது ஒளியின் வேகத்தில் 8 ஒளி நிமிடங்கள் தூரத்தில் உள்ளது.  ஏப்ரல் 18 ஆம் தேதி செய்தியின் படி, நியூ ஹொரைஸான்ஸ் என்று அழைக்கப்படும் விண்கலம், நம் சூரியனிலிருந்து 50 ஆஸ்ட்ரொனாமிகல் யூனிட்கள் தூரத்தை எட்டியிருந்தது. இது 2006 ஆம் வருடம் விண்ணில் ஏவப்பட்டது.  (பார்க்க: https://www.digitaltrends.com/news/new-horizons-50-au-milestone/) ஒரு ஏ.யு = சுமார் 150 மிலியன் கிலோ மீட்டர்கள் தூரம்.)

முன்னதாக 1977 இல் செலுத்தப்பட்ட வாயேஜர் 1 மற்றும் வாயேஜர் 2 விண்கலங்கள் இப்போது நம் நட்சத்திர மண்டலத்தைத் தாண்டி நட்சத்திரங்களிடையே உள்ள பெரும் வெளியில் பயணம் செய்கின்றன. வாயேஜர் 1 இப்போது 152 ஏ யு தூரத்திலும் (சுமார் 14 பிலியன் 130 மிலியன் கிலொமீட்டர்கள் தூரத்தில்) உள்ளது. வாயேஜர் 2, 126. 90 ஏ.யு தூரத்தில் (சுமார் 11.795 பிலியன் கிலோமீட்டர்கள் தூரத்தில் உள்ளது.)  பார்க்க: https://voyager.jpl.nasa.gov/mission/ )

[7] செல்கி=Selkie; Huo Niao= ஹூவா நியாவ் ; Hogoromo =  ஹாகொரோமொ ; Swan maidens =  அன்னப் பெண்கள்  – ஆகியன எல்லாம் நாட்டுப் புறக் கதைகள். செல்கி= நொர்ஸ் மற்றும் கெல்டிக் புராணங்கள்/ நாட்டுப் புறக் கதைகளில் வரும் ஸீல் பொன்ற உடலும் மனித உடலும் கலந்த ஜீவராசிகள். அவசியமானால் தம் ஸீல் உருவை முழுதும் இழந்து மனித உருவெடுக்கக் கூடியவை. இவை பெரும்பாலும் பெண் உருக்களை எடுப்பவையாகக் கதைகள் சித்திரிக்கின்றன. செல்கிக்களைப் பற்றி மேல் விவரங்களுக்கு: https://en.wikipedia.org/wiki/Selkie

ஹாகொராமா = டென்னின் என்பது ஜப்பானியப் புராணக் கதை/ நாட்டுப்புறக் கதையில் வரும் ஒரு வகை தேவதை. இது பௌத்தத்தில் வரும் தேவதை. மூலம் இந்திய பௌத்தமாக இருக்கலாம். சீனா வழியாக ஜப்பானுக்குப் போன தேவதை உரு இது. ஹாகொராமா ஒரு ஜப்பானிய மரபு நோ வகை இசை நாடகம். இதில் ஒரு மீனவர் கடற்கரையில் ஒரு ஆடை கிளை ஒன்றில் தொங்குவதைக் காண்கிறார். அதை எடுத்துக் கொள்கிறார். அது டென்னின் என்கிற தேவதையின் ஆடை. டென்னின் பெரும்பாலும் பெண்ணாகச் சித்திரிக்கப்படுகிற தேவதை. டென்னின் அவரிடம் ஆடையைத் திருப்பித் தரச் சொல்லிக் கெஞ்சுகிறது. ஆடை இல்லாமல் டென்னினால் சொர்க்கத்துக்குத் திரும்பவியலாது. இந்தக் கதை பற்றி மேலும் அறிய இங்கு பார்க்க: https://en.wikipedia.org/wiki/Hagoromo_(play)

இந்தக் கதை 50 களில் வந்த தமிழ் சினிமா ஒன்றில் கதையாக அமைந்திருந்தது. இதன் பல வடிவுகள் யூரோப்பிய, ரஷ்யக் கதைகளில் காணப்படுகின்றன.   

கு ஹுஒ நியா(வ்)= இதுவும் பறவை போன்ற ஒரு பேயுரு பற்றிய கதை. இந்தப் பேய் தன் இறகுகளை உதிர்த்து விட்டு, பெண்ணுரு ஏற்று, இரவில் குழந்தைகளைக் கடத்திப் போகும் என்பது சீனாவின் நாட்டுப்புறக் கதைகளில் ஒன்று.  姑获鸟 Gu Huo Niao  (https://radiichina.com/long-list-chinese-ghost-stories/

செல்கிக்களின் கதைகளிலும், ஹாகொராமா நாடகத்திலும் வேற்று ஜீவராசி ஒன்று (பெண்) மனிதன் ஒருவனால் கட்டாயப்படுத்தப்பட்டு அவனுடன் குடும்பம் நடத்துவதாக அமைவதை நாம் பார்க்கலாம். இந்தக் கதையில் வரும் மையப் பாத்திரங்களில் யார் செல்கி/ டென்னின் போன்றவர், யார் மனித ஆண் என்பன தெளிவுதானே.       

[8] குளிர் பதனப் பெட்டியில் ஒடுக்கம்= Hibernation in a freezer.

Series Navigation<< தேர்ந்த வாசகருக்கான ஒப்பீட்டு அறிமுறை பற்றிய படப் புத்தகம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.